ஒருபோதும் ஒழியாத அன்பை வளர்த்துக்கொள்ளுங்கள்
‘அன்பு எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும். அன்பு ஒருபோதும் ஒழியாது.’ —1 கொ. 13:7, 8.
1. (அ) அன்பு பெரும்பாலும் எப்படி வர்ணிக்கப்படுகிறது? (ஆ) அநேகர் யாரை, எவற்றை நேசிக்கிறார்கள்?
அன்பு! அன்பு!! அன்பு!!! இந்த வார்த்தைக்குத்தான் எப்பேர்ப்பட்ட வரவேற்பு! இந்தப் பண்புக்குத்தான் எவ்வளவு பாராட்டு! அதுவும், காதலாக மலர்கிற அன்பை வர்ணிக்கும் கவிதைகள் எத்தனை எத்தனை! அன்பை மையமாக வைத்து வெளிவந்துள்ள புத்தகங்களும் சினிமாக்களும் ஏராளம் ஏராளம்! அன்பே மனித வாழ்வின் உயிர்நாடி. ஆனால் வருத்தகரமாக, கடவுள் மீதாகட்டும் சக மனிதர் மீதாகட்டும் உண்மையான அன்பு அபூர்வமாக உள்ளது. கடைசி நாட்களைக் குறித்து பைபிள் முன்னறிவித்த காரியங்கள் இன்று அப்படியே நடந்துவருகின்றன. மனிதர்கள் தங்களைத் தாங்களே நேசிக்கிறவர்களாகவும், பணத்தை நேசிக்கிறவர்களாகவும், ‘கடவுளை நேசிக்காமல் சுகபோகங்களை நேசிக்கிறவர்களாகவும்’ இருக்கிறார்கள்.—2 தீ. 3:1-5.
2. விபரீதமான அன்பைக் குறித்து பைபிள் எப்படி எச்சரிக்கிறது?
2 அன்பு காட்டும் திறன் மனிதர்களுக்கு இருக்கிறது; என்றாலும், விபரீதமான ஒருவகை அன்பைப் பற்றி பைபிள் நம்மை எச்சரிக்கிறது. அப்படிப்பட்ட அன்பு ஒருவருடைய இதயத்தில் வேர்கொண்டால் என்ன நடக்குமென்று அது விவரிக்கிறது. (1 தீ. 6:9, 10) தேமாவைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் என்ன எழுதினாரென உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? தேமா, பவுலின் தோழராக இருந்தபோதிலும், உலகக் காரியங்களில் அன்பு வைத்து அவரிடமிருந்து பிரிந்துசென்றார். (2 தீ. 4:10) உலகத்தின் மீது அன்பு வைப்பதால் வரும் ஆபத்தைக் குறித்தே கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் யோவானும் எழுதினார். (1 யோவான் 2:15, 16-ஐ வாசியுங்கள்.) இந்த உலகத்தின் மீதும் அதிலுள்ள நிலையற்ற காரியங்களின் மீதும் அன்பு வைத்தால், கடவுளின் மீதும், ஆன்மீகக் காரியங்களின் மீதும் அன்பு வைக்க முடியாது.
3. என்ன சவால் நமக்கு இருக்கிறது, என்ன கேள்விகள் எழுகின்றன?
3 நாம் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் அதன் பாகமானவர்களாய் இல்லை. ஆகவே, அன்பைக் குறித்து இந்த உலகத்தின் மாறுபட்ட கண்ணோட்டத்தை நாம் தவிர்த்தே ஆக வேண்டும். இது ஒரு சவால்தான். விபரீதமான அல்லது வக்கிரமான அன்பின் வலையில் சிக்கிவிடாதபடி நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். அப்படியானால், கிறிஸ்தவ அன்பை நாம் எப்படி வளர்க்க வேண்டும்? அதை யார்மீது காட்ட வேண்டும்? எல்லாவற்றையும் சகித்துக்கொள்கிற அன்பை, ஒருபோதும் ஒழியாத அன்பை வளர்க்க எவை நமக்கு உதவும்? இந்த அன்பை வளர்த்துக்கொள்வது இக்காலத்திலும் எதிர்காலத்திலும் நமக்கு என்ன பலன்களைத் தரும்? இந்தக் கேள்விகளுக்கு பைபிள் தரும் பதில்களை அறிந்துகொண்டால், கடவுளுக்குப் பிரியமான விதத்தில் நம்மால் நடக்க முடியும்.
யெகோவாமீது அன்பை வளர்த்துக்கொள்ளுங்கள்
4. கடவுள் மீதுள்ள அன்பை நாம் எவ்வாறு வளர்க்க முடியும்?
4 இதைச் சற்று யோசித்துப் பாருங்கள்: ஒரு விவசாயி கஷ்டப்பட்டு நிலத்தைப் பண்படுத்தி, விதைகளை விதைக்கிறார். அந்த விதைகள் வளருமென்று எதிர்பார்க்கிறார். (எபி. 6:7) விதைகள் வளருவதைப் போலவே, கடவுள்மீது நம் அன்பு வளருவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? சத்திய விதைகள் விதைக்கப்பட்ட நம் இருதயமாகிய நல்ல நிலத்தில் கடவுள் மீதுள்ள அன்பு வளருவதற்கு நாம் கடினமாய் உழைக்க வேண்டும். இதற்காக, கடவுளுடைய வார்த்தையை ஊக்கமாய்ப் படிக்க வேண்டும். சபைக் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்ளவும் வேண்டும். அப்போதுதான், கடவுளைப் பற்றிய அறிவில் நம்மால் பெருக முடியும். (கொலோ. 1:10) இதற்காக நாம் ஒவ்வொருவருமே தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறோமா?—நீதி. 2:1-7.
5. (அ) யெகோவாவின் முக்கியப் பண்புகளைப் பற்றி நாம் எவ்வாறு கற்றுக்கொள்ளலாம்? (ஆ) அவருடைய நீதி, ஞானம், வல்லமை ஆகியவற்றைப் பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்?
5 பைபிள் மூலம் யெகோவா தம்மைப் பற்றி வெளிப்படுத்துகிறார். ஆகவே, பைபிளைப் படித்து அவரைப் பற்றிய அறிவைப் பெற்றுவந்தால், அவருடைய பண்புகளை, அதாவது அவருடைய நீதி, வல்லமை, ஞானம், முக்கியமாக உன்னத அன்பு ஆகியவற்றை நம்மால் அதிகமதிகமாகப் புரிந்துகொள்ள முடியும். யெகோவா தம்முடைய நீதியைத் தமது எல்லாச் செயல்களிலும், தமது பரிபூரணமான சட்டங்களிலும் வெளிக்காட்டுகிறார். (உபா. 32:4; சங். 19:7) யெகோவாவின் படைப்புகள் எல்லாவற்றிலும் மிளிர்கிற அவருடைய ஒப்பற்ற ஞானம் நம்மைப் பிரமிக்க வைக்கிறது. (சங். 104:24) மகா பலத்திற்கும் மகா வல்லமைக்கும் யெகோவா ஊற்றுமூலமாய் இருக்கிறார் என்பதற்கு இந்தப் பிரபஞ்சம் அத்தாட்சி அளிக்கிறது.—ஏசா. 40:26.
6. கடவுள் நம்மீது எவ்வாறு அன்பு காட்டியிருக்கிறார், அந்த அன்பு உங்கள்மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?
6 கடவுளுடைய அதிமுக்கியப் பண்பாகிய அன்பைப் பற்றி என்ன சொல்லலாம்? அது எல்லையற்றது, அனைவர் மனதையும் கவருவது. மனிதர்களுக்காக மீட்புவிலையைச் செலுத்தியதன் மூலம் இந்த அன்பை அவர் காட்டியிருக்கிறார். (ரோமர் 5:8-ஐ வாசியுங்கள்.) இந்த மீட்புவிலை முழு மனிதகுலத்திற்காகவும் அளிக்கப்பட்டிருக்கிறது; ஆனால், கடவுளுடைய அன்பை மதித்துணர்ந்து, அவருடைய மகன்மீது விசுவாசம் வைக்கிறவர்கள் மட்டுமே அதிலிருந்து பயன் பெற முடியும். (யோவா. 3:16, 36) நம்முடைய பாவங்களுக்குப் பிராயச்சித்த பலியாக இயேசுவை அளித்திருக்கிற கடவுள்மீது நமக்குள் அன்பு ஊற்றெடுக்க வேண்டும்.
7, 8. (அ) கடவுள்மீது அன்பு இருப்பதை நாம் எப்படிக் காட்டலாம்? (ஆ) கடவுளுடைய மக்கள் எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறார்கள்?
7 கடவுள் நமக்குச் செய்திருக்கிற எல்லாவற்றுக்காகவும் அவர்மீது நம் அன்பை எவ்வாறு காட்டலாம்? இதற்கான பதிலை பைபிள் குறிப்பிடுகிறது: “நாம் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதே அவர்மீது அன்பு காட்டுவதாகும்; அவருடைய கட்டளைகள் பாரமானவை அல்ல.” (1 யோ. 5:3) யெகோவாமீது நாம் வைத்திருக்கிற அன்பே அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கத் தூண்டுகிறது. அவருடைய பெயரையும் அவருடைய அரசாங்கத்தையும் பற்றிச் சாட்சி கொடுப்பதற்கு இதுவே ஒரு முக்கியக் காரணமாயும் இருக்கிறது. இந்த வேலையை நாம் இருதயப்பூர்வமாகச் செய்வது, அன்பினால்தான் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறோம் என்பதைக் காட்டுகிறது.—மத். 12:34.
8 உலகெங்கும் உள்ள நம் சகோதரர்கள் நற்செய்தியை அறிவிக்க வேண்டுமென்ற கட்டளைக்குக் கீழ்ப்படிந்து வருகிறார்கள், மக்கள் அசட்டை செய்தாலும் சரி எதிர்ப்புத் தெரிவித்தாலும் சரி! தங்கள் ஊழியத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கு எடுக்கும் முயற்சியை அவர்கள் கைவிடுவதே இல்லை. (2 தீ. 4:5) அவ்வாறே, நாமும் கடவுளைப் பற்றிய அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளத் தூண்டப்படுகிறோம்; கடவுள் கொடுத்துள்ள மற்ற கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும் தூண்டப்படுகிறோம்.
இயேசுமீது அன்பு காட்டுவதற்கான காரணம்
9. கிறிஸ்து எவற்றைச் சகித்தார், எது அவரைத் தூண்டியது?
9 கடவுள்மீது அன்பை வளர்ப்பதோடு, அவருடைய மகன்மீதும் நாம் அன்பை வளர்க்க வேண்டும்; இதற்குப் பல காரணங்கள் உள்ளன. இயேசுவை நம்மால் பார்க்க முடியாதுதான்; என்றாலும், அவரைப் பற்றி அதிகமதிகமாய்க் கற்றுக்கொள்ளும்போது, அவர்மீது நமக்குள்ள அன்பு ஆழமாகிறது. (1 பே. 1:8) அவர் எவற்றையெல்லாம் சகிக்க வேண்டியிருந்தது? தம் தகப்பனின் சித்தத்தை அவர் செய்துவந்தபோதிலும், காரணமில்லாமல் வெறுக்கப்பட்டார், துன்புறுத்தப்பட்டார், பொய்க்குற்றம் சாட்டப்பட்டார், சபித்துப் பேசப்பட்டார், இழிவாகவும் நடத்தப்பட்டார். (யோவான் 15:25-ஐ வாசியுங்கள்.) இந்த எல்லாச் சோதனைகளையும் சகித்துக்கொள்வதற்குப் பரலோகத் தகப்பன்மீது அவருக்கிருந்த அன்பே அவரைத் தூண்டியது. அந்த அன்புதான் தம் உயிரை அநேகருக்கு மீட்புவிலையாகக் கொடுக்கவும் அவரைத் தூண்டியது.—மத். 20:28.
10, 11. எது நம் குறிக்கோளாக இருக்க வேண்டும்?
10 இயேசு செய்திருக்கிற தியாகம் நமக்கு ஓர் உந்துசக்தியாக இருக்கிறது. அவர் நமக்காகச் செய்திருப்பதைக் குறித்துச் சிந்திக்கும்போது, அவர்மீது அன்பு ஊற்றெடுக்கிறது. அவருடைய சீடர்களாகிய நாம், அவர் காட்டியதைப் போன்ற அன்பைப் பிறரிடம் காட்ட வேண்டும், அந்த அன்பை வளர்த்துவர வேண்டும். அப்படிச் செய்வது நம் குறிக்கோளாக இருக்க வேண்டும்; அப்போதுதான், பிரசங்கித்துச் சீடராக்க வேண்டுமென்ற கட்டளைக்குத் தொடர்ந்து கீழ்ப்படிவோம்.—மத். 28:19, 20.
11 மனிதகுலத்தின் மீது கிறிஸ்து காட்டியிருக்கும் அன்பை நாம் மதித்துணர்வதால், நமக்கு நியமிக்கப்பட்டுள்ள வேலையை முடிவு வருவதற்குமுன் செய்துமுடிக்கத் தூண்டியெழுப்பப்படுகிறோம். (2 கொரிந்தியர் 5:14, 15-ஐ வாசியுங்கள்.) அந்த அன்பே மனிதகுலத்திற்கான கடவுளுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு மிக முக்கியமாக இருந்தது. கடவுளுடைய நோக்கத்தில் நாம் ஒவ்வொருவரும் பங்கு வகிக்க வேண்டுமானால் கிறிஸ்துவின் முன்மாதிரியை நெருக்கமாகப் பின்பற்றுவது அவசியம். அப்படிப் பின்பற்றுவதற்கு, நாம் முழுமூச்சோடு கடவுள்மீது அன்பு காட்ட வேண்டும். (மத். 22:37) இயேசு கற்பித்தவற்றையும் கட்டளையிட்டவற்றையும் கடைப்பிடிப்பதன் மூலம் நாம் அவர்மீதும் அன்பு காட்ட வேண்டும்; அதோடு, இயேசுவைப் போல் எந்தச் சூழ்நிலையிலும் கடவுளுடைய பேரரசாட்சியை ஆதரிக்கத் தீர்மானமாய் இருக்க வேண்டும்.—யோவா. 14:23, 24; 15:10.
அன்பின் சிறந்த வழியைப் பின்பற்றுங்கள்
12. அன்பை “சிறந்த வழி” என்று பவுல் எந்த அர்த்தத்தில் குறிப்பிட்டார்?
12 கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை அப்போஸ்தலன் பவுல் நெருக்கமாகப் பின்பற்றினார். அதனால்தான், தன்னைப் பின்பற்றிவரும்படி எந்தத் தயக்கமும் இல்லாமல் தன் சகோதரர்களிடம் சொன்னார். (1 கொ. 11:1) முதல் நூற்றாண்டில் அருளப்பட்டிருந்த வரங்களை—அற்புத சுகப்படுத்துதல், வேற்றுமொழி பேசுதல் போன்ற வரங்களை—பக்திவைராக்கியத்துடன் நாடும்படி கொரிந்திய கிறிஸ்தவர்களை அவர் ஊக்குவித்தார்; ஆனால், அதைவிட மேலான ஒன்றை நாடும்படியும் அவர் கூறினார். ஆம், 1 கொரிந்தியர் 12:31-ல், “எல்லாவற்றையும்விடச் சிறந்த வழி ஒன்றையும் உங்களுக்குக் காட்டுகிறேன்” என அவர் கூறினார். இதற்கடுத்து வருகிற வசனங்களின் சூழமைவு, அன்பே சிறந்த வழி எனக் காட்டுகிறது. எந்த அர்த்தத்தில்? அதை அவரே விவரித்தார். (1 கொரிந்தியர் 13:1-3-ஐ வாசியுங்கள்.) தனக்கு அபாரத் திறமைகள் இருந்தாலும், தான் மாபெரும் காரியங்களைச் சாதித்தாலும், அன்பு இல்லாவிட்டால் தான் ஒன்றுமே இல்லை என்று கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்டு அவர் கூறினார். எப்பேர்ப்பட்ட ஆணித்தரமான கருத்து!
13. (அ) 2010-க்கான வருடாந்தர வசனம் என்ன? (ஆ) எந்த அர்த்தத்தில் அன்பு ஒருபோதும் ஒழியாது?
13 அன்பு எப்படிப்பட்டது என்றும், எப்படிப்பட்டதல்ல என்றும் பவுல் விவரித்தார். (1 கொரிந்தியர் 13:4-8-ஐ வாசியுங்கள்.) இந்த அன்பை உங்கள் வாழ்க்கையில் எப்படிக் காட்டி வருகிறீர்கள் என்று நிதானமாக யோசித்துப் பாருங்கள். 7-ஆம் வசனத்தின் கடைசி வார்த்தைகளையும், 8-ஆம் வசனத்தின் ஆரம்ப வார்த்தைகளையும் முக்கியமாய்க் கவனியுங்கள்: ‘அன்பு எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும். அன்பு ஒருபோதும் ஒழியாது.’ இதுவே 2010-க்கான வருடாந்தர வசனம். கிறிஸ்தவ சபை ஸ்தாபிக்கப்பட்ட புதிதில் அருளப்பட்டிருந்த வரங்கள், அதாவது தீர்க்கதரிசனம் சொல்வது, வேற்று மொழிகளில் பேசுவது போன்ற வரங்கள், பிற்காலத்தில் மறைந்துவிடுமென்று 8-ஆம் வசனத்தில் பவுல் கூறினார். ஆம், அவை முடிவுக்கு வரும். அன்போ என்றென்றும் நிலைத்திருக்கும். யெகோவா அன்பின் உருவாய்த் திகழ்கிறார்; அவர் நித்திய காலமாய் இருக்கிறார். எனவே, அன்பு ஒருபோதும் ஒழியாது. நித்திய கடவுளின் பண்பாக இருப்பதால், அது என்றென்றும் நிலைத்திருக்கும்.—1 யோ. 4:8.
அன்பு எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும்
14, 15. (அ) சோதனைகளைச் சகித்துக்கொள்ள அன்பு எவ்வாறு நமக்கு உதவும்? (ஆ) ஓர் இளம் சகோதரர் தனது விசுவாசத்தை ஏன் விட்டுக்கொடுக்கவில்லை?
14 கிறிஸ்தவர்களுக்கு எப்பேர்ப்பட்ட சோதனைகளும் கஷ்டங்களும் பிரச்சினைகளும் வந்தாலும், அவற்றைச் சகித்துக்கொள்ள அவர்களுக்கு எந்தக் குணம் முக்கியமாக உதவும்? கிறிஸ்தவ அன்பே! பொருளுதவி அளிப்பதை மட்டுமே இந்த அன்பு உட்படுத்துவதில்லை; உத்தமத்தில் நிலைத்திருப்பதையும், கிறிஸ்துவுக்காகச் சாக வேண்டியிருந்தால் அதற்கும் தயாராயிருப்பதையும் இந்த அன்பு உட்படுத்துகிறது. (லூக். 9:24, 25) உதாரணமாக, இரண்டாம் உலகப் போரின் சமயத்திலும் அதற்குப் பின்பும், சித்திரவதை முகாம்களிலும் கட்டாய உழைப்பு முகாம்களிலும் சிறைகளிலும் துன்பங்களுக்கு ஆளான உண்மையுள்ள சாட்சிகளின் வாழ்க்கை வரலாற்றைக் குறித்துச் சிந்தித்துப் பாருங்கள்.
15 ஜெர்மனியைச் சேர்ந்த இளம் சகோதரர் வில்ஹெம்மை எடுத்துக்கொள்வோம். நாசிக்களின் துப்பாக்கிப் படைக்குமுன் நிறுத்தப்பட்டபோதும் அவர் தன் விசுவாசத்தை விட்டுக்கொடுக்கவில்லை. தன் குடும்பத்தாருக்குக் கடைசியாக எழுதிய கடிதத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: “நம் தலைவரான இயேசு கிறிஸ்து கட்டளையிட்டபடியே, எல்லாவற்றுக்கும் மேலாகக் கடவுள்மீது அன்பு காட்ட வேண்டும். நாம் அவர் பக்கம் உறுதியாக நின்றால் நிச்சயம் நம்மை ஆசீர்வதிப்பார்.” பிற்பாடு வெளிவந்த காவற்கோபுர கட்டுரை ஒன்றில் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இவ்வாறு கூறினார்: “கொந்தளிப்பான அந்தக் கால கட்டத்தில்கூட, நாங்கள் கடவுள் மீதுள்ள அன்புக்கே முதலிடம் கொடுத்தோம்.” ஆர்மீனியா, எரிட்ரியா, தென் கொரியா போன்ற நாடுகளில் தற்போது சிறைவாசம் அனுபவிக்கிற சகோதரர்கள் பலருக்கும் இதே மனப்பான்மைதான் இருக்கிறது. யெகோவாமீது வைத்திருக்கும் அன்பு தணிந்துபோக அவர்கள் இடமளிப்பதே இல்லை.
16. மலாவியில், நம் சகோதரர்கள் எதையெல்லாம் சகித்தார்கள்?
16 பல நாடுகளில், நம் சகோதரர்களின் விசுவாசத்திற்கும் சகிப்புத்தன்மைக்கும் வேறு விதமான சோதனைகள் வந்திருக்கின்றன. மலாவியில் 26 வருடங்களாக, சகோதர சகோதரிகள் அரசாங்கத் தடையுத்தரவுகளையும், கடும் எதிர்ப்புகளையும், அளவிலா அட்டூழியங்களையும் சகித்தார்கள். அவர்களுடைய சகிப்புத்தன்மைக்குப் பலன் கிடைத்தது. எப்படி? அங்கே துன்புறுத்தல் ஆரம்பித்தபோது சுமார் 18,000 சாட்சிகள் இருந்தார்கள். முப்பது வருடங்களுக்குப் பின் அந்த எண்ணிக்கை இரண்டு மடங்குக்கும் மேலாக, அதாவது 38,393–ஆக அதிகரித்திருந்தது. பிற நாடுகளிலும் அவ்வாறே அதிகரித்திருக்கிறது.
17. சத்தியத்தில் இல்லாத குடும்பத்தாரிடமிருந்து சிலர் எதைச் சந்திக்கிறார்கள், அதை அவர்களால் எப்படிச் சகித்துக்கொள்ள முடிகிறது?
17 கடவுளுடைய மக்கள் நேரடித் தாக்குதலுக்கு ஆளாவது வேதனையான விஷயம்தான்; என்றாலும், அவர்கள் தனி ஆளாய் சத்தியத்தில் இருக்கும்போது குடும்பத்தாரின் எதிர்ப்பைச் சந்திப்பது அதைவிட வேதனையானது. பிரச்சினைகள் சொந்தக் குடும்பத்தாரிடமிருந்தோ நெருங்கிய உறவினரிடமிருந்தோ வரலாம். இதைப் பற்றி இயேசு முன்கூட்டியே எச்சரித்தார். அவர் சொன்னதைப் போலவே அநேகர் எதிர்ப்பைச் சந்தித்திருக்கிறார்கள். (மத். 10:35, 36) உதாரணமாக, பருவ வயதினர் சத்தியத்தில் இல்லாத பெற்றோரிடமிருந்து எதிர்ப்பைச் சந்தித்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் வீட்டை விட்டுத் துரத்தப்பட்டிருக்கிறார்கள்; அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் கருணையுள்ள சாட்சிகள் அவர்களுக்குத் தஞ்சம் அளித்திருக்கிறார்கள். வேறு சிலர், பெற்றோரால் முற்றிலும் கைவிடப்பட்டிருக்கிறார்கள். இதுபோன்ற கடும் எதிர்ப்புகளை அவர்களால் எப்படிச் சகித்துக்கொள்ள முடிந்தது? சகோதரர்கள் மீதிருந்த அன்பினால், அதைவிட முக்கியமாக, யெகோவா மீதும் இயேசு மீதும் இருந்த உண்மையான அன்பினால் சகித்துக்கொள்ள முடிந்தது.—1 பே. 1:22; 1 யோ. 4:21.
18. எல்லாவற்றையும் சகித்துக்கொள்கிற அன்பு மணமான கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு கைகொடுக்கிறது?
18 எல்லாவற்றையும் சகித்துக்கொள்கிற இந்த அன்பை இன்னும் பல சந்தர்ப்பங்களில் நாம் காட்டலாம். கணவனும் மனைவியும் இந்த அன்பை வளர்த்துக்கொண்டால், “கடவுள் இணைத்திருப்பதை எந்த மனிதனும் பிரிக்காதிருக்கட்டும்” என்று இயேசு கூறிய அறிவுரைக்கு அவர்கள் மதிப்புக் கொடுப்பார்கள். (மத். 19:6) மணமான கிறிஸ்தவர்கள் ‘வாழ்க்கையில் உபத்திரவங்களை’ அனுபவிக்கும்போது, யெகோவாதான் தங்களுடைய மணவாழ்வின் அஸ்திவாரம் என்பதை அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும். (1 கொ. 7:28) ‘அன்பு எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும்’ என்று பைபிள் சொல்வதால், இந்த அன்பை ‘அணிந்திருக்கிற’ தம்பதியர் இன்பதுன்பங்களில் இணைபிரியாமல் இருந்து தங்கள் திருமண பந்தத்தைப் பலமாக வைத்துக்கொள்கிறார்கள்.—கொலோ. 3:14.
19. இயற்கைப் பேரழிவுகளின்போது கடவுளுடைய மக்கள் என்ன செய்திருக்கிறார்கள்?
19 இயற்கைப் பேரழிவுகளின்போது வருகிற எல்லாக் கஷ்டநஷ்டங்களையும் சகித்துக்கொள்ள அன்பே நமக்கு உதவுகிறது. பெரு நாட்டின் தென்பகுதியில் பூமியதிர்ச்சி ஏற்பட்டபோதும், ஐக்கிய மாகாணங்களின் வளைகுடா பகுதிகளில் கட்ரீனா சூறாவளி தாக்கியபோதும், இந்த அன்பே நம் சகோதரர்களுக்கு உதவியது. அவர்களில் பலர் வீடுகளையும் பொருள்களையும் இழந்ததால், உலகெங்குமிருந்த சகோதரர்கள் அவர்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார்கள்; வாலண்டியர்கள், சேதமடைந்த வீடுகளையும் ராஜ்ய மன்றங்களையும் திரும்பக் கட்டிக்கொடுத்தார்கள்; இதற்கெல்லாம் அன்பே அவர்களைத் தூண்டியது. நம் சகோதரர்கள் எல்லாச் சந்தர்ப்ப சூழ்நிலைகளிலும் ஒருவர்மீது ஒருவர் அன்பும் அக்கறையும் காட்டுகிறார்கள் என்பதை இத்தகைய செயல்கள் நிரூபிக்கின்றன.—யோவா. 13:34, 35; 1 பே. 2:17.
அன்பு ஒருபோதும் ஒழியாது
20, 21. (அ) அன்பு ஏன் தலைசிறந்தது? (ஆ) அன்பின் வழியை நாட நீங்கள் ஏன் தீர்மானமாய் இருக்கிறீர்கள்?
20 அன்பின் சிறந்த வழியைப் பின்பற்றுவதே ஞானமானது என்பதை யெகோவாவின் மக்களுடைய வாழ்க்கை காட்டுகிறது. ஆம், எல்லாச் சூழ்நிலைகளிலும் அந்த அன்பு அவர்கள் மத்தியில் தழைத்தோங்குகிறது. இந்த உண்மையை அப்போஸ்தலன் பவுல் எப்படி வலியுறுத்தினார் எனக் கவனியுங்கள்; கடவுளுடைய சக்தி அருளுகிற வரங்கள் ஒரு காலத்தில் மறைந்துவிடுமென்றும், கிறிஸ்தவ சபை வளர்ச்சி அடையுமென்று முதலாவது சொன்னார்; பின்பு, “விசுவாசம், நம்பிக்கை, அன்பு ஆகிய மூன்றும் நிலைத்திருக்கும்; இவற்றில் அன்பே தலைசிறந்தது” என்றும் சொன்னார்.—1 கொ. 13:13.
21 இன்று நாம் விசுவாசக் கண்களால் காண்கிற காரியங்களெல்லாம் எதிர்காலத்தில் நிஜமாகும்போது, அவற்றின் மீது நாம் வைத்த விசுவாசத்திற்கு அவசியம் இல்லாமல் போய்விடும். எல்லாம் புதிதான பிறகு, புதிய காரியங்களுக்காக நாம் நம்பிக்கையோடு காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லாமல் போய்விடும். ஆனால், அன்பு? அது ஒருபோதும் ஒழியாது. அது நிலைத்திருக்கும். நம்முடைய வாழ்வு முடிவில்லாமல் தொடரும் என்பதால், கடவுளுடைய அன்பின் இன்னும் பல்வேறு பரிமாணங்களை நாம் கண்கூடாகப் பார்த்துப் புரிந்துகொள்வோம். ஆம், ஒருபோதும் ஒழியாத அன்பின் சிறந்த வழியை நாடி கடவுளுடைய சித்தத்தின்படி நடந்தோமென்றால், என்றென்றும் நிலைத்திருப்போம்!—1 யோ. 2:17.
உங்கள் பதில்?
• விபரீதமான அன்பைக் குறித்து நாம் ஏன் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்?
• எதைச் சகித்துக்கொள்ள அன்பு உதவும்?
• எந்த அர்த்தத்தில் அன்பு ஒருபோதும் ஒழியாது?
[பக்கம் 27-ன் சிறு குறிப்பு]
2010-க்கான வருடாந்தர வசனம்: ‘அன்பு எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும். அன்பு ஒருபோதும் ஒழியாது.’ —1 கொ. 13:7, 8.
[பக்கம் 25-ன் படம்]
கடவுள் மீதுள்ள அன்பு நற்செய்தியை அறிவிக்க நம்மைத் தூண்டுகிறது
[பக்கம் 26-ன் படம்]
ஒருபோதும் ஒழியாத அன்பே சோதனைகளைச் சகித்துக்கொள்ள மலாவி சகோதர சகோதரிகளுக்கு உதவியது