சேவை செய்யுங்கள் —மும்முரமாக! மகிழ்ச்சியாக!!
நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டுமென யெகோவா விரும்புகிறார். (சங். 100:2) அவருடைய ஊழியர்களான நீங்கள் ஒருவேளை படு பிஸியாக இருப்பீர்கள். நீங்கள் ஞானஸ்நானம் பெற்ற சமயத்தில் இந்தளவு பிஸியாக இருந்திருக்க மாட்டீர்கள், ஆனால் இப்போது வேலை, சபை, குடும்பம் எனப் பல பொறுப்புகளைச் சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கலாம். செய்ய நினைத்ததையெல்லாம் செய்ய முடியவில்லையே என்ற குற்றவுணர்வு உங்களை வாட்டிவதைக்கலாம். எனவே, நீங்கள் எவ்வாறு சமநிலையைக் காத்து, ‘யெகோவாவுக்குள் மகிழ்ச்சியாயிருக்க’ முடியும்?—நெ. 8:10.
நீங்கள் கொடிய காலங்களில் வாழ்கிறீர்கள், பல்வேறு அழுத்தங்களுக்கு ஆளாகிறீர்கள்; அதனால், எல்லாக் காரியங்களையும் நன்கு திட்டமிட்டுச் செய்ய வேண்டியிருக்கிறது. இது சம்பந்தமாக, அப்போஸ்தலன் பவுல் கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்டு கொடுத்த சில ஆலோசனைகள் வெகு பொருத்தமானவை: “நீங்கள் ஞானமற்றவர்களாக நடக்காமல், ஞானமுள்ளவர்களாக நடப்பதற்கு மிகுந்த கவனம் செலுத்துங்கள்; பொன்னான நேரத்தை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஏனென்றால், நாட்கள் பொல்லாதவையாக இருக்கின்றன.”—எபே. 5:15, 16.
இந்த ஞானமான ஆலோசனையை மனதில் கொண்டு, எட்டமுடிந்த இலக்குகளை நீங்கள் எப்படி வைக்கலாம்? தனிப்பட்ட படிப்பு, குடும்பப் பராமரிப்பு, வெளி ஊழியம், வேலை போன்ற முக்கியமான காரியங்களை நீங்கள் எப்படிச் சமநிலையோடு கையாளலாம்?
உங்களையே கடவுளுக்கு அர்ப்பணித்து ஞானஸ்நானம் பெற்ற சமயத்தில், நீங்கள் எந்தளவு ஆனந்தம் அடைந்தீர்கள் என்பது நினைவிருக்கிறதா? யெகோவாவையும் அவருடைய நோக்கங்களையும் பற்றி அறிந்துகொண்டபோது மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்திருப்பீர்கள். பல மாதங்கள் ஊக்கமாகப் படித்த பின்னரே அந்த அறிவைப் பெற்று மகிழ்ச்சி கண்டிருப்பீர்கள். உங்களுடைய முயற்சிக்கெல்லாம் கைமேல் பலன் கிடைத்தது. உங்கள் வாழ்க்கையையே அது மேம்படுத்தியது.
அந்த மகிழ்ச்சியைத் தக்க வைத்துக்கொள்ள, ஆன்மீக உணவை நீங்கள் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். ஆனால், பைபிளை வாசிப்பதற்கும், அதைக் கருத்தூன்றிப் படிப்பதற்கும் நேரமே இல்லையென நினைத்தீர்கள் என்றால், உங்கள் அட்டவணையைக் கொஞ்சம் பரிசோதித்துப் பாருங்கள். படிப்பதற்கும் தியானிப்பதற்கும் ஒவ்வொரு நாளும் சில நிமிடங்களாவது செலவிட்டீர்கள் என்றால், யெகோவாவிடம் நெருங்கி வருவீர்கள். அப்படிச் செய்தால் நிச்சயம் உங்கள் மனதில் மகிழ்ச்சி பொங்கும்.
இதற்காக, கடவுளுடைய ஊழியர்கள் பெரும்பாலோர் என்ன செய்கிறார்கள்? அநாவசியமான காரியங்களுக்காகச் செலவிடுகிற நேரத்தை அதிமுக்கியமான காரியங்களுக்கென்று நன்றாகப் பயன்படுத்துகிறார்கள். ஆகையால், ‘செய்தித்தாள்களையும் வாராந்தரப் பத்திரிகைகளையும் படிப்பதற்கோ, டிவி பார்ப்பதற்கோ, இசையைக் கேட்பதற்கோ, விருப்பமான ஏதோவொரு காரியத்தைச் செய்வதற்கோ நான் எத்தனை நேரம் செலவழிக்கிறேன்?’ என உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். இப்படிப்பட்ட காரியங்கள் மனதிற்குச் சந்தோஷத்தை அளிக்கலாம், ஆனால் அவற்றைச் சமநிலையோடு செய்தால் மட்டுமே! (1 தீ. 4:8) நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தாமல் இருப்பதே உங்கள் பிரச்சினையா? அப்படியானால், உங்களுடைய அட்டவணையில் மாற்றங்களைச் செய்யுங்கள்.
ஆடம் என்பவர் மூன்று பிள்ளைகளை உடைய ஒரு மூப்பர். அவர் இப்படிச் சொல்கிறார்: “என்னுடைய வாழ்க்கையை நான் எளிமையாக வைத்திருக்கிறேன். நேரத்தை உறிஞ்சும் ‘ஹாபி’களில் ஈடுபடுவதில்லை, பார்த்துப் பார்த்துப் பராமரிக்க வேண்டிய உடமைகளை வைத்துக்கொள்வதில்லை. அதற்காக, நான் ஒரு துறவிபோல் வாழ்கிறேன் என்று அர்த்தமல்ல, அதிக நேரத்தை எடுக்காத பொழுதுபோக்குகளில் அவ்வப்போது ஈடுபடுகிறேன்.”
நீங்கள் எடுத்த தீர்மானங்களால் கிடைத்திருக்கும் நல்ல பலன்களைச் சிந்தித்துப் பார்ப்பது, உங்கள் மகிழ்ச்சியை மீண்டும் மலரச் செய்யும், நம்பிக்கையான மனநிலையைக் காத்துக்கொள்ள உதவும். உதாரணத்திற்கு, மூன்று பிள்ளைகளை உடைய மார்யூஷ் என்ற மூப்பர் சொல்வதைக் கேளுங்கள்: “சத்தியத்தைப் படிக்க ஆரம்பித்தபோது, நம்பிக்கையான மனநிலையை வளர்த்துக்கொண்டேன். அவ்வப்போது கஷ்டங்கள் வரத்தான் செய்கின்றன, அதெல்லாம் யெகோவாவுக்கு மட்டும்தான் தெரியும். அவர் எனக்குப் பக்கபலமாக இருப்பதால் ஒளிமயமான எதிர்காலத்திற்காக மகிழ்ச்சியோடு காத்திருக்கிறேன்.”
மார்யூஷைப் போல் நம்பிக்கையான மனநிலையை வளர்த்துக்கொண்டீர்கள் என்றால், கவலைகளெல்லாம் பறந்துவிடுமெனச் சொல்ல முடியாது. ஆனால், மனதிற்கு அது ஆறுதலை அளிக்கும், சவால்களை வெற்றிகரமாகச் சமாளிக்க உதவும். “ஒடுக்கப்பட்டோருக்கு ஒவ்வொரு நாளும் தொல்லை நாளே; மனமகிழ்ச்சி உள்ளவருக்கோ எல்லா நாள்களும் விருந்து நாள்களே” என்று நாம் வாசிக்கிறோம். (நீதி. 15:15, பொது மொழிபெயர்ப்பு) உங்கள்மீது கடவுள் காட்டியிருக்கும் அன்பைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். இப்படிச் சிந்தித்துப் பார்ப்பது அவர்மீது நீங்கள் வைத்திருக்கிற அன்பை ஆழமாக்கும், அவரால் கிடைக்கிற மகிழ்ச்சியைப் பெருக்கும்.—மத். 22:37.
வாழ்க்கையில் யெகோவாவுக்கு முதலிடம் கொடுத்தோம் என்றால், குடும்பத்தில் சந்தோஷம் தவழும். கிறிஸ்தவப் பண்புகளைக் காட்டும்போது குடும்ப அங்கத்தினர்களோடு சண்டை சச்சரவுகள் குறையும், அதிக சுமூகமான, அன்யோன்யமான உறவு நீடிக்கும். இதனால், உங்கள் குடும்பத்தில் சமாதானமும் ஐக்கியமும் பூத்துக் குலுங்கும்.—சங். 133:1.
குடும்பமாக ஆன்மீகக் காரியங்களில் மூழ்கியிருந்தால், உண்மையான மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும். மார்யூஷ் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள்: “குடும்பமாக நாங்கள் செலவிடுகிற நேரத்தைப் பொக்கிஷமாய் நினைக்கிறேன். என் மனைவி எனக்கு உறுதுணையாக இருக்கிறாள். ஊழியத்திற்குச் செல்லும்போதும் சரி, மாநாட்டு மன்றத்தைச் சுத்தம் செய்யும்போதும் சரி, வேறு சபைகளுக்குப் பேச்சு கொடுப்பதற்காக நான் போகும்போதும் சரி, என் கூடவே வருகிறாள். இதெல்லாம் எனக்குத் தெம்பூட்டுகிறது.”
குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டுமெனக் கிறிஸ்தவர்களுக்கு பைபிள் கட்டளையிடுகிறது. (1 தீ. 5:8) ஆனால், உங்களுடைய வேலை உங்கள் நேரத்தையும் சக்தியையும் அளவுக்கதிகமாக எடுத்துக்கொண்டால், கடவுளுடைய சேவையில் மகிழ்ச்சி பறிபோய்விடும். எனவே, இதைக் குறித்து யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். (சங். 55:22) ஆன்மீகக் காரியங்களுக்கு முதலிடம் கொடுப்பதற்காகச் சிலர் தங்கள் வேலையையே மாற்றியிருக்கிறார்கள். ஒரு கிறிஸ்தவர், நல்ல சம்பளம் கிடைக்கிற வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, அதிமுக்கியமான ஆன்மீகக் காரியங்களை ஓரங்கட்டிவிடக் கூடாது.—நீதி. 22:3.
வருங்கால வேலையின் அல்லது தற்போதைய வேலையின் சாதக பாதகங்களை எழுதி, அவற்றை ஒப்பிட்டுப் பார்ப்பது பிரயோஜனமாக இருக்கும். ஆம், கைநிறைய சம்பளமும் மனம்நிறைய திருப்தியும் தருகிற வேலை விரும்பத்தக்கதுதான். ஆனால், அந்த வேலை உங்களுடைய குடும்பத்தாரின் ஆன்மீக நலனை மேம்படுத்த உதவுகிறதா? அதன் குறைநிறைகளையெல்லாம் சீர்தூக்கிப் பாருங்கள், யெகோவாவோடுள்ள பந்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துத் தீர்மானங்களை எடுங்கள்.
ஆன்மீக முன்னேற்றம் செய்வதற்கு உங்கள் வேலை தடையாக இருக்கிறதென்றால், நீங்கள் ஏதாவது மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். ஆன்மீகக் காரியங்களுக்கு நேரம் ஒதுக்குவதற்காகச் சில கிறிஸ்தவர்கள் அதிரடி மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள். போலந்திலுள்ள ஒரு சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “நான் வேலை செய்த கம்பெனியில் எப்போது பார்த்தாலும் என்னை வெளியூருக்கு அனுப்பிவிடுவார்கள். என்னால் குடும்பத்தைச் சரிவர கவனிக்க முடியவில்லை, ஆன்மீகக் காரியங்களுக்கும் நேரமே கிடைக்கவில்லை. அதனால் அந்த வேலையை விட்டுவிட்டேன்.” இப்போது அவர் பார்த்துக்கொண்டிருக்கிற வேலையில் அதுபோன்ற பிரச்சினைகள் எதுவும் இல்லை.
மற்றவர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சி காணுங்கள்
“பெற்றுக்கொள்வதைவிடக் கொடுப்பதிலேயே அதிகச் சந்தோஷம் இருக்கிறது” என்று இயேசு சொன்னார். (அப். 20:35) அப்படிக் கொடுப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. சில சமயங்களில், ஒருவரைப் பார்த்துச் சிநேகமாகப் புன்னகைப்பது, ஒருவரோடு கைகுலுக்குவது, தேவராஜ்ய வேலையைச் செய்ததற்காக ஒருவருக்கு உள்ளப்பூர்வமாய் நன்றி சொல்வது போன்றவைகூட உங்கள் இருவருடைய மனதிலும் மகிழ்ச்சிப் பூக்களை மலரச் செய்யலாம்.
“சோகமாயிருப்பவர்களிடம் ஆறுதலாகப் பேசுங்கள், பலவீனமானவர்களுக்கு ஆதரவாக இருங்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் சக கிறிஸ்தவர்களை ஊக்கப்படுத்தினார். (1 தெ. 5:14) சோகமாயிருப்பவர்கள், தங்களுடைய பிரச்சினைகளைச் சமாளிக்கவே முடியாதென நினைக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு உங்களால் உதவிக்கரம் நீட்ட முடியுமா? ஒரு சகோதரரோ சகோதரியோ மகிழ்ச்சியில்லாமல் யெகோவாவின் சேவையைச் செய்துவருவதைப் பார்த்தீர்கள் என்றால், அவரை ஊக்கப்படுத்த முயலுங்கள். அப்படிச் செய்தீர்களென்றால் நீங்களும்கூட ஊக்கமடைவீர்கள். உண்மைதான், மனிதர்களால் சில பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது; என்றாலும், நீங்கள் அவர்மீது உண்மையான கரிசனையைக் காட்டலாம், அல்லவா? என்றென்றும் பக்கபலமாய் இருக்கிற யெகோவாமீது சார்ந்திருக்கும்படி அறிவுறுத்தலாம், அல்லவா? ஆம், யெகோவாமீது சார்ந்திருப்பவர்கள் ஒருபோதும் ஏமாற்றமடைய மாட்டார்கள்.—சங். 27:10; ஏசா. 59:1.
மகிழ்ச்சியிழந்து காணப்படும் ஒருவரை ஊக்கப்படுத்துகிற மற்றொரு வழி, அவரை உங்களோடு ஊழியத்திற்கு வரும்படி அழைப்பதாகும். இயேசு தம்முடைய 70 சீடர்களை “இரண்டிரண்டு பேராக” ஊழியத்திற்கு அனுப்பினார். (லூக். 10:1) இருவருக்கும் பரஸ்பர உற்சாகம் கிடைப்பதற்காகவே அவ்வாறு அனுப்பினார். அதேபோல் இன்று நீங்களும், மகிழ்ச்சியிழந்த ஒருவரை உங்களுடன் ஊழியத்திற்கு அழைத்துச் செல்ல முடியுமா?
வாழ்க்கை என்றால் ஆயிரம் கவலைகள் இருக்கத்தான் செய்யும். என்றாலும், “நம் எஜமானருடைய சேவையில் எப்போதும் மனமகிழ்ச்சியாக இருங்கள்; மறுபடியும் சொல்கிறேன், மனமகிழ்ச்சியாக இருங்கள்” என்று பவுல் நமக்கு அறிவுரை கூறுகிறார். (பிலி. 4:4) கடவுளை நீங்கள் நேசிக்கிறீர்கள், அவருக்குக் கீழ்ப்படிகிறீர்கள், அவருடைய வேலையில் பக்திவைராக்கியத்தோடு ஈடுபடுகிறீர்கள், அதனால் உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறது. உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. அதுமட்டுமா, பிரச்சினைகளைச் சமாளிக்க யெகோவாவின் உதவியும் கிடைக்கிறது.—ரோ. 2:6, 7.
புதிய உலகிற்கு வெகு அருகில் வந்துவிட்டோம் என்பதை நம் விசுவாசக் கண்களால் பார்க்கிறோம். நமக்குக் கிடைக்கப்போகும் ஆசீர்வாதங்கள் நம்மை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைக்கும். (சங். 37:34) இப்போதும்கூட யெகோவா நம்மை எந்தளவு ஆசீர்வதித்திருக்கிறார் என்பதை ஒருகணம் யோசித்துப் பார்த்தால், சந்தோஷத்தில் திளைக்கலாம். எனவே, ‘மகிழ்ச்சியோடு யெகோவாவுக்கு ஆராதனை செய்வோமாக!’—சங். 100:2.
[பக்கம் 8-ன் படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க, நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துங்கள்
விளையாட்டு, பொழுதுபோக்கு
வீடு, குடும்பம்
வேலை
சபைக் கூட்டங்கள்
தனிப்பட்ட படிப்பு
ஊழியம்
[பக்கம் 10-ன் படங்கள்]
மகிழ்ச்சி இழந்தவர்களுக்கு உங்களால் உதவ முடியுமா?