மிகச் சிறந்த வாழ்க்கைப் பாதைக்கு உங்களை வரவேற்கிறோம்!
“நாம் வாழ்ந்தாலும் யெகோவாவுக்கென்று வாழ்கிறோம்; இறந்தாலும் யெகோவாவுக்கென்று இறக்கிறோம்.”—ரோ. 14:8.
1. மிகச் சிறந்த வாழ்க்கைப் பாதையைப் பற்றி இயேசு என்ன கற்பித்தார்?
மிகச் சிறந்த வாழ்க்கைப் பாதையில் நாம் நடக்க வேண்டுமென யெகோவா விரும்புகிறார். மக்கள் வெவ்வேறு வழிகளில் நடக்கலாம்; ஆனால், ஒரு வழி மட்டுமே மிகச் சிறந்தது. நாம் அந்த வழியில் நடப்பதற்கு, கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதும், அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவிடமிருந்து கற்றுக்கொள்வதும் அவசியம். கடவுளை அவருடைய சக்தியின் வழிநடத்துதலோடும் சத்தியத்தோடும் வணங்கும்படி இயேசு தம்மைப் பின்பற்றியவர்களுக்குக் கற்பித்தார்; அதோடு, சீடராக்கும் வேலையில் ஈடுபடும்படி கட்டளையிட்டார். (மத். 28:19, 20; யோவா. 4:24) அவருடைய அறிவுரைகளுக்கு இசைவாக வாழ்வதன் மூலம் நாம் யெகோவாவைப் பிரியப்படுத்துகிறோம், அவருடைய ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறோம்.
2. முதல் நூற்றாண்டில் நற்செய்தியைக் கேட்ட அநேகர் என்ன செய்தார்கள், அவர்கள் “மார்க்கத்தை” சேர்ந்தவர்கள் என்று அழைக்கப்பட்டது ஏன் பொருத்தமானது?
2 “முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மை உடையவர்கள்” விசுவாசிகளாகி ஞானஸ்நானம் பெறும்போது, “மிகச் சிறந்த வாழ்க்கைப் பாதைக்கு உங்களை வரவேற்கிறோம்!” என்று அவர்களிடம் சொல்ல நமக்கு நல்ல காரணங்கள் இருக்கின்றன. (அப். 13:48) முதல் நூற்றாண்டில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சத்தியத்தை மனதார ஏற்றுக்கொண்டு, கடவுள் மீதிருந்த பக்தியை வெளிப்படையாகக் காட்டுவதற்கு ஞானஸ்நானம் பெற்றார்கள். (அப். 2:41) அந்த ஆரம்ப கால சீடர்கள் கிறிஸ்தவ “மார்க்கத்தை,” அதாவது வழியை, சேர்ந்தவர்களாக இருந்தார்கள். (அப். 9:2; 19:23) மார்க்கம் என்ற வார்த்தை பொருத்தமானதாய் இருந்தது; ஏனென்றால், இயேசு கிறிஸ்துவின் சீடர்களாக ஆனவர்கள் அவருடைய பாதையில் நடந்தார்கள்; அதாவது, அவர்மீது விசுவாசம் வைத்து அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றி வாழ்ந்தார்கள்.—1 பே. 2:21.
3. யெகோவாவின் மக்கள் ஏன் ஞானஸ்நானம் பெறுகிறார்கள், கடந்த பத்து வருடங்களில் எத்தனை பேர் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறார்கள்?
3 சீடராக்கும் வேலை இந்தக் கடைசி காலத்தில் தீவிரமடைந்திருக்கிறது; அது இப்போது 230-க்கும் அதிகமான நாடுகளில் செய்யப்பட்டு வருகிறது. கடந்த பத்து வருடங்களில் யெகோவாவைச் சேவிக்கவும் தங்களை அவருக்கு அர்ப்பணித்திருப்பதற்கு அடையாளமாக ஞானஸ்நானம் பெறவும் தீர்மானித்திருப்போரின் எண்ணிக்கை 27,00,000-க்கும் அதிகம். ஆக, ஒவ்வொரு வாரமும் சராசரியாக 5,000-க்கும் மேலானோர் ஞானஸ்நானம் பெறுகிறார்கள்! கடவுள் மீதுள்ள அன்பு, பைபிளைப் பற்றிய அறிவு, அது கற்பிக்கும் விஷயங்களின் பேரில் விசுவாசம் ஆகியவற்றின் காரணமாகவே அவர்கள் அவ்வாறு ஞானஸ்நானம் பெறுகிறார்கள். ஞானஸ்நானம் நம் வாழ்க்கையில் ஒரு மைல்கல்; ஏனென்றால், யெகோவாவுடன் நெருங்கிய பந்தம் வைப்பதற்கு இது ஓர் ஆரம்பமாக இருக்கிறது. அதோடு, தமது வழியில் நடக்க பூர்வகால ஊழியர்களுக்கு அவர் உதவியது போல நமக்கும் உதவுவார் என்ற நம்பிக்கையின் வெளிக்காட்டாக இது இருக்கிறது.—ஏசா. 30:21.
எதற்காக ஞானஸ்நானம் பெற வேண்டும்?
4, 5. ஞானஸ்நானம் பெறுவதால் கிடைக்கும் சில ஆசீர்வாதங்களும் நன்மைகளும் யாவை?
4 நீங்கள் கடவுளைப் பற்றிக் கற்றிருக்கலாம், வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்திருக்கலாம், இப்போது ஞானஸ்நானம் பெறாத பிரஸ்தாபியாகவும் ஆகியிருக்கலாம். இது பாராட்ட வேண்டிய விஷயம். ஆனால், கடவுளுக்கு உங்களை அர்ப்பணித்திருப்பதாக ஜெபத்தில் தெரிவித்திருக்கிறீர்களா? ஞானஸ்நானம் பெற ஆவலாய் இருக்கிறீர்களா? உங்கள் விருப்பப்படி நடப்பதோ பணம் பொருள் சேர்ப்பதோ அல்ல, யெகோவாவைத் துதிப்பதே உங்கள் வாழ்க்கையில் முக்கியமானதாய் இருக்க வேண்டும் என்பதை பைபிள் படிப்பிலிருந்து அறிந்திருப்பீர்கள். (சங்கீதம் 148:11-13-ஐ வாசியுங்கள்; லூக். 12:15) அப்படியெனில், ஞானஸ்நானம் பெறுவதால் கிடைக்கும் சில ஆசீர்வாதங்களும் நன்மைகளும் யாவை?
5 கடவுளுக்கு உங்களை அர்ப்பணித்து ஞானஸ்நானம் பெறும்போது உங்களுடைய வாழ்க்கை மிக உயர்ந்த நோக்கம் உடையதாக இருக்கும். நீங்கள் கடவுளுடைய சித்தத்தைச் செய்வதால் சந்தோஷமாக இருப்பீர்கள். (ரோ. 12:1, 2) யெகோவாவின் சக்தி உங்களில் சமாதானம், விசுவாசம் போன்ற தெய்வீகக் குணங்களைப் பிறப்பிக்கும். (கலா. 5:22, 23) உங்களுடைய ஜெபங்களுக்குக் கடவுள் பதிலளிப்பார், அவருடைய வார்த்தைக்கு இசைவாக வாழ நீங்கள் எடுக்கும் முயற்சிகளை ஆசீர்வதிப்பார். ஊழியத்தில் ஈடுபடுவது உங்களுக்கு மகிழ்ச்சி தரும்; கடவுளுக்குப் பிரியமாக வாழ்வது முடிவில்லா வாழ்வைக் குறித்த உங்கள் நம்பிக்கையைப் பலப்படுத்தும். அதுமட்டுமல்ல, உங்களைக் கடவுளுக்கு அர்ப்பணிப்பதும் ஞானஸ்நானம் பெறுவதும், நீங்கள் உண்மையிலேயே யெகோவாவின் சாட்சியாவதற்கு விரும்புவதைக் காட்டும்.—ஏசா. 43:10-12.
6. நாம் ஞானஸ்நானம் பெறும்போது எதைத் தெரிவிக்கிறோம்?
6 யெகோவாவுக்கு நம்மை அர்ப்பணித்து ஞானஸ்நானம் பெறும்போது, நாம் அவருக்குச் சொந்தமானவர்கள் என்பதை யாவரறிய தெரிவிக்கிறோம். “சொல்லப்போனால், நம்மில் ஒருவரும் நமக்காகவே வாழ்வதில்லை, நமக்காகவே இறப்பதுமில்லை; நாம் வாழ்ந்தாலும் யெகோவாவுக்கென்று வாழ்கிறோம்; இறந்தாலும் யெகோவாவுக்கென்று இறக்கிறோம். அதனால், நாம் வாழ்ந்தாலும் இறந்தாலும் யெகோவாவுக்கே உரியவர்களாக இருக்கிறோம்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (ரோ. 14:7, 8) கடவுள் நமக்குச் சுதந்திரமாகச் செயல்படும் உரிமையைத் தந்து கௌரவித்திருக்கிறார். நாம் அவரை நேசிப்பதால் அவருடைய வழியில் தொடர்ந்து நடக்கத் தீர்மானமாய் இருக்கும்போது, அவரது இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறோம். (நீதி. 27:11) நாம் ஞானஸ்நானம் பெறும்போது, யெகோவாவுக்கு நம்மை அர்ப்பணித்திருப்பதைக் காட்டுகிறோம்; அதோடு, அவரே நம் ஆட்சியாளர் என யாவரறிய அறிவிக்கிறோம். சர்வலோக அரசாட்சியைக் குறித்த விவாதத்தில் நாம் அவர் பக்கம் நிற்பதைக் காட்டுகிறோம். (அப். 5:29, 32) அதனால், அவரும் நம் பக்கம் இருக்கிறார். (சங்கீதம் 118:6-ஐ வாசியுங்கள்.) ஞானஸ்நானம் பெறுவது இப்போதும் எதிர்காலத்திலும் இன்னும் அநேக ஆன்மீக ஆசீர்வாதங்களுக்கு வழிவகுக்கும்.
அன்பான சகோதரத்துவம் ஓர் ஆசீர்வாதம்
7-9. (அ) எல்லாவற்றையும் தியாகம் செய்துவிட்டு இயேசுவைப் பின்பற்றியவர்களுக்கு அவர் என்ன உறுதி அளித்தார்? (ஆ) மாற்கு 10:29, 30-ல் உள்ள இயேசுவின் வாக்குறுதி எவ்வாறு நிறைவேறி வருகிறது?
7 இயேசுவிடம் அப்போஸ்தலன் பேதுரு, “நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உங்களைப் பின்பற்றி வந்திருக்கிறோமே, எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்று கேட்டார். (மத். 19:27) தனக்கும் மற்ற சீடர்களுக்கும் எதிர்காலத்தில் என்ன கிடைக்கும் என்பதை அறிய பேதுரு விரும்பினார். ஏனென்றால், நற்செய்தியை அறிவிக்கும் வேலையில் முழுமையாக ஈடுபடுவதற்கு அவர்கள் பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டியிருந்தது. (மத். 4:18-22) அவர்களுக்கு இயேசு என்ன உறுதி அளித்தார்?
8 மாற்கு எழுதிய பதிவின்படி, தமது சீடர்கள் அன்பான சகோதரத்துவத்தின் பாகமாக இருப்பார்கள் என இயேசு உறுதி அளித்தார். “எனக்காகவும் நற்செய்திக்காகவும் வீட்டையோ சகோதரர்களையோ சகோதரிகளையோ தாயையோ தகப்பனையோ பிள்ளைகளையோ வயல்களையோ தியாகம் செய்கிற எவனும், இக்காலத்தில் துன்புறுத்தல்களோடுகூட, நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாய்களையும் பிள்ளைகளையும் வயல்களையும் பெற்றுக்கொள்வான்; வரப்போகும் காலத்தில் முடிவில்லா வாழ்வையும் பெற்றுக்கொள்வான்” என்று சொன்னார். (மாற். 10:29, 30) இயேசுவின் இந்த வாக்குறுதி முதல் நூற்றாண்டில் நிறைவேறியது. லீதியாள், ஆக்கில்லா, பிரிஸ்கில்லாள், காயு போன்றவர்கள் சக கிறிஸ்தவர்கள் தங்குவதற்குத் தங்களுடைய ‘வீடுகளை’ கொடுத்து, அவர்களுக்கு ‘சகோதரர்களாகவும் சகோதரிகளாகவும் தாய்களாகவும்’ ஆனார்கள்.—அப். 16:14, 15; 18:2-4; 3 யோ. 1, 5-8.
9 இயேசுவின் அந்த வாக்குறுதி இன்று பெரியளவில் நிறைவேறி வருகிறது. அவரைப் பின்பற்றுகிறவர்கள் “வயல்களை” தியாகம் செய்வதாகச் சொல்லப்படுவது, பிழைப்புக்கான வேலைகளை விட்டுவிடுவதைக் குறிக்கிறது; மிஷனரிகள், பெத்தேல் குடும்பத்தினர், சர்வதேச ஊழியர்கள் போன்ற அநேகர் பல்வேறு நாடுகளில் கடவுளுடைய வேலையைச் செய்வதற்காக அவற்றை மனமுவந்து தியாகம் செய்திருக்கிறார்கள். அநேக சகோதர சகோதரிகள் வாழ்க்கையை எளிமையாக்க தங்களுடைய வீடுகளை விட்டுவிட்டிருக்கிறார்கள்; யெகோவா அவர்களைப் பராமரித்திருக்கிற விதத்தைப் பற்றியும், அவருடைய சேவையில் கிடைத்திருக்கிற சந்தோஷத்தைப் பற்றியும் அவர்கள் சொல்வதைக் கேட்கும்போது நாம் ஆனந்தம் அடைகிறோம். (அப். 20:35) அதுமட்டுமல்ல, ஞானஸ்நானம் பெற்ற ஊழியர்கள் எல்லாருமே உலகளாவிய சகோதர சகோதரிகளோடு சேர்ந்து ‘முதலாவது கடவுளுடைய அரசாங்கத்தையும் அவருடைய நீதிநெறிகளையும் நாடிக்கொண்டே இருக்கும்’ ஆசீர்வாதத்தைப் பெற முடியும்.—மத். 6:33.
‘உன்னதமானவரின் மறைவில்’ பாதுகாப்பு
10, 11. ‘உன்னதமானவரின் மறைவில்’ தங்கியிருப்பது எதைக் குறிக்கிறது, நாம் எப்படி அதில் இருக்க முடியும்?
10 ஒருவர் யெகோவாவுக்குத் தன்னை அர்ப்பணிப்பதும் ஞானஸ்நானம் பெறுவதும் மற்றொரு சிறந்த ஆசீர்வாதத்தைத் தருகிறது; அதாவது, ‘உன்னதமானவரின் மறைவில்’ தங்கியிருக்கும் பாக்கியத்தைத் தருகிறது. (சங்கீதம் 91:1-ஐ வாசியுங்கள்.) இது அடையாள அர்த்தமுடைய இடமாக இருக்கிறது; ஆன்மீகத் தீங்கு ஏற்படாத பாதுகாப்பான நிலையைக் குறிக்கிறது. ஆன்மீகப் பார்வை இல்லாதவர்களுக்கும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் இது புரியாப் புதிராக உள்ளதால் ‘மறைவில்’ இருப்பதாகச் சொல்லப்படுகிறது. யெகோவாவுக்கு நம்மை அர்ப்பணித்ததற்கு இசைய வாழும்போதும் அவர்மீது முழு நம்பிக்கை வைக்கும்போதும், நாம் ஒரு கருத்தில் “நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர்” என்று அவரிடம் சொல்கிறோம். (சங். 91:2) அப்போது யெகோவா தேவன் நமக்குப் பாதுகாப்பான உறைவிடம் ஆகிறார். (சங். 91:9) இதற்கு மேல் ஒருவருக்கு என்ன வேண்டும்?
11 யெகோவாவின் ‘மறைவில்’ இருப்பது, அவருடன் நெருங்கிய பந்தத்தை வளர்த்துக்கொள்ளும் பாக்கியம் பெற்றிருப்பதையும் குறிக்கிறது. இதற்கு முதற்படி, அவருக்கு நம்மை அர்ப்பணித்து ஞானஸ்நானம் பெறுவதாகும். அதன் பிறகு, பைபிள் படிப்பது, இதயப்பூர்வமாக ஜெபிப்பது, முழுமையாகக் கீழ்ப்படிவது ஆகியவற்றின் மூலம் அந்தப் பந்தத்தை மேன்மேலும் பலப்படுத்திக்கொள்கிறோம். (யாக். 4:8) யெகோவாவிடம் இயேசுவுக்கு இருந்ததைப் போன்ற நெருக்கமான பந்தம் வேறு யாருக்கும் இருந்ததில்லை; யெகோவா மீதுள்ள நம்பிக்கையை அவர் ஒருபோதும் இழக்கவில்லை. (யோவா. 8:29) நாமும் யெகோவா மீதுள்ள நம்பிக்கையை ஒருபோதும் இழக்காமல் இருப்போமாக; யெகோவாவுக்கு அர்ப்பணிக்கையில் செய்யும் பொருத்தனையை நாம் நிறைவேற்றுவதற்கு உதவ அவருக்கு விருப்பம் இருக்கிறதா, திறமை இருக்கிறதா என்றெல்லாம் ஒருபோதும் சந்தேகப்படாமல் இருப்போமாக. (பிர. 5:4) கடவுள் தம்முடைய மக்களுக்கு செய்திருக்கிற ஆன்மீக ஏற்பாடுகள், அவர் நம்மை உண்மையிலேயே நேசிப்பதையும், அவருடைய சேவையை நாம் திறம்பட செய்ய வேண்டுமென அவர் விரும்புவதையும் தெள்ளத்தெளிவாகக் காட்டுகின்றன.
ஆன்மீகப் பூஞ்சோலையை உயர்வாய்க் கருதுங்கள்
12, 13. (அ) ஆன்மீகப் பூஞ்சோலை என்றால் என்ன? (ஆ) புதியவர்களுக்கு நாம் எப்படி உதவலாம்?
12 ஒருவர் தன்னை அர்ப்பணிப்பதும் ஞானஸ்நானம் எடுப்பதும் ஆன்மீகப் பூஞ்சோலையில் இருக்கும் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்குக்கூட வழிவகுக்கிறது. இது, சக கிறிஸ்தவர்களுடன் நாம் அனுபவிக்கிற ஒப்பற்ற ஆன்மீகச் சூழல் ஆகும்; இந்தச் சூழலில் இருப்பவர்கள் யெகோவா தேவனோடும் ஒருவரோடொருவரும் சமாதானத்தை அனுபவிக்கிறார்கள். (சங். 29:11; ஏசா. 54:13) நம்முடைய ஆன்மீகப் பூஞ்சோலைக்கு ஒப்பான எதுவுமே இந்த உலகத்தில் இல்லை. இதை முக்கியமாகச் சர்வதேச மாநாடுகளில் காண முடிகிறது; அங்கே, பல நாடுகளையும் மொழிகளையும் இனங்களையும் சேர்ந்த சகோதர சகோதரிகள் ஒன்றுகூடி வந்து சமாதானத்தையும் ஒற்றுமையையும் அன்பையும் அனுபவித்து மகிழ்கிறார்கள்.
13 நாம் அனுபவிக்கிற ஆன்மீகப் பூஞ்சோலைக்கும் இன்றைய உலகின் சீரழிந்த நிலைக்கும் எவ்வளவு வித்தியாசம்! (ஏசாயா 65:13, 14-ஐ வாசியுங்கள்.) நற்செய்தியை அறிவிப்பதன் மூலம், இந்த ஆன்மீகப் பூஞ்சோலைக்கு வரும்படி மற்றவர்களுக்கு அழைப்பு விடுக்கும் பாக்கியத்தை நாம் பெற்றிருக்கிறோம். சமீபத்தில் சபைக்கு வர ஆரம்பித்திருக்கிற புதியவர்களுக்கு ஊழியத்தில் பயிற்சி கொடுத்து உதவுவதும்கூட நமக்குக் கிடைத்திருக்கும் ஓர் ஆசீர்வாதம். ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் ‘கடவுளுடைய வழிகளைப் பற்றி இன்னும் திருத்தமாக அப்பொல்லோவுக்கு விளக்கிச் சொல்லி’ உதவியதைப் போல புதியவர்கள் சிலருக்கு உதவும்படி மூப்பர்கள் நம்மிடம் சொல்லலாம்; இதுவும் நமக்குக் கிடைக்கும் பாக்கியமே.—அப். 18:24-26.
இயேசுவிடமிருந்து கற்றுக்கொண்டே இருங்கள்
14, 15. இயேசுவிடமிருந்து கற்றுக்கொண்டே இருப்பதற்கு என்ன தகுந்த காரணங்கள் உள்ளன?
14 நாம் இயேசுவிடமிருந்து கற்றுக்கொண்டே இருப்பதற்குத் தகுந்த காரணங்கள் உள்ளன. இயேசு பூமிக்கு வருவதற்கு முன்பு, பரலோகத்தில் தம் தகப்பனுடன் சேர்ந்து கோடானுகோடி வருடங்கள் வேலை செய்தார். (நீதி. 8:22, 30, NW) கடவுளுக்குச் சேவை செய்வதும் சத்தியத்திற்குச் சாட்சி கொடுப்பதுமே மிகச் சிறந்த வாழ்க்கைப் பாதை என்பதை அவர் அறிந்திருந்தார். (யோவா. 18:37) வேறெந்த வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுப்பதும் சுயநலமானதாக, குறுகிய கண்ணோட்டம் உடையதாக இருக்கும் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். அவர் கடுமையாகச் சோதிக்கப்படுவார் என்றும் கொல்லப்படுவார் என்றும் அறிந்திருந்தார். (மத். 20:18, 19; எபி. 4:15) நமக்கு முன்மாதிரியான அவர், நாம் எப்படி உத்தமத்தில் நிலைத்திருக்கலாம் என்பதைக் கற்றுக்கொடுத்தார்.
15 இயேசு ஞானஸ்நானம் பெற்றபின் சீக்கிரத்திலேயே அவரை மிகச் சிறந்த வாழ்க்கைப் பாதையைவிட்டு விலகச் செய்வதற்குச் சாத்தான் சோதித்தான்; ஆனால், அவனுக்குத் தோல்வியே மிஞ்சியது. (மத். 4:1-11) சாத்தான் என்னதான் செய்ய முயன்றாலும் நம்மால் தொடர்ந்து உத்தமமாய் இருக்க முடியும் என்பதை இது காட்டுகிறது. சீக்கிரத்தில் ஞானஸ்நானம் பெறவிருப்பவர்கள் மீதும் சமீபத்தில் ஞானஸ்நானம் பெற்றவர்கள் மீதும் சாத்தான் பெரும்பாலும் குறியாக இருப்பான். (1 பே. 5:8) அக்கறையுள்ள குடும்ப அங்கத்தினர்கள், யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் கேள்விப்பட்டு அவர்களை எதிர்க்கலாம். இருந்தாலும் அப்படிப்பட்ட சோதனைகள், கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதும் சாட்சி கொடுக்கும்போதும் மரியாதை, சாதுரியம் போன்ற சிறந்த கிறிஸ்தவ குணங்களை வெளிக்காட்ட வாய்ப்பளிக்கின்றன. (1 பே. 3:15) இத்தகைய குணங்களை வெளிக்காட்டும்போது, மற்றவர்கள் சத்தியத்திடம் கவர்ந்திழுக்கப்படுவார்கள்.—1 தீ. 4:16.
மிகச் சிறந்த வாழ்க்கைப் பாதையைவிட்டு விலகாதிருங்கள்!
16, 17. (அ) உபாகமம் 30:19, 20-ல் ஜீவனைப் பெறுவதற்கு என்ன மூன்று அடிப்படைத் தேவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன? (ஆ) மோசே எழுதியதை இயேசுவும் யோவானும் பவுலும் எப்படி மீண்டும் குறிப்பிட்டார்கள்?
16 இயேசு பூமியில் வாழ்ந்ததற்குச் சுமார் 1,500 வருடங்களுக்கு முன், மிகச் சிறந்த வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுக்கும்படி இஸ்ரவேலருக்கு மோசே அறிவுரை கொடுத்தார். “நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன் என்று உங்கள் மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சி வைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு, . . . உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக” என்று சொன்னார். (உபா. 30:19, 20) இஸ்ரவேலர் கடவுளுக்கு உண்மையற்றவர்களாக ஆனபோதிலும், ஜீவனைப் பெறுவதற்கு மோசே குறிப்பிட்ட மூன்று அடிப்படைத் தேவைகள் மாறவில்லை. இயேசுவும் மற்றவர்களும் அவற்றை மீண்டும் குறிப்பிட்டார்கள்.
17 முதலாவதாக, ‘நம் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர’ வேண்டும். யெகோவாவின் நீதியான வழிகளில் நடப்பதன் மூலம் அவர் மீதுள்ள அன்பை நாம் வெளிக்காட்ட வேண்டும். (மத். 22:37) இரண்டாவதாக, நாம் யெகோவாவின் ‘சத்தத்திற்குச் செவிகொடுக்க’ வேண்டும்; அவருடைய வார்த்தையைப் படிப்பதன் மூலமும் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதன் மூலமும் இதைச் செய்ய வேண்டும். (1 யோ. 5:3) இதற்காக, பைபிள் விஷயங்கள் கலந்தாராயப்படுகிற கிறிஸ்தவக் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். (எபி. 10:23-25) மூன்றாவதாக, நாம் யெகோவாவை ‘பற்றிக்கொள்ள,’ அதாவது அவரைவிட்டு விலகாதிருக்க வேண்டும். என்ன பிரச்சினைகள் வந்தாலும், நாம் கடவுள் மீது விசுவாசமாகவே இருந்து, அவருடைய மகனைப் பின்பற்றுவோமாக.—2 கொ. 4:16-18.
18. (அ) காவற்கோபுர பத்திரிகை 1914-ல் சத்தியத்தைப் பற்றி என்ன சொன்னது? (ஆ) சத்தியத்தின் வெளிச்சத்தைக் குறித்து நாம் இன்று எப்படி உணருகிறோம்?
18 பைபிள் சத்தியத்திற்கு இசைய வாழ்வது எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதம்! 1914-ல் ஆங்கில காவற்கோபுர பத்திரிகையில் பின்வரும் முக்கியக் குறிப்பு பிரசுரிக்கப்பட்டது: “நாம் ஆசீர்வாதம் பெற்ற சந்தோஷமான மக்கள், அல்லவா? நம் கடவுள் நம்பகமானவர், அல்லவா? இதைவிட சிறந்த சத்தியம் வேறு யாருக்காவது தெரிந்தால், அதை ஏற்றுக்கொள்ளட்டும். இதைவிட சிறந்த சத்தியத்தை நீங்கள் யாராவது கண்டுபிடித்தால் எங்களுக்குச் சொல்லுங்கள். எங்களைப் பொறுத்தவரை, கடவுளுடைய வார்த்தையிலிருந்து நாங்கள் கண்டுபிடித்த சத்தியத்தைவிடச் சிறந்தது வேறெதுவும் இல்லை; சொல்லப்போனால், வேறெதுவும் இந்தச் சத்தியத்திற்கு நிகராகாது. . . . உண்மைக் கடவுளைப் பற்றி நாங்கள் தெளிவாகத் தெரிந்துகொண்டதால் எங்கள் இதயத்திலும் வாழ்க்கையிலும் அனுபவிக்கிற சமாதானத்தையும் சந்தோஷத்தையும் ஆசீர்வாதத்தையும் விவரிக்க வார்த்தைகள் இல்லை. கடவுளுடைய ஞானம், நீதி, வல்லமை, அன்பு ஆகியவற்றைப் பற்றிய பைபிள் பதிவுகள் முழுக்க முழுக்க எங்கள் மனதிற்கு அறிவொளியூட்டி, இதயத்திற்கு இதமளிக்கின்றன. இதற்குமேல் எங்களுக்கு என்ன வேண்டும்? இந்தச் சிறந்த பதிவுகளை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்வதே எங்களுடைய ஆசை, வேறெதுவும் இல்லை.” (காவற்கோபுரம், டிசம்பர் 15, 1914, பக்கங்கள் 377-378) சத்தியத்திற்கும் ஆன்மீக வெளிச்சத்திற்கும் நாம் இன்றும்கூட அதே அளவுக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். சொல்லப்போனால், யெகோவாவின் ‘வெளிச்சத்தில் நடப்பதை’ குறித்துப் பெருமகிழ்ச்சி அடைய இன்று நமக்கு இன்னும் நிறையக் காரணங்கள் இருக்கின்றன.—ஏசா. 2:5; சங். 43:3; நீதி. 4:18.
19. ஞானஸ்நானத்திற்குத் தகுதி பெற்றவர்கள் ஏன் அதற்குத் தாமதிக்கக் கூடாது?
19 நீங்கள் யெகோவாவின் ‘வெளிச்சத்தில் நடக்க’ விரும்புகிறீர்களா? ஆனால், இன்னும் அவருக்கு உங்களை அர்ப்பணித்து, ஞானஸ்நானம் பெறாதிருக்கிறீர்களா? அப்படியென்றால், தாமதிக்காதீர்கள். ஞானஸ்நானம் பெறுவதற்கு பைபிள் சொல்லும் எல்லாத் தகுதிகளையும் பூர்த்தி செய்யுங்கள்; ஏனென்றால், ஞானஸ்நானம் பெறுவது யெகோவாவும் கிறிஸ்துவும் நமக்குச் செய்திருப்பவற்றிற்கு நன்றியை வெளிக்காட்டுவதற்கான ஓர் ஒப்பற்ற வழி. உங்களிடம் இருப்பதிலேயே மிகவும் மதிப்புமிக்க சொத்தான உங்கள் வாழ்வை யெகோவாவுக்கு அர்ப்பணம் செய்யுங்கள். அவருடைய மகனைப் பின்பற்றுவதன் மூலம் அவருடைய சித்தத்தைச் செய்ய விரும்புவதைக் காட்டுங்கள். (2 கொ. 5:14, 15) இதுதான் மிகச் சிறந்த வாழ்க்கைப் பாதை என்பதில் சந்தேகமில்லை!
எப்படிப் பதிலளிப்பீர்கள்?
• நாம் ஞானஸ்நானம் பெறுவது எதைக் காட்டுகிறது?
• கடவுளுக்கு நம்மை அர்ப்பணிப்பதும், ஞானஸ்நானம் பெறுவதும் என்ன ஆசீர்வாதங்களைத் தருகின்றன?
• இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வது ஏன் மிக முக்கியம்?
• மிகச் சிறந்த வாழ்க்கைப் பாதையைவிட்டு விலகாதிருக்க எது நமக்கு உதவும்?
[பக்கம் 25-ன் படம்]
ஞானஸ்நானம் பெறுவது நீங்கள் மிகச் சிறந்த வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பதைக் காட்டுகிறது
[பக்கம் 26-ன் படம்]
நீங்கள் ‘உன்னதமானவரின் மறைவில்’ பாதுகாப்பாய் இருக்கிறீர்களா?