‘கடவுளுடைய வார்த்தையைத் தைரியமாகப் பேசுங்கள்’
“அவர்கள் . . . கடவுளுடைய சக்தியினால் நிரப்பப்பட்டு அவருடைய வார்த்தையைத் தைரியமாகப் பேச ஆரம்பித்தார்கள்.”—அப். 4:31.
1, 2. திறம்பட்ட விதத்தில் ஊழியம் செய்ய நாம் ஏன் கடினமாக முயல வேண்டும்?
“கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நற்செய்தி உலகமெங்கும் உள்ள எல்லாத் தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்.” இறப்பதற்கு மூன்று நாட்கள் முன்பு இயேசு தம்முடைய சீடர்களிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார். உயிர்த்தெழுப்பப்பட்டு பரலோகத்திற்குப் போகும் முன்பு, “எல்லாத் தேசத்தாரையும் சீடர்களாக்கி, . . . நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி அவர்களுக்குக் கற்பியுங்கள்” என்று சொன்னார். அதோடு, “இந்த உலகத்தின் முடிவுகாலம்வரை எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன்” என்று வாக்குறுதியும் அளித்தார்.—மத். 24:14; 26:1, 2; 28:19, 20.
2 முதல் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பிரசங்க வேலையில் யெகோவாவின் சாட்சிகளாகிய நாம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம். உயிர்காக்கும் இந்த வேலையைவிட முக்கியமான வேலை வேறு எதுவுமே இல்லை. அப்படியானால், பிரசங்க வேலையில் திறம்பட்ட விதமாக ஈடுபடுவது எவ்வளவு முக்கியம்! கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்படும்போது ஊழியத்தில் நம்மால் எப்படித் தைரியமாகப் பேச முடியும் என்பதை இந்தக் கட்டுரையில் சிந்திப்போம். திறம்பட்ட விதத்தில் கற்பிப்பதற்கும், தொடர்ந்து பிரசங்கிப்பதற்கும் யெகோவாவின் சக்தி எப்படி நம்மை வழிநடத்தும் என்பதை அடுத்த இரண்டு கட்டுரைகளில் சிந்திப்போம்.
தைரியம் தேவை
3. நற்செய்தியை அறிவிக்கும் வேலையில் ஈடுபட நமக்கு ஏன் தைரியம் தேவை?
3 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அறிவிக்கும் வேலை நமக்குக் கிடைத்திருக்கிற அரும்பெரும் பாக்கியமே. அதேசமயம், அதில் சவால்களும் இருக்கின்றன. நற்செய்தியைச் சிலர் உடனடியாக ஏற்றுக்கொள்கிறார்கள்; ஆனால், பலர் நோவாவின் காலத்தில் வாழ்ந்த மக்களைப் போல் இருக்கிறார்கள். “பெருவெள்ளம் வந்து எல்லாரையும் அடித்துக்கொண்டு போகும்வரை . . . [அவர்கள்] கவனம் செலுத்தவே இல்லை” என்று இயேசு சொன்னார். (மத். 24:38, 39) இன்று நம்மைப் பலர் கேலி செய்யலாம் அல்லது எதிர்க்கலாம். (2 பே. 3:3) அதிகாரத்தில் உள்ளவர்களும், சக மாணவர்களும், சக பணியாளர்களும் நம்மை எதிர்க்கலாம்; குடும்ப அங்கத்தினர்களும்கூட நம்மை எதிர்க்கலாம். மற்றவர்கள் ஒதுக்கிவிடுவார்களோ என்ற பயம், கூச்ச சுபாவம் போன்ற பலவீனங்களோடு நாம் மல்லுக்கட்ட வேண்டியிருக்கலாம். இதுபோன்ற பல காரணங்களால், கடவுளுடைய வார்த்தையை “தைரியமாய்” பேசுவதற்கும், “தயக்கமில்லாமல்” பேசுவதற்கும் நாம் சிரமப்படலாம். (எபே. 6:19, 20) என்றாலும், கடவுளுடைய வார்த்தையைத் தொடர்ந்து பேச நமக்குத் தைரியம் தேவை. அதை வளர்த்துக்கொள்ள எது நமக்கு உதவும்?
4. (அ) தைரியம் என்பது எதைக் குறிக்கிறது? (ஆ) தெசலோனிக்கேயில் உள்ளவர்களிடம் பேசுவதற்கு அப்போஸ்தலன் பவுல் எப்படித் தைரியத்தை வரவழைத்துக்கொண்டார்?
4 “தைரியம்” என்பதற்கான கிரேக்க வார்த்தை ‘ஒளிவுமறைவில்லாமல், மூடிமறைக்காமல், வெளிப்படையாய்ப் பேசுவதை’ குறிக்கிறது. “துணிவோடும், நம்பிக்கையோடும், . . . பயமில்லாமலும் இருப்பதை” இது அர்த்தப்படுத்துகிறது. தைரியமாகப் பேசுவதென்பது, முகத்தில் அடித்தாற்போல் பேசுவதையோ கடுகடுப்பாகப் பேசுவதையோ அர்த்தப்படுத்தாது. (கொலோ. 4:6) கிறிஸ்தவர்களாகிய நாம் தைரியமாக மட்டுமல்ல, எல்லாரோடும் சமாதானமாகவும் இருக்க வேண்டும். (ரோ. 12:18) முக்கியமாய், நாம் மற்றவர்களிடம் நற்செய்தியை அறிவிக்கும்போது, தெரியாத்தனமாக அவர்களை புண்படுத்தாமல் இருக்க வேண்டுமானால் சாதுரியமாகவும் பேசுவது அவசியம். ஆம், சாதுரியத்துடன்கூடிய தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டுமானால், பெருமளவு முயற்சியெடுத்து மற்ற குணங்களையும் வளர்த்துக்கொள்வது அவசியம். ஆனால், நம் சொந்த பலத்தின் மீது சார்ந்திருந்தால் இப்படிப்பட்ட தைரியத்தை வளர்த்துக்கொள்ள முடியாது. அப்போஸ்தலன் பவுலும் அவருடைய தோழர்களும் ‘பிலிப்பியில் அவமதிக்கப்பட்ட’ பின்பு, தெசலோனிக்கேயாவில் உள்ளவர்களிடம் பேசுவதற்கு எப்படி ‘தைரியத்தை வரவழைத்துக்கொண்டார்கள்’? ‘கடவுளுடைய உதவியால்’ என்று பவுல் எழுதினார். (1 தெசலோனிக்கேயர் 2:2-ஐ வாசியுங்கள்.) அவர்களைப் போலவே தைரியத்தை வளர்த்துக்கொள்ளவும் பயத்தைப் போக்கவும் கடவுள் நமக்கு உதவுவார்.
5. தைரியத்தை வரவழைத்துக்கொள்ள பேதுருவுக்கும் யோவானுக்கும் மற்ற சீடர்களுக்கும் கடவுள் எப்படி உதவினார்?
5 “யூதத் தலைவர்களும் மூப்பர்களும் வேத அறிஞர்களும்” அப்போஸ்தலர்களாகிய பேதுருவையும் யோவானையும் விசாரித்தபோது, “கடவுளுக்குச் செவிகொடுப்பதற்குப் பதிலாக உங்களுக்குச் செவிகொடுப்பது கடவுளுக்குமுன் நீதியாயிருக்குமா என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள். எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் பற்றிப் பேசுவதை எங்களால் நிறுத்த முடியாது” என்று சொன்னார்கள். அவர்களும் சரி சக விசுவாசிகளும் சரி, ‘யெகோவாவே, துன்புறுத்தலைத் தடுத்து நிறுத்துங்கள்’ என்று வேண்டிக்கொள்ளவில்லை; மாறாக, “யெகோவாவே, அவர்களுடைய மிரட்டல்களைக் கவனியுங்கள், உங்கள் வார்த்தையை முழு தைரியத்தோடு பேசிக்கொண்டே இருக்க உங்களுடைய ஊழியர்களுக்கு அருள்புரியுங்கள்” என்று வேண்டிக்கொண்டார்கள். (அப். 4:5, 19, 20, 29) அவர்களுடைய வேண்டுதலுக்கு யெகோவா எப்படிப் பதிலளித்தார்? (அப்போஸ்தலர் 4:31-ஐ வாசியுங்கள்.) தைரியத்தை வரவழைத்துக்கொள்ள அவர்களுக்குத் தம்முடைய சக்தியைத் தந்து உதவினார். தைரியத்தை வரவழைத்துக்கொள்ள அந்தச் சக்தி நமக்கும்கூட உதவும். அப்படியானால், கடவுளுடைய சக்தியை நாம் எவ்வாறு பெற முடியும், ஊழியத்தில் அந்தச் சக்தி நம்மை எவ்வாறு வழிநடத்தும்?
தைரியத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்
6, 7. கடவுளுடைய சக்தியைப் பெறுவதற்கான நேரடி வழி எது? உதாரணங்கள் தருக.
6 கடவுளுடைய சக்தியைப் பெறுவதற்கான நேரடி வழி அதைத் தரும்படி அவரிடமே கேட்பதாகும். “பொல்லாதவர்களான நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலுள்ள உங்கள் தகப்பன் தம்மிடம் கேட்கிறவர்களுக்கு தம்முடைய சக்தியை இன்னும் எந்தளவு கொடுப்பார்!” என்று இயேசு தம்முடைய சீடர்களிடம் சொன்னார். (லூக். 11:13) ஆம், கடவுளுடைய சக்தியைக் கேட்டு நாம் தொடர்ந்து ஜெபம் செய்ய வேண்டும். தெரு ஊழியம் செய்யவோ, சந்தர்ப்ப சாட்சி கொடுக்கவோ, வியாபார பகுதிகளில் ஊழியம் செய்யவோ நமக்குப் பயமாக இருந்தால், தைரியத்தை வரவழைத்துக்கொள்ள அவருடைய சக்தியைத் தந்து உதவும்படி யெகோவாவிடம் நாம் ஜெபம் செய்யலாம்.—1 தெ. 5:17.
7 ரோசா என்ற சகோதரி அதைத்தான் செய்தார்.a ஒருநாள் அவருடைய சக ஆசிரியை ஒருவர் பிள்ளைகளை மோசமாக நடத்துவது சம்பந்தமாக வேறொரு பள்ளியிலிருந்து வந்திருந்த ஓர் அறிக்கையை வாசித்துக்கொண்டிருந்தார். அது அவருடைய மனதை உலுக்கியதால், “இந்த உலகத்தில் ஏன்தான் இப்படியெல்லாம் நடக்கிறதோ?” என்று வாய்விட்டுப் புலம்பினார். சாட்சி கொடுப்பதற்கான அந்த வாய்ப்பை நழுவவிடக் கூடாதென ரோசா நினைத்தார். அதற்கான தைரியத்தை அவர் எப்படிப் பெற்றார்? “யெகோவாவிடம் அவருடைய சக்தியைக் கேட்டு ஜெபம் செய்தேன்” என்று அவரே சொல்கிறார். அதன்பின், ரோசா அந்த ஆசிரியைக்கு நன்றாகச் சாட்சி கொடுத்தார், மறுசந்திப்புக்கும்கூட ஏற்பாடு செய்தார். இன்னொரு உதாரணத்தைப் பார்க்கலாம்; நியு யார்க் நகரைச் சேர்ந்த ஐந்து வயது மிலானி இவ்வாறு சொல்கிறாள்: “தினமும் பள்ளிக்கூடத்திற்குக் கிளம்பும்போது அம்மாவும் நானும் ஜெபம் செய்வோம்.” எதற்காக அவர்கள் ஜெபம் செய்கிறார்கள்? யெகோவாவைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவதற்கும் நம்பிக்கைகளை விட்டுக்கொடுக்காமல் உறுதியாய் இருப்பதற்கும் தைரியத்திற்காக அவரிடம் ஜெபம் செய்கிறார்கள். மிலானியின் அம்மா இப்படிச் சொல்கிறார்: “பண்டிகைகள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் போன்றவற்றில் கலந்துகொள்ளாமல் இருக்கவும், அவற்றில் ஏன் கலந்துகொள்வதில்லை என மற்றவர்களுக்கு விளக்கவும் ஜெபம் மிலானிக்கு உதவியிருக்கிறது.” தைரியத்தை வரவழைத்துக்கொள்ள ஜெபம் நமக்கு உதவும் என்பதை இந்த உதாரணங்கள் காட்டுகின்றன, அல்லவா?
8. தைரியத்தை வளர்த்துக்கொள்வது பற்றி எரேமியா தீர்க்கதரிசியிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
8 தைரியத்தை வளர்த்துக்கொள்ள எரேமியா தீர்க்கதரிசிக்கு எது உதவியது என்பதையும் சிந்தித்துப் பாருங்கள். யெகோவா அவரைத் தீர்க்கதரிசியாக நியமித்தபோது, “இதோ, நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன்” எனச் சொன்னார். (எரே. 1:4-6) என்றாலும், பிற்பாடு தன் ஊழியத்தை மிகுந்த வைராக்கியத்தோடும் வலிமையோடும் செய்ததால் அழிவை அறிவிப்பவனாகவே அநேகர் அவரைக் கருதினார்கள். (எரே. 38:4) யெகோவாவின் நியாயத்தீர்ப்புச் செய்திகளை 65 வருடங்களுக்கும் மேல் தைரியமாக அவர் அறிவித்து வந்தார். பயமில்லாமல் தைரியமாகப் பிரசங்கிப்பதற்கு அவர் பெயர்பெற்றவராக இருந்ததால், கிட்டத்தட்ட 600 வருடங்களுக்குப் பிறகு இயேசு தைரியமாகப் பேசியபோது எரேமியாதான் உயிர்த்தெழுந்து வந்திருக்கிறார் எனச் சிலர் நினைத்தார்கள். (மத். 16:13, 14) ஆரம்பத்தில் பேசப் பயந்த எரேமியா தன்னுடைய கூச்ச சுபாவத்தை எப்படி மேற்கொண்டார்? ‘கடவுளுடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப் போல் என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து இளைத்துப்போனேன்; எனக்குப் பொறுக்கக்கூடாமற்போயிற்று’ என்று அவர் குறிப்பிட்டார். (எரே. 20:9) ஆம், யெகோவாவின் வார்த்தை எரேமியா மீது பெருமளவு வல்லமை செலுத்தியதால் அதைப் பற்றிப் பேசுவதற்கு அவர் உந்துவிக்கப்பட்டார்.
9. கடவுளுடைய வார்த்தை எரேமியாவை உந்துவித்ததுபோல் நம்மையும் எப்படி உந்துவிக்கும்?
9 எபிரெயர்களுக்கு எழுதிய கடிதத்தில் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு குறிப்பிட்டார்: “கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, வல்லமையுள்ளது; இருபுறமும் கூர்மையான எந்த வாளையும்விடக் கூர்மையானது; அகத்தையும் புறத்தையும் மூட்டுகளையும் அவற்றின் மஜ்ஜையையும் பிரிக்குமளவுக்கு ஊடுருவக்கூடியது; இருதயத்தின் எண்ணங்களையும் நோக்கங்களையும் பகுத்தறியக்கூடியது.” (எபி. 4:12) கடவுளுடைய வார்த்தை எரேமியாவை எப்படி உந்துவித்ததோ அப்படியே நம்மையும் உந்துவிக்கும். பைபிளை எழுத மனிதர்கள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், அது மனித ஞானத்தினால் உருவானதல்ல, கடவுளுடைய சக்தியினால் அருளப்பட்டது என்பதை நினைவில் வையுங்கள். “மனிதர்கள் ஒருகாலத்திலும் தங்களுடைய விருப்பத்தினால் தீர்க்கதரிசனம் சொல்லவில்லை; கடவுள் அருளிய வார்த்தைகளை அவருடைய சக்தியினால் உந்துவிக்கப்பட்டே சொன்னார்கள்” என்று 2 பேதுரு 1:21-ல் நாம் வாசிக்கிறோம். நாம் நேரம் ஒதுக்கி, தனிப்பட்ட விதமாக பைபிளை ஆழ்ந்து படிக்கும்போது கடவுளுடைய சக்தியால் அருளப்பட்ட செய்தி நம் மனங்களில் நிறையும். (1 கொரிந்தியர் 2:10-ஐ வாசியுங்கள்.) அந்தச் செய்தி நமக்குள் “எரிகிற அக்கினியைப் போல்” இருக்கும்; நம்மால் மற்றவர்களிடம் அதைப் பற்றிப் பேசாமல் இருக்கவே முடியாது.
10, 11. (அ) தைரியத்தை வளர்த்துக்கொள்ள நாம் எப்படித் தனிப்பட்ட படிப்பில் ஈடுபட வேண்டும்? (ஆ) தனிப்பட்ட படிப்பில் இன்னும் நன்றாய் ஈடுபடுவதற்காக நீங்கள் எடுக்க நினைத்திருக்கிற படிகளில் ஒன்றைக் குறிப்பிடுங்கள்.
10 தனிப்பட்ட பைபிள் படிப்பு நம்மீது பலமாகச் செல்வாக்கு செலுத்த வேண்டுமானால், பைபிளின் செய்தி நம் இருதயத்தைத் தொடும் விதத்தில் நாம் படிக்க வேண்டும். அப்படிச் செய்வது நம் சுபாவத்தை மாற்றிக்கொள்ள உதவும். உதாரணமாக, எசேக்கியேல் தீர்க்கதரிசிக்குக் கொடுக்கப்பட்ட தரிசனம் ஒன்றில் ஒரு சுருளைச் சாப்பிடும்படி அவரிடம் சொல்லப்பட்டது; காதுகொடுத்துக் கேட்காத மக்களிடம் அறிவிக்க வேண்டிய வலிமைமிக்க ஒரு செய்தி அந்தச் சுருளில் இருந்தது. எசேக்கியேல் அந்தச் செய்தியை அப்படியே உட்கொண்டு அதை ஜீரணிக்க வேண்டியிருந்தது. அவர் அப்படிச் செய்தபோது அந்தச் செய்தியை அறிவிக்கும் வேலை அவருக்குத் தேனைப் போல் தித்திப்பாய், அதாவது இனிமையாய் இருந்தது.—எசேக்கியேல் 2:8–3:4, 7-9-ஐ வாசியுங்கள்.
11 எசேக்கியேலுக்கு இருந்த சூழ்நிலைதான் இன்று நமக்கும் இருக்கிறது. அநேகர் பைபிள் செய்தியைக் கேட்கத் துளிகூட ஆர்வம் காட்டுவதில்லை. கடவுளுடைய வார்த்தையை நாம் தொடர்ந்து பேச வேண்டுமானால், அதன் செய்தியை முழுமையாகப் புரிந்துகொள்ளும் விதத்தில் ஆழ்ந்து படிக்க வேண்டும். தனிப்பட்ட படிப்புக்கென்று ஒதுக்கிய நேரத்தில் தவறாமல் படிக்க வேண்டும். ‘நேரம் கிடைத்தால் பார்த்துக்கொள்ளலாம்’ என்று விட்டுவிடக்கூடாது. சங்கீதக்காரனுக்கு இருந்த ஆசை நமக்கும் இருக்க வேண்டும். ‘என் கன்மலையும் என் மீட்பருமாகிய யெகோவாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக’ என்று அவர் பாடினார். (சங். 19:14) பைபிள் சத்தியங்கள் நம் இருதயத்தில் ஆழமாகப் பதிய வேண்டுமானால், படித்த விஷயங்களைத் தியானிப்பது எவ்வளவு முக்கியம்! அப்படியானால், தனிப்பட்ட படிப்பில் இன்னும் நன்றாக ஈடுபட நாம் பெருமுயற்சி எடுக்க வேண்டும்.b
12. கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்பட சபைக் கூட்டங்கள் நமக்கு ஏன் முக்கியம்?
12 கடவுளுடைய சக்தியிலிருந்து பயனடைவதற்கு மற்றொரு வழி, சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வதாகும். “அன்பு காட்டவும் நற்செயல்கள் செய்யவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்பி, ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த அக்கறை காண்பிப்போமாக; சபைக் கூட்டங்களை . . . தவறவிடாமல், ஒன்றுகூடிவந்து ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவோமாக” என்று பைபிள் சொல்கிறது. (எபி. 10:24, 25) சபைக் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்வதற்கும், கூர்ந்து கவனிப்பதற்கும், கற்றுக்கொண்ட விஷயங்களை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்கும் நாம் கடினமாக முயற்சி எடுப்பது கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்பட நமக்குப் பெரிதும் கைகொடுக்கும். சபை மூலமாகத்தானே யெகோவா தம்முடைய சக்தியை நமக்குத் தருகிறார்?—வெளிப்படுத்துதல் 3:6-ஐ வாசியுங்கள்.
தைரியத்தை வளர்த்துக்கொள்வதன் பயன்கள்
13. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் பிரசங்க வேலையைச் செய்து முடித்த விதத்திலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்?
13 இந்தப் பிரபஞ்சத்தில் மிகவும் வலிமைவாய்ந்த சக்தி யெகோவாவின் சக்தியே; அவருடைய சித்தத்தைச் செய்ய அது மனிதர்களைப் பலப்படுத்துகிறது. இந்தச் சக்தியின் உதவியால்தான் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் பிரசங்க வேலையை மிகப் பிரமாண்டமான அளவில் செய்து முடித்தார்கள். “வானத்தின் கீழிருக்கிற எல்லா மக்களுக்கும்” நற்செய்தியை அறிவித்தார்கள். (கொலோ. 1:23) கிறிஸ்தவர்களில் பெரும்பாலோர் “கல்வியறிவு இல்லாத சாதாரண ஆட்கள்” என்பதால், பலம்வாய்ந்த இந்தச் சக்தியால்தான் உந்துவிக்கப்பட்டிருந்தார்கள் என்பது தெளிவாகிறது.—அப். 4:13.
14. ‘கடவுளுடைய சக்தியினால் நிறைந்து ஆர்வத்துடிப்புடன் செயல்பட’ நாம் என்ன செய்ய வேண்டும்?
14 கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலுக்கு இசைவாக வாழ்ந்தோம் என்றால், ஊழியத்தில் தைரியமாய் ஈடுபட உந்துவிக்கப்படுவோம். கடவுளுடைய சக்தியைக் கேட்டு எப்போதும் ஜெபம் செய்வது, தனிப்பட்ட படிப்பில் ஊக்கமாக ஈடுபடுவது, படிக்கிற விஷயங்களை ஜெபத்தோடு தியானம் செய்வது, கிறிஸ்தவக் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்வது ஆகியவை அனைத்தும் ‘யெகோவாவுடைய சக்தியினால் நிறைந்து ஆர்வத்துடிப்புடன் செயல்பட’ நமக்கு உதவும். (ரோ. 12:11) “அலெக்சந்திரியாவைச் சேர்ந்த அப்பொல்லோ என்ற ஒரு யூதர் எபேசுவுக்கு வந்தார்; அவர் . . . கடவுளுடைய சக்தியினால் நிறைந்து ஆர்வத்துடிப்புடன் இயேசுவைப் பற்றிய விஷயங்களைப் பேசிக்கொண்டு வந்தார், திருத்தமாகக் கற்பித்துக்கொண்டும் வந்தார்” என்று பைபிள் சொல்கிறது. (அப். 18:24, 25) நாம் ‘கடவுளுடைய சக்தியினால் நிறைந்திருந்தோம்’ என்றால், வீட்டுக்கு வீடு ஊழியம் செய்வதிலும், சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதிலும் அதிக தைரியமாய் ஈடுபடுவோம்.
15. ஊழியத்தில் அதிக தைரியமாய் ஈடுபடுவது நமக்கும் எப்படி நன்மை அளிக்கிறது?
15 ஊழியத்தில் அதிக தைரியமாய் ஈடுபடும்போது தனிப்பட்ட விதத்தில் நாம் நன்மை பெறுகிறோம். பிரசங்க வேலையின் முக்கியத்துவத்தையும் பயனையும் மிகத் தெளிவாகப் புரிந்திருப்பதால், நம்முடைய மனப்பான்மை செதுக்கிச் சீராக்கப்படுகிறது. திறம்பட்ட விதத்தில் ஊழியம் செய்யும்போது நமக்குள் உற்சாகம் ஊற்றெடுக்கிறது, சந்தோஷம் பொங்குகிறது. அதோடு, பிரசங்க வேலையில் அவசர உணர்வுடன் ஈடுபட வேண்டுமென்பதை நன்கு புரிந்திருப்பதால் நம்முடைய பக்திவைராக்கியம் அதிகரிக்கிறது.
16. ஊழியத்தில் நம்முடைய பக்திவைராக்கியம் தணிந்துபோனால் என்ன செய்ய வேண்டும்?
16 ஊழியத்தில் முன்பு நமக்கிருந்த பக்திவைராக்கியமும் ஆர்வமும் தணிந்துபோனால் என்ன செய்ய வேண்டும்? நம்மை நேர்மையாய் சுய பரிசோதனை செய்ய வேண்டும். “நீங்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்கிறீர்களா என்று உங்களை நீங்களே எப்போதும் சோதித்துப் பாருங்கள்; நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்துகொள்ள உங்களை நீங்களே எப்போதும் ஆராய்ந்து பாருங்கள்” என்று பவுல் எழுதினார். (2 கொ. 13:5) அதனால், உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘கடவுளுடைய சக்தியினால் நிறைந்து ஆர்வத்துடிப்புடன் செயல்படுகிறேனா? அவருடைய சக்தியைக் கேட்டு ஜெபம் செய்கிறேனா? அவருடைய சித்தத்தைச் செய்ய அவர்மீதே சார்ந்திருக்கிறேன் என்பதை என் ஜெபங்களில் தெரிவிக்கிறேனா? நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட ஊழியத்திற்காகக் கடவுளுக்கு நன்றி சொல்கிறேனா? தனிப்பட்ட படிப்பில் தவறாமல் ஈடுபடுகிறேனா? சபைக் கூட்டங்களில் முழுமையாய்க் கவனம் செலுத்துகிறேனா? படித்தவற்றையும் கேட்டவற்றையும் குறித்துத் தியானிக்க நேரம் செலவிடுகிறேனா?’ இதுபோன்ற கேள்விகளைக் கேட்டுக்கொள்வது நம்முடைய பலவீனங்களைத் தெரிந்துகொள்ளவும் அவற்றைச் சரிசெய்யவும் நமக்கு உதவும்.
கடவுளுடைய சக்தியால் தைரியம் பெறுங்கள்
17, 18. (அ) பிரசங்க வேலை இன்று எந்தளவு செய்யப்படுகிறது? (ஆ) பிரசங்க வேலையில் நாம் எப்படி “சிறிதும் தயக்கமில்லாமல்” ஈடுபடலாம்?
17 உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு தம்முடைய சீடர்களிடம் இவ்வாறு சொன்னார்: “கடவுளுடைய சக்தி உங்கள்மீது வரும்போது நீங்கள் பலம் பெற்று, எருசலேமிலும் யூதேயா முழுவதிலும் சமாரியாவிலும் பூமியின் கடைமுனைவரையிலும் எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்.” (அப். 1:8) அன்று தொடங்கப்பட்ட வேலை இன்று வரலாறுகாணாத அளவில் நடைபெற்று வருகிறது. நற்செய்தியை அறிவிப்பதற்காகச் சுமார் 70 லட்சம் யெகோவாவின் சாட்சிகள் 230-க்கும் அதிகமான நாடுகளில், ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 150 கோடி மணிநேரத்தைச் செலவிடுகிறார்கள். மீண்டும் செய்யப்படாத இந்த வேலையில் பக்திவைராக்கியமாக ஈடுபடுவது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது, அல்லவா?
18 முதல் நூற்றாண்டில் செய்யப்பட்டதைப் போலவே, இன்றும் இந்த உலகளாவிய பிரசங்க வேலை கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலால் செய்யப்படுகிறது. அந்தச் சக்தியின் வழிநடத்துதலை நாம் ஏற்றுக்கொண்டால், ஊழியத்தில் “சிறிதும் தயக்கமில்லாமல்” ஈடுபடுவோம். (அப். 28:31) எனவே, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கும்போது அவருடைய சக்தியால் வழிநடத்தப்படுவோமாக!
[அடிக்குறிப்புகள்]
a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
b பைபிள் வாசிப்பிலும் தனிப்பட்ட படிப்பிலும் அதிக பயனைப் பெற வேண்டுமானால், தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள் புத்தகத்தில், பக்கங்கள் 21-32-ல் உள்ள “சிரத்தையோடு வாசியுங்கள்” மற்றும் “படிப்பு பலன் தரும்” என்ற அதிகாரங்களைக் காண்க.
என்ன கற்றுக்கொண்டீர்கள்?
• நாம் ஏன் கடவுளுடைய வார்த்தையைத் தைரியமாகப் பேச வேண்டும்?
• தைரியமாகப் பேச முதல் நூற்றாண்டு சீடர்களுக்கு எது உதவியது?
• நாம் எவ்வாறு தைரியத்தை வளர்த்துக்கொள்ளலாம்?
• தைரியத்தை வளர்த்துக்கொள்வது நமக்கு எப்படி நன்மை அளிக்கிறது?
[பக்கம் 7-ன் படம்]
தைரியத்தை வளர்த்துக்கொள்ள பிள்ளைகளுக்குப் பெற்றோர் எப்படி உதவலாம்?
[பக்கம் 8-ன் படங்கள்]
ஊழியத்தில் ஈடுபடும்போது சுருக்கமாக ஜெபம் செய்வது தைரியத்தை வரவழைத்துக்கொள்ள உதவும்