கடவுளுடைய சக்தியும் மணமகளும் விடுக்கிற அழைப்பு: “வருக, வருக!”
“‘வருக, வருக!’ என்று கடவுளுடைய சக்தி அழைத்துக்கொண்டே இருக்கிறது, மணமகளும் அவ்வாறே அழைக்கிறாள். . . . தாகமாயிருக்கிற எவனும் வரட்டும்; விருப்பமுள்ள எவனும் வாழ்வளிக்கும் தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளட்டும்.”—வெளி. 22:17.
1, 2. நம்முடைய வாழ்க்கையில் கடவுளுடைய அரசாங்கத்திற்கு எந்த இடத்தைக் கொடுக்க வேண்டும், ஏன்?
நம்முடைய வாழ்க்கையில் கடவுளுடைய அரசாங்கத்திற்கு எந்த இடத்தைக் கொடுக்க வேண்டும்? ‘முதலாவது கடவுளுடைய அரசாங்கத்தை நாடிக்கொண்டே இருங்கள்’ என்று இயேசு தம்முடைய சீடர்களை ஊக்கப்படுத்தினார்; அப்படிச் செய்தால் அவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் அவர் கொடுப்பார் என்றும் நம்பிக்கை அளித்தார். (மத். 6:25-33) அந்த அரசாங்கத்தை விலை உயர்ந்த ஒரு முத்துக்கு ஒப்பிட்டுப் பேசினார். அந்த முத்தைத் தேடிப் பயணம் செய்த வியாபாரி ஒருவன் அதைக் கண்டுபிடித்ததும் ‘தன்னிடமுள்ள எல்லாவற்றையும் உடனடியாக விற்று அதை வாங்கிக்கொண்டான்’ என்று அவர் சொன்னார். (மத். 13:45, 46) நாமும்கூட, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வேலையையும், சீடராக்கும் வேலையையும் விலைமதிப்பானதாகக் கருத வேண்டும், அல்லவா?
2 முந்தின இரண்டு கட்டுரைகளில் பார்த்தபடி, ஊழியத்தில் தைரியமாகப் பேசுவதற்கும், கடவுளுடைய வார்த்தையைத் திறம்பட பயன்படுத்துவதற்கும் கடவுளுடைய சக்தி நம்மை வழிநடத்துகிறது. பிரசங்க வேலையில் தவறாமல் ஈடுபடுவதற்கும் அந்தச் சக்தி நமக்குப் பெருமளவு உதவுகிறது. எப்படியென்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
அனைவருக்கும் அழைப்பு!
3. மனிதர்கள் எந்த வகையான தண்ணீரைப் பருகுவதற்கு “வருக, வருக!” என்று அழைக்கப்படுகிறார்கள்?
3 கடவுளுடைய சக்தி நம் அனைவருக்கும் ஓர் அழைப்பை விடுத்திருக்கிறது. (வெளிப்படுத்துதல் 22:17-ஐ வாசியுங்கள்.) விசேஷமான ஒரு வகை தண்ணீரைப் பருகித் தாகத்தைத் தீர்த்துக்கொள்வதற்காக “வருக, வருக!” என்று அது அழைக்கிறது. அந்தத் தண்ணீர் இரண்டு பங்கு ஹைட்ரஜனும், ஒரு பங்கு ஆக்சிஜனும் சேர்ந்த சாதாரண தண்ணீர் அல்ல. அது ஓர் அற்புதத் தண்ணீர். பூமியில் உயிர் வாழ தண்ணீர் அத்தியாவசியம் என்றாலும், இயேசு அந்த அற்புதத் தண்ணீரை மனதில் வைத்தே சமாரியப் பெண்ணிடம் பேசினார். “நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிற எவனுக்கும் என்றுமே தாகமெடுக்காது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர், அவன் முடிவில்லா வாழ்வைப் பெறும்படி அவனுக்குள்ளிருந்து கொப்பளிக்கிற நீரூற்றாக ஆகும்” என்று அவர் சொன்னார். (யோவா. 4:14) அந்தத் தண்ணீரைப் பருகுகிற மனிதர்கள் முடிவில்லா வாழ்வைப் பெறுவார்கள்.
4. வாழ்வளிக்கும் தண்ணீரைப் பருக வேண்டிய நிலை மனிதர்களுக்கு ஏன் ஏற்பட்டது, அந்தத் தண்ணீர் எதைக் குறிக்கிறது?
4 வாழ்வளிக்கும் தண்ணீரைப் பருக வேண்டிய நிலை மனிதர்களுக்கு ஏன் ஏற்பட்டது? முதல் மனிதன் ஆதாம், தன் மனைவி ஏவாளோடு சேர்ந்து படைப்பாளரான யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல்போனதால் ஏற்பட்டது. (ஆதி. 2:16, 17; 3:1-6) ‘ஆதாம் தன் கையை நீட்டி ஜீவ விருட்சத்தின் [அதாவது, வாழ்வளிக்கும் மரத்தின்] கனியைப் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடு இருக்காதபடி’ தன் மனைவியோடுகூட ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டான். (ஆதி. 3:22) பிற்பாடு, முழு மனிதகுலத்திற்கே மரணத்தைக் கடத்தினான். (ரோ. 5:12) எனவே, மனிதர்களைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மீட்டுக்கொள்வதற்கும், பூஞ்சோலை பூமியில் அவர்களுக்கு முடிவில்லா வாழ்வைக் கொடுப்பதற்கும் கடவுள் செய்திருக்கிற எல்லா ஏற்பாடுகளையுமே வாழ்வளிக்கும் தண்ணீர் குறிக்கிறது. இந்த ஏற்பாடுகள் இயேசு கிறிஸ்துவின் மீட்புப் பலியினால்தான் சாத்தியமாயின.—மத். 20:28; யோவா. 3:16; 1 யோ. 4:9, 10.
5. “வாழ்வளிக்கும் தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ள” வரும்படி அழைப்புவிடுப்பவர் யார்? விளக்கவும்.
5 “வாழ்வளிக்கும் தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ள” வரும்படி அழைப்புவிடுப்பவர் யார்? கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியில் முழுமையாகக் கிடைக்கிற வாழ்வளிக்கும் எல்லா ஏற்பாடுகளுமே, ‘வாழ்வளிக்கும் தண்ணீருள்ள நதியாக, பளிங்குபோல் பளபளக்கிற நதியாக’ வெளிப்படுத்துதல் புத்தகத்தில் விவரிக்கப்படுகிறது. வாழ்வளிக்கும் அந்த நதி, ‘கடவுளுடைய சிம்மாசனத்திலிருந்தும் ஆட்டுக்குட்டியானவருடைய சிம்மாசனத்திலிருந்தும் புறப்படுவதாகவும்’ விவரிக்கப்படுகிறது. (வெளி. 22:1) எனவே, உயிரின் ஊற்றுமூலரான யெகோவாவே வாழ்வளிக்கும் அந்தத் தண்ணீரின் ஊற்றுமூலர். (சங். 36:9) ‘ஆட்டுக்குட்டியானவரான’ இயேசு கிறிஸ்துவின் மூலம் அந்தத் தண்ணீரை அவர் அளிக்கிறார். (யோவா. 1:29) ஆதாமின் கீழ்ப்படியாமையால் வந்த எல்லாத் தீமைகளையும் நீக்குவதற்காக அவர் அந்த அடையாளப்பூர்வ நதியைத்தான் பயன்படுத்தப்போகிறார். எனவே, “வருக, வருக!” என்ற அழைப்பை விடுப்பவர் கடவுளாகிய யெகோவாவே.
6. “வாழ்வளிக்கும் தண்ணீருள்ள நதி” எப்போது ஓடத் தொடங்கியது?
6 “வாழ்வளிக்கும் தண்ணீருள்ள நதி” கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியில் முழுமையாகப் பாய்ந்தோடும் என்றாலும், 1914-ல் ‘எஜமானருடைய நாள்’ ஆரம்பமானபோது அது ஓடத் தொடங்கியது; ‘ஆட்டுக்குட்டியானவர்’ அந்த வருடத்தில்தான் ராஜாவாகச் சிம்மாசனத்தில் அமர்த்தப்பட்டார். (வெளி. 1:10) ஆகவே, வாழ்வளிக்கும் சில ஏற்பாடுகள் அதுமுதல் கிடைக்க ஆரம்பித்தன. கடவுளுடைய வார்த்தையான பைபிளின் செய்தி ‘தண்ணீர்’ என விவரிக்கப்படுவதால், வாழ்வளிக்கும் ஏற்பாடுகளில் அதுவும் ஒன்று. (எபே. 5:26) “வாழ்வளிக்கும் தண்ணீரை” வாங்கிக்கொள்வதற்கான அழைப்பு, அதாவது நற்செய்தியைக் கேட்டு அதன்படி செயல்படுவதற்கான அழைப்பு, அனைவருக்குமே விடுக்கப்படுகிறது. ஆனால், எஜமானருடைய நாளில் இந்த அழைப்பை விடுக்கிறவர்கள் யார்?
‘“வருக, வருக!” என்று மணமகளும் அழைக்கிறாள்’
7. “வருக, வருக!” என்ற அழைப்பை ‘எஜமானருடைய நாளில்’ முதலாவது யார் விடுக்கிறார்கள், யாருக்கு?
7 எஜமானருடைய நாளில் இந்த அழைப்பை முதலாவது விடுத்தது மணமகள் வகுப்பாரே, அதாவது கடவுளுடைய சக்தியால் பரலோக வாழ்க்கைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களே! யாருக்கு அவர்கள் இந்த அழைப்பை விடுத்தார்கள்? ‘மணமகள்’ தனக்குத் தானே இந்த அழைப்பை விடுத்துக்கொள்வதில்லை. அர்மகெதோனுக்குப்பின் பூமியில் முடிவில்லா வாழ்வைப் பெறப்போகிறவர்களுக்கே இந்த அழைப்பை விடுக்கிறாள்.—வெளிப்படுத்துதல் 16:14, 16-ஐ வாசியுங்கள்.
8. பரலோக வாழ்க்கைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், இந்த அழைப்பை 1918 முதற்கொண்டே விடுத்து வந்திருக்கிறார்கள் என எது காட்டுகிறது?
8 பரலோக வாழ்க்கைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், இந்த அழைப்பை 1918 முதற்கொண்டே விடுத்து வந்திருக்கிறார்கள். “இப்போது வாழும் லட்சக்கணக்கானோர் மரிக்கவே மாட்டார்கள்” என்ற பொதுப் பேச்சு அந்த வருடத்தில் கொடுக்கப்பட்டது; அர்மகெதோன் போருக்குப் பின்பு பூஞ்சோலை பூமியில் வாழும் ஏராளமானோர் முடிவில்லா வாழ்வைப் பெறுவார்கள் என்ற நம்பிக்கையைப் பற்றி அந்தப் பேச்சில் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவிலுள்ள ஒஹாயோ மாகாணத்தில், சீடர் பாயின்ட் என்ற இடத்தில் நடந்த பைபிள் மாணாக்கரின் மாநாட்டில், ‘ராஜாவையும் அவருடைய ராஜ்யத்தையும் விளம்பரப்படுத்துங்கள்’ என்று அறிவிக்கப்பட்டது. “வருக, வருக!” என்ற அழைப்பை ஏராளமானோரிடம் விடுக்க இந்த அறிவிப்பு மீதியானோரைத் தூண்டியது. மார்ச் 15, 1929 தேதியிட்ட ஆங்கில காவற்கோபுர பத்திரிகையில், “கனிவான அழைப்பு” என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரை வெளிப்படுத்துதல் 22:17-ன் அடிப்படையில் அமைந்திருந்தது. அந்தக் கட்டுரையின் ஒரு பகுதி இவ்வாறு குறிப்பிட்டது: “‘வருக, வருக!’ என்ற கனிவான அழைப்பை விசுவாசமிக்க மீதியானோர் உன்னதமானவரோடு சேர்ந்து விடுக்கிறார்கள். நீதியின் மீதும் சத்தியத்தின் மீதும் பசிதாகமுள்ளவர்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும். அது இப்போதே அறிவிக்கப்பட வேண்டும்.” இன்றுவரையாக, இந்த அழைப்பை மணமகள் வகுப்பார் விடுத்து வருகிறார்கள்.
“கேட்கிற எவனும் ‘வருக, வருக!’ என்று அழைக்கட்டும்”
9, 10. “வருக, வருக!” என்ற அழைப்பைக் கேட்கிறவர்கள் என்ன செய்து வருகிறார்கள்?
9 “வருக, வருக!” என்ற அழைப்பைக் கேட்கிறவர்கள் என்ன செய்ய வேண்டும்? அவர்களும் அந்த அழைப்பை விடுக்க வேண்டும். உதாரணத்திற்கு, ஆகஸ்ட் 1, 1932 தேதியிட்ட ஆங்கில காவற்கோபுர பத்திரிகை, பக்கம் 232-ல் இவ்வாறு கூறியது: “பரலோக நம்பிக்கையுள்ளோர், நற்செய்தியை அறிவிக்க விரும்புகிற எல்லாரையுமே அதை அறிவிக்கும்படி ஊக்கப்படுத்த வேண்டும். நம் எஜமானருடைய செய்தியை அறிவிப்பதற்கு ஒருவர் பரலோக நம்பிக்கையுள்ளவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. பூமியில் முடிவில்லா வாழ்வைப் பெறப்போகிறவர்களுக்கு வாழ்வளிக்கும் தண்ணீரை அளிப்பதற்கான வாய்ப்பு தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதால் யெகோவாவின் சாட்சிகள் இப்போது மிகுந்த உற்சாகம் அடைந்திருக்கிறார்கள்.”
10 “வருக, வருக!” என்ற அழைப்பைக் கேட்கிறவர்களுக்கு உள்ள பொறுப்பைப் பற்றி ஆகஸ்ட் 15, 1934 தேதியிட்ட ஆங்கில காவற்கோபுர பத்திரிகை, பக்கம் 249-ல் இவ்வாறு சொன்னது: “யோனதாப் வகுப்பார் யெகூ வகுப்பாரோடு சேர்ந்து, அதாவது பரலோக நம்பிக்கையுள்ளவர்களோடு சேர்ந்து, செயல்பட வேண்டும்; ஆம், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க வேண்டும், அவர்கள் பரலோக நம்பிக்கையுள்ளவர்களாக இல்லாவிட்டாலும் நற்செய்தியை அறிவிக்க வேண்டும்.” 1935-ஆம் ஆண்டு, வெளிப்படுத்துதல் 7:9-17-லுள்ள ‘திரள் கூட்டத்தார்’ யாரென்பது தெளிவாக்கப்பட்டது. இதனால், “வருக, வருக!” என்ற அழைப்பை விடுக்கிற வேலை முடுக்கிவிடப்பட்டது. அதுமுதல், அதிகமதிகமான திரள் கூட்டத்தார்—தற்போது எழுபது லட்சத்திற்கும் மேலானோர்—அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். நற்செய்தியைக் கேட்ட பின்பு, கடவுளுக்குத் தங்களை அர்ப்பணித்து, ஞானஸ்நானம் பெற்று, ‘வாழ்வளிக்கும் தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளுங்கள்’ என மணமகள் வகுப்பாரோடு சேர்ந்து அவர்கள் மும்முரமாக அழைப்பு விடுத்துவருகிறார்கள்.
‘“வருக, வருக!” என்று கடவுளுடைய சக்தியும் அழைக்கிறது’
11. முதல் நூற்றாண்டில் நடைபெற்ற பிரசங்க வேலையில் கடவுளுடைய சக்தி எவ்வாறு உதவியது?
11 நாசரேத்திலிருந்த ஜெபக்கூடத்தில் இயேசு பிரசங்கித்தபோது, ஏசாயா தீர்க்கதரிசியின் சுருளைத் திறந்து, “யெகோவாவின் சக்தி என்மேல் இருக்கிறது, ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்க அவர் என்னை நியமித்தார்; சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையும் பார்வையற்றவர்களுக்குப் பார்வையும் கிடைக்குமென்று பிரசங்கிப்பதற்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு விடுதலை அளிப்பதற்காகவும், யெகோவாவின் அனுக்கிரக காலத்தைப் பிரசங்கிப்பதற்காகவும் அவர் என்னை அனுப்பினார்” என்று எழுதப்பட்டிருந்த பகுதியை வாசித்தார். அதன்பின், அந்த வசனத்தைத் தமக்குப் பொருத்தி, “இப்போது நீங்கள் கேட்ட இந்த வேதவசனம் இன்று நிறைவேறியிருக்கிறது” என்று சொன்னார். (லூக். 4:17-21) பரலோகத்திற்குச் செல்வதற்கு முன்பு தம்முடைய சீடர்களிடம் இப்படிச் சொன்னார்: “கடவுளுடைய சக்தி உங்கள்மீது வரும்போது நீங்கள் பலம் பெற்று, . . . பூமியின் கடைமுனைவரையிலும் எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்.” (அப். 1:8) ஆம், முதல் நூற்றாண்டில் நடைபெற்ற பிரசங்க வேலையில் கடவுளுடைய சக்தியின் உதவி பெருமளவு இருந்தது.
12. “வருக, வருக!” என்ற அழைப்பை இன்று மக்களுக்கு விடுப்பதில் கடவுளுடைய சக்தி எவ்வாறு செயல்படுகிறது?
12 “வருக, வருக!” என்ற அழைப்பை இன்று மக்களுக்கு விடுப்பதில் கடவுளுடைய சக்தி எவ்வாறு செயல்படுகிறது? யெகோவாவே இந்தச் சக்தியின் ஊற்றுமூலர். மணமகள் வகுப்பார் அவருடைய வார்த்தையைப் புரிந்துகொள்வதற்காக அவர்களுடைய இருதயத்தையும் மனதையும் திறப்பதற்கு இந்தச் சக்தியே உதவுகிறது. பூஞ்சோலை பூமியில் முடிவில்லா வாழ்வைப் பெறப்போகிறவர்களுக்கு அழைப்பு விடுக்கவும், பைபிள் சத்தியங்களை விளக்கவும் இந்தச் சக்தியே அவர்களைத் தூண்டுகிறது. இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு, கிறிஸ்துவின் சீடர்களாகி, மற்றவர்களுக்கு இந்த அழைப்பை விடுக்கிற திரள் கூட்டத்தாரின் விஷயத்தில் இந்தச் சக்தி செயல்படுகிறதா? ஆம், செயல்படுகிறது. ஏனென்றால், ‘கடவுளுடைய சக்தியின் பெயரில்’ அவர்கள் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறார்கள்; அதோடு, அதன் வழிநடத்துதலுக்கு இசைவாக நடந்துகொள்கிறார்கள், அதன்மீதே சார்ந்திருக்கிறார்கள். (மத். 28:19) பரலோக நம்பிக்கையுள்ளவர்களும், அதிகரித்துவருகிற திரள் கூட்டத்தாரும் அறிவிக்கிற செய்தியைப் பற்றி என்ன சொல்லலாம்? அந்தச் செய்தி பைபிளின் செய்தி; ஆம், கடவுளுடைய சக்தியின் உந்துதலால் எழுதப்பட்ட புத்தகத்தின் செய்தி. ஆகவே, “வருக, வருக!” என்ற இந்த அழைப்பு கடவுளுடைய சக்தியினால் விடுக்கப்படுகிறது. இந்தச் சக்தியினாலேயே நாம் வழிநடத்தப்படுகிறோம். அப்படியானால், மற்றவர்களுக்கு இந்த அழைப்பை விடுக்கும் வேலையில் நாம் எந்தளவு ஈடுபடுகிறோம்?
அவர்கள் ‘அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள்’
13. ‘“வருக, வருக!” என்று கடவுளுடைய சக்தியும் மணமகளும் அழைத்துக்கொண்டே இருப்பது’ எதைச் சுட்டிக்காட்டுகிறது?
13 “வருக, வருக!” என்ற அழைப்பைக் கடவுளுடைய சக்தியும் மணமகளும் ஒருதடவை மட்டுமே விடுப்பதில்லை. மூலமொழியில் பயன்படுத்தப்பட்டுள்ள வினைச்சொல் தொடர்ச்சியான செயலைக் குறிக்கிறது. இந்தக் குறிப்பைக் கருத்தில் கொண்டு, புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் இப்படி மொழிபெயர்த்திருக்கிறது: “‘வருக, வருக!’ என்று கடவுளுடைய சக்தி அழைத்துக்கொண்டே இருக்கிறது, மணமகளும் அவ்வாறே அழைக்கிறாள்.” கடவுளிடமிருந்து வருகிற அழைப்பைத் தொடர்ந்து விடுத்துக்கொண்டிருக்க வேண்டும் என்பதைத்தான் இது சுட்டிக்காட்டுகிறது. இந்த அழைப்பைக் கேட்டு அதை ஏற்றுக்கொள்கிறவர்கள் என்ன செய்கிறார்கள்? “வருக, வருக!” என அவர்களும் மற்றவர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்கள். திரள் கூட்டத்தார் ‘இரவும் பகலும் யெகோவாவின் ஆலயத்தில் அவருக்குப் பரிசுத்த சேவை செய்கிறார்கள்’ என்று பைபிள் சொல்கிறது. (வெளி. 7:9, 15) எந்தக் கருத்தில் ‘இரவும் பகலும் சேவை செய்கிறார்கள்’? (லூக்கா 2:36, 37; அப்போஸ்தலர் 20:31; 2 தெசலோனிக்கேயர் 3:8 ஆகிய வசனங்களை வாசியுங்கள்.) ‘இரவும் பகலும் சேவை செய்வது’ தொடர்ச்சியாகவும் ஊக்கமாகவும் ஊழியம் செய்வதைக் குறிக்கிறது; தீர்க்கதரிசினி அன்னாள், அப்போஸ்தலன் பவுல் ஆகியோருடைய உதாரணங்கள் இதையே காட்டுகின்றன.
14, 15. யெகோவாவின் வழிபாட்டில் தவறாமல் ஈடுபடுவதன் முக்கியத்துவத்தை தானியேல் தீர்க்கதரிசியின் உதாரணம் எவ்வாறு வலியுறுத்துகிறது?
14 யெகோவாவின் வழிபாட்டில் தவறாமல் ஈடுபடுவதன் முக்கியத்துவத்தை தானியேல் தீர்க்கதரிசியின் உதாரணமும் வலியுறுத்துகிறது. (தானியேல் 6:4-10, 16-ஐ வாசியுங்கள்.) ‘தினம் மூன்று வேளையும்’ கடவுளிடம் ஜெபம் செய்கிற வழக்கத்தை தானியேல் நிறுத்தவே இல்லை; ஒரு மாதத்திற்குக்கூட அவர் இந்த வழக்கத்தை நிறுத்தவில்லை. சிங்கங்களின் கெபியில் எறியப்படும் ஆபத்து இருந்தபோதிலும் ‘முன் செய்துவந்தபடியே,’ செய்துவந்தார். யெகோவாவின் வழிபாட்டைத் தவிர வேறெதுவுமே அவருக்கு முக்கியமல்ல என்பதை அவருடைய செயல்கள் மற்றவர்களுக்கு மிகத் தெளிவாக எடுத்துக்காட்டின.—மத். 5:16.
15 தானியேல் ஓர் இரவு முழுக்க சிங்கங்களின் கெபியில் இருந்தார்; அதிகாலையில் அவரைப் பார்க்கச் சென்ற ராஜா, துயரம் தோய்ந்த குரலில் தானியேலைக் கூப்பிட்டு, ‘தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா என்று கேட்டார்.’ அப்பொழுது தானியேல், “ராஜாவே நீர் என்றும் வாழ்க. சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்கு தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை” என்று உடனடியாகப் பதிலளித்தார். “இடைவிடாமல்” சேவித்ததால் யெகோவா தானியேலை ஆசீர்வதித்தார்.—தானி. 6:19-22.
16. ஊழியம் சம்பந்தமாக என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள தானியேலின் முன்மாதிரி நம்மைத் தூண்ட வேண்டும்?
16 தானியேல் சாகத் தயாராக இருந்தாரே தவிர, யெகோவாவின் வழிபாட்டை நிறுத்தத் தயாராக இருக்கவில்லை. நம்மைப் பற்றி என்ன சொல்லலாம்? கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை இடைவிடாமல் அறிவிப்பதற்காக நாம் என்னென்ன தியாகங்களைச் செய்திருக்கிறோம்? என்னென்ன தியாகங்களைச் செய்ய மனமுள்ளவர்களாக இருக்கிறோம்? ஒரு மாதம்கூட யெகோவாவைப் பற்றி நாம் பேசாமல் இருந்துவிடக் கூடாது! வாரத்திற்கு ஒருமுறையாவது ஊழியத்தில் ஈடுபட முயற்சி செய்ய வேண்டும். சுகவீனம் காரணமாக, ஒரு மாதத்தில் 15 நிமிடங்கள் மட்டுமே நம்மால் ஊழியம் செய்ய முடிந்தாலும்கூட அதை நாம் அறிக்கை செய்ய வேண்டும். ஏன்? ஏனென்றால், கடவுளுடைய சக்தியோடும் மணமகளோடும் சேர்ந்து “வருக, வருக!” என்று அழைத்துக்கொண்டே இருக்க நாம் விரும்புகிறோம். ஆம், ஒழுங்கான பிரஸ்தாபிகளாயிருக்க நம்மால் முடிந்ததையெல்லாம் செய்ய விரும்புகிறோம்.
17. “வருக, வருக!” என்ற அழைப்பை விடுப்பதற்கு நாம் எந்தெந்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தலாம்?
17 வெளி ஊழியத்தில் ஈடுபடும்போது மட்டுமல்ல, சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் ‘வாழ்வளிக்கும் தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ள வரும்படியான’ அழைப்பை விடுப்பதற்கு நாம் முயல வேண்டும். கடைத்தெருவுக்குச் செல்லும்போது, பயணிக்கும்போது, விடுமுறையில் செல்லும்போது, வேலைக்குச் செல்லும்போது, பள்ளிக்குச் செல்லும்போது என எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அந்த அழைப்பை விடுப்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம்! பிரசங்க வேலையை அரசாங்கம் தடைசெய்தாலும்கூட, விவேகத்தோடு நாம் தொடர்ந்து பிரசங்கிக்கிறோம்; ஒரு பிராந்தியத்தில் அடுத்தடுத்த வீடுகளுக்குப் போகாமல், ஆங்காங்கே சில வீடுகளுக்குப் போகிறோம், அல்லது சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதில் அதிகளவு ஈடுபடுகிறோம்.
“வருக, வருக!” என அழைத்துக்கொண்டே இருங்கள்
18, 19. கடவுளுடைய சக வேலையாட்களாக இருக்கும் பாக்கியத்தைப் பொக்கிஷமாய்ப் போற்றுகிறீர்கள் என நீங்கள் எப்படிக் காட்டுகிறீர்கள்?
18 வாழ்வளிக்கும் தண்ணீரைப் பருக தாகமாயிருக்கிறவர்களை “வருக, வருக!” என்று கடவுளுடைய சக்தி 90 வருடங்களுக்கும் மேலாக அழைத்துக்கொண்டே இருக்கிறது; மணமகளும் அவ்வாறே அழைத்துக்கொண்டிருக்கிறாள். இந்த அருமையான அழைப்பை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? அப்படியானால், நீங்களும் மற்றவர்களுக்கு அந்த அழைப்பை விடுத்துக்கொண்டே இருங்கள்.
19 “வருக, வருக!” என்ற அழைப்பு எவ்வளவு காலத்திற்கு விடுக்கப்படும் என்பது நமக்குத் தெரியாது; ஆனால், அந்த அழைப்பை நாம் மற்றவர்களுக்கு விடுத்தால் கடவுளுடைய சக வேலையாட்களாக இருப்போம். (1 கொ. 3:6, 9) எப்பேர்ப்பட்ட பாக்கியம்! இந்தப் பாக்கியத்தை நாம் பொக்கிஷமாய்ப் போற்றுகிறோம் என்பதைக் காட்டுவோமாக! பிரசங்க வேலையில் தவறாமல் ஈடுபடுவதன் மூலம், ‘எப்போதும் . . . கடவுளுக்குப் புகழ்ச்சிப் பலியைச் செலுத்துவோமாக’! (எபி. 13:15) பூமியில் வாழும் நம்பிக்கையுள்ள நாம், மணமகள் வகுப்பாரோடு சேர்ந்து “வருக, வருக” என அழைத்துக்கொண்டே இருப்போமாக! வாழ்வளிக்கும் தண்ணீரை இன்னும் ஏராளமானோர் வந்து பருகுவார்களாக!
என்ன கற்றுக்கொண்டீர்கள்?
• “வருக, வருக!” என்ற அழைப்பு யாருக்கு விடுக்கப்படுகிறது?
• “வருக, வருக!” என்ற அழைப்பு யெகோவாவிடமிருந்தே வருகிறதென ஏன் சொல்லலாம்?
• “வருக, வருக!” என்ற அழைப்பை விடுப்பதில் கடவுளுடைய சக்தி எவ்வாறு செயல்படுகிறது?
• ஊழியத்தில் தவறாமல் ஈடுபட நாம் ஏன் பெருமுயற்சி எடுக்க வேண்டும்?
[பக்கம் 16-ன் அட்டவணை/படங்கள்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
“வருக, வருக!” என அழைத்துக்கொண்டே இருங்கள்
1914
5,100 பிரஸ்தாபிகள்
1918
பூஞ்சோலை பூமியில் பலர் முடிவில்லா வாழ்வைப் பெறுவார்கள்
1922
“ராஜாவையும் அவருடைய ராஜ்யத்தையும் விளம்பரப்படுத்துங்கள், விளம்பரப்படுத்துங்கள், விளம்பரப்படுத்துங்கள்”
1929
“வருக, வருக!” என்று உண்மையுள்ள மீதியானோர் அழைக்கிறார்கள்
1932
“வருக, வருக!” என்ற அழைப்பு பரலோக நம்பிக்கையுள்ளவர்களுக்கு மட்டுமே விடுக்கப்படுவதில்லை
1934
பிரசங்கிப்பதற்கான அழைப்பு யோனதாப் வகுப்பாருக்கு விடுக்கப்படுகிறது
1935
‘திரள் கூட்டத்தார்’ யாரென்பது தெளிவாகிறது
2009
73,13,173 பிரஸ்தாபிகள்