யெகோவாவை உங்கள் தகப்பனாகக் கருதுகிறீர்களா?
‘எஜமானே, ஜெபம் செய்ய எங்களுக்குக் கற்றுக்கொடுங்கள்’ என்று சீடர்களில் ஒருவர் இயேசுவிடம் கேட்டார். அதற்கு அவர், “நீங்கள் ஜெபம் செய்யும்போது, ‘தகப்பனே, உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்’ . . . எனச் சொல்லுங்கள்” என்றார். (லூக். 11:1, 2, 4) இயேசு நினைத்திருந்தால், ‘சர்வவல்லவரே,’ ‘மகத்தான போதகரே,’ ‘சிருஷ்டிகரே,’ ‘நீண்ட ஆயுசுள்ளவரே,’ ‘நித்திய ராஜாவே’ போன்ற மாபெரும் பட்டப்பெயர்களைப் பயன்படுத்தச் சொல்லியிருக்கலாம். (ஆதி. 49:25; ஏசா. 30:20, NW; 40:28; தானி. 7:9; 1 தீ. 1:17) ஆனால், “தகப்பனே” என்றுதான் அழைக்கச் சொன்னார். ஏன்? ஒரு சிறு குழந்தை தன்னுடைய அன்பான தகப்பனிடம் பேசுவதுபோல் உன்னதமானவரான யெகோவாவிடம் நாம் பேச வேண்டும் என்பதற்காக ஒருவேளை அப்படிச் சொல்லியிருக்கலாம்.
என்றபோதிலும், கடவுளைத் தங்களுடைய தகப்பனாக நினைத்துப்பார்க்க சிலரால் முடிவதில்லை. சோஃபியாa என்ற ஒரு சகோதரி சொல்கிறாள்: “ஞானஸ்நானம் எடுத்துப் பல வருடங்களுக்குப் பின்பும்கூட, என்னால் யெகோவாவிடம் நெருங்கி வர முடியவில்லை, அவரை ஒரு தகப்பனாக நினைக்கவும் முடியவில்லை.” இதற்கான காரணத்தை அவள் கூறுகிறாள்: “என்னுடைய அப்பா என்னிடம் பாசம் காட்டியதே இல்லை.”
இந்தக் கடைசி நாட்களில் தகப்பன்மார்கள் பிள்ளைகளிடம் “பாசம்” காட்டுவது வெகு அபூர்வமாகிவிட்டது. (2 தீ. 3:1, 3) எனவே, சோஃபியாவைப் போல் பலர் அப்படி நினைப்பதில் ஆச்சரியமே இல்லை. என்றாலும், நாம் சோர்ந்துபோக வேண்டியதில்லை; ஏனென்றால், யெகோவாவை நம் அன்பான தகப்பனாகக் கருதுவதற்கு நல்ல காரணங்கள் இருக்கின்றன.
யெகோவா—கருணைமிகு கொடையாளர்
யெகோவாவை நம் தகப்பனாகக் கருத வேண்டுமென்றால், நாம் அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். “என் தகப்பன் எல்லாவற்றையும் என்னிடம் ஒப்படைத்திருக்கிறார்; தகப்பனைத் தவிர வேறு ஒருவனுக்கும் மகனை முழுமையாகத் தெரியாது; மகனுக்கும், மகன் எவனுக்கு அவரை வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவனுக்கும் தவிர வேறு ஒருவனுக்கும் தகப்பனை முழுமையாகத் தெரியாது” என்று இயேசு சொன்னார். (மத். 11:27) யெகோவாவை நம் தகப்பனாக நன்கு தெரிந்துகொள்வதற்கு ஒரு சிறந்த வழி, அவரைப் பற்றி இயேசு சொன்ன விஷயங்களை ஆழ்ந்து சிந்திப்பதாகும். அப்படியானால், தகப்பனைப் பற்றிய என்ன விஷயங்களை இயேசு சொன்னார்?
தமக்கு உயிர்கொடுத்தவர் யெகோவாவே என்பதை ஒப்புக்கொள்ளும் விதமாக இயேசு இவ்வாறு சொன்னார்: “தகப்பனால்தான் நான் உயிர் வாழ்கிறேன்.” (யோவா. 6:57) நாமும்கூட அந்தத் தகப்பனால்தான் உயிர்வாழ்கிறோம். (சங். 36:9; அப். 17:28) மக்களுக்கு உயிர் எனும் பரிசை அளிக்க யெகோவாவை எது தூண்டியது? அன்புதான், அல்லவா? அப்பேர்ப்பட்ட ஒரு பரிசைப் பெற்றிருப்பதன் காரணமாக நாமும் அவர்மீது அன்பு காட்ட வேண்டும்.
இயேசுவை மீட்புப் பலியாக அளித்ததன் மூலம் மனிதர்மீது யெகோவா தம்முடைய அன்பை மிகப் பெரிய அளவில் வெளிக்காட்டினார். அதனால்தான், பாவிகளான நாம் யெகோவாவோடு நெருங்கிய பந்தத்தை அனுபவிக்க முடிகிறது. (ரோ. 5:12; 1 யோ. 4:9, 10) நம் பரலோகத் தகப்பன் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர் என்பதால், அவரை நேசித்து அவருக்குக் கீழ்ப்படிகிறவர்கள் கடைசியில் ‘கடவுளுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான விடுதலையைப் பெறுவார்கள்’ என நிச்சயமாக இருக்கலாம்.—ரோ. 8:21.
நமது பரலோகத் தகப்பன் நமக்காகத் தினந்தோறும் “சூரியனை உதிக்கச் செய்கிறார்.” (மத். 5:45) எனவே, ‘சூரியனை உதிக்கச் செய்யுங்கள்!’ என நாம் ஜெபிக்க வேண்டிய அவசியமில்லை. என்றாலும், அதன் கதகதப்பான கதிர்களால் நாம் எந்தளவு பயனடைகிறோம்! நம் பரலோகத் தகப்பன் ஒப்பற்ற கொடைவள்ளல், நமக்கு என்னவெல்லாம் தேவை என்பதை நாம் கேட்பதற்கு முன்பே அறிந்திருக்கிறார். ஆகவே, அவருடைய படைப்புகள்மீது அவர் எவ்வளவு அக்கறை காட்டுகிறார் என்பதைக் கவனிப்பதற்கும் மதித்துணருவதற்கும் நாம் நேரம் செலவிட வேண்டும், அல்லவா?—மத். 6:8, 26.
நம் தகப்பன்—பாசமிகு பாதுகாவலர்
கடவுளுடைய பூர்வகால மக்களுக்கு ஏசாயாவின் தீர்க்கதரிசனம் இவ்வாறு உறுதியளித்தது: “‘மலைகள் நிலைபெயர்ந்தாலும், குன்றுகள் இடம் மாறினாலும், நான் உன்னிடம் கொண்டுள்ள நட்பு நிலைபெயராது; என் சமாதான ஒப்பந்தம் மாறாது’ என்கிறார் உங்கள் பாசமிகு பாதுகாவலரான யெகோவா.” (ஏசா. 54:10, த பைபிள் இன் லிவிங் இங்லிஷ்) இறப்பதற்கு முந்தின இரவன்று இயேசு செய்த ஜெபம், யெகோவா ‘பாசமிகு பாதுகாவலர்’ என்ற குறிப்பை நன்கு வலியுறுத்துகிறது. தம் சீடர்களைக் குறித்து இயேசு இவ்வாறு ஜெபித்தார்: “இவர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள், நான் உங்களிடம் வருகிறேன். பரிசுத்த தகப்பனே, . . . உங்கள் பெயரை முன்னிட்டு இவர்களைப் பாதுகாத்தருளுங்கள்.” (யோவா. 17:11, 14) ஆம், இயேசுவின் சீடர்களை யெகோவா பாதுகாத்து வந்திருக்கிறார்.
சாத்தானுடைய தந்திரங்களிலிருந்து நம்மை யெகோவா பாதுகாக்கிற ஒரு வழி, “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” வகுப்பாரின் மூலம் ஏற்ற வேளையில் ஆன்மீக உணவு அளிப்பதாகும். (மத். 24:45) ‘கடவுள் தருகிற முழு கவசத்தையும் நாம் அணிந்துகொள்ள’ வேண்டுமென்றால், ஊட்டமளிக்கும் அந்த உணவை உட்கொள்வது அவசியம். உதாரணமாக, ‘பெரிய கேடயமாகிய விசுவாசத்தை’ எடுத்துக்கொள்ளுங்கள். அந்த விசுவாசத்தைக் கொண்டு ‘பொல்லாதவன் எறிகிற நெருப்புக் கணைகளையெல்லாம் நம்மால் அணைத்துவிட முடியும்.’ (எபே. 6:11, 16) கடவுளோடு உள்ள பந்தத்தைக் குலைத்துப்போடுகிற ஆபத்துகளிலிருந்து விசுவாசம் நம்மைப் பாதுகாக்கிறது; அதோடு, நம் தகப்பனின் காக்கும் வல்லமைக்கு அத்தாட்சி அளிக்கிறது.
இயேசு பூமியில் இருந்தபோது எப்படி நடந்துகொண்டார் என்பதைப் பற்றி நாம் ஆழ்ந்து சிந்திப்பதன் மூலம் நம் பரலோகத் தகப்பன் எவ்வளவு கனிவானவர் என்பதை இன்னும் நன்றாகத் தெரிந்துகொள்ளலாம். மாற்கு 10:13-16-ல் உள்ள பதிவைச் சற்றுக் கவனியுங்கள். “சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்” என இயேசு தம் சீடர்களிடம் சொன்னார். சின்னஞ்சிறு பிள்ளைகள் அவரிடம் வந்து ஒட்டிக்கொண்டபோது அவர்களை அவர் அரவணைத்து ஆசீர்வதித்தார். சந்தோஷத்தில் அவர்களுடைய முகம் எவ்வளவாய் பிரகாசித்திருக்கும்! மனிதர்கள் தம்மிடம் நெருங்கி வர வேண்டுமென்று நம் தகப்பனாகிய யெகோவாவும் விரும்புகிறார்; ஏன் அப்படிச் சொல்கிறோம்? “என்னைப் பார்த்தவன் என் தகப்பனைப் பார்த்திருக்கிறான்” என்று இயேசுவே ஒருசமயம் சொல்லியிருந்தாரே.—யோவா. 14:9.
நம் தகப்பனாகிய யெகோவா அன்பின் வற்றாத ஊற்றாய்த் திகழ்கிறார். ஒப்பற்ற கொடைவள்ளலாய் இருக்கிறார், உன்னத பாதுகாவலராய் இருக்கிறார்; அப்பேர்ப்பட்ட அவர், தம்மிடம் நெருங்கி வரும்படி நம்மை அழைக்கிறார். (யாக். 4:8) ஆகவே, யெகோவாதான் மிகச் சிறந்த தகப்பன் என நாம் அடித்துச் சொல்லலாம்!
எத்தனை நன்மைகள் நமக்கு!
அன்பும், கனிவும் நிறைந்த நம் பரலோகத் தகப்பனாகிய யெகோவாமீது முழு நம்பிக்கை வைத்தோமென்றால், நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். (நீதி. 3:5, 6) தம் தகப்பன்மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்ததால் இயேசு நன்மை அடைந்தார். “நான் தனியாக இல்லை, என்னை அனுப்பிய தகப்பன் என்னோடு இருக்கிறார்” என அவர் தம் சீடர்களிடம் சொன்னார். (யோவா. 8:16) யெகோவா தமக்குப் பக்கபலமாய் இருக்கிறாரென அவர் உறுதியாக நம்பினார். உதாரணத்திற்கு, அவர் ஞானஸ்நானம் பெற்ற சமயத்தில், அவருடைய தகப்பனாகிய யெகோவா, “இவர் என் அன்பு மகன், நான் இவரை அங்கீகரிக்கிறேன்” என மனப்பூர்வமாய்ச் சொன்னதைக் கேட்டார். (மத். 3:15-17) இயேசு இறப்பதற்குச் சில நொடிகள் முன்பு, “தகப்பனே, உங்களுடைய கைகளில் என் உயிரை ஒப்படைக்கிறேன்” என்று சத்தமாகச் சொன்னார். (லூக். 23:46) தம் தகப்பனிடம் அவருக்கிருந்த நம்பிக்கையை இறுதி மூச்சுவரை அவர் விட்டுவிடவே இல்லை.
நாமும் அவ்வாறே நம்பிக்கையோடு இருக்கலாம். யெகோவா நம் பக்கத்தில் இருக்கும்போது நாம் எதற்காகப் பயப்பட வேண்டும்! (சங். 118:6) ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட சோஃபியா தன்னையே சார்ந்து வாழ்ந்தபோது ஏகப்பட்ட பிரச்சினைகளைச் சந்தித்தாள். ஆனால், இயேசுவின் வாழ்க்கையையும் அவரது ஊழியத்தையும் பற்றி அதிகமதிகமாய்க் கற்றுக்கொண்டபோது, பரலோகத் தகப்பனோடு அவருக்கு எந்தளவு நெருங்கிய பந்தம் இருந்தது என்பதைத் தெரிந்துகொண்டாள். அதனால் கிடைத்த நன்மை? “ஓர் அன்பான தகப்பன் எப்படியெல்லாம் நடந்துகொள்வார் என்றும், அவர்மீது சார்ந்திருந்தால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்றும் நான் கற்றுக்கொண்டேன். மன நிம்மதியும் உண்மையான சந்தோஷமும் கிடைத்தது. இப்போதெல்லாம் எதைப் பற்றியும் நான் கவலைப்படுவதில்லை” என்று அவள் சொல்கிறாள்.
யெகோவாவை நம் தகப்பனாகக் கருதுவதால் நாம் எவ்வாறு இன்னும் நன்மை பெறலாம்? பிள்ளைகள் பொதுவாகத் தங்கள் பெற்றோர்களை நேசிக்கிறார்கள், அவர்களைப் பிரியப்படுத்த விரும்புகிறார்கள். கடவுளுடைய மகனும், தம் தகப்பன்மீது வைத்திருந்த அன்பின் காரணமாக, ‘எப்போதும் அவருக்குப் பிரியமான காரியங்களையே செய்தார்.’ (யோவா. 8:29) அதேபோல, நம்முடைய பரலோகத் தகப்பனை நாம் நேசித்தோமென்றால், ஞானமாக நடந்துகொள்வதற்கும், ‘அனைவர் முன்பாகவும் அவரைப் போற்றிப் புகழ்வதற்கும்’ தூண்டப்படுவோம்.—மத். 11:25; யோவா. 5:19.
நம் தகப்பன் ‘நமது வலது கையைப் பிடித்திருக்கிறார்’
நம் பரலோகத் தகப்பன் தமது சக்தியாகிய “சகாயரை’ அளித்திருக்கிறார். அந்தச் சக்தி, ‘சத்தியத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவி செய்யும்’ என்று இயேசு வாக்குறுதி கொடுத்தார். (யோவா. 14:15-17; 16:12, 13) நம் பரலோகத் தகப்பனை நன்றாக அறிந்துகொள்ள அந்தச் சக்தி நம்மை வழிநடத்தும். “ஆழமாக வேரூன்றியவற்றை,” அதாவது நம் மனதில் ஊறிப்போன விஷயங்களையும் தவறான கருத்துகளையும், தகர்த்தெறிய அது நமக்கு உதவும். இவ்வாறு, ‘எல்லா எண்ணங்களையும் கட்டுப்படுத்தி கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியும்படி செய்யும்.’ (2 கொ. 10:4, 5) ஆகையால், அந்தச் சக்தியைக் கொடுக்கும்படி யெகோவாவிடம் கேட்போமாக! அப்போது, ‘பரலோகத்திலுள்ள தகப்பன் தம்மிடம் கேட்கிறவர்களுக்கு தம்முடைய சக்தியைக் கொடுப்பார்.’ (லூக். 11:13) யெகோவாவிடம் நெருங்கிச் செல்ல அந்தச் சக்தியைத் தந்து உதவும்படி கேட்பதும்கூடச் சரியானதே.
தன் தகப்பனின் கையைப் பிடித்துக்கொண்டு நடக்கிற ஒரு சிறுபிள்ளை பாதுகாப்பாக உணரும்; எதற்கும் பயப்படாது. யெகோவாவை உண்மையிலேயே உங்கள் தகப்பனாகக் கருதுகிறீர்கள் என்றால், ‘உன் தேவனாயிருக்கிற யெகோவாவாகிய நான் உன் வலது கையைப் பிடித்து, “பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன்” என்று சொல்கிறேன்’ என்ற ஆறுதலான வார்த்தைகளில் நம்பிக்கை வைக்கலாம். (ஏசா. 41:13) அவரோடு என்றென்றும் ‘நடக்கிற’ அரும்பெரும் பாக்கியத்தைப் பெறலாம். (மீ. 6:8) எனவே, யெகோவாவின் சித்தத்தைத் தொடர்ந்து செய்யுங்கள்! அவரை உங்கள் தகப்பனாகக் கருதுங்கள்! அதனால் கிடைக்கிற அன்பையும் சந்தோஷத்தையும் பாதுகாப்பையும் அனுபவித்து மகிழுங்கள்!
[அடிக்குறிப்பு]
a பெயர் மாற்றப்பட்டுள்ளது.