ஒரே மந்தை, ஒரே மேய்ப்பர்
“என்னைப் பின்பற்றுகிற நீங்களும் பன்னிரண்டு சிம்மாசனங்களில் அமர்ந்து இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்ப்பீர்கள்.”—மத். 19:28.
1. ஆபிரகாமின் சந்ததியாரை யெகோவா எப்படிக் கருதினார், மற்ற தேசத்தாரை அவர் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துவிட்டாரென இது ஏன் அர்த்தப்படுத்துவதில்லை?
யெகோவா ஆபிரகாம்மீது அளவில்லா அன்பு வைத்திருந்தார்; அதனால், அவருடைய சந்ததியாரான இஸ்ரவேல் தேசத்தார்மீது பற்றுமாறா அன்பைக் காட்டினார். 1500 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தத் தேசத்தாரைத் தம்முடைய தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாக, ‘சொந்தமாக,’ அதாவது “விசேஷ சொத்தாக,” (NW) கருதினார். (உபாகமம் 7:6-ஐ வாசியுங்கள்.) அப்படியானால், மற்ற தேசத்தாரை அவர் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துவிட்டாரென இது அர்த்தப்படுத்துகிறதா? இல்லை. ஏனென்றால், தம்மை வணங்க விரும்பிய புறதேசத்தாரைத் தம்முடைய விசேஷ தேசத்தாருடன் சேர்ந்துகொள்ள அவர் அனுமதித்தார். யூத மதத்திற்கு மாறிய இவர்கள் இஸ்ரவேல் தேசத்தின் அங்கத்தினர்களாகக் கருதப்பட்டார்கள். இஸ்ரவேல் மக்கள் இவர்களைத் தங்களுடைய சகோதரர்கள்போல் நடத்த வேண்டியிருந்தது. (லேவி. 19:33, 34) இவர்கள் யெகோவாவின் எல்லாச் சட்டங்களுக்கும் கீழ்ப்படிய வேண்டியிருந்தது.—லேவி. 24:22.
2. அதிர்ச்சியூட்டும் என்ன செய்தியை இயேசு சொன்னார், இதனால் என்ன கேள்விகள் எழுகின்றன?
2 என்றாலும், தம்முடைய காலத்தில் வாழ்ந்த யூதர்களிடம் இயேசு இந்த அதிர்ச்சியூட்டும் செய்தியைச் சொன்னார்: “கடவுளுடைய அரசாங்கத்தில் இருக்கிற வாய்ப்பு உங்களிடமிருந்து நீக்கப்பட்டு அதற்கேற்ற கனிகளைத் தருகிற வேறு மக்களிடம் (அதாவது, தேசத்திடம்) கொடுக்கப்படும்.” (மத். 21:43) இந்தப் புதிய தேசத்தின் அங்கத்தினர்கள் யார்? இந்தத் தேசத்தைக் கடவுள் தேர்ந்தெடுத்தது இன்று நம்மை எப்படிப் பாதிக்கிறது?
புதிய தேசம்
3, 4. (அ) அப்போஸ்தலன் பேதுரு இந்தப் புதிய தேசத்தை எப்படி அடையாளம் காட்டினார்? (ஆ) இந்தப் புதிய தேசத்தின் அங்கத்தினர்கள் யார்?
3 அப்போஸ்தலன் பேதுரு இந்தப் புதிய தேசத்தைத் தெளிவாக அடையாளம் காட்டினார். சக கிறிஸ்தவர்களுக்கு அவர் இப்படி எழுதினார்: “நீங்களோ இருளிலிருந்து தமது அற்புதமான ஒளியின் பக்கம் உங்களை அழைத்தவருடைய ‘மகத்துவங்களை எங்கும் அறிவிப்பதற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்ட இனமாகவும், ராஜ அதிகாரமுள்ள குருமார் கூட்டமாகவும், பரிசுத்த தேசமாகவும், அவருடைய விசேஷ சொத்தாகவும்’ இருக்கிறீர்கள்.” (1 பே. 2:9) முன்னறிவிக்கப்பட்டபடி, இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொண்ட யூதர்களே இந்தப் புதிய தேசத்தின் முதல் அங்கத்தினர்களாக இருந்தார்கள். (தானி. 9:27-ன் முற்பகுதி; மத். 10:6) பிற்பாடு, புறதேசத்தார் பலரும் இந்தத் தேசத்தின் அங்கத்தினர்களாகச் சேர்க்கப்பட்டார்கள். எப்படிச் சொல்கிறோம்? அடுத்த வசனத்தில் பேதுரு இவ்வாறு சொன்னார்: “முன்பு நீங்கள் கடவுளுடைய மக்களாக இருக்கவில்லை, இப்போதோ அவருடைய மக்களாக இருக்கிறீர்கள்.”—1 பே. 2:10.
4 இங்கு பேதுரு யாரிடம் பேசிக்கொண்டிருந்தார்? தன்னுடைய கடிதத்தின் ஆரம்பத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழுப்பியதன் மூலம் [கடவுள்] தமது மகா இரக்கத்தின்படி எங்களுக்குப் புதிய பிறப்பை அளித்தார்; இதனால் அசைக்க முடியாத நம்பிக்கையை, அழியாத, மாசில்லாத, மறையாத ஆஸ்தியை, நாங்கள் பெற்றோம். அந்த ஆஸ்தி உங்களுக்காகவும் பரலோகத்தில் வைக்கப்பட்டுள்ளது.” (1 பே. 1:3, 4) எனவே, பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களிடமே பேதுரு பேசிக்கொண்டிருந்தார்; இவர்கள் இந்தப் புதிய தேசத்தின் அங்கத்தினர்களாக இருக்கிறார்கள். இவர்களே, “கடவுளுடைய இஸ்ரவேலர்.” (கலா. 6:16) இவர்கள் 1,44,000 பேர் என்பதை அப்போஸ்தலன் யோவான் ஒரு தரிசனத்தில் பார்த்தார். இவர்கள், “கடவுளுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்கனிகளாக மனிதகுலத்திலிருந்து விலைகொடுத்து வாங்கப்பட்டவர்கள்.” ‘கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் சேவை செய்கிற குருமார்களாயிருந்து, கிறிஸ்துவோடுகூட ஆயிரம் வருடங்கள் ராஜாக்களாக ஆட்சி செய்யப்போகிறவர்கள்.’—வெளி. 5:10; 7:4; 14:1, 4; 20:6; யாக். 1:18.
வேறு அங்கத்தினர்களும் இருக்கிறார்களா?
5. (அ) கலாத்தியர் 6:16-ல் உள்ள “கடவுளுடைய இஸ்ரவேலர்” என்ற சொற்றொடர் யாரைக் குறிக்கிறது? (ஆ) ‘இஸ்ரவேல்’ என்ற வார்த்தை ஒரு தொகுதியை மட்டுமே குறிப்பதில்லை என ஏன் சொல்கிறோம்?
5 அப்படியானால், கலாத்தியர் 6:16-ல் உள்ள “கடவுளுடைய இஸ்ரவேலர்” என்ற சொற்றொடர் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களை மட்டுமே குறிக்கிறது. என்றாலும், இஸ்ரவேல் தேசத்தார் பரலோக நம்பிக்கையுள்ள தொகுதியைத் தவிர வேறு தொகுதிக்கும் படமாக இருக்கிறார்களா? இயேசு தமது உண்மையுள்ள அப்போஸ்தலரிடம் சொன்ன வார்த்தைகளில் இதற்கான பதில் உள்ளது: “ஓர் அரசாங்கத்திற்காக என் தகப்பன் என்னோடு ஒப்பந்தம் செய்திருப்பது போலவே நானும் உங்களோடு ஓர் ஒப்பந்தம் செய்கிறேன். கடவுளுடைய அரசாங்கத்தில் நீங்கள் என்னோடு அமர்ந்து உணவும் பானமும் அருந்துவீர்கள்; இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்க சிம்மாசனங்களில் அமருவீர்கள்.” (லூக். 22:28-30) இது கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியில், ‘அனைத்தும் புதிதாக்கப்படுகிற காலத்தில்’ நடைபெறும்.—மத்தேயு 19:28-ஐ வாசியுங்கள்.
6, 7. மத்தேயு 19:28-லும் லூக்கா 22:30-லும் உள்ள ‘இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்கள்’ என்ற சொற்றொடர் யாரைக் குறிக்கிறது?
6 அந்த ஆயிர வருட ஆட்சியில் 1,44,000 பேர் பரலோக ராஜாக்களாகவும், குருமார்களாகவும் நீதிபதிகளாகவும் சேவை செய்வார்கள். (வெளி. 20:4) அவர்கள் யாரை நியாயந்தீர்ப்பார்கள், யார்மீது ஆட்சி செய்வார்கள்? அவர்கள், “இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும்” நியாயந்தீர்ப்பார்கள் என்று மத்தேயு 19:28-லும் லூக்கா 22:30-லும் நாம் வாசிக்கிறோம். இந்த வசனங்களில், ‘இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தார்’ யாருக்குப் படமாக இருக்கிறார்கள்? பூமிக்குரிய நம்பிக்கையுள்ளோருக்குப் படமாக இருக்கிறார்கள். இவர்கள் இயேசுவின் பலியில் நம்பிக்கை வைத்திருக்கிறபோதிலும் ராஜ அதிகாரமுள்ள குருத்துவ வகுப்பாராக இல்லை. (இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களின் பட்டியலில் குருத்துவ சேவை செய்த லேவி கோத்திரம் சேர்க்கப்படவில்லை.) பூமிக்குரிய நம்பிக்கையுள்ளவர்கள் 1,44,000 பேரின் குருத்துவ சேவையிலிருந்து ஆன்மீகப் பயன்களைப் பெறுவார்கள். இப்படி ஆன்மீகப் பயன்களைப் பெறுகிறவர்களும் கடவுளுடைய மக்களாக இருக்கிறார்கள், இவர்கள்மீது அவர் அன்பு காட்டுகிறார், இவர்களை ஏற்றுக்கொள்கிறார். ஆகையால், பூர்வகால இஸ்ரவேலர் இவர்களுக்குப் படமாக இருப்பது பொருத்தமானதே.
7 அப்போஸ்தலன் யோவான் கண்ட ஒரு தரிசனமும் இதை ஊர்ஜிதப்படுத்துகிறது. கடவுளுடைய இஸ்ரவேலரான 1,44,000 பேர் மிகுந்த உபத்திரவத்திற்கு முன்பு நிரந்தரமாக முத்திரையிடப்படுவதை அவர் பார்த்தார்; அதன்பின்பு, ‘திரள் கூட்டமான மக்கள்’ ‘எல்லாத் தேசங்களிலிருந்தும்’ வருவதைப் பார்த்தார். (வெளி. 7:9) இந்தத் திரள் கூட்டத்தார் மிகுந்த உபத்திரவத்தைத் தப்பிப்பிழைத்து கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியில் வாழ்வார்கள். அப்போது, உயிர்த்தெழுந்து வருகிற கோடிக்கணக்கானோர் அவர்களுடன் சேர்ந்துகொள்வார்கள். (யோவா. 5:28, 29; வெளி. 20:13) இவர்கள் அனைவரும் அடையாள அர்த்தத்தில் ‘இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களாக’ இருப்பார்கள்; இயேசுவும் அவருடைய சக ராஜாக்களான 1,44,000 பேரும் இவர்களையே நியாயந்தீர்ப்பார்கள்.—அப். 17:31; 24:15; வெளி. 20:12.
8. பாவநிவாரண நாளில் நடைபெற்ற சம்பவங்கள், பரலோக நம்பிக்கையுள்ள 1,44,000 பேருக்கும் மற்ற மனிதர்களுக்கும் இடையே உள்ள உறவை எவ்வாறு படமாகக் காட்டின?
8 பாவநிவாரண நாளில் நடைபெற்ற சம்பவங்கள், பரலோக நம்பிக்கையுள்ள 1,44,000 பேருக்கும் மற்ற மனிதர்களுக்கும் இடையே உள்ள அந்த உறவைப் படமாகக் காட்டின. (லேவி. 16:6-10) தலைமைக் குரு முதலில், “தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும்” ஒரு காளையைப் பாவ நிவாரண பலியாகச் செலுத்தினார். எனவே, இயேசுவின் பலி, அவருடன் பரலோகத்தில் குருமார்களாகச் சேவை செய்கிற அவரது வீட்டாருக்கு முதலில் பிரயோகிக்கப்படும். அந்தப் பாவநிவாரண நாளில், மற்ற இஸ்ரவேலரின் பாவங்களை நிவிர்த்தி செய்ய இரண்டு ஆடுகள் வழங்கப்பட்டன. இந்தச் சூழமைவை வைத்துப் பார்க்கும்போது, குருத்துவ சேவை செய்த கோத்திரத்தார் 1,44,000 பேருக்குப் படமாக இருக்கிறார்கள்; மற்ற இஸ்ரவேலர் பூமிக்குரிய நம்பிக்கையுள்ளோருக்குப் படமாக இருக்கிறார்கள். எனவே, மத்தேயு 19:28-ல் உள்ள ‘இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்கள்’ என்ற சொற்றொடர், இயேசுவோடு பரலோகத்தில் குருமார்களாகச் சேவை செய்யப்போகிறவர்களை அல்ல, அவருடைய பலியில் விசுவாசம் வைக்கிற மற்ற எல்லாரையும் குறிக்கிறது.a
9. எசேக்கியேல் பார்த்த ஆலய தரிசனத்தில், குருமார்கள் யாருக்குப் படமாக இருக்கிறார்கள், குருத்துவ சேவை செய்யாத மற்ற கோத்திரத்தார் யாருக்குப் படமாக இருக்கிறார்கள்?
9 மற்றொரு உதாரணத்தைக் கவனியுங்கள். யெகோவாவின் ஆலயத்தைப் பற்றிய விரிவான தரிசனம் எசேக்கியேல் தீர்க்கதரிசிக்குக் கொடுக்கப்பட்டது. (எசே. 40-48 அதிகாரங்கள்) இந்தத் தரிசனத்தில் அவர் பார்த்தபடி, ஆலயத்தில் குருமார்கள் வேலை செய்தார்கள். அவர்கள் மற்றவர்களுக்குக் கற்பித்தார்கள்; யெகோவாவிடமிருந்து ஆலோசனைகளையும் புத்திமதிகளையும் பெற்றார்கள். (எசே. 44:23-31) மற்ற கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள் அவரை வழிபடுவதற்கும் பலிகளைச் செலுத்துவதற்கும் அங்கு வந்தார்கள். (எசே. 45:16, 17) எனவே, இந்தத் தரிசனத்தில், குருமார்கள் பரலோக நம்பிக்கையுள்ளோருக்குப் படமாக இருக்கிறார்கள்; குருத்துவ சேவை செய்யாத மற்ற கோத்திரத்தார் பூமிக்குரிய நம்பிக்கையுள்ளோருக்குப் படமாக இருக்கிறார்கள். இந்தத் தரிசனம் சிறப்பித்துக் காட்டுகிறபடி, இவ்விரண்டு தொகுதிகளும் ஒன்றுபட்டுச் செயல்படுகிறார்கள்; இவர்களில், குருமார் வகுப்பினரே உண்மை வழிபாட்டை முன்நின்று நடத்துகிறார்கள்.
10, 11. (அ) இயேசு சொன்ன வார்த்தைகளின் என்ன நிறைவேற்றத்தை இன்று நாம் பார்க்கிறோம்? (ஆ) வேறே ஆடுகளைப் பற்றி என்ன கேள்வி எழுகிறது?
10 ஒருசமயம், இயேசு பரலோக நம்பிக்கையுள்ள ‘சிறுமந்தையை’ பற்றிக் குறிப்பிட்டார்; மற்றொரு சமயம், அந்தத் “தொழுவத்தை” சேராத ‘வேறே ஆடுகளை’ பற்றிக் குறிப்பிட்டார். (யோவா. 10:16; லூக். 12:32) “அவற்றையும் நான் கொண்டுவர வேண்டும், அவை என்னுடைய குரலுக்குச் செவிகொடுக்கும்; அப்போது, அவை ஒரே மேய்ப்பரின் கீழ் ஒரே மந்தையாகும்” என்றும் குறிப்பிட்டார். இந்த வார்த்தைகள் இன்று நிறைவேறி வருவதைப் பார்ப்பது நம் விசுவாசத்தை எவ்வளவாய்ப் பலப்படுத்துகிறது! இரண்டு தொகுதிகள், அதாவது பரலோக நம்பிக்கையுள்ளோரின் சிறிய தொகுதியும், வேறே ஆடுகளான திரள் கூட்டத்தாரின் தொகுதியும் ஒரே மந்தையாக இணைக்கப்பட்டிருக்கிறார்கள். (சகரியா 8:23-ஐ வாசியுங்கள்.) வேறே ஆடுகள் ஆன்மீக ஆலயத்தின் உட்பிரகாரத்தில் சேவை செய்யாவிட்டாலும், அதன் வெளிப்பிரகாரத்தில் சேவை செய்கிறார்கள்.
11 எனவே, குருத்துவ சேவை செய்யாத இஸ்ரவேல் கோத்திரத்தார் சில சமயங்களில் வேறே ஆடுகளுக்குப் படமாக இருப்பதால், நினைவுநாள் அனுசரிப்புச் சின்னங்களைப் பூமிக்குரிய நம்பிக்கையுள்ளோர் உட்கொள்ள வேண்டுமா? இந்தக் கேள்விக்கான பதிலை இப்போது சிந்திப்போம்.
புதிய ஒப்பந்தம்
12. எந்தப் புதிய ஏற்பாட்டைப் பற்றி யெகோவா சொன்னார்?
12 தம்முடைய மக்களுக்குச் செய்யப்போகிற ஒரு புதிய ஏற்பாட்டைப் பற்றி யெகோவா இவ்வாறு சொன்னார்: “அந்நாட்களுக்குப் பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது [“ஒப்பந்தமாவது,” NW]; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.” (எரே. 31:31-33) ஆபிரகாமுக்கு யெகோவா தந்த வாக்குறுதி, இந்தப் புதிய ஒப்பந்தத்தின் மூலம் மகத்தான விதத்தில், முழுமையான விதத்தில் நிறைவேறும்.—ஆதியாகமம் 22:18-ஐ வாசியுங்கள்.
13, 14. (அ) புதிய ஒப்பந்தத்தில் பங்குகொள்கிறவர்கள் யார்? (ஆ) அதில் பயன்பெறுகிறவர்கள் யார், அந்தப் புதிய ஒப்பந்தத்தை அவர்கள் எவ்வாறு ‘பற்றிக்கொண்டிருக்கிறார்கள்’?
13 தாம் இறப்பதற்கு முந்திய இரவில் இந்த ஒப்பந்தத்தைக் குறிப்பிட்டு இயேசு இப்படிச் சொன்னார்: “இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படப்போகிற என் இரத்தத்தின் அடிப்படையிலான புதிய ஒப்பந்தத்தைக் குறிக்கிறது.” (லூக். 22:20; 1 கொ. 11:25) இந்தப் புதிய ஒப்பந்தத்தில் கிறிஸ்தவர்கள் எல்லாருமே உட்பட்டிருக்கிறார்களா? இல்லை. சிலர், அந்தக் கிண்ணத்திலிருந்து குடித்த அப்போஸ்தலரைப் போல் புதிய ஒப்பந்தத்தில் பங்குகொள்கிறவர்களாக இருக்கிறார்கள்.b பரலோக அரசாங்கத்தில் தம்முடன் ஆட்சி செய்வதற்காக இயேசு வேறொரு ஒப்பந்தத்தை அவர்களுடன் செய்தார். (லூக். 22:28-30) அந்த அரசாங்கத்தில் அவர்கள் இயேசுவோடு இருப்பார்கள்.—லூக். 22:15, 16.
14 அவருடைய ஆட்சியின்கீழ் பூமியில் வாழப்போகிறவர்களைப் பற்றி என்ன சொல்லலாம்? அவர்கள் இந்தப் புதிய ஒப்பந்தத்திலிருந்து பயன்பெறுகிறவர்களாக இருக்கிறார்கள். (கலா. 3:8, 9) அவர்கள் இந்தப் புதிய ஒப்பந்தத்தில் பங்குகொள்கிறவர்களாக இல்லாவிட்டாலும் அதில் உட்பட்டுள்ள விதிமுறைகளுக்குக் கட்டுப்படுவதன் மூலம் அதை ‘பற்றிக்கொண்டிருக்கிறார்கள்.’ இதைத்தான் ஏசாயா தீர்க்கதரிசி இவ்வாறு முன்னுரைத்தார்: ‘யெகோவாவைச் சேவிக்கவும், யெகோவாவுடைய நாமத்தை நேசிக்கவும், அவருக்கு ஊழியக்காரராயிருக்கவும், அவரைச் சேர்ந்து, ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி ஆசரித்து, என் ஒப்பந்தத்தைப் பற்றிக்கொண்டிருக்கிற அந்நிய புத்திரர் அனைவரையும், நான் என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவந்து: என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன். . . . என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும்.’—ஏசா. 56:6, 7.
சின்னங்களை யார் உட்கொள்ள வேண்டும்?
15, 16. (அ) புதிய ஒப்பந்தத்தை பவுல் எதனுடன் இணைத்துப் பேசினார்? (ஆ) பூமிக்குரிய நம்பிக்கையுள்ளோர் நினைவுநாள் அனுசரிப்புச் சின்னங்களை ஏன் உட்கொள்வதில்லை?
15 புதிய ஒப்பந்தத்தில் பங்குகொள்கிறவர்கள், ‘பரிசுத்த ஸ்தலத்திற்குள் செல்ல தைரியம்’ பெற்றிருக்கிறார்கள். (எபிரெயர் 10:15-20-ஐ வாசியுங்கள்.) ‘அசைக்க முடியாத அரசாங்கத்தை பெறப்போகிறவர்கள்’ இவர்கள்தான். (எபி. 12:28) எனவே, இயேசு கிறிஸ்துவுடன் பரலோகத்தில் ராஜாக்களாகவும் குருமார்களாகவும் இருக்கப்போகிறவர்கள் மட்டுமே புதிய ஒப்பந்தத்தைக் குறிக்கிற அந்த ‘கிண்ணத்திலிருந்து’ குடிக்க வேண்டும். புதிய ஒப்பந்தத்தில் பங்குகொள்கிற இவர்கள் ஆட்டுக்குட்டியானவருக்கு நிச்சயம் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். (2 கொ. 11:2; வெளி. 21:2, 9) நினைவுநாள் அனுசரிப்புக்கு வருகிற மற்ற எல்லாரும் வெறும் பார்வையாளர்களாக இருக்கிறார்கள்; அந்தச் சின்னங்களை அவர்கள் உட்கொள்வதில்லை.
16 பூமிக்குரிய நம்பிக்கையுள்ளோர் அந்தச் சின்னங்களை உட்கொள்வதில்லை என்பதைப் புரிந்துகொள்ள பவுலும் நமக்கு உதவுகிறார். பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு அவர் இப்படி எழுதினார்: “நீங்கள் இந்த ரொட்டியைச் சாப்பிட்டு இந்தக் கிண்ணத்திலிருந்து குடிக்கும்போதெல்லாம் நம் எஜமானர் வரும்வரை அவருடைய மரணத்தை அறிவிக்கிறீர்கள்.” (1 கொ. 11:26) நம் எஜமானர் ‘வருவது’ எப்போது? மணமகள் வகுப்பாரில் கடைசி அங்கத்தினரைப் பரலோக வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போகும்போது. (யோவா. 14:2, 3) எனவே, நம் எஜமானரின் நினைவுநாள் அனுசரிப்பு முடிவில்லாமல் தொடர்ந்துகொண்டே இருக்கப்போவதில்லை. பூமியில் இருக்கிற ‘மீதியானோர்’ அனைவரும் பரலோக வெகுமதியைப் பெறும்வரைதான் இந்தச் சின்னங்களை உட்கொள்வார்கள். (வெளி. 12:17) பூமியில் என்றென்றும் வாழ்கிற நம்பிக்கையுள்ளோர் இந்தச் சின்னங்களை உட்கொள்ள வேண்டியிருந்தால், நினைவுநாள் அனுசரிப்பு என்றென்றும் தொடர வேண்டியிருக்குமே!
“அவர்கள் என் ஜனமாவார்கள்”
17, 18. எசேக்கியேல் 37:26, 27-ல் உள்ள தீர்க்கதரிசனம் எவ்வாறு நிறைவேறியிருக்கிறது?
17 தம்முடைய மக்களின் ஒற்றுமையைப் பற்றி யெகோவா பின்வரும் வார்த்தைகளில் முன்னுரைத்தார்: “நான் அவர்களோடே சமாதான உடன்படிக்கை [“ஒப்பந்தம்,” NW] செய்வேன்; அது அவர்களுக்கு நித்திய உடன்படிக்கையாயிருக்கும்; நான் அவர்களை நிலைப்படுத்தி, அவர்களை வர்த்திக்கப்பண்ணி, அவர்கள் நடுவிலே என் பரிசுத்த ஸ்தலத்தை என்றென்றைக்கும் ஸ்தாபிப்பேன். என் வாசஸ்தலம் அவர்களிடத்தில் இருக்கும், நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.”—எசே. 37:26, 27.
18 கடவுளுடைய ஜனங்கள் அனைவருமே இந்த மகத்தான வாக்குறுதியின் நிறைவேற்றத்திலிருந்து, இந்தச் சமாதான ஒப்பந்தத்திலிருந்து பயனடையலாம். ஆம், யெகோவா தமக்குக் கீழ்ப்படிகிற ஊழியர்கள் எல்லாருக்கும் சமாதானத்தைத் தருவதாக உறுதியளித்திருக்கிறார். அவருடைய சக்தியினால் பிறப்பிக்கப்படும் குணங்களை அவர்கள் மத்தியில் தெள்ளத்தெளிவாகக் காண முடிகிறது. தூய கிறிஸ்தவ வணக்கத்திற்குப் படமாக இங்கே குறிப்பிடப்பட்டுள்ள அவருடைய பரிசுத்த ஸ்தலம் அவர்கள் மத்தியில் இருக்கிறது. எல்லா விதமான உருவ வழிபாட்டையும் கைவிட்டு யெகோவாவை ஒரே உண்மையுள்ள கடவுளாக வழிபடுவதால் அவர்கள் உண்மையிலேயே அவரது ஜனங்களாய் ஆகியிருக்கிறார்கள்.
19, 20. ‘என் ஜனங்கள்’ என யெகோவா அழைக்கிற ஜனங்களின் பாகமாய் ஆகியிருக்கிறவர்கள் யார், புதிய ஒப்பந்தம் எதைச் சாத்தியமாக்கியிருக்கிறது?
19 நம் காலத்தில் இந்த இரண்டு தொகுதிகளும் ஒன்றுபட்டு செயல்படுவதைப் பார்ப்பது எவ்வளவு உற்சாகத்தைத் தருகிறது! அதிகரித்துவரும் திரள் கூட்டத்தாருக்குப் பரலோக நம்பிக்கை இல்லாவிட்டாலும், பரலோக நம்பிக்கையுள்ளோருடன் இணைந்து செயல்படுவதை அவர்கள் கௌரவமாக நினைக்கிறார்கள். கடவுளுடைய இஸ்ரவேலருடன் அவர்கள் சேர்ந்துகொள்கிறார்கள். அதன் மூலம், ‘என் ஜனங்கள்’ என யெகோவா அழைக்கிற ஜனங்களின் பாகமாய் ஆகியிருக்கிறார்கள். ‘அந்நாளில் அநேக தேசத்தார் யெகோவாவிடம் வந்து சேருவார்கள், அவர்கள் என் ஜனமாவார்கள்; நான் உன் மத்தியில் குடியிருப்பேன்’ என்ற தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தை அவர்களிடம் காணலாம்.—சக. 2:11; 8:21; ஏசாயா 65:22-ஐயும், வெளிப்படுத்துதல் 21:3, 4-ஐயும் வாசியுங்கள்.
20 புதிய ஒப்பந்தத்தின் மூலமாகவே யெகோவா இவற்றையெல்லாம் சாத்தியமாக்கியிருக்கிறார். வெவ்வேறு தேசத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் அவருடைய தயவைப் பெற்ற தேசத்தின் பாகமாக ஆகியிருக்கிறார்கள். (மீ. 4:1-5) புதிய ஒப்பந்தத்தில் உட்பட்டுள்ள விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதன் மூலமும், அவற்றுக்குக் கட்டுப்படுவதன் மூலமும் அந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்க அவர்கள் தீர்மானமாயிருக்கிறார்கள். (ஏசா. 56:6, 7) அவ்வாறு செய்வதன் மூலம், கடவுளுடைய இஸ்ரவேலருடன் சேர்ந்து நிலையான சமாதானத்தை அபரிமிதமாய் அனுபவித்து வருகிறார்கள். அதுவே உங்களுடைய அனுபவமாகவும் இருப்பதாக! ஆம், இன்றும் என்றும்!!
[அடிக்குறிப்புகள்]
a அதைப் போலவே, “சபை” என்ற வார்த்தை பரலோக நம்பிக்கையுள்ளோரை முக்கியமாகக் குறிக்கிறது. (எபி. 12:23) என்றாலும், அந்த வார்த்தை கிறிஸ்தவர்கள் எல்லாரையும்கூட குறிக்கிறது; அவர்கள் பரலோக நம்பிக்கையுள்ளவர்களாக இருந்தாலும் சரி பூமிக்குரிய நம்பிக்கையுள்ளவர்களாக இருந்தாலும் சரி.—ஏப்ரல் 15, 2007 காவற்கோபுரம், பக்கங்கள் 21-23-ஐக் காண்க.
b இயேசு அந்தப் புதிய ஒப்பந்தத்தில் பங்குகொள்கிறவராக அல்ல, அதன் மத்தியஸ்தராக இருக்கிறார்; எனவே, அவர் அந்தச் சின்னங்களை உட்கொள்ளவில்லை என்றே தெரிகிறது.
நினைவிருக்கிறதா?
• 1,44,000 பேரால் நியாயந்தீர்க்கப்படுகிற ‘இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்கள்’ யாரைக் குறிக்கிறது?
• புதிய ஒப்பந்தத்தில் பரலோக நம்பிக்கையுள்ளோரின் பங்கு என்ன, இந்த ஒப்பந்தம் வேறே ஆடுகளுக்கு எப்படிப் பயனளிக்கிறது?
• கிறிஸ்தவர்கள் எல்லாருமே நினைவுநாள் அனுசரிப்புச் சின்னங்களை உட்கொள்ள வேண்டுமா?
• நம் நாளில் எப்படிப்பட்ட ஒற்றுமை இருக்குமென யெகோவா முன்னுரைத்தார்?
[பக்கம் 25-ன் வரைபடம்/படங்கள்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
அநேகர் இன்று கடவுளுடைய இஸ்ரவேலருடன் சேர்ந்து சேவை செய்கிறார்கள்
73,13,173
40,17,213
14,83,430
3,73,430
1950 1970 1990 2009