இயேசுவைப் பற்றிய முழு விவரத்தையும் பைபிள் தருகிறதா?
இயேசு கொல்கொதா மலையில் இறந்ததாய் பைபிள் சொல்வதற்கு மாறாக அவர் உயிர் தப்பியிருக்கக் கூடுமா? அவர் மகதலேனா மரியாளைத் திருமணம் செய்துகொண்டு, பிள்ளை குட்டிகளோடு வாழ்ந்திருக்கக் கூடுமா? அல்லது பூமியிலுள்ள சகல சந்தோஷங்களையும் துறந்த துறவியாக அவர் இருந்திருக்கக் கூடுமா? பைபிளில் நாம் வாசிக்கிறவற்றிலிருந்து வேறுபட்ட கோட்பாடுகளை அவர் போதித்திருக்கக் கூடுமா?
சமீப வருடங்களில் இத்தகைய ஊகங்கள் எக்கச்சக்கமாகப் பெருகி வந்திருக்கின்றன; இதற்கு, பிரபல திரைப்படங்களும் நாவல்களும் ஓரளவு காரணமாய் இருந்திருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த அதிகாரப்பூர்வமற்ற புத்தகங்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட அநேக புத்தகங்களும் கட்டுரைகளும்கூட அதற்குக் காரணமாய் இருந்திருக்கின்றன; அந்த அதிகாரப்பூர்வமற்ற புத்தகங்கள், இயேசுவைப் பற்றிச் சுவிசேஷங்களில் விடுபட்ட தகவல்களைத் தருவதாக உரிமை கொண்டாடுகின்றன. ஆனால், அது உண்மையா? இயேசுவைப் பற்றிய நிஜமான, முழுமையான விவரம் பைபிளில் இருப்பதாக நாம் நம்பலாமா?
இந்தக் கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்ள, மூன்று அடிப்படை விஷயங்களுக்குக் கவனம் செலுத்துவது உதவியாய் இருக்கும். முதலாவது, சுவிசேஷங்களை யார், எப்போது எழுதினார்கள் என்பதைப் பற்றிய முக்கியத் தகவலை நாம் அறிவது அவசியம்; இரண்டாவது, பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலை யார், எப்படித் தயாரித்தார்கள் என்பதை நாம் அறிவது அவசியம்; மூன்றாவது, பைபிளின் பாகமாக அதிகாரப்பூர்வமாய் ஏற்றுக்கொள்ளப்படாத புத்தகங்களைப் பற்றிய ஓரளவு பின்னணித் தகவலையும் அவை எவ்வாறு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட புத்தகங்களிலிருந்து வேறுபடுகின்றன என்பதையும் நாம் அறிவது அவசியம்.a
கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் எப்போது எழுதப்பட்டது, யாரால்?
மத்தேயு சுவிசேஷம், கிறிஸ்து இறந்து வெறும் எட்டு வருடங்களுக்குப் பிறகு சுமார் கி.பி. 41-ல் எழுதப்பட்டதாகச் சில ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால், அதற்கும் சில வருடங்களுக்குப் பிறகே அது எழுதப்பட்டிருக்க வேண்டுமென அநேக அறிஞர்கள் கருதுகிறார்கள். எனினும், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்திலுள்ள எல்லா புத்தகங்களுமே முதல் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்க வேண்டுமென பொதுவாக ஒப்புக்கொள்ளப்படுகிறது.
அந்தச் சமயத்தில், இயேசு வாழ்ந்ததையும் இறந்ததையும் உயிர்த்தெழுப்பப்பட்டதையும் நேரில் கண்டவர்கள் உயிரோடிருந்தார்கள்; அவர்கள் சுவிசேஷப் பதிவுகளிலுள்ள தகவலைப் படித்துப் பார்த்திருப்பார்கள். அவற்றில் தவறான தகவல்கள் இருந்திருந்தால் அவற்றை உடனடியாக அவர்கள் சுட்டிக்காட்டியும் இருப்பார்கள். பைபிள் அறிஞரான எஃப். எஃப். ப்ரூஸ் இவ்வாறு கருத்துத் தெரிவிக்கிறார்: “ஆரம்ப கால அப்போஸ்தலர்கள் பிரசங்கிக்கையில், ‘நாங்கள் இவற்றைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம்’ என்று மட்டும் சொல்லாமல், ‘இதை நீங்களே அறிந்திருக்கிறீர்கள்’ என்றும் சொன்னார்கள்; இவ்வாறு, செவிகொடுத்துக் கேட்டவர்கள் ஏற்கெனவே அறிந்திருந்ததை நம்பிக்கையோடு தெரிவித்தது, அவர்களுடைய ஊழியத்தின் முக்கிய அம்சமாய் இருந்தது. (அப்போஸ்தலர் 2:22).”
கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தை யார் எழுதினார்கள்? அவர்களில் இயேசுவின் 12 அப்போஸ்தலர்களில் சிலரும் இருந்தார்கள். இவர்களும், யாக்கோபு, யூதா, ஒருவேளை மாற்கு போன்ற மற்ற எழுத்தாளர்களும் கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாளில் கிறிஸ்தவ சபை உருவானபோது அங்கிருந்தார்கள். பவுல் உட்பட எல்லா எழுத்தாளர்களுமே ஆரம்ப கால கிறிஸ்தவ சபையின் ஆளும் குழுவுடன் சேர்ந்து நெருக்கமாய்ச் செயல்பட்டார்கள்; இந்த ஆளும் குழுவில் எருசலேமிலிருந்த அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் அங்கத்தினராய் இருந்தார்கள்.—அப்போஸ்தலர் 15:2, 6, 12-14, 22; கலாத்தியர் 2:7-10.
இயேசு தாம் ஆரம்பித்து வைத்த பிரசங்க வேலையையும் கற்பிக்கும் வேலையையும் தம்முடைய சீடர்கள் தொடர்ந்து செய்ய வேண்டுமென கட்டளையிட்டார். (மத்தேயு 28:19, 20) “உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்கும் செவிகொடுக்கிறான்” என்றும் அவர் சொன்னார். (லூக்கா 10:16) மேலும், அந்த வேலையைச் செய்வதற்குக் கடவுளுடைய சக்தி அவர்களைப் பலப்படுத்துமென்று அவர் வாக்குறுதி அளித்தார். எனவே, அப்போஸ்தலரிடமிருந்து அல்லது அவர்களுடைய நெருங்கிய சக ஊழியர்களிடமிருந்து கடிதங்கள் வந்தபோது அவற்றை ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் நம்பகமானவையாகத் தயங்காமல் ஏற்றுக்கொண்டார்கள்; அந்தக் கடிதங்களின் எழுத்தாளர்கள், கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலைப் பெற்றிருந்ததற்குத் தெளிவான அத்தாட்சி அளித்தார்கள்.
பைபிள் எழுத்தாளர்கள் சிலர், தங்கள் சக எழுத்தாளர்களும் கடவுளுடைய தூண்டுதலால் எழுதியதை உறுதிப்படுத்தினார்கள். உதாரணத்திற்கு, பவுல் எழுதிய கடிதங்களை, ‘மற்ற வேதவசனங்களுக்குச்’ சமமாக அப்போஸ்தலன் பேதுரு பேசினார். (2 பேதுரு 3:15, 16) பவுலும்கூட, அப்போஸ்தலர்களும் மற்ற கிறிஸ்தவ தீர்க்கதரிசிகளும் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலைப் பெற்றிருந்ததை உணர்ந்திருந்தார்.—எபேசியர் 3:5.
எனவே, சுவிசேஷப் பதிவுகள் நம்பகமானவை, அதிகாரப்பூர்வமானவை என்பதற்கு அப்பதிவுகளே உறுதியளிக்கின்றன. அவை வெறுமனே கற்பனைக் கதைகளோ கட்டுக்கதைகளோ அல்ல. அவை, கடவுளுடைய சக்தியின் தூண்டுதலைப் பெற்ற மனிதர்கள் தாங்கள் கண்கூடாகப் பார்த்தவற்றின் அடிப்படையில் கவனமாக எழுதிய சரித்திரப் பதிவுகள்.
அதிகாரப்பூர்வ பட்டியலை யார் தயாரித்தார்கள்?
கிறிஸ்தவ கிரேக்க வேதாகம புத்தகங்கள் எழுதப்பட்டு பல நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் அதன் அதிகாரப்பூர்வ பட்டியல் தயாரிக்கப்பட்டதாகச் சில எழுத்தாளர்கள் சொல்லியிருக்கிறார்கள்; அதுவும், பேரரசர் கான்ஸ்டன்டைனின் தலைமையில் செயல்பட்ட ஓர் அதிகாரப்பூர்வ சர்ச்சால் தயாரிக்கப்பட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், உண்மை அதற்கு நேர்மாறாக இருக்கிறது.
உதாரணத்திற்கு, சர்ச் சரித்திரப் பேராசிரியர் ஆஸ்கார் ஸ்கார்ஸவ்னா பின்வருமாறு சொல்வதைக் கவனியுங்கள்: “புதிய ஏற்பாட்டில் எந்தப் புத்தகங்களைச் சேர்க்க வேண்டும், எவற்றைச் சேர்க்கக் கூடாது என்பதை எந்தச் சர்ச்சின் பேரவையோ எந்தத் தனிநபரோ ஒருபோதும் தீர்மானிக்கவில்லை . . . அதற்கான அடிப்படை தெள்ளத் தெளிவானதாகவும் மிக நியாயமானதாகவும் இருந்தது: அப்போஸ்தலர்களோ அவர்களுடைய சக ஊழியர்களோ எழுதியதாகக் கருதப்பட்ட முதல் நூற்றாண்டுப் புத்தகங்கள் நம்பகமானவையாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதற்குப் பின்பு எழுதப்பட்ட மற்ற புத்தகங்கள், கடிதங்கள், அல்லது ‘சுவிசேஷங்கள்’ நம்பகமானவையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை . . . இப்படி அதிகாரப்பூர்வ பட்டியலைத் தயாரிப்பது, கான்ஸ்டன்டைனின் ஆட்சிக்கும் அவருடைய தலைமையில் ஓர் அதிகாரப்பூர்வ சர்ச் செயல்பட்டதற்கும் வெகு காலத்திற்கு முன்பாகவே முடிவடைந்ததாகத் தெரிகிறது. புதிய ஏற்பாட்டு பைபிளை நமக்குத் தொகுத்துத் தந்தது ஓர் அதிகாரப்பூர்வ சர்ச் அல்ல, ஆனால் கிறிஸ்தவ உயிர்த் தியாகிகள்தான்.”
கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தை ஆராயும் துணைப் பேராசிரியர் கென் பர்டிங், அதிகாரப்பூர்வ பட்டியல் உருவான விதத்தைப் பற்றி இவ்வாறு சொல்கிறார்: “அதிகாரப்பூர்வ பட்டியலில் இடம்பெற வேண்டிய புத்தகங்களை சர்ச் தன் விருப்பப்படி தேர்ந்தெடுத்ததாகச் சொல்ல முடியாது; கடவுளுடைய தூண்டுதலால் எழுதப்பட்ட நம்பகமான புத்தகங்களாகக் கிறிஸ்தவர்கள் எப்போதும் கருதியவற்றை அது வெறுமனே அங்கீகரித்ததாகச் சொல்வதுதான் பொருத்தமானது.”
அப்படியென்றால், முதல் நூற்றாண்டில் வாழ்ந்த சாதாரணக் கிறிஸ்தவர்களே பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலில் இடம்பெற வேண்டிய புத்தகங்கள் எவையெனத் தீர்மானித்தார்களா? அப்படித் தீர்மானிப்பதில், மிக முக்கியமான, வலிமையான ஒன்று உட்பட்டிருந்ததாக பைபிள் நமக்குச் சொல்கிறது.
பைபிளின்படி, கிறிஸ்தவ சபை ஆரம்பமான காலத்தில் கடவுளுடைய சக்தியின் அற்புத வரங்கள் அருளப்பட்டன; அவற்றில் ஒன்றுதான், ‘தெய்வீகத் தூண்டுதலால் அருளப்பட்ட வார்த்தைகளைப் பகுத்தறிகிற வரம்.’ (1 கொரிந்தியர் 12:4, 10) எனவே, கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்ட வார்த்தைகள் எவை, அப்படி எழுதப்படாத வார்த்தைகள் எவை என்பதைப் பகுத்தறிகிற அற்புதத் திறன் அக்காலத்துக் கிறிஸ்தவர்கள் சிலருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. ஆகவே, பைபிளில் காணப்படும் புத்தகங்கள் கடவுளுடைய தூண்டுதலால் எழுதப்பட்டவை என இன்றுள்ள கிறிஸ்தவர்கள் உறுதியாய் நம்பலாம்.
அப்படியென்றால், பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியல் கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலால் ஆரம்ப காலத்திலேயே தயாரிக்கப்பட்டது. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பைபிளிலுள்ள புத்தகங்கள் அதிகாரப்பூர்வ பட்டியலைச் சேர்ந்தவையென சில எழுத்தாளர்கள் ஆமோதித்தார்கள். எனினும், இந்த எழுத்தாளர்கள் அதிகாரப்பூர்வ பட்டியலைத் தயாரிக்கவில்லை; கடவுள் ஏற்கெனவே ஏற்றுக்கொண்டிருந்த புத்தகங்களுக்கு, அதாவது அவரது சக்தியின் தூண்டுதலால் அவருடைய பிரதிநிதிகள் எழுதிய புத்தகங்களுக்கு, அவர்கள் வெறுமனே சான்றளித்தார்கள்.
பூர்வகால கையெழுத்துப் பிரதிகளும்கூட, இன்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிற அதிகாரப்பூர்வ பட்டியலுக்கு மறுக்க முடியாத அத்தாட்சியை அளிக்கின்றன. பூர்வ கிரேக்க மொழியில் எழுதப்பட்ட 5,000-க்கும் அதிகமான கையெழுத்துப் பிரதிகள் உள்ளன; அவற்றில் சில இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை. ஆரம்ப நூற்றாண்டுகளில் இந்தப் பிரதிகளே நம்பகமானவையாகக் கருதப்பட்டு, நகல்கள் எடுத்து எங்கும் விநியோகிக்கப்பட்டன, அதிகாரப்பூர்வமற்ற புத்தகங்கள் அல்ல.
எனினும், பைபிளின் நம்பகத்தன்மைக்கு உட்புற அத்தாட்சியே மிக முக்கிய ஆதாரமாய் இருக்கிறது. பைபிளிலுள்ள ‘பயனளிக்கும் வார்த்தைகளின் மாதிரிக்கு’ இசைவாக அதிகாரப்பூர்வ புத்தகங்கள் ஒவ்வொன்றும் உள்ளன. (2 தீமோத்தேயு 1:13) அவை, யெகோவாமீது அன்பு காட்டும்படியும் அவரை வழிபடும்படியும் அவருக்குச் சேவை செய்யும்படியும் வாசகர்களை ஊக்கப்படுத்துகின்றன; அதோடு, மூடநம்பிக்கை, பேய் வணக்கம், படைப்பை வழிபடுதல் ஆகியவற்றிற்கு எதிராக எச்சரிக்கின்றன. அவை, சரித்திரப்பூர்வமாகத் துல்லியமாய் இருக்கின்றன; அதோடு, உண்மையான தீர்க்கதரிசனங்களைக் கொண்டிருக்கின்றன. அவை, சக மனிதரிடம் அன்பு காட்டும்படி வாசகர்களை உற்சாகப்படுத்துகின்றன. கிறிஸ்தவ கிரேக்க வேதாகம புத்தகங்களுக்கு இத்தகைய சிறப்பம்சங்கள் உள்ளன. அதிகாரப்பூர்வமற்ற புத்தகங்களைக் குறித்து இப்படிச் சொல்ல முடியுமா?
அதிகாரப்பூர்வமற்ற புத்தகங்கள் எப்படி வேறுபடுகின்றன?
அதிகாரப்பூர்வமற்ற புத்தகங்கள் அதிகாரப்பூர்வ புத்தகங்களிலிருந்து பெருமளவு வேறுபடுகின்றன. அவை, அதிகாரப்பூர்வ புத்தகங்கள் எழுதப்பட்டு பல காலத்திற்குப் பிறகே, அதாவது சுமார் இரண்டாம் நூற்றாண்டின் மத்திபத்தில் எழுதப்பட்டன. இயேசுவையும் கிறிஸ்தவத்தையும் பற்றி அவை தரும் தகவல்கள் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்ட புத்தகங்களுக்கு இசைவாக இல்லை.
உதாரணத்திற்கு, அதிகாரப்பூர்வமற்ற புத்தகமாகிய தோமாவின் சுவிசேஷம், பல விசித்திரமான விஷயங்களை இயேசு சொன்னதாகக் குறிப்பிடுகிறது; எடுத்துக்காட்டாக, மரியாள் பரலோக அரசாங்கத்தில் நுழையத் தகுதி பெறுவதற்கு அவரை ஆணாக மாற்றப் போவதாய் இயேசு சொன்னதாகக் குறிப்பிடுகிறது. இயேசுவின் குழந்தைப் பருவத்தை விவரிக்கும் தோமாவின் சுவிசேஷம், அவர் வேண்டுமென்றே இன்னொரு குழந்தையைக் கொன்ற கொடூரப் பிறவியென குறிப்பிடுகிறது. அதிகாரப்பூர்வமற்ற புத்தகங்களான “பவுலின் செயல்கள்,” “பேதுருவின் செயல்கள்” என்பவை, பாலுறவிலிருந்து முற்றிலும் விலகியிருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன; அதோடு, கணவர்களைவிட்டுப் பிரியும்படி பெண்களை அப்போஸ்தலர்கள் வற்புறுத்தியதாகக்கூட குறிப்பிடுகின்றன. யூதாவின் சுவிசேஷம் என்ற புத்தகம், சீடர்கள் உணவுக்கு நன்றி சொல்லி கடவுளிடம் ஜெபம் செய்ததைப் பார்த்து இயேசு சிரித்ததாகக் குறிப்பிடுகிறது. இந்தக் கருத்துக்கள், அதிகாரப்பூர்வ புத்தகங்களில் காணப்படுவதற்கு நேர்மாறானவையாக இருக்கின்றன.—மாற்கு 14:22; 1 கொரிந்தியர் 7:3-5; கலாத்தியர் 3:28; எபிரெயர் 7:26.
அதிகாரப்பூர்வமற்ற புத்தகங்கள் பல, மறையியல் ஞானக் கோட்பாட்டாளர்களின் நம்பிக்கைகளை வெளிப்படுத்துகின்றன; அந்தக் கோட்பாட்டாளர்கள், படைப்பாளரான யெகோவா நல்ல கடவுள் இல்லை என்று நம்பினார்கள். அதோடு, உயிர்த்தெழுதல் நிஜமான ஒன்றில்லை என்றும், சடப் பொருள்கள் எல்லாமே தீயவை என்றும், திருமணத்திற்கும் பிள்ளைகளைப் பிறப்பிப்பதற்கும் சாத்தானே மூலகாரணன் என்றும்கூட நம்பினார்கள்.
அதிகாரப்பூர்வமற்ற புத்தகங்கள் பல, பைபிள் கதாபாத்திரங்களின் பெயரில் எழுதப்பட்டிருந்தாலும் அவர்கள் அவற்றை எழுதவில்லை. ஏதோ மோசமான சதித்திட்டத்தினால் இந்தப் புத்தகங்கள் பைபிளிலிருந்து விலக்கப்பட்டனவா? இப்புத்தகங்களை ஆராயும் வல்லுநரான எம். ஆர். ஜேம்ஸ் இவ்வாறு சொன்னார்: “இவற்றை புதிய ஏற்பாட்டிலிருந்து யாரோ விலக்கிவிட்டதாகச் சொல்லவே முடியாது, இந்தப் புத்தகங்கள் விலக்கப்பட தகுந்தவை என்பதை இவையே நிரூபித்திருக்கின்றன.”
விசுவாசதுரோகம் வரவிருந்ததை பைபிள் எழுத்தாளர்கள் எச்சரித்தார்கள்
அதிகாரப்பூர்வ புத்தகங்களில், கிறிஸ்தவ சபையைக் கெடுக்கும் விசுவாசதுரோகம் உடனடியாகத் தலைதூக்கும் என்ற எச்சரிப்பு பல முறை கொடுக்கப்பட்டிருப்பதை நாம் காண்கிறோம். சொல்லப்போனால், இந்த விசுவாசதுரோகம் முதல் நூற்றாண்டிலேயே ஆரம்பமாகிவிட்டிருந்தது, ஆனால் அது பரவ விடாமல் அப்போஸ்தலர்கள் தடுத்து நிறுத்தியிருந்தார்கள். (அப்போஸ்தலர் 20:30; 2 தெசலோனிக்கேயர் 2:3, 6, 7; 1 தீமோத்தேயு 4:1-3; 2 பேதுரு 2:1; 1 யோவான் 2:18, 19; 4:1-3) அத்தகைய எச்சரிப்புகள், அப்போஸ்தலர்கள் இறந்த பிறகு எழுதப்பட்ட புத்தகங்களை, அதாவது இயேசுவின் போதனைகளோடு முரண்படுகிற புத்தகங்களை, பற்றிப் புரிந்துகொள்ள உதவுகின்றன.
சில அறிஞர்களும் சரித்திராசிரியர்களும் அந்தப் புத்தகங்களைப் பழம்பெரும் பொக்கிஷங்களாகக் கருதலாம் என்பது உண்மைதான். ஆனால், இதைச் சற்று யோசியுங்கள்: சில வல்லுநர்கள், இன்று துளியும் நம்பகமற்றவையாகக் கருதப்படும் பல தகவல்களைக் கிசுகிசுக்கள் நிறைந்த பத்திரிகைகளிலிருந்தும் மத வெறியரின் புத்தகங்களிலிருந்தும் சேகரித்து அந்தத் தாள்களை ஓர் அறையில் பூட்டி வைக்கிறார்கள். காலவோட்டத்தில் அந்தத் தகவல்கள் உண்மையானவையாக, நம்பகமானவையாக மாறிவிடுமா? 1,700 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தத் தாள்கள் பழமையாகிவிட்ட காரணத்தால் அவற்றிலுள்ள பொய்களும் அர்த்தமற்ற விஷயங்களும் உண்மையாகிவிடுமா?
நிச்சயமாக இல்லை! அதைப் போலத்தான், அதிகாரப்பூர்வமற்ற புத்தகங்களில், மகதலேனா மரியாளை இயேசு திருமணம் செய்துகொண்டார் என்று சொல்லப்படுவதும், மற்ற விசித்திரமான தகவல்களும் இருக்கின்றன. நம்பகமான புத்தகங்கள் கைவசம் இருக்கும்போது நம்பகமற்ற அந்தப் புத்தகங்களை ஏன் நம்ப வேண்டும்? கடவுள் தம்முடைய மகனைப் பற்றி நாம் என்னவெல்லாம் அறிந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறாரோ அவற்றையெல்லாம் பைபிளில் நமக்குக் கொடுத்திருக்கிறார்; அந்தப் பதிவை நாம் தாராளமாக நம்பலாம். (w10-E 04/01)
a “அதிகாரப்பூர்வ பட்டியல்” என்பது, கடவுளுடைய தூண்டுதலால் எழுதப்பட்டதற்கு நம்பகமான அத்தாட்சியைக் கொண்ட பைபிள் புத்தகங்களின் தொகுப்பைக் குறிக்கிறது. பொதுவாக 66 புத்தகங்கள் அதிகாரப்பூர்வமாய் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன; அவை, கடவுளுடைய நூலாகிய பைபிளுக்கு அடிப்படையாக இருக்கின்றன.