இளம் பிள்ளைகளே—யெகோவாவுக்குச் சேவை செய்வதற்கான ஆசையை அதிகரியுங்கள்
“நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை.”—பிர. 12:1.
1. இஸ்ரவேலில் இருந்த பிள்ளைகளுக்கு என்ன அழைப்பு விடுக்கப்பட்டது?
ஏறக்குறைய 3,500 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரவேலில் இருந்த குருமார்களிடமும் மூப்பர்களிடமும் யெகோவாவின் தீர்க்கதரிசியான மோசே இவ்வாறு கட்டளையிட்டார்: ‘புருஷர்களும் ஸ்திரீகளும் பிள்ளைகளும் கேட்டு, கற்றுக்கொண்டு, உங்கள் தேவனாகிய யெகோவாவுக்குப் பயந்து, இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கும்படிக்கு . . . ஜனத்தைக் கூட்டி, அதை வாசிக்க வேண்டும்.’ (உபா. 31:12, 13) யெகோவாவை வழிபடுவதற்காகக் கூடிவரும்படி யாருக்கெல்லாம் அழைப்பு விடுக்கப்பட்டது? ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் விடுக்கப்பட்டது. ஆம், இளம் பிள்ளைகளும்கூட யெகோவாவின் அறிவுரைகளைக் கேட்டு, கற்றுக்கொண்டு அவற்றைப் பின்பற்ற வேண்டியிருந்தது.
2. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையிலிருந்த இளம் பிள்ளைகள்மீது யெகோவா எப்படி அக்கறை காட்டினார்?
2 முதல் நூற்றாண்டிலும், தம்மை வணங்கிய இளம் பிள்ளைகள்மீது யெகோவா அக்கறை காட்டினார். உதாரணமாக, சபைகளுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதிய கடிதங்கள் சிலவற்றில் இளம் பிள்ளைகளுக்கென்று பிரத்தியேகமாகச் சில அறிவுரைகளை எழுதும்படி கடவுள் தம்முடைய சக்தியினால் அவரைத் தூண்டினார். (எபேசியர் 6:1-ஐயும் கொலோசெயர் 3:20-ஐயும் வாசியுங்கள்.) அந்த அறிவுரைகளைக் கடைப்பிடித்த இளம் பிள்ளைகள் அன்புள்ள பரலோகத் தகப்பன்மீது நன்றியுணர்வை வளர்த்துக்கொண்டு அவருடைய ஆசீர்வாதத்தைப் பெற்றார்கள்.
3. கடவுளுக்குச் சேவை செய்வதற்கான தங்களுடைய ஆசையை இளம் பிள்ளைகள் எப்படியெல்லாம் வெளிக்காட்டுகிறார்கள்?
3 யெகோவாவை வணங்குவதற்காக ஒன்றுகூடிவரும்படி இன்றுள்ள இளம் பிள்ளைகளுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறதா? ஆம்! “அன்பு காட்டவும் நற்செயல்கள் செய்யவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்பி, ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த அக்கறை காண்பிப்போமாக; சபைக் கூட்டங்களைச் சிலர் வழக்கமாகத் தவறவிடுவதுபோல் நாமும் தவறவிடாமல், ஒன்றுகூடிவந்து ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவோமாக; நாளானது நெருங்கி வருவதை நாம் எந்தளவுக்குப் பார்க்கிறோமோ அந்தளவுக்கு ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவோமாக” என்று பவுல் கொடுத்த அறிவுரைகளுக்கு ஏராளமான இளம் பிள்ளைகள் கீழ்ப்படிகிறார்கள். (எபி. 10:24, 25) இது நம் உள்ளத்தைக் குளிர்விக்கிறது. அநேக பிள்ளைகள் தங்களுடைய பெற்றோருடன் சேர்ந்து கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கும் வேலையில் பங்குகொள்கிறார்கள். (மத். 24:14) அதோடு, யெகோவா மீதுள்ள இருதயப்பூர்வமான அன்பை வெளிக்காட்டுவதற்காக ஒவ்வொரு வருடமும் அவர்களில் பல்லாயிரக்கணக்கானோர் ஞானஸ்நானம் எடுக்கிறார்கள்; கிறிஸ்துவின் சீடர்களாகி பல ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறார்கள்.—மத். 16:24; மாற். 10:29, 30.
அழைப்பை இன்றே ஏற்றுக்கொள்ளுங்கள்!
4. கடவுளுக்குச் சேவை செய்வதற்கான அழைப்பை இளம் பிள்ளைகள் எப்போது ஏற்றுக்கொள்ளலாம்?
4 “நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை” என்று பிரசங்கி 12:1 சொல்கிறது. யெகோவாவுக்குச் சேவை செய்வதற்கான இந்த அழைப்பை ஏற்றுக்கொள்ள இளம் பிள்ளைகளாகிய உங்களுக்கு ஏதாவது வயதுவரம்பு இருக்கிறதா? அப்படி இருப்பதாக பைபிள் சொல்வதில்லை. எனவே, யெகோவாவுக்குச் செவிகொடுப்பதற்கும் அவருக்குச் சேவை செய்வதற்கும் ‘எனக்கு வயசு போதாது’ என நீங்களாகவே நினைத்துக்கொண்டு, அவருக்குச் சேவை செய்யத் தயங்காதீர்கள். உங்கள் வயது எதுவானாலும் சரி, இந்த அழைப்பை உடனடியாக ஏற்றுக்கொள்ளும்படி உங்களை ஊக்குவிக்கிறோம்.
5. ஆன்மீக முன்னேற்றம் செய்ய அநேக பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கு எவ்வாறு உதவி செய்துவருகிறார்கள்?
5 ஆன்மீக முன்னேற்றம் செய்ய உங்களில் பலருக்கு உங்கள் அப்பாவோ அம்மாவோ அல்லது இருவருமோ உதவி செய்துவருகிறார்கள். இந்த விஷயத்தில் நீங்கள் தீமோத்தேயுவைப் போல் இருக்கிறீர்கள். அவருடைய அம்மா ஐனிக்கேயாளும் பாட்டி லோவிசாளும் பரிசுத்த எழுத்துக்களைச் சிசுப் பருவத்திலிருந்தே அவருக்குக் கற்றுக்கொடுத்தார்கள். (2 தீ. 3:14, 15) அதைப் போலவே, உங்கள் அப்பாவும் அம்மாவும் உங்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார்கள்; உங்களுடன் பைபிளைப் படிக்கிறார்கள், ஜெபம் செய்கிறார்கள், சபைக் கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் வெளி ஊழியத்திற்கும் உங்களை அழைத்துச் செல்கிறார்கள். சொல்லப்போனால், தெய்வீக வழிகளை உங்களுக்குக் கற்பிப்பது யெகோவா அவர்களுக்குக் கொடுத்திருக்கிற மிக முக்கியமான பொறுப்பாகும். உங்கள்மீது அவர்கள் காட்டுகிற அன்பையும் அக்கறையையும் நீங்கள் மதித்துணருகிறீர்களா?—நீதி. 23:22.
6. (அ) எப்படிப்பட்ட வணக்கமுறை யெகோவாவைப் பிரியப்படுத்தும் என சங்கீதம் 110:3 காட்டுகிறது? (ஆ) இப்போது நாம் எவற்றைச் சிந்திப்போம்?
6 இருந்தாலும் நீங்கள் வளர வளர தீமோத்தேயுவைப் போலவே, “நன்மையானதும் பிரியமானதும் பரிபூரணமானதுமான கடவுளுடைய சித்தம் என்னவென்பதை உங்களுக்கு நீங்களே நிச்சயப்படுத்திக்கொள்ள” வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார். (ரோ. 12:2) இப்படிச் செய்தீர்கள் என்றால், உங்களுடைய அப்பா அம்மா சொல்கிறார்கள் என்பதற்காக அல்ல, யெகோவாவின் சித்தத்தைச் செய்ய வேண்டுமென்று நீங்களாகவே ஆசைப்பட்டு சபைக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். யெகோவாவுக்கு நீங்கள் மனப்பூர்வமாகச் சேவை செய்தால், அவர் மிகவும் சந்தோஷப்படுவார். (சங். 110:3) அப்படியானால், அவருடைய அறிவுரைகளைச் செவிகொடுத்துக் கேட்டு அவற்றைக் கடைப்பிடிப்பதற்கான ஆசையை அதிகரிக்கிறீர்கள் என்பதை நீங்கள் எவ்வழிகளில் வெளிக்காட்டலாம்? மூன்று முக்கிய வழிகளை, அதாவது படிப்பு, ஜெபம், நன்னடத்தை ஆகியவற்றை இப்போது ஒவ்வொன்றாகச் சிந்திப்போம்.
யெகோவாவை ஒரு நபராக அறிந்துகொள்ளுங்கள்
7. கடவுளுடைய வார்த்தையை வாசிப்பதில் இயேசு எவ்வாறு முன்மாதிரி வைத்தார், அவருக்கு எப்படி உதவி கிடைத்தது?
7 யெகோவாவுக்குச் சேவை செய்வதற்கான ஆசையை அதிகரிக்க முதல் வழி, தினமும் பைபிளை வாசிப்பதாகும். தவறாமல் பைபிளை வாசிப்பதன் மூலம் உங்களுடைய ஆன்மீகப் பசியைத் திருப்தி செய்துகொள்ள முடியும், அருமையான விஷயங்களை அறிந்துகொள்ள முடியும். (மத். 5:3) இந்த விஷயத்தில் இயேசு உங்களுக்குத் தலைசிறந்த முன்மாதிரியாக இருக்கிறார். 12 வயதாக இருந்தபோது, ஆலயத்தில் “போதகர்கள் நடுவில் உட்கார்ந்து, அவர்கள் சொல்வதைக் கவனித்துக்கொண்டும் அவர்களிடம் கேள்வி கேட்டுக்கொண்டும் இருந்தார்.” (லூக். 2:44-46) சிறுபிள்ளையாக இருந்தபோதே கடவுளுடைய வார்த்தையை ஆசை ஆசையாக வாசித்து வந்திருந்தார், அதைப் பற்றி நன்கு அறிந்திருந்தார். அதற்கெல்லாம் அவருக்கு எப்படி உதவி கிடைத்தது? அவருடைய தாய் மரியாளும், வளர்ப்புத் தந்தை யோசேப்பும்தான் அவருக்கு முக்கியமாக உதவினார்கள். யெகோவாவின் வணக்கத்தாரான அவர்கள், கடவுளைப் பற்றி இயேசுவுக்குச் சிசுப் பருவத்திலிருந்தே கற்றுக்கொடுத்தார்கள்.—மத். 1:18-20; லூக். 2:41, 51.
8. (அ) கடவுளுடைய வார்த்தையை நேசிக்கப் பிள்ளைகளுக்குப் பெற்றோர் எப்போதிருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும்? (ஆ) சிசுப் பருவத்திலிருந்தே பிள்ளைகளுக்குப் பயிற்சியளிப்பது மிக முக்கியம் என்பதைக் காட்டுகிற ஓர் அனுபவத்தைச் சொல்லுங்கள்.
8 அவர்களைப் போலவே, இன்றைய தேவபக்தியுள்ள பெற்றோரும்கூட, சிசுப் பருவத்திலிருந்தே பிள்ளைகளுக்கு பைபிள் சத்தியங்களின் மீது ஆர்வத்தை ஊட்டிவளர்ப்பது மிக முக்கியம் என்பதை அறிந்திருக்கிறார்கள். (உபா. 6:6-9) ரூபி என்ற சகோதரி அவருடைய முதல் மகன் ஜோசப் பிறந்தபோது அதைத்தான் செய்தார். என்னுடைய பைபிள் கதை புத்தகத்திலிருந்து தினமும் அவனுக்கு வாசித்துக் காட்டினார். அவன் கொஞ்சம் பெரியவனானபோது, நிறைய பைபிள் வசனங்களை மனப்பாடம் செய்ய வைத்தார். இந்தப் பயிற்சியிலிருந்து ஜோசப் பயனடைந்தானா? பேசக் கற்றுக்கொண்டவுடன், நிறைய பைபிள் கதைகளைத் தன் சொந்த வார்த்தையிலேயே சொல்லத் தொடங்கினான். ஐந்து வயதிலேயே தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் தனது முதல் பேச்சைக் கொடுத்தான்.
9. பைபிளை வாசிப்பதும், தியானிப்பதும் ஏன் முக்கியம்?
9 இளம் பிள்ளைகளே, நீங்கள் ஆன்மீக ரீதியில் அதிக முன்னேற்றம் செய்ய வேண்டுமானால், தினமும் பைபிள் வாசிப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள். அப்போதுதான், பருவ வயதை எட்டிய பின்பும், பெரியவர்களான பின்பும் இந்தப் பழக்கத்தை விட்டுவிட மாட்டீர்கள். (சங். 71:17) பைபிளை வாசிப்பது ஆன்மீக முன்னேற்றம் செய்ய உங்களுக்கு எவ்வாறு உதவும்? இயேசு தம்முடைய தகப்பனிடம் ஜெபம் செய்தபோது என்ன சொன்னார் தெரியுமா? ‘ஒரே உண்மையான கடவுளாகிய உங்களை அறிந்துகொண்டே இருந்தால் அவர்களுக்கு முடிவில்லா வாழ்வு கிடைக்கும்’ என்று சொன்னார். (யோவா. 17:3) ஆம், யெகோவாவைப் பற்றி நீங்கள் எந்தளவுக்கு அறிந்துகொள்கிறீர்களோ அந்தளவுக்கு அவர் உங்களுக்கு ஒரு நிஜமான நபராகத் தெரிவார்; அவர்மீது நீங்கள் வைத்திருக்கிற அன்பும் ஆழமாகும். (எபி. 11:27) எனவே, பைபிளை வாசிக்கும்போதெல்லாம், யெகோவாவைப் பற்றி இன்னும் அதிகமாகக் கற்றுக்கொள்ள முயலுங்கள். ஒரு பகுதியை வாசித்த பிறகு, உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இந்த வசனங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன தெரிந்துகொண்டேன்? யெகோவா என்மீது அன்பும் அக்கறையும் வைத்திருக்கிறார் என்பதை இந்த வசனங்கள் எப்படிக் காட்டுகின்றன?’ இதுபோன்ற கேள்விகளைத் தியானிக்கும்போது, யெகோவா எப்படிச் சிந்திக்கிறார், எப்படி உணருகிறார், உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதையெல்லாம் புரிந்துகொள்வீர்கள். (நீதிமொழிகள் 2:1-5-ஐ வாசியுங்கள்.) அதோடு, இளம் தீமோத்தேயுவைப் போல், வேதவசனங்களிலிருந்து “பக்குவமாக எடுத்துச்சொல்லப்பட்ட விஷயங்களை” கற்றுக்கொண்டு, யெகோவாவை மனப்பூர்வமாகச் சேவிக்கத் தூண்டப்படுவீர்கள்.—2 தீ. 3:14.
ஜெபம்—யெகோவா மீதுள்ள அன்பை ஆழமாக்கும்
10, 11. யெகோவாவுக்குச் சேவை செய்வதற்கான உங்களுடைய ஆசையை அதிகரிக்க ஜெபம் எப்படி உதவும்?
10 யெகோவாவுக்கு மனப்பூர்வமாகச் சேவை செய்வதற்கான உங்கள் ஆசையை அதிகரிக்க இரண்டாவது வழி, ஜெபம் செய்வதாகும். “ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்” என்று சங்கீதம் 65:2-ல் நாம் வாசிக்கிறோம். இஸ்ரவேலர் கடவுளுடைய சொந்த மக்களாக இருந்த சமயத்தில், அவருடைய ஆலயத்திற்கு வந்த அந்நிய தேசத்தாரும்கூட அவரிடம் ஜெபம் செய்ய முடிந்தது. (1 இரா. 8:41, 42) கடவுள் பாரபட்சம் காட்டுவதில்லை. அவரது கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர்களுடைய ஜெபங்களுக்கு அவர் நிச்சயம் செவிகொடுப்பார். (நீதி. 15:8) “மாம்சமான யாவரும்” என்று சொல்லும்போது, இளம் பிள்ளைகளாகிய நீங்களும் உட்பட்டிருக்கிறீர்கள்.
11 நல்ல பேச்சுத்தொடர்பே உண்மையான நட்புக்கு அடிப்படை என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள். உங்கள் எண்ணங்களையும் கவலைகளையும் உணர்ச்சிகளையும் உங்களுடைய நெருங்கிய நண்பரிடம் தெரிவிப்பீர்கள். அதுபோலவே, இருதயப்பூர்வமாக ஜெபம் செய்வதன் மூலம், மகத்தான படைப்பாளரிடம் நீங்கள் பேச்சுத்தொடர்பு கொள்கிறீர்கள். (பிலி. 4:6, 7) அன்புள்ள பெற்றோரிடமோ நெருங்கிய நண்பரிடமோ உங்களுடைய இருதயத்தில் உள்ளவற்றைக் கொட்டிவிடுவதுபோல் யெகோவாவிடம் கொட்டிவிடுங்கள். சொல்லப்போனால், ஜெபத்தில் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதற்கும் யெகோவாவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதற்கும் இடையே நேரடியான தொடர்பு இருக்கிறது. யெகோவாவுடன் உங்களுக்குள்ள நட்பு எந்தளவு ஆழமாகிறதோ அந்தளவு உங்கள் ஜெபங்களும் அர்த்தமுள்ளவையாகும்.
12. (அ) நாம் பயன்படுத்துகிற வார்த்தைகளை வைத்து மட்டுமே நம்முடைய ஜெபம் அர்த்தமுள்ளதாக இருக்கிறது என்று ஏன் சொல்லிவிட முடியாது? (ஆ) யெகோவா உங்களுக்குச் சமீபமாயிருக்கிறார் என்பதை எப்போது புரிந்துகொள்வீர்கள்?
12 என்றாலும், ஜெபத்தில் நாம் பயன்படுத்துகிற வார்த்தைகளை வைத்து மட்டுமே நம்முடைய ஜெபம் அர்த்தமுள்ளதாக இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. அவற்றோடுகூட உள்ளப்பூர்வமான உணர்ச்சிகளும் கலந்திருக்க வேண்டும். ஜெபம் செய்யும்போது, யெகோவாவிடம் உங்களுடைய கனிவான அன்பையும் முழு நம்பிக்கையையும் தெரிவியுங்கள், ஆழ்ந்த மரியாதையோடு பேசுங்கள். உங்களுடைய ஜெபங்களுக்கு யெகோவா எப்படிப் பதிலளிக்கிறார் என்பதை நீங்கள் அனுபவத்தில் காணும்போது, ‘தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், அவர் சமீபமாயிருக்கிறார்’ என்பதை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்வீர்கள். (சங். 145:18) யெகோவா உங்களிடம் நெருங்கி வருவார்; பிசாசை எதிர்த்து நிற்கவும், வாழ்க்கையில் சரியான தீர்மானங்கள் எடுக்கவும் உங்களைப் பலப்படுத்துவார்.—யாக்கோபு 4:7, 8-ஐ வாசியுங்கள்.
13. (அ) கடவுளோடு வைத்திருந்த பந்தம் ஒரு சகோதரிக்கு எப்படி உதவியது? (ஆ) கடவுளோடு உள்ள பந்தம் சக மாணவர்களின் வற்புறுத்தலைச் சமாளிக்க உங்களுக்கு எப்படி உதவும்?
13 ஷெர்ரி என்ற சகோதரி, யெகோவாவிடம் நெருங்கிய பந்தத்தை வைத்திருந்ததால் எவ்வாறு பலம் பெற்றாள் என்பதைக் கவனியுங்கள். உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது, படிப்பிலும் விளையாட்டிலும் கெட்டிக்காரியாகத் திகழ்ந்தாள், அதற்காகப் பல பரிசுகளையும் பெற்றாள். பள்ளிப் படிப்பை முடித்தபின், மேல்படிப்புக்காக உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்) பெற அவளுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதைக் குறித்து அவள் என்ன சொல்கிறாள்? “அதை வேண்டாமெனச் சொல்ல எனக்குக் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது; பயிற்சியாளர்களும் சக மாணவர்களும் அதை ஏற்றுக்கொள்ளும்படி என்னை ரொம்பவே வற்புறுத்தினார்கள்” என்று சொல்கிறாள். ஒருவேளை மேல்படிப்பைத் தொடர்ந்தால், படிப்புக்காகவும் போட்டி விளையாட்டுகளுக்காகப் பயிற்சி பெறுவதற்காகவும் எக்கச்சக்கமான நேரத்தைச் செலவிட வேண்டியிருக்கும் என்றும், யெகோவாவுக்குச் சேவை செய்ய நேரமே கிடைக்காமல் போய்விடும் என்றும் உணர்ந்தாள். அவள் என்ன தீர்மானம் செய்தாள்? “யெகோவாவிடம் ஜெபம் செய்த பிறகு, ஸ்காலர்ஷிப்பை ‘வேண்டாம்’ எனச் சொல்லிவிட்டேன், ஒழுங்கான பயனியராகச் சேவை செய்யத் தொடங்கினேன்” என்று அவள் சொல்கிறாள். கடந்த ஐந்து வருடங்களாகத் தொடர்ந்து பயனியர் சேவை செய்துவருகிறாள். “ஸ்காலர்ஷிப்பை நிராகரித்ததை நினைத்து எனக்குத் துளிகூட வருத்தமில்லை. யெகோவாவுக்குப் பிரியமாகத் தீர்மானம் எடுத்ததை நினைத்துச் சந்தோஷப்படுகிறேன். ஆம், கடவுளுடைய அரசாங்கத்திற்கு முதலிடம் கொடுத்தால் நமக்குத் தேவையான எல்லாவற்றையும் அவர் கொடுப்பார்” என்று மேலுமாக அவள் சொல்கிறாள்.—மத். 6:33.
‘இருதயத்தில் மாசில்லாதவராயிருப்பதை’ உங்கள் நன்னடத்தை காட்டுகிறது
14. உங்களுடைய நன்னடத்தை யெகோவாவின் பார்வையில் ஏன் முக்கியமானதாக இருக்கிறது?
14 யெகோவாவுக்கு மனப்பூர்வமாகச் சேவை செய்வதற்கான உங்கள் ஆசையை அதிகரிக்க மூன்றாவது வழி, நன்னடத்தையைக் காத்துக்கொள்வதாகும். ஒழுக்க ரீதியில் சுத்தமாக இருக்கும் இளைஞர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார். (சங்கீதம் 24:3-5-ஐ வாசியுங்கள்.) தலைமைக் குருவான ஏலியின் மகன்களுடைய ஒழுக்கங்கெட்ட நடத்தையை இளம் சாமுவேல் பின்பற்றவில்லை. மாறாக, ‘சாமுவேல் பெரியவனாக வளர்ந்து, யெகோவாவுக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடந்துகொண்டான்’ என்று பைபிள் சொல்கிறது. ஆம், சாமுவேலின் நன்னடத்தையை யெகோவாவும் கவனித்தார், மற்றவர்களும் கவனித்தார்கள்.—1 சா. 2:26.
15. நீங்கள் நன்னடத்தையைக் காத்துக்கொள்வதற்கான சில காரணங்கள் யாவை?
15 பவுல் சொன்னபடி, இந்த உலகத்திலுள்ள மக்கள் சுயநலக்காரர்களாக, கர்வமுள்ளவர்களாக, பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்களாக, நன்றிகெட்டவர்களாக, நம்பிக்கை துரோகிகளாக, கொடூரமானவர்களாக, தலைக்கனம் பிடித்தவர்களாக, கடவுளை நேசிக்காமல் சுகபோகங்களை நேசிக்கிறவர்களாக இருக்கிறார்கள். (2 தீ. 3:1-5) இத்தகைய கொடிய உலகில் நன்னடத்தையைக் காத்துக்கொள்வது உங்களுக்குச் சவாலாக இருக்கலாம். என்றாலும், கெட்ட நடத்தையில் ஈடுபட மறுத்து சரியானதைச் செய்யும்போதெல்லாம், சர்வலோகப் பேரரசாட்சி சம்பந்தப்பட்ட விவாதத்தில் நீங்கள் யெகோவாவின் பக்கம் இருப்பதைக் காட்டுகிறீர்கள். (யோபு 2:3, 4) “என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவு கொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து” என்று யெகோவா விடுத்த கனிவான அழைப்பிற்குக் கீழ்ப்படிந்திருப்பதை நினைத்துத் திருப்தியோடு இருக்கிறீர்கள். (நீதி. 27:11) உங்களுக்கு யெகோவாவின் அங்கீகாரம் இருக்கிறது என்பதை நினைக்க நினைக்க அவருக்குச் சேவை செய்வதற்கான ஆசையும் அதிகரிக்கும்.
16. ஒரு சகோதரி எவ்வாறு யெகோவாவின் இருதயத்தைச் சந்தோஷப்படுத்தினாள்?
16 கரோல் என்ற சகோதரியின் அனுபவத்தைக் கவனியுங்கள். அவள் தன் பருவ வயதிலே பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது பைபிள் நியமங்களை உறுதியாகக் கடைப்பிடித்தாள்; அவளுடைய நன்னடத்தையை மற்றவர்கள் கவனித்தார்கள். பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியின் காரணமாக, பண்டிகைகளிலும் தேசிய நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள அவள் மறுத்தபோது, சக மாணவர்கள் அவளைக் கேலி செய்தார்கள். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி, சிலசமயம் அவள் தன்னுடைய நம்பிக்கைகள் குறித்துச் சாட்சி கொடுத்தாள். அவளுடன் படித்த மாணவி பல வருடங்கள் கழித்து ஒரு கடிதம் எழுதியிருந்தாள். “எப்படியாவது உன்னைத் தொடர்புகொள்ள வேண்டும், உனக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டேன். உன்னுடைய நல்ல நடத்தையையும், ஒரு கிறிஸ்தவப் பெண்ணாக நீ வைத்த முன்மாதிரியையும், கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளாமலிருக்க நீ காட்டிய தைரியத்தையும் நான் கவனித்தேன். நான் சந்தித்த முதல் யெகோவாவின் சாட்சி நீதான்” என்று அந்த மாணவி எழுதியிருந்தாள். அதோடு, 40 வருடங்களுக்கும் மேலாக தான் ஒரு யெகோவாவின் சாட்சியாய் இருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாள். கரோல் வைத்த முன்மாதிரியால்தான், அவள் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்திருந்தாள். இளம் பிள்ளைகளாகிய நீங்களும் கரோலைப் போல, பைபிள் நியமங்களைத் தைரியமாகப் பின்பற்றினீர்கள் என்றால், நல்மனமுள்ளவர்கள் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ள நிச்சயம் தூண்டப்படுவார்கள்.
யெகோவாவுக்குப் புகழ்சேர்க்கும் பிள்ளைகள்
17, 18. (அ) உங்கள் சபையிலுள்ள இளம் பிள்ளைகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? (ஆ) தேவ பயமுள்ள பிள்ளைகளுக்கு எப்படிப்பட்ட எதிர்காலம் காத்திருக்கிறது?
17 பக்திவைராக்கியமுள்ள பல்லாயிரக்கணக்கான இளம் பிள்ளைகள் உண்மை வணக்கத்தில் ஈடுபடுவதைக் கண்டு உலகெங்கும் உள்ள யெகோவாவின் மக்களாகிய நாம் சந்தோஷத்தில் திளைக்கிறோம்! இந்தப் பிள்ளைகள் தினமும் பைபிளை வாசிப்பதன் மூலமும், ஜெபம் செய்வதன் மூலமும், நன்னடத்தையைக் காத்துக்கொள்வதன் மூலமும் யெகோவாவை வணங்குவதற்கான தங்கள் ஆசையை அதிகரித்து வருகிறார்கள். தங்களுடைய பெற்றோருக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்குமே இவர்கள் உற்சாக ஊற்றாய்த் திகழ்கிறார்கள்.—நீதி. 23:24, 25.
18 கடவுள் வாக்குறுதி அளித்திருக்கிற புதிய உலகிற்குள் தப்பிப்பிழைக்கிறவர்களில் உண்மையுள்ள இந்தப் பிள்ளைகளும் இருப்பார்கள். (வெளி. 7:9, 14) யெகோவா மீதுள்ள நன்றியுணர்வில் பெருகப் பெருக அளவில்லா ஆசீர்வாதங்களை அனுபவிப்பார்கள்; என்றென்றும் அவருக்குப் புகழ்சேர்ப்பார்கள்.—சங். 148:12, 13.
விளக்க முடியுமா?
• இளம் பிள்ளைகள் இன்று உண்மை வணக்கத்தில் எப்படி ஈடுபடலாம்?
• பைபிள் வாசிப்பிலிருந்து பயனடைய நீங்கள் ஏன் தியானிக்க வேண்டும்?
• யெகோவாவிடம் நெருங்கி வர ஜெபம் உங்களுக்கு எப்படி உதவும்?
• கிறிஸ்தவர்கள் நன்னடத்தையைக் காத்துக்கொள்வதால் கிடைக்கும் பலன்கள் யாவை?
[பக்கம் 5-ன் படம்]
தினமும் பைபிளை வாசிக்கிற பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா?