யெகோவாவின் நோக்கத்தை நிறைவேற்றுவதில் அவரது சக்தியின் பங்கு
‘என் வாயிலிருந்து புறப்படுகிற வார்த்தை நான் விரும்புகிறதை வெற்றிகரமாக நிறைவேற்றும்.’ —ஏசா. 55:11, NW.
1. திட்டத்திற்கும் நோக்கத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை உதாரணத்துடன் விளக்குங்கள்.
இரண்டு நபர்களைக் கற்பனை செய்துகொள்ளுங்கள்; தங்களுடைய கார்களில் ஏதோவொரு இடத்திற்குப் போக அவர்கள் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர், தான் போக வேண்டிய இடத்திற்கான வழியை விவரமாக, திட்டவட்டமாக வரைந்து வைத்திருக்கிறார். மற்றொருவர், போக வேண்டிய இடத்தை நன்றாக அறிந்திருப்பது மட்டுமல்லாமல் மாற்று வழிகளையும் அறிந்திருக்கிறார். வேறு வழியில் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதற்கும் தயாராக இருக்கிறார். இந்த இரண்டு பேரும் பயன்படுத்துகிற முறைகள், திட்டத்திற்கும் நோக்கத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை ஒரு விதத்தில் படம்பிடித்துக் காட்டுகின்றன. திட்டம் என்பது, போக வேண்டிய வழியை விவரமாக வரைந்து வைப்பதற்கு ஒப்பாக இருக்கிறது; நோக்கம் என்பது, அடைய வேண்டிய இலக்கு மனதில் இருந்தாலும், அவசியம் ஏற்பட்டால் வேறு வழிகளில் அதை அடைவதற்கு ஒப்பாக இருக்கிறது.
2, 3. (அ) ஆரம்பத்தில் யெகோவாவுடைய நோக்கம் என்னவாக இருந்தது, ஆதாம் ஏவாள் பாவம் செய்தபோது அவர் என்ன நடவடிக்கை எடுத்தார்? (ஆ) யெகோவாவுடைய நோக்கத்தின் நிறைவேற்றத்தை நாம் ஏன் நன்கு புரிந்து, அதன்படி நடக்க வேண்டும்?
2 யெகோவா தம்முடைய சித்தத்தைச் செய்து முடிக்க மாறாத ஒரு திட்டத்தை வகுப்பதில்லை; ஆனால் படிப்படியாக நிறைவேறுகிற ஒரு நோக்கத்தைக் கொண்டிருக்கிறார். (எபே. 3:11) பூஞ்சோலை பூமியில் பரிபூரண மனிதர்கள் சமாதானத்தோடும் சந்தோஷத்தோடும் என்றென்றுமாக வாழ வேண்டும் என்பதே மனிதகுலத்தையும் பூமியையும் குறித்து ஆரம்பத்தில் அவருக்கிருந்த நோக்கம். (ஆதி. 1:28) ஆனால், ஆதாம் ஏவாள் பாவம் செய்தபோது, தேவையான நடவடிக்கைகளை எடுத்தார்; தம்முடைய நோக்கம் நிறைவேறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். (ஆதியாகமம் 3:15-ஐ வாசியுங்கள்.) ஓர் அடையாளப்பூர்வ பெண் ஒரு வித்துவை (சந்ததியை), அதாவது மகனை, பெற்றெடுப்பாள் என்றும், அந்த மகன் கலகக்காரனான சாத்தானை அழித்து, அவனால் உண்டான எல்லாத் தீமைகளையும் ஒழித்துவிடுவார் என்றும் யெகோவா தீர்மானித்தார்.—எபி. 2:14; 1 யோ. 3:8.
3 யெகோவாவின் அந்த நோக்கம் நிறைவேறுவதை, பரலோகத்திலோ பூமியிலோ உள்ள எந்தச் சக்தியினாலும் தடுத்து நிறுத்த முடியாது. (ஏசா. 46:9-11) ஏன்? ஏனென்றால், யெகோவாவின் சக்தி அதில் உட்பட்டிருக்கிறது. அவருடைய நோக்கம் ‘வெற்றிகரமாக நிறைவேறும்’ என்பதை வல்லமை வாய்ந்த அந்தச் சக்தி ஊர்ஜிதப்படுத்துகிறது. (ஏசா. 55:10, 11, NW) எனவே, அவருடைய நோக்கம் எவ்விதத்தில் நிறைவேறுகிறது என்பதை நாம் நன்றாகப் புரிந்துகொண்டு அதன்படி நடக்க வேண்டும். நம்முடைய எதிர்கால வாழ்வே அதன் நிறைவேற்றத்தில்தான் சார்ந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, யெகோவா தம்முடைய சக்தியை எவ்விதத்தில் பயன்படுத்துகிறார் என்பதைப் புரிந்துகொள்வது நம் விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது. அப்படியானால், அக்காலத்திலும் இக்காலத்திலும் எதிர்காலத்திலும் கடவுளுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதில் கடவுளுடைய சக்தி வகிக்கும் பங்கைப் பற்றி இப்போது சிந்திப்போம்.
அக்காலத்தில். . .
4. யெகோவா தம்முடைய நோக்கத்தை எப்படிப் படிப்படியாக வெளிப்படுத்தியிருக்கிறார்?
4 பூர்வ காலங்களில், யெகோவா தம்முடைய நோக்கத்தைப் படிப்படியாக வெளிப்படுத்தினார். வாக்குப்பண்ணப்பட்ட சந்ததி யாரென்பது ஆரம்பத்தில் ‘பரிசுத்த ரகசியமாக’ இருந்தது. (1 கொ. 2:7) சுமார் 2,000 ஆண்டுகளுக்குப் பின்பு, யெகோவா அந்தச் சந்ததியைப் பற்றி மறுபடியும் குறிப்பிட்டார். (ஆதியாகமம் 12:7; 22:15-18-ஐ வாசியுங்கள்.) ஆபிரகாமுக்கு அளித்த வாக்குறுதியில் அந்தச் சந்ததியைப் பற்றிக் கூடுதலான தகவல்களைக் கொடுத்தார். “உன் சந்ததிக்குள்” என்ற வார்த்தைகள், அந்தச் சந்ததி ஒரு மனிதனாகப் பிறப்பார், ஆபிரகாமின் வம்சத்தில் வருவார் என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டின. இந்த விவரத்தை யெகோவா வெளிப்படுத்தியபோது, சாத்தான் மிக ஆர்வமாகக் கவனித்திருப்பான் என்பதில் சந்தேகமில்லை. ஆபிரகாமின் வம்சத்தையே அழித்து அல்லது கெடுத்து, கடவுளுடைய நோக்கம் நிறைவேறாதபடி தடுப்பதில் அவன் குறியாய் இருந்தான். ஆனால், அவனுடைய எண்ணம் கைகூடவில்லை; ஏனென்றால், கடவுளுடைய காணக்கூடாத சக்தி செயல்பட்டுவந்தது. எவ்வழிகளில்?
5, 6. வாக்குப்பண்ணப்பட்ட சந்ததி வரவிருந்த ஆபிரகாமின் வம்சாவளியைச் சேர்ந்த தனிநபர்களைப் பாதுகாக்க யெகோவா தம்முடைய சக்தியை எப்படிப் பயன்படுத்தினார்?
5 வாக்குப்பண்ணப்பட்ட சந்ததி வரவிருந்த வம்சாவளியைச் சேர்ந்த தனிநபர்களைப் பாதுகாக்க யெகோவா தம்முடைய சக்தியைப் பயன்படுத்தினார். ‘நான் உனக்குக் கேடயம்’ என்று ஆபிராமிடம் (ஆபிரகாமிடம்) யெகோவா சொன்னார். (ஆதி. 15:1) இவை வெற்று வார்த்தைகளாக இருக்கவில்லை. உதாரணத்திற்கு, கி.மு. 1919-ல் ஆபிரகாமும் சாராளும் கேராரில் கொஞ்சக்காலம் குடியிருந்தபோது என்ன நடந்ததெனக் கவனியுங்கள். சாராள் ஆபிரகாமின் மனைவி என்பதை அறியாத கேராரின் ராஜாவான அபிமெலேக்கு, அவளைத் தன் மனைவியாக்கிக்கொள்ள நினைத்தான். ஆபிரகாமின் சந்ததி சாராளிடமிருந்து தோன்றாமல் இருப்பதற்காகச் சாத்தான் செய்த சூழ்ச்சியாக இது இருந்திருக்குமோ? பைபிள் நமக்குச் சொல்வதில்லை. ஆனால், இந்தச் சூழ்நிலையில் யெகோவா தலையிட்டார் என்று மட்டுமே சொல்கிறது. சாராளைத் தொடக் கூடாதென்று கனவில் அபிமெலேக்கை அவர் எச்சரித்தார்.—ஆதி. 20:1-18.
6 இதேபோல் யெகோவா பல சந்தர்ப்பங்களில் தலையிட்டார். ஆபிரகாமையும் அவருடைய வீட்டாரையும் அநேக தடவை காப்பாற்றினார். (ஆதி. 12:14-20; 14:13-20; 26:26-29) அதனால்தான் ஆபிரகாமையும் அவருடைய வம்சத்தாரையும் பற்றி சங்கீதக்காரன் இவ்வாறு சொன்னார்: “[யெகோவா] அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், அவர்கள் நிமித்தம் ராஜாக்களைக் கடிந்துகொண்டு, ‘நான் அபிஷேகம் பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள்’ என்றார்.”—சங். 105:14, 15.
7. இஸ்ரவேல் தேசத்தை யெகோவா எவ்விதங்களில் பாதுகாத்தார்?
7 வாக்குப்பண்ணப்பட்ட சந்ததி பிறக்கவிருந்த பூர்வ இஸ்ரவேல் தேசத்தைப் பாதுகாக்க யெகோவா தம்முடைய சக்தியைப் பயன்படுத்தினார். தம்முடைய சக்தியின் மூலம் இஸ்ரவேலருக்குத் திருச்சட்டத்தைத் தந்தார்; அந்தத் திருச்சட்டம், உண்மை வணக்கத்தைப் பாதுகாத்ததோடு, யூதர்களை ஆன்மீக ரீதியிலும் ஒழுக்க ரீதியிலும் உடல் ரீதியிலும் பாதுகாத்தது. (யாத். 31:18; 2 கொ. 3:3) நியாயாதிபதிகளின் காலத்தில், இஸ்ரவேல் தேசத்தை எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவதற்காக யெகோவா சில ஆட்களுக்குத் தம்முடைய சக்தியைக் கொடுத்து பலப்படுத்தினார். (நியா. 3:9, 10) ஆபிரகாமுடைய சந்ததியின் முக்கியப் பாகமாக இருக்கிற இயேசு பிறக்கும் காலம்வரை, பல நூற்றாண்டுகள்வரை, எருசலேமையும் பெத்லகேமையும் ஆலயத்தையும் பாதுகாப்பதில் கடவுளுடைய சக்தி நிச்சயம் பங்கு வகித்திருக்கும்; ஏனென்றால், இயேசுவைப் பற்றிய தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தில் அவை பெரும் பங்கு வகிக்கவிருந்தன.
8. இயேசுவின் வாழ்க்கையிலும் ஊழியத்திலும் கடவுளுடைய சக்தி நேரடியாகச் சம்பந்தப்பட்டிருந்ததை எதெல்லாம் காட்டுகிறது?
8 கடவுளுடைய சக்தி, இயேசுவின் வாழ்க்கையிலும் ஊழியத்திலும் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருந்தது. பாவத்தினால் வந்த மரணத்தைச் சந்திக்க வேண்டியிராத பரிபூரண குழந்தையை அபூரணப் பெண்ணாகிய கன்னி மரியாள் கருத்தரிக்கவும் பெற்றெடுக்கவும் கடவுளுடைய சக்தி உதவியது; இப்படியொரு அற்புதத்தைக் கடவுளுடைய சக்தி அதுவரை செய்ததில்லை, அதன் பின்பும் செய்ததில்லை. (லூக். 1:26-31, 34, 35) பிற்பாடு, குழந்தை இயேசுவின் உயிரை அந்தச் சக்தியே பாதுகாத்தது. (மத். 2:7, 8, 12, 13) இயேசுவுக்குச் சுமார் 30 வயதானபோது, அவர்மீது கடவுள் தம்முடைய சக்தியைப் பொழிந்து, தாவீதின் சிம்மாசனத்தில் அமரும் ராஜாவாய் அவரை நியமித்தார், பிரசங்க வேலை செய்கிற பொறுப்பையும் கொடுத்தார். (லூக். 1:32, 33; 4:16-21) நோயாளிகளைக் குணமாக்குவது, திரளான மக்களுக்கு உணவளிப்பது, இறந்தோரை உயிர்த்தெழுப்புவது போன்ற அநேக அற்புதங்களைச் செய்ய கடவுளுடைய சக்தி இயேசுவைப் பலப்படுத்தியது. அவருடைய ஆட்சியில் என்னென்ன ஆசீர்வாதங்களை அனுபவிப்போம் என்பதற்கு அந்த அற்புதங்கள் முன்நிழலாக இருந்தன.
9, 10. (அ) இயேசுவின் முதல் நூற்றாண்டு சீடர்கள்மீது கடவுளுடைய சக்தி எவ்வாறு செயல்பட்டது? (ஆ) யெகோவாவின் நோக்கம் நிறைவேறுவது சம்பந்தமாக, முதல் நூற்றாண்டில் என்ன புதிய மாற்றம் நிகழ்ந்தது?
9 ஆபிரகாமுடைய சந்ததியின் இரண்டாம் பாகமானவர்களைப் பரலோக வாழ்க்கைக்குத் தேர்ந்தெடுப்பதற்காக யெகோவா தம்முடைய சக்தியை கி.பி. 33-ஆம் ஆண்டு பெந்தெகொஸ்தே தினத்திலிருந்து பயன்படுத்த ஆரம்பித்தார்; அவர்களில் அநேகர் ஆபிரகாமின் வம்சத்தில் தோன்றாதவர்கள். (ரோ. 8:15-17; கலா. 3:29) இயேசுவின் முதல் நூற்றாண்டு சீடர்கள்மீது கடவுளுடைய சக்தி செயல்பட்டது; பக்திவைராக்கியத்துடன் பிரசங்கிப்பதற்கும், வல்லமைமிக்க செயல்களைச் செய்வதற்கும் அது அவர்களைப் பலப்படுத்தியது. (அப். 1:8; 2:1-4; 1 கொ. 12:7-11) கடவுளுடைய சக்தி அவர்களுக்கு அற்புத வரங்களை அருளியது எதைச் சுட்டிக்காட்டியது? யெகோவாவின் நோக்கம் நிறைவேறுவதில் குறிப்பிடத்தக்க ஒரு மாற்றம் நிகழவிருந்ததைச் சுட்டிக்காட்டியது. ஆம், பல்லாண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட வணக்கமுறையை, அதாவது எருசலேம் ஆலயத்தை மையமாகக் கொண்ட வணக்கமுறையை, யெகோவா நிராகரித்துவிட்டார் என்பதைச் சுட்டிக்காட்டியது. புதிதாக உருவாக்கப்பட்ட கிறிஸ்தவ சபை அவருடைய அங்கீகாரத்தைப் பெற்றது என்பதையும் சுட்டிக்காட்டியது. அதுமுதல் தமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, பரலோக நம்பிக்கையுள்ளோர் அடங்கிய அந்தச் சபையையே அவர் பயன்படுத்திவருகிறார்.
10 பாதுகாத்தல், பலப்படுத்துதல், பரலோக வாழ்க்கைக்குத் தேர்ந்தெடுத்தல்—தம்முடைய நோக்கம் நிறைவேறும் என்பதை உறுதிப்படுத்துவதற்காக, யெகோவா தம்முடைய சக்தியை அக்காலத்தில் பயன்படுத்திய சில வழிகள் இவையே. நம்முடைய நாளைப் பற்றி என்ன சொல்லலாம்? தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக இக்காலத்தில் யெகோவா தமது சக்தியை எப்படிப் பயன்படுத்திவருகிறார்? இதற்கான பதிலை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்; ஏனென்றால், அந்தச் சக்தியின் வழிநடத்துதலுக்கு இசைவாகச் செயல்படவே நாம் விரும்புகிறோம். ஆகையால், யெகோவா இன்று தம்முடைய சக்தியைப் பயன்படுத்துகிற நான்கு வழிகளைப் பற்றிச் சிந்திப்போம்.
இக்காலத்தில். . .
11. கடவுளுடைய மக்கள் சுத்தமானவர்களாய் இருப்பதற்கு அவருடைய சக்தி உதவுகிறது என்பதை எது காட்டுகிறது, கடவுளுடைய சக்தியோடு ஒத்துழைக்கிறீர்கள் என்பதை நீங்கள் எவ்வாறு காட்டலாம்?
11 முதலாவதாக, கடவுளுடைய மக்கள் சுத்தமானவர்களாய் இருப்பதற்கு அவருடைய சக்தி உதவுகிறது. அவருடைய நோக்கத்தின்படி வாழ்கிறவர்கள் ஒழுக்க ரீதியில் சுத்தமானவர்களாக இருக்க வேண்டும். (1 கொரிந்தியர் 6:9-11-ஐ வாசியுங்கள்.) உண்மைக் கிறிஸ்தவர்களாய் ஆவதற்குமுன் சிலர் மோசமான பாவங்களில் ஈடுபட்டிருந்தார்கள்; உதாரணத்திற்கு, பாலியல் முறைகேட்டிலும், ஓரினச்சேர்க்கையிலும் ஈடுபட்டிருந்தார்கள், மணத்துணைக்குத் துரோகம் செய்திருந்தார்கள். இப்படிப்பட்ட பாவச் செயல்களில் ஈடுபடுவதற்கான ஆசைகள் ஒருவரது உள்ளத்தில் ஆழமாக வேரூன்றி இருக்கும். (யாக். 1:14, 15) என்றாலும், மோசமான பாவங்களில் ஈடுபட்டிருந்தவர்கள் ‘கழுவப்பட்டார்கள்.’ அதாவது, கடவுளுக்குப் பிரியமான விதத்தில் தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொண்டார்கள். கடவுளை நேசிக்கிறவர்களுடைய மனதில் எழுகிற தவறான ஆசைகளை வேரோடு அகற்ற எது உதவும்? “கடவுளுடைய சக்தி” உதவுமென 1 கொரிந்தியர் 6:11 சொல்கிறது. எனவே, ஒழுக்க ரீதியில் சுத்தமானவர்களாக இருப்பதன் மூலம், உங்கள் வாழ்க்கையில் கடவுளுடைய சக்தி பலமாகச் செயல்பட அனுமதிக்கிறீர்கள்.
12. (அ) எசேக்கியேல் கண்ட தரிசனத்தின்படி, யெகோவா தம்முடைய அமைப்பை எவ்வாறு வழிநடத்துகிறார்? (ஆ) கடவுளுடைய சக்தியோடு சேர்ந்து செயல்படுவதை நீங்கள் எவ்வாறு காட்டலாம்?
12 இரண்டாவதாக, யெகோவா தம்முடைய அமைப்பைத் தாம் விரும்புகிற விதத்தில் வழிநடத்த தமது சக்தியைப் பயன்படுத்துகிறார். எசேக்கியேல் கண்ட ஒரு தரிசனத்தில், யெகோவாவுடைய பரலோக அமைப்பு பரம ரதம்போல் சித்தரிக்கப்படுகிறது; யெகோவாவின் நோக்கத்தை நிறைவேற்ற நிகரற்ற வல்லமையுடன் அது சென்றுகொண்டிருக்கிறது. குறிப்பிட்ட திசையில் செல்வதற்கு எது அந்த ரதத்தை உந்துவிக்கிறது? கடவுளுடைய சக்தியே. (எசே. 1:20, 21) யெகோவாவுக்குப் பரலோகத்திற்குரிய அமைப்பு மட்டுமல்ல, பூமிக்குரிய அமைப்பும் இருக்கிறது என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். கடவுளுடைய சக்தி பரலோக அமைப்பை வழிநடத்துகிறது என்றால், அது பூமிக்குரிய அமைப்பையும் வழிநடத்துகிறது என்பதில் சந்தேகமே இல்லை. கடவுளுடைய பூமிக்குரிய அமைப்பிலிருந்து வருகிற வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிவதன் மூலமும், அதற்குப் பற்றுமாறாமல் இருப்பதன் மூலமும் யெகோவாவுடைய பரம ரதத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து வருவதை நீங்கள் காட்டுகிறீர்கள், அவருடைய சக்தியோடு சேர்ந்து செயல்படுவதையும் காட்டுகிறீர்கள்.—எபி. 13:17.
13, 14. (அ) இயேசு குறிப்பிட்டிருந்த “இந்தத் தலைமுறை” என்ற சொற்றொடரை நாம் இப்போது எப்படிப் புரிந்துகொள்கிறோம்? (ஆ) பைபிள் சத்தியங்களை வெளிப்படுத்துவதில் கடவுளுடைய சக்தி எவ்வாறு உதவுகிறது என்பதைக் காட்டுகிற ஓர் உதாரணத்தைச் சொல்லுங்கள். (“படிப்படியாகத் தெளிவாக்கப்பட்டு வருகிற பைபிள் சத்தியங்களைப் புரிந்திருக்கிறீர்களா?” என்ற பெட்டியைக் காண்க.)
13 மூன்றாவதாக, பைபிள் சத்தியங்களைப் புரிந்துகொள்ள கடவுளுடைய சக்தி நமக்கு உதவுகிறது. (நீதி. 4:18) பைபிள் சத்தியங்களைப் படிப்படியாக வெளிப்படுத்துவதற்கு “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” வகுப்பார் வெகு காலமாகப் பயன்படுத்தி வருகிற முக்கியக் கருவி இந்த காவற்கோபுர பத்திரிகையே. (மத். 24:45) உதாரணத்திற்கு, இயேசு குறிப்பிட்டிருந்த “இந்தத் தலைமுறை” என்ற சொற்றொடரை எடுத்துக்கொள்வோம். (மத்தேயு 24:32-34-ஐ வாசியுங்கள்.) இந்தத் தலைமுறை என்று இயேசு யாரைக் குறிப்பிட்டார்? பொல்லாதவர்களை அல்ல, கடவுளுடைய சக்தியின் மூலம் பரலோக வாழ்க்கைக்குத் தேர்ந்தெடுக்கப்படவிருந்த தமது சீடர்களையே “இந்தத் தலைமுறை” என்று குறிப்பிட்டார்; “கிறிஸ்துவின் பிரசன்னம்—அதன் அர்த்தம் என்ன?” என்ற கட்டுரை இதை விளக்கியது.a எனவே, முதல் நூற்றாண்டிலும் சரி நம்முடைய நாளிலும் சரி, பரலோக நம்பிக்கையுள்ள சீடர்கள்தான் இயேசுவின் பிரசன்னத்திற்கான அடையாளத்தைப் பார்ப்பார்கள், அதன் அர்த்தத்தையும் புரிந்துகொள்வார்கள்; அதாவது, இயேசு “கதவருகிலேயே வந்துவிட்டார்” என்பதைப் புரிந்துகொள்வார்கள்.
14 இந்த விளக்கம் நம்மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்? “இந்தத் தலைமுறை” எவ்வளவு வருடங்களை உட்படுத்துகிறதென நம்மால் திட்டவட்டமாகக் கணக்கிட முடியாது; என்றாலும், “தலைமுறை” என்ற வார்த்தையைக் குறித்து நிறைய விஷயங்களை நாம் மனதில் வைக்க வேண்டும். பொதுவாக, “தலைமுறை” என்பது ஒரே காலகட்டத்தில் வாழும் வெவ்வேறு வயதினரைக் குறிக்கிறது; அது வெகுகாலம் நீடிக்காது, அதற்கு ஒரு முடிவு இருக்கும். (யாத். 1:6) அப்படியானால், இயேசு சொன்ன ‘இந்தத் தலைமுறையை’ பற்றி என்ன விஷயத்தைப் புரிந்துகொள்கிறோம்? 1914-ல் கடைசி நாட்களுக்கான அடையாளம் ஆரம்பமானதைப் பார்த்த பரலோக நம்பிக்கையுள்ளவர்களில் சிலரும் மிகுந்த உபத்திரவத்தின் ஆரம்பத்தைப் பார்க்கப்போகிற பரலோக நம்பிக்கையுள்ளவர்களில் சிலரும் ஒரே காலகட்டத்தில் வாழ்வார்கள் என்று அவர் அர்த்தப்படுத்தியிருக்க வேண்டும் எனப் புரிந்துகொள்கிறோம். இந்தத் தலைமுறைக்கு ஓர் ஆரம்பம் இருந்தது, நிச்சயம் அதற்கு முடிவும் இருக்கும். எனவே, மிகுந்த உபத்திரவம் வெகு சீக்கிரத்தில் வரப்போகிறது என்பதை அந்த அடையாளத்தில் உட்பட்டுள்ள பல்வேறு அம்சங்களின் நிறைவேற்றம் தெளிவாகக் காண்பிக்கிறது. ஆகையால், எப்போதும் அவசர உணர்வுடன் செயல்படுகிறவர்களாக, விழிப்புள்ளவர்களாக இருந்து, பைபிள் சத்தியங்களின் புதிய புரிந்துகொள்ளுதலை அறிந்துவருகிறீர்கள் என்பதைக் காட்டுங்கள், கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிகிறீர்கள் என்பதையும் காட்டுங்கள்.—மாற். 13:37.
15. நற்செய்தியை அறிவிக்க கடவுளுடைய சக்திதான் நமக்கு உதவுகிறது என்பதை எது காட்டுகிறது?
15 நான்காவதாக, நற்செய்தியை அறிவிக்கக் கடவுளுடைய சக்தி நம்மைப் பலப்படுத்துகிறது. (அப். 1:8) அந்தச் சக்தியின் உதவியில்லாமல், நற்செய்தியை நம்மால் உலகம் முழுவதும் அறிவித்துவந்திருக்கவே முடியாது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: நீங்கள் ஒருவேளை அதிக கூச்ச சுபாவமுள்ளவராகவோ பயந்து நடுங்குகிறவராகவோ இருந்திருக்கலாம்; “வீட்டுக்கு வீடு போய் என்னால் பிரசங்கிக்க முடியுமா?” என்று யோசித்திருக்கலாம். என்றாலும், நீங்கள் தற்போது அந்த வேலையில் பக்திவைராக்கியத்துடன் ஈடுபட்டுவருகிறீர்கள்.b உண்மையுள்ள யெகோவாவின் சாட்சிகள் பலர், எதிர்ப்பின் மத்தியிலும் துன்புறுத்தலின் மத்தியிலும் பிரசங்க வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். மலைபோன்ற பிரச்சினைகளை மேற்கொள்வதற்கும், நம் சொந்த பலத்தினால் செய்ய முடியாத காரியங்களைச் செய்வதற்கும் கடவுளுடைய சக்தி மட்டுமே நமக்கு உதவும். (மீ. 3:8; மத். 17:20) அந்தச் சக்தியோடு ஒத்துழைக்கிறீர்கள் என்பதைப் பிரசங்க வேலையில் முழுமையாக ஈடுபடுவதன் மூலம் நீங்கள் காட்டுகிறீர்கள்.
எதிர்காலத்தில். . .
16. மிகுந்த உபத்திரவத்தின்போது யெகோவா தம்முடைய மக்களைப் பாதுகாப்பார் என்பதில் நாம் ஏன் நம்பிக்கையோடு இருக்கலாம்?
16 யெகோவா தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, எதிர்காலத்தில் தமது சக்தியை அற்புதமான விதங்களில் பயன்படுத்தப்போகிறார். முதலாவதாக பாதுகாப்பளிக்கும் விஷயத்தைக் கவனியுங்கள். நாம் ஏற்கெனவே பார்த்தபடி, அக்காலத்தில் தனிநபர்களையும், முழு இஸ்ரவேல் தேசத்தையும் பாதுகாப்பதற்காக யெகோவா தம்முடைய சக்தியைப் பயன்படுத்தினார். எனவே, வரவிருக்கும் மிகுந்த உபத்திரவத்தில் தம்முடைய மக்களைப் பாதுகாப்பதற்காக அதே சக்தியை அவர் பயன்படுத்துவார்; இதில் நாம் முழு நிச்சயமாய் இருக்கலாம். அந்தச் சமயத்தில் அவர் நம்மை எப்படிக் கவனித்துக்கொள்வார் என்பதை நாம் இப்போது ஊகிக்க வேண்டிய அவசியமில்லை. எதிர்காலத்தைக் குறித்துப் பயப்படவும் வேண்டியதில்லை; ஏனென்றால், யெகோவாவை நேசிக்கிறவர்கள் அவருடைய கருணைப் பார்வையிலிருந்து ஒருபோதும் மறைக்கப்பட மாட்டார்கள், அவருடைய சக்தியின் உதவியைப் பெறாமல்போக மாட்டார்கள்.—2 நா. 16:9; சங். 139:7-12.
17. புதிய உலகத்தில் யெகோவா தம்முடைய சக்தியை எவ்வாறு பயன்படுத்தப்போகிறார்?
17 வரவிருக்கும் புதிய உலகத்தில் யெகோவா தம்முடைய சக்தியை எவ்வாறு பயன்படுத்தப்போகிறார்? அந்தச் சமயத்தில் புதிய சுருள்கள் திறக்கப்படுவதில் அவருடைய சக்தி முக்கியப் பங்கு வகிக்கும். (வெளி. 20:12) அவற்றில் என்ன விஷயங்கள் எழுதப்பட்டிருக்கும்? ஆயிர வருட ஆட்சியின்கீழ் யெகோவா நம்மிடம் எதிர்பார்க்கிற காரியங்கள் விவரமாக எழுதப்பட்டிருக்குமெனத் தெரிகிறது. அந்த விவரங்களையெல்லாம் வாசிக்க நீங்கள் ஆவலோடு இருக்கிறீர்களா? புதிய உலகத்திற்காக நாம் ஆசை ஆசையாய்க் காத்திருக்கிறோம். அந்த அற்புதமான காலத்தில் வாழ்க்கை எந்தளவு சந்தோஷமாக இருக்குமென்பதை நம்மால் கற்பனைகூட செய்ய முடியாது; அந்தச் சமயத்தில்தான், யெகோவா தம்முடைய சக்தியைப் பயன்படுத்தி இந்தப் பூமியையும் மனிதகுலத்தையும் குறித்த தமது நோக்கத்தை நிறைவேற்றுவார்.
18. என்ன செய்யத் திடத்தீர்மானமாய் இருக்கிறீர்கள்?
18 யெகோவா படிப்படியாக வெளிப்படுத்துகிற நோக்கம் நிச்சயமாக நிறைவேறுமென்பதை நாம் மறந்துவிடக் கூடாது; ஏனென்றால், அதை நிறைவேற்றுவதற்காக அவர் தமது சக்தியை, இப்பிரபஞ்சத்திலேயே மிகமிக வல்லமை வாய்ந்த சக்தியைப் பயன்படுத்திவருகிறார். அந்த நோக்கத்தில் நீங்களும் உட்பட்டிருக்கிறீர்கள். எனவே, யெகோவாவிடம் அவருடைய சக்தியைக் கேட்டு ஜெபம் செய்வதற்கும், அந்தச் சக்தியின் வழிநடத்துதலுக்கு இசைய செயல்படுவதற்கும் திடத்தீர்மானமாய் இருங்கள். (லூக். 11:13) அப்போது, மனிதகுலத்திற்கான யெகோவாவுடைய நோக்கத்தின்படியே பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழ்வீர்கள்.
[அடிக்குறிப்புகள்]
b கூச்ச சுபாவத்தை மேற்கொண்டு, ஊழியத்தில் பக்திவைராக்கியத்துடன் ஈடுபட்ட ஒரு சகோதரியின் அனுபவத்தை செப்டம்பர் 15, 1993 காவற்கோபுரத்தில் பக்கம் 19-ல் காண்க.
நினைவிருக்கிறதா?
• தமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, யெகோவா தம்முடைய சக்தியை. . .
• அக்காலத்தில் எவ்வாறு பயன்படுத்தினார்?
• இக்காலத்தில் எவ்வாறு பயன்படுத்துகிறார்?
• எதிர்காலத்தில் எவ்வாறு பயன்படுத்துவார்?
[பக்கம் 10-ன் பெட்டி]
படிப்படியாகத் தெளிவாக்கப்பட்டு வருகிற பைபிள் சத்தியங்களைப் புரிந்திருக்கிறீர்களா?
யெகோவா தம் மக்களுக்கு பைபிள் சத்தியங்களைப் படிப்படியாகத் தெளிவாக்கி வருகிறார். அவை காவற்கோபுர பத்திரிகையில் வெளிவந்துள்ளன; அவற்றில் சில யாவை?
▪ புளித்த மாவைப் பற்றிய இயேசுவின் உவமை, ஆன்மீக வளர்ச்சி சம்பந்தமாக என்ன நல்ல கருத்தை வலியுறுத்திக் காட்டுகிறது? (மத். 13:33)—ஜூலை 15, 2008, பக்கங்கள் 19-20.
▪ கிறிஸ்தவர்கள் பரலோக வாழ்க்கைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது எப்போது முடிவடையும்?—மே 1, 2007, பக்கங்கள் 30-31.
▪ யெகோவாவை “ஆவியோடு” வணங்குவது எதை அர்த்தப்படுத்துகிறது? (யோவா. 4:24, BSI)—ஜூலை 15, 2002, பக்கம் 15.
▪ ஆன்மீக ஆலயத்தின் எந்தப் பிரகாரத்தில் திரள்கூட்டத்தார் சேவை செய்கிறார்கள்? (வெளி. 7:15)—மே 1, 2002, பக்கங்கள் 30-31.
▪ மக்கள் செம்மறியாடுகளாகவும் வெள்ளாடுகளாகவும் பிரிக்கப்படுவது எப்போது நடைபெறும்? (மத். 25:31-33)—அக்டோபர் 15, 1995, பக்கங்கள் 18-28.