இனிய உறவுகளுக்குக் கைகொடுக்கும் இனிமையான பேச்சு
‘உங்கள் பேச்சு எப்போதும் இனிமையாக . . . இருக்க வேண்டும்.’—கொலோ. 4:6.
1, 2. ஒரு சகோதரர் இனிமையாகப் பேசியதால் என்ன பலன் கிடைத்தது?
“வீட்டுக்கு வீடு ஊழியத்தில் நான் ஓர் ஆளைச் சந்தித்தேன். அவரிடம் பேசியபோது கோபத்தில் அவருடைய உதடுகள் துடித்தன; அவர் உடம்பெல்லாம் நடுங்கியது. விஷயங்களை பைபிளிலிருந்து பொறுமையாக எடுத்துச்சொல்ல முயன்றேன். பயனில்லை. அவருடைய கோபம் இன்னும் அதிகமானது. போதாக்குறைக்கு, அவருடைய மனைவி மக்களும் சேர்ந்துகொண்டு என்னைக் கன்னாபின்னாவென்று திட்டினார்கள். இனியும் இவர்களிடம் பேசுவது சரியல்ல, இங்கிருந்து போய்விட வேண்டியதுதான் என்று நினைத்தேன். ‘நான் சமாதானமாக வந்தேன், சமாதானத்தோடே போக விரும்புகிறேன்’ என்று அவர்களிடம் சொல்லிவிட்டு, கலாத்தியர் 5:22, 23-ஐக் காட்டினேன். அதில், அன்பு, சாந்தம், சுயக்கட்டுப்பாடு, சமாதானம் ஆகிய குணங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. பின்பு அங்கிருந்து நடையைக் கட்டினேன்” என்று ஒரு சகோதரர் சொல்கிறார்.
2 “பிறகு அதே தெருவில் மறுபக்கம் உள்ள வீடுகளில் ஊழியம் செய்துகொண்டிருந்தபோது அந்த வீட்டார் தங்கள் வீட்டு வாசற்படியில் உட்கார்ந்திருந்ததைப் பார்த்தேன். அவர்கள் என்னைக் கூப்பிட்டார்கள். ‘என்ன சொல்லப்போகிறார்களோ?’ என்று நினைத்தேன். பார்த்தால், அந்த ஆளிடம் ஒரு குவளை நிறைய ‘ஜில்’ தண்ணீர் இருந்தது. அதை எனக்குக் குடிக்கத் தந்தார். தான் கோபமாய் நடந்துகொண்டதற்கு மன்னிப்புக் கேட்டுவிட்டு, எனக்கிருந்த கடவுள் பக்தியைப் பாராட்டினார். ஆக, சுமுகமாய் நான் அங்கிருந்து கிளம்பினேன்” என்று சொல்லி முடிக்கிறார்.
3. மற்றவர்கள் நம்மைக் கோபப்படுத்தினாலும் நாம் ஏன் பதிலுக்குக் கோபப்படக் கூடாது?
3 பிரச்சினைகள் மலிந்து கிடக்கிற இந்த உலகத்தில், ஊழியத்திலும் சரி மற்ற இடங்களிலும் சரி, கோபக்கார ஆட்களைச் சந்திப்பதை நாம் தவிர்க்க முடியாதுதான். அதுபோன்ற சந்தர்ப்பங்களில், “சாந்தத்தோடும் ஆழ்ந்த மரியாதையோடும்” பேசுவது மிக முக்கியம். (1 பே. 3:15) சற்று யோசித்துப் பாருங்கள்! மேற்குறிப்பிடப்பட்ட அந்தச் சகோதரர் மட்டும் தன்னிடம் கோபத்தை வெளிக்காட்டிய ஆளிடம் பதிலுக்குக் கோபப்பட்டிருந்தால், அவர் அப்படி மாறியிருப்பாரா? வாய்ப்பே இல்லை! இன்னும் எகிறியிருப்பார். அந்தச் சகோதரர் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு, இனிமையாகப் பேசியதால் கைமேல் பலன் கிடைத்தது.
இனிமையாகப் பேச. . .
4. இனிமையாகப் பேசுவது ஏன் முக்கியம்?
4 சத்தியத்தில் இல்லாதவர்களிடமும் சரி இருப்பவர்களிடமும் சரி, ஏன் குடும்பத்தாரிடமும் சரி, நாம் அப்போஸ்தலன் பவுலின் ஆலோசனையைப் பின்பற்றி நடப்பது முக்கியம். “உங்கள் பேச்சு எப்போதும் இனிமையாகவும் சுவையாகவும் இருக்க வேண்டும்” என்று அவர் சொன்னார். (கொலோ. 4:6) ஆம், சுவையான, பொருத்தமான பேச்சு நல்ல பேச்சுத்தொடர்புக்கு அத்தியாவசியமாகும்; இது சமாதானத்திற்கு வழிவகுக்கும்.
5. நல்ல பேச்சுத்தொடர்பு என்பது எதை அர்த்தப்படுத்தாது? விளக்குங்கள்.
5 நல்ல பேச்சுத்தொடர்பு என்பது, மனதில் நினைப்பதையெல்லாம் சட்டென்று பேசிவிடுவதை அர்த்தப்படுத்தாது; அதுவும் கோபத்தில் இருக்கும்போது! கோபத்தைக் கட்டுப்படுத்தாமல் அதை வெளிப்படுத்துவது பலத்துக்கு அல்ல, பலவீனத்துக்கே அடையாளம் என்பதாக வேதவசனங்கள் காட்டுகின்றன. (நீதிமொழிகள் 25:28-ஐயும் 29:11-ஐயும் வாசியுங்கள்.a) உதாரணத்திற்கு, மோசே அன்று வாழ்ந்த எல்லாரையும்விட ‘மிகுந்த சாந்தகுணமுள்ளவராய் இருந்தார்’; ஆனாலும், இஸ்ரவேலர் கலகம் செய்த ஒரு சந்தர்ப்பத்தில் அவர் கோபத்தை வெளிக்காட்டினார், கடவுளுக்கு மகிமை சேர்க்கத் தவறினார். மோசே தன் மனதில் நினைத்ததையே அந்த மக்களிடம் சொன்னார்; ஆனால், யெகோவாவுக்கு அது பிடிக்கவில்லை. இஸ்ரவேலரை 40 வருடங்கள் வழிநடத்திய மோசேக்கு, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் அவர்களை அழைத்துச்செல்லும் பாக்கியம் கிடைக்கவில்லை.—எண். 12:3; 20:10, 12; சங். 106:32.
6. விவேகமாகப் பேசுவது எதை அர்த்தப்படுத்துகிறது?
6 நம் கோபத்தை அடக்கிக்கொண்டு, விவேகமாகப் பேசுவதை வேத வசனங்கள் பாராட்டுகின்றன. “சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.” (நீதி. 10:19; 17:27) ஆனாலும், வாயில்லாப் பூச்சிபோல் இருந்துவிடுவதை இது அர்த்தப்படுத்தாது. மாறாக, ‘இனிமையாய்’ பேசுவதை அர்த்தப்படுத்துகிறது; அதாவது, நாவை மற்றவர்களின் மனதைப் புண்படுத்தும் ஆயுதமாகப் பயன்படுத்தாமல், ஆற்றும் அருமருந்தாகப் பயன்படுத்துவதை அர்த்தப்படுத்துகிறது.—நீதிமொழிகள் 12:18-ஐயும் 18:21-ஐயும் வாசியுங்கள்.
‘மவுனமாயிருக்க ஒரு காலம், பேச ஒரு காலம்’
7. எவற்றையெல்லாம் நாம் தவிர்க்க வேண்டும், ஏன்?
7 சக பணியாளர்களிடமோ, ஊழியத்தில் சந்திப்பவர்களிடமோ நாம் இனிமையாகப் பேசுவதும் கோபத்தை அடக்குவதும் முக்கியமாய் இருப்பதைப் போல வீட்டாரிடமும் சபையாரிடமும் நடந்துகொள்வது முக்கியம். பின்விளைவுகளைப் பற்றித் துளியும் கவலைப்படாமல் கோபத்தில் வாய்க்கு வந்தபடி பேசுவது அல்லது கண்மண் தெரியாமல் நடந்துகொள்வது, நமக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் கெடுதலை விளைவிக்கும்; ஆம், ஆன்மீக ரீதியில், உணர்ச்சி ரீதியில், உடல் ரீதியில் கெடுதலை விளைவிக்கும். (நீதி. 18:6, 7) நம் அபூரண இயல்பை வெளிப்படுத்துகிற கோபதாபங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். பழிப்பேச்சு, பரிகாசம், வெறுப்பு, கடுங்கோபம் ஆகிய அனைத்துமே தவறானவை. (கொலோ. 3:8; யாக். 1:20) இவை மற்றவர்களோடும் யெகோவாவோடும் நமக்குள்ள அருமையான உறவைக் குலைத்துப்போடும். இயேசு இவ்வாறு கற்பித்தார்: “தன் சகோதரன்மீது கடுங்கோபமாகவே இருக்கிற எவனும் நீதிமன்றத்தில் பதில்சொல்ல வேண்டியிருக்கும்; ஆனால், தன் சகோதரனைக் கேவலமான வார்த்தையால் அழைக்கிற எவனும் உச்ச நீதிமன்றத்தில் பதில்சொல்ல வேண்டியிருக்கும்; ‘கேடுகெட்ட முட்டாளே!’ எனச் சொல்கிறவனோ கொழுந்துவிட்டு எரிகிற கெஹென்னாவுக்குள் தள்ளப்பட வேண்டியிருக்கும்.”—மத். 5:22.
8. நாம் என்ன உணருகிறோம் என்பதை எப்போது தெரியப்படுத்த வேண்டும், ஆனால் எப்படி?
8 என்றாலும், சில விஷயங்களை வாய்விட்டுச் சொல்லியே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு நாம் வரலாம். ஒரு சகோதரர் எதையாவது சொல்லியிருக்கலாம் அல்லது செய்திருக்கலாம்; அது உங்கள் மனதைக் குடைந்துகொண்டே இருப்பதால் அதை மறந்துவிட முடியாமல் நீங்கள் தவிக்கலாம். அப்படிப்பட்ட சமயங்களில், வெறுப்பு வேர்விட்டு வளர உங்கள் மனதில் இடம் தராதீர்கள். (நீதி. 19:11) யாராவது உங்களைக் கோபப்படுத்தினால், உணர்ச்சிகளை அப்போதைக்குக் கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள்; பின்பு அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிகளைத் தேடுங்கள். “சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது” என்று பவுல் எழுதினார். அந்தப் பிரச்சினை உங்கள் மனதைக் குடைந்துகொண்டே இருப்பதால் தக்க சமயத்தில் அதைப் பற்றி அன்போடு பேசுங்கள். (எபேசியர் 4:26, 27, 31, 32-ஐ வாசியுங்கள்.) உங்கள் சகோதரரோடுள்ள இனிய உறவு விட்டுப்போகாத விதத்தில் அந்த விஷயத்தைப் பேசுங்கள்; மனம்விட்டுப் பேசுங்கள், அதே சமயத்தில் இனிமையாகப் பேசுங்கள்.—லேவி. 19:17; மத். 18:15.
9. பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதற்கு முன் நம் உணர்ச்சிகளை ஏன் கட்டுப்படுத்த வேண்டும்?
9 உங்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேச, தக்க சமயத்தைத் தேட வேண்டும். ஏனென்றால், “மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு.” (பிர. 3:1, 7) அதோடு, “நீதிமானுடைய மனம் பிரதியுத்தரம் சொல்ல யோசிக்கும்.” (நீதி. 15:28) இது, பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக்கொள்ளும் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருப்பதை உட்படுத்தலாம். ஒருவருடைய கோபம் தணிவதற்குள்ளாகவே பேச்சை ஆரம்பிப்பது நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடலாம். அதற்காக, நீண்ட காலம் காத்திருப்பதும் ஞானமானதல்ல.
இனிய உறவுகளுக்குக் கைகொடுக்கும் இனிய செயல்கள்
10. இனிய செயல்களைச் செய்வது எவ்வாறு உறவுகளை மேம்படுத்தலாம்?
10 இனிமையாகப் பேசுவதும் நன்றாகப் பேச்சுத்தொடர்பு கொள்வதும் ஒருவருக்கொருவர் சமாதானமாக இருப்பதற்கும் அதைக் காத்துக்கொள்வதற்கும் உதவுகின்றன. அதுமட்டுமல்லாமல், மற்றவர்களோடு நமக்குள்ள உறவுகளை மேம்படுத்த நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வது, அவர்களோடு எப்போதும் நல்ல பேச்சுத்தொடர்பை வைத்துக்கொள்ள உதவும். நாமாக முன்வந்து மற்றவர்களுக்கு அன்பான செயல்களைச் செய்வது நல்ல பேச்சுத்தொடர்புக்கு வழிவகுக்கும்; அதாவது, மற்றவர்களுக்கு உதவ வழிதேடுவது, நல்லெண்ணத்தோடு பரிசு கொடுப்பது, மற்றவர்களை உபசரிப்பது ஆகியவை நல்ல பேச்சுத்தொடர்புக்கு வழிவகுக்கும். இப்படிச் செய்வதால், ஒருவர்மீது ‘நெருப்புத் தணலைக் குவிக்கவும்’ முடியும். இதன் பலனாக, அவரிடமுள்ள நற்பண்புகள் தெளிவாகத் தெரிய ஆரம்பிக்கலாம்; அது, பிரச்சினைகளைக் குறித்து மனம்திறந்து பேசுவதை எளிதாக்கலாம்.—ரோ. 12:20, 21.
11. ஏசாவுடன் ஏற்பட்டிருந்த விரிசலைச் சரிசெய்ய யாக்கோபு என்ன முயற்சி எடுத்தார், என்ன பலன் கிடைத்தது?
11 இந்த உண்மையை முற்பிதாவான யாக்கோபு அறிந்திருந்தார். தன்மீது ஏசாவுக்குக் கடுங்கோபம் இருந்ததால் தன்னைக் கொன்றுவிடுவாரோ எனப் பயந்து யாக்கோபு அவரைவிட்டு ஓடிப்போயிருந்தார். வருடங்கள் உருண்டோடிய பிறகு யாக்கோபு திரும்பிவந்தார். அவரைச் சந்திக்க ஏசா 400 ஆண்களோடு சென்றார். யாக்கோபு பயத்தில் யெகோவாவிடம் உதவிகேட்டு மன்றாடினார். பின்னர், தனக்கு முன்னே எக்கச்சக்கமான கால்நடையை ஏசாவுக்குப் பரிசாக அனுப்பினார். அப்புறம் என்ன, வெற்றிதான்! இருவரும் சந்தித்தபோது ஏசாவின் கல்நெஞ்சம் கரைந்திருந்தது; அவர் ஓடோடி வந்து யாக்கோபைக் கட்டியணைத்தார்.—ஆதி. 27:41-44; 32:6, 11, 13-15; 33:4, 10.
இனிய பேச்சால் மற்றவர்களுக்குத் தெம்பூட்டுங்கள்
12. நம் சகோதரர்களிடம் ஏன் இனிய வார்த்தைகளைப் பேச வேண்டும்?
12 கிறிஸ்தவர்களாகிய நாம் மனிதருக்கல்ல, கடவுளுக்கே சேவை செய்கிறோம். என்றாலும், மனிதருடைய பிரியத்தைச் சம்பாதிக்க ஆசைப்படுகிறோம். நாம் பேசுகிற இனிய வார்த்தைகள் அருமருந்துபோல் நம் சகோதர சகோதரிகளின் மனபாரத்தைக் குறைக்கலாம். ஆனால், எப்பொழுது பார்த்தாலும் குறைகளையே குத்திக்காட்டுவது, மனபாரத்தைக் கூட்டலாம்; யெகோவாவின் அங்கீகாரத்தை இழந்துவிட்டோமோ என்றுகூட சிலரை நினைக்க வைக்கலாம். ஆகவே, மற்றவர்களுக்குத் தெம்பூட்டும் விதத்தில் உள்ளப்பூர்வமாய்ப் பேசுவோமாக; ஆம், “கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனம் உண்டாகும்படி, அவர்களைப் பலப்படுத்துகிற நல்ல வார்த்தைகளையே சூழ்நிலைக்கு ஏற்றவாறு” பேசுவோமாக!—எபே. 4:29.
13. பின்வரும் சந்தர்ப்பங்களில் மூப்பர்கள் எதை மனதில் வைக்க வேண்டும்: (அ) அறிவுரை கொடுக்கும்போது? (ஆ) கடிதம் எழுதும்போது?
13 முக்கியமாக மூப்பர்கள், மந்தையை ‘மென்மையாகவும்’ கனிவாகவும் நடத்த வேண்டும். (1 தெ. 2:7, 8) ‘கலகம் செய்கிறவர்கள்’ உட்பட மற்றவர்களுக்கு அறிவுரை கொடுக்கும்போது, “சாந்தத்தோடு” கொடுக்க வேண்டும். (2 தீ. 2:24, 25) மற்ற மூப்பர்களுக்கோ கிளை அலுவலகத்திற்கோ கடிதம் எழுதும்போதுகூட மூப்பர்கள் இனிய வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும். மத்தேயு 7:12-க்கு இசைய அவர்கள் அன்பாகவும், சாதுரியமாகவும் நடந்துகொள்ள வேண்டும்.
குடும்பத்தில் இனிமையான பேச்சு
14. கணவர்களுக்கு பவுல் என்ன அறிவுரை கூறினார், ஏன்?
14 நம் வார்த்தைகளும் முகபாவனைகளும் உடலசைவுகளும் மற்றவர்கள்மீது எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நாம் புரிந்துகொள்ளாதிருக்கலாம். உதாரணமாக, தங்கள் பேச்சு பெண்களை எப்படிப் பாதிக்கிறது என்பதை சில ஆண்கள் முழுமையாக உணராதிருக்கலாம். “என் கணவர் கோபத்தில் கத்தும்போது என் உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பித்துவிடும்” என்று ஒரு சகோதரி சொன்னார். கோபாவேச சொற்கள் ஓர் ஆணைவிட பெண்ணை அதிகமாய்ப் பாதிக்கலாம்; அந்தப் பாதிப்பு நீண்ட கால வடுவாய் மாறிவிடலாம். (லூக். 2:19) அதுவும், தான் நேசிக்கிற ஒருவர், தன் மதிப்பு மரியாதைக்கு உரிய ஒருவர் அப்படிப் பேசும்போது! கணவர்களுக்கு பவுல் பின்வருமாறு அறிவுரை கூறினார்: “உங்கள் மனைவிமீது எப்போதும் அன்பு காட்டுங்கள், அவள்மீது மனக்கசப்பைக் காட்டாதீர்கள்.”—கொலோ. 3:19.
15. ஒரு கணவர் தன் மனைவியை எப்படி நடத்த வேண்டும் என்பதை உதாரணத்துடன் விளக்குங்கள்.
15 ஒரு கணவர் “பலவீனமாக” இருக்கிற மனைவியை மென்மையாக நடத்த வேண்டியதன் அவசியத்தைப் பற்றி மணவாழ்வில் அனுபவம் பெற்ற ஒரு சகோதரர் இவ்வாறு விளக்கினார்: “எளிதில் உடையக்கூடிய விலையுயர்ந்த பூஞ்சாடி ஒன்றை நீங்கள் அழுத்திப் பிடிக்க மாட்டீர்கள். அப்படிப் பிடித்தால் அதில் விரிசல் விழுந்துவிடலாம். ஒருவேளை அந்த விரிசலை ஒட்டவைத்தாலும் அந்த இடம் பளிச்சென்று தெரியும். அதைப் போலவே, கணவர் தன் மனைவியிடம் சுடுசொற்களை அள்ளி வீசினால் அவள் மனம் புண்ணாகிவிடலாம். அது அவர்களுடைய உறவில் நிரந்தர விரிசலை ஏற்படுத்திவிடலாம்.”—1 பேதுரு 3:7-ஐ வாசியுங்கள்.
16. ஒரு மனைவி தன் வீட்டை எப்படிக் கட்டுகிறாள்?
16 மறுபட்சத்தில், தங்களுடைய மனைவி உட்பட மற்றவர்கள் பேசும் பேச்சால் ஆண்களும்கூட உற்சாகமடையலாம் அல்லது சோர்வடையலாம். தன்னுடைய கணவரின் ‘நம்பிக்கையை’ சம்பாதித்த ஒரு “புத்தியுள்ள மனைவி,” தன்னைக் கணவர் அனுசரித்து நடக்க விரும்புவதைப் போலவே, தானும் தன் கணவரை அனுசரித்து நடப்பாள். (நீதி. 19:14; 31:11) உண்மையில், ஒரு மனைவியால் குடும்பம் தழைத்தோங்கவும் வாய்ப்புண்டு, தகர்ந்துவிடவும் வாய்ப்புண்டு. ஆம், “புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.”—நீதி. 14:1.
17. (அ) பிள்ளைகள் தங்களுடைய பெற்றோரிடம் எப்படிப் பேச வேண்டும்? (ஆ) பெரியவர்கள் பிள்ளைகளிடம் எப்படிப் பேச வேண்டும், ஏன்?
17 பெற்றோர்-பிள்ளைகளுக்கு இடையிலும் இனிய பேச்சு அவசியம். (மத். 15:4) பிள்ளைகளிடம் கவனமாகப் பேசுவது, அவர்களுக்கு ‘எரிச்சலூட்டாதபடி’ பார்த்துக்கொள்ள பெற்றோருக்கு உதவும். (கொலோ. 3:21; எபே. 6:4) அப்படியே பிள்ளைகளைக் கண்டிக்க நேர்ந்தாலும், பெற்றோரும் சரி மூப்பர்களும் சரி, அவர்களிடம் மரியாதையாகப் பேச வேண்டும். பெரியவர்கள் அப்படிப் பேசும்போது, பிள்ளைகள் தங்களைத் திருத்திக்கொள்வதும் கடவுளோடுள்ள உறவில் பலப்படுவதும் எளிதாகிறது. இப்படி மரியாதையாகப் பேசுவது மிகவும் நல்லது; இல்லையென்றால், பிள்ளைகளை நாம் உதவாக்கரையென நினைக்கிறோம் என்ற அபிப்பிராயம் அவர்களுக்கு ஏற்பட்டுவிடும்; தாங்கள் உதவாக்கரைதான் என்ற முடிவுக்கே அவர்கள் வந்துவிடலாம். பொதுவாக, மற்றவர்கள் தங்களுக்குக் கொடுத்த புத்திமதிகளையெல்லாம் பிள்ளைகள் மறந்துவிடலாம், ஆனால், தங்களிடம் எப்படிப் பேசினார்கள் என்பதை அவர்கள் மறக்கவே மாட்டார்கள்.
இதயத்திலிருந்து வரும் இனிய பேச்சு
18. உள்ளக் குமுறல்களைப் போக்குவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
18 கோபத்தைக் கட்டுப்படுத்த, பார்வைக்கு அமைதியாக இருந்தால் மட்டும் போதாது. ஆம், நம்முடைய கோபத்தை அடக்கிக்கொள்வது மட்டுமே நம்முடைய நோக்கமல்ல. உள்ளே எரிமலையாய்க் குமுறிக்கொண்டு, வெளியே அமைதியாய்க் காட்டிக்கொள்வதால் நமக்குத்தான் கேடு. இது எப்படி இருக்கிறதென்றால், காரை நிறுத்துவதற்காக அதன் பிரேக்கை அழுத்தும் அதே நேரத்தில் அதன் வேகத்தைக் கூட்டுவதற்காக ஆக்ஸிலரேட்டரையும் அழுத்துவதைப் போன்றது. இது காருக்குக் கேடு விளைவிக்கும்; இதனால் கார் பழுதாகிவிடும். ஆகவே, கோபத்தை உள்ளுக்குள் அடக்கி வைத்துக்கொண்டு, பின்னர் எரிமலையாய் வெடிக்காதீர்கள். உங்கள் உள்ளக் குமுறல்களைப் போக்குவதற்கு உதவும்படி யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். அவர் அருளும் சக்தி, அவருடைய நோக்கத்திற்கிசைய உங்கள் மனதையும் இருதயத்தையும் வடிவமைக்கட்டும்.—ரோமர் 12:2-ஐயும் எபேசியர் 4:23, 24-ஐயும் வாசியுங்கள்.
19. கோபதாபங்கள் ஏற்படும்போது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?
19 கோபத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள். ஓர் இறுக்கமான சூழ்நிலையில் நீங்கள் இருப்பதாக நினைத்தாலோ உள்ளுக்குள் கோபம் கொந்தளிப்பதாக உணர்ந்தாலோ அப்போதைக்கு அந்த இடத்தைவிட்டு வெளியேறுவது உங்களுக்கு உதவியாக இருக்கலாம்; இது உங்கள் உள்ளக் குமுறல்கள் அடங்குவதற்குச் சற்று அவகாசம் அளிக்கும். (நீதி. 17:14) உங்களோடு பேசிக்கொண்டிருப்பவர் கோபப்பட ஆரம்பித்தால், அவரிடம் இனிமையாகப் பேசுவதற்குக் கூடுதல் முயற்சி எடுங்கள். மறந்துவிட வேண்டாம்: “மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.” (நீதி. 15:1) என்னதான் மென்மையான குரலில் பேசினாலும், புண்படுத்துகிற வார்த்தைகளை அல்லது சண்டைக்கு இழுக்கிற வார்த்தைகளைப் பேசுவது, எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல் இருக்கும். (நீதி. 26:21) ஆகவே, ஏதாவது ஒரு சூழ்நிலையில் நீங்கள் சுயக்கட்டுப்பாட்டை இழக்க நேர்ந்தால், “பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும்” இருங்கள். கெட்டதைப் பேசாமல் நல்லதையே பேச உதவும்படி யெகோவாவின் சக்திக்காக ஜெபம் செய்யுங்கள்.—யாக். 1:19.
இதயப்பூர்வமாக மன்னித்தல்
20, 21. மற்றவர்களை மன்னிக்க எது உதவும், நாம் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்?
20 நம்மில் யாராலும் நாவை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது என்பது வருத்தமான விஷயமே. (யாக். 3:2) குடும்ப அங்கத்தினரும் சரி அருமையான நம் ஆன்மீகச் சகோதர சகோதரிகளும் சரி, என்னதான் முயற்சி செய்தாலும், சில சமயங்களில் யோசிக்காமல் எதையாவது சொல்லி நம்மைப் புண்படுத்தி விடலாம். அப்போது சட்டென்று கோபப்படுவதற்குப் பதிலாக அப்படி அவர்கள் சொன்னதற்குக் காரணம் என்னவாக இருக்கலாம் எனப் பொறுமையோடு ஆராய்ந்து பார்க்க வேண்டும். (பிரசங்கி 7:8, 9-ஐ வாசியுங்கள்.) அவர்கள் ஏதாவது கஷ்டத்தில் இருந்தார்களோ, பயத்தில் இருந்தார்களோ, உடல் நலம் சரியில்லாமல் இருந்தார்களோ, நமக்குத் தெரியாத வேறெதாவது பிரச்சினையால் தவித்துக்கொண்டிருந்தார்களோ என்றெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
21 ஒருவர் கோபப்படுவதற்கு அப்படிப்பட்ட சூழ்நிலைகளைக் காரணம் காட்ட முடியாது. ஆனால், அதுபோன்ற சூழ்நிலைகள் இருப்பதை நாம் மனதில் வைப்பது, சில சமயங்களில் மற்றவர்கள் நம்மிடம் ஏன் அப்படிப் பேசுகிறார்கள், ஏன் அப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள உதவலாம்; இது, அவர்களை மன்னித்துவிட நம்மைத் தூண்டலாம். நாம் எல்லாருமே மற்றவர்களைப் புண்படுத்தும் விதத்தில் பேசியிருக்கலாம், எதையாவது செய்திருக்கலாம்; என்றாலும், அவர்கள் பெருந்தன்மையோடு நம்மை மன்னிப்பார்களென்று நாம் நம்புகிறோம். (பிர. 7:21, 22) கடவுள் நம்மை மன்னிக்க வேண்டுமென்றால் நாம் மற்றவர்களை மன்னிக்க வேண்டும் என்று இயேசு சொன்னார். (மத். 6:14, 15; 18:21, 22, 35) ஆகவே, குடும்பத்திலும் சரி சபையிலும் சரி, உடனடியாக மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்கவும் உடனடியாக மற்றவர்களை மன்னிக்கவும் வேண்டும்; இவ்வாறு, நம்மை ‘பரிபூரணமாகப் பிணைக்கிற’ அன்பைத் தொடர்ந்து காட்டுவோமாக!—கொலோ. 3:14.
22. இனிமையாகப் பேசுவதற்கு நாம் எடுக்கிற முயற்சி ஏன் தகுந்தது?
22 கோபம் நிறைந்த தற்போதைய உலகம் அதன் முடிவை நெருங்குகையில் நம் மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் காத்துக்கொள்வது கஷ்டமாகி வருவதாகவே தெரிகிறது. கடவுளுடைய வார்த்தையிலுள்ள நடைமுறையான நியமங்களைக் கடைப்பிடிப்பது, கெட்டதைப் பேசாமல் நல்லதையே பேச நமக்கு உதவும். இதனால், குடும்பத்திலும் சரி சபையிலும் சரி, ஒருவருக்கொருவர் சமாதானத்தை இன்னும் அதிகமாய் ருசிப்போம்; நம்முடைய முன்மாதிரி, ‘சந்தோஷமுள்ள கடவுளாகிய’ யெகோவாவைக் குறித்து மற்றவர்களுக்கு மிகச் சிறந்த சாட்சி கொடுக்கும்.—1 தீ. 1:11.
[அடிக்குறிப்பு]
a நீதிமொழிகள் 25:28; 29:11 (NW): ‘தன்னை அடக்கிக்கொள்ளாத மனிதன் மதிலிடிந்துபோன நகரம்போல் இருக்கிறான்.’ ‘முட்டாள் தனது கோபத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ஞானியோ எப்போதும் பொறுமையோடு இருக்கிறார்.’
உங்கள் பதில்?
• பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்பதற்குப் பொருத்தமான சமயத்தைத் தேர்ந்தெடுப்பது ஏன் முக்கியம்?
• குடும்ப அங்கத்தினர் ஒருவருக்கொருவர் ஏன் எப்போதும் ‘இனிமையாக’ பேச வேண்டும்?
• மற்றவர்களைப் புண்படுத்துகிற விதத்தில் பேசுவதை நாம் எப்படித் தவிர்க்கலாம்?
• மற்றவர்களை மன்னிக்க எது நமக்கு உதவும்?
[பக்கம் 21-ன் படங்கள்]
உள்ளக் குமுறல்கள் அடங்கியபின், பேசுவதற்குப் பொருத்தமான சமயத்தைக் கண்டுபிடியுங்கள்
[பக்கம் 23-ன் படம்]
ஒரு கணவர் தன் மனைவியிடம் எப்போதுமே மென்மையாகப் பேச வேண்டும்