வாசிக்கவும் படிக்கவும் பிள்ளைகளுக்கு ஆசையை ஊட்டுங்கள்
பிள்ளைகளின் எதிர்காலத்தை வடிவமைப்பது பெற்றோராகிய உங்கள் கையில்தான் உள்ளது. அதற்காக நீங்கள் எத்தனையோ முயற்சிகள் எடுக்கிறீர்கள்; வாசிக்கவும் ஆழ்ந்து படிக்கவும் அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது அவற்றில் மிக முக்கியமான ஒன்றாகும். இதனால் பிள்ளைகள் பெறுகிற சந்தோஷத்திற்கு அளவே இல்லை! சிலர் தாங்கள் சிறுவர்களாய் இருந்தபோது தங்களுடைய பெற்றோர்கள் வாசித்துக் காட்டியதை இன்றும் ஆசை ஆசையாய் நினைத்துப் பார்க்கிறார்கள். வாசிப்பது மட்டுமல்ல, அதனால் வருகிற நன்மைகளும் ஆனந்தத்தை அளிக்கின்றன. கடவுளுடைய ஊழியர்களின் விஷயத்தில் இது நூற்றுக்கு நூறு உண்மை; ஏனென்றால், பைபிளைப் படிக்கப் படிக்க கடவுளோடு ஒருவர் வைத்திருக்கிற பந்தமும் பலப்படுகிறது. ஒரு கிறிஸ்தவத் தகப்பன் சொன்னதாவது: “ஒன்றாகச் சேர்ந்து வாசிப்பதும் ஆழ்ந்து படிப்பதும்தான் நாங்கள் மிகவும் அனுபவித்த காரியங்கள்.”
நல்ல படிப்புப் பழக்கங்கள், கடவுளோடு ஒரு பலமான பந்தத்தை வளர்த்துக்கொள்ள பிள்ளைகளுக்கு உதவுகிறது. (சங். 1:1-3, 6) மீட்புப் பெறுவதற்கு வாசிக்கத் தெரிந்திருந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாவிட்டாலும், வாசிப்பதால் சிறந்த ஆன்மீகப் பலன்கள் கிடைக்குமென்று பைபிள் தெளிவாகச் சொல்கிறது. உதாரணமாக, வெளிப்படுத்துதல் 1:3 இவ்வாறு சொல்கிறது: “இந்தத் தீர்க்கதரிசன செய்திகளைச் சத்தமாக வாசிக்கிறவர்களும் கேட்கிறவர்களும் . . . சந்தோஷமானவர்கள்.” அதோடு, ஆழ்ந்து படிப்பதற்குக் கவனத்தை ஒருமுகப்படுத்துவது முக்கியம்; இதன் அவசியத்தை அப்போஸ்தலன் பவுல் தீமோத்தேயுவுக்குக் கொடுத்த பின்வரும் புத்திமதியிலிருந்து தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும்: “இவற்றைக் குறித்து ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிரு; இவற்றிலேயே மூழ்கியிரு; அப்போதுதான் உன்னுடைய முன்னேற்றம் எல்லாருக்கும் தெரியவரும்.”—1 தீ. 4:15.
என்றாலும், ஒருவருக்கு வாசிக்கவும் ஆழ்ந்து படிக்கவும் தெரிந்திருந்தால் போதும், அவர்களுக்கு எல்லா நன்மைகளும் தானாகவே கிடைத்துவிடும் என்று சொல்ல முடியாது. இந்தத் திறமைகள் உடைய அநேகரும்கூட அவற்றை உதாசீனம் செய்துவிட்டு, அநாவசியமான காரியங்களில் அதிக நேரம் செலவிடுகிறார்கள். அப்படியானால், நன்மையளிக்கிற அறிவைப் பெற வேண்டுமென்ற ஆசையைப் பிள்ளைகளின் மனதில் பெற்றோர்கள் எப்படி ஊட்டலாம்?
உங்கள் அன்பும் முன்மாதிரியும்
பிள்ளைகளோடு சேர்ந்து படிக்கையில் அவர்கள்மீது நீங்கள் பொழிகிற அன்பைக் காணும்போது அந்தப் படிப்பு நேரத்தை அவர்கள் ரசித்து மகிழ்வார்கள். இது சம்பந்தமாக ஓவன், கிளாடியா என்ற கிறிஸ்தவத் தம்பதியர் தங்கள் இரண்டு பிள்ளைகளைப் பற்றி இவ்வாறு சொல்கிறார்கள்: “படிப்பிற்கான நேரம் எப்போது வருமென்று அவர்கள் ஆவலோடு காத்திருந்தார்கள்; அது அவர்களுக்கு ஒரு விசேஷ நேரமாக இருந்தது! அப்போது அவர்கள் பத்திரமாகவும் சௌகரியமாகவும் உணர்ந்தார்கள்; ஓர் இதமான சூழலில் இருப்பதாக நினைத்தார்கள்.” வளர்ந்து வரும் பிள்ளைகளுக்கு இப்படிப்பட்ட அன்பான சூழல், சவால்கள் நிறைந்த டீனேஜ் பருவத்தில்கூட உறுதுணையாய் இருக்கும்; இந்தப் படிப்பு தங்களுக்கு எப்போதும் தேவை என்பதை உணர வைக்கும். ஓவன், கிளாடியா தம்பதியரின் பிள்ளைகள் இப்போது பயனியர்களாகச் சேவை செய்கிறார்கள்; வாசிப்பதற்கும் ஆழ்ந்து படிப்பதற்குமான ஆசை தங்களுக்கு ஊட்டி வளர்க்கப்பட்டதால் வரும் நன்மைகளைத் தொடர்ந்து அனுபவிக்கிறார்கள்.
பெற்றோர் காட்டுகிற அன்பைத் தவிர, அவர்களுடைய முன்மாதிரியும் பிள்ளைகளுக்குப் பெரிதும் கைகொடுக்கிறது. தங்கள் பெற்றோர் அடிக்கடி வாசிப்பதையும் ஆழ்ந்து படிப்பதையும் பார்க்கிற பிள்ளைகள், இவற்றைத் தங்களுடைய அன்றாட வாழ்க்கையின் பாகமாகவே கருதுவார்கள். ஆனால் ஒரு பெற்றோராக, முன்மாதிரி வைக்க வேண்டிய உங்களுக்கே வாசிப்பது கஷ்டமாக இருந்தால்? நீங்கள் முதலிடம் கொடுக்கிற காரியங்களில் மாற்றம் செய்ய வேண்டியிருக்கலாம், அல்லது வாசிப்புப் பற்றிய உங்களுடைய மனப்பான்மையில் மாற்றம் செய்ய வேண்டியிருக்கலாம். (ரோ. 2:21) அன்றாட காரியங்களில் வாசிப்புக்கு நீங்கள் முதலிடம் கொடுத்தால், உங்கள் பிள்ளைகளும் அவ்வாறு செய்யப் பெரிதும் தூண்டப்படுவார்கள். முக்கியமாக பைபிளை வாசிப்பது, கூட்டங்களுக்குத் தயாரிப்பது, குடும்பமாகச் சேர்ந்து படிப்பது ஆகியவற்றை நீங்கள் சிரத்தையோடு செய்வதைப் பிள்ளைகள் பார்க்கும்போது, இவையெல்லாம் எந்தளவு அத்தியாவசியம் என்பதை அவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்வார்கள்.
ஆகவே, வாசிப்பதற்கும் ஆழ்ந்து படிப்பதற்குமான ஆசையைப் பிள்ளைகளுக்கு ஊட்டி வளர்க்க உங்கள் அன்பும் முன்மாதிரியும் அடிப்படையானவை. என்றாலும், இவ்விஷயங்களில் அவர்களை ஊக்கப்படுத்த நீங்கள் நடைமுறையில் என்னென்ன காரியங்களைச் செய்யலாம்?
வாசிப்பதற்கான ஆசையே முதற்படி
உங்கள் பிள்ளைகளின் மனதில் வாசிப்பதற்கான ஆசையைத் தூண்டுவதற்கு என்னென்ன முக்கியமான சில காரியங்களைச் செய்யலாம்? சிறு வயதிலேயே அவர்களுக்கென்று புத்தகங்களைக் கொடுங்கள். ஒரு கிறிஸ்தவ மூப்பர், தான் சிறுவனாய் இருந்தபோது வாசிப்பதற்கான ஆசையைத் தன்னுடைய பெற்றோர் தூண்டியதாகச் சொல்கிறார்; அவர் இவ்வாறு சிபாரிசு செய்கிறார்: “உங்கள் பிள்ளைகள் தாங்களே புத்தகங்களைக் கையில் பிடித்து வாசிப்பதற்கு அவர்களைப் பழக்கப்படுத்துங்கள். அப்போது, புத்தகங்களைத் தங்களுடைய இணைபிரியா நண்பர்களாக்கிக் கொள்வார்கள்.” வாசிக்கக் கற்றுக்கொள்வதற்கு வெகு நாட்களுக்கு முன்பாகவே அநேக பிள்ளைகள், பைபிள் பிரசுரங்களாகிய பெரிய போதகருக்குச் செவிகொடுங்கள், என்னுடைய பைபிள் கதை புத்தகம் போன்ற புத்தகங்களை எப்போதும் தங்கள் கையில் வைத்திருக்க விரும்புகிறார்கள். அதுபோன்ற புத்தகங்களைப் பிள்ளைகளோடு சேர்ந்து நீங்கள் வாசிக்கும்போது, அந்த மொழியைப் பற்றிய அறிவோடுகூட, ‘ஆன்மீகக் காரியங்களையும்,’ ‘ஆன்மீக வார்த்தைகளையும்’ அவர்களுக்குப் புகட்டுகிறீர்கள்.—1 கொ. 2:13.
சத்தமாக வாசியுங்கள்—தவறாமல். ஒவ்வொரு நாளும் உங்கள் பிள்ளைகளுடன் வாசிப்பதைப் பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். அப்போது, வார்த்தைகளைச் சரியாக உச்சரிக்க அவர்கள் கற்றுக்கொள்வதோடு, வாசிக்கும் பழக்கத்தையும் விட்டுவிடாதிருப்பார்கள். நீங்கள் எப்படி வாசிக்கிறீர்கள் என்பதும் முக்கியம். உற்சாகமாக வாசியுங்கள், அப்போது பிள்ளைகளும் உற்சாகமாக வாசிப்பார்கள். சொல்லப்போனால், ஒரே கதையைத் திரும்பத் திரும்ப வாசிக்கும்படி உங்கள் பிள்ளைகளே கேட்பார்கள். அப்படி அவர்கள் கேட்டால் வாசித்துக் காட்டுங்கள்! காலப்போக்கில், புதுப் புது தகவல்களை அவர்களே ஆராய்ந்து பார்க்க ஆசைப்படுவார்கள். ஆனால், வாசிக்கும்போது பிள்ளைகளைக் கட்டாயப்படுத்தி உட்கார வைக்காதீர்கள். இதில் இயேசு சிறந்த முன்மாதிரி வைத்திருக்கிறார்; தாம் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களுடைய ‘புரிந்துகொள்ளும் திறனுக்கு ஏற்பவே’ அவர் போதித்தார். (மாற். 4:33) உங்கள் பிள்ளைகளை நீங்கள் கட்டாயப்படுத்தாதிருந்தால், ஒவ்வொரு நாளும் வாசிக்கும் நேரம் எப்போது வருமென்று அவர்கள் ஆவலோடு காத்திருப்பார்கள்; அப்போது, வாசிப்பதற்கான ஆசையை அவர்களில் ஊட்டி வளர்க்க வேண்டுமென்ற இலக்கை நீங்கள் ஓரளவு எட்டிவிடுவீர்கள்.
வாசிப்பில் ஈடுபடுத்துங்கள், வாசித்தவற்றைக் கலந்துபேசுங்கள். சீக்கிரத்தில் உங்கள் பிள்ளைகள் நிறைய வார்த்தைகளை அடையாளம் கண்டுகொள்வார்கள், அவற்றைச் சரியாக உச்சரிப்பார்கள், அவற்றின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வார்கள்; இதையெல்லாம் பார்த்து நீங்கள் உச்சிகுளிர்ந்து போவீர்கள். வாசித்தவற்றைப் பற்றிக் கலந்துபேசுங்கள்; இது, அவர்களுடைய முன்னேற்றத்திற்குப் பெருமளவு கைகொடுக்கும். அப்படிக் கலந்துபேசுவது பிள்ளைகள், “பின்னர் அவர்களாகவே வாசிக்கும்போது வார்த்தைகளை அடையாளம் கண்டுகொள்வதற்கும் புரிந்துகொள்வதற்கும்” உதவும் என்று நல்ல வாசகர்களாக ஆவதற்குப் பிள்ளைகளுக்குக் கைகொடுக்கும் ஒரு புத்தகம் சொல்கிறது. அது மேலும் இவ்வாறு சொல்கிறது: ‘வளர்ந்துவரும் இளம் பிள்ளைகளின் மனங்கள் கற்றுக்கொள்ளத் துடிக்கின்றன; எனவே, அவர்களுடன் கலந்துபேசுவது அவசியம். முக்கியமான தகவல்களைக் குறித்து நீங்கள் அவர்களுடன் எந்தளவுக்குக் கலந்து பேசுகிறீர்களோ அந்தளவுக்கு அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.’
உங்களிடம் வாசித்துக் காட்டச் சொல்லுங்கள், கேள்வி கேட்க ஊக்கப்படுத்துங்கள். நீங்களே கேள்விகளைக் கேட்டு, சரியான பதிலைத் தேர்ந்தெடுக்க உதவும் சில பதில்களைச் சொல்லலாம். இப்படிச் செய்யும்போது, புத்தகங்களில் நிறையத் தகவல்கள் இருப்பதைப் பிள்ளைகள் புரிந்துகொள்வார்கள்; தாங்கள் வாசிக்கிற வார்த்தைகளுக்கு அர்த்தம் இருப்பதையும் புரிந்துகொள்வார்கள். முக்கியமாக, மற்ற எல்லாப் புத்தகத்தையும்விட அதிக பயனுள்ள புத்தகமான பைபிளைச் சார்ந்த பிரசுரங்களை வாசிக்கும்போது இந்த அணுகுமுறை உதவியாய் இருக்கிறது.—எபி. 4:12.
ஆனால், வாசிக்கும் திறமையை வளர்த்துக்கொள்வது எளிதல்ல என்பதை நினைவில் வையுங்கள். அதற்கு நேரமும் பயிற்சியும் தேவைப்படுகிறது.a எனவே, பிள்ளைகளை வாயாரப் பாராட்டி அவர்கள் இன்னும் ஆர்வத்துடன் வாசிப்பதற்கு ஊக்குவிக்க மறவாதீர்கள். இப்படித் தட்டிக்கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்தினால், வாசிப்பதற்கான ஆசை அவர்களில் துளிர்க்கும்.
வாசிப்பது பயனுள்ளது இனிமையானது
ஆழ்ந்து படிப்பது எப்படியெனப் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பது, நோக்கத்துடன் வாசிக்க உதவுகிறது. ஆழ்ந்து படிப்பது என்பது உண்மைகளை அறிந்துகொள்வதையும், அவை ஒன்றுக்கொன்று எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளன என்று புரிந்துகொள்வதையும் உட்படுத்துகிறது. தகவல்களை ஒன்றோடொன்று தொடர்புபடுத்திப் பார்ப்பதற்கும் நினைவில் வைப்பதற்கும் அவற்றைப் பயன்படுத்துவதற்கும் திறமை தேவைப்படுகிறது. ஆழ்ந்து படிப்பது எப்படியென ஒரு பிள்ளை கற்றுக்கொண்டதோடு, அதைக் கடைப்பிடிப்பது எப்படியெனப் புரிந்துகொள்கையில் அது பயனும் இனிமையும் தருவதாய் ஆகிறது.—பிர. 10:10.
ஆழ்ந்து படிப்பதற்கான வழிமுறைகளைக் கற்றுக்கொடுங்கள். குடும்ப வழிபாடு, தினவசன கலந்தாலோசிப்பு போன்றவற்றுக்கான சமயங்கள் ஆழ்ந்து படிக்கும் திறமைகளை வளர்ப்பதற்கு அருமையான சந்தர்ப்பங்கள். கொஞ்ச நேரம் அமைதியாக உட்கார்ந்து ஒரு தகவலின் மீது மனதைச் செலுத்துவது, கவனத்தை ஒருமுகப்படுத்த பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கிறது; இது மிக மிக முக்கியம். மேலுமாக, இப்போது உங்கள் மகன் கற்றுக்கொண்ட விஷயம் எப்படி ஏற்கெனவே அவனுக்குத் தெரிந்த விஷயத்துடன் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதைச் சொல்லும்படி நீங்கள் அவனை ஊக்கப்படுத்தலாம். இது, விஷயங்களை ஒப்பிட்டுப் பார்க்க அவனுக்குக் கற்றுக்கொடுக்கிறது. உங்கள் மகள் வாசித்தவற்றை அவளுடைய சொந்த வார்த்தைகளில் தொகுத்துக் கூறும்படி நீங்கள் கேட்கலாம், அல்லவா? இது, அர்த்தத்தைப் புரிந்துகொண்டு அதை நினைவில் வைக்க அவளுக்கு உதவும். திரும்பச் சொல்வது, அதாவது ஒரு கட்டுரையை வாசித்த பிறகு அதிலுள்ள முக்கியக் குறிப்புகளை வேறு வார்த்தைகளில் சொல்வது, நினைவில் நிறுத்துவதற்கான மற்றொரு வழியாகும்; இதையும் நீங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கலாம். சேர்ந்து படிக்கும் சமயங்களிலோ சபைக் கூட்டங்களிலோ சுருக்கமாகக் குறிப்பெடுப்பதற்குச் சிறு பிள்ளைகளுக்கும்கூட நீங்கள் கற்றுக்கொடுக்கலாம். இது, அவர்கள் கவனத்தை ஒருமுகப்படுத்த மிகச் சிறந்த வழி! இந்த எளிய வழிமுறைகள், கற்றுக்கொள்வதைச் சுவாரஸ்யமானதாயும் அர்த்தமுள்ளதாயும் ஆக்குவதற்கு உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் உதவும்.
ஆழ்ந்து படிப்பதற்குத் தோதான சூழல்களை உருவாக்குங்கள். அமைதியான, சௌகரியமான இடமும், நல்ல காற்றோட்டமும் போதிய வெளிச்சமும் இருந்தால் கவனத்தை ஒருமுகப்படுத்துவது எளிது. அதோடு, ஆழ்ந்து படிப்பதைக் குறித்த பெற்றோரின் கண்ணோட்டமும் மிக முக்கியம். இது குறித்து ஒரு தாய் இவ்வாறு சொல்கிறார்: “வாசிப்பதற்கும் ஆழ்ந்து படிப்பதற்கும் தவறாமல் நேரம் ஒதுக்குவதும் அவற்றைக் கிரமமாய்ச் செய்வதும் மிக மிக முக்கியம். இது பிள்ளைகள் காரியங்களைச் சரிவரச் செய்வதற்கு உதவுகிறது. அப்போது, எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்.” அநேக பெற்றோர் படிப்பு நேரத்தில் வேறெதையும் செய்ய பிள்ளைகளை அனுமதிப்பதில்லை. ஆழ்ந்து படிக்கும் பழக்கத்தைப் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பதில் இந்த அணுகுமுறை பெரிதும் உதவுவதாக ஓர் அதிகாரி சொல்கிறார்.
ஆழ்ந்து படிப்பதன் பலனைச் சிறப்பித்துக் காட்டுங்கள். முடிவாக, ஆழ்ந்து படிப்பதால் கிடைக்கும் பலன்களைப் பற்றிப் புரிந்துகொள்ள பிள்ளைகளுக்கு உதவுங்கள். ஆழ்ந்து படிப்பதன் முக்கிய நோக்கமே கற்றுக்கொண்டவற்றைக் கடைப்பிடிப்பதுதான். ஓர் இளம் சகோதரர் இவ்வாறு ஒப்புக்கொண்டார்: “படிப்பதால் என்ன பிரயோஜனம் என்பது எனக்குப் புரியாதபோது, அதை வாசிப்பதில் எனக்கு ஆர்வமே வருவதில்லை. ஆனால், அது எனக்குப் பிரயோஜனமாய் இருக்கும் என்பதை உணரும்போது அதைப் புரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தோடு வாசிப்பேன்.” ஒரு முக்கியக் குறிக்கோளை அடைவதற்கு ஆழ்ந்து படிப்பது அவசியம் என்பதைப் பிள்ளைகள் உணரும்போது அவர்கள் அதில் மூழ்கிப்போவார்கள். வாசிப்பதற்கான ஆசையை வளர்த்துக்கொண்டதைப் போலவே, ஆழ்ந்து படிப்பதற்கான ஆசையையும் வளர்த்துக்கொள்வார்கள்.
அரும்பெரும் பரிசு
வாசிப்பதற்கான ஆசையை உங்கள் பிள்ளைகளில் ஊட்டி வளர்ப்பதால் வரும் பலன்களைப் பட்டியலிட்டால் அது நீண்டுகொண்டே போகும். பள்ளியில், வேலையிடத்தில், மனித உறவுகளில், நம் உலகைப் புரிந்துகொள்வதில், பிள்ளைக்கும் பெற்றோருக்கும் இடையே நெருங்கிய பந்தத்தை உருவாக்குவதில் என எல்லாவற்றிலும் வெற்றி காண முடிகிறது. இவை தவிர, வாசிப்பதாலும், ஆழ்ந்து படிப்பதாலும் ஆத்ம திருப்தியும் கிடைக்கிறது.
எல்லாவற்றையும்விட, ஆழ்ந்து படிப்பதற்கான ஆசை உங்கள் பிள்ளைகளுக்கு இருந்தால், யெகோவாவைப் பயபக்தியோடு வணங்க அது அவர்களுக்கு உதவும். ஆழ்ந்து படிப்பதற்கான ஆசை, பைபிள் சத்தியத்தின் ‘அகலத்தையும் நீளத்தையும் உயரத்தையும் ஆழத்தையும்’ மனதிலும் இதயத்திலும் பதித்துக்கொள்வதற்கு அஸ்திவாரமாய் அமைகிறது. (எபே. 3:18) உண்மையில், கிறிஸ்தவப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்காக நேரத்தையும் கவனத்தையும் கொடுத்து, அவர்களுடைய வாழ்க்கை நன்கு அமைய தங்களாலான எல்லாவற்றையும் செய்தால், பிள்ளைகள் யெகோவாவை வணங்கத் தீர்மானம் எடுப்பார்களென எதிர்பார்க்கலாம். நல்ல படிப்புப் பழக்கங்களைப் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பது, கடவுளோடு ஒரு நெருங்கிய பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளவும், அது முறிந்துபோகாமல் பார்த்துக்கொள்ளவும் அவர்களுக்கு உதவுகிறது. ஆகவே, வாசிக்கவும் ஆழ்ந்து படிப்பதற்குமான ஆசையை உங்கள் பிள்ளைகளில் ஊட்டி வளர்க்க நீங்கள் பாடுபடுகையில் யெகோவாவின் ஆசீர்வாதத்திற்காக ஜெபியுங்கள்.—நீதி. 22:6.
[அடிக்குறிப்பு]
a கற்பதில் குறைபாடுள்ள பிள்ளைகளுக்கு வாசிப்பதும், ஆழ்ந்து படிப்பதும் பெரும் சவாலாக இருக்கின்றன. அப்படிப்பட்டவர்களுக்கு உதவ பெற்றோர் என்ன செய்யலாம் என்பதைத் தெரிந்துகொள்ள, விழித்தெழு! பிப்ரவரி 22, 1997, பக்கங்கள் 3-10-ஐப் பாருங்கள்.
[பக்கம் 26-ன் பெட்டி/படம்]
வாசிப்பது . . .
• அவர்களுக்கென்று புத்தகங்களைக் கொடுங்கள்
• சத்தமாக வாசியுங்கள்
• வாசிப்பில் ஈடுபடுத்துங்கள்
• வாசித்தவற்றைக் கலந்துபேசுங்கள்
• உங்களிடம் வாசித்துக் காட்டச் சொல்லுங்கள்
• கேள்வி கேட்க ஊக்கப்படுத்துங்கள்
ஆழ்ந்து படிப்பது . . .
• பெற்றோராக நல்ல முன்மாதிரி வையுங்கள்
• பின்வருவனவற்றில் உங்கள் பிள்ளைகளுக்குப் பயிற்சி அளியுங்கள்:
○ கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்கு
○ ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு
○ தொகுத்துக் கூறுவதற்கு
○ திரும்பச் சொல்வதற்கு
○ குறிப்பெடுப்பதற்கு
• ஆழ்ந்து படிப்பதற்குத் தோதான சூழல்களை உருவாக்குங்கள்
• ஆழ்ந்து படிப்பதன் பலனைச் சிறப்பித்துக் காட்டுங்கள்