உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w11 1/1 பக். 11-32
  • கல்யாணமான புதிதில்...

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கல்யாணமான புதிதில்...
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • அளவுக்கு மிஞ்சி எதிர்பார்க்காதீர்கள்
  • நிலைத்துநிற்கும் திருமணத்திற்கு இரண்டு திறவுகோல்கள்
    குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம்
  • சந்தோஷமான குடும்பம்—பகுதி 1
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
  • திருமணம்—கடவுளின் பரிசு
    கடவுளுடைய அன்பில் நிலைத்திருங்கள்
  • குடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக்குதல்
    நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
w11 1/1 பக். 11-32

குடும்ப மகிழ்ச்சிக்கு

கல்யாணமான புதிதில்...

கணவர்: “நாங்கள் இரண்டு பேரும் இப்படி எதிரும் புதிருமாக இருப்போமென்று கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை! நான் காலையில் சீக்கிரமாய் எழுந்திருக்க இஷ்டப்படுவேன்; அவளோ ராத்திரி ரொம்ப நேரம் கழித்துத் தூங்கப்போவதால், காலையில் தாமதமாகவே எழுந்திருப்பாள். நன்றாகத்தான் சிரித்துப் பேசிக்கொண்டு இருப்பாள், ஆனால் திடீரென்று என்மேல் எரிந்துவிழ ஆரம்பித்துவிடுவாள்; என்னால் அவளைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அதுமட்டுமா... நான் சமைக்கும்போது சதா குறை கண்டுபிடித்துக்கொண்டே இருப்பாள்; அதுவும், பாத்திரத்தைத் துடைக்கிற துணியிலேயே என் கையைத் துடைத்துவிடுவேனா... அது அவளுக்குப் பிடிக்கவே பிடிக்காது.”

மனைவி: “அவர் அதிகம் வாய் திறந்து பேச மாட்டார். ஆனால் நான் தொணதொணவென்று பேசிக்கொண்டே இருப்பேன். என் அம்மா வீட்டில் நாங்கள் எல்லாருமே அப்படித்தான் பேசுவோம்! அதுவும், சாப்பாட்டு நேரம் வந்துவிட்டால் போதும், வளவளவென்று பேசிக்கொண்டே சாப்பிடுவோம். அவர் சமைக்கும்போது, பாத்திரத்தைத் துடைக்கிற துணியிலேயே கையைத் துடைத்துவிடுவார். அதைப் பார்த்தாலே எனக்கு எரிச்சல் எரிச்சலாக வரும்! இந்த ஆண்களைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இப்படி இருந்தால் எப்படித்தான் வாழ்க்கையை ஓட்டுவது?”

நீங்கள் புதிதாகக் கல்யாணம் ஆனவரா? இதுபோன்ற சூழ்நிலையை நீங்களும் எதிர்ப்பட்டிருக்கிறீர்களா? திருமணத்திற்கு முன் உங்கள் துணையுடன் ‘டேட்டிங்’ செய்தபோது அவரிடம் இல்லாத பழக்கமெல்லாம் இப்போது அவரைத் தொற்றியிருப்பதுபோல் தோன்றுகிறதா? அப்படியென்றால், ‘திருமணமானவர்களுக்கு வரும் அன்றாடப் பிரச்சினைகளின்’ பாதிப்பை நீங்கள் எப்படிக் குறைக்கலாம்?—1 கொரிந்தியர் 7:28, டுடேஸ் இங்கிலீஷ் வர்ஷன்.

திருமண நாளின்போது உறுதிமொழிகளை எடுத்துவிட்டீர்கள் என்பதற்காக, நீங்களும் உங்கள் துணையும் திருமண வாழ்வில் கால் வைத்த அன்றே கரைகண்டவர்களாய் ஆகிவிட்டீர்களென்று நினைக்காதீர்கள். ஒருவேளை, திருமணத்திற்கு முன்பே மற்றவர்களிடம் நீங்கள் நன்றாக ஒத்துப்போகிறவராய் இருந்திருக்கலாம். ‘டேட்டிங்’ செய்தபோது அந்த விஷயத்தில் நீங்கள் இன்னும் முன்னேறியிருக்கலாம். இருந்தாலும், திருமணத்திற்குப் பின் அந்தத் திறமையை உரசிப் பார்ப்பதுபோல் புதுப்புது சோதனைகள் வரலாம்; அதனால், இன்னும் சில நல்ல குணங்களை நீங்கள் வளர்க்க வேண்டியிருக்கலாம். இதில் நீங்கள் அவ்வப்போது தோல்வி அடைவது சகஜம்தான். என்றாலும், இந்தக் குணங்களை உங்களால் நிச்சயமாக வளர்த்துக்கொள்ள முடியும்!

எந்தவொரு விஷயத்திலும் திறமையை வளர்த்துக்கொள்வதற்கு மிகச் சிறந்த வழி, அந்த விஷயத்தில் கைதேர்ந்த ஆலோசகரின் அறிவுரையைக் கேட்டு, அதன்படி நடப்பதே. அப்படியானால், திருமண விஷயத்தில் மிகச் சிறந்த ஆலோசகர் யார்? கடவுளாகிய யெகோவாவே! ஏனென்றால், நமக்குத் திருமண ஆசையைக் கொடுத்தவர் அவரே. (ஆதியாகமம் 2:22-24) உங்கள் திருமணம் ஆயிரம் காலத்துப் பயிராய்த் தழைத்தோங்க அவருடைய வார்த்தையான பைபிள் வழி சொல்கிறது. மணவாழ்வில் வரும் சவால்களைச் சமாளிக்க தம்பதியருக்கு அது சிபாரிசு செய்கிற சில திறமைகள் பின்வருமாறு:

திறமை 1. கலந்துபேசக் கற்றுக்கொள்ளுங்கள்

சவால்:

ஜப்பானில் வசிக்கும் கேஜீa என்பவர், தன் மனைவியிடம் கலந்துபேசாமலேயே சிலசமயங்களில் தீர்மானங்கள் எடுத்திருக்கிறார். “யாராவது எங்களை விருந்துக்கு அழைத்தார்கள் என்றால் என் மனைவியைக் கேட்காமல் கொள்ளாமல் ‘சரி, வருகிறோம்’ என்று சொல்லிவிடுவேன்; ஆனால், அந்த நேரம் அவளுக்குச் சரிப்பட்டு வராது என்பது அப்புறம்தான் எனக்குத் தெரியவரும்.”—கேஜீ. ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஆலன் என்பவர் இவ்வாறு சொல்கிறார்: “ஒவ்வொரு காரியத்தையும் செய்வதற்கு முன் அவளோடு கலந்துபேசுவது ஓர் ஆணுக்கு அழகில்லை என்று நினைத்தேன்.” இப்படி அவர் நினைத்ததற்கு அவர் வளர்ந்த சூழ்நிலைதான் காரணம். பிரிட்டனில் வசிக்கும் டையணும்கூட இப்படிச் சொல்கிறார்: “கல்யாணத்திற்கு முன்னால் என்ன செய்தாலும் வீட்டில் கலந்துபேசிதான் செய்வேன்; அதே பழக்கத்தில், கல்யாணம் ஆன பிறகும்கூட என் அம்மா வீட்டில்தான் கலந்துபேசிக்கொண்டிருந்தேன்.”

தீர்வு:

திருமணத் தம்பதியினரை “ஒரே உடலாக” யெகோவா கருதுகிறார் என்பதை நினைவில் வையுங்கள். (மத்தேயு 19:3-6) அவருடைய பார்வையில், மற்ற எல்லா பந்தங்களைக் காட்டிலும் கணவன்-மனைவி என்ற பந்தம்தான் மிகவும் முக்கியமானது. இந்த பந்தத்தைப் பலமாக வைத்துக்கொள்வதற்கு நல்ல பேச்சுத்தொடர்பு அத்தியாவசியம்.

ஆபிரகாமுடன் யெகோவா பேசிய விதத்தை ஒரு கணவனும் மனைவியும் ஆராய்ந்து பார்த்தார்கள் என்றால் அநேக விஷயங்களைக் கற்றுக்கொள்வார்கள். ஆதியாகமம் 18:17-33-ல் உள்ள கலந்துரையாடலை தயவுசெய்து வாசியுங்கள். ஆபிரகாமைத் தாம் மதித்ததை யெகோவா மூன்று விதங்களில் காட்டினார். (1) தாம் செய்யப் போவதை ஆபிரகாமிடம் தெரிவித்தார். (2) ஆபிரகாம் பேசியபோது காதுகொடுத்துக் கேட்டார். (3) ஆபிரகாமின் விருப்பத்திற்கு ஏற்ப தம்மால் முடிந்தவரை வளைந்துகொடுத்தார். உங்கள் துணையிடம் பேசும்போது யெகோவாவின் முன்மாதிரியை நீங்கள் எப்படிப் பின்பற்றலாம்?

இப்படிச் செய்துபாருங்கள்: உங்கள் இருவரையும் பாதிக்கிற ஒரு விஷயத்தைக் குறித்து நீங்கள் கலந்துபேசும்போது, (1) என்ன செய்தால் நன்றாக இருக்குமென நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதைத் தெரிவியுங்கள்; ஆனால், அதைக் கறாராகச் சொல்லாமல் ஆலோசனையாகச் சொல்லுங்கள்; (2) உங்கள் துணையின் அபிப்பிராயத்தையும் கேளுங்கள்; அவருடைய கண்ணோட்டம் வேறுபடலாம் என்பதையும் நினைவில் வையுங்கள். (3) முடிந்தபோதெல்லாம் உங்கள் துணையின் விருப்பத்திற்கேற்ப வளைந்துகொடுங்கள். இந்த விதத்தில் ‘நீங்கள் நியாயமானவர் என்பதைத் தெரியப்படுத்துங்கள்.’—பிலிப்பியர் 4:5.

திறமை 2. பக்குவமாகப் பேசக் கற்றுக்கொள்ளுங்கள்

சவால்:

வளர்ப்பு அல்லது கலாச்சாரம் காரணமாக, உங்கள் அபிப்பிராயத்தைக் கறாராக, ஏன், வெடுக்கென்றும்கூட நீங்கள் சொல்லிவிடலாம். உதாரணத்திற்கு, ஐரோப்பாவில் வாழும் லீயம் இவ்வாறு சொல்கிறார்: “எங்கள் ஊரிலெல்லாம், மக்களுக்குப் பக்குவமாகப் பேசியே பழக்கமில்லை. அதனாலோ என்னவோ, நானும் என் மனைவியிடம் வெடுக்கென்று பேசிவிடுவேன்; அந்தமாதிரி நேரத்தில் அவள் நொந்துபோய்விடுவாள். அதனால், நான் ரொம்பவே மென்மையாகப் பேசக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.”

தீர்வு:

நீங்கள் பேசுகிற விதத்தை உங்கள் துணை விரும்புவார் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். (பிலிப்பியர் 2:3, 4) மிஷனரி ஊழியராய் இருந்த ஒருவருக்கு அப்போஸ்தலன் பவுல் கொடுத்த அறிவுரை, புதுமணத் தம்பதிகளுக்கும் பிரயோஜனமாக இருக்கும். அவர் இவ்வாறு சொன்னார்: ‘நம் எஜமானரின் ஊழியக்காரனோ சண்டைபோடக் கூடாது; மாறாக, எல்லாரிடமும் மென்மையாய் நடந்துகொள்ள வேண்டும்.’ இங்கே, “மென்மை” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை, ‘சாமர்த்தியம், அதாவது சாதுரியம்’ என்றும் மொழிபெயர்க்கப்படலாம். (2 தீமோத்தேயு 2:24, அடிக்குறிப்பு) சாதுரியம் என்பது, யார் மனதையும் நோகடிக்காமல் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, பிரச்சினையைப் பக்குவமாகக் கையாளும் திறமையாகும்.

இப்படிச் செய்துபாருங்கள்: உங்கள் கணவர்/மனைவி மீது உங்களுக்குக் கோபம் வந்ததென்றால், நீங்கள் உங்கள் துணையிடம் பேசுகிறீர்கள் என்பதைச் சற்று நேரத்திற்கு மறந்துவிட்டு, உங்கள் முதலாளியிடமோ நெருங்கிய நண்பரிடமோ பேசுவதாக நினைத்துக்கொள்ளுங்கள். அப்போது நீங்கள் கோபமாகப் பேசுவீர்களா? வாய்க்கு வந்தபடி வார்த்தைகளை அள்ளி வீசுவீர்களா? அவ்வாறெல்லாம் செய்ய மாட்டீர்கள்தானே! அப்படியென்றால், அவர்களிடம் பேசுவதைவிட உங்கள் துணையிடம் இன்னும் எந்தளவு பக்குவத்தோடும் மதிப்பு மரியாதையோடும் பேச வேண்டும் என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்.—கொலோசெயர் 4:6.

திறமை 3. புதிய பொறுப்புக்கேற்ப நடக்கக் கற்றுக்கொள்ளுங்கள்

சவால்:

ஆரம்பத்தில் ஒரு கணவர் தன் பொறுப்பைச் சரிவரச் செய்யாமற்போகும்போது, அவரை அறியாமலேயே தன் மனைவியைப் புண்படுத்திவிடலாம்; அவ்வாறே ஒரு மனைவியும், ஆலோசனைகளைப் பக்குவமாக எடுத்துச்சொல்லத் தெரியாமல் பட்டென்று சொல்லிவிடலாம். உதாரணத்திற்கு, இத்தாலியில் வசிக்கும் அன்டோனியோ இவ்வாறு சொல்கிறார்: “என் அப்பா, என் அம்மாவிடம் கலந்துபேசாமலேயே குடும்பத்திற்காகத் தீர்மானங்களை எடுத்துவிடுவார். அதனால், நானும் ஆரம்பத்தில் அப்படித்தான் செய்தேன்.” கனடாவில் வாழும் டெபி இவ்வாறு சொல்கிறார்: “சுத்தமாக இருக்கும்படி என் கணவரிடம் சதா சொல்லிக்கொண்டே இருப்பேன். இப்படி அவரை நச்சரித்ததாலோ என்னவோ அவர் இன்னும் முரண்டுபிடிக்க ஆரம்பித்துவிட்டார்.”

கணவர் செய்ய வேண்டியது:

சில கணவர்கள், பெற்றோருக்குப் பிள்ளைகள் கீழ்ப்படிவது பற்றியும் கணவருக்கு மனைவி கீழ்ப்படிவது பற்றியும் பைபிளில் உள்ள கட்டளையைக் குழப்பிக்கொள்கிறார்கள். (கொலோசெயர் 3:20; 1 பேதுரு 3:1) ஆனால், ஒரு கணவர் ‘தன் மனைவியோடு சேர்ந்திருப்பார், அவர்கள் இருவராக அல்ல ஒரே உடலாக இருப்பார்கள்’ என்றுதான் பைபிள் சொல்கிறதே ஒழிய, ஒரு பெற்றோர் தன் பிள்ளையோடு சேர்ந்திருப்பார் என்று பைபிள் சொல்வதில்லை. (மத்தேயு 19:5) அதோடு, ஒரு மனைவி, கணவருக்கு ஏற்ற துணையாக இருப்பார் என்றுதான் யெகோவா சொல்கிறாரே ஒழிய ஒரு பிள்ளை தன் பெற்றோருக்கு ஏற்ற துணையாக இருக்கும் என்று அவர் சொல்வதில்லை. (ஆதியாகமம் 2:18) சற்று யோசித்துப் பாருங்கள்: ஒரு கணவர் தன் பிள்ளையை நடத்துவதுபோல் தன் மனைவியை நடத்துகிறார் என்றால் திருமண ஏற்பாட்டை அவர் மதிக்கிறார் என்று சொல்ல முடியுமா?

சொல்லப்போனால், இயேசு எப்படி கிறிஸ்தவ சபையை நடத்துகிறாரோ அப்படியே ஒரு கணவர் தன் மனைவியை நடத்தவேண்டும் என்று பைபிள் அறிவுறுத்துகிறது. உங்கள் மனைவி உங்களைத் தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால்: (1) எள் என்பதற்குள் எண்ணெயாக இருக்கவேண்டும் என்று அவரிடம் எதிர்பார்க்காதீர்கள்; (2) என்ன பிரச்சினை வந்தாலும் உங்களுடைய சொந்த உடல்மீது அன்பு காட்டுவதுபோல் அவர்மீது அன்பு காட்டுங்கள்.—எபேசியர் 5:25-29.

மனைவி செய்ய வேண்டியது:

கல்யாணத்திற்குப் பிறகு உங்கள் கணவரே உங்களுக்குக் கடவுள் நியமித்த தலைவர் என்பதை மனதில் வையுங்கள். (1 கொரிந்தியர் 11:3) நீங்கள் கணவருக்கு மரியாதை காட்டினால் கடவுளுக்கும் மரியாதை காட்டுகிறீர்கள் என்று அர்த்தம். கணவருக்கு மரியாதை காட்டாவிட்டால் உங்கள் கணவரை மட்டுமல்ல, கடவுளையும் அவருடைய சட்டங்களையும் நீங்கள் மதிக்கவில்லை என்றே அர்த்தம்.—கொலோசெயர் 3:18.

பிரச்சினைகளைத் தீர்ப்பது பற்றி இருவருமாகப் பேசும்போது, உங்களுடைய கணவரைத் தாக்கிப் பேசுவதற்குப் பதிலாகப் பிரச்சினைகளை மட்டுமே தாக்கிப் பேசுங்கள். உதாரணத்திற்கு, தன் கணவரான அகாஸ்வேரு ராஜா ஓர் அநீதியைச் சரிசெய்ய வேண்டும் என்று எஸ்தர் ராணி எதிர்பார்த்தார். அந்தச் சமயத்தில், தன் கணவரைத் தாக்கிப் பேசாமல் விஷயத்தைப் பக்குவமாக எடுத்துச்சொன்னார். அவர் சொன்ன ஆலோசனையை அவருடைய கணவர் கேட்டு அந்த அநீதியைச் சரிசெய்தார். (எஸ்தர் 7:1-4; 8:3-8) உங்களுடைய கணவர் உங்கள்மீது அன்பைப் பொழிய வேண்டுமென்றால்: (1) குடும்பத் தலைவர் என்கிற புதிய பொறுப்பைச் சரியாகச் செய்வதற்கு கால அவகாசம் கொடுங்கள்; (2) அவர் தவறு செய்தாலும்கூட அவரிடம் மரியாதையாக நடந்துகொள்ளுங்கள்.—எபேசியர் 5:33.

இப்படிச் செய்துபாருங்கள்: உங்களுடைய கணவர் இந்த விஷயத்தில் மாற வேண்டும், அந்த விஷயத்தில் மாற வேண்டும் என்று குறைபட்டுக்கொள்வதற்குப் பதிலாக, நீங்கள் எந்தெந்த விஷயங்களில் மாற வேண்டும் என்பதைப் பட்டியலிடுங்கள். கணவர்களே: ஒரு கணவராக நீங்கள் செய்ய வேண்டியதைச் சரியாகச் செய்யாததால் உங்கள் மனைவிக்குக் கோபம் வந்துவிட்டது என வைத்துக்கொள்ளுங்கள்; நீங்கள் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்று அவரிடமே கேளுங்கள்; அவர் சொல்வதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். மனைவிகளே: நீங்கள் மரியாதை கொடுக்கவில்லை என்று உங்களுடைய கணவரின் மனதுக்குப் பட்டால், நீங்கள் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்று அவரிடமே கேளுங்கள்; அவர் சொல்வதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

அளவுக்கு மிஞ்சி எதிர்பார்க்காதீர்கள்

சந்தோஷமாகவும் சமாதானமாகவும் உங்கள் மணவாழ்க்கையை நடத்தக் கற்றுக்கொள்வதை, சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்வதற்கு ஒப்பிடலாம். விழுந்து விழுந்து எழுந்துதான் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ள முடியுமென்று உங்களுக்கே தெரியும். அவ்வாறே, தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிற தவறுகளைச் செய்து செய்துதான் வாழ்க்கை எனும் வண்டியை ஓட்டுவதில் அனுபவசாலியாக ஆவீர்கள்.

நகைச்சுவை உணர்வையும் வளர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் துணை உங்களிடம் எதிர்பார்க்கிற காரியங்களை அசட்டை செய்துவிடாதீர்கள்; அதேசமயம், நீங்கள் செய்கிற தவறுகளைப் பார்த்துச் சிரிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் மணவாழ்வின் முதல் வருடத்தில் வசந்தம் பூத்துக்குலுங்குவதற்கு, உங்கள் துணையைச் சந்தோஷப்படுத்தக் கிடைக்கிற ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நழுவவிடாதீர்கள். (உபாகமம் 24:5) எல்லாவற்றுக்கும் மேலாக, கடவுளுடைய வார்த்தையே தீபமாக இருந்து உங்கள் இல்லறத்தில் ஒளிவீச இடமளியுங்கள். இப்படிச் செய்தீர்கள் என்றால், உங்களுடைய திருமணம் ஆயிரம் காலத்துப் பயிராய்த் தழைத்தோங்குவது உறுதி! (w10-E 08/01)

பைபிளே எங்களுக்குக் கைகொடுத்தது!

கல்யாணமான புதிதில் டோரு, அக்கிக்கோ என்ற ஜப்பானியத் தம்பதியர், ஒருவரையொருவர் உயிருக்குயிராய் நேசித்தார்கள். ஆனால் எட்டே மாதங்களில், அவர்கள் விவாகரத்து செய்யத் தீர்மானித்தார்கள். அப்படி என்ன நடந்தது? அவர்களே சொல்கிறார்கள்.

டோரு: “நிறைய விஷயங்களில் நானும் என் மனைவியும் ஒத்துப்போகவில்லை என்பது கொஞ்ச நாளைக்குப் பிறகுதான் தெரிந்தது. உதாரணமாக, எனக்கு டிவியில் விளையாட்டு நிகழ்ச்சிகளைத்தான் பார்க்கப் பிடிக்கும்; அவளுக்கோ நாடகங்களைத்தான் பார்க்கப் பிடிக்கும். எனக்கு வெளியே போவதற்கு இஷ்டம்; ஆனால், அவளுக்கு வீட்டிலேயே இருக்க இஷ்டம்.”

அக்கிக்கோ: “அவருடைய குடும்பத்தார் என்ன செய்யச் சொன்னாலும் டோரு செய்துவிடுவார்; ஆனால், என்னிடம் ஒரு வார்த்தைகூட கேட்க மாட்டார். ‘உங்களுக்கு நான் முக்கியமா, உங்கள் அம்மா முக்கியமா?’ என்று கேட்பேன். அதுமட்டுமில்லை, டோரு நிறைய சந்தர்ப்பங்களில் என்னிடம் உண்மையைச் சொல்லாமல் மழுப்பியபோது, என்னால் அதைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. இப்படிப் பொய்க்கு மேல் பொய் பேசிக்கொண்டிருந்தால், ‘என்னால் உங்களோடு சேர்ந்து வாழவே முடியாது’ என்று வெட்டு ஒன்று-துண்டு இரண்டு பாணியில் சொல்லிவிட்டேன்.”

டோரு: “நான் வெறுத்துப்போய், என்னோடு வேலை செய்கிறவரிடம், என் மனைவியை எப்படிச் சமாளிப்பது என்று ஆலோசனை கேட்டேன். ‘அவளை, வாயைப் பொத்திக்கொண்டு சும்மா இருக்கச் சொல்; அதற்கு மேல் அவள் ஏதாவது பேசினால்... அடி பின்னிவிடு’ என்றார். ஒரு தடவை, அவள் கன்னத்தில் ‘பளார்’ என்று ஓர் அறை விட்டு, மேஜையைத் ‘தடால்’ எனக் கவிழ்த்துப் போட்டேன். எங்கள் இரண்டு பேருக்கிடையில் பெரிய சண்டை வெடித்துவிட்டது; அவள் வீட்டைவிட்டுப் போய்விட்டாள். அப்புறம், டோக்கியோவில் இருந்த ஓர் ஓட்டலிலிருந்து அவளைக் கூட்டிக்கொண்டு வந்தேன். கடைசியாக, நாங்கள் இருவரும் விவாகரத்து செய்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தோம். அன்றைக்கு காலையில், வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு நான் கிளம்பியபோது, அக்கிக்கோ அவளுடைய துணிமணிகளை ‘சூட்கேஸில்’ எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள்.”

அக்கிக்கோ: “நான் ‘சூட்கேஸை’ எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தபோது, ‘காலிங்பெல்’ அடித்தது. கதவருகே ஒரு பெண்மணி நின்றுகொண்டிருந்தார். அவர் ஒரு யெகோவாவின் சாட்சி. அவரை வீட்டிற்குள் அழைத்தேன்.”

டோரு: “நான் அலுவலகத்திற்கு வந்தபோது, ‘விவாகரத்து செய்தே ஆக வேண்டுமா... வேறு வழியே இல்லையா...’ என்று மறுபடியும் யோசித்துப் பார்த்தேன். அதனால், வந்த வேகத்திலேயே வீட்டிற்குக் கிளம்பினேன். நான் வீட்டிற்குப் போனபோது, அக்கிக்கோ ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். அந்தப் பெண் என்னிடம், ‘நீங்கள் இருவரும் சேர்ந்து ஒரு காரியம் செய்தீர்கள் என்றால் ரொம்ப நன்றாக இருக்கும். என்னோடு பைபிளைப் படிக்க உங்களுக்கு விருப்பமா?’ என்று கேட்டார். ‘நாங்கள் சேர்ந்து வாழ்வதற்கு நான் எதை வேண்டுமானாலும் செய்வேன்’ என்றேன்.”

அக்கிக்கோ: “நாங்கள் பைபிளைப் படிக்க அந்தப் பெண் ஏற்பாடு செய்தார். திருமணத்தைப் பற்றி பைபிள் சொல்வதை வாசித்தபோது எங்கள் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. ‘இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்’ என்ற வசனம்தான் அந்தத் திருப்பத்தை ஏற்படுத்தியது.”—ஆதியாகமம் 2:24.

டோரு: “நான் என்ன செய்ய வேண்டுமென்று எனக்கு உடனே புரிந்துவிட்டது. அதனால் என் பெற்றோரிடம் இவ்வாறு சொல்லிவிட்டேன்: ‘இனிமேல் என் மனைவியிடம் கலந்துபேசிய பிறகுதான் எந்தத் தீர்மானத்தையும் எடுப்பேன்!’ அதோடு, அளவுக்கதிகமாகக் குடிப்பதையும் நிறுத்திவிட்டேன். பொய் சொல்வது கடவுளுக்குப் பிடிக்காது எனத் தெரிந்துகொண்டவுடன், எப்போதும் உண்மையே பேச முயற்சி செய்தேன்.”

அக்கிக்கோ: “நானும் நிறைய மாற்றங்கள் செய்தேன். உதாரணத்திற்கு, முன்பெல்லாம் டோரு என்ன சொன்னாலும் நான் ஏறுக்குமாறாகப் பேசிக்கொண்டிருப்பேன். ஆனால், பைபிள் சொல்கிறபடி அவர் வாழ்வதைப் பார்த்தபோது, அவர் பேச்சுக்குக் கட்டுப்பட்டு நடக்க ஆரம்பித்தேன். (எபேசியர் 5:22-24) கடந்த 28 வருஷத்திற்கும் மேலாக நாங்கள் சந்தோஷமாய்க் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கிறோம். நாங்கள் ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துகொண்டதாலும் பைபிள் அறிவுரைகளைக் கடைப்பிடித்ததாலும் எங்களுக்கு வந்த பிரச்சினைகளைச் சமாளிக்க முடிந்தது.”

a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்...

  • ஆலோசனை கேட்க முதலில் யாரிடம் செல்கிறேன்?—என் துணையிடமா, மற்றவர்களிடமா?

  • என் கணவர்/மனைவி மீது மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருப்பதைக் காட்ட கடந்த 24 மணிநேரத்தில் நான் என்ன செய்திருக்கிறேன்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்