அனைவருக்கும் ஓர் அழைப்பு!
எதற்காக இந்த அழைப்பு? யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகங்களில் ஒன்றைப் பார்வையிடுவதற்காக; இது, பொதுவாக பெத்தேல் என்றழைக்கப்படுகிறது. இதுபோன்ற 118 அலுவலகங்கள் பல்வேறு நாடுகளில் அமைந்துள்ளன. பெத்தேலைப் பார்வையிட வருகிறவர்கள் பெரும்பாலும் அங்கு நடைபெறுகிற வேலைகளைப் பார்த்து மனதாரப் பாராட்டுகிறார்கள்.
மெக்சிகோ கிளை அலுவலகத்தில் யெகோவாவுக்காக சந்தோஷமாய் உழைக்கிற அநேகரை பார்த்த ஓர் இளம் பைபிள் மாணாக்கர் மனம் நெகிழ்ந்து போனார்; “நான் பெத்தேல் குடும்பத்தில் ஒருவராயிருக்க என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். “முதலில் நீங்கள் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும். பிறகு, ஒரு பயனியராக, அதாவது முழுநேர ஊழியராகச் சேவை செய்தால் நல்லது” என்று அவரிடம் சொல்லப்பட்டது. அவர் அதன்படியே செய்தார். இரண்டு வருடங்களுக்கு பிறகு மெக்சிகோ பெத்தேலில் சேவை செய்வதற்கு அவர் அழைக்கப்பட்டார்; அவர் 20 வருடங்களாக அங்கு சேவை செய்து வருகிறார்.
பெத்தேல் என்பதன் அர்த்தம்
எபிரேய மொழியில் “பெத்தேல்” என்ற வார்த்தைக்கான அர்த்தம் கடவுளுடைய வீடு. (ஆதி. 28:19) பல்வேறு கிளை அலுவலகங்களில் பைபிள்களும் பைபிள் பிரசுரங்களும் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன; அதோடுகூட, உலகமுழுவதிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய 1,00,000-க்கும் மேலான சபைகளுக்கு ஆன்மீக உதவியும் அளிக்கப்படுகிறது. வித்தியாசப்பட்ட சமுதாயங்களையும் கலாச்சாரங்களையும் சேர்ந்த சுமார் 20,000 ஆண்களும் பெண்களும் பெத்தேலில் சேவை செய்கிறார்கள்; இவர்கள் யெகோவாவுக்கும் தங்கள் ஆன்மீக சகோதர சகோதரிகளுக்கும் தன்னலமின்றி முழுநேரமாகச் சேவை செய்கிறார்கள். பெத்தேலில் பல வருடங்களைக் கழித்திருப்பவர்கள் துடிப்பான இளைஞர்களுடன் தோளோடு தோள் சேர்ந்து சேவை செய்கிறார்கள். மாலையிலும் சனி, ஞாயிறுகளிலும் பெத்தேல் குடும்பத்தினர் அருகிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளோடு சேர்ந்து கூட்டங்களுக்கும் ஊழியத்திற்கும் சென்று மகிழ்கிறார்கள். அதோடு, ஓய்வு நேரத்தை பைபிள் படிப்பு, பொழுதுபோக்கு, தனிப்பட்ட காரியங்கள் ஆகியவற்றிற்காக பயன்படுத்துகிறார்கள்.
பெத்தேல் குடும்பத்தினர் தங்களுடைய சொந்தச் செலவுக்காக ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையைப் பெறுகிறார்கள். ருசியுள்ள சத்தான உணவைச் சாப்பிடுகிறார்கள்; சுத்தமான சௌகரியமான அறைகளில் வசிக்கிறார்கள். ஆடம்பரமாய் வாழ்வதற்காக பெத்தேல் வீடுகள் அமைக்கப்படவில்லை. இருந்தாலும், தங்குவோருக்குப் பிரயோஜனமாய் இருக்கும் விதத்தில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. பெத்தேலைப் பார்வையிட வருகிறவர்கள், அங்குள்ள கட்டிடங்கள், சுற்றுப்புறங்கள் சுத்தமாக வைக்கப்பட்டிருப்பதையும் வேலைகள் சுமுகமாக நடைபெறுவதையும் பார்த்து மனம் கவரப்படுகிறார்கள்; அதுமட்டுமல்ல, அங்குள்ள அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பாக ஒன்றுசேர்ந்து வேலை செய்வதைப் பார்த்தும் மனங்கவரப்படுகிறார்கள். அவர்கள் எல்லாரும் விறுவிறுப்பாக செய்கிற வேலையின் மத்தியிலும் பார்வையாளர்களிடம் சிநேகப்பான்மையாக நடந்துகொள்கிறார்கள். பெத்தேல் ஊழியர்களிடையே சமுதாய வேறுபாடுகளோ உயர்ந்த வேலை, தாழ்ந்த வேலை என்ற எண்ணங்களோ இல்லை. சுத்தம் செய்வது, தோட்டத்தைப் பராமரிப்பது, சமைப்பது, அச்சகத்தில் அல்லது அலுவலகத்தில் பணி புரிவது என எல்லா வேலையுமே முக்கியமானது. பெத்தேல் ஊழியர்கள் ஒரு குழுவாக ஒன்றுசேர்ந்து யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழியத்தை ஆதரிக்கிறார்கள்.—கொலோ. 3:23.
பெத்தேல் ஊழியர்கள் சிலர் சொல்வதென்ன
இந்தச் சர்வதேச குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் பற்றி கூடுதலான சில விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம். பெத்தேலில் சேவை செய்ய எது அவர்களைத் தூண்டியது? மார்யோ என்பவரைப் பற்றி பார்க்கலாம். அவர் யெகோவாவின் சாட்சியான சமயத்தில் ஒரு பிரபலமான ஜெர்மானிய மோட்டார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்; அங்கே அவருக்கு எக்கச்சக்கமான சம்பாத்தியம் கிடைத்தது, முன்னேறுவதற்கான வாய்ப்பும் இருந்தது. என்றாலும், அவர் ஞானஸ்நானம் எடுத்து சீக்கிரத்திலேயே தன்னுடைய நாட்டிலுள்ள பெத்தேலில் ஒரு வாரம் சேவை செய்ய முன்வந்தார். அச்சகத்தில் நடைபெறும் வேலையில் உதவுவதற்கு அவர் நியமிக்கப்பட்டார். வெளியில் தன்னுடன் வேலை பார்த்தவர்களுக்கும் பெத்தேலில் தன்னுடன் வேலை பார்த்தவர்களுக்கும் இடையிலிருந்த பெரும் வித்தியாசத்தை அவர் கண்டார். ஆகவே, முழுநேரமும் பெத்தேலில் சேவை செய்வதற்கு விண்ணப்பித்தார். அவர் எடுத்த தீர்மானத்தை அவருடைய உறவினர்களாலும் சக பணியாளர்களாலும் கொஞ்சமும் ஜீரணிக்க முடியவில்லை; என்றாலும் மார்யோ இப்போது ஜெர்மனி பெத்தேலில் சந்தோஷமாக சேவை செய்து வருகிறார்.
அநேகர் எந்தவித பிரத்தியேக கல்வியோ விசேஷ திறன்களோ இல்லாமலேயே பெத்தேல் சேவையில் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள். மெக்சிகோ பெத்தேலில் 15 வருடங்கள் சேவை செய்திருக்கிற ஆபேலின் விஷயத்திலும் இதுவே உண்மை. “பெத்தேல் எனக்கு ஒரு ஸ்கூல் போல இருந்தது. இங்கே அதிநவீன அச்சு இயந்திரங்களை இயக்கக் கற்றுக்கொண்டேன். இங்கு கிடைத்த அறிவைப் பயன்படுத்தி வெளியே நிறைய சம்பாதிக்க முடியும்; ஆனால், இங்கு எனக்கு கிடைக்கிற மனசமாதானமும் மனநிறைவும் வேறெங்கும் கிடைக்காது என்று எனக்கு தெரியும். ஏனென்றால், இங்கு எவ்வித கவலையும் இல்லை, அநேக வியாபார நிறுவனங்களில் காணப்படுகிற போட்டி மனப்பான்மையும் இல்லை. எங்கும் பெறமுடியாத மிகச் சிறந்த கல்வியை நான் பெற்றிருப்பதாக உணருகிறேன்; இந்தக் கல்வி, ஆன்மீக ரீதியில் முன்னேறுவதற்கும் என் அறிவைத் தீட்டிக்கொள்வதற்கும் உதவியிருக்கிறது. இப்பேர்பட்ட ஆன்மீக பயன்களை எந்தவொரு பேர்பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்தும்கூட என்னால் பெற முடிந்திருக்காது” என்று அவர் கூறுகிறார்.
உற்சாகமூட்டும் விஜயம்
பெத்தேலை ஒரு முறை பார்வையிடச் சென்றாலே ஒருவர் ஆன்மீக ரீதியில் முன்னேற்றம் செய்யத் தூண்டப்படுவார். மெக்சிகோவைச் சேர்ந்த ஓமாரின் விஷயத்தில் இதுவே நடந்தது. அவருடைய அம்மா அவருக்கு பைபிள் சத்தியங்களை கற்றுக்கொடுத்திருந்தார். ஆனால், 17 வயதில் அவர் கூட்டங்களில் கலந்துகொள்வதையும் வெளி ஊழியத்தில் ஈடுபடுவதையும் நிறுத்திவிட்டார். கடைசியில், கெட்ட காரியங்களில் ஈடுபடவும் உலகத்தாரின் பாணியில் வாழவும் ஆரம்பித்தார். பிற்பாடு, தகவல்தொடர்பு நிறுவனத்தில் வேலை செய்தபோது, சில கருவிகளைப் பற்றி விளக்குவதற்காக மெக்சிகோ பெத்தேலுக்கு அனுப்பப்பட்டவர்களில் ஓமாரும் ஒருவராக இருந்தார். அவர் இப்படிச் சொல்கிறார்: “நாங்கள் விளக்கிக் காட்டிய பிறகு சில சகோதரர்கள் பெத்தேலைச் சுற்றிக் காட்டினார்கள். நான் பார்த்த காரியங்களும் என்னிடம் அவர்கள் அன்பாக நடந்துகொண்ட விதமும் யெகோவாவைவிட்டு பிரிந்து வாழ்கிற வாழ்க்கையைப் பற்றி என்னை யோசிக்க வைத்தது. நான் உடனடியாகக் கூட்டங்களுக்குச் செல்லவும் பைபிளைப் படிக்கவும் ஆரம்பித்தேன். பெத்தேலைப் பார்வையிட வந்த ஆறு மாதத்திலேயே ஞானஸ்நானம் பெற்றேன். பெத்தேலுக்குச் சென்றதால் கிடைத்த ஊக்குவிப்புக்காக நான் யெகோவாவுக்கு நன்றி சொல்கிறேன்.”
ஜப்பானைச் சேர்ந்த மாசாஹிக்கோவும் சாட்சிகள் குடும்பத்தில் வளர்க்கப்பட்டவர்தான். இருந்தாலும், கிறிஸ்தவ வாழ்க்கை கெடுபிடிகள் நிறைந்ததென அவர் நினைக்க ஆரம்பித்தார். பள்ளி நடவடிக்கைகளில் அவர் அதிகமாக மூழ்கிவிட்டதால், கூட்டங்களுக்கும் ஊழியத்திற்கும் செல்வதை நிறுத்திவிட்டார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “ஒரு நாள் என் குடும்பத்தாரும் சில கிறிஸ்தவ நண்பர்களும் பெத்தேலைச் சுற்றிப் பார்க்கத் தீர்மானித்தார்கள். என் குடும்பத்தார் வற்புறுத்தியதால் நானும் அவர்களோடு சென்றேன். பெத்தேலைப் பார்வையிட்டபோது நான் இதுவரை பெற்றிராத புத்துணர்ச்சியைப் பெற்றேன். சாட்சிகளல்லாத நண்பர்களிடம் இதுவரை கிடைக்காத நல்ல கூட்டுறவை மற்ற கிறிஸ்தவர்களுடன் அனுபவித்தேன். ஒரு கிறிஸ்தவனாக வாழ வேண்டுமென்ற ஆசை எனக்குள் துளிர்த்தது; அதனால், எனக்கு பைபிள் படிப்பு நடத்தும்படிக் கேட்கத் தீர்மானித்தேன்.” மாசாஹிக்கோ இப்போது அவருடைய சபையில் முழுநேர ஊழியராகச் சேவை செய்து வருகிறார்.
பிரான்சைச் சேர்ந்த ஒரு சகோதரி வேலைக்காக மாஸ்கோவுக்குச் சென்றார். அங்கு யெகோவாவின் சாட்சிகளோடு தொடர்புகொள்ள முடியாமற்போனதால் ஆன்மீக ரீதியில் பலவீனமானார். அதனால், கெட்ட காரியங்களில் ஈடுபட்டு கடைசியில் சாட்சியல்லாத ஒருவரை மணம் செய்தார். பின்னர், பிரான்சிலுள்ள ஒரு கிறிஸ்தவ சகோதரி அவரைப் பார்க்க வந்தார், அவர்கள் இருவரும் சேர்ந்து ரஷ்யாவிலுள்ள செயி. பீட்டர்ஸ்பர்கில் இருக்கிற பெத்தேலைப் பார்க்கச் சென்றார்கள். அவர் இவ்வாறு எழுதுகிறார்: “பெத்தேலில் நாங்கள் இன்முகத்துடன் வரவேற்கப்பட்டோம்; இது என் மனதைத் தொட்டது. அங்கு அப்படியொரு அமைதி நிலவியது. யெகோவாவின் கரம் அங்கிருப்பதை என்னால் உணர முடிந்தது. தவறு செய்து யெகோவாவின் அமைப்பை விட்டுவிலக என்னால் எப்படிதான் முடிந்ததோ? பெத்தேலைப் பார்வையிட்ட பிறகு, உதவிக்காக யெகோவாவிடம் ஜெபித்து புதுத் தீர்மானத்துடன் என் பிள்ளைகளுக்கு பைபிளைச் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன்.” ஆன்மீக ரீதியில் பலவீனமாய் இருந்த அந்தச் சகோதரி ஆன்மீக ரீதியில் சில உதவியைப் பெற்றிருந்தாலும், பெத்தேலுக்குச் சென்று பார்வையிட்டதே அவரை மிகவும் பலப்படுத்தியது; அதன் பிறகு அவர் நன்கு முன்னேற்றம் செய்தார்.
யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி தெரியாதவர்கள் பெத்தேலைப் பார்க்க வந்தால் அவர்கள் எப்படி உணருவார்கள்? அரசியலில் அதிக ஈடுபாடுள்ள ஆல்பர்ட்டூ 1988-ல் பிரேசில் பெத்தேலைப் பார்வையிட்டார். அங்கு எல்லாமே சுத்தமாக, ஒழுங்காக இருப்பதையும், முக்கியமாக வேலைகள் ஒளிவு மறைவில்லாமல் நடப்பதையும் பார்த்து அவர் பெரிதும் மனங்கவரப்பட்டார். அவர் பெத்தேலைப் பார்வையிடுவதற்குச் சற்று முன்பு, தன்னுடைய மச்சான் பாதிரியாகச் சேவை செய்கிற செமினரியைப் பார்வையிடச் சென்றிருந்தார். அந்த செமினரிக்கும் பெத்தேலுக்கும் இடையேயிருந்த வித்தியாசத்தை அவர் கவனித்தார். “செமினரியில் எல்லாமே இரகசியமாக நடந்தது” என்கிறார் அவர். பெத்தேலைப் பார்வையிட்ட சில காலத்திற்குள் பைபிளைப் படிக்க அவர் ஒத்துக்கொண்டார், அரசியல் ஈடுபாட்டை விட்டுவிட்டார்; இப்போது சபையில் ஒரு மூப்பராகச் சேவை செய்கிறார்.
பெத்தேலைப் பார்வையிட வாரீர்!
அநேகர் தங்கள் நாட்டிலுள்ள கிளை அலுவலகத்தைப் பார்வையிடுவதற்காக அதீத முயற்சி எடுத்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, பிரேசிலைச் சேர்ந்த பௌலூவும் ஔசேன்யாவும் தங்களுடைய நாட்டிலுள்ள பெத்தேலுக்குச் சென்று அதைப் பார்வையிடுவதற்காக பஸ்ஸில் இரண்டு நாட்கள், அதாவது, 3,000 கிலோமீட்டர் பயணிக்க வேண்டியிருந்தது; அதற்காக, நான்கு வருடங்களாகப் பணத்தைச் சேமித்து வைத்தார்கள். அவர்கள் சொல்வது இதுதான்: “நாங்கள் எடுத்த முயற்சியெல்லாம் வீண்போகவில்லை. யெகோவாவின் அமைப்பைக் குறித்து எங்களால் இப்போது இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது. பெத்தேலில் நடைபெறுகிற வேலைகளைப் பற்றி எங்களுடைய பைபிள் மாணாக்கர்களிடம் விளக்கும்போது, ‘நீங்கள் எப்போதாவது அங்கு போயிருக்கிறீர்களா?’ என்று சில சமயத்தில் அவர்கள் கேட்கையில் எங்களால் ஆம் என்று இப்போது சொல்ல முடிகிறது.”
உங்களுடைய நாட்டில் அல்லது அருகிலுள்ள நாட்டில் கிளை அலுவலகமோ பெத்தேல் இல்லமோ இருக்கிறதா? அதைச் சென்று பார்க்கும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறோம். அங்கே நீங்கள் அன்புடன் வரவேற்கப்படுவீர்கள் என்பதில் சந்தேகமில்லை; அதோடு, ஆன்மீக ரீதியில் அபரிமிதமான நன்மைகளையும் அடைவீர்கள் என்பது நிச்சயம்.
[பக்கம் 18-ன் படம்]
மார்யோ
[பக்கம் 18-ன் படம்]
ஆபேல்
[பக்கம் 18-ன் படம்]
ஜெர்மனி
[பக்கம் 18-ன் படம்]
ஜப்பான்
[பக்கம் 18-ன் படம்]
பிரேசில்