பல்கேரியாவில் வெற்றிகண்ட விசேஷ ஊழியம்
“அறுவடை மிகுதியாக இருக்கிறது, வேலையாட்களோ குறைவாக இருக்கிறார்கள். அதனால், அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் எஜமானரிடம் கெஞ்சிக் கேளுங்கள்.”—மத். 9:37, 38.
தென்கிழக்கு ஐரோப்பாவிலுள்ள அழகிய பால்கன் நாடான பல்கேரியாவின் சூழ்நிலைக்கு இயேசு சொன்ன வார்த்தைகள் ஏகப் பொருத்தமே! அங்கு வசிக்கிற எழுபது லட்சத்துக்கும் மேலான மக்களுக்கு நற்செய்தியை அறிவிக்க நிறைய வேலையாட்கள் தேவைப்படுகிறார்கள். அங்கு சுமார் 1,700 பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள்; ஆனால், அங்குள்ள எல்லா பிராந்தியங்களுக்கும் அவர்களால் செல்ல முடிவதில்லை. அதனால், 2009-ல் ஒரு விசேஷ ஊழியத்தில் கலந்துகொள்வதற்கு பல ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பல்கேரிய மொழி பேசும் சாட்சிகளை அழைக்க ஆளும் குழு ஒப்புதல் அளித்தது. கோடையில் ஏழு வாரங்களுக்கு இந்த ஊழியம் திட்டமிடப்பட்டது; இதன் உச்சக்கட்டமாக ஆகஸ்ட் 14-16, 2009-ல் சோஃபியா நகரில் “விழிப்புடன் இருங்கள்” என்ற மாவட்ட மாநாடு நடத்தவும் எற்பாடு செய்யப்பட்டது.
திகைக்க வைக்கும் பிரதிபலிப்பு
இத்தாலி, கிரீஸ், பிரான்சு, போலந்து, ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் உள்ள எத்தனை பேர் இந்த அழைப்பை ஏற்றுக்கொள்வார்களோ என சோஃபியா கிளை அலுவலகத்திலுள்ள சகோதரர்கள் யோசித்துக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால், அவர்கள் சொந்த செலவில்தான் பல்கேரியாவுக்குப் போக வேண்டும்; அதுமட்டுமல்ல, விடுப்பு எடுத்துத்தான் பிரசங்க வேலையில் ஈடுபட வேண்டும். அங்கு செல்வதற்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வாரமும் அதிகரித்துக்கொண்டே வந்தது; கடைசியில் 292 என்ற எண்ணிக்கையை எட்டியது! இத்தனை அநேகம் பேர் முன்வந்ததால், பல்கேரியாவிலுள்ள கசான்லாக், சான்டான்ஸ்கி, சிலிஸ்ட்ரா ஆகிய மூன்று நகரங்களுக்கு இவர்களை நியமிக்க முடிந்தது. பல்கேரியாவிலுள்ள வட்டாரக் கண்காணிகள் இந்த ஊழியத்தை ஆதரிக்க உள்ளூர் பயனியர்களையும் பிரஸ்தாபிகளையும் உற்சாகப்படுத்தினார்கள். இதன் விளைவாக, அடிக்கடி ஊழியம் செய்யப்படாத பிராந்தியங்களில் 382 வாலண்டியர்கள் வைராக்கியமாகப் பிரசங்கித்தார்கள்.
அவர்களுக்குத் தங்குமிடங்களை ஏற்பாடு செய்ய அருகிலுள்ள சபைகளில் இருக்கும் சகோதரர்கள் முன்கூட்டியே அனுப்பப்பட்டார்கள். அவர்கள் வீடுகளையும் குறைந்த வாடகையுள்ள ஓட்டல்களையும் ‘புக்’ செய்தார்கள். வந்துகொண்டிருந்த வாலண்டியர்களை தங்க வைப்பதற்கும் அவர்களுடைய தேவைகளைக் கவனித்துக்கொள்வதற்கும் இந்தச் சகோதரர்கள் அயராது உழைத்தார்கள். இம்மூன்று நகரங்களிலும் கூட்டங்களுக்கான இடங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டன. இந்த விசேஷ ஊழியத்திற்காக வந்த சகோதரர்கள் சபைக் கூட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஒரு சாட்சிகூட இல்லாத இடங்களில் யெகோவாவைத் துதிக்க 50 பிரஸ்தாபிகள் கூடிவந்தது மெய்சிலிர்க்க வைத்தது.
மற்ற நாடுகளிலிருந்து வந்த சகோதர சகோதரிகளின் வைராக்கியம் திகைக்க வைத்தது. கோடையின்போது, பல்கேரியாவில் வெப்பநிலை 40 டிகிரி செல்ஷியஸுக்கும் மேல் செல்லலாம். ஆனாலும், வைராக்கியமுள்ள இந்தச் சகோதர சகோதரிகள் இதையெல்லாம் பொருட்படுத்தவே இல்லை. டேன்யூப் நதியோரத்தில் அமைந்திருக்கும் சிலிஸ்ட்ரா நகரத்தில் 50,000-த்திற்கும் அதிகமானோர் வசிக்கிறார்கள்; இந்நகரில், முதல் மூன்று வாரங்களுக்குள்ளாகவே முழுமையாக ஊழியம் செய்துவிட்டார்கள். இதனால், சகோதரர்கள் அருகிலுள்ள கிராமங்களுக்கும் போய் சாட்சி கொடுத்தார்கள்; சிலிஸ்ட்ராவுக்கு மேற்கே 55 கிலோமீட்டர் தொலைவிலுள்ள டுட்ரகான்வரை சென்றார்கள். அவர்கள் பொதுவாக காலை 9:30 மணிக்கு ஊழியத்தை ஆரம்பித்தார்கள். மதிய இடைவேளைக்குப் பிறகு, பெரும்பாலும் இரவு ஏழு மணிவரையிலோ அதற்கும் அதிகமாகவோ ஊழியத்தைத் தொடர்ந்தார்கள். அவ்வாறே, கசான்லாக், சான்டான்ஸ்கி ஆகிய நகரங்களுக்குச் சென்ற வாலண்டியர்களும் மிகுந்த வைராக்கியம் காட்டினார்கள்; அதனால், அவர்களும் அருகிலுள்ள கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் சென்றார்கள்.
கிடைத்த பலன்கள்
அந்த ஏழு வாரங்களில் மிகச் சிறந்த சாட்சி கொடுக்கப்பட்டது. அப்போஸ்தலர்களின் காலத்தில் சொல்லப்பட்டதுபோல், ‘எங்கள் நகரம் முழுவதையும் உங்கள் போதனையால் நிரப்பியிருக்கிறீர்கள்’ என்று இந்த நகரங்களில் வசிப்போராலும் சொல்ல முடிந்தது. (அப். 5:28) அதில் பங்கேற்ற சாட்சிகள் சுமார் 50,000 பத்திரிகைகளை அளித்தார்கள், 482 பைபிள் படிப்புகளை ஆரம்பித்தார்கள். சந்தோஷமான விஷயம் என்னவென்றால், செப்டம்பர் 1, 2009-ல் சிலிஸ்ட்ராவில் ஒரு சபை உருவானது; கசான்லாக்கிலும் சான்டான்ஸ்கியிலும் தொகுதிகள் உருவாயின. இந்த ஊழியத்தின்போது நற்செய்தியை முதன்முறையாக கேட்டவர்கள், ஆன்மீக ரீதியில் நல்ல முன்னேற்றம் செய்வதைப் பார்ப்பது நெஞ்சை நெகிழ வைக்கிறது.
இந்த விசேஷ ஊழியத்தின் முதல் வாரத்தில், ஸ்பெயினைச் சேர்ந்த பல்கேரிய மொழி பேசும் விசேஷப் பயனியர் சகோதரி, சிலிஸ்ட்ராவிலுள்ள காரீனா என்ற பெண்மணியிடம் பிரசங்கித்தார்; அந்தப் பெண்மணி தெருவில் செய்தித்தாளை விற்றுக்கொண்டிருந்தார். அவர் ஆர்வம் காண்பித்து, கூட்டத்திற்கு வந்தார். பைபிள் படிப்புக்கும் ஒப்புக்கொண்டார். அவருடைய கணவர் ஒரு நாத்திகர்; அதனால், பைபிள் படிப்பை ஒரு பூங்காவில் நடத்துமாறு கேட்டுக்கொண்டார். இப்படிப்பில் அவருடைய இரண்டு மகள்களும் கலந்துகொண்டார்கள். அவரது மூத்த மகளான டான்யல்லாவுக்கு, பைபிள் சத்தியத்தின்மீது அலாதி பிரியம். அதனால், ஒரே வாரத்தில் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை வாசித்துவிட்டாள்; வழிபாட்டில் உருவங்களைப் பயன்படுத்தக் கூடாது என பைபிள் சொல்வதை உடனடியாக கடைப்பிடித்தாள். பிறகு, அவளுடைய தோழிகளிடம் சத்தியத்தைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தாள். அவள் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்து மூன்று வாரங்களிலேயே பைபிள் படிப்பு நடத்துகிற சகோதரியிடம், “நான் உங்களுடைய சபையாரில் ஒருவரைப் போல நினைக்கிறேன். நானும் பிரசங்க வேலையில் ஈடுபட என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டாள். டான்யல்லா அவளுடைய அம்மாவோடும் தங்கையோடும் சேர்ந்து தொடர்ந்து முன்னேற்றம் செய்து வருகிறாள்.
கசான்லாக்கில், இந்த ஊழியத்திற்காக இத்தாலியிலிருந்து வந்த பல்கேரியா மொழி பேசும் சகோதரர் ஆர்லின், ஊழியம் செய்து முடித்த பின் தான் தங்கியிருக்கும் இடத்திற்குப் போய் கொண்டிருந்தார். அவர் போகும் வழியில், பூங்காவில் உட்கார்ந்துக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்களிடம் சாட்சி கொடுத்தார். அவர்களிடம் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைக் கொடுத்துவிட்டு அடுத்த நாளே மறுபடியும் சந்திக்க ஏற்பாடு செய்தார். மறு சந்திப்பின்போது, ஸ்வெட்டோமிருக்கு பைபிள் படிப்பை ஆரம்பித்தார்; அடுத்த நாளும் பைபிள் படிப்பை நடத்தினார். இப்படியாக ஒன்பது நாட்களுக்குள் எட்டு தடவை பைபிள் படிப்பை நடத்தினார். ஸ்வெட்டோமிர் இவ்வாறு சொன்னார்: “இரண்டு நாட்களுக்கு முன்புதான், ‘உங்களைப் பற்றி தெரிந்துக்கொள்ள உதவி செய்யுங்கள்’ என்று கடவுளிடம் ஜெபித்தேன். அப்படி உதவினால், என்னையே அவருக்கு அர்ப்பணிப்பதாக வாக்கு கொடுத்தேன்.” ஆர்லின் இத்தாலிக்குத் திரும்பியபின், உள்ளூர் சகோதரர்கள் ஸ்வெட்டோமிருக்குத் தொடர்ந்து படிப்பு நடத்தினார்கள்; அவர் சத்தியத்தில் முன்னேற்றம் செய்து கொண்டிருக்கிறார்.
தியாகங்கள் செய்வோருக்கு அளவில்லா ஆசீர்வாதங்கள்
பல நாள் விடுப்பு எடுத்து தங்களுடைய சொந்தச் செலவில் மற்றொரு நாட்டிற்குச் சென்று நற்செய்தியைப் பிரசங்கித்தவர்கள் சொல்வதென்ன? ஸ்பெயினில் சேவை செய்கிற ஒரு மூப்பர் இவ்வாறு எழுதினார்: “ஸ்பெயினில் பல்கேரிய மொழி பேசும் பிராந்தியத்தில் உள்ள சகோதரர்கள் இந்த ஊழியத்தால் மிகவும் நெருக்கமாகிவிட்டார்கள். இது, இந்த விசேஷ ஊழியத்தில் பங்குகொண்டவர்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.” இத்தாலியைச் சேர்ந்த ஒரு தம்பதியர் இவ்வாறு எழுதினார்கள்: “எங்கள் வாழ்நாளிலே அது மிக அருமையான மாதமாக இருந்தது! இது எங்கள் வாழ்க்கையையே மாற்றியது! இப்போது நாங்கள் ஆளே மாறிவிட்டோம்.” இந்தத் தம்பதியர் பல்கேரியாவுக்கே குடிமாறிச் சென்று அங்கே தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை செய்வதைப் பற்றி மும்முரமாக யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஸ்பெயினில் ஒழுங்கான பயனியராகச் சேவை செய்யும் மணமாகாத சகோதரி காரீனா, சிலிஸ்ட்ராவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேஷ ஊழியத்தில் கலந்துக் கொண்டார். அதன்பிறகு, ஸ்பெயினில் தான் பார்த்துவந்த வேலையை விட்டுவிட்டு சிலிஸ்ட்ராவிலுள்ள புதிய சபைக்கு ஆதரவளிப்பதற்காக பல்கேரியாவுக்குக் குடிமாறினார். பல்கேரியாவில் ஒரு வருடம் வாழ்வதற்குப் போதுமான பணத்தை அவர் சேமித்து வைத்திருந்தார். தான் எடுத்த தீர்மானத்தைப் பற்றி அவர் இவ்வாறு சொல்கிறார்: “பல்கேரியாவில் சேவை செய்ய யெகோவா என்னை அனுமதித்ததற்கு ரொம்பவே சந்தோஷப்படுகிறேன்; நான் இங்கேயே ரொம்பக் காலம் இருப்பேன் என்று நினைக்கிறேன். எனக்கு இப்போதே ஐந்து பைபிள் படிப்புகள் இருக்கின்றன, அதில் மூன்று பேர் கூட்டங்களுக்கு வருகிறார்கள்.”
இத்தாலியில் உள்ள ஒரு சகோதரி இந்த விசேஷ ஊழியத்தில் கலந்துக்கொள்ள விரும்பினார்; ஆனால், புதிய வேலையில் அப்போதுதான் சேர்ந்திருந்ததால் அவருக்கு விடுப்பு எடுக்க முடியவில்லை. அதனால், ஒரு மாதம் சம்பளமில்லா விடுப்பு தரும்படி தன் முதலாளியிடம் தைரியமாய் கேட்டார்; அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால், வேலையை விட்டுவிடவும் தயாராயிருந்தார். அதற்கு அந்த முதலாளி: “சரி, ஆனால் ஒரு கண்டிஷன்: எனக்கு நீங்க பல்கேரியாவிலிருந்து ஒரு போஸ்ட்கார்டை அனுப்ப வேண்டும்” என்று சொன்னது அவருக்கு ஆச்சரியத்தை அளித்தது. இது தன் ஜெபத்திற்கு யெகோவா கொடுத்த பதில்தான் என்பதை அவர் உணர்ந்தார்.
பல்கேரியாவிலுள்ள வார்னா நகரைச் சேர்ந்த ஸ்டானிஸ்லாவா என்ற இளம் சகோதரி நல்ல சம்பளம் கிடைக்கும் வேலையைச் செய்துவந்தார்; அவரும்கூட சிலிஸ்ட்ராவில் செய்யப்பட்ட விசேஷ ஊழியத்தில் கலந்துகொள்ள விடுப்பு எடுத்தார். தன் நாட்டில் பிரசங்கிப்பதற்காக மற்ற நாடுகளிலிருந்து அவ்வளவு தூரம் பயணம் செய்துவந்திருந்த அநேக பயனியர்களின் சந்தோஷத்தைப் பார்த்து இவருடைய கண்களில் நீர் பூத்தது. ‘முழுநேர வேலையைச் செய்து செய்து என்னுடைய வாழ்க்கையில் என்னதான் சாதிக்கிறேன்’ என்று அவர் யோசிக்கத் தொடங்கினார். இரண்டு வாரங்களுக்குப் பின் வீடு திரும்பியதும், தன் வேலையை விட்டுவிட்டு ஒழுங்கான பயனியர் ஆனார். இளம் வயதிலேயே படைப்பாளரை நினைக்கத் தொடங்கியதால் இப்போது மனம் நிறைய சந்தோஷத்தை அனுபவிக்கிறார்.—பிர. 12:1.
யெகோவாவின் சேவையில் சுறுசுறுப்பாக இருப்பது எப்பேர்பட்ட ஆசீர்வாதம்! நற்செய்தியைப் பிரசங்கிப்பதும் கற்பிப்பதுமான இந்த முக்கிய வேலையில் உங்கள் நேரத்தையும் பலத்தையும் கொடுப்பதைவிட சிறந்தது வேறெதுவும் இருக்க முடியாது. நீங்களும் இந்த உயிர் காக்கும் ஊழியத்தில் அதிகமாக ஈடுபட ஏதாவது வழிகள் இருக்கின்றனவா? உங்களுடைய நாட்டில்கூட தேவை அதிகமுள்ள இடங்கள் இருக்கலாம். அப்படியொரு இடத்திற்குக் குடிமாறிச் செல்ல முடியுமா? அல்லது, உங்கள் நாட்டில் பைபிள் சத்தியத்தின்மீது வாஞ்சையுள்ளோருக்கு உதவ மற்றொரு மொழியைக் கற்றுக்கொள்வதைப் பற்றிச் சிந்திக்கலாம், அல்லவா? ஊழியத்தில் அதிகமாக ஈடுபடுவதற்கு நீங்கள் என்ன மாற்றங்கள் செய்தாலும் உங்களை யெகோவா அதிகமதிகமாய் ஆசீர்வதிப்பார் என நிச்சயமாய் இருக்கலாம்.—நீதி. 10:22.
[பக்கம் 32-ன் பெட்டி/ படம்]
மறக்கமுடியாத நாள்
பல்கேரியாவில் இந்த விசேஷ ஊழியத்திற்குக் கைகொடுக்க மற்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்த அநேகர், சோஃபியா நகரத்தில் நடக்கவிருந்த “விழிப்புடன் இருங்கள்!” மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்ளத் திட்டமிட்டார்கள். உள்ளூர் சகோதர சகோதரிகள், பல்வேறு நாடுகளிலிருந்து வந்த அநேகரைச் சந்தித்தபோது மிகுந்த உற்சாகம் அடைந்தார்கள். ஆளும் குழு உறுப்பினரான சகோதரர் ஜெஃப்ரி ஜாக்ஸன், பல்கேரிய மொழியில் பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை வெளியிட்டபோது அங்கு கூடியிருந்த 2,039 பேரும் எவ்வளவாய் ஆனந்தப் பரவசம் அடைந்தார்கள்! வெள்ளிக்கிழமை அன்று அங்கு கூடியிருந்த அத்தனை பேரும் தங்களுடைய ஆத்மார்த்த நன்றியைக் காட்ட உற்சாகத்தோடு நீண்ட நேரத்திற்கு கரகோஷம் எழுப்பினார்கள். அநேகரின் கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்தது. எளிதில் புரிந்துகொள்ள முடிந்த மொழியிலுள்ள இந்தத் திருத்தமான மொழிபெயர்ப்பு, யெகோவாவைப் பற்றி அறிந்துகொள்ள நல்மனமுள்ள பல்கேரிய மக்களுக்கு உதவும்.
[பக்கம் 30, 31-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
பல்கேரியா
சோஃபியா
சான்டான்ஸ்கி
சிலிஸ்ட்ரா
கசான்லாக்
[பக்கம் 31-ன் படங்கள்]
அந்த ஏழு வாரத்தில் மிகச் சிறந்த சாட்சி கொடுக்கப்பட்டது