ரகசியம் 1
மனிதரை நேசியுங்கள், பணத்தையோ பொருளையோ அல்ல
பைபிள் என்ன சொல்கிறது? “பண ஆசை எல்லா விதமான தீமைக்கும் வேராக இருக்கிறது.”—1 தீமோத்தேயு 6:10.
என்ன சவால்? நம்மிடம் இருப்பதெல்லாம் போதாது என்ற ஓர் உணர்வை... அதிருப்தியை... விளம்பரதாரர்கள் ஏற்படுத்துகிறார்கள். புதியதை... தரமானதை... பெரியதை... வாங்க வைப்பதற்காக ஓய்வொழிச்சல் இல்லாமல் உழைத்து பணம் சம்பாதிக்க நம்மைத் தூண்டுகிறார்கள். பணம் வசீகரமானது, அதனால் நாம் எளிதில் அதற்கு மயங்கிவிடலாம். ஆனால், செல்வத்தின்மேல் ஆசை வைப்பவர் ஒருபோதும் திருப்தியடைய மாட்டார் என்று பைபிள் எச்சரிக்கிறது. “பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை” என்று எழுதினார் சாலொமோன் ராஜா.—பிரசங்கி 5:10.
என்ன செய்யலாம்? இயேசுவின் வழி நடவுங்கள், பொன் பொருளைவிட மக்களை அதிகமாய் நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். மக்கள் மீதிருந்த அன்பினால் இயேசு தம்மிடமிருந்த அனைத்தையும் அளித்தார், ஏன், தம் உயிரையே அளித்தார். (யோவான் 15:13) “பெற்றுக்கொள்வதைவிடக் கொடுப்பதிலேயே அதிகச் சந்தோஷம் இருக்கிறது” என்று அவர் சொன்னார். (அப்போஸ்தலர் 20:35) நம்முடைய நேரத்தை... வளங்களை... மற்றவர்களுக்குக் கொடுப்பதைப் பழக்கமாக்கிக் கொண்டால், அவர்களும் நமக்குத் திருப்பிச் செய்வார்கள். “கொடுப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள், அப்போது மக்களும் உங்களுக்குக் கொடுப்பார்கள்” என்றார் இயேசு. (லூக்கா 6:38) பணத்தையும் பொருளையும் நாடிச் செல்கிறவர்களுக்குக் கடைசியில் வேதனையும் சோதனையும்தான் மிஞ்சும். (1 தீமோத்தேயு 6:9, 10) ஆனால், அன்பைக் காட்டுவதிலும் அன்பைப் பெறுவதிலுமே உண்மையான திருப்தி கிடைக்கிறது.
அப்படியானால், உங்கள் வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொள்ள முடியுமா என ஏன் யோசித்துப் பார்க்கக்கூடாது? உங்களிடம் இருப்பதை அல்லது புதுசு புதுசாக வாங்குவதை குறைத்துக்கொள்ள முடியுமா? அப்படிச் செய்தால், வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயங்களுக்கு, அதாவது மக்களுக்கு உதவுவதற்கு... எல்லாவற்றையும் தந்த இறைவனுக்குச் சேவை செய்வதற்கு... அதிக நேரமும் சக்தியும் கிடைக்கும்.—மத்தேயு 6:24; அப்போஸ்தலர் 17:28. (w10-E 11/01)
[பக்கம் 4-ன் படம்]
“கொடுப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள், அப்போது மக்களும் உங்களுக்குக் கொடுப்பார்கள்”