இளைஞர்களே—வாழ்க்கையில் உங்கள் லட்சியம் என்ன?
“நான் . . . போராடுகிறேன், ஆனால் காற்றோடு குத்துச்சண்டை போடுகிறவன்போல் அல்ல.” —1 கொ. 9:26.
1, 2. நீங்கள் பெரியவர்களாக வளர்ந்து வாழ்க்கையில் வெற்றிபெற எதை மனதில் வைப்பது அவசியம்?
பழக்கமில்லாத ஒரு பாதையில் செல்லும்போது வரைபடமும் திசைமானியும் உங்களுக்கு உதவும். நீங்கள் எங்கு இருக்கிறீர்கள், எங்கே செல்ல வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள வரைபடம் உங்களுக்குக் கைகொடுக்கும். நீங்கள் சரியான திசையில் தொடர்ந்து செல்ல திசைமானி வழிகாட்டும். ஆனால், நீங்கள் எங்கே போக வேண்டும் என்பதே தெரியாதிருந்தால் வரைபடமும் திசைமானியும் இருந்தும் எந்தப் பயனும் இல்லை. எனவே, நீங்கள் வீணாகச் சுற்றித்திரியாதிருக்க, போக வேண்டிய இடத்தை நன்கு தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
2 நீங்கள் பெரியவர்களாக வளர்ந்து வரும் சமயத்தில் உங்களுடைய சூழ்நிலையும் இப்படித்தான் இருக்கிறது. உங்களிடம் நம்பகமான வரைபடமும் திசைமானியும் இருக்கின்றன. நீங்கள் எந்த வழியில் செல்ல வேண்டுமென்று தீர்மானிக்க ஒரு வரைபடம் போல பைபிள் உங்களுக்கு உதவும். (நீதி. 3:5, 6) உங்களுடைய மனசாட்சியை நன்கு பயிற்றுவித்தால், சரியான வழியில் செல்ல ஒரு திசைமானியைப் போல அது உதவும். (ரோ. 2:15) என்றாலும், வாழ்க்கையில் வெற்றிபெற நீங்கள் எங்கே போகிறீர்கள் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். ஆம், நீங்கள் எட்ட வேண்டிய இலக்குகளைத் தெளிவாக மனதில் வைத்திருக்க வேண்டும்.
3. இலக்குகள் வைப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என 1 கொரிந்தியர் 9:26-ல் பவுல் சொல்கிறார்?
3 இலக்குகள் வைத்து அவற்றை அடைய முயலும்போது கிடைக்கும் நன்மைகளை அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு ரத்தினச்சுருக்கமாகச் சொன்னார்: “நான் இப்போது ஓடுகிறேன், ஆனால் சேரவேண்டிய இடத்தை அறியாதவன்போல் அல்ல. போராடுகிறேன், ஆனால் காற்றோடு குத்துச்சண்டை போடுகிறவன்போல் அல்ல.” (1 கொ. 9:26) நீங்கள் இலக்குகள் வைத்திருந்தால், நம்பிக்கையோடு ஓட முடியும். விரைவிலேயே வழிபாடு, வேலை, திருமணம், குடும்பம் போன்றவை சம்பந்தமாக முக்கியமான தீர்மானங்கள் எடுக்க வேண்டியிருக்கும். சில சமயங்களில், என்ன தீர்மானம் எடுப்பது என்று உங்களுக்குக் குழப்பமாக இருக்கலாம். ஆனால், கடவுளுடைய வார்த்தையிலுள்ள சத்தியங்கள் மற்றும் நியமங்கள் அடிப்படையில், சரியான பாதையை நீங்கள் முன்கூட்டியே தேர்ந்தெடுத்தால் தவறான வழியில் செல்ல மாட்டீர்கள்.—2 தீ. 4:4, 5.
4, 5. (அ) நீங்கள் இலக்குகள் வைக்கவில்லை என்றால் என்ன ஆகும்? (ஆ) உங்களுடைய இலக்குகள் ஏன் கடவுளைச் சந்தோஷப்படுத்தும் விதமாக இருக்க வேண்டும்?
4 நீங்கள் இலக்குகள் வைக்கவில்லை என்றால், உங்கள் சகாக்களும் ஆசிரியர்களும் தங்களுக்குச் சரியெனப் படுவதைச் செய்யும்படி உங்களைத் தூண்டலாம். நீங்கள் திட்டவட்டமான இலக்குகள் வைத்திருந்தால்கூட சிலர் தங்களுடைய கருத்துகளை உங்கள்மீது திணிக்கலாம். அவர்களுடைய அபிப்பிராயங்களைத் தெரிவிக்கும்போது உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘அவர்கள் சிபாரிசு செய்கிற இலக்குகள் என் வாலிபப் பிராயத்திலே கடவுளை நினைக்க எனக்கு உதவுமா அல்லது அதற்குத் தடையாக இருக்குமா?’—பிரசங்கி 12:1-ஐ வாசியுங்கள்.
5 உங்களுடைய இலக்குகள் ஏன் கடவுளைச் சந்தோஷப்படுத்தும் விதமாக இருக்க வேண்டும்? ஒரு காரணம், நாம் அனுபவிக்கிற நன்மையான எல்லாமே யெகோவா கொடுத்தவைதான். (யாக். 1:17) ஆகவே, நாம் எல்லாருமே அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். (வெளி. 4:11) யெகோவாவுக்கு நன்றி காட்ட அவரை மனதில் கொண்டு இலக்குகள் வைப்பதைவிட சிறந்த வழி உங்களுக்கு இருக்க முடியுமா? என்ன இலக்குகளை வைப்பது சிறந்தது, அவற்றை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.
என்ன இலக்குகள் வைக்கலாம்?
6. நீங்கள் வைக்க வேண்டிய முக்கிய இலக்கு என்ன, ஏன்?
6 முந்தின கட்டுரையில் பார்த்தபடி, பைபிள் சொல்வதெல்லாம் உண்மைதான் என்பதை நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்; இதுவே நீங்கள் வைக்க வேண்டிய முக்கிய இலக்கு. (ரோ. 12:2; 2 கொ. 13:5) உங்கள் சகாக்கள் பரிணாமத்தையோ பல்வேறு மதக் கோட்பாடுகளையோ நம்பலாம்; ஏனென்றால், அவற்றை நம்பும்படி மற்றவர்கள் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக ஒரு விஷயத்தை நம்பிவிடக் கூடாது. நீங்கள் முழு மனதோடு யெகோவாவுக்குச் சேவை செய்யும்படி அவர் விரும்புகிறார் என்பதை நினைவில் வையுங்கள். (மத்தேயு 22:36, 37-ஐ வாசியுங்கள்.) அத்தாட்சியின் அடிப்படையில் உங்கள் நம்பிக்கையைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டுமென்று நம் பரலோக தகப்பன் விரும்புகிறார்.—எபி. 11:1.
7, 8. (அ) உங்கள் நம்பிக்கையைப் பலப்படுத்திக்கொள்ள என்ன குறுகியகால இலக்குகளை வைக்கலாம்? (ஆ) குறுகியகால இலக்குகளில் சிலவற்றை அடையும்போது உங்களுக்கு என்ன அனுபவம் கிடைக்கும்?
7 உங்கள் நம்பிக்கையைப் பலப்படுத்திக்கொள்ள என்ன குறுகியகால இலக்குகளை வைக்கலாம்? தினமும் ஜெபம் செய்வதை ஓர் இலக்காக வைக்கலாம். எப்போதும் ஒரே மாதிரி ஜெபம் செய்வதற்குப் பதிலாக, அந்தந்த நாளுக்குரிய விஷயங்களை யோசித்து வைத்து அல்லது எழுதி வைத்து அவற்றை உங்கள் ஜெபத்தில் குறிப்பிடலாம். நீங்கள் எதிர்ப்பட்ட சோதனைகளைப் பற்றி மட்டுமே சொல்லாமல், அனுபவித்த சந்தோஷங்களைப் பற்றியும் சொல்லுங்கள். (பிலி. 4:6) இரண்டாவதாக, தினமும் பைபிள் வாசிப்பதை ஓர் இலக்காக வைக்கலாம். ஒரு நாளைக்கு நான்கு பக்கங்கள் வாசித்தால் ஒரு வருடத்திற்குள் முழு பைபிளையும் வாசித்துவிடலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?a “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்” என்று சங்கீதம் 1:1, 2 குறிப்பிடுகிறது.
8 மூன்றாவதாக, நன்கு தயாரித்து ஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு பதிலாவது சொல்லுவதற்கு இலக்கு வைக்கலாம். ஆரம்பத்தில், பாராவிலிருந்து ஒரு பதிலை அப்படியே வாசிக்கலாம்; அல்லது ஒரு வசனத்தை வாசிக்கலாம். பிற்பாடு, உங்கள் சொந்த வார்த்தைகளில் பதில் சொல்ல இலக்கு வைக்கலாம். நீங்கள் ஒவ்வொரு முறையும் பதில் சொல்லும்போது யெகோவாவுக்குப் புகழ்ச்சிப் பலியைச் செலுத்துகிறீர்கள். (எபி. 13:15) இந்த இலக்குகளில் சிலவற்றை அடைந்த பிறகு, உங்கள தன்னம்பிக்கை அதிகரிக்கும்; யெகோவா மீதுள்ள நன்றியும் பெருகும். அப்போது நீண்டகால இலக்குகளை வைக்க தயாராவீர்கள்.
9. நீங்கள் இன்னும் ஒரு பிரஸ்தாபி ஆகாவிட்டால் என்ன நீண்டகால இலக்குகளை வைக்கலாம்?
9 என்ன நீண்டகால இலக்குகளை வைக்கலாம்? நீங்கள் இன்னும் ஊழியத்தில் கலந்துகொள்ள ஆரம்பிக்கவில்லை என்றால், ஒரு பிரஸ்தாபி ஆவதை நீண்டகால இலக்காக வைக்கலாம். இந்த உயர்ந்த இலக்கை அடைந்த பிறகு, ஒரு மாதம்கூட விட்டுவிடாமல் ஊழியத்திற்குச் செல்வதற்கும் திறம்பட பேசுவதற்கும் முயற்சி செய்யலாம். ஊழியத்தில் பைபிளைப் பயன்படுத்துவதற்கும் நீங்கள் கற்றுக்கொள்ளலாம். இப்படிச் செய்யும்போது ஊழியம் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். அதன்பின்பு, வீட்டுக்கு வீடு ஊழியத்தில் இன்னும் அதிக நேரம் ஈடுபடலாம். பைபிள் படிப்பு நடத்துவதற்கும் முயற்சி எடுக்கலாம். நீங்கள் ஞானஸ்நானம் எடுக்காத ஒரு பிரஸ்தாபியாக இருந்தால், யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்க தகுதி பெறுவதே சிறந்த இலக்கு, அல்லவா?
10, 11. ஞானஸ்நானம் பெற்ற இளைஞர்கள் என்ன நீண்டகால இலக்குகளை வைக்கலாம்?
10 நீங்கள் ஏற்கெனவே ஞானஸ்நானம் எடுத்திருந்தால், உங்களுக்காக நீண்டகால இலக்குகள் சில இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அடிக்கடி ஊழியம் செய்யப்படாத பிராந்தியத்தில் அவ்வப்போது ஊழியம் செய்யலாம். துணைப் பயனியராக அல்லது ஒழுங்கான பயனியராகச் சேவை செய்ய உங்கள் சக்தியையும் இளமையையும் பயன்படுத்தலாம். சந்தோஷமாக பயனியர் சேவை செய்யும் ஆயிரக்கணக்கானோரைக் கேட்டால், வாலிபப் பிராயத்திலே கடவுளை நினைக்க பயனியர் ஊழியமே சிறந்த வழி என்று சொல்வார்கள். இவையெல்லாம் பெற்றோரின் கவனிப்பில் இருக்கும்போது நீங்கள் வைப்பதற்கான இலக்குகள் ஆகும். இவற்றை நீங்கள் அடையும்போது உங்கள் சபையும் பயனடையும்.
11 உங்கள் சபையைத் தவிர மற்ற சபைகளும் பயனடைய உதவும் சில நீண்டகால இலக்குகளும் உள்ளன. உதாரணமாக, தேவை அதிகமுள்ள வேறொரு பிராந்தியத்திற்கோ நாட்டிற்கோ சென்று ஊழியம் செய்ய திட்டமிடலாம். வெளிநாடுகளில் ராஜ்ய மன்றம் அல்லது கிளை அலுவலகம் கட்டும் பணிகளில் உதவலாம். பெத்தேல் அல்லது மிஷனரி சேவையில் ஈடுபடலாம். ஆனால், இப்படிப்பட்ட நீண்டகால இலக்குகளை வைப்பதற்கு முன்பு நீங்கள் எடுக்க வேண்டிய முதற்படி ஞானஸ்நானம். நீங்கள் இன்னும் ஞானஸ்நானம் எடுக்காவிட்டால் அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்துப் பாருங்கள்.
ஞானஸ்நானம் என்ற இலக்கை அடைதல்
12. சிலர் என்ன காரணங்களுக்காக ஞானஸ்நானம் எடுக்கிறார்கள், அவை ஏன் சரியான காரணங்கள் அல்ல?
12 ஞானஸ்நானம் எடுப்பதன் நோக்கத்தை எப்படி விளக்குவீர்கள்? ஞானஸ்நானம் எடுப்பது பாவம் செய்யாதபடி தங்களைப் பாதுகாக்கும் எனச் சிலர் நினைக்கலாம். வேறு சிலர் தங்கள் சக வயதினர் ஞானஸ்நானம் எடுத்துவிட்டதால் தாங்களும் எடுக்க வேண்டும் என நினைக்கலாம். இன்னும் சிலர் தங்கள் பெற்றோரைத் திருப்திப்படுத்துவதற்காக ஞானஸ்நானம் எடுக்கலாம். என்றாலும், ஞானஸ்நானம் என்பது நீங்கள் ரகசியமாகச் செய்ய விரும்பும் பாவங்களைச் செய்யாமல் தடுத்துவிடாது; மற்றவர்களுடைய வற்புறுத்துதலுக்காகவும் ஞானஸ்நானம் எடுக்கக்கூடாது. ஞானஸ்நானம் எடுப்பதற்கு, யெகோவாவின் சாட்சியாக இருப்பதில் என்னவெல்லாம் அடங்கியிருக்கிறது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்; மேலும், ஞானஸ்நானம் எடுக்கத் தயாராகவும் அதோடு வருகிற பொறுப்பை ஏற்க மனமுள்ளவராகவும் இருக்க வேண்டும்.—பிர. 5:4, 5.
13. நீங்கள் ஏன் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும்?
13 ஞானஸ்நானம் எடுப்பதற்கு ஒரு காரணம், “சீடர்களாக்கி, . . . ஞானஸ்நானம் கொடுங்கள்” என்று இயேசு தம்மைப் பின்பற்றியவர்களிடம் சொன்னதே. அவரும்கூட ஞானஸ்நானம் எடுப்பதன் மூலம் முன்மாதிரி வைத்தார். (மத்தேயு 28:19, 20-ஐயும் மாற்கு 1:9-ஐயும் வாசியுங்கள்.) அதுமட்டுமல்ல, மீட்பு பெற விரும்புகிறவர்கள் எடுக்க வேண்டிய முக்கியப் படி ஞானஸ்நானம். பெருவெள்ளத்தின்போது நோவா தன்னையும் தன்னுடைய குடும்பத்தாரையும் பாதுகாக்க ஒரு பேழை கட்டியதைப் பற்றி அப்போஸ்தலன் பேதுரு குறிப்பிட்ட பிறகு இவ்வாறு சொன்னார்: “இதற்கு ஒப்பாக இருக்கிற ஞானஸ்நானம், . . . இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மூலம் இப்போது உங்களுக்கு மீட்பளிக்கிறது.” (1 பே. 3:20, 21) ஞானஸ்நானம் என்பது விபத்தின்போது உங்களுக்குக் கைகொடுக்கும் இன்ஷ்யூரன்ஸ் பாலிசி போன்றதல்ல. மாறாக, யெகோவாவை நீங்கள் நேசிப்பதாலும், அவரை முழு இருதயத்தோடும் மூச்சோடும் மனதோடும் பலத்தோடும் சேவிக்க விரும்புவதாலும் ஞானஸ்நானம் எடுக்கிறீர்கள்.—மாற். 12:29, 30.
14. சிலர் ஏன் ஞானஸ்நானம் எடுக்கத் தயங்கலாம், ஆனால் உங்களுக்கு என்ன உறுதியளிக்கப்படுகிறது?
14 பிற்பாடு சபைநீக்கம் செய்யப்படுவோமோ என்ற பயத்தில் சிலர் ஞானஸ்நானம் எடுக்கத் தயங்கலாம். நீங்களும் அப்படிப் பயப்படுகிறீர்களா? அப்படிப் பயப்படுவதில் தவறொன்றும் இல்லை. ஒரு யெகோவாவின் சாட்சியாக இருப்பதில் உட்பட்டுள்ள முக்கியப் பொறுப்புகளை நீங்கள் புரிந்துகொண்டதையே இது காட்டுகிறது. வேறு காரணமும் இருக்கிறதா? கடவுளுடைய நெறிகளின்படி நடப்பதே வாழ்க்கைக்கு மிகச் சிறந்தது என்பதில் உங்களுக்கு இன்னும் நம்பிக்கை வராமல் இருக்கலாம். அப்படியென்றால், பைபிள் நெறிகளைப் புறக்கணிப்பவர்கள் சந்திக்கும் விளைவுகளை யோசித்துப் பார்ப்பது சரியான முடிவுக்கு வர உங்களுக்கு உதவும். மறுபட்சத்தில், கடவுளுடைய நெறிகளை நீங்கள் நேசித்தாலும் அவற்றின்படி வாழ முடியுமா என்று யோசிக்கலாம். இதுவும்கூட நல்ல அறிகுறிதான், உங்களுக்கு மனத்தாழ்மை இருப்பதை இது காட்டுகிறது. சொல்லப்போனால், மனிதருடைய இருதயம் திருக்குள்ளது என்று பைபிளே சொல்கிறது. (எரே. 17:9) எப்போதும் கடவுளுடைய ‘வசனத்தின்படி உங்களைக் காத்துக்கொள்ளும்போது’ வெற்றி பெறலாம். (சங்கீதம் 119:9-ஐ வாசியுங்கள்.) நீங்கள் ஞானஸ்நானம் எடுக்கத் தயங்குவதற்குக் காரணம் எதுவாக இருந்தாலும்சரி, இந்த விஷயங்களைக் குறித்து யோசித்து ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும்.
15, 16. நீங்கள் ஞானஸ்நானம் எடுக்கத் தயார் என்று எப்படிச் சொல்லலாம்?
15 நீங்கள் ஞானஸ்நானம் எடுக்கத் தயார் என்று எப்படிச் சொல்லலாம்? அதற்கு ஒரு வழி, பின்வரும் கேள்விகளைக் கேட்டுக்கொள்வதாகும்: ‘பைபிளின் அடிப்படை போதனைகளை என்னால் மற்றவர்களுக்கு விளக்க முடியுமா? என் பெற்றோர் ஊழியத்திற்குச் செல்லாத நாட்களிலும் நான் செல்கிறேனா? எல்லாக் கூட்டங்களிலும் கலந்துகொள்ள முயலுகிறேனா? சகாக்களின் தொல்லையை நான் எப்போதாவது எதிர்த்திருக்கிறேனா? என் பெற்றோரும் நண்பர்களும் யெகோவாவைச் சேவிப்பதை விட்டுவிட்டாலும் நான் தொடர்ந்து சேவிப்பேனா? கடவுளோடுள்ள பந்தத்தை இழந்துவிடாமல் இருக்க உதவும்படி ஜெபிக்கிறேனா? ஜெபத்தில் என்னை யெகோவாவுக்கு முழுமையாய் அர்ப்பணித்திருக்கிறேனா?’
16 ஞானஸ்நானம் என்பது உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு படி, இதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இந்தப் படியை முக்கியமானதாய் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு நீங்கள் முதிர்ச்சி அடைந்துவிட்டீர்களா? நன்றாகப் பேச்சுக் கொடுப்பதையும் மனதைத் தொடும் பதில்களைச் சொல்வதையும் வைத்து மட்டுமே நீங்கள் முதிர்ச்சி அடைந்துவிட்டதாகச் சொல்லிவிட முடியாது. பைபிள் நியமங்களைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப தீர்மானங்கள் எடுக்கத் திறமை பெற்றிருக்க வேண்டும். (எபிரெயர் 5:14-ஐ வாசியுங்கள்.) நீங்கள் வாழ்க்கையில் இந்தப் படியை எடுக்குமளவுக்கு முன்னேறிவிட்டீர்களா? அப்படியென்றால், யெகோவாவை முழு இருதயத்தோடு சேவிக்கவும் அவருக்கு அர்ப்பணித்திருப்பதற்கு இசைய வாழவும் உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு காத்திருக்கிறது.
17. ஞானஸ்நானத்திற்குப் பிறகு வரும் சோதனைகளைச் சமாளிக்க எது உங்களுக்கு உதவும்?
17 ஞானஸ்நானம் எடுத்த புதிதில், யெகோவாவுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு அதிகமாக இருக்கலாம். ஆனால், சீக்கிரத்தில் உங்கள் விசுவாசத்தையும் நெஞ்சுரத்தையும் பரீட்சிக்கும் சோதனைகள் வரலாம். (2 தீ. 3:12) அந்தச் சோதனைகளைத் தனியாகச் சமாளிக்க வேண்டுமே என நினைக்காதீர்கள். பெற்றோரின் ஆலோசனையை நாடுங்கள். சபையிலுள்ள முதிர்ச்சி வாய்ந்த சகோதரர்களின் அனுபவங்களைக் கேளுங்கள். உங்களுக்குப் பக்கத்துணையாக இருப்பவர்களுடன் நட்பு வைத்துக்கொள்ளுங்கள். யெகோவாவுக்கு உங்கள்மீது அக்கறை இருக்கிறது என்பதையும் எந்தச் சூழ்நிலையையும் சமாளிப்பதற்குத் தேவையான பலத்தை அவர் தருவார் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.—1 பே. 5:6, 7.
இலக்குகளை எட்டுவது எப்படி?
18, 19. நீங்கள் எதற்கு முதலிடம் கொடுக்கிறீர்கள் என்பதை ஆராயும்போது எப்படிப் பயனடைவீர்கள்?
18 இலக்குகளை எட்ட வேண்டுமென்ற நல்ல எண்ணம் உங்களுக்கு இருந்தாலும், நீங்கள் விரும்பும் காரியத்திற்கும் செய்ய வேண்டிய முக்கியக் காரியத்திற்கும் போதுமான நேரம் இல்லாததுபோல் தெரிகிறதா? அப்படியென்றால், நீங்கள் எதற்கு முதலிடம் கொடுக்கிறீர்கள் என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். உதாரணமாக, ஒரு பக்கெட் நிறையப் பெரிய பெரிய கற்களைப் போடுங்கள். பிறகு அதில் மணலைப் போடுங்கள். இப்போது பக்கெட் முழுக்க கற்களும் மணலும் இருக்கின்றன. பிறகு, பக்கெட்டிலுள்ள எல்லாவற்றையும் கீழே கொட்டி, மணலையும் கற்களையும் அப்படியே வைத்திருங்கள். இப்போது, பக்கெட்டில் முதலாவது அந்த மணலைப் போட்டு, பிறகு அந்தக் கற்களைப் போடுங்கள். எல்லாக் கற்களையும் போட முடியவில்லை, அல்லவா? நீங்கள் மணலை முதலில் போட்டதால்தான் இடமில்லாமல் போனது.
19 உங்கள் நேரத்தைத் திட்டமிடும் விஷயத்திலும் இதுபோன்ற சவாலையே எதிர்ப்படுகிறீர்கள். வாழ்க்கையில் பொழுதுபோக்கு போன்ற காரியங்களுக்கு முதலிடம் கொடுத்தீர்கள் என்றால் முக்கியக் காரியங்களுக்கு, அதாவது ஆன்மீகக் காரியங்களுக்கு, நேரமே இல்லாமல் போய்விடும். ஆனால், ‘மிக முக்கியமான காரியங்கள் எவையென நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்’ என்ற பைபிள் ஆலோசனையைப் பின்பற்றினால், ஆன்மீகக் காரியங்களுக்கும் அதேசமயத்தில் கொஞ்சம் பொழுதுபோக்கிற்கும் நேரம் கிடைக்கும்.—பிலி. 1:10.
20. இலக்குகளை அடைய முயற்சி செய்யும்போது கலக்கமும் சந்தேகமும் இருந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
20 ஞானஸ்நானம் உட்பட பிற இலக்குகளை அடைய முயற்சி செய்யும்போது சில சமயங்களில் நீங்கள் கலக்கமடையலாம், உங்களுக்குச் சில சந்தேகங்களும் வரலாம். அப்போது, ‘கர்த்தர்மேல் உங்கள் பாரத்தை வைத்துவிடுங்கள், அவர் உங்களை ஆதரிப்பார்.’ (சங். 55:22) மனித சரித்திரத்திலேயே பெருமகிழ்ச்சி தருகிற மிக முக்கியமான வேலைதான் பிரசங்கித்து கற்பிக்கும் வேலை; உலகெங்கும் நடைபெறுகிற இந்த வேலையில் பங்குகொள்ளும் வாய்ப்பு இப்போது உங்களுக்கு இருக்கிறது. (அப். 1:8) இந்த வேலையை மற்றவர்கள் எப்படிச் செய்கிறார்கள் என்று நீங்கள் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க நினைக்கலாம். அல்லது, இந்த வேலையில் மும்முரமாக ஈடுபடலாம். என்றாலும், கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட காரியங்களுக்காக உங்கள் திறமைகளைப் பயன்படுத்துவதிலிருந்து மட்டும் பின்வாங்கிவிடாதீர்கள். ‘இளமையாக இருக்கும்போது உங்கள் படைப்பாளருக்கு’ சேவை செய்வதைக் குறித்து நீங்கள் ஒருபோதும் வருத்தப்பட மாட்டீர்கள்.—பிர. 12:1, ஈஸி டு ரீட் வர்ஷன்.
[அடிக்குறிப்பு]
a காவற்கோபுரம், ஜனவரி-மார்ச் 2010 பக்கங்கள் 21-26-ஐக் காண்க.
எப்படிப் பதிலளிப்பீர்கள்?
• நீங்கள் ஏன் இலக்குகளை வைக்க வேண்டும்?
• நீங்கள் வைக்க வேண்டிய பயனுள்ள இலக்குகள் சில யாவை?
• ஞானஸ்நானம் என்ற இலக்கை அடைய என்ன செய்ய வேண்டும்?
• நீங்கள் எதற்கு முதலிடம் கொடுக்கிறீர்கள் என்பதை ஆராய்வது உங்களுடைய இலக்குகளை அடைய எப்படி உதவும்?
[பக்கம் 13-ன் படம்]
தவறாமல் பைபிள் வாசிக்க இலக்கு வைத்திருக்கிறீர்களா?
[பக்கம் 15-ன் படம்]
ஞானஸ்நானம் எடுப்பதற்கான இலக்கை அடைய எது உங்களுக்கு உதவும்?
[பக்கம் 16-ன் படம்]
இந்த உதாரணத்திலிருந்து என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?