உண்மை வழிபாட்டிற்காகப் பக்திவைராக்கியம் காட்டுங்கள்
“அறுவடை மிகுதியாக இருக்கிறது, வேலையாட்களோ குறைவாக இருக்கிறார்கள்.”—மத். 9:37.
1. அவசர உணர்வை எப்படி விளக்குவீர்கள்?
இன்று சாயங்காலத்திற்குள் உங்களுடைய ஆவணத்தில் ஒருவர் கையெழுத்திட்டாக வேண்டும். நீங்கள் என்ன செய்வீர்கள்? “அவசரம்” என அதன்மீது கொட்டை எழுத்தில் எழுதி வைப்பீர்கள். இதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். முக்கியமான ஒரு நபரைச் சந்திக்கப் போகிறீர்கள், ஆனால் நேரமாகிவிடுகிறது. என்ன செய்வீர்கள்? அவசர அவசரமாக ஓடுவீர்கள். ஆம், நீங்கள் சீக்கிரமாக ஒரு வேலையைச் செய்துமுடிக்க வேண்டியிருக்கையில், அதுவும் நேரம் ஓடிக்கொண்டிருக்கையில், உங்களுக்கு ஒரே பதற்றமாக, பரபரப்பாக இருக்கும். உங்கள் நெஞ்சம் படபடக்கும், முடிந்தவரை வேகவேகமாக வேலை செய்வீர்கள். இதுதான் அவசர உணர்வு!
2. இன்று உண்மைக் கிறிஸ்தவர்கள் செய்ய வேண்டிய மிக அவசரமான வேலை எது?
2 எல்லாத் தேசத்தாருக்கும் நற்செய்தியைப் பிரசங்கித்து, அவர்களைச் சீடர்களாக்குவதே இன்று உண்மைக் கிறிஸ்தவர்கள் செய்ய வேண்டிய மிக அவசரமான வேலை. (மத். 24:14; 28:19, 20) இயேசு சொன்னதை சீடரான மாற்கு மேற்கோள் காட்டி, இந்த வேலை “முதலாவது” செய்யப்பட வேண்டும், அதாவது முடிவு வருவதற்கு முன்பு செய்யப்பட வேண்டும், என எழுதினார். (மாற். 13:10) அப்படிச் செய்வது பொருத்தமானதே. ஏனென்றால், “அறுவடை மிகுதியாக இருக்கிறது, வேலையாட்களோ குறைவாக இருக்கிறார்கள்” என்று இயேசு சொன்னார். அறுவடையைத் தள்ளிப்போட முடியாது; அறுவடைக் காலம் முடிவடைவதற்கு முன்பு பயிர்களைக் களஞ்சியத்தில் சேகரிக்க வேண்டும்.—மத். 9:37.
3. நற்செய்தியைப் பிரசங்கிக்கும் அவசர வேலையைச் செய்ய அநேகர் எப்படி முன்வந்திருக்கிறார்கள்?
3 நற்செய்தியைப் பிரசங்கிப்பது மிக முக்கியமாக இருப்பதால், அதற்காக நம்முடைய நேரத்தையும் சக்தியையும் முடிந்தளவு செலவிடுவது தகுந்ததே. அநேகர் அப்படிச் செய்து வருவது பாராட்டுக்குரியது. சிலர் பயனியர்களாக, மிஷனரிகளாக அல்லது பெத்தேல் அங்கத்தினர்களாக முழுநேர சேவை செய்வதற்குத் தங்களுடைய வாழ்க்கையை எளிமையாக்கியிருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையே பம்பரமாய் சுழல்கிறது. அவர்கள் எத்தனையோ தியாகங்களைச் செய்திருக்கலாம், நிறையச் சவால்களைச் சந்தித்திருக்கலாம். ஆனாலும், அவர்களை யெகோவா பல மடங்கு ஆசீர்வதித்திருக்கிறார். அவர்களை நினைத்து நாம் சந்தோஷப்படுகிறோம், அல்லவா? (லூக்கா 18:28-30-ஐ வாசியுங்கள்.) அவர்களைப் போல் முழுநேர சேவையில் பங்குகொள்ள முடியாதவர்கள் உயிர்காக்கும் இந்த வேலையில் தங்களால் முடிந்தளவு நேரத்தைச் செலவிடுகிறார்கள்; அதோடு, தங்கள் பிள்ளைகளின் உயிர் பாதுகாக்கப்படுவதற்கும் உதவுகிறார்கள்.—உபா. 6:6, 7.
4. சிலர் ஏன் அவசர உணர்வை இழந்துவிடுகிறார்கள்?
4 நாம் பார்த்தபடி, அவசர உணர்வுக்குப் பொதுவாக ஒரு கால வரம்பு அல்லது ஒரு முடிவு இருக்கிறது. நாம் கடைசி காலத்தில் வாழ்கிறோம் என்பதற்கு பைபிளிலும் சரித்திரத்திலும் எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன. (மத். 24:3, 33; 2 தீ. 3:1-5) என்றாலும், முடிவு எப்போது வருமென யாருக்கும் திட்டவட்டமாகத் தெரியாது. ‘சகாப்தத்தின் இறுதிக் கட்டத்திற்குரிய அடையாளத்தை’ பற்றி விளக்கியபோது இயேசு இவ்வாறு குறிப்பாகச் சொன்னார்: “அந்த நாளும் அந்த நேரமும் பரலோகத் தகப்பன் ஒருவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது, பரலோகத்திலுள்ள தேவதூதர்களுக்கும் தெரியாது, மகனுக்கும் தெரியாது.” (மத். 24:36) அதனால், வருடங்கள் செல்லச்செல்ல, அந்த அவசர உணர்வை இழந்துவிடாமல் பார்த்துக்கொள்வது சிலருக்குக் கடினமாய் இருக்கலாம்; அதுவும் நீண்ட காலமாகக் காத்திருக்கும்போது கடினமாக இருக்கலாம். (நீதி. 13:12) உங்களுக்கும்கூட சில சமயங்களில் அப்படித்தான் இருக்கிறதா? இன்று நாம் இந்த வேலையைச் செய்யும்படி யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவும் எதிர்பார்க்கிறார்கள்; அவசர உணர்வை இழந்துவிடாமல் இந்த வேலையைச் செய்ய எது நமக்கு உதவும்?
முன்மாதிரியாய்த் திகழும் இயேசுவைக் கவனியுங்கள்
5. ஊழியத்தில் அவசர உணர்வை இயேசு எந்தெந்த விதங்களில் வெளிக்காட்டினார்?
5 அவசர உணர்வோடு கடவுளுக்குச் சேவை செய்தவர்களில் தலைசிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் இயேசு கிறிஸ்துவே. அவர் அவசர உணர்வோடு செயல்பட்டதற்கு ஒரு காரணம், வெறும் மூன்றரை வருடங்களுக்குள் ஏராளமான வேலைகளைச் செய்து முடிக்க வேண்டியிருந்தது. என்றாலும், உண்மை வழிபாட்டிற்காக அவர் செய்தளவுக்கு வேறு யாருமே செய்யவில்லை. அவர் தம்முடைய தகப்பனின் பெயரையும் நோக்கத்தையும் எல்லாருக்கும் தெரியப்படுத்தினார், கடவுளுடைய அரசாங்கத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்தார், மதத் தலைவர்களின் கபட நாடகத்தையும் பொய்ப் போதனைகளையும் அம்பலப்படுத்தினார், மரணம்வரை யெகோவாவின் பேரரசாட்சியை ஆதரித்தார். மக்களுக்குப் போதிப்பதற்கும் உதவுவதற்கும் அவர்களைச் சுகப்படுத்துவதற்கும் தேசமெங்கும் பயணித்தார்; அவற்றிற்காக எல்லா முயற்சியும் எடுத்தார். (மத். 9:35) வெறும் மூன்றரை வருடங்களில் யாருமே இந்தளவுக்குச் சாதித்ததில்லை. அவரைப் போல் எவருமே அந்தளவுக்கு அயராமல் உழைத்ததுமில்லை.—யோவா. 18:37.
6. இயேசு தம் வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் கொடுத்தார்?
6 அந்த மூன்றரை வருடமும் அயராது உழைக்க இயேசுவை எது தூண்டியது? யெகோவாவின் காலக்கணக்குப்படி தம் வேலையைச் செய்துமுடிக்க எவ்வளவு காலமிருந்தது என்பதை தானியேலின் தீர்க்கதரிசனத்திலிருந்து அவர் அறிந்திருப்பார். (தானி. 9:27) அதில் குறிப்பிட்டிருந்தபடி, ‘அந்த வாரம் பாதி செல்கையில்,’ அதாவது மூன்றரை வருடங்களில், பூமியில் அவருடைய ஊழியம் முடிவடைய வேண்டும். கி.பி. 33-ல் எருசலேமிற்கு வெற்றிவாகை சூடியவராகப் பவனி வந்த பிறகு, “மனிதகுமாரன் மகிமைப்படுத்தப்படும் வேளை வந்துவிட்டது” என்று இயேசு சொன்னார். (யோவா. 12:23) தாம் சீக்கிரத்தில் இறக்கப்போவதை அறிந்திருந்தபோதிலும் அதைப் பற்றியே அவர் யோசித்துக்கொண்டிருக்கவில்லை; அவர் அயராது உழைத்ததற்கு அது காரணமாகவும் இருக்கவில்லை. மாறாக, அவர் தம்முடைய தகப்பனின் சித்தத்தைச் செய்யவும் சக மனிதரிடம் அன்பு காட்டவுமே ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தினார். அந்த அன்பினால்தான் அவர் சீடர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குப் பயிற்சி அளித்து, ஊழியத்திற்கு அனுப்பினார். தாம் ஆரம்பித்து வைத்த அந்த ஊழியத்தை அவர்கள் தொடர்ந்து செய்வதற்கும், தம்மைவிட பெரிய செயல்களைச் செய்வதற்குமே அவர் அப்படியெல்லாம் செய்தார்.—யோவான் 14:12-ஐ வாசியுங்கள்.
7, 8. ஆலயத்தை இயேசு சுத்தப்படுத்தியதைப் பார்த்த சீடர்களுக்கு எது நினைவுக்கு வந்தது, இயேசு ஏன் அப்படி நடந்துகொண்டார்?
7 இயேசுவின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் அவர் பக்திவைராக்கியமுள்ளவர் என்பதற்கு ஆணித்தரமான அத்தாட்சியை அளித்தது. அவர் ஊழியத்தை ஆரம்பித்த சமயத்தில், அதாவது கி.பி. 30, பஸ்கா பண்டிகை காலத்தில், அது நிகழ்ந்தது. இயேசுவும் அவருடைய சீடர்களும் எருசலேம் ஆலயத்திற்கு வந்தபோது, “ஆடு, மாடு, புறா விற்பவர்களையும், இருக்கைகளில் உட்கார்ந்திருந்த காசுத் தரகர்களையும்” அங்கே கண்டார்கள். அப்போது இயேசு என்ன செய்தார், அது அவருடைய சீடர்களுக்கு எதை நினைப்பூட்டியது?—யோவான் 2:13-17-ஐ வாசியுங்கள்.
8 அந்தச் சமயத்தில் இயேசு செய்ததும் சொன்னதும், சங்கீதத்தில் தாவீது தீர்க்கதரிசனமாகச் சொன்ன பின்வரும் வார்த்தைகளைச் சீடர்களுக்கு நினைப்பூட்டின: “உமது வீட்டைக் குறித்த பக்திவைராக்கியம் எனக்குள் பற்றியெரிந்தது.” (சங். 69:9, NW) இந்த வார்த்தைகள் சீடர்களின் நினைவுக்கு வந்தது ஏன்? ஏனென்றால், இயேசு செய்தது ஆபத்துமிக்க ஒரு செயல். சொல்லப்போனால், ஆலயத்தின் அதிகாரிகள், அதாவது குருமார்களும் வேத அறிஞர்களும் மற்றவர்களும், கொள்ளை லாபம் சம்பாதிக்கும் அந்த மோசடியான வியாபாரத்திற்குப் பின்னால் இருந்தார்கள். அவர்களுடைய திட்டத்தை அம்பலப்படுத்தி, அதைத் தகர்த்தெறிந்ததால் மதத் தலைவர்களுக்கு இயேசு எதிரியானார். ஆனால், ‘கடவுளுடைய வீட்டைக் குறித்து உண்டான பக்திவைராக்கியம்’ அல்லது உண்மை வழிபாட்டிற்கான பக்திவைராக்கியம் அவருக்கு இருந்ததைச் சீடர்கள் தெளிவாகவே புரிந்துகொண்டார்கள். அப்படியென்றால், பக்திவைராக்கியம் என்பது என்ன? அவசர உணர்வுக்கும் இதற்கும் வித்தியாசம் இருக்கிறதா?
அவசர உணர்வுக்கும் பக்திவைராக்கியத்திற்கும் உள்ள வித்தியாசம்
9. பக்திவைராக்கியத்தை எப்படி விளக்கலாம்?
9 “பக்திவைராக்கியம்” என்பது “ஒன்றை அடைவதில் தணியா ஆர்வத்தையும் தீவிர ஈடுபாட்டையும்” குறிப்பதாக ஓர் அகராதி விளக்குகிறது; அதோடு, வேட்கை, வெறியார்வம், விறுவிறுப்பு, உற்சாகம் என்ற அர்த்தங்களையும் கொடுக்கிறது. இந்த எல்லா அம்சங்களுமே இயேசுவின் ஊழியத்தில் இருந்தன. அதனால்தான், “தேவனே, உமது வீட்டிற்கான என் பக்தி எனக்குள் தீபோல் எரிந்துகொண்டிருக்கிறது” என்று டுடேஸ் இங்கிலிஷ் வர்ஷன் அந்த வசனத்தை மொழிபெயர்க்கிறது. சில கிழக்கத்திய மொழிகளில் “பக்திவைராக்கியம்” என்ற வார்த்தை இரண்டு வார்த்தைகளாக இருப்பது ஆர்வத்துக்குரியது; சொல்லர்த்தமாக அது “அனலான இருதயம்” என்ற அர்த்தத்தைத் தருகிறது; அதாவது, இருதயம் எரிந்துகொண்டிருப்பதைப் போன்ற அர்த்தத்தைத் தருகிறது. அப்படியானால், ஆலயத்தில் இயேசு செய்ததைப் பார்த்த சீடர்கள் தாவீதின் வார்த்தைகளை நினைவுபடுத்திப் பார்த்ததில் ஆச்சரியமேதுமில்லை. ஆனால், இயேசுவின் இருதயத்தில் “தீயை மூட்டி” அவரை அப்படிச் செயல்படத் தூண்டியது எது?
10. பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ள “பக்திவைராக்கியம்” என்ற வார்த்தையின் அர்த்தமென்ன?
10 தாவீதின் சங்கீதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள “பக்திவைராக்கியம்” என்பதற்குரிய எபிரெய வார்த்தை ஆழ்ந்த அர்த்தம் பொதிந்தது. இந்த வார்த்தை பைபிளின் பிற பகுதிகளில் பல விதமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. (யாத்திராகமம் 20:5; 34:14; யோசுவா 24:19 ஆகிய வசனங்களை வாசியுங்கள்.) இந்த வார்த்தையைப் பற்றி ஒரு பைபிள் அகராதி இவ்வாறு சொல்கிறது: “திருமண பந்தம் சம்பந்தமாக இது அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது . . . கணவன்-மனைவிக்கு இடையே இருக்கிற அளவுகடந்த பாசம், தன் துணை தனக்கே சொந்தம் என்று அவர்களை உரிமைபாராட்டச் செய்கிறது; அவ்வாறே, கடவுளும் தம்முடைய மக்கள் முற்றிலும் தமக்கே சொந்தம் என்று உரிமைபாராட்டுகிறார்; அதை நிரூபிக்கவும் செய்கிறார்.” ஆகவே, பைபிளில் குறிப்பிடப்படுகிற பக்திவைராக்கியம், ஒன்றை அடைவதற்கான வெறியார்வத்தை அல்லது விறுவிறுப்பை மட்டுமே குறிப்பதில்லை; அதாவது, அநேக ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்தமான போட்டி விளையாட்டில் காட்டுகிற வெறியார்வத்தைப் போன்றது அல்ல. தாவீதுக்குப் பக்திவைராக்கியம் இருந்ததால், கடவுளுக்கு நிகராக யாரும் போட்டி போடுவதையோ அவரை நிந்திப்பதையோ பொறுத்துக்கொள்ளவில்லை; அதாவது, கடவுளுடைய நற்பெயரைக் காப்பதில் அல்லது அதற்கு ஏற்பட்ட களங்கத்தைப் போக்குவதில் அவர் வைராக்கியமாய் இருந்தார்.
11. இயேசுவை ஊக்கமாய்ச் செயல்படத் தூண்டியது எது?
11 ஆலயத்தில் இயேசு செய்ததைக் கண்ட சீடர்கள், தாவீதின் வார்த்தைகளோடு அதைத் தொடர்புபடுத்திப் பார்த்தது சரியே. பூமியில் இயேசுவின் ஊழியக் காலத்திற்கு ஒரு வரம்பு இருந்ததால் மட்டுமே அவர் ஊக்கமாகச் செயல்படவில்லை; மாறாக, தம் தகப்பனுடைய பெயரின் மீதும் தூய வழிபாட்டின் மீதும் பக்திவைராக்கியம் காட்டியதாலேயே அயராது உழைத்தார். கடவுளுடைய பெயர்மீது குவிக்கப்பட்டிருந்த அவதூறையும் நிந்தனையையும் பார்த்த இயேசு பக்திவைராக்கியத்தில் கொதித்தெழுந்தார், அதைச் சரிப்படுத்துவதற்குச் செயலில் இறங்கினார். மதத் தலைவர்கள் எளியவர்களை ஒடுக்கி சுரண்டிப் பிழைத்ததை இயேசு பார்த்தபோது, அவர்களுக்கு விடுதலை அளிக்கவும் அந்தக் கொடிய மதத் தலைவர்களுக்கு எதிராகக் கடும் கண்டனத் தீர்ப்பை அறிவிக்கவும் அவரைத் தூண்டியது பக்திவைராக்கியமே.—மத். 9:36; 23:2, 4, 27, 28, 33.
உண்மை வழிபாட்டிற்காகப் பக்திவைராக்கியம் காட்டுங்கள்
12, 13. (அ) கடவுளுடைய பெயருக்கும் (ஆ) கடவுளுடைய அரசாங்கத்திற்கும் எதிராக கிறிஸ்தவமண்டல மதத் தலைவர்கள் இன்று என்ன செய்திருக்கிறார்கள்?
12 இன்றுள்ள மதத் தலைவர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள்; சொல்லப்போனால், இயேசுவின் காலத்தில் இருந்தவர்களைவிட மோசமாகவே இருக்கிறார்கள். உதாரணமாக, ஜெபத்தில் கடவுளுடைய பெயருக்கு முதலிடம் கொடுக்கும்படி தம்முடைய சீடர்களுக்கு இயேசு கற்றுக்கொடுத்ததை நினைவுபடுத்திப் பாருங்கள்; ஆம், “கடவுளுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்” என்று ஜெபிக்கும்படி கற்றுக்கொடுத்தார். (மத். 6:9) மதத் தலைவர்கள், முக்கியமாக கிறிஸ்தவமண்டல குருமார்கள், கடவுளுடைய பெயரை அறிந்துகொள்ளவும் அதைப் பரிசுத்தப்படுத்தவும் மக்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார்களா? மாறாக, திரித்துவம், ஆத்துமா அழியாமை, எரிநரகம் ஆகிய பொய்ப் போதனைகள் மூலம் கடவுள் புரியாப் புதிரானவர், மூர்க்கத்தனமானவர், கொடுமையில் இன்பம் காண்பவர் என்றெல்லாம் தவறாகக் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். மோசடிகள் மூலமும் வெளிவேஷத்தின் மூலமும்கூட கடவுளுக்கு அவதூறு கொண்டு வந்திருக்கிறார்கள். (ரோமர் 2:21-24-ஐ வாசியுங்கள்.) மேலும், கடவுளுடைய பெயரை மறைப்பதற்குத் தங்களால் ஆன அனைத்தையும் செய்திருக்கிறார்கள்; சொல்லப்போனால், பைபிள் மொழிபெயர்ப்புகளிலிருந்தே அதை நீக்கியிருக்கிறார்கள். இவ்வாறு, கடவுளிடம் மக்கள் நெருங்கி வருவதற்கும், அவருடன் நெருங்கிய பந்தத்தை வளர்த்துக்கொள்வதற்கும் அவர்கள் முட்டுக்கட்டையாய் இருக்கிறார்கள்.—யாக். 4:7, 8.
13 கடவுளுடைய அரசாங்கத்தைக் குறித்து ஜெபிக்கும்படியும், அதாவது “உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும். உங்களுடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல் பூமியிலேயும் செய்யப்பட வேண்டும்” என்று ஜெபிக்கும்படியும், இயேசு தம் சீடர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். (மத். 6:10) கிறிஸ்தவமண்டல மதத் தலைவர்கள் அந்த ஜெபத்தை அடிக்கடி செய்கிறார்கள்; ஆனாலும், அரசியலையும் மற்ற அமைப்புகளையும் ஆதரிக்கும்படியே மக்களை ஊக்குவித்திருக்கிறார்கள். அதோடு, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அறிவிப்பவர்களைக் கேவலமாகப் பார்க்கிறார்கள். அதனால், கிறிஸ்தவர்கள் எனச் சொல்லிக்கொள்கிறவர்கள் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிப் பேசுவதும் இல்லை, அதன்மீது அவர்களுக்கு நம்பிக்கையும் இல்லை.
14. கிறிஸ்தவமண்டல குருமார்கள் கடவுளுடைய வார்த்தையின் வலிமையை எப்படிக் குறைத்திருக்கிறார்கள்?
14 கடவுளிடம் இயேசு ஜெபம் செய்தபோது, “உங்களுடைய வார்த்தையே சத்தியம்” என்று தெளிவாகவே சொன்னார். (யோவா. 17:17) அவர் பரலோகத்திற்குச் செல்வதற்கு முன்பு, தம்மைப் பின்பற்றுவோருக்கு ஆன்மீக உணவை வழங்க ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை’ நியமிப்பதாகச் சொன்னார். (மத். 24:45) கடவுளுடைய வார்த்தையைப் போதிக்கும் உரிமை தங்களுக்கு இருப்பதாக கிறிஸ்தவமண்டல குருமார்கள் சொல்லிக்கொண்டாலும் எஜமானருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்துகொண்டார்களா? இல்லை. பைபிளில் சொல்லப்பட்டிருப்பதெல்லாம் கட்டுக்கதை என்றே முத்திரை குத்தியிருக்கிறார்கள். மக்களுக்கு ஆன்மீக உணவை வழங்கி, ஆறுதலையும் அறிவொளியையும் அளிப்பதற்குப் பதிலாக காதுகளுக்கு இனிமையாகத் தொனிக்கும் மனித தத்துவங்களையே அவர்கள் போதிக்கிறார்கள். மக்களைப் பிரியப்படுத்துவதற்காகக் கடவுளுடைய ஒழுக்க நெறிகளில் தங்கள் கருத்துகளைப் புகுத்தி அதன் வலிமையைக் குறைத்திருக்கிறார்கள்.—2 தீ. 4:3, 4.
15. கடவுளுடைய பெயரில் குருமார்கள் செய்திருக்கிற எல்லாவற்றையும் பார்க்கும்போது நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?
15 இவை அனைத்தையும் கடவுளுடைய பெயரில் செய்வதாகக் குருமார்கள் சொல்வதால் நல்மனமுள்ள அநேகர் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள் அல்லது பைபிள் மீதும் கடவுள் மீதும் முற்றிலும் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள். இதனால் அநேகர் சாத்தானுக்கும் அவனுடைய பொல்லாத உலகத்திற்கும் இரையாகியிருக்கிறார்கள். இத்தகைய காரியங்களை ஒவ்வொரு நாளும் பார்க்கும்போதும் கேட்கும்போதும் நீங்கள் எப்படி உணருகிறீர்கள்? யெகோவாவின் பெயர்மீது அவதூறும் நிந்தனையும் குவிக்கப்படுவதைப் பார்க்கும்போது, அவருடைய ஊழியராகிய நீங்கள் அதைச் சரிப்படுத்த உங்களால் ஆனதைச் செய்ய தூண்டப்படவில்லையா? நல்மனமுள்ள ஆட்கள் ஏமாற்றப்படுவதையும் சுரண்டிப் பிழைக்கப்படுவதையும் நீங்கள் பார்க்கும்போது, அவர்களுக்கு ஆறுதலை அளிக்க நீங்கள் தூண்டப்படவில்லையா? அன்றிருந்த மக்கள் ‘மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் . . . கொடுமைப்படுத்தப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் இருந்ததை’ பார்த்த இயேசு மனதுருகியதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. மாறாக, “அவர்களுக்கு நிறைய விஷயங்களைக் கற்பிக்க ஆரம்பித்தார்.” (மத். 9:36; மாற். 6:34) இயேசுவைப் போல பக்திவைராக்கியத்தைக் காட்ட நமக்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன.
16, 17. (அ) ஊழியத்தில் மும்முரமாய் ஈடுபட வேண்டுமென்ற ஆர்வம் நமக்குள் ஏன் பொங்கியெழ வேண்டும்? (ஆ) அடுத்த கட்டுரையில் நாம் எதைப் பற்றிச் சிந்திப்போம்?
16 நாம் ஊழியத்தில் பக்திவைராக்கியத்தோடு ஈடுபட்டால் 1 தீமோத்தேயு 2:3, 4-லுள்ள (வாசியுங்கள்) அப்போஸ்தலன் பவுலின் வார்த்தைகள் நமக்கு மிகுந்த அர்த்தமுடையவையாய் இருக்கும். நாம் ஊழியத்தில் கடுமையாக உழைப்பதற்குக் காரணம் கடைசி காலத்தில் வாழ்வதால் மட்டுமே அல்ல, இது யெகோவாவின் சித்தம் என்பதை அறிந்திருப்பதாலுமே. அதோடு, சத்தியத்தை மக்கள் அறிந்துகொள்ள வேண்டுமென கடவுள் விரும்புகிறார்; அப்போதுதான், அவரை வழிபடவும் அவருக்குச் சேவை செய்யவும் கற்றுக்கொண்டு அவர்கள் ஆசீர்வாதத்தைப் பெற முடியும். ஊழியத்தில் மும்முரமாய் ஈடுபட வேண்டுமென்ற ஆர்வம் நமக்குள் பொங்கியெழுவதற்கு முக்கியக் காரணம், இன்னும் கொஞ்ச காலமே மீந்திருப்பதால் அல்ல, ஆனால் கடவுளுடைய பெயருக்கு மதிப்புக் கொடுக்கவும் அவருடைய சித்தத்தை அறிந்துகொள்ள மக்களுக்கு உதவ வேண்டும் என்பதாலுமே. ஆம், நாம் உண்மை வழிபாட்டிற்காகப் பக்திவைராக்கியம் காட்டுகிறோம்.—1 தீ. 4:16.
17 யெகோவாவின் மக்களாகிய நாம், மனிதருக்காகவும் பூமிக்காகவும் கடவுள் வைத்திருக்கிற நோக்கத்தைப் பற்றிய சத்தியத்தை அறிந்திருக்கிறோம். எனவே, மக்கள் சந்தோஷத்தை அடையவும் எதிர்காலத்தைப் பற்றிய உண்மையான நம்பிக்கையைப் பெறவும் நம்மால் உதவ முடியும். சாத்தானுடைய உலகிற்கு அழிவு வருகையில், அதிலிருந்து பாதுகாப்பைப் பெறுவது எப்படியென அவர்களுக்கு வழிகாட்டவும் முடியும். (2 தெ. 1:7-9) யெகோவாவின் நாள் தாமதிப்பதாக நினைத்து விரக்தியடைவதற்கோ சோர்ந்துபோவதற்கோ பதிலாக, உண்மை வழிபாட்டிற்காகப் பக்திவைராக்கியம் காட்டுவதற்கு இன்னும் காலம் இருப்பதை நினைத்து நாம் சந்தோஷப்பட வேண்டும். (மீ. 7:7; ஆப. 2:3) அப்படிப்பட்ட பக்திவைராக்கியத்தை எப்படி வளர்த்துக்கொள்ளலாம்? அடுத்த கட்டுரையில் இதைப் பற்றிச் சிந்திப்போம்.
உங்களால் விளக்க முடியுமா?
• ஊழியத்தில் அயராது உழைக்க இயேசுவை எது தூண்டியது?
• பைபிளின்படி, “பக்திவைராக்கியம்” என்பதன் அர்த்தம் என்ன?
• இன்று உண்மை வழிபாட்டிற்காகப் பக்திவைராக்கியம் காட்ட நம்மைத் தூண்டுகிற காரியங்கள் யாவை?
[பக்கம் 8-ன் படம்]
இயேசு தம் தகப்பனுடைய சித்தத்தைச் செய்வதற்கும் சக மனிதரிடம் அன்பு காட்டுவதற்குமே மிகுந்த கவனம் செலுத்தினார்
[பக்கம் 10-ன் படம்]
உண்மை வழிபாட்டிற்காகப் பக்திவைராக்கியம் காட்ட நமக்கு எல்லாக் காரணமும் இருக்கிறது