யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்!
“என் உயிர் உள்ளவரை இறைவனுக்கு இன்னிசை பாடுவேன்.”—சங். 146:2, NW.
1. சில பாடல்களை இயற்ற இளம் தாவீதை எது தூண்டியது?
பெத்லெகேமிற்கு அருகே உள்ள வயல்வெளிகளில் இளம் தாவீது ஆடுகளை மேய்த்து வந்தார்; அப்போது, யெகோவாவின் மகத்தான படைப்புகளை, அதாவது நட்சத்திரங்கள் மின்னும் வானத்தை, “காட்டு மிருகங்களை,” “ஆகாயத்துப் பறவைகளை,” உற்று கவனித்திருப்பார். அந்த அற்புதப் படைப்புகள் அவரைக் கவர்ந்ததால், அவற்றை உண்டாக்கினவரைப் புகழ நெஞ்சை நெகிழ வைக்கும் பாடல்களை இயற்றினார். அவர் இயற்றிய அநேக பாடல்களைச் சங்கீதப் புத்தகத்தில் காணலாம்.a—சங்கீதம் 8:3, 4, 7-9-ஐ வாசியுங்கள்.
2. (அ) இசைக்கு என்ன சக்தி இருக்கிறது? ஓர் உதாரணம் கொடுங்கள். (ஆ) சங்கீதம் 34:7, 8; 139:2-8 ஆகிய வசனங்களிலிருந்து தாவீதுக்கும் யெகோவாவுக்கும் இடையிலிருந்த பந்தத்தைப் பற்றி என்ன தெரிந்துகொள்கிறோம்?
2 இப்படி ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த காலத்தில்தான் ஓர் இசைக் கலைஞருக்குரிய திறமைகளை தாவீது வளர்த்துக்கொண்டார். அவர் அந்தளவு திறமை பெற்றிருந்ததால் சவுல் ராஜாமுன் சுரமண்டலத்தை வாசிப்பதற்கு அழைக்கப்பட்டார். (நீதி. 22:29) சவுல் ராஜாவின் கலங்கிய நெஞ்சத்திற்கு அவரது இசை இதமளித்தது; இன்றும்கூட இனிய இசைக்கு அத்தகைய சக்தி இருக்கிறது. தாவீது இசைக் கருவியை எடுத்து வாசிக்கும்போதெல்லாம், “சவுல் ஆறுதலடைந்து, சொஸ்தமாவான்.” (1 சா. 16:23) கடவுள் பயமுள்ள இந்த இசைக் கலைஞர் இயற்றிய பாடல்கள் இன்றுவரை மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளன. இதைச் சற்று யோசித்துப் பாருங்கள். தாவீது பிறந்து 3,000-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பிறகு, இன்றும் பல்வேறு பின்னணியைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் ஆறுதலையும் நம்பிக்கையையும் பெற தாவீதின் சங்கீதங்களை தினமும் வாசிக்கிறார்கள்.—2 நா. 7:6; சங்கீதம் 34:7, 8-ஐயும், 139:2-8-ஐயும் வாசியுங்கள்; ஆமோ. 6:5.
உண்மை வழிபாட்டில் இசையின் முக்கியப் பங்கு
3, 4. தாவீதின் காலத்தில் வழிபாட்டின்போது கடவுளைத் துதித்துப் பாட என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டன?
3 தாவீது தனக்கிருந்த திறமையை மிகச் சிறந்த விதத்தில் பயன்படுத்தினார், அதாவது கடவுளுக்கு மகிமை சேர்க்க பயன்படுத்தினார். அவர் இஸ்ரவேலின் ராஜாவான பிறகு ஆசரிப்புக்கூடார சேவைகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார்; அவற்றில் இனிய துதிப்பாடல்களும் இடம்பெற்றன. ஆலயத்தில் சேவை செய்த லேவியரில் பத்தில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர், அதாவது 4,000 பேர், கடவுளைத் “துதி செய்வதற்கு” நியமிக்கப்பட்டார்கள்; இவர்களில் 288 பேர் ‘கர்த்தரைப் பாடும் பாட்டுகளைக் கற்றுக்கொண்டு நிபுணரானார்கள்.’—1 நா. 23:3, 5; 25:7.
4 லேவியர் பாடிய பாடல்களில் பல தாவீதே இயற்றியவை. அந்தப் பாடல்கள் பாடப்பட்ட சமயங்களில் அங்கிருந்த எந்தவொரு இஸ்ரவேலனின் உள்ளமும் உருகியிருக்கும். பிற்பாடு, ஒப்பந்தப் பெட்டி எருசலேமுக்கு கொண்டுவரப்பட்டபோது ‘தாவீது லேவியரின் பிரபுக்களை நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரராகிய பாடகரைத் தம்புரு சுரமண்டலம் கைத்தாளம் முதலிய கீதவாத்தியங்கள் முழங்க, தங்கள் சத்தத்தை உயர்த்தி, சந்தோஷம் உண்டாகப் பாடும்படி நிறுத்த வேண்டும் என்று சொன்னார்.’—1 நா. 15:16.
5, 6. (அ) தாவீதின் ஆட்சிக் காலத்தில் இசைக்கு ஏன் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது? (ஆ) பூர்வ இஸ்ரவேலருடைய வழிபாட்டில் இசைக்கு முக்கிய இடம் இருந்தது என்று நமக்கு எப்படித் தெரியும்?
5 தாவீதின் காலத்தில் பாடலுக்கு ஏன் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது? ராஜாவே ஒரு பாடகராய் இருந்ததால்தானா? இல்லை, அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது; பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு நீதியுள்ள எசேக்கியா ராஜா ஆலய சேவைகளைத் திரும்பவும் ஆரம்பித்தபோது அது தெரியவந்தது. 2 நாளாகமம் 29:25-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: ‘தாவீதும், ராஜாவின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்தும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும் கற்பித்தபடியே, கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் வாசிக்கிற லேவியரைக் கர்த்தருடைய ஆலயத்தில் [எசேக்கியா] நிறுத்தினார்; இப்படிச் செய்ய வேண்டும் என்கிற கற்பனை கர்த்தரால் அவருடைய தீர்க்கதரிசிகளைக்கொண்டு உண்டாயிருந்தது.’
6 ஆம், பாடல்களைப் பாடித் தம்மைத் துதிக்கும்படி தீர்க்கதரிசிகள் மூலம் யெகோவா தம் ஊழியர்களுக்குச் சொன்னார். ஆசாரிய கோத்திரத்தைச் சேர்ந்த பாடகர்கள் மற்ற லேவியர் செய்த வேலையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தார்கள்; இதனால் பாடல்களை இயற்றுவதற்கும் ஒத்திகை பார்ப்பதற்கும் அவர்களுக்குப் போதுமான நேரம் இருந்திருக்கும்.—1 நா. 9:33.
7, 8. ராஜ்ய பாடல்களைப் பாடும் விஷயத்தில் திறமையைவிட எது மிக முக்கியம்?
7 நீங்கள் ஒருவேளை இப்படிச் சொல்லலாம்: “நான் மட்டும் அந்தக் காலத்தில் வாழ்ந்திருந்தால் ஆசரிப்புக்கூடாரத்தில் பாடிய நிபுணர்களில் ஒருவனாய் என்னை நிச்சயம் சேர்த்திருக்க மாட்டார்கள்.” சொல்லப்போனால், பாடகர்களாகிய லேவியர் எல்லாருமே நிபுணர்களாக இருக்கவில்லை. 1 நாளாகமம் 25:8 சொல்கிறபடி, அவர்களில் ‘மாணாக்கர்களும்’ இருந்தார்கள். சிந்தித்துப் பார்க்க வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது; லேவியரைவிட சிறந்த பாடகர்கள் இஸ்ரவேலின் மற்ற கோத்திரங்களிலும் இருந்திருக்கலாம்; ஆனால், பாடுவதற்கு லேவியரையே யெகோவா நியமித்தார். அந்த உண்மையுள்ள லேவியர் ‘நிபுணர்களாக’ இருந்திருந்தாலும் சரி ‘மாணாக்கர்களாக’ இருந்திருந்தாலும் சரி, அவர்கள் எல்லாருமே முழு இருதயத்தோடு கடவுளுக்குப் பாடல்களைப் பாடினார்கள் என்று நாம் நிச்சயம் நம்பலாம்!
8 இசையென்றால் தாவீதுக்குக் கொள்ளைப் பிரியம், அதில் அவர் திறமையும் பெற்றிருந்தார். ஆனால், ஒருவருடைய திறமை மட்டுமே கடவுளுக்கு முக்கியமா? சங்கீதம் 33:3-ல் தாவீது இவ்வாறு எழுதுகிறார்: ‘ஆனந்த சத்தத்தோடே வாத்தியங்களை நேர்த்தியாய் வாசியுங்கள்.’ யெகோவாவை “நேர்த்தியாய்” துதித்துப் பாடுவதே, அதாவது நம்மால் முடிந்தளவு நன்றாக பாடுவதே, முக்கியம் என்பது தெளிவாகத் தெரிகிறது.
தாவீதின் காலத்திற்குப்பின் இசையின் பங்கு
9. சாலொமோனின் ஆட்சி காலத்தில், ஆலயத் திறப்பு விழாவுக்கு நீங்களும் சென்றிருந்தால் எதைப் பார்த்திருப்பீர்கள், கேட்டிருப்பீர்கள் என்று விளக்குங்கள்.
9 சாலொமோனின் ஆட்சியின்போது உண்மை வழிபாட்டில் இசை பெரும் பங்கு வகித்தது. ஆலயத் திறப்பு விழாவின்போது பிரமாண்டமான இசைக்குழு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது; அதில், பித்தளை இசைக்கருவிகளின் பிரிவில் பூரிகைகளை ஊதுகிறவர்கள் 120 பேர் இருந்தார்கள். (2 நாளாகமம் 5:12-ஐ வாசியுங்கள்.) ‘அவர்கள் [அதாவது, ஆசாரியர்களாக இருந்த எல்லாரும்] ஒருமிக்கப் பூரிகைகளை ஊதி, ஏகசத்தமாய்க் கர்த்தரைத் துதித்து ஸ்தோத்திரித்துப் பாடினார்கள்; . . . யெகோவா நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது’ என்று பாடியதாக பைபிள் சொல்கிறது. அந்த ஆனந்தப் பாடலின் ஓசை உயர்ந்ததும், “தேவாலயம் மேகத்தினால் நிறையப்பட்டது”; அது, யெகோவாவின் அங்கீகாரத்தைக் குறித்தது. பூரிகைகளின் சத்தத்தோடு ஆயிரக்கணக்கான பாடகர்களின் குரலும் சேர்ந்து ஒலித்தபோது கேட்பதற்கு எவ்வளவு ஆனந்தப் பரவசமாய் இருந்திருக்கும்!—2 நா. 5:13.
10, 11. ஆரம்பகால கிறிஸ்தவர்கள் வழிபாட்டில் பாடல்களைப் பயன்படுத்தினார்கள் என்று எது காட்டுகிறது?
10 ஆரம்பகால கிறிஸ்தவர்களும் வழிபாட்டில் இசையைப் பயன்படுத்தினார்கள். அவர்கள் வழிபாட்டிற்காக ஆசரிப்புக் கூடாரங்களிலோ ஆலயங்களிலோ கூடிவரவில்லை என்பது உண்மைதான்; ஆனால், வீடுகளில் கூடிவந்தார்கள். துன்புறுத்தல் வந்ததாலும் பிற காரணங்களாலும் அவர்களால் பெரும்பாலும் வெளிப்படையாகக் கூடிவர முடியவில்லை. இருந்தாலும் அவர்கள் பாடல்களைப் பாடி கடவுளைத் துதித்தார்கள்.
11 “சங்கீதங்களாலும் துதிகளாலும் இனிமையான பக்திப்பாடல்களாலும் ஒருவருக்கொருவர் . . . புத்திசொல்லிக்கொண்டே இருங்கள்” என்று கொலோசெய கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் அறிவுரை கூறினார். (கொலோ. 3:16) பவுலும் சீலாவும் சிறையில் தள்ளப்பட்டபோது “ஜெபம் செய்துகொண்டும் கடவுளைப் புகழ்ந்து பாடிக்கொண்டும் இருந்தார்கள்”; இத்தனைக்கும் அவர்களிடம் பாட்டுப் புத்தகம் எதுவும் இல்லை. (அப். 16:25) ஒருவேளை நீங்கள் சிறையில் தள்ளப்பட்டால், ராஜ்ய பாடல்களில் எத்தனை பாடல்களை உங்களால் மனப்பாடமாகப் பாட முடியும்?
12. ராஜ்ய பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை நாம் எப்படிக் காட்டலாம்?
12 நம்முடைய வழிபாட்டில் இசை முக்கியப் பங்கு வகிப்பதால், நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்வது நல்லது: ‘நான் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறேனா? முடிந்தவரை கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் சீக்கிரமாய்ப் போய் சகோதர சகோதரிகளுடன் ஆரம்பப் பாடலில் சேர்ந்துகொள்கிறேனா? உணர்ச்சிபொங்க பாடுகிறேனா? தேவராஜ்ய ஊழியப் பள்ளிக்கும் ஊழியக் கூட்டத்திற்கும் இடையே அல்லது பொதுப் பேச்சிற்கும் காவற்கோபுர படிப்பிற்கும் இடையே பாடல் பாடப்படும் சமயத்தை இடைவேளையாகக் கருதி கழிவறைக்கோ வேறு காரியத்திற்கோ வெளியே சென்றுவர என்னுடைய பிள்ளைகளை அனுமதிக்கிறேனா?’ பாடுவது நம் வழிபாட்டின் ஒரு பாகம். ஆம், நாம் ‘நிபுணர்களாக’ இருந்தாலும் சரி ‘மாணாக்கர்களாக’ இருந்தாலும் சரி, எல்லாரும் ஒருமிக்க யெகோவாவுக்குப் புகழ் பாட முடியும், பாடவும் வேண்டும்.—2 கொரிந்தியர் 8:12-ஐ ஒப்பிடுங்கள்.
காலம் மாறும்போது தேவைகள் மாறுகின்றன
13, 14. சபைக் கூட்டங்களில் ராஜ்ய பாடல்களை இதயப்பூர்வமாகப் பாடுவது ஏன் ரொம்ப முக்கியம்? விளக்குங்கள்.
13 ராஜ்ய பாடல்களைப் பாடுவது ஏன் ரொம்ப முக்கியம் என்பதை 100-க்கும் மேற்பட்ட வருடங்களுக்கு முன்பே சீயோனின் காவற்கோபுரம் (ஆங்கிலம்) சொன்னது; “சத்தியத்தைக் கடவுளுடைய மக்களின் மனதிலும் இருதயத்திலும் பதிய வைப்பதற்குச் சிறந்த வழி பாடுவதாகும்” என்று அது குறிப்பிட்டது. நம்முடைய பாடல்களில் உள்ள வரிகள் பெரும்பாலும் பைபிள் வசனங்களை அடிப்படையாகக் கொண்டவை; ஆகவே, சத்தியத்தை நம் மனதில் ஆழப் பதிய வைக்க மிகச் சிறந்த வழி, ஒருசில பாடல்களையாவது மனப்பாடம் செய்வதாகும். நம் கூட்டங்களுக்கு முதன்முறையாக வருகிறவர்கள் அங்கு இதயப்பூர்வமாகப் பாடப்படும் பாடல்களைக் கேட்டு மனம் நெகிழ்ந்து போயிருக்கிறார்கள்.
14 சகோதரர் சி. டி. ரஸல் ஒருநாள் சாயங்காலம் (1869-ல்) வேலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது ஒரு கட்டிடத்தின் கீழ்த் தளத்திலிருந்த அறையிலிருந்து வந்த பாடல் சத்தத்தைக் கேட்டார். கடவுளைப் பற்றிய சத்தியத்தை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லையே என்று அவர் நொந்துபோயிருந்த சமயம் அது. அதனால், மக்களின் ஆன்மீகப் பசியைப் போக்க முடியாவிட்டாலும் வயிற்றுப் பசியையாவது போக்கலாம் என்ற எண்ணத்தில் பணம் சம்பாதிக்க வியாபாரத்தில் மும்முரமாக இறங்கத் தீர்மானித்திருந்தார். தூசி மண்டியிருந்த அந்த அறைக்குள் சகோதரர் ரஸல் சென்றார்; அங்கு ஓர் ஆராதனை கூட்டம் நடந்துகொண்டிருந்தது. உடனே உட்கார்ந்து, கவனித்துக் கேட்டார். அன்று இரவு கேட்டதே “கடவுளின் உதவியோடு பைபிள் மீதுள்ள விசுவாசத்தை மீண்டும் பலப்படுத்துவதற்குப் போதுமானதாக இருந்தது” என்று பிற்பாடு அவர் எழுதினார். அந்தக் கூட்டத்திற்குச் செல்ல அவரை முதலில் ஈர்த்தது அங்கு பாடப்பட்ட பாடலே!
15. என்ன மாற்றங்களால் பாட்டுப் புத்தகத்தைப் புதுப்பிக்க வேண்டியிருந்தது?
15 காலம் செல்லச் செல்ல வசனங்களை நாம் புரிந்துகொள்ளும் விதத்திலும் மாற்றம் செய்யப்படுகிறது. நீதிமொழிகள் 4:18 இவ்வாறு சொல்கிறது: “நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போலிருக்கும்.” சத்திய ஒளி மேன்மேலும் பிரகாசிக்கும்போது நம் பாடலிலும் சில மாற்றங்கள் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள் என்ற பாட்டுப் புத்தகத்தை அநேக நாடுகளிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் கடந்த 25 வருடங்களாகப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.b அந்தப் புத்தகம் வெளியிடப்பட்டது முதற்கொண்டு பல்வேறு விஷயங்களின்மீது வெளிச்சம் அதிகமதிகமாய்ப் பிரகாசித்திருக்கிறது; அதன் விளைவாக, அந்தப் பாட்டுப் புத்தகத்திலுள்ள சில சொற்றொடர்கள் பழம்பாணியாகிவிட்டன. உதாரணமாக, “புதிய ஒழுங்கு” என்று நாம் இப்போது சொல்வதில்லை; மாறாக, “புதிய உலகம்” என்றே சொல்கிறோம். கோட்பாடு சம்பந்தப்பட்ட இதுபோன்ற மாற்றங்களால், நம்முடைய பாட்டுப் புத்தகத்தைப் புதுப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
16. எபேசியர் 5:19-ல் உள்ள பவுலின் அறிவுரையைக் கடைப்பிடிக்க புதிய பாட்டுப் புத்தகம் எவ்வாறு உதவும்?
16 இந்தக் காரணத்தாலும் மற்ற காரணங்களாலும், யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள் என்ற புதிய பாட்டுப் புத்தகத்தை வெளியிடுவதற்கு ஆளும் குழு அனுமதி அளித்தது. இந்தப் புதிய ஆங்கில பாட்டுப் புத்தகத்தில் பாடல்களின் எண்ணிக்கை 135-ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. தமிழில் 55 பாடல்கள் அடங்கிய சிற்றேடு இருக்கிறது. எனவே, சில பாடல்களையாவது மனப்பாடம் செய்ய உங்களை உற்சாகப்படுத்துகிறோம். இது, எபேசியர் 5:19-ல் (வாசியுங்கள்) உள்ள பவுலின் அறிவுரைக்கு இசைவாக இருக்கிறது.
உங்கள் நன்றியுணர்வைக் காட்டுங்கள்
17. சபைக் கூட்டங்களில் பாட்டுப் பாடும் விஷயத்தில் நம் கூச்ச சுபாவத்தைச் சமாளிக்க எதை மனதில் வைப்பது உதவும்?
17 கூச்சத்தின் காரணமாகக் கிறிஸ்தவக் கூட்டங்களில் வாயைத் திறந்து பாடாமல் இருந்து விடுகிறோமா? இந்தக் கோணத்தில் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: பேச்சில் ‘நாம் எல்லாரும் பலமுறை தவறுகிறோம்,’ அல்லவா? (யாக். 3:2) பேசுவதில் திறமைசாலியாய் இல்லை என்பதற்காக வீட்டிற்கு வீடு ஊழியத்தில் யெகோவாவைப் புகழ்ந்து பேசுவதை நாம் நிறுத்திவிடுவதில்லை. அப்படியானால், பாடுவதில் திறமைசாலியாய் இல்லை என்பதற்காக யெகோவாவைப் புகழ்ந்து பாடுவதை நிறுத்திவிட வேண்டுமா? நாம் வாய்திறந்து யெகோவாவைத் துதித்துப் பாடும்போது “மனுஷனுக்கு வாயை உண்டாக்கின” அவர் அதைக் கேட்டு சந்தோஷப்படுவார்.—யாத். 4:11.
18. பாடல் வரிகளை மனப்பாடம் செய்வதற்கு உதவும் சில வழிகளைச் சொல்லுங்கள்.
18 யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்—பாடல்கள் என்ற சிடி-கள் அநேக மொழிகளில் கிடைக்கின்றன.c இனிய இசையுடன் சேர்ந்து பாடகர் குழு பாடிய புதிய பாடல்கள் இவற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாடல்களைக் கேட்டு மகிழ்வதற்காகவே இவை தயாரிக்கப்பட்டிருக்கின்றன. யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்—பியானோ இசை என்ற சிடி புதிய பாடல்களைக் கற்றுக்கொள்ள அநேக சகோதர சகோதரிகளுக்கு உதவியிருக்கிறது. இந்த இசை கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது. ஆகவே, நீங்கள் வீட்டில் இருக்கும்போது பாட்டுப் புத்தகத்தில் உள்ள பாடல்களை இந்த சிடி-யின் உதவியோடு அடிக்கடி பாடினால், பாடல் வரிகளை மனப்பாடம் செய்ய முடியும், ராஜ்ய மன்றத்தில் கூச்சம் இல்லாமல் பாடவும் முடியும்.
19. ராஜ்ய பாடல்களுக்கான இசையைத் தயாரிப்பதற்கு என்னென்ன முயற்சிகள் எடுக்கப்படுகின்றன?
19 விசேஷ, வட்டார, மாவட்ட மாநாடுகளில் போடப்படும் இசைக்கு நாம் அந்தளவு கவனம் செலுத்துவதில்லை. ஆனால், அந்த இசையைத் தயாரிப்பதற்கு ஏகப்பட்ட வேலைகள் செய்யப்படுகின்றன. மாநாட்டிற்கான இசையைத் தேர்ந்தெடுத்த பிறகு, 64 பேர் அடங்கிய உவாட்ச்டவர் இசைக் குழுவினர் அதை இசைப்பதற்கு ஏற்ப இசைக் குறியீடுகளை எழுத நிறைய மணிநேரங்கள் செலவிடப்படுகிறது. அதன் பிறகு எழுதப்பட்ட குறியீடுகளைச் சரிபார்க்கவும், அதை ஒத்திகை பார்த்து கடைசியில் நியு யார்க் பேட்டர்சனில் உள்ள ஸ்டுடியோவில் பதிவு செய்யவும் இசைக் குழுவினர் பல மணிநேரங்களைச் செலவிடுகிறார்கள். அந்த 64 சகோதர சகோதரிகளில் பத்து பேர் அமெரிக்காவிற்கு வெளியே வசிப்பவர்கள். அவர்கள் எடுக்கிற அன்பான முயற்சிக்கு நாம் எந்தளவு நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்! மாநாடுகளில் இசையைக் கேட்கும்படி சேர்மேன் அறிவிக்கும்போது, நாம் உடனடியாக இருக்கையில் உட்கார்ந்து நமக்காகவே அன்போடு தயாரிக்கப்பட்டிருக்கிற அந்த இசையை அமைதியாகக் கேட்போமாக.
20. நீங்கள் என்ன செய்யத் தீர்மானித்திருக்கிறீர்கள்?
20 நாம் துதித்துப் பாடும் பாடல்களை யெகோவா கவனித்துக் கேட்கிறார். அவற்றை அவர் மதிப்புமிக்கதாய்க் கருதுகிறார். ஆகவே, வழிபாட்டிற்காக நாம் கூடிவரும்போதெல்லாம் வாய்திறந்து, உணர்ச்சி பொங்க பாடி அவருடைய இருதயத்தைச் சந்தோஷப்படுத்தலாம். ஆம், நாம் நிபுணர்களாக இருந்தாலும் சரி மாணாக்கர்களாக இருந்தாலும் சரி, ‘யெகோவாவைப் புகழ்ந்து பாடுவோமாக’!—சங். 104:33, NW.
[அடிக்குறிப்புகள்]
a தாவீது இறந்து ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு, திரளான தேவதூதர்கள் தோன்றி மேசியாவின் பிறப்பைப் பற்றி மேய்ப்பர்களுக்கு அறிவித்தார்கள்; இவர்கள் பெத்லெகேமுக்கு அருகிலுள்ள வயல்வெளிகளில் மந்தைகளைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள்.—லூக். 2:4, 8, 13, 14.
b 225 பாடல்கள் அடங்கிய முழு தொகுப்பும் 100-க்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைத்தது.
c தமிழில் இல்லை.
என்ன நினைக்கிறீர்கள்?
• வழிபாட்டில் பாடலுக்கு முக்கியப் பங்கு இருப்பதை காட்டும் பூர்வகால உதாரணங்கள் யாவை?
• மத்தேயு 22:37-ல் உள்ள இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிவதற்கும், இதயப்பூர்வமாக ராஜ்ய பாடல்களைப் பாடுவதற்கும் இடையே என்ன தொடர்பு இருக்கிறது?
• ராஜ்ய பாடல்களுக்கு மிகுந்த நன்றியுணர்வைக் காட்ட சில வழிகள் யாவை?
[பக்கம் 23-ன் படம்]
பாடல் பாடும்போது உங்கள் பிள்ளைகளைத் தேவையில்லாமல் வெளியே செல்ல அனுமதிக்கிறீர்களா?
[பக்கம் 24-ன் படம்]
புதிய பாடல்களின் வரிகளை மனப்பாடம் செய்ய வீட்டில் பயிற்சி செய்கிறீர்களா?