வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
“என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம்” என்று ஆதியாகமம் 6:3-ல் நாம் வாசிக்கிறோம். மனிதரின் வாழ்நாள் காலத்தை யெகோவா 120 வருடங்களாகக் குறைத்தாரா? வரவிருந்த பெருவெள்ளத்தைக் குறித்து நோவா அத்தனை வருடங்களுக்குப் பிரசங்கித்தாரா?
இல்லை என்பதே அந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில்.
பெருவெள்ளத்திற்கு முன்பு அநேகர் பல நூற்றாண்டுகள் உயிர் வாழ்ந்தார்கள். பெருவெள்ளம் வந்த சமயத்தில் நோவாவுக்கு 600 வயது; அவர் 950 வயதுவரை வாழ்ந்தார். (ஆதி. 7:6; 9:29) பெருவெள்ளத்திற்குப் பிறகும்கூட சிலர் 120-க்கும் அதிகமான வருடங்கள் வாழ்ந்தார்கள்; உதாரணத்திற்கு, அர்பக்சாத் 438 வயதுவரையிலும், சாலா 433 வயதுவரையிலும் வாழ்ந்தார்கள். (ஆதி. 11:10-15) ஆனாலும் மோசேயின் காலத்திற்குள், இயல்பாகவே மனிதரின் ஆயுள்காலம் 70 அல்லது 80-ஆக குறைந்தது. (சங். 90:10) ஆகவே, சாதாரணமாக அல்லது அதிகபட்சமாக மனிதரின் ஆயுள்காலம் 120 வருடங்கள்தான் என ஆதியாகமம் 6:3 திட்டவட்டமாகக் குறிப்பிடவில்லை.
அடுத்ததாக, 120 வருடங்களில் அழிவு வரும் என மக்களுக்கு எச்சரிக்கும்படி நோவாவிடம் கடவுள் சொன்னதாக அந்த வசனம் குறிப்பிடுகிறதா? இல்லை. பல சந்தர்ப்பங்களில் நோவாவிடம் கடவுள் பேசியிருக்கிறார். அதே அதிகாரத்தின் 13-ஆம் வசனத்தில், ‘தேவன் நோவாவை நோக்கி: மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது’ என்று சொன்னதைப் பற்றி வாசிக்கிறோம். அதைத் தொடர்ந்து வந்த வருடங்களில், நோவா அந்தப் பிரமாண்டமான பேழையைக் கட்டி முடித்தார்; அந்தச் சமயத்தில், ‘கர்த்தர் நோவாவை நோக்கி: நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள்’ என்று சொன்னார். (ஆதி. 6:13; 7:1) வேறு பல சந்தர்ப்பங்களிலும் நோவாவிடம் சில விஷயங்களை யெகோவா தெரிவித்ததைப் பற்றி பைபிள் குறிப்பிடுகிறது.—ஆதி. 8:15; 9:1, 8, 17.
ஆனால், ஆதியாகமம் 6:3-ல் நாம் சற்று வித்தியாசமாக வாசிக்கிறோம்; இந்த வசனம் நோவாவின் பெயரையும் குறிப்பிடுவதில்லை; நோவாவிடம் கடவுள் பேசியதாகவும் குறிப்பிடுவதில்லை. இதை கடவுளுடைய நோக்கமாக அல்லது தீர்மானமாக மட்டுமே நாம் எடுத்துக்கொள்ள முடியும். (ஆதியாகமம் 8:21-ஐ ஒப்பிடுங்கள்.) உதாரணமாக, ஆதாம் படைக்கப்பட்டதற்கு முன்பு நடந்த சம்பவங்களைப் பற்றிய பைபிள் பதிவில், “பின்பு தேவன் . . . சொன்னார்” என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதும் நாம் கவனிக்க வேண்டிய விஷயம். (ஆதி. 1:6, 9, 14, 20, 24) அந்தச் சந்தர்ப்பங்களில், மனிதனிடம் யெகோவா பேசிக்கொண்டிருக்கவில்லை என்பது தெளிவாகிறது; ஏனெனில், அப்போது பூமியில் மனிதர் படைக்கப்படவே இல்லை.
ஆகவே, சீர்கெட்டிருந்த பூமியை அழிக்க கடவுள் தீர்மானித்திருந்ததைப் பற்றியே ஆதியாகமம் 6:3 தெரியப்படுத்துகிறது என்ற முடிவுக்கு வருவது நியாயமானது. இன்னும் 120 வருடங்களில் வரவிருந்த அழிவைப் பற்றிய நியாயத்தீர்ப்பை யெகோவா அறிவித்தார்; நோவாவுக்கோ அது தெரிந்திருக்கவில்லை. ஆனால், கடவுள் ஏன் அப்படிக் காலத்தைக் குறித்தார்? ஏன் அவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியிருந்தது?
இதற்கான காரணத்தை அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு குறிப்பிடுகிறார்: “நோவா பேழையைக் கட்டிக்கொண்டிருந்த நாட்களிலே, கடவுள் நீடிய பொறுமையோடு காத்துக்கொண்டிருந்தபோது . . . அந்தப் பேழைக்குள் இருந்தவர்கள் மட்டுமே, அதாவது எட்டுப் பேர் மட்டுமே வெள்ளத்திலிருந்து காப்பாற்றப்பட்டார்கள்.” (1 பே. 3:20) ஆம், அந்த 120 வருடங்கள் சம்பந்தமாகக் கடவுள் தம்முடைய தீர்மானத்தை அறிவித்தபோது, நடந்தேற வேண்டிய காரியங்கள் இன்னும் இருந்தன. சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு, நோவாவுக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள். (ஆதி. 5:32; 7:6) அவருடைய மூன்று மகன்களும் வளர்ந்து மணமுடித்தார்கள்; அதனால், அவருடைய குடும்பத்தில் “எட்டுப் பேர்” ஆகிவிட்டார்கள். பிறகு, அவர்கள் ஒரு பேழையைக் கட்ட வேண்டியிருந்தது; அதன் அளவையும் நோவாவுடைய குடும்பத்தினரின் எண்ணிக்கையையும் வைத்துப் பார்த்தால் அது சீக்கிரத்தில் செய்யக்கூடிய வேலையாக இருக்கவில்லை. ஆம், 120 வருடங்களுக்குக் கடவுள் நீடிய பொறுமையோடு காத்துக்கொண்டிருந்தது அந்தக் காரியங்கள் எல்லாம் நடந்தேறவும், உயிர்களைப் பாதுகாப்பதற்குப் பேழையைக் கட்டவும் காலத்தை அனுமதித்தது; உண்மையுள்ள அந்த எட்டுப் பேரும் ‘வெள்ளத்திலிருந்து காப்பாற்றப்படவும்’ வாய்ப்பளித்தது.
பெருவெள்ளம் ஏற்படவிருந்த வருடத்தைப் பற்றி நோவாவுக்கு யெகோவா தெரிவித்ததாக பைபிள் குறிப்பிடுவதில்லை. அவருக்குப் பிள்ளைகள் பிறந்து, அவர்கள் வளர்ந்து, மணமுடித்திருந்ததால் பெருவெள்ளம் வருவதற்கு இன்னும் 40 அல்லது 50 வருடங்கள் மட்டுமே மீதமிருந்திருக்கலாம். அடுத்து, நோவாவிடம் யெகோவா, “மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது” என்று சொன்னார். அதுமட்டுமல்ல, ஒரு பெரிய பேழையைக் கட்டும்படியும் குடும்பத்தாரோடு அதனுள் போகும்படியும் நோவாவிடம் அவர் சொன்னார். (ஆதி. 6:13-18) மீதமிருந்த அந்தக் காலத்தில், அவர் நீதிக்கு இலக்கணமாக வாழ்ந்ததோடு ‘நீதியைப் பிரசங்கிக்கவும்’ செய்தார்; அன்றிருந்த தேவபக்தியற்ற மக்களை அழிக்கக் கடவுள் தீர்மானித்ததைப் பற்றிய எச்சரிப்பின் செய்தியைத் தெள்ளத்தெளிவாக அறிவித்தார். அது எந்த வருடத்தில் வருமென நோவாவுக்கு வெகு காலத்திற்கு முன்பே தெரிந்திருக்கவில்லை; ஆனால், அந்த அழிவு கண்டிப்பாக வரும் என்பதை அவர் அறிந்திருந்தார். கடவுள் சொன்னபடியே அந்த அழிவு வந்ததென உங்களுக்குத் தெரியும்.—2 பே. 2:5.