“யெகோவாவின் பெயரில் அடைக்கலம் புகுவீர்”
“தாழ்ந்தவர்களையும் எளியவர்களையும் . . . மீதியாக வைப்பேன், அவர்கள் யெகோவாவின் பெயரில் அடைக்கலம் புகுவார்கள்.”—செப். 3:12, NW.
1, 2. சீக்கிரத்தில் மனிதகுலத்தைத் தாக்கப்போகிற புயல் எது?
புயல் மழையோ கல்மழையோ பெய்தபோது நீங்கள் அடைக்கலம் தேடி பாலத்தின் அடியில் போய் நின்றிருக்கிறீர்களா? இதுபோன்ற சூழ்நிலைகளில் பாலத்தின் அடியில் போய் நிற்பது பாதுகாப்பாய் இருக்கலாம். ஆனால், சுழல் காற்றோ சூறாவளியோ தாக்கும்போது அதன் அடியில் நிற்பது உங்களுக்குப் பாதுகாப்பாய் இருக்காது.
2 மனிதகுலத்தையே கதிகலங்கச் செய்யும் வேறொரு வகையான புயல் வரப்போகிறது. அதை “புயல் வீசும் நாள்” (NW) என்று சொல்லலாம். ‘யெகோவாவின் இந்தப் பெரிய நாள்’ மனிதகுலம் முழுவதையும் பாதிக்கும். என்றாலும், நாம் அடைக்கலம் பெற முடியும். (செப்பனியா 1:14-18-ஐ வாசியுங்கள்.) ‘யெகோவாவுடைய உக்கிரத்தின் நாள்’ சீக்கிரத்தில் வரப்போவதால் நாம் எப்படிப் பாதுகாப்பைப் பெறலாம்?
புயல் வீசிய நாட்கள்—பூர்வ காலங்களில்
3. இஸ்ரவேலின் பத்துக் கோத்திர ராஜ்யத்தைத் தாக்கிய ‘இடியுடன்கூடிய புயல்’ எது?
3 இந்தப் பூமியிலுள்ள பொய் மதங்கள் எல்லாம் அழிக்கப்படுகையில் யெகோவாவின் நாள் ஆரம்பமாகும். அதிலிருந்து நாம் எப்படிப் பாதுகாப்பு பெறலாம் என்ற கேள்விக்குப் பதில் காண கடவுளுடைய மக்களின் பூர்வகால சரித்திரத்தைச் சற்று புரட்டிப் பார்ப்போம். கி.மு. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஏசாயா, விசுவாசதுரோக பத்துக் கோத்திர ராஜ்யத்திற்கு வரவிருந்த யெகோவாவின் நியாயத்தீர்ப்பைப் பற்றிப் பேசினார்; அதை “இடியுடன்கூடிய புயலுக்கு” (NW) ஒப்பிட்டார். (ஏசாயா 28:1, 2 வாசியுங்கள்.) கி.மு. 740-ல் பத்துக் கோத்திர ராஜ்யத்தின் மீது, அதாவது எப்பிராயீமின் மீது, அசீரியர் படையெடுத்தபோது அந்தத் தீர்க்கதரிசனம் முதலில் நிறைவேற்றமடைந்தது.
4. கி.மு. 607-ல் ‘யெகோவாவின் பெரிய நாள்’ எருசலேமை எப்படித் தாக்கியது?
4 அதைத் தொடர்ந்து கி.மு. 607-ல் எருசலேமுக்கும் யூதா ராஜ்யத்திற்கும் எதிராக ‘யெகோவாவின் பெரிய நாள்’ வந்தது. ஆம், யூதா தேசத்து மக்களும் விசுவாசதுரோகிகளாக மாறியதால் அவர்கள்மீது யெகோவாவின் நியாயத்தீர்ப்பு வந்தது. நேபுகாத்நேச்சார் தலைமையில் வந்த பாபிலோனியர் யூதாவையும் அதன் தலைநகரான எருசலேமையும் அச்சுறுத்தினார்கள். யூதா தேசத்து மக்கள் உதவிக்காக ‘பொய்யான அடைக்கலத்தை’ நாடியிருந்தார்கள், அதாவது எகிப்துடன் கூட்டு சேர்ந்திருந்தார்கள். ஆனால், பாபிலோனியர் அந்த ‘அடைக்கலத்தை’ பயங்கரமான கல்மழை போல் அழித்துவிட்டார்கள்.—ஏசா. 28:14, 17.
5. பொய் மதங்கள் எல்லாம் அழிக்கப்படுகையில் கடவுளுடைய மக்களுக்கு என்ன நடக்கும்?
5 எருசலேமைத் தாக்கிய யெகோவாவின் பெரிய நாள் நம் நாளில் விசுவாசதுரோக கிறிஸ்தவமண்டலத்தின் மீது வரப்போகும் நியாயத்தீர்ப்புக்கு ஓர் அறிகுறியாக இருந்தது. அதோடு, ‘மகா பாபிலோனின்,’ அதாவது பொய் மத உலகப் பேரரசின், மீதமுள்ள பாகமும் அழிக்கப்படும். அதன் பிறகு, சாத்தானுடைய பொல்லாத உலகத்தில் எஞ்சியிருக்கும் அனைத்தும் துடைத்தழிக்கப்படும். ஆனால், யெகோவாவின் மக்கள் அவரை அடைக்கலமாக அண்டியிருப்பதால் ஒரு தொகுதியாகத் தப்பிப்பிழைப்பார்கள்.—வெளி. 7:14; 18:2, 8; 19:19-21.
அடைக்கலம்—இரு விதங்களில்
6. யெகோவாவின் மக்கள் எப்படி அடைக்கலம் பெறலாம்?
6 இந்தக் கடைசி காலத்தில் வாழ்கிற கடவுளுடைய மக்கள் இப்போதும்கூட எப்படி அடைக்கலம் காணலாம்? ஜெபத்தோடு கடவுளுடைய பெயரை ‘தியானிப்பதன்’ மூலமும், பக்திவைராக்கியத்தோடு அவருக்குச் சேவை செய்வதன் மூலமும் ஆன்மீக ரீதியில் அடைக்கலம் காணலாம். (மல்கியா 3:16-18-ஐ வாசியுங்கள்.) அவருடைய பெயரைத் தியானிப்பதில் நிறைய விஷயங்கள் உட்பட்டுள்ளன. “யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிற ஒவ்வொருவரும் மீட்புப் பெறுவார்கள்” என்று பைபிளில் வாசிக்கிறோம். (ரோ. 10:13) யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்வதற்கும் அவரால் மீட்புப் பெறுவதற்கும் தொடர்பு உள்ளது. பயபக்தியோடு அவருடைய பெயரைத் ‘தியானித்து’ அவரைச் சேவிக்கிறவர்களுக்கும் அவரைச் சேவிக்காதவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை நல்மனமுள்ள அநேகர் பார்க்கிறார்கள்.
7, 8. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் எவ்வாறு உடல் ரீதியில் அடைக்கலம் பெற்றார்கள், இன்று அதற்கு இணையாக இருப்பது எது?
7 இருந்தாலும், ஆன்மீக ரீதியில் மட்டுமல்ல வேறு விதத்திலும் நமக்கு அடைக்கலம் கிடைக்கிறது. ஆம், கடவுளுடைய மக்களுக்கு உடல் ரீதியிலும் அடைக்கலம் கிடைக்கும் என உறுதியளிக்கப்படுகிறது. கி.பி. 66-ல் நடந்த சம்பவம், அதாவது செஸ்டியஸ் காலஸ் என்பவரின் தலைமையில் வந்த ரோமப் படை எருசலேமைத் தாக்கிய சம்பவம், இதற்கு ஆதாரத்தை அளிக்கிறது. அந்த உபத்திரவத்தின் நாட்கள் “குறைக்கப்படும்” என்று இயேசு முன்னறிவித்திருந்தார். (மத். 24:15, 16, 21, 22) அந்த நகரை முற்றுகையிட்டிருந்த ரோமப் படைவீரர்கள் திடீரென அங்கிருந்து போய்விட்டார்கள்; அதனால், உண்மைக் கிறிஸ்தவர்கள் “தப்பிப்பிழைக்க” முடிந்தது. சிலர் அந்நகரைவிட்டு பக்கத்திலிருந்த இடங்களுக்கு ஓடிப்போனார்கள். இன்னும் சிலர், யோர்தானைக் கடந்து அதற்குக் கிழக்கே உள்ள மலைகளில் அடைக்கலம் புகுந்தார்கள்.
8 அந்தக் கிறிஸ்தவர்களுக்கும் இன்றுள்ள கடவுளுடைய மக்களுக்கும் இடையே ஓர் ஒற்றுமை உள்ளது. அன்று, முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் அடைக்கலம் தேடினார்கள், அவ்வாறே இன்றும் கடவுளுடைய ஊழியர்கள் அடைக்கலம் தேடுவார்கள். இதற்காக, அவர்கள் நிஜமாகவே ஓர் இடத்திற்கு ஓடிப்போக வேண்டியதில்லை; ஏனென்றால், உண்மைக் கிறிஸ்தவர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். என்றாலும், கிறிஸ்தவமண்டலத்திற்கு அழிவு வரும்போது ‘தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும்’ அவர்களுடைய தோழர்களும் உடல் ரீதியில் தப்பிப்பிழைப்பார்கள். எப்படி? யெகோவாவிடமும் அவரது மலைபோன்ற அமைப்பிடமும் அடைக்கலம் தேடும்போது.
9. கடவுளுடைய பெயரை மறைக்க முயன்றிருப்பது யார்? ஓர் உதாரணம் கொடுங்கள்.
9 ஆனால், கிறிஸ்தவமண்டலம் யெகோவாவின் மகா நாளில் அழிக்கப்படும்; ஏனென்றால், அது சர்ச்சுக்கு வருவோருக்கு பைபிள் சத்தியத்தைக் கற்பிப்பதுமில்லை, கடவுளுடைய பெயரைப் பயன்படுத்துவதுமில்லை. என்றாலும், இடைக் காலத்தின்போது ஐரோப்பாவில் கடவுளுடைய பெயர் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. அநேக நாணயங்களில், வீட்டின் முகப்புகளில், புத்தகங்களில், பைபிள்களில், சில கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டன்ட் சர்ச்சுகளில்கூட கடவுளுடைய பெயர் காணப்பட்டது; ஆம் அவருடைய பெயரைக் குறிக்கிற திருநான்கெழுத்துக்களின் ஒலிபெயர்ப்பு, அதாவது YHWH (அல்லது JHVH) என்ற எழுத்துக்கள் காணப்பட்டன. ஆனால், சமீப காலத்தில் பைபிள் மொழிபெயர்ப்புகளிலிருந்தும் பிறவற்றிலிருந்தும் கடவுளுடைய பெயரை நீக்குவது சகஜமாகி வருகிறது. இதற்கு ஓர் அத்தாட்சிதான் ‘கடவுளுடைய பெயர்’ என்ற தலைப்பில் நடந்த பிஷப்புகளின் மாநாடுகளுக்கு எழுதப்பட்ட ஜூன் 29, 2008 தேதியிட்ட கடிதம். (பிஷப்பின் அங்கீகாரத்தோடு, கான்கிரிகேஷன் ஃபார் டிவைன் வர்ஷிப் அண்டு த டிஸிப்ளின் ஆஃப் த சாக்ரமன்ட் என்ற அமைப்பு அனுப்பிய கடிதம்) அந்தத் திருநான்கெழுத்துக்களுக்குப் பதிலாக “கர்த்தர்” என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டுமென அக்கடிதத்தில் கத்தோலிக்க சர்ச் கேட்டுக்கொண்டது. கத்தோலிக்க ஆராதனைகளில், பாடப்படும் பாடல்களில், ஜெபங்களில், கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தவோ உச்சரிக்கவோ கூடாதென வாடிகன் அறிவுறுத்தியது. கிறிஸ்தவமண்டல தலைவர்களும் பிற மதத் தலைவர்களும்கூட லட்சோப லட்சம் மக்களுக்கு உண்மைக் கடவுளின் பெயரை மறைத்திருக்கிறார்கள்.
கடவுளுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவோருக்குப் பாதுகாப்பு
10. கடவுளுடைய பெயருக்கு இன்று எப்படி மதிப்புக் கொடுக்கப்படுகிறது?
10 இதற்கு நேர்மாறாக, கடவுளுடைய பெயரை யெகோவாவின் சாட்சிகள் மதிக்கிறார்கள், மகிமைப்படுத்துகிறார்கள். அதைக் கண்ணியமாகப் பயன்படுத்துவதன் மூலம் அதைப் பரிசுத்தப்படுத்துகிறார்கள். யெகோவா தம்மீது நம்பிக்கை வைப்போரை ஆசீர்வதிக்க, பாதுகாக்க தேவையான எல்லாவற்றையும் செய்வதில் சந்தோஷப்படுகிறார். “தம்மிடம் அடைக்கலம் தேடுபவர்களை [அவர்] அறிந்திருக்கிறார்.”—நாகூ. 1:7, NW; அப். 15:14.
11, 12. பண்டைய யூதாவில் யெகோவாவின் பெயருக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்கள் யார், நம் காலத்தில் அவ்வாறு முக்கியத்துவம் கொடுத்திருப்பவர்கள் யார்?
11 பண்டைய யூதா தேசத்து மக்களில் பெரும்பாலோர் விசுவாசதுரோகிகளாக மாறியபோதிலும், சிலர் ‘யெகோவாவின் பெயரில் அடைக்கலம் புகுந்தார்கள்.’ (செப்பனியா 3:12, 13-ஐ வாசியுங்கள்.a) ஆம், யூதா தேசத்தை பாபிலோனியர் கைப்பற்றி, அங்கிருந்த உண்மையற்ற மக்களை சிறைக்கைதிகளாக கொண்டுசெல்ல கடவுள் அனுமதித்தாலும் எரேமியா, பாரூக், எபெத்மெலேக் போன்ற உண்மையுள்ள சிலரை அவர் காப்பாற்றினார். அவர்கள் விசுவாசதுரோகம் செய்த மக்களின் “நடுவில்” வாழ்ந்து வந்தார்கள்; வேறு சிலர் பாபிலோனில் சிறையிருந்த சமயத்தில் உண்மையோடு இருந்தார்கள். கி.மு. 539-ல் மேதியர்களும் பெர்சியர்களும் கோரேசுவின் தலைமையில் வந்து பாபிலோனைக் கைப்பற்றினார்கள். சீக்கிரத்தில், யூதர்களில் மீதியானோர் தாயகம் திரும்புவதற்கு கோரேசு கட்டளை பிறப்பித்தார்.
12 உண்மை வழிபாட்டை மீண்டும் ஸ்தாபிப்பதற்குப் பாக்கியம் பெற்றவர்களை யெகோவா பாதுகாப்பார்... அவர்களைக் குறித்து சந்தோஷப்படுவார்... என்று செப்பனியா முன்னறிவித்தார். (செப்பனியா 3:14-17-ஐ வாசியுங்கள்.) நம் காலத்தில்கூட இதுவே உண்மை. கடவுளுடைய அரசாங்கம் பரலோகத்தில் ஸ்தாபிக்கப்பட்ட பிறகு, அபிஷேகம் செய்யப்பட்டவர்களில் உண்மையுள்ள மீதியானோரை ஆன்மீக ரீதியில் மகா பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து யெகோவா விடுவித்தார். இன்றுவரை அவர்களைக் குறித்து சந்தோஷப்படுகிறார்.
13. எல்லாச் சிறுமையானவர்களும் எப்படிப்பட்ட விடுதலை பெற்றிருக்கிறார்கள்?
13 பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கையுள்ளவர்களும் மகா பாபிலோனைவிட்டு வெளியேறியிருக்கிறார்கள்; அதனால், பொய் மதப் போதனைகளிலிருந்து விடுதலை பெற்றிருக்கிறார்கள். (வெளி. 18:4) இவ்வாறு, செப்பனியா 2:3 முன்னறிவித்தபடி, ‘தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, . . . யெகோவாவைத் தேடுங்கள்’ என்ற தீர்க்கதரிசனம் நம்முடைய நாளில் பெரியளவில் நிறைவேறி வருகிறது. ஆம், எல்லாச் சிறுமையானவர்களும் இப்போது யெகோவாவின் பெயரில் அடைக்கலம் தேடி வருகிறார்கள்—அவர்கள் பரலோக நம்பிக்கையுள்ளவர்களாக இருந்தாலும் சரி பூமிக்குரிய நம்பிக்கையுள்ளவர்களாக இருந்தாலும் சரி.
கடவுளுடைய பெயர் ஒரு மந்திரச் சொல் அல்ல
14, 15. (அ) எதற்கெல்லாம் மந்திரச் சக்தி இருப்பதாகச் சிலர் நினைத்தார்கள்? (ஆ) எதை ஒரு மந்திரப் பொருளாக நாம் பயன்படுத்தக் கூடாது?
14 எதிரிகளிடமிருந்து காப்பாற்றும் மந்திரச் சக்தி கடவுளுடைய ஆலயத்திற்கு இருப்பதாக இஸ்ரவேலர் சிலர் கருதினார்கள். (எரே. 7:1-4) முன்னொரு சமயம், யுத்தத்திலிருந்து பாதுகாக்கும் சக்தி ஒப்பந்தப் பெட்டிக்கு இருப்பதாக இஸ்ரவேலர் நினைத்தார்கள். (1 சா. 4:3, 10, 11) போர்வீரர்களுடைய கேடயங்களில் கை, ரோ என்ற கிரேக்க எழுத்துக்களை, அதாவது “கிறிஸ்து” என்ற பெயருக்குரிய முதல் இரண்டு எழுத்துக்களை, மகா கான்ஸ்டன்டைன் எழுதினான். போரில் அவர்களைக் காக்கும் என்ற நம்பிக்கையில் அப்படிச் செய்தான். அதுபோல, ஐரோப்பாவில் நடந்த முப்பது வருடப் போரில் ஈடுபட்ட சுவீடன் நாட்டு அரசன் இரண்டாம் கஸ்டாவ் அடால்ஃப் கழுத்தில் ஒரு கவசத்தை (இது பக்கம் 7-ல் காண்பிக்கப்பட்டுள்ளது) அணிந்ததாகக் கருதப்படுகிறது. அதில், “யேஹோவா” என்ற பெயர் பளிச்செனத் தெரிவதைக் கவனியுங்கள்.
15 கடவுளுடைய மக்களில் சிலர் பேய்களினால் அலைக்கழிக்கப்பட்டபோது யெகோவாவின் பெயரைச் சத்தமாகச் சொல்லி, அவரிடம் அடைக்கலம் புகுந்தார்கள். என்றாலும், கடவுளுடைய பெயர் காணப்படுகிற ஒரு பொருளுக்கு மந்திரச் சக்தி இருப்பதாக நாம் கருதக் கூடாது; அல்லது நம்மைக் காப்பாற்றும் சக்தி இருப்பதாக நினைத்து அன்றாட வாழ்க்கையில் அதை ஒரு மந்திரப் பொருளாகப் பயன்படுத்தக் கூடாது. இப்படிச் செய்வது யெகோவாவின் பெயரில் அடைக்கலம் புகுவதை அர்த்தப்படுத்தாது.
இன்று அடைக்கலம் பெறுதல்
16. இன்று ஆன்மீக ரீதியில் நாம் எப்படி அடைக்கலம் பெறலாம்?
16 கடவுளுடைய மக்களாகிய நாம் இன்று ஒரு தொகுதியாக ஆன்மீகப் பாதுகாப்பை அனுபவிக்கிறோம். (சங். 91:1) அந்தப் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கிற உலக பாணிகளைக் குறித்து “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” வகுப்பாரும் சபையிலுள்ள மூப்பர்களும் நம்மை எச்சரிக்கிறார்கள். (மத். 24:45-47; ஏசா. 32:1, 2) பொருளாசையைக் குறித்து நமக்கு அடிக்கடி எச்சரிப்பு கொடுக்கப்பட்டிருப்பதை நினைத்துப் பாருங்கள்; அந்த எச்சரிப்புகள் ஆன்மீக ரீதியில் உண்டாகும் தீங்கிலிருந்து நம்மைப் பாதுகாத்திருப்பதையும் எண்ணிப் பாருங்கள். மெத்தனமாய் இருப்பதால் உண்டாகும் ஆபத்தைப் பற்றி என்ன சொல்லலாம்? இது, யெகோவாவின் சேவையில் நம்மைச் செயலற்றவர்களாக்கி விடலாம். அதனால்தான் பைபிள் இவ்வாறு சொல்கிறது: “மூடனுடைய மெத்தனப் போக்கு அவனை நாசமாக்கும். ஆனால், எனக்குச் செவிகொடுக்கிறவனோ பாதுகாப்பாக இருப்பான், ஆபத்தைக் கண்டு கலங்காமலும் இருப்பான்.” (நீதி. 1:32, 33, NW) அதோடு, ஒழுக்க ரீதியில் நம்மைச் சுத்தமாக வைத்துக்கொள்ள முயல்வதும் ஆன்மீகப் பாதுகாப்பைத் தரும்.
17, 18. இன்று லட்சக்கணக்கானோர் யெகோவாவின் பெயரில் அடைக்கலம் புகுவதற்கு எது உதவுகிறது?
17 உலகெங்குமுள்ள மக்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படி இயேசு கட்டளை கொடுத்திருக்கிறார்; இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிய உண்மையுள்ள அடிமை வகுப்பார் தரும் ஊக்குவிப்பையும் நினைத்துப் பாருங்கள். (மத். 24:14; 28:19, 20) கடவுளுடைய பெயரில் மக்கள் அடைக்கலம் புகுவதற்கு உதவும் ஒரு மாற்றத்தைப் பற்றி செப்பனியா குறிப்பிட்டார். ‘அப்பொழுது ஜனங்களெல்லாரும் யெகோவாவுடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு, நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்’ என்று நாம் வாசிக்கிறோம்.—செப். 3:9.
18 இந்தச் சுத்தமான பாஷை எது? யெகோவா தேவனையும் அவரது நோக்கங்களையும் பற்றி பைபிளில் சொல்லப்பட்டுள்ள சத்தியமே இந்தச் சுத்தமான பாஷை. கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி மற்றவர்களுக்குத் திருத்தமாகச் சொல்லும்போது... அது கடவுளுடைய பெயரை எப்படிப் பரிசுத்தப்படுத்தும் என்பதை விளக்கும்போது... அவருடைய பேரரசாட்சியே சரியானது என்பதை வலியுறுத்தும்போது... உண்மையுள்ள மனிதர் அனுபவிக்கப்போகும் நித்திய ஆசீர்வாதங்களைப் பற்றிச் சந்தோஷமாக அறிவிக்கும்போது... நீங்கள் இந்தச் சுத்தமான பாஷையைப் பேசுகிறீர்கள் என்று சொல்லலாம். இப்படி அநேகர் இந்தப் பாஷையைப் பேசுவதால், எண்ணற்றோர் ‘யெகோவாவுடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்கிறார்கள்.’ ஆம், உலகெங்குமுள்ள லட்சக்கணக்கானோர் இப்போது யெகோவாவிடம் அடைக்கலம் தேடி வருகிறார்கள்.—சங். 1:1, 3.
19, 20. பூர்வ காலத்தில் ‘பொய்யான அடைக்கலத்தின்’ மீது நம்பிக்கை வைத்தது எப்படி ஏமாற்றத்தை அளித்தது?
19 மலைபோன்ற பிரச்சினைகளை மக்கள் சமாளிக்க வேண்டியிருக்கிறது. அவற்றை எப்படியாவது தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் அநேகர் அபூரண மனிதரைத் தேடிச் செல்கிறார்கள். அல்லது அரசியல் அமைப்புகளின் ஆதரவை நாடிச் செல்கிறார்கள்; பண்டைக் கால இஸ்ரவேலர் ஆதரவுக்காக அப்படித்தான் அண்டை நாடுகளோடு கூட்டுச் சேர்ந்தார்கள். ஆனால், அவர்களுக்கு எந்தப் பிரயோஜனமும் கிடைக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். இன்றுள்ள எந்தவொரு அரசாங்கமோ ஐக்கிய நாட்டுச் சங்கமோ மனிதப் பிரச்சினைகளை முழுமையாகத் தீர்க்க முடியாது. அப்படியிருக்க, ஒருவர் ஏன் அரசியல் அமைப்புகளை அடைக்கலமாகத் தேடிப் போக வேண்டும்? பைபிள் அவற்றை ‘பொய்யான அடைக்கலம்’ எனத் தீர்க்கதரிசனமாக அழைக்கிறது. நீங்களும் அப்படியே கருதலாம்; ஏனென்றால், அவற்றை நாடிச் செல்கிற எல்லாருக்கும் மிஞ்சுவதெல்லாம் ஏமாற்றமே.—ஏசாயா 28:15, 17-ஐ வாசியுங்கள்.
20 கல்மழை போல் யெகோவாவின் நாள் இந்தப் பூமியைச் சீக்கிரத்தில் தாக்கப்போகிறது. அப்போது, மனிதத் திட்டங்கள் எதுவும் பாதுகாப்பைத் தராது; அணு ஆயுதங்களும் தராது, செல்வமும் தராது. ஏசாயா 28:17-ல் குறிப்பிடுகிறபடி, ‘பொய்யான அடைக்கலத்தைக் கல்மழை அழித்துவிடும்; மறைவிடத்தை ஜலப்பிரவாகம் அடித்துக்கொண்டுபோகும்.’
21. நாம் 2011-க்கான வருடாந்தர வசனத்தைக் கடைப்பிடித்தால் என்ன நன்மை அடையலாம்?
21 தற்காலத்திலும் எதிர்காலத்திலும் கடவுளுடைய மக்கள் யெகோவா தேவனிடம் உண்மையான அடைக்கலத்தைக் காண்பார்கள். செப்பனியா என்ற பெயரின் அர்த்தம், “அவரை யெகோவா மறைத்து வைத்தார்” என்பதே; இது யெகோவாவே உண்மையான மறைவிடம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. பொருத்தமாகவே, 2011-க்கான வருடாந்தர வசனம் ‘யெகோவாவின் பெயரில் அடைக்கலம் புகுவீர்’ என்ற ஞானமான ஆலோசனையைத் தருகிறது. (செப். 3:12, NW) இப்போதும்கூட நாம் யெகோவாமீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து அவருடைய பெயரில் அடைக்கலம் புகலாம், அடைக்கலம் புகவும் வேண்டும். (சங். 9:10) ஆகவே, பைபிள் தருகிற பின்வரும் உறுதியை மனதில் வைப்போமாக: ‘யெகோவாவின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்.’—நீதி. 18:10.
[அடிக்குறிப்பு]
a செப்பனியா 3:12, 13 (NW): “தாழ்ந்தவர்களையும் எளியவர்களையும் உன் நடுவில் மீதியாக வைப்பேன், அவர்கள் யெகோவாவின் பெயரில் அடைக்கலம் புகுவார்கள். இஸ்ரவேலில் மீதியானவர்களோ எந்த அநியாயமும் செய்ய மாட்டார்கள்; பொய்யும் பேச மாட்டார்கள்; அவர்கள் வாயில் வஞ்சகமும் இருக்காது; எந்த பயமுமில்லாமல் சாப்பிட்டு படுத்துக்கொள்வார்கள்.”
நினைவிருக்கிறதா?
• யெகோவாவின் பெயரில் இப்போது நாம் எப்படி அடைக்கலம் புகலாம்?
• ‘பொய்யான அடைக்கலத்தை’ நாம் ஏன் நம்பக் கூடாது?
• எதிர்காலத்தில் நமக்கு என்ன அடைக்கலம் இருக்குமென உறுதியளிக்கப்படுகிறது?
[பக்கம் 6-ன் சிறுகுறிப்பு]
2011-க்கான வருடாந்தர வசனம்: ‘யெகோவாவின் பெயரில் அடைக்கலம் புகுவீர்.’—செப்பனியா 3:12, NW.
[பக்கம் 7-ன் படத்திற்கான நன்றி]
Thüringer Landesmuseum Heidecksburg Rudolstadt, Waffensammlung “Schwarzburger Zeughaus”