தயாராக இருங்கள்!
“தயாராக இருங்கள்; நீங்கள் நினைக்காத நேரத்தில் மனிதகுமாரன் வரப்போகிறார்.” —மத். 24:44.
1, 2. (அ) பைபிள் முன்னறிவிக்கிற எந்தச் சம்பவங்களை ஒரு புலியின் தாக்குதலுக்கு ஒப்பிடலாம்? (ஆ) வரவிருக்கும் தாக்குதலை எதிர்கொள்ள நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
பல வருடங்களாக, பிரபல கலைஞர் ஒருவர் தான் பழக்குவித்த பெங்கால் புலிகளை வைத்து பார்வையாளர்களுக்கு வித்தை காட்டி வந்தார்; அவற்றால் அவருக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. “ஒரு விலங்கு உங்களை நம்பும்போது, உலகிலேயே மிகச் சிறந்த விருது கிடைத்ததுபோல் உணருவீர்கள்” என்று அவர் சொன்னார். ஆனால் 2003, அக்டோபர் 3-ஆம் தேதி அந்த நம்பிக்கை தவிடுபொடியானது. அந்தப் புலிகளில் ஒன்று காரணமே இல்லாமல் அவரைத் தாக்கியது. அதுவும் 172 கிலோ (380 பவுண்ட்) எடையுள்ள வெள்ளை புலி. அந்தத் தாக்குதலை அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை; அதைச் சமாளிக்க அவர் தயாராகவும் இருக்கவில்லை.
2 ஆர்வத்திற்குரிய விஷயம் என்னவென்றால், பைபிளும் ஒரு மூர்க்க மிருகத்தின் திடீர் தாக்குதலைப் பற்றி முன்னறிவிக்கிறது. (வெளிப்படுத்துதல் 17:15-18-ஐ வாசியுங்கள்.) இந்த ‘மூர்க்க மிருகம்’ எதைக் குறிக்கிறது? இது யாரைத் தாக்குகிறது? இது ஐக்கிய நாட்டு சங்கத்தையும் உலகின் எல்லா அரசியல் சக்திகளையும் குறிக்கிறது. இந்தச் சக்திகள், பொய்மத உலகப் பேரரசான மகா பாபிலோனை மூர்க்கமாகத் தாக்கி அழித்துப்போடும். இந்த மூர்க்க மிருகமும் மகா பாபிலோனும் நண்பர்களைப் போல் இருப்பதால் இது அநேகருக்கு அதிர்ச்சியைத் தரும்; இவை சாத்தானுடைய உலகத்தின் பாகமானவை. ஆனால் இந்தத் தாக்குதல் எப்போது நடக்கும்? அந்த நாளும் நேரமும் நமக்குத் தெரியாது. (மத். 24:36) ஆனால், நாம் எதிர்பாராத நேரத்தில் அது நடக்கும் என்பது மட்டும் தெரியும்; அதற்கு இன்னும் கொஞ்சக் காலமே மீந்திருக்கிறது என்பதும் நமக்குத் தெரியும். (மத். 24:44; 1 கொ. 7:29) எனவே, நாம் தயாராய் இருப்பது முக்கியம்; அப்போதுதான், அந்தத் தாக்குதலுக்குப் பின் கிறிஸ்து தண்டனைத்தீர்ப்பு வழங்குபவராக வரும்போது நமக்கு விடுதலை அளிப்பார்! (லூக். 21:28) அப்படியானால், நாம் எப்படித் தயாராய் இருக்கலாம் என்பதைப் பூர்வகால ஊழியர்களின் முன்மாதிரியிலிருந்து கற்றுக்கொள்ளலாம்; அவர்கள் தயாராக இருந்ததால் கடவுளுடைய வாக்குறுதிகள் நிறைவேறுவதைக் கண்ணாரக் கண்டார்கள். அவர்களுடைய அனுபவங்களை நாம் நெஞ்சில் பதிப்போமா?
நோவாவைப் போல தயாராய் இருங்கள்
3. கடவுளுக்கு உண்மையோடு சேவை செய்ய நோவாவுக்குச் சவாலாய் இருந்த நிலைமைகள் யாவை?
3 நோவாவின் காலத்தில் நிலைமைகள் படுமோசமாக இருந்தபோதிலும், கடவுளுடைய வாக்குறுதிகள் நிறைவேறுவதைக் காண அவர் தயாராய் இருந்தார். நோவா எப்படிப்பட்ட சவால்களையெல்லாம் எதிர்ப்பட்டார் என்பதைச் சற்றுக் கற்பனை செய்து பாருங்கள்! மனித உருவெடுத்து வந்த கலகக்காரத் தூதர்கள் அழகிய பெண்களோடு கூடி வாழ்ந்தார்கள். இயற்கைக்கு மாறான இந்த உறவால் அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் ‘பலவான்களாக’ இருந்தார்கள்; இவர்கள் தங்கள் பலத்தைப் பயன்படுத்தி மற்றவர்களைக் கொடுமைப்படுத்தினார்கள். (ஆதி. 6:4) இந்த இராட்சதர்கள் சென்ற இடமெல்லாம் பிரச்சினைகளைக் கிளப்பியதால் எந்தளவு வன்முறை தாண்டவமாடியிருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். இதனால் துன்மார்க்கம் தலைவிரித்தாடியது; மனிதனின் யோசனையும் செயல்களும் முற்றிலும் சீர்கெட்டுப் போயின. அந்தச் சமயத்தில் சர்வவல்லவரான யெகோவா தண்டனைத்தீர்ப்பை அறிவித்தார்; தேவபக்தியற்ற அந்த உலகம் அழிக்கப்படுவதற்குக் குறிக்கப்பட்ட காலம் அப்போது ஆரம்பமானது.—ஆதியாகமம் 6:3, 5, 11, 12-ஐ வாசியுங்கள்.a
4, 5. நம்முடைய நாட்கள் எவ்விதங்களில் நோவாவின் நாட்களுக்கு ஒத்திருக்கின்றன?
4 நம்முடைய நாட்கள் நோவாவின் நாட்களுக்கு ஒத்திருக்குமென இயேசு முன்னுரைத்தார். (மத். 24:37) உதாரணத்திற்கு, பொல்லாத தூதர்கள் செல்வாக்கு செலுத்துவதை நாமும்கூட பார்க்கிறோம். (வெளி. 12:7-9, 12) இவர்கள் நோவாவின் நாட்களில் மனித உருவெடுத்து பூமிக்கு வந்தார்கள். இப்போது இவர்களால் மனித உருவெடுக்க முடியாவிட்டாலும் சிறியோர் பெரியோர் என எல்லாரையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முயற்சி செய்கிறார்கள். காம வெறியர்களான இவர்கள் திரைமறைவில் இருந்து மக்களைக் கெடுக்கிறார்கள்; இப்படித் தங்கள் வலையில் சிக்கியவர்கள் செய்கிற கெட்ட, கீழ்த்தரமான செயல்களைப் பார்த்து இன்பத்தில் திளைக்கிறார்கள்.—எபே. 6:11, 12.
5 பிசாசை ‘கொலைகாரன்’ என்று பைபிள் வர்ணிக்கிறது; ‘மரணத்திற்கு வழிவகுக்கும்’ ஆற்றல் அவனுக்கு இருப்பதாகவும் அது சொல்கிறது. (யோவா. 8:44; எபி. 2:14) என்றாலும், அவனால் நேரடியாக ஒருவரைக் கொல்ல முடியாது. ஆனால், இந்தக் கொடியவன் மக்களின் மனதில் வஞ்சகத்தை வளர்க்கிறான்; கொலை செய்வதற்கான எண்ணத்தையும் விதைக்கிறான். உதாரணத்திற்கு, அமெரிக்காவில் பிறக்கிற 142 குழந்தைகளில் ஒன்று கொலை செய்யப்படலாம் என ஓர் அறிக்கை காட்டுகிறது. நோவாவின் காலத்தில் நடந்த கொடுமைகளைக் கவனித்த யெகோவா இன்று எங்கும் வெறித்தனமாக நடந்து வருகிற வன்முறைகளைக் கண்டும்காணாமல் இருந்துவிடுவாரென நீங்கள் நினைக்கிறீர்களா? அவர் தக்க நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிடுவாரா?
6, 7. விசுவாசமும் தேவபயமும் இருந்ததை நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் எப்படிக் காட்டினார்கள்?
6 உரிய காலம் வந்தபோது, பூமியின்மீது ஜலப்பிரளயத்தை வரச் செய்து சகல ஜீவராசிகளையும் அழிக்கப் போவதாக நோவாவிடம் யெகோவா தெரிவித்தார். (ஆதி. 6:13, 17) பெரிய பெட்டி போன்ற ஒரு பேழையைக் கட்டும்படி நோவாவுக்குக் கட்டளையிட்டார். அவரும் அவருடைய குடும்பத்தாரும் கட்டுமான வேலையில் இறங்கினார்கள். கடவுளுக்குக் கீழ்ப்படியவும் அவர் அழிவைக் கொண்டுவந்தபோது அதைச் சந்திக்கத் தயாராய் இருக்கவும் எது அவர்களுக்கு உதவியது?
7 ஆழ்ந்த விசுவாசமும் தேவபயமும் கடவுளுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிய நோவாவுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் உதவின. (ஆதி. 6:22; எபி. 11:7) குடும்பத் தலைவராக இருந்த நோவா அன்றிருந்த மக்களுடைய கெட்ட வழிகளில் நடக்காமல் கடவுளோடு நெருக்கமாய் இருந்தார். (ஆதி. 6:9) அக்கம்பக்கத்தாரைப் போல வன்முறையில் இறங்காதபடி, கலகம் செய்யாதபடி அவர் தன்னுடைய குடும்பத்தாரைப் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. அவர்கள் அன்றாட காரியங்களில் மூழ்கிவிடாமல் இருப்பதும் முக்கியமானதாய் இருந்தது. அவர்களுக்குக் கடவுள் ஒரு வேலையைக் கொடுத்திருந்தார்; முழுக் குடும்பமும் அதற்கு முதலிடம் கொடுப்பது அவசியமாய் இருந்தது.—ஆதியாகமம் 6:14, 18-ஐ வாசியுங்கள்.
நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் தயாராய் இருந்தார்கள்
8. நோவாவின் குடும்பத்தார் தேவபக்தியுள்ளவர்களாய் இருந்ததை எது காட்டுகிறது?
8 குடும்பத் தலைவராக இருந்த நோவாவைப் பற்றியே பைபிள் சிறப்பித்துக் காட்டுகிறது; என்றாலும், அவருடைய மனைவி, மகன்கள், மருமகள்கள்கூட யெகோவாவை வழிபடுபவர்களாக இருந்தார்கள். இதை எசேக்கியேல் தீர்க்கதரிசி உறுதிப்படுத்தினார். தன்னுடைய காலத்தில் நோவா வாழ்ந்திருந்தால், அவருடைய பிள்ளைகள் தங்கள் தகப்பனுடைய நீதியின் அடிப்படையில் காப்பாற்றப்பட எதிர்பார்த்திருக்க முடியாது என்று எசேக்கியேல் சொன்னார். கீழ்ப்படியவோ கீழ்ப்படியாதிருக்கவோ தீர்மானிக்கும் அளவுக்கு அவர்கள் போதிய வயதுள்ளவர்களாக இருந்தார்கள். எனவே, கடவுளையும் அவருடைய வழிகளையும் நேசித்ததற்கு அவர்கள் ஒவ்வொருவரும் அத்தாட்சி அளித்திருந்தார்கள். (எசே. 14:19, 20) நோவாவின் அறிவுரைகளை அவருடைய குடும்பத்தார் கேட்டு நடந்தார்கள், அவரைப் போலவே கடவுள்மீது விசுவாசம் வைத்தார்கள், மற்றவர்கள் கேலி கிண்டல் செய்தபோதிலும் கடவுள் கொடுத்த வேலையைச் செய்தார்கள்.
9. இன்று நோவாவைப் போல் விசுவாசத்தைக் காட்டுகிறவர்கள் யார்?
9 இன்று உலகெங்குமுள்ள கிறிஸ்தவக் குடும்பத் தலைவர்கள் நோவாவைப் பின்பற்ற தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள்; இதைப் பார்க்கையில் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது! தங்களுடைய குடும்பத்தாருக்கு உணவு, உடை, உறைவிடம், கல்வி என இவற்றை மட்டும் கொடுத்தால் போதாது, அவர்களுடைய ஆன்மீகத் தேவைகளையும் பூர்த்திசெய்ய வேண்டும் என்பதை அறிந்திருக்கிறார்கள். அப்படிச் செய்வதன் மூலம், யெகோவாவின் நியாயத்தீர்ப்பைச் சந்திக்க அவர்கள் தயாராய் இருக்கிறார்கள்.
10, 11. (அ) பேழைக்குள் இருக்கையில் நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் நிச்சயம் எப்படி உணர்ந்திருப்பார்கள்? (ஆ) நம்மையே என்ன கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும்?
10 நோவா, அவருடைய மனைவி, மகன்கள், மருமக்கள் என எல்லாருமே அந்தப் பேழையைக் கட்ட சுமார் 50 வருடங்கள் பாடுபட்டிருக்கலாம். அப்போது அந்தப் பேழைக்குள் நூற்றுக்கணக்கான தடவை போய் வந்திருக்கலாம். தண்ணீர் உள்ளே புகாதபடி அதற்குக் கீல் பூசினார்கள், உணவுப்பொருள்களை அதில் நிரப்பினார்கள், மிருகங்களை அதற்குள் கொண்டுவந்து சேர்த்தார்கள். இதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். கடைசியில் அந்த மகா நாள் வருகிறது. கி.மு. 2370-ஆம் வருடம், இரண்டாம் மாதம், 17-ஆம் தேதி அவர்கள் அந்தப் பேழைக்குள் போகிறார்கள். யெகோவா பேழையின் கதவை அடைக்கிறார், மழை கொட்ட ஆரம்பிக்கிறது. இது சாதாரண மழை அல்ல. வானத்தின் மதகுகள் திறந்து, சோவென மழை கொட்டுகிறது, பெருக்கெடுத்து ஓடுகிற வெள்ளம் பேழையை முட்டி மோதுகிறது. (ஆதி. 7:11, 16) பேழைக்கு வெளியே இருக்கிறவர்கள் தண்ணீரில் மூழ்கிச் சாகிறார்கள்; உள்ளே இருப்பவர்களோ பாதுகாப்பாக இருக்கிறார்கள். நோவாவின் குடும்பத்தாருக்கு எப்படி இருந்திருக்கும்? ஆம், அவர்கள் மனதார கடவுளுக்கு நன்றி சொல்லியிருப்பார்கள். அதேசமயத்தில், ‘நாம் உண்மைக் கடவுளின் பேச்சைக் கேட்டு நடந்து, தயாராய் இருந்தது எவ்வளவு நல்லதாய்ப் போய்விட்டது!’ என்று நிச்சயம் நினைத்திருப்பார்கள். (ஆதி. 6:9) நீங்களும்கூட அர்மகெதோனைத் தப்பிப்பிழைத்து, நன்றி நிறைந்த இதயத்தோடு அவர்களைப் போலவே சொல்வதைக் கற்பனை செய்ய முடிகிறதா?
11 சாத்தானுடைய இந்த உலகிற்கு முடிவு கொண்டுவரப் போவதாகச் சர்வவல்லமையுள்ள கடவுள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாதபடி எதுவும் அவரைத் தடுக்க முடியாது. ‘கடவுளுடைய வாக்குறுதிகள் எல்லாம் துளியும் பிசகாமல் அவர் குறித்திருக்கிற காலத்தில் அப்படியே நிறைவேறும் என்று முழுமையாய் நம்புகிறேனா?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். அப்படியென்றால், வேகமாய் நெருங்கி வருகிற “யெகோவாவின் நாளை” மனதில் வைத்துத் தயாராய் இருங்கள்.—2 பே. 3:12.
மோசே ஜாக்கிரதையாய் இருந்தார்
12. எவை மோசேயின் ஆன்மீகப் பார்வையை மறைத்திருக்கலாம்?
12 அடுத்து மோசேயின் உதாரணத்தைக் கவனிப்போம். எகிப்திய சாம்ராஜ்யத்தில் வாழ்ந்த மோசே, மற்றவர்கள் பார்வைக்குச் செல்வாக்குமிக்க நபராக தெரிந்திருப்பார். பார்வேனுடைய மகளின் வளர்ப்பு மகனாக இருந்ததால் அவருக்கு நிறைய மதிப்புமரியாதை கிடைத்திருக்கலாம், அறுசுவை உணவை அருந்தியிருக்கலாம், விலையுர்ந்த ஆடைகளை அணிந்திருக்கலாம், ஆடம்பரமாக வாழ்ந்திருக்கலாம். அதோடு, எல்லாத் துறைகளிலும் பயிற்சி பெற்றிருந்தார். (அப்போஸ்தலர் 7:20-22-ஐ வாசியுங்கள்.) பெருமளவு நிலபுலன்களைச் சொத்தாகப் பெற அவருக்கு வாய்ப்பிருந்தது.
13. கடவுளுடைய வாக்குறுதிகளில் மோசே எப்படிக் கவனத்தை ஒருமுகப்படுத்தினார்?
13 சிறுவயதிலேயே கடவுளைப் பற்றிய விஷயங்களை அவருடைய பெற்றோர் கற்றுக்கொடுத்திருந்ததால் எகிப்தியருடைய உருவ வழிபாடு அறிவற்ற செயல் என்பதை மோசே அறிந்திருப்பார். (யாத். 32:8) எகிப்தில் உயர்கல்வி பயின்று, அரண்மனையில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தாலும் அவர் உண்மை வழிபாட்டை விட்டு விலகவில்லை. தன்னுடைய முன்னோர்களுக்குக் கடவுள் கொடுத்திருந்த வாக்குறுதிகளைக் குறித்து அவர் ஆழ்ந்து தியானித்திருப்பார்; அதோடு, கடவுளுடைய சித்தத்தைச் செய்யத் தயாராய் இருப்பதைக் காட்ட ஆர்வமாய் இருந்தார். சொல்லப்போனால், “ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற . . . கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார்” என்று இஸ்ரவேல் புத்திரரிடம் மோசே சொன்னார்.—யாத்திராகமம் 3:15-17-ஐ வாசியுங்கள்.
14. மோசேயின் விசுவாசமும் தைரியமும் எப்படிச் சோதிக்கப்பட்டன?
14 எகிப்தியரின் கடவுட்கள் உயிரற்ற சிலைகளாக இருந்தன; உண்மைக் கடவுளான யெகோவாவோ மோசேக்கு நிஜமானவராக இருந்தார். அதனால், “காணமுடியாதவரைக்” காண்பதுபோல் அவர் வாழ்ந்து வந்தார். கடவுளுடைய மக்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற விசுவாசம் அவருக்கு இருந்தது; ஆனால் எப்போது என்பதை அவர் அறியாதிருந்தார். (எபி. 11:24, 25, 27) ஓர் இஸ்ரவேல அடிமையை ஒருவன் அடித்தபோது அவனைக் கொன்று போட்டார்; இதிலிருந்து, எபிரெயர்கள் விடுதலை செய்யப்படுவதைக் காண அவர் எவ்வளவு ஆவலாய் இருந்தார் என்பது தெரிந்தது. (யாத். 2:11, 12) என்றாலும் யெகோவாவுடைய வேளை இன்னும் வரவில்லை; அதனால், அவர் தூர தேசத்தில் நாடோடி போல் வாழ்ந்தார். எகிப்திய அரண்மனையில் சொகுசாக வாழ்வதை விட்டுவிட்டு வனாந்தரத்தில் எளிமையாக வாழ்வது அவருக்குக் கஷ்டமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. என்றபோதிலும், யெகோவா கொடுத்த ஒவ்வொரு கட்டளைக்கும் கீழ்ப்படிவதன் மூலம் அவர் தயாராய் இருந்ததைக் காட்டினார். இவ்வாறு, மீதியான் தேசத்தில் 40 வருடங்களைக் கழித்த பிறகு சக இஸ்ரவேலரை விடுதலைசெய்ய கடவுள் அவரைப் பயன்படுத்தவிருந்தார். கடவுள் சொன்னதற்கு இசைய கீழ்ப்படிதலோடு எகிப்துக்குத் திரும்பிச் சென்றார். கடவுளிடமிருந்து பெற்ற நியமிப்பை அவருடைய விருப்பப்படியே செய்வதற்கான வேளை அப்போது வந்தது. (யாத். 3:2, 7, 8, 10) ‘பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவராய்’ இருந்த மோசேக்கு எகிப்தில் பார்வோனைச் சந்திக்க தைரியமும் கடவுள்மீது விசுவாசமும் தேவைப்பட்டன. (எண். 12:3) என்றாலும், அவர் பார்வோனைப் போய்ச் சந்தித்தார்; வாதைகள் தொடங்கிய பிறகு அவர் ஒருமுறை அல்ல, பல முறை போய்ச் சந்தித்தார்; அப்படி எத்தனை முறை சந்திக்க வேண்டியிருக்குமென அவருக்குத் தெரியாதிருந்தாலும் தொடர்ந்து சந்தித்தார்.
15. தடங்கல்களை எதிர்ப்பட்டபோதிலும் பரலோகத் தகப்பனை மகிமைப்படுத்துவதற்கான வாய்ப்புகளுக்காகக் காத்திருக்க எது மோசேயைத் தூண்டியது?
15 அடுத்த 40 வருடங்களில், அதாவது இஸ்ரவேலர் வனாந்தரத்தில் அலைந்து திரிந்த காலத்தில், மோசே பல முறை விரக்தியடைந்தார். ஆனாலும், யெகோவாவை மகிமைப்படுத்துவதற்கான வாய்ப்புகளுக்காகக் காத்திருந்தார்; அவ்வாறு செய்யும்படி சக இஸ்ரவேலரையும் மனதார உற்சாகப்படுத்தினார். (உபா. 31:1-8) ஏன்? ஏனென்றால், அவர் தன்னுடைய பெயரைவிட யெகோவாவுடைய பெயரையும் அவருடைய பேரரசாட்சியையும் அதிகமாய் நேசித்தார். (யாத். 32:10-13; எண். 14:11-16) வாழ்க்கையில் விரக்தியையோ தடங்கல்களையோ எதிர்ப்பட்டாலும் நாமும்கூட கடவுளுடைய ஆட்சியைத் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும்; மற்றவர்களுடைய வழிகளைவிட கடவுளுடைய வழிகளே ஞானமானவை, நீதியானவை, சிறந்தவை என உறுதியாய் நம்ப வேண்டும். (ஏசா. 55:8-11; எரே. 10:23) அப்படித்தான் நீங்கள் நினைக்கிறீர்களா?
விழிப்புடன் இருங்கள்!
16, 17. மாற்கு 13:35-37 உங்களுக்கு ஏன் அதிக அர்த்தமுள்ளதாய் இருக்கிறது?
16 “இதெல்லாம் நடக்கப்போகிற காலம் உங்களுக்குத் தெரியாததால் எச்சரிக்கையுடன் இருங்கள், விழிப்புடன் இருங்கள்.” (மாற். 13:33) இந்தப் பொல்லாத உலகின் முடிவுக்கான அடையாளங்களைப் பற்றி இயேசு சொன்னபோது இந்த எச்சரிப்பைக் கொடுத்தார். மாற்கு பதிவு செய்தபடி அவர் சொன்ன முக்கியமான தீர்க்கதரிசனத்தின் முடிவில் பின்வருமாறு குறிப்பிட்டதைக் கவனியுங்கள்: “விழிப்புடன் இருங்கள்; ஏனென்றால் வீட்டு எஜமான் வரும் நேரம் மாலையா, நள்ளிரவா, சேவல் கூவும் நேரமா, அல்லது விடியற்காலையா என்பது உங்களுக்குத் தெரியாது. அவர் திடீரென்று வரும்போது, நீங்கள் தூங்கிக்கொண்டிருக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்குச் சொல்வதை எல்லாருக்குமே சொல்கிறேன், விழிப்புடன் இருங்கள்.”—மாற். 13:35-37.
17 இயேசு சிந்தனையைத் தூண்டும் எச்சரிப்பைக் கொடுத்தார். அவர் இரவின் நான்கு ஜாமங்களைக் குறிப்பிட்டார். நான்காம் ஜாமத்தின்போது விழித்திருப்பது ரொம்பவே கஷ்டம்; ஏனென்றால், அது விடியற்காலை சுமார் 3:00 மணியிலிருந்து சூரிய உதயம்வரை நீடித்திருக்கும். எதிரிகளைத் தாக்குவதற்கு இது மிகப் பொருத்தமான நேரமென போர்த் திறமிக்க வீரர்கள் கருதுகிறார்கள்; ஆம், ‘தூங்கிக்கொண்டிருப்பவர்களை’ வசமாகப் பிடிக்க அது அருமையான சந்தர்ப்பம். அதேபோல் இன்று உலக மக்கள் ஆன்மீக ரீதியில் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறார்கள்; ஆகவே, விழிப்புடன் இருக்க நாம் கடினமாய்ப் போராட வேண்டியிருக்கலாம். முன்னுரைக்கப்பட்ட முடிவுக்காக, நம்முடைய விடுதலைக்காக, ‘எச்சரிக்கையுடனும்’ ‘விழிப்புடனும்’ இருக்க வேண்டும் என்பதில் நமக்கு ஏதாவது சந்தேகம் இருக்கிறதா?
18. யெகோவாவின் சாட்சிகளாகிய நாம் மதிப்புமிக்க என்ன பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம்?
18 ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட பிரபல கலைஞர், பெங்கால் புலியின் தாக்குதலிலிருந்து உயிர்த் தப்பினார். ஆனால், வரவிருக்கும் அழிவிலிருந்து பொய் மதங்களோ இந்தப் பொல்லாத உலகின் மற்ற அமைப்புகளோ தப்ப முடியாதென பைபிள் தீர்க்கதரிசனம் தெளிவாகக் காட்டுகிறது. (வெளி. 18:4-8) நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் அழிவைச் சந்திக்கத் தயாராய் இருந்தார்கள்; அதுபோல, கடவுளுடைய ஊழியர்களில் சிறியோர், பெரியோர் என நாம் எல்லாரும் யெகோவாவுடைய நாளைச் சந்திக்கத் தயாராய் இருப்பதற்கு நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வது எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்துகொள்வோமாக. கடவுளை மதிக்காத இந்த உலகில், பொய் மதப் போதகர்களும், கடவுள் இருப்பதைச் சந்தேகிப்பவர்களும், கடவுளே இல்லையென சொல்பவர்களும் படைப்பாளரைக் கேலி கிண்டல் செய்கிறார்கள். ஆனால், இவர்களுடைய பேச்சால் நாம் பாதிக்கப்படக் கூடாது. ஆகவே, நாம் சிந்தித்த உதாரணங்களை மனதில் வைப்போமாக; “தேவாதி தேவனும்,” ‘மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிற’ யெகோவாவை ஆதரிக்கவும் மகிமைப்படுத்தவும் கிடைக்கும் வாய்ப்புகளுக்காகக் காத்திருப்போமாக.—உபா. 10:17.
[அடிக்குறிப்பு]
a ஆதியாகமம் 6:3-ல் குறிப்பிடப்பட்டுள்ள “நூற்றிருபது வருஷம்” சம்பந்தமான விளக்கத்திற்கு டிசம்பர் 15, 2010 தேதியிட்ட காவற்கோபுரத்தில் பக்கம் 30-ஐப் பாருங்கள்.
நினைவிருக்கிறதா?
• நோவா தன் குடும்பத்தாரின் ஆன்மீகத் தேவைகளுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருந்தது?
• நம்முடைய காலம் எப்படி நோவாவின் நாட்களைப் போலவே இருக்கிறது?
• மோசே விரக்தியடைந்த போதிலும் ஏன் யெகோவாவுடைய வாக்குறுதிகளில் கவனத்தை ஒருமுகப்படுத்தினார்?
• ஆன்மீக ரீதியில் விழிப்புடன் இருக்க என்னென்ன பைபிள் தீர்க்கதரிசனங்கள் உங்களைத் தூண்டுகின்றன?
[பக்கம் 25-ன் படம்]
நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் யெகோவாவுடைய வேலைக்கே முதலிடம் கொடுத்தார்கள்
[பக்கம் 26-ன் படம்]
கடவுள் கொடுத்த நம்பகமான வாக்குறுதிகள் ஜாக்கிரதையாய் இருக்க மோசேக்கு உதவின