பைபிளை ரசித்து ருசித்துப் படிக்கிறீர்களா?
“நான் பைபிளைத் தினமும் வாசிக்க ஆரம்பித்தபோது, ரசித்துப் படிக்காமல் ஏதோ கடமைக்குப் படித்தேன். அதைப் புரிந்துகொள்ள கஷ்டமாக இருந்ததால் பெரும்பாலும் என் மனம் ஊர் சுத்த ஆரம்பித்தது” என லாரேன் என்ற பெண் சொல்கிறார்.
ஆரம்பத்தில் தாங்களும் பைபிளை ஆர்வத்துடன் வாசிக்கவில்லையென இன்னும் பலர் சொல்கிறார்கள். ஆனால், பைபிளை வாசிப்பது நல்லதென அறிந்திருந்ததால் தொடர்ந்து வாசித்து வந்தார்கள். மாற்கு என்பவர் இவ்வாறு சொல்கிறார்: “பைபிளைப் படிக்க உட்கார்ந்தால் போதும், அது... இது... என ஏதாவது இடைஞ்சல் வந்து நிற்கும். நான் நிறைய ஜெபம் செய்து ரொம்ப முயற்சி எடுத்ததால்தான் தவறாமல் அதை வாசித்துவர முடிந்திருக்கிறது.”
கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளிடம் நீங்கள் எப்படி அதிக மதிப்பை வளர்த்துக்கொள்ளலாம்? அதை எப்படி ஆசை ஆசையாக வாசிக்கலாம்? அதற்கான சில ஆலோசனைகளைக் கவனியுங்கள்.
குறிக்கோள்களும் வழிகளும்
ஜெபத்தோடு, மனதை ஒருமுகப்படுத்தி பைபிளை வாசியுங்கள். பைபிளைப் படிப்பதற்கு ஆர்வத்தைத் தரும்படி யெகோவாவிடம் கேளுங்கள். அதில் புதைந்துள்ள அவருடைய ஞானத்தை நன்கு புரிந்துகொள்ள உதவும்படி அவரிடம் மன்றாடுங்கள். (சங். 119:34) இப்படிச் செய்யாவிட்டால், பைபிளைக் கடனுக்கு வாசிக்க ஆரம்பித்து, கடைசியில் அதைக் கையிலெடுக்கவே யோசிப்பீர்கள். லின் என்ற பெண் இவ்வாறு சொல்கிறார்: “சில சமயங்களில் நான் கடகடவென வாசித்து, முக்கியக் குறிப்புகளைப் புரிந்துகொள்ளாமல் போய்விடுவேன்; ஆர்வமூட்டும் மற்ற குறிப்புகளையும் கவனிக்காமலே விட்டுவிடுவேன். அதனால், பொறுமையாகப் படித்துப் புரிந்துகொள்ள உதவும்படி கடவுளிடம் ஜெபம் செய்கிறேன்; இது, என் மனதை அலையவிடாமல் கருத்தூன்றிப் படிக்க உதவுகிறது.”
வாசிக்கும் விஷயத்தைப் பொக்கிஷமாய்க் கருதுங்கள். பைபிள் சத்தியங்களை அறிந்துகொள்வதும் அவற்றைப் பின்பற்றுவதும் உங்களுக்கு வாழ்வளிக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். எனவே, வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய குறிப்புகளைக் கண்டுபிடித்து, அவற்றைக் கடைப்பிடிக்க ஊக்கமாய் முயற்சி எடுங்கள். கிறிஸ் என்பவர் இவ்வாறு சொல்கிறார்: “வாசிக்கும்போது நான் திருந்த வேண்டிய விஷயங்களைத் தேடுவேன். நிறையச் சமயங்களில் பைபிளிலும் பைபிள் பிரசுரங்களிலும் உள்ள குறிப்புகள் எனக்கென்றே எழுதப்பட்டிருப்பதுபோல் இருக்கும்; என்னை முன்பின் பார்க்காதவர்கள் இவற்றை எழுதியிருப்பதை நினைத்துப் பூரித்துப் போகிறேன்.”
நல்ல குறிக்கோள்களை வையுங்கள். பைபிள் கதாபாத்திரங்களைப் பற்றிப் புதிய புதியத் தகவல்களைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள். நம்முடைய பிரசுரங்களை ஆராய்ந்தால் அவர்களில் பலரைப் பற்றிச் சுவையான தகவல்களைக் கண்டுபிடிப்பீர்கள். பைபிள் கதாபாத்திரங்களை நம்மைப் போன்ற சுபாவங்களையும் உணர்ச்சிகளையும் உடைய நபர்களாக நீங்கள் அதிகமதிகமாகத் தெரிந்துகொள்ளும்போது அவர்கள் உங்கள் மனதில் தத்ரூபமாக நிற்பார்கள்.
வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேச புதிய வழிகளைக் கண்டுபிடியுங்கள். (அப். 17:2, 3) இதை மனதில் வைத்துத்தான் சஃபியா என்ற பெண் பைபிளைப் படிக்கிறார். “பைபிளிலிருந்து நியாயங்காட்டிப் பேச புதிய வழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்பது என் ஆசை; அப்போதுதானே ஊழியத்திலும் மற்ற சந்தர்ப்பங்களிலும் சத்தியங்களைத் தெளிவாக எடுத்துப் பேச முடியும். நியாயங்காட்டிப் பேசுவதற்கான உத்தியை காவற்கோபுர பத்திரிகையிலிருந்து நன்கு கற்றுக்கொள்ளலாம்” என்று அவர் சொல்கிறார்.—2 தீ. 2:15.
பைபிள் சம்பவங்களைக் கண்முன் நிறுத்துங்கள். “கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது” என்று எபிரெயர் 4:12 சொல்கிறது. பைபிளை வாசிக்கும்போது அதன் செய்தியை உயிரோட்டமுள்ளதாக ஆக்குங்கள்; அதன் கதாபாத்திரங்கள் பார்த்தவற்றைப் பாருங்கள், அவர்கள் கேட்டவற்றைக் கேளுங்கள், அவர்கள் உணர்ந்தவற்றை உணருங்கள். அவர்களுடைய அனுபவங்களை உங்கள் அனுபவங்களுடன் சம்பந்தப்படுத்திப் பாருங்கள். சூழ்நிலைகளை அவர்கள் கையாண்ட விதத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். இப்படிப் படிப்பது, பைபிள் பதிவுகளை நன்கு புரிந்துகொள்ளவும் அவற்றை மனதில் நிறுத்தவும் உதவும்.
கஷ்டமான வசனங்களையும் அவற்றுக்கான விளக்கங்களையும் தெளிவாகப் புரிந்துகொள்ள நேரத்தை ஒதுக்குங்கள். படிக்க உட்காரும் ஒவ்வொரு சமயத்திலும் அதற்காக அதிக நேரத்தை ஒதுக்குங்கள். அப்போது ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள் உங்கள் மனதில் எழலாம், அதற்காக ஆராய்ச்சி செய்ய வேண்டியிருக்கலாம். கஷ்டமான வார்த்தைகளுக்கு அர்த்தம் கண்டுபிடியுங்கள், அடிக்குறிப்புகளைச் சிந்தியுங்கள், பைபிள் வார்த்தைகளுக்கான அகரவரிசை அட்டவணையை அலசுங்கள். நீங்கள் படிப்பதை எந்தளவுக்குப் புரிந்துகொண்டு கடைப்பிடிக்கிறீர்களோ அந்தளவுக்கு நீங்கள் பைபிளை ரசித்து ருசிக்க ஆரம்பித்துவிடுவீர்கள். அப்போது, பின்வருமாறு சொன்ன சங்கீதக்காரனைப் போல நீங்களும் சொல்ல முடியும்: “உம் [யெகோவாவுடைய] நினைப்பூட்டுதல்களே என்றென்றைக்கும் என் சொத்து; அவையே என் இதயத்தை மகிழ்விக்கின்றன.”—சங். 119:111, NW.
அவசர அவசரமாக வாசிப்பதைத் தவிருங்கள். தனிப்பட்ட படிப்புக்காகத் தேவையான நேரத்தை ஒதுக்குங்கள். சபைக் கூட்டங்களுக்குத் தயாரிக்கவும் நேரம் கிடைக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். ராக்கெல் என்ற பெண் இவ்வாறு சொல்கிறார்: “நான் அடிக்கடி பதட்டமடைந்து விடுவதால் எதிலும் அதிக நேரம் கவனம் செலுத்த முடியாது. அதனால், கொஞ்சக் கொஞ்ச நேரம் படிப்பது மனதை ஒருமுகப்படுத்த உதவுகிறது. படித்த விஷயத்திலிருந்து அதிக பிரயோஜனத்தைப் பெறவும் உதவுகிறது.” கிறிஸ் இவ்வாறு சொல்கிறார்: “வேக வேகமாகப் படிக்கும்போது என் மனசாட்சி உறுத்தும். ஏனென்றால், எதுவுமே என் மனதைத் தொடாது, என்ன படித்தேன் என்றுகூடத் தெரியாது.” எனவே, நேரம் எடுத்துப் படியுங்கள்.
பைபிளைப் படிக்க அதிகமான ஏக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். “பச்சிளம் குழந்தைகள் பாலுக்காக ஏங்குவதுபோல், கடவுளுடைய வார்த்தையிலுள்ள கலப்படமில்லாத பாலுக்காக ஏக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்; அதைப் பருகுவதன் மூலம் நீங்கள் வளர்ச்சியடைந்து மீட்புப் பெறுவீர்கள்” என்று அப்போஸ்தலன் பேதுரு சொன்னார். (1 பே. 2:2) குழந்தைகள் பாலுக்கான ஏக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டியதில்லை. அந்த ஏக்கம் இயற்கையாக அவர்களுக்கு இருக்கிறது. நாமோ பைபிளிடமாக ஏக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டுமென அது சொல்கிறது. பைபிளைத் தினமும் ஒரு பக்கம் படித்தால்கூட அந்த ஏக்கம் சீக்கிரத்திலேயே வந்துவிடும். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும் போகப் போக ரசித்து ருசிக்க ஆரம்பித்துவிடுவோம்.
பைபிள் பதிவுகளைத் தியானியுங்கள். வாசிக்கும் விஷயங்களைத் தியானிப்பதிலிருந்தும் நீங்கள் அதிக பயனடைய முடியும். ஆராய்ந்து படித்த பைபிள் விஷயங்களைத் தொடர்புபடுத்திப் பார்க்க அது உதவும். வேறு வார்த்தைகளில் சொன்னால், நீங்கள் கண்டெடுக்கும் முத்துக்களை அழகிய மாலையாகக் கோர்க்க அது உதவும்; அது உங்கள் கழுத்தை அலங்கரிக்கும்.—சங். 19:14; நீதி. 3:3.
நேரம் வீண்போகாது
தவறாமல் படிப்பதைப் பழக்கப்படுத்திக்கொள்ள முயற்சி தேவைப்பட்டாலும் அதனால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் அளவிட முடியாதவை. அப்படிப் படிக்கையில் பைபிளை நன்கு புரிந்துகொள்ள ஆரம்பிப்பீர்கள். (எபி. 5:12-14) அதிலிருந்து நீங்கள் பெறுகிற ஞானமும் புத்தியும் உங்களுக்குச் சந்தோஷத்தை, இனிமையை, சமாதானத்தைத் தரும். பைபிளில் புதைந்துள்ள ஞானமானது, அதைப் பெற்று அதன்படி நடக்கிறவர்களுக்கு “ஜீவவிருட்சம்.”—நீதி. 3:13-18.
பைபிளை ஆழமாய் ஆராய்ந்து படிக்கும்போது புத்தியுள்ள மனதைப் பெறுவீர்கள். (நீதி. 15:14) அது மற்றவர்களுக்கு பைபிள் அடிப்படையில் கனிவான அறிவுரையைக் கொடுக்க உதவும். பைபிளிலிருந்தும் “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” வகுப்பார் தரும் பிரசுரங்களிலிருந்தும் நீங்கள் வாசிக்கிறவற்றின் அடிப்படையில் தீர்மானங்களைச் செய்தீர்கள் என்றால், புத்துணர்ச்சி பெறுவீர்கள், திடனடைவீர்கள். (மத். 24:45) அதோடு, அதிக நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஆன்மீக முதிர்ச்சியையும் பெறுவீர்கள். மேலும், ஆன்மீகக் காரியங்கள் எல்லாவற்றிலுமே வெற்றி பெறுவீர்கள்.—சங். 1:2, 3.
கடவுள்மீது நிறைய அன்பு இருந்தால் அவரைப் பற்றிப் பேசத் தூண்டப்படுவீர்கள். இதுவும்கூட அதிக பயனளிப்பதாய் இருக்கும். சஃபியா பல்வேறு பைபிள் வசனங்களை நினைவில் வைத்து ஊழியத்தில் பயன்படுத்த முயன்றுகொண்டிருக்கிறார்; இவ்வாறு, வீட்டுக்காரரின் கவனத்தை பைபிளிடம் திருப்புவதற்கும் ஊழியத்தைத் திறமையாகவும் சந்தோஷமாகவும் செய்வதற்கும் முயன்றுகொண்டிருக்கிறார். “பைபிள் வசனங்களை வாசிக்கையில் மக்கள் பிரதிபலிக்கிற விதத்தைப் பார்த்து மெய்சிலிர்த்துப் போகிறேன்” என்று அவர் சொல்கிறார்.
பைபிளை ரசித்து ருசித்துப் படிப்பதால் கிடைக்கும் மிகப் பெரிய பயன், யெகோவாவுடனான நெருங்கிய பந்தமாகும். பைபிளைப் படிப்பது அவருடைய நீதிநெறிகளை அறிந்துகொள்ள உதவுகிறது; அதோடு, அவருடைய அன்பையும் தாராள குணத்தையும் நீதியையும் புரிந்துகொண்டு, அவற்றை மதிப்பதற்கு உதவுகிறது. பைபிளைப் படிப்பதைவிட முக்கியமான அல்லது பிரயோஜனமான காரியம் வேறொன்றும் இல்லை. ஆகவே, கடவுளுடைய வார்த்தை என்ற கடலுக்குள் மூழ்கி முத்தெடுங்கள். அதற்காக நீங்கள் செலவிடுகிற எந்த நேரமும் வீண்போகாது.—சங். 19:7-11.
[பக்கம் 5-ன் பெட்டி/படங்கள்]
கடவுளுடைய வார்த்தையை வாசித்தல்: குறிக்கோள்களும் வழிகளும்
▪ ஜெபத்தோடு, மனதை ஒருமுகப்படுத்தி பைபிளை வாசியுங்கள்.
▪ வாசிக்கும் விஷயத்தைப் பொக்கிஷமாய்க் கருதுங்கள்.
▪ நல்ல குறிக்கோள்களை வையுங்கள்.
▪ வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேச புதிய வழிகளைக் கண்டுபிடியுங்கள்.
▪ பைபிள் சம்பவங்களைக் கண்முன் நிறுத்துங்கள்.
▪ கஷ்டமான வசனங்களையும் அவற்றுக்கான விளக்கங்களையும் தெளிவாகப் புரிந்துகொள்ள நேரத்தை ஒதுக்குங்கள்.
▪ அவசர அவசரமாக வாசிப்பதைத் தவிருங்கள்.
▪ பைபிளைப் படிக்க அதிகமான ஏக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.
▪ பைபிள் பதிவுகளைத் தியானியுங்கள்.
[பக்கம் 4-ன் படம்]
பைபிள் பதிவுகளை வாசிக்கும்போது அதில் ஒரு கதாபாத்திரமாகவே நீங்கள் மாறிவிடுவதாகக் கற்பனை செய்துபாருங்கள்