இளம் பிள்ளைகள் ஞானஸ்நானம் பெற வேண்டுமா?
“இப்போது என் மகள் ஞானஸ்நானம் பெற்று யெகோவாவின் சாட்சியாக ஆகியிருப்பதால் நான் ரொம்பவே சந்தோஷப்படுகிறேன்; அவளுக்கும்கூட அதில் சந்தோஷம் என்று எனக்குத் தெரியும்” என பிலிப்பீன்ஸைச் சேர்ந்த கார்லோஸ்a என்ற கிறிஸ்தவத் தகப்பன் சொன்னார். கிரீஸைச் சேர்ந்த ஒரு தகப்பன் இவ்வாறு சொன்னார்: “எங்களுடைய மூன்று பிள்ளைகளும் பருவ வயதிலேயே யெகோவாவின் சாட்சிகளாக ஞானஸ்நானம் பெற்றதைக் குறித்து நானும் என் மனைவியும் அதிக சந்தோஷப்படுகிறோம். மூன்று பேரும் ஆன்மீக முன்னேற்றம் செய்கிறார்கள், சந்தோஷமாய் யெகோவாவுக்குச் சேவை செய்கிறார்கள்.”
பிள்ளைகள் ஞானஸ்நானம் பெறும்போது கிறிஸ்தவப் பெற்றோர்கள் அகமகிழ்ந்து போகிறார்கள்; என்றாலும், சில சமயங்களில் பதட்டமும் அடைகிறார்கள். “எனக்கு ஒரு பக்கம் சந்தோஷமாகவும் மறுபக்கம் கலக்கமாகவும் இருந்தது” என்று ஒரு தாய் சொன்னார். ஏன் இந்தக் குழப்பம்? “என் மகன் இனி என்ன செய்தாலும் அவன்தான் பொறுப்பு, அவன்தான் யெகோவாவுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும் என்பதைப் புரிந்திருந்தேன்” என்று அவர் சொன்னார்.
ஞானஸ்நானம் பெற்று யெகோவாவின் சாட்சியாகச் சேவை செய்ய வேண்டும் என்பதே ஒவ்வொரு இளம் பிள்ளையின் குறிக்கோளாக இருக்க வேண்டும். என்றாலும், தேவபக்தியுள்ள பெற்றோர் இவ்வாறு யோசிக்கலாம்: ‘என் பிள்ளை நல்ல ஆன்மீக முன்னேற்றம் செய்திருக்கிறான் என்று எனக்குத் தெரியும்; ஆனால், ஒழுக்கக்கேடான ஆசைகளுக்கு இடங்கொடுக்காமல் யெகோவாவுக்கு முன் எப்போதும் சுத்தமுள்ளவனாக இருப்பானா? அந்தளவுக்கு ஆன்மீக ரீதியில் அவன் உறுதியுள்ளவனாக இருக்கிறானா?’ இன்னும் சிலர் தங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘பொருளாசை என்னும் வசீகர வலையில் சிக்காமல் என் பிள்ளை சந்தோஷமாகவும் பக்திவைராக்கியத்தோடும் யெகோவாவுக்கு எப்போதும் சேவை செய்வானா?’ ஆனால், ஞானஸ்நானம் பெற பிள்ளைகள் தயாராய் இருக்கிறார்களா என்பதைத் தீர்மானிக்க பைபிள் எப்படிப் பெற்றோருக்கு உதவும்?
சீடராவது—முக்கியத் தேவை
எத்தனை வயதில் ஞானஸ்நானம் பெற வேண்டுமென பைபிள் சொல்வதில்லை; ஆனால், ஞானஸ்நானம் பெற ஒருவர் என்ன ஆன்மீகத் தகுதியைப் பெற்றிருக்க வேண்டுமென அது சொல்கிறது. “எல்லாத் தேசத்தாரையும் சீடர்களாக்கி, . . . அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள்” என்று இயேசு தம்மைப் பின்பற்றியவர்களுக்குக் கட்டளையிட்டார். (மத். 28:19) ஆக, ஏற்கெனவே கிறிஸ்துவின் சீடர்களாக இருப்பவர்கள்தான் ஞானஸ்நானம் பெற வேண்டும்.
யாரைச் சீடர்கள் என்று சொல்லலாம்? அதைக் குறித்து வேதாகமங்களின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “கிறிஸ்துவின் போதனைகள்மீது நம்பிக்கை வைப்பதோடு, அவற்றை நெருங்கப் பின்பற்றுகிறவர்களுக்குத்தான் சீடர்கள் என்ற வார்த்தை முக்கியமாய்ப் பொருந்துகிறது.” அப்படியென்றால், இளம் பிள்ளைகள் கிறிஸ்துவின் உண்மையான சீடர்களாக ஆக முடியுமா? லத்தீன் அமெரிக்காவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சகோதரி மிஷனரியாகச் சேவை செய்து வருகிறார்; தானும் தன் உடன் பிறந்த சகோதரிகள் இருவரும் இளம் வயதில் ஞானஸ்நானம் பெற்றதைப் பற்றி அவர் இவ்வாறு சொல்கிறார்: “எங்களுக்கு ஓரளவு விவரம் தெரிந்திருந்ததால், யெகோவாவுக்குச் சேவை செய்யவும் பூஞ்சோலை பூமியில் வாழவும் விரும்பினோம். யெகோவாவுக்கு எங்களை அர்ப்பணித்திருந்தது, இளைஞருக்கே உரிய பிரச்சினைகளை உறுதியாய் எதிர்த்து நிற்க உதவியது. சிறுவயதில் யெகோவாவுக்கு எங்களை அர்ப்பணித்ததைக் குறித்து நாங்கள் ஒருநாளும் வருத்தப்பட்டதில்லை.”
உங்கள் பிள்ளை கிறிஸ்துவின் சீடனாக ஆகியிருக்கிறானா என்பதை நீங்கள் எப்படி அறிந்துகொள்ள முடியும்? “பிள்ளையானாலும், அதின் செய்கை சுத்தமோ செம்மையோ என்பது, அதின் நடக்கையினால் விளங்கும்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 20:11) ஓர் இளம் பிள்ளை தன்னுடைய ‘முன்னேற்றம் எல்லாருக்கும் தெரியவரும்’ விதத்தில் நடக்கிறானா, அதாவது சீடனாக ஆகியிருக்கிறானா, என்பதை அவனுடைய சில பழக்கவழக்கங்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம். அவை என்னவென்று இப்போது கவனிக்கலாம்.—1 தீ. 4:15.
சீடனாக இருப்பதற்கான அடையாளம்
உங்கள் பிள்ளை உங்களுக்குக் கீழ்ப்படிகிறானா? (கொலோ. 3:20) வீட்டில் கொடுக்கப்படுகிற வேலைகளைச் செய்கிறானா? சுமார் 12 வயதிலிருந்தபோது இயேசு, “[தம் பெற்றோருக்கு] கட்டுப்பட்டு நடந்தார்” என்று பைபிள் சொல்கிறது. (லூக். 2:51) இன்று எந்தப் பிள்ளையும் தன் அப்பா அம்மா சொல்வதை எப்போதும் அச்சுப்பிசகாமல் செய்வதில்லைதான். என்றாலும், உண்மைக் கிறிஸ்தவர்கள் ‘[இயேசுவின்] அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்ற’ வேண்டும். எனவே, ஞானஸ்நானம் பெற விரும்புகிற இளம் பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படிகிறவர்கள் எனப் பெயரெடுத்திருக்க வேண்டும்.—1 பே. 2:21.
பின்வரும் கேள்விகளைச் சிந்தியுங்கள்: உங்களுடைய பிள்ளை ஊழியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம், ‘முதலாவது கடவுளுடைய அரசாங்கத்தை நாடிக்கொண்டே’ இருக்கிறானா? (மத். 6:33) மற்றவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க மனமுள்ளவனாக இருக்கிறானா? அல்லது, ஊழியத்திற்குச் செல்லும்படியும் வீட்டுக்காரரிடம் பேசும்படியும் நீங்கள் திரும்பத் திரும்ப அவனிடம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டுமா? ஞானஸ்நானம் பெறாத பிரஸ்தாபியாகத் தனக்கிருக்கும் பொறுப்புகளைப் புரிந்துகொண்டிருக்கிறானா? ஊழியத்தில் ஆர்வம் காட்டுகிறவர்களை மீண்டும் போய்ச் சந்திக்க விரும்புகிறானா? தான் ஒரு யெகோவாவின் சாட்சி என்பதைத் தன் பள்ளியிலுள்ள மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கிறானா?
சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வதை அவன் முக்கியமாகக் கருதுகிறானா? (சங். 122:1) காவற்கோபுர படிப்பிலும் சபை பைபிள் படிப்பிலும் சந்தோஷமாகப் பதில் சொல்கிறானா? தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் உற்சாகமாய்ப் பங்கெடுக்கிறானா?—எபி. 10:24, 25.
உங்கள் பிள்ளை பள்ளியிலும் மற்ற இடங்களிலும் கெட்ட சகவாசத்தைத் தவிர்ப்பதன் மூலம் ஒழுக்க ரீதியில் சுத்தமாய் இருக்க முயற்சி செய்கிறானா? (நீதி. 13:20) எப்படிப்பட்ட இசையை, சினிமாவை, டிவி நிகழ்ச்சியை, வீடியோ கேம்ஸை, வெப் சைட்டை அவன் விரும்புகிறான்? பைபிள் நெறிகளுக்கு இசைய வாழ விரும்புவதை அவனுடைய சொல்லும் செயலும் காட்டுகின்றனவா?
உங்களுடைய பிள்ளை பைபிளை எந்தளவு அறிந்திருக்கிறான்? குடும்ப வழிபாட்டில் கற்றுக்கொள்ளும் விஷயங்களைச் சொந்த வார்த்தைகளில் சொல்ல அவனால் முடியுமா? அடிப்படை பைபிள் சத்தியங்களை அவனால் விளக்க முடியுமா? (நீதி. 2:6-9) பைபிளையும் அடிமை வகுப்பார் வெளியிடுகிற பிரசுரங்களையும் ஆர்வத்துடன் படிக்கிறானா? (மத். 24:45) பைபிள் போதனைகள், பைபிள் வசனங்கள் சம்பந்தமாகக் கேள்விகள் கேட்கிறானா?
உங்கள் பிள்ளையின் ஆன்மீக முன்னேற்றத்தை எடைபோட இந்தக் கேள்விகள் உங்களுக்கு உதவலாம். இவற்றைச் சிந்தித்த பிறகு, ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பாக அவன் எந்த விஷயங்களில் முன்னேற்றம் செய்ய வேண்டுமென நீங்கள் தெரிந்துகொள்ளலாம். ஒருவேளை அவன் சீடனாக இருப்பதற்குரிய அடையாளம் தெரிந்தால், அதோடு அவன் தன்னைக் கடவுளுக்கு அர்ப்பணித்திருந்தால், ஞானஸ்நானம் பெற அவனை நீங்கள் அனுமதிக்கலாம்.
இளம் பிள்ளைகள் யெகோவாவைத் துதிக்கலாம்
கடவுளுடைய ஊழியர்களில் அநேகர் பருவ வயதிலோ அதற்கும் முன்பாகவோ உத்தமத்தைக் காட்டியிருக்கிறார்கள். யோசேப்பு, சாமுவேல், யோசியா, இயேசு ஆகியோரைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். (ஆதி. 37:2; 39:1-3; 1 சா. 1:24-28; 2:18-20; 2 நா. 34:1-3; லூக். 2:42-49) பிலிப்புவின் நான்கு மகள்களும் சிறு வயதிலிருந்தே நன்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்க வேண்டும்; இவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லி வந்தார்கள்.—அப். 21:8, 9.
கிரீஸைச் சேர்ந்த ஒரு சகோதரர் இவ்வாறு சொன்னார்: “12 வயதில் நான் ஞானஸ்நானம் பெற்றேன். அதற்காக நான் வருத்தப்பட்டதே இல்லை. இப்போது 24 வருடங்கள் உருண்டோடிவிட்டன; அதில் 23 வருடங்களை முழுநேர ஊழியத்தில் செலவிட்டிருக்கிறேன். இளைஞருக்குரிய பிரச்சினைகளைச் சமாளிக்க யெகோவாமீதுள்ள அன்பு எப்போதும் எனக்கு உதவியிருக்கிறது. 12 வயதில் எனக்கு பைபிளைப் பற்றி ஓரளவே தெரிந்திருந்தது. ஆனால், யெகோவாமீது அன்பும் அவருக்கு என்றென்றும் சேவை செய்ய வேண்டுமென்ற ஆசையும் எனக்கு இருந்ததை உணர்ந்தேன். அவருக்குத் தொடர்ந்து சேவை செய்ய எனக்கு அவர் உதவியிருப்பதைக் குறித்துச் சந்தோஷப்படுகிறேன்.”
சீடராக இருப்பதற்குரிய அடையாளத்தை வெளிக்காட்டுகிறவர்கள் சிறியோராக இருந்தாலும் சரி பெரியோராக இருந்தாலும் சரி, ஞானஸ்நானம் பெற வேண்டும். “ஒருவன் இருதயத்தில் விசுவாசிக்கும்போது கடவுளுக்குமுன் நீதிமானாகிறான்; என்றாலும், வாயினால் அறிவிக்கும்போது மீட்புப் பெறுகிறான்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (ரோ. 10:10) கிறிஸ்துவின் சீடனாக இருக்கும் ஓர் இளம் பிள்ளை ஞானஸ்நானம் எனும் முக்கியப் படியை எடுக்கும்போது, அவனும் அவனுடைய பெற்றோரும் ஒரு மைல்கல்லை எட்டுகிறார்கள். அந்தச் சந்தோஷத்தை நீங்களும் உங்கள் பிள்ளைகளும் ருசிக்கத் தவறாதீர்கள்.
[அடிக்குறிப்பு]
a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 5-ன் பெட்டி]
ஞானஸ்நானம்—சரியான கண்ணோட்டம்
சில பெற்றோர் தங்கள் பிள்ளைகள் ஞானஸ்நானம் எடுப்பது நல்லதென நினைத்தாலும் அதில் ‘ரிஸ்க்’ இருப்பதாகக் கருதுகிறார்கள்; அது, டிரைவிங் லைசன்ஸ் பெறுவதைப் போல் இருப்பதாகக் கருதுகிறார்கள். ஆனால், ஞானஸ்நானம் பெறுவதும் கடவுளுக்குச் சேவை செய்வதும், எதிர்காலத்தில் சீரோடும் சிறப்போடும் வாழ முடியாதபடி செய்துவிடுமா? செய்துவிடாதென பைபிள் பதிலளிக்கிறது. “கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்” என்று நீதிமொழிகள் 10:22 சொல்கிறது. “தேவபக்தி மிகுந்த ஆதாயம் தரும் என்பது உண்மைதான்; ஆனால் தேவபக்தியோடுகூட, போதுமென்ற மனம் உள்ளவர்களுக்கே அது மிகுந்த ஆதாயம் தரும்” என்று இளம் தீமோத்தேயுவுக்கு பவுல் எழுதினார்.—1 தீ. 6:6.
யெகோவாவுக்குச் சேவை செய்வது சுலபமானது இல்லைதான். எரேமியா கடவுளுடைய தீர்க்கதரிசியாகச் சேவை செய்தபோது எத்தனையோ இன்னல்களைச் சந்தித்தார். ஆனாலும், உண்மைக் கடவுளை வழிபட்டதைப் பற்றி தான் எப்படி உணர்ந்தார் என்பதை இவ்வாறு எழுதினார்: “உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது.” (எரே. 15:16) கடவுளுடைய சேவையில்தான் தனக்கு அளவில்லா சந்தோஷம் கிடைத்ததென அவர் அறிந்திருந்தார். சாத்தானின் உலகத்திலோ கஷ்டங்கள்தான் மிஞ்சும் என்பதையும் அறிந்திருந்தார். இந்த வித்தியாசத்தைப் பிள்ளைகள் புரிந்துகொள்ள பெற்றோர் உதவ வேண்டும்.—எரே. 1:19.
[பக்கம் 6-ன் பெட்டி/படம்]
என் பிள்ளையின் ஞானஸ்நானத்தைத் தள்ளிப்போட வேண்டுமா?
சில சமயங்களில், பிள்ளைகள் ஞானஸ்நானம் எடுக்கத் தகுதி பெற்றிருந்தாலும் அவர்களுடைய பெற்றோர் அதைத் தள்ளிப்போட தீர்மானிக்கலாம். என்ன காரணங்களால்?
என் பிள்ளை ஞானஸ்நானம் பெற்ற பிறகு ஏதாவது பெரிய தவறில் ஈடுபட்டு சபைநீக்கம் செய்யப்படுவானோ என்று பயப்படுகிறேன். ஞானஸ்நானம் எடுக்காத இளம் பிள்ளை அவனுடைய நடத்தைக்காகக் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டியதில்லை என நினைப்பது சரியா? ‘[உன் செயல்களினிமித்தம்] தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி’ என இளம் பிள்ளைகளுக்கு சாலொமோன் எழுதினார். (பிர. 11:9) எந்த வயதுள்ளவர்களாக இருந்தாலும் சரி, “நாம் ஒவ்வொருவரும் நம்மைக் குறித்துக் கடவுளிடம் கணக்குக் கொடுப்போம்” என பவுல் நினைப்பூட்டினார்.—ரோ. 14:12.
ஞானஸ்நானம் பெற்றவர்களும் சரி பெறாதவர்களும் சரி, எல்லாருமே கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும். யெகோவா தம்முடைய ஊழியர்களைப் பாதுகாக்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள்; ஆம், ‘தாங்கிக்கொள்ள முடியாதளவுக்கு சோதிக்கப்பட அவர்களை அவர் அனுமதிப்பதில்லை.’ (1 கொ. 10:13) ‘தெளிந்த புத்தியுடன் இருந்து,’ சோதனைகளை எதிர்த்துப் போராடும்வரை அவர்களுக்கு அவருடைய ஆதரவு இருக்கும். (1 பே. 5:6-9) ஒரு கிறிஸ்தவத் தாய் இவ்வாறு சொன்னார்: “ஞானஸ்நானம் பெற்ற பிள்ளைகள் இந்த உலகின் கெட்ட காரியங்களிலிருந்து விலகியிருக்க இன்னும் தீர்மானமாய் இருப்பார்கள். ஞானஸ்நானம் தனக்குப் பாதுகாப்பு வளையம் போல் இருப்பதாக 15 வயதில் ஞானஸ்நானம் பெற்ற என் மகன் நினைக்கிறான். ‘கடவுளுடைய சட்டத்தை மீற வேண்டுமென்ற எண்ணமே வராது’ என்று அவன் சொன்னான். ஆகவே, சரியானதைச் செய்வதற்குப் பலமான தூண்டுகோலாக ஞானஸ்நானம் இருக்கிறது.”
யெகோவாவுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதை உங்கள் சொல்லின் மூலமாகவும் செயலின் மூலமாகவும் பிள்ளைகளுக்குக் கற்பித்திருந்தீர்கள் என்றால், அவர்கள் ஞானஸ்நானம் எடுத்த பிறகும் அப்படியே செய்வார்கள் என நம்பிக்கையோடு இருக்கலாம். “நீதிமான் தன் உத்தமத்திலே நடக்கிறான்; அவனுக்குப் பிறகு அவன் பிள்ளைகளும் பாக்கியவான்களாயிருப்பார்கள்” என்று நீதிமொழிகள் 20:7 சொல்கிறது.
என் பிள்ளை முதலாவது சில குறிக்கோள்களை எட்ட வேண்டுமென விரும்புகிறேன். இளம் பிள்ளைகள் வேலை செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும்; அப்போதுதான், பிற்பாடு அவர்கள் சொந்தக் காலில் நிற்க முடியும். ஆனால், ‘நிறையப் படிக்க வேண்டும், எக்கச்சக்கமாகச் சம்பாதிக்க வேண்டும்’ என்பதை முதலாவது வைத்து உண்மை வழிபாட்டை இரண்டாவது இடத்திற்குத் தள்ளும்படி பெற்றோர் ஊக்குவிப்பதில் ஆபத்து இருக்கிறது. கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தி பலன் கொடுக்காமல் போவதைப் பற்றி இயேசு இவ்வாறு குறிப்பிட்டார்: “முட்செடிகள் உள்ள நிலத்திற்கு ஒப்பானவர் செய்தியைக் கேட்கிறார், ஆனால் இவ்வுலகத்தின் கவலையும் செல்வத்தின் வஞ்சக சக்தியும் அந்தச் செய்தியை நெருக்கிப் போடுவதால் அவர் பலன் கொடுக்காமல்போகிறார்.” (மத். 13:22) ஆன்மீக லட்சியங்களுக்குப் பதிலாக உலகப்பிரகாரமான லட்சியங்களை முதலில் வைத்தால், கடவுளுக்குச் சேவை செய்ய வேண்டுமென்ற விருப்பம் இளம் பிள்ளைகளின் மனதைவிட்டே போய்விடும்.
தகுதி பெற்றிருந்தும் ஞானஸ்நானம் எடுக்க பெற்றோர்களால் அனுமதிக்கப்படாத இளம் பிள்ளைகளைப் பற்றி அனுபவம்வாய்ந்த ஒரு மூப்பர் இவ்வாறு சொன்னார்: “ஓர் இளம் பிள்ளையை ஞானஸ்நானம் பெற அனுமதிக்காவிட்டால் அவனுடைய ஆன்மீக முன்னேற்றம் தடைபடும், அவனுக்கு மனச்சோர்வும் ஏற்படும்.” பயணக் கண்காணி ஒருவர் இவ்வாறு சொன்னார்: “ஞானஸ்நானம் பெற அனுமதிக்காவிட்டால் ஓர் இளம் பிள்ளை ஆன்மீக ரீதியில் பாதுகாப்பற்றவனாக அல்லது குறைவுபட்டவனாக உணர ஆரம்பிக்கலாம். சாதனை உணர்வைப் பெற அவன் உலகத்தின் பக்கம் போகலாம்.”
[படம்]
படிப்புக்கு முதலிடம் கொடுக்க வேண்டுமா?
[பக்கம் 3-ன் படம்]
உங்கள் பிள்ளை கிறிஸ்துவின் சீடனாக இருப்பதை இவ்வழிகளில் காட்டலாம்...
[பக்கம் 3-ன் படங்கள்]
கூட்டங்களுக்குத் தயாரித்து அவற்றில் பங்குகொள்வது
[பக்கம் 4-ன் படம்]
உங்களுக்குக் கீழ்ப்படிவது
[பக்கம் 4-ன் படம்]
ஊழியத்தில் கலந்துகொள்வது
[பக்கம் 4-ன் படம்]
ஜெபம் செய்வது