ஆபிரகாமிடம் ஒட்டகங்கள் இருந்தது உண்மையா?
ஆபிரகாமுக்கு பார்வோன் தந்த மிருகங்களில் ஒட்டகங்களும் இருந்ததாக பைபிள் சொல்கிறது. (ஆதி. 12:16) ஆபிரகாமின் ஊழியக்காரன் நீண்ட தூரம் பயணப்பட்டு மெசொப்பொத்தாமியாவுக்குச் சென்றபோது, “தன் எஜமானுடைய ஒட்டகங்களில் பத்து ஒட்டகங்களைத் தன்னுடனே கொண்டுபோனான்.” ஆகவே, சுமார் 4,000 ஆண்டுகளுக்குமுன் ஆபிரகாமிடம் ஒட்டகங்கள் இருந்ததாக பைபிள் தெளிவாகக் குறிப்பிடுகிறது.—ஆதி. 24:10.
சிலர் இதை ஏற்றுக்கொள்வதில்லை. நியூ இன்டர்நேஷனல் வர்ஷன் ஆர்க்கியலாஜிகல் ஸ்டடி பைபிள் என்ற புத்தகம் இவ்வாறு அறிக்கை செய்கிறது: “ஒட்டகங்களைப் பற்றிய இந்தக் குறிப்புகள் உண்மைதானா என்பதைக் குறித்து அறிஞர்கள் தர்க்கம் செய்திருக்கிறார்கள்; ஏனென்றால், ஆபிரகாம் வாழ்ந்து பல நூற்றாண்டுகள் கழித்துதான், அதாவது சுமார் கி.மு. 1200-ஆம் ஆண்டு முதற்கொண்டுதான், ஒட்டகங்கள் பொதுவாக வளர்ப்புப் பிராணிகளாய்ப் பழக்குவிக்கப்பட்டன எனப் பெரும்பாலோர் நம்புகிறார்கள்.” எனவே, அதற்குமுன் ஒட்டகங்கள் பழக்குவிக்கப்பட்டதாக பைபிள் சொல்லும் குறிப்புகள் தவறானதாக, அதாவது அந்தக் காலத்திற்குப் பொருந்தாத ஒன்றாக, கருதப்படுகின்றன.
என்றாலும், மற்ற அறிஞர்கள் வேறு விதமாக வாதாடுகிறார்கள்; ஒட்டகங்களை வளர்ப்புப் பிராணிகளாகப் பழக்குவிப்பது சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிரபலமானது என்பதற்காக, அதற்குமுன் அவை பழக்குவிக்கப்படவே இல்லையெனச் சொல்ல முடியாது என்கிறார்கள். பண்டைய மத்திய கிழக்கு நாடுகளின் நாகரீகங்கள் என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “சமீபத்திய ஆராய்ச்சியின்படி, தென்கிழக்கு அரேபியாவில் 4,000-க்கும் அதிகமான ஆண்டுகளுக்குமுன் ஒட்டகங்கள் வளர்ப்புப் பிராணிகளாகப் பழக்குவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆரம்பத்தில் பால், மயிர், தோல், இறைச்சி ஆகியவற்றிற்காக அவை வளர்க்கப்பட்டிருக்கலாம்; அதன்பின் சீக்கிரத்திலேயே சுமை சுமப்பதற்காகவும் பயன்படுத்தப்பட்டன.” ஆகவே, ஆபிரகாமுடைய காலத்திற்கு முன்பே ஒட்டகங்கள் இவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பது தெரிகிறது; இதற்கு, புதைபொருள் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புத் துண்டுகளும் மற்ற பொருள்களும் அத்தாட்சி அளிக்கின்றன.
இதற்கு எழுத்துப்பூர்வ அத்தாட்சிகளும் இருக்கின்றன. அதே புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “மெசொப்பொத்தாமியாவில் ஆப்புவடிவ எழுத்துப் பட்டியல்களில் இந்த மிருகம் [ஒட்டகம்] குறிப்பிடப்பட்டிருக்கிறது; பல முத்திரைகளில் இதன் உருவம் காணப்படுகிறது; ஆகவே, சுமார் 4,000 ஆண்டுகளுக்குமுன் [அதாவது, ஆபிரகாமுடைய காலத்திற்குள்] இந்த மிருகம் மெசொப்பொத்தாமியாவை அடைந்திருக்க வேண்டுமெனத் தெரிகிறது.”
தூபப் பொருள்களை வணிகம் செய்த தென் அரேபிய வியாபாரிகள் ஒட்டகங்களில் தங்கள் சரக்குகளை ஏற்றிச் சென்றதாக சில அறிஞர்கள் நம்புகிறார்கள்; அந்த வியாபாரிகள் பாலைவனம் வழியாக வடக்கு நோக்கிப் போய், எகிப்து, சீரியா போன்ற நாடுகளுக்குச் சென்றதாகவும் இவ்வாறு அந்நாடுகளில் ஒட்டகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் சொல்கிறார்கள். தூபப் பொருள்களின் வியாபாரம் கி.மு. 2000 ஆண்டிலேயே பிரபலமாக இருந்திருக்கலாம். ஆகவே, ஆபிரகாமுடைய காலத்திற்குச் சுமார் நூறு வருடங்களுக்குப் பிறகு இஸ்மவேல வியாபாரிகள் தங்கள் தூபப் பொருள்களை ஒட்டகங்களில் ஏற்றி எகிப்துக்குக் கொண்டு சென்றதாக ஆதியாகமம் 37:25-28 குறிப்பிடுவது ஆர்வத்திற்குரியது.
ஒருவேளை, சுமார் 4,000 ஆண்டுகளுக்குமுன் மத்திய கிழக்கு நாடுகளில் ஒட்டகங்கள் அதிகம் பயன்படுத்தப்படாமல் இருந்திருக்கலாம்; ஆனால், அத்தாட்சிகளின்படி அச்சமயத்தில் ஒட்டகங்கள் பயன்படுத்தப்படவே இல்லையெனச் சொல்ல முடியாது. தி இன்டர்நேஷனல் ஸ்டான்டர்ட் பைபிள் என்ஸைக்ளோப்பீடியா முடிவாக இவ்வாறு கூறுகிறது: “பூர்வ பைபிள் பதிவுகளில் ஒட்டகங்கள் குறிப்பிடப்பட்டிருப்பது அக்காலத்திற்குப் பொருந்தாத தவறான தகவலென இனியும் நினைக்க வேண்டியதில்லை; ஏனென்றால், [ஆபிரகாமுடைய] காலத்திற்கு முன்பே ஒட்டகங்கள் வளர்ப்புப் பிராணிகளாகப் பழக்குவிக்கப்பட்டதற்கு ஏராளமான புதைபொருள் அத்தாட்சிகள் இருக்கின்றன.”