சரித்திரத்தில் முத்திரை பதித்த ஒரு கூட்டம்
“இந்தக் கூட்டம் முடியும்போது, ‘இது தேவராஜ்ய சரித்திரத்தில் முத்திரை பதித்த வருடாந்தரக் கூட்டம்’ என்று சொல்வீர்கள்!” என்றார் சகோதரர் ஸ்டீஃபன் லெட். யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவைச் சேர்ந்த அவர் இப்படிச் சொன்னபோது, திரண்டு வந்திருந்தோரின் எதிர்பார்ப்பு பல மடங்கு பெருகியது. அக்டோபர் 2, 2010-ல் உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டி ஆஃப் பென்ஸில்வேனியாவின் 126-வது வருடாந்தரக் கூட்டத்திற்காக அனைவரும் அமெரிக்கா, நியூ ஜெர்ஸியிலுள்ள ஜெர்ஸி நகரத்தில் அமைந்திருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாட்டு மன்றத்தில் ஒன்றுகூடியிருந்தார்கள். சரித்திரம் படைத்த இந்தக் கூட்டத்தின் ஒரு சிறப்புப் பார்வை, இதோ!
முதலாவதாக, எசேக்கியேல் புத்தகத்தில் சித்தரிக்கப்படுகிற யெகோவாவின் பரம ரதத்தைப் பற்றிச் சகோதரர் லெட் உற்சாகம் பொங்கப் பேசினார். மகிமைபொருந்திய அந்த மாபெரும் ரதம் யெகோவாவின் அமைப்பைப் படம்பிடித்துக் காட்டுகிறது; அது யெகோவாவின் முழு கட்டுப்பாட்டில் இருக்கிறது. தேவதூதர்களைக் கொண்ட அதன் பரலோக பாகம், யெகோவாவின் சிந்தனைகளைப் போலவே மின்னல் வேகத்தில் செல்கிறது. யெகோவாவுடைய அமைப்பின் பூமிக்குரிய பாகமும் அதேபோல் மின்னல் வேகத்தில் செல்கிறது. சமீப வருடங்களில் இந்தப் பூமிக்குரிய அமைப்பில் ஏற்பட்டிருக்கும் பல அருமையான முன்னேற்றங்களைப் பற்றிச் சகோதரர் லெட் குறிப்பிட்டார்.
உதாரணத்திற்கு, பல கிளை அலுவலகங்கள் ஒன்றாய் இணைக்கப்பட்டுள்ளன; இதனால், அந்த நாடுகளில் உள்ள பெத்தேலில் சேவை செய்த அநேகர் பிரசங்க வேலையில் அதிகமாய் ஈடுபடுவதற்காக அனுப்பப்பட்டிருக்கிறார்கள். அடிமை வகுப்பைப் பிரதிநிதித்துவம் செய்கிற ஆளும் குழுவினர் உண்மையோடு மட்டுமல்லாமல் விவேகமாகவும் தொடர்ந்து நடந்துகொள்ள வேண்டுமென எப்போதும் ஜெபிக்கும்படி சகோதரர் லெட் கூடியிருந்தோரைக் கேட்டுக்கொண்டார்.—மத். 24:45-47.
உற்சாகமளிக்கும் அறிக்கைகளும், மனதைத் தொடும் பேட்டிகளும்
ஹெய்டி கிளை அலுவலகக் குழுவைச் சேர்ந்த டாப் ஹான்ஸ்பர்கர் என்ற சகோதரர் ஜனவரி 12, 2010-ல் ஏற்பட்ட பூகம்பத்தைப் பற்றி நெஞ்சை உருக்கும் அறிக்கையை அளித்தார்; அந்தப் பூகம்பம் 3,00,000 பேரைக் காவுகொண்டதாகக் கருதப்படுகிறது. கெட்டவர்களாக இருந்தவர்களைக் கடவுள் தண்டித்ததாகவும் நல்லவர்களைக் காப்பாற்றியதாகவும் சர்ச் குருமார் மக்களிடம் சொல்லி வந்தார்கள். வேடிக்கை என்னவென்றால், அந்தப் பூகம்பத்தால் சிறைச்சாலையின் மதில்கள் இடிந்து விழுந்து, ஆயிரக்கணக்கான குற்றவாளிகள் தப்பி ஓடினர்! ஆனால், நம் காலத்தில் கொடிய துன்பங்கள் வருவதற்கான உண்மையான காரணத்தைத் தெரிந்துகொண்டு அநேக நல்மனமுள்ள ஆட்கள் ஆறுதல் அடைகிறார்கள். பூகம்பத்தில் மனைவியைப் பறிகொடுத்த விசுவாசமுள்ள ஒரு சகோதரர் இவ்வாறு சொன்னதாக ஹான்ஸ்பர்கர் குறிப்பிட்டார்: “இந்நாள்வரை கண்ணீர்விட்டு அழுகிறேன். இன்னும் எவ்வளவு நாள் துக்கத்தில் இருப்பேன் என்று தெரியவில்லை; ஆனால், யெகோவாவின் அமைப்பு காட்டுகிற பாசத்தைப் பார்த்து ஆனந்தப்படுகிறேன். எனக்கு எதிர்கால நம்பிக்கை இருக்கிறது, அதைக் கண்டிப்பாக மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வேன்.”
புரூக்ளின் பெத்தேல் குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர் மார்க் சான்டர்சன் பிலிப்பைன்ஸ் நாட்டைப் பற்றிப் பேசினார். முன்பு அவர் அந்நாட்டு கிளை அலுவலகக் குழுவின் அங்கத்தினராக இருந்தார்; அங்கு ராஜ்ய பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக 32 உச்சநிலைகளை எட்டியிருப்பதாகவும், பைபிள் படிப்புகளின் எண்ணிக்கை பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையைவிட பல மடங்கு அதிகமாய் இருப்பதாகவும் அவர் மகிழ்ச்சியோடு தெரிவித்தார். மிகெல் என்ற சகோதரரைப் பற்றி அவர் குறிப்பிட்டார்; மிகெலின் பேரன் கொலை செய்யப்பட்டிருந்தான். கொலையாளிக்கு எதிராக வழக்கு தொடுத்து அவனைச் சிறையில் தள்ள மிகெல் அரும்பாடுபட்டார். பிற்பாடோ, அவர் சிறையில் சாட்சி கொடுத்துக் கொண்டிருந்தபோது அந்தக் கொலையாளியைச் சந்தித்தார். பதற்றமாக இருந்தபோதிலும் அவர் சாந்தமாகவும் அன்பாகவும் பேசினார். பின்பு அவனுக்கு பைபிள் படிப்பு நடத்த ஆரம்பித்தார். அவன் நன்கு படித்து யெகோவாவை நேசிக்க ஆரம்பித்தான். இப்போது ஞானஸ்நானம் பெற்றுவிட்டான். மிகெல் அந்தப் புதிய சகோதரரின் நெருங்கிய தோழராக இருக்கிறார்; சிறையிலிருந்து சீக்கிரமாக விடுதலை பெற உதவி செய்துகொண்டு இருக்கிறார்.a
அடுத்ததாக, சகோதரர் மார்க் நூமார் பேட்டிகளை நடத்தினார். தேவராஜ்ய பள்ளிகள் இலாகாவில் போதகராக இருக்கும் இவர் பின்வரும் மூன்று தம்பதிகளைப் பேட்டி கண்டார்: அலெக்ஸ் மற்றும் சாரா ரைன்மியூலர்; டேவிட் மற்றும் க்ரிஸ்டா ஷேஃபர்; ராபர்ட் மற்றும் கெட்ரா சிரான்கோ. பிரசுரிக்கும் குழுவிற்கு ஓர் உதவியாளராகப் பணியாற்றும் அலெக்ஸ் ரைன்மியூலர், கனடாவில் 15 வயதிலேயே தான் பயனியர் ஊழியம் செய்தபோது, அதுவும் பெரும்பாலும் தனியாகச் செய்தபோது, எப்படிச் சத்தியத்தைத் தனதாக்கினார் என்பதை விளக்கினார். பெத்தேலில் அவருக்குப் பெரும் தூண்டுகோலாக இருந்தவர்கள் யார் எனக் கேட்கப்பட்டபோது அவர் மூன்று உண்மையுள்ள சகோதரர்களைக் குறிப்பிட்டார்; ஆன்மீக ரீதியில் வளர அவர்கள் ஒவ்வொருவரும் தனக்கு எப்படி உதவினார்கள் என்பதை விளக்கினார். அவரது மனைவி சாரா, சீனாவில் விசுவாசத்திற்காகப் பல வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்ட தன் தோழியைப் பற்றிச் சொன்னார். ஜெபம் செய்வதன் மூலம் யெகோவாமீது சார்ந்திருக்கக் கற்றுக்கொண்டதாக சாரா சொன்னார்.
போதனாக் குழுவுக்கு ஓர் உதவியாளராக இருக்கும் டேவிட் ஷேஃபர், தன் தாய் காட்டிய உறுதியான விசுவாசத்தைப் புகழ்ந்து பேசினார்; அதோடு, மரம் வெட்டுகிற வேலை செய்த சகோதரர்கள் இளவயதில் துணைப் பயனியர் செய்ய தனக்கு உதவியதாகக் குறிப்பிட்டார். அவரது மனைவி க்ரிஸ்டா, பெத்தேல் குடும்பத்தைச் சேர்ந்த மூத்த சகோதர சகோதரிகள் தனக்கு உதவியதைப் பற்றி ஆசை ஆசையாகப் பேசினார்; இவர்கள் இயேசு சொன்னபடி ‘மிகச் சிறிய காரியங்களில் உண்மையுள்ளவர்களாக’ இருந்ததாய்க் குறிப்பிட்டார்.—லூக். 16:10.
எழுத்துக் குழுவுக்கு ஓர் உதவியாளராக இருக்கும் ராபர்ட் சிரான்கோ தன்னுடைய இரண்டு தாத்தா பாட்டிகளைப் பற்றியும் குறிப்பிட்டார்; அவர்கள் ஹங்கேரியிலிருந்து வந்து குடியேறியவர்கள், பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் என்று சொன்னார். இளவயதில், அதாவது 1950-களில், அவர் பெரிய மாநாடுகளுக்குச் சென்றபோது யெகோவாவின் அமைப்பு தன்னுடைய சபையைவிட பல மடங்கு பெரியது என்பது புரிந்ததாம்; அதனால் அது மறக்க முடியாத அனுபவமாக ஆனதாம். அவரது மனைவி கெட்ரா, விசுவாசதுரோகமும் மற்ற பிரச்சினைகளும் நிறைந்திருந்த ஒரு சபையில் பயனியர் ஊழியம் செய்தபோது தான் எப்படிப் பற்றுறுதியுடன் இருக்கக் கற்றுக்கொண்டார் என்பதை விளக்கினார். அவர் உண்மையோடு நிலைத்திருந்தார்; இறுதியில், வேறொரு சபையில் விசேஷப் பயனியர் ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டார். அங்கு நிலவிய ஒற்றுமை அவர் நெஞ்சைத் தொட்டதாகக் குறிப்பிட்டார்.
அடுத்ததாக, எத்தியோப்பியாவைப் பற்றி மான்ஃப்ரேட் டோனாக் ஓர் அறிக்கையை அளித்தார். இது பைபிள் காலங்களில் இருந்த ஒரு நாடு. இப்போது அங்கு 9,000-க்கும் அதிகமான பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் அடிஸ் அபாபா என்ற தலைநகரில் அல்லது அதற்கு அருகில் வசிக்கிறார்கள். ஆகவே, ஒதுக்குப்புற பகுதிகளில் அதிக ஊழியம் செய்ய வேண்டியிருக்கிறது. அந்தப் பகுதிகளில் பிரசங்கிக்க, மற்ற நாடுகளில் வசிக்கும் எத்தியோப்பிய சாட்சிகள் அழைக்கப்பட்டார்கள். அநேகர் வந்து, உள்ளூர் சாட்சிகளை உற்சாகப்படுத்தினார்கள், ஆர்வமுள்ளோரையும் கண்டுபிடித்தார்கள்.
ரஷ்யாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய சட்டப்பூர்வ போராட்டங்களைப் பற்றிய ஒரு தொடர்பேச்சு சிறப்பம்சமாக இருந்தது. ரஷ்யாவில், முக்கியமாக மாஸ்கோவில், யெகோவாவின் சாட்சிகள் துன்புறுத்தப்பட்டிருப்பதைப் பற்றிய விவரத்தை ரஷ்யாவின் கிளை அலுவலகக் குழுவைச் சேர்ந்த சகோதரர் ஆலிஸ் பர்க்டால் அளித்தார். அமெரிக்க கிளை அலுவலகத்திலுள்ள சட்ட இலாகாவைச் சேர்ந்த சகோதரர் ஃபிலிப் ப்ரம்லி சமீப மாதங்களில் நடந்த பூரிப்பளிக்கும் முன்னேற்றங்களைத் தெரிவித்தார்; மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் (ECHR) சாட்சிகளுக்கு எதிரான ஒன்பது குற்றச்சாட்டுகளை விசாரித்தது. அந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்பதை ஒருமனதாய் ஒப்புக்கொண்டது; அதுவும் எதிர்க்கட்சியின் சில வாதங்கள் ஏன் தவறானவை என விலாவாரியாக விளக்கியது. முடிவை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றாலும், இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்ற நாடுகளின் வழக்குகளுக்கு முன்னோடியாக அமையலாம் எனச் சகோதரர் ப்ரம்லி குறிப்பிட்டார்.
இந்தச் சந்தோஷமான செய்திக்குப் பிறகு, பிரான்சு அரசாங்கத்திற்கும் யெகோவாவின் சாட்சிகளுக்கும் இடையில் நீண்ட காலமாக நடக்கும் வரி சம்பந்தப்பட்ட வழக்கை விசாரிக்க ECHR ஒத்துக்கொண்டிருப்பதாகச் சகோதரர் லெட் அறிவித்தார். பெருமதிப்பைப் பெற்ற இந்த நீதிமன்றம், பதிவு செய்யப்படும் வழக்குகளில் வெகு சிலவற்றையே விசாரிக்க ஒத்துக்கொள்ளும். இதுவரை, யெகோவாவின் சாட்சிகள் சம்பந்தப்பட்ட 39 வழக்குகளை ECHR பரிசீலித்திருக்கிறது; அவற்றில் 37 வழக்குகளில் நமக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தற்போதைய வழக்கு விசாரணையிலும் நல்ல தீர்ப்பு கிடைக்க வேண்டுமென யெகோவா தேவனிடம் ஜெபம் செய்யுமாறு கடவுளுடைய மக்கள் அனைவரையும் சகோதரர் லெட் கேட்டுக்கொண்டார்.
இறுதியான அறிக்கையைச் சகோதரர் ரிச்சர்ட் மார்லன் அளித்தார்; இவர், சபை மூப்பர்களுக்கான பள்ளியின் ஒரு போதகர். பள்ளியைப் பற்றியும் அதில் கலந்துகொண்ட மூப்பர்கள் தெரிவித்த பாராட்டுகளைப் பற்றியும் இவர் உற்சாகமாகப் பேசினார்.
ஆளும் குழுவினரின் மற்ற பேச்சுகள்
ஆளும் குழுவைச் சேர்ந்த சகோதரர் கை பியர்ஸ், ‘யெகோவாவின் பெயரில் அடைக்கலம் புகுவீர்’ என்ற 2011-ஆம் ஆண்டிற்கான வருடாந்தர வசனத்தின்பேரில் நெஞ்சார்ந்த பேச்சைக் கொடுத்தார். (செப். 3:12, NW) நம் காலம், யெகோவாவின் மக்களுக்குப் பல விதங்களில் மகிழ்ச்சிக்குரிய காலமாக இருந்தாலும், பொறுப்புமிக்க முக்கியமான காலமாகவும் இருப்பதாகக் குறிப்பிட்டார். யெகோவாவின் மகா நாள் நெருங்கிவிட்டது; என்றாலும் மக்கள், உலக நடப்புகளுக்குக் கண்களை மூடிக்கொள்கிறார்கள்; பொய் மதம், அரசியல் அமைப்புகள், பணம் பொருள் போன்றவற்றையே அடைக்கலமாக நினைக்கிறார்கள். ஆனால், உண்மையான அடைக்கலத்தைக் கண்டடைய நாம் யெகோவாவின் பெயரை நோக்கிக் கூப்பிட வேண்டும்; அப்படியென்றால், அந்தப் பெயரைத் தாங்கியிருப்பவரை அறிந்துகொண்டு, அவருக்கு ஆழ்ந்த மரியாதை காட்டி, அவர்மீது நம்பிக்கை வைத்து, அவரை மனதார நேசிக்க வேண்டும்.
அடுத்ததாக, ஆளும் குழுவைச் சேர்ந்த சகோதரர் டேவிட் ஸ்ப்ளேன், “நீங்கள் கடவுளோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்கிறீர்களா?” என்ற தலைப்பில் சிந்தனையைத் தூண்டும் ஊக்கமான பேச்சைக் கொடுத்தார். கடவுள் ஓய்வெடுக்கிறார் என்பதற்காக ஒன்றும் செய்யாமல் இருக்கிறார் என அர்த்தமாகாது. ஏனென்றால், பூமிக்குரிய படைப்புகளுக்கான தமது நோக்கத்தைச் சிறப்பாக நிறைவேற்றி முடிப்பதற்காக அவரும் அவரது மகனும் அந்த அடையாளப்பூர்வ ஓய்வுநாள் முழுவதும் ‘வேலை செய்து வந்திருக்கிறார்கள்.’ (யோவா. 5:17) அப்படியென்றால், நாம் எவ்வாறு கடவுளோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்கலாம்? அதற்கு ஒரு வழி, பாவங்களையும் சுயநீதியை வெளிக்காட்டும் செயல்களையும் தவிர்ப்பதாகும். நாம் விசுவாசம் வைப்பதோடு கடவுளுடைய நோக்கத்தை மனதில் வைத்து வாழ வேண்டும்; அந்த நோக்கம் நிறைவேறுவதற்கு நம் பங்கில் முடிந்தளவு பங்களிக்க வேண்டும். சில சமயங்களில் இது ஒரு பெரிய சவாலாக இருக்கலாம்; ஆனால், யெகோவாவின் அமைப்பு தருகிற புத்திமதியை ஏற்றுக்கொண்டு அதன் அறிவுரைகளுக்கு ஏற்ப நடக்க வேண்டும். கடவுளோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க முழுமுயற்சி எடுக்கும்படி சகோதரர் ஸ்ப்ளேன் எல்லாரையும் கேட்டுக்கொண்டார்.
ஆளும் குழுவைச் சேர்ந்த சகோதரர் ஆன்டனி மாரிஸ் இறுதிப் பேச்சைக் கொடுத்தார்; அதன் தலைப்பு, “எதற்காகக் காத்திருக்கிறோம்?” அவசர உணர்வோடும் ஒரு தந்தையைப் போல் கனிவோடும் அவர் பேசினார். நம் காலத்தில் நிறைவேறப்போகிற தீர்க்கதரிசனங்களைப் பற்றி, அதாவது உண்மையுள்ள அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிற சம்பவங்களைப் பற்றி, அவர் நினைப்பூட்டினார். உதாரணமாக, “இதோ! சமாதானம், பாதுகாப்பு!” என அறிவிக்கப்படும் என்றும், பொய் மதங்கள் அழிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். (1 தெ. 5:2, 3; வெளி. 17:15-17) இந்தத் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றமாக இல்லாத சாதாரண சம்பவங்களைச் செய்திகளில் பார்த்துவிட்டு, “அர்மகெதோன் வந்துவிட்டது” என நினைப்பது தவறென அவர் குறிப்பிட்டார். மீகா 7:7-ல் விவரிக்கப்பட்டுள்ளபடி, சந்தோஷத்தோடும் பொறுமையோடும் காத்திருக்கிற மனப்பான்மை நமக்கு வேண்டுமெனக் குறிப்பிட்டார். அதேசமயம், போரின் உச்சக்கட்டத்தில் வீரர்கள் எப்படி ஒருவருக்கொருவர் நெருங்கி வருவார்களோ அப்படியே ஆளும் குழுவினரோடு அனைவரும் நெருங்கி வர வேண்டுமெனச் சொன்னார். “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள்” என்று குறிப்பிட்டார்.—சங். 31:24.
இறுதியில், பூரிப்பளிக்கும் சில அறிவிப்புகள் செய்யப்பட்டன; அவை ஒவ்வொன்றும் ஒரு சரித்திர மைல்கல் ஆகும். ஆளும் குழுவைச் சேர்ந்த சகோதரர் ஜெஃப்ரி ஜாக்சன், ஆங்கிலம் அதிகம் தெரியாதவர்களுக்காக காவற்கோபுர படிப்பு இதழை எளிமையாக்கப்பட்ட ஆங்கிலத்திலும் வெளியிடத் திட்டமிடப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். அதன்பின், அமெரிக்காவில் உள்ள மாவட்டக் கண்காணிகளுக்கும் அவர்களது மனைவிகளுக்கும் மேய்ப்புச் சந்திப்புகள் செய்யப்பட ஆளும் குழு ஏற்பாடு செய்யுமென ஸ்டீஃபன் லெட் அறிவித்தார். பின்பு, ஊழியப் பயிற்சிப் பள்ளி இனி மணமாகாத சகோதரர்களுக்கான பைபிள் பள்ளி என அழைக்கப்படும் என்று அறிவித்தார். கிறிஸ்தவத் தம்பதிகளுக்கான பைபிள் பள்ளி என்ற இன்னொரு பள்ளி ஆரம்பமாகும் என்றும் அறிவித்தார். இந்தப் பள்ளி, யெகோவாவின் அமைப்பில் இன்னும் பிரயோஜனமுள்ளவர்களாக இருக்க தம்பதிகளுக்குப் பயிற்சி அளிக்கும் என்று குறிப்பிட்டார். அதோடு, பயணக் கண்காணிகளுக்கும் அவர்களுடைய மனைவிகளுக்குமான பள்ளி, கிளை அலுவலகக் குழுவினருக்கும் அவர்களுடைய மனைவிகளுக்குமான பள்ளி ஆகியவை இனி பாட்டர்ஸனில் வருடத்திற்கு இரு முறை நடத்தப்படும் என்று குறிப்பிட்டார்; ஏற்கெனவே இப்பள்ளிகளில் கலந்துகொண்டவர்கள் மீண்டும் கலந்துகொள்ள முடியும் என்று விளக்கினார்.
நிகழ்ச்சிநிரலின் முடிவாக, நீண்டகாலம் ஆளும் குழுவினரில் ஒருவராக இருந்த 97 வயது நிரம்பிய சகோதரர் ஜான் ஈ. பார் மனத்தாழ்மையோடும் உள்ளப்பூர்வமாகவும் ஜெபம் செய்தார்.b பின்பு, இது சரித்திரத்தில் முத்திரை பதித்த ஒரு கூட்டம் என்ற உணர்வோடு அனைவரும் விடைபெற்று சென்றார்கள்.
[அடிக்குறிப்புகள்]
a யெகோவாவின் சாட்சிகளுடைய 2011 இயர்புக் (ஆங்கிலம்), பக்கங்கள் 62-63-ஐக் காண்க.
b சகோதரர் பார் டிசம்பர் 4, 2010-ல் தனது பூமிக்குரிய வாழ்வை முடித்தார்.
[பக்கம் 19-ன் சிறுகுறிப்பு]
கூடிவந்திருந்த அனைவரும் பேட்டிகளை ரசித்துக் கேட்டார்கள்
[பக்கம் 20-ன் சிறுகுறிப்பு]
எத்தியோப்பியாவில் நடக்கும் பிரசங்க வேலையை யெகோவா ஆசீர்வதித்திருக்கிறார்