வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
ஊழிய ஆண்டு அறிக்கையில் வெளிவரும் புள்ளிவிவரங்களை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?
ஒவ்வொரு ஆண்டும் இயர்புக்கிலும் பிப்ரவரி மாதத்தின் நம் ராஜ்ய ஊழியத்திலும் வெளியிடப்படும் ஊழிய அறிக்கையை வாசிக்க நாம் ஆவலோடு காத்திருப்போம். உலகெங்கும் பிரசங்கிப்பதிலும் கற்பிப்பதிலும் யெகோவாவின் மக்கள் ஒரு தொகுதியாக என்ன சாதித்திருக்கிறார்கள் என்பதை அறிவது பூரிப்பளிக்கிறது. ஆனால், ஊழிய அறிக்கையை முழுமையாகப் புரிந்துகொள்ள, அதிலுள்ள தலைப்புகளையும் புள்ளிவிவரங்களையும் பற்றிய விளக்கம் தேவை. சில உதாரணங்களைக் கவனியுங்கள்.
ஊழிய ஆண்டு. இது ஓர் ஆண்டின் செப்டம்பர் மாதத்திலிருந்து அடுத்த ஆண்டின் ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கும். கடந்த ஊழிய ஆண்டின் அறிக்கைதான் வெளியிடப்படும். ஆகவே, 2011 பிப்ரவரி நம் ராஜ்ய ஊழியத்தில் செப்டம்பர் 1, 2009 முதல் ஆகஸ்ட் 31, 2010 வரை நீடித்த 2010-ஆம் ஊழிய ஆண்டிற்கான அறிக்கை உள்ளது.
பிரஸ்தாபிகளின் உச்சநிலையும் சராசரியும். ஞானஸ்நானம் பெற்ற யெகோவாவின் சாட்சிகள் மட்டுமல்லாமல் பிரசங்க வேலையில் ஈடுபடுகிற ஞானஸ்நானம் பெறாதவர்களும் “பிரஸ்தாபிகளாக” கருதப்படுகிறார்கள். “பிரஸ்தாபிகளின் உச்சநிலை” என்பது, அந்த ஊழிய ஆண்டின் எந்த மாதத்தில் அதிகப்படியான பிரஸ்தாபிகள் அறிக்கை செய்தார்கள் என்பதை வைத்துக் கணக்கிடப்படுகிறது. கடந்த மாதத்தில் கால தாமதமாகச் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளும் இதில் சேர்க்கப்படலாம். என்றாலும், ஊழியம் செய்தும் அதை அறிக்கை செய்ய மறந்துவிட்ட பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை இந்தப் புள்ளிவிவரத்தில் சேர்க்கப்படாது. ஆகவே, ஒவ்வொரு பிரஸ்தாபியும் அந்தந்த மாதம் தாமதிக்காமல் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். “பிரஸ்தாபிகளின் சராசரி” என்பது எல்லா மாதங்களுக்கான மொத்த அறிக்கைகளையும் 12-ஆல் வகுக்கும்போது கிடைக்கும் எண்ணிக்கையாகும்.
மொத்த மணிநேரம். 2011-ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் வெளியிடப்பட்டபடி, யெகோவாவின் சாட்சிகள் 160 கோடிக்கும் அதிகமான மணிநேரத்தை ஊழியத்தில் செலவிட்டார்கள். என்றாலும், இந்த எண்ணிக்கை வணக்கத்திற்காக நாம் செலவிடுகிற எல்லா நேரத்தையும் குறிப்பதில்லை; ஏனென்றால், மேய்ப்பு சந்திப்புகள், கூட்டங்கள், தனிப்பட்ட பைபிள் படிப்பு, தியானம் போன்றவற்றிற்கு நாம் தவறாமல் செலவிடும் நேரம் இதில் சேர்க்கப்படுவதில்லை.
செலவிடப்பட்ட தொகை. 2010-ஆம் ஊழிய ஆண்டில் விசேஷ பயனியர்கள், மிஷனரிகள், பயணக் கண்காணிகள் ஆகியோருக்கு ஊழியத்தில் உதவ யெகோவாவின் சாட்சிகள் 155 மில்லியன் டாலருக்கும் அதிகமாகச் செலவிட்டார்கள். என்றாலும், பைபிள் பிரசுரங்களை அச்சிடுவதற்காகச் செலவிடப்படுகிற தொகை இந்தக் கணக்கில் சேர்க்கப்படுவதில்லை; அதேபோல், உலகெங்கும் உள்ள கிளை அலுவலகங்களில் சேவை செய்யும் 20,000-க்கும் அதிகமான பெத்தேல் வாலண்டியர்களுக்காகச் செலவிடப்படும் தொகையும் இந்தக் கணக்கில் சேர்க்கப்படுவதில்லை.
நினைவு ஆசரிப்பில் பங்கெடுத்தவர்கள். உலகெங்கும் நினைவு ஆசரிப்புச் சின்னங்களில் பங்கெடுக்கும் ஞானஸ்நானம் பெற்ற சாட்சிகளுடைய எண்ணிக்கையை இது குறிக்கிறது. இது, பூமியிலுள்ள பரலோக நம்பிக்கையுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கையைக் குறிக்கிறதா? இல்லை. கடந்தகால மத நம்பிக்கைகள், மனநலக் குறைபாடு, உணர்ச்சிப்பூர்வ கோளாறு போன்ற பல காரணங்களால் சிலர் தங்களுக்குப் பரலோக நம்பிக்கை இருப்பதாய்த் தவறாக நினைத்துக்கொள்ளலாம். ஆகவே, பரலோக நம்பிக்கை உள்ளவர்களில் எத்தனை பேர் இன்னும் பூமியில் இருக்கிறார்கள் என்பதை நம்மால் திட்டவட்டமாகத் தெரிந்துகொள்ளவே முடியாது; அதைத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. ஆளும் குழுவினர்கூட, நினைவு ஆசரிப்புச் சின்னங்களில் பங்கெடுப்போரின் பெயர்ப் பட்டியலை வைத்துக்கொள்வதில்லை.a
மிகுந்த உபத்திரவத்தின் கொடிய காற்று வீசும்போது ‘கடவுளுடைய ஊழியர்களான’ பரலோக நம்பிக்கையுள்ளவர்களில் சிலர் பூமியில் இருப்பார்கள் என்பது மட்டும் நமக்குத் தெரியும். (வெளி. 7:1-3) அதுவரை, சரித்திரம் படைத்துவரும் பிரமாண்டமான பிரசங்க வேலையையும் கற்பிக்கும் வேலையையும் பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் தலைமைதாங்கி நடத்துவார்கள்; இந்த வேலைகளைப் பற்றிய விவரமான புள்ளிவிவரங்கள்தான் ஊழிய ஆண்டு அறிக்கையில் வெளியிடப்படுகின்றன.
[அடிக்குறிப்பு]
a ஜூன் 15, 2009 காவற்கோபுரம், பக்கம் 24-ல் வெளிவந்த “உண்மையுள்ள நிர்வாகியும் அதன் ஆளும் குழுவும்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.