யெகோவா “சமாதானத்தை அருளும் கடவுள்”
“சமாதானத்தை அருளும் கடவுள் உங்கள் அனைவரோடும் இருப்பாராக.”—ரோ. 15:33.
1, 2. ஆதியாகமம் 32, 33 அதிகாரங்களில் என்ன சம்பவத்தைப் பற்றி வாசிக்கிறோம், முடிவில் என்ன நடந்தது?
யோர்தான் நதியின் கிழக்கே, யாப்போக்கு நதிப் பள்ளத்தாக்குக்கு அருகில் அமைந்திருந்த பெனியேல் நகருக்குப் பக்கத்தில் இரண்டு சகோதரர்கள் சந்திக்கவிருந்தார்கள். அவர்கள்தான் ஏசாவும் யாக்கோபும். பல வருடங்களுக்குப் பிறகு அவர்கள் சந்திக்கவிருந்தார்கள். ஏசா தன்னுடைய தலைமகன் உரிமையை யாக்கோபுக்கு விற்று 20 வருடங்கள் ஆகியிருந்தன. யாக்கோபு வீடு திரும்பிக் கொண்டிருந்ததை ஏசா கேள்விப்பட்டபோது அவரைச் சந்திக்க 400 ஆட்களுடன் சென்றார். யாக்கோபோ இதை அறிந்து பயந்துபோனார். ஏசா இன்னமும் கோபவெறியோடு இருப்பதால் தன்னைக் கொல்ல வருவதாக நினைத்தார். அதனால் ஏசாவுக்கு மிருகங்களை அன்பளிப்பாகக் கொடுத்தனுப்பினார். ஒவ்வொரு முறையும் அவரது ஆட்கள் மிருகங்களை எடுத்துச் சென்றபோது அவை யாக்கோபு அனுப்பிய அன்பளிப்புகள் என்று ஏசாவிடம் சொன்னார்கள். யாக்கோபு 550-க்கும் அதிகமான மிருகங்களை அனுப்பினார்.
2 கடைசியில் இருவரும் சந்தித்தபோது என்ன நடந்தது? யாக்கோபு தைரியத்தையும் மனத்தாழ்மையையும் காட்டினார். ஏழு முறை குனிந்து வணங்கியபடியே ஏசாவிடம் நடந்து சென்றார். என்றாலும், அதற்கு முன்பே யாக்கோபு மிக முக்கியமான ஒன்றைச் செய்திருந்தார். ஆம், ஏசாவிடமிருந்து தன்னைக் காப்பாற்றும்படி யெகோவாவிடம் ஜெபம் செய்திருந்தார். யெகோவா அவருக்குப் பதில் அளித்தார். “ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்” என்று பைபிள் சொல்கிறது.—ஆதி. 32:11-20; 33:1-4.
3. யாக்கோபு, ஏசா பற்றிய பதிவிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
3 சபையில் மற்றவர்களோடு பிரச்சினைகள் எழுந்தால் அவற்றைச் சரிசெய்ய நாம் முழுமுயற்சி எடுக்க வேண்டும் என்பதை இந்தப் பதிவிலிருந்து கற்றுக்கொள்கிறோம். அப்படிச் செய்யாவிட்டால் சபையின் சமாதானமும் ஒற்றுமையும் குலைந்துவிடும். யாக்கோபு எந்தத் தவறும் செய்திருக்கவில்லை. அதனால் ஏசாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஏசாதான் தன்னுடைய தலைமகன் உரிமையை மதிக்காமல் வெறும் ஒரு வேளை உணவுக்காக அதை யாக்கோபுக்கு விற்றிருந்தார். இருந்தாலும், ஏசாவுடன் சமாதானமாவதற்கு யாக்கோபு தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்தார். (ஆதி. 25:31-34; எபி. 12:16) யாக்கோபின் உதாரணம், கிறிஸ்தவச் சகோதர சகோதரிகளுடன் சமாதானமாக இருப்பதற்கு நாம் எந்தளவு முயற்சி எடுக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது. இதைச் செய்ய யெகோவாவிடம் உதவி கேட்கும்போது அவர் நமக்கு உதவுகிறார் என்பதையும் காட்டுகிறது. பைபிளிலுள்ள இன்னும் பல உதாரணங்கள், மற்றவர்களோடு எப்படிச் சமாதானமாக இருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன. அவற்றில் சிலவற்றை இப்போது கவனிக்கலாம்.
தலைசிறந்த உதாரணத்திலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்
4. மனிதர்களைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுவிக்க யெகோவா என்ன செய்தார்?
4 சமாதானம் பண்ணுவதில் தலைசிறந்த உதாரணமாகத் திகழ்பவர், ‘சமாதானத்தை அருளும் கடவுளாகிய’ யெகோவா தேவனே. (ரோ. 15:33) அவருடன் நாம் சமாதான உறவை அனுபவிக்க அவர் என்னவெல்லாம் செய்தார் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். நாம் ஆதாம் ஏவாளின் சந்ததியில் வந்த பாவிகள் என்பதால், ‘பாவத்தின் சம்பளமாகிய’ மரணத்தைப் பெறுவது நியாயமானது. (ரோ. 6:23) இருந்தாலும், யெகோவா நம்மீது அளவில்லா அன்பு வைத்திருப்பதால் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நம்மை விடுவிக்க விரும்பினார். அதனால், தமது அன்பு மகனான இயேசுவைப் பரலோகத்திலிருந்து அனுப்பினார். இயேசு பரிபூரண மனிதனாகப் பிறந்து, நம் பாவங்களுக்காக இறந்தார். அவர் மனப்பூர்வமாய் யெகோவாவின் சித்தத்தைச் செய்து நமக்காகத் தமது உயிரைத் தியாகம் செய்தார். (யோவா. 10:17, 18) அதன்பின் இயேசுவை யெகோவா பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பினார். அங்குதான் இயேசு தமது பலியின் மதிப்பை யெகோவாவிடம் சமர்ப்பித்தார். அவரது மீட்புப்பலி, பாவங்களிலிருந்து மனந்திரும்பும் அனைவரையும் நித்திய அழிவிலிருந்து காப்பாற்றுகிறது.—எபிரெயர் 9:14, 24-ஐ வாசியுங்கள்.
5, 6. மனிதர்கள் கடவுளோடு சமாதானமாவதற்கு இயேசுவின் பலி எவ்வாறு உதவுகிறது?
5 பாவத்தின் காரணமாக மனிதர்கள் கடவுளுடைய எதிரிகளாக ஆனார்கள். அப்படியென்றால், இயேசுவின் பலி அவர்களுக்கு எப்படி உதவுகிறது? “நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” என்று ஏசாயா 53:5 சொல்கிறது. ஆகவே, இயேசுவின் பலி கடவுளுடன் சமாதான உறவை அனுபவிக்கக் கீழ்ப்படிதலுள்ள மனிதர்களுக்கு உதவுகிறது. “அந்த அன்பு மகன் தமது இரத்தத்தை மீட்புவிலையாகக் கொடுத்ததால் நமக்கு விடுதலை கிடைத்திருக்கிறது; ஆம், நம்முடைய மீறுதல்களுக்கு மன்னிப்புக் கிடைத்திருக்கிறது” என்றும் பைபிள் சொல்கிறது.—எபே. 1:7.
6 “எல்லாவற்றையும் அவருக்குள் [கிறிஸ்துவுக்குள்] நிறைவாகக் குடிகொண்டிருக்கும்படி செய்வது கடவுளுக்குப் பிரியமானதாக இருந்தது” என பைபிள் குறிப்பிடுகிறது. ஏனென்றால், கடவுளுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதில் முக்கிய பங்கு வகிப்பது கிறிஸ்துவே. கடவுளுடைய நோக்கம் என்ன? இயேசுவின் ‘இரத்தத்தினால் சமாதானத்தை உண்டாக்கி, பூமியிலும் பரலோகத்திலும் உள்ள அனைத்தையும் அவர் மூலமாகத் தம்முடன் சமரசமாக்குவதே’ அவரது நோக்கம். ‘பூமியிலும் பரலோகத்திலும் உள்ள அனைத்தும்’ என்பது யாரையெல்லாம் குறிக்கிறது?—கொலோசெயர் 1:19, 20-ஐ வாசியுங்கள்.
7. ‘பூமியிலும் பரலோகத்திலும் உள்ள அனைத்தும்’ என்பது யாரையெல்லாம் குறிக்கிறது?
7 பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் மீட்புப் பலியின் அடிப்படையில் ‘நீதிமான்களாக அங்கீகரிக்கப்பட்டு’ கடவுளுடைய மகன்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்; இவர்கள் ‘கடவுளோடு சமாதானத்தை அனுபவிக்கிறார்கள்.’ (ரோமர் 5:1-ஐ வாசியுங்கள்.) ‘பரலோகத்தில் உள்ள அனைத்தும்’ என்பது இவர்களையே குறிக்கிறது; ஏனென்றால், இயேசு கிறிஸ்துவுடன் வாழ்வதற்காக இவர்களைக் கடவுள் பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்புகிறார். அங்கு இவர்கள் குருமார்களாகச் சேவிப்பார்கள், “ராஜாக்களாகப் பூமியின் மீது ஆட்சி செய்வார்கள்.” (வெளி. 5:10) ‘பூமியில் உள்ள அனைத்தும்’ என்பது பாவங்களிலிருந்து மனந்திரும்பி பூமியில் என்றென்றும் வாழப்போகிற மனிதர்களைக் குறிக்கிறது.—சங். 37:29.
8. சபையில் பிரச்சினைகள் தலைதூக்கும்போது யெகோவாவின் உதாரணம் உங்களுக்கு எப்படி உதவும்?
8 யெகோவா தந்த மீட்புப் பலிக்காக பவுல் உள்ளப்பூர்வ நன்றியைத் தெரிவித்தார்; “குற்றங்களினால் நாம் இறந்த நிலையிலிருந்தபோதிலும், மகா இரக்கமுடைய கடவுள் . . . கிறிஸ்துவோடு ஒன்றுபட்டிருக்கிற நம்மை உயிர்ப்பித்திருக்கிறார்—அவருடைய அளவற்ற கருணையினால் உங்களுக்கு மீட்பளித்திருக்கிறார்” என்று எபேசுவிலிருந்த பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு அவர் எழுதினார். (எபே. 2:4, 5) நாம் பரலோகத்தில் வாழப்போகிறவர்களாக இருந்தாலும் சரி பூமியில் வாழப்போகிறவர்களாக இருந்தாலும் சரி, கடவுளுடைய இரக்கத்திற்காகவும் அளவற்ற கருணைக்காகவும் மிகுந்த நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். மனிதர்கள் தம்முடன் சமாதான உறவை அனுபவிக்க யெகோவா என்னவெல்லாம் செய்தார் என்பதை நினைக்க நினைக்க நம் உள்ளத்தில் நன்றியுணர்வு பெருக்கெடுக்கிறது, அல்லவா? சில சமயங்களில் சபையின் ஒற்றுமையைக் குலைக்கும் பிரச்சினைகள் தலைதூக்கலாம். அப்போது, நாம் யெகோவாவின் உதாரணத்தைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்து, நம் சகோதர சகோதரிகளுடன் உள்ள சமாதானத்தைக் கட்டிக்காக்க வேண்டும்.
ஆபிரகாம் மற்றும் ஈசாக்கின் உதாரணத்திலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்
9, 10. ஆபிரகாம் மற்றவர்களோடு சமாதானமாக இருக்க விரும்பியதை எப்படிக் காட்டினார்?
9 ஆபிரகாமைப் பற்றி பைபிள் இவ்வாறு குறிப்பிடுகிறது: “‘ஆபிரகாம் யெகோவாமீது விசுவாசம் வைத்ததால் நீதிமானாக எண்ணப்பட்டார்’ . . . அவர் ‘யெகோவாவின் நண்பர்’ என்று அழைக்கப்பட்டார்.” (யாக். 2:23) ஆபிரகாம் யெகோவாமீது விசுவாசத்தைக் காட்டிய ஒரு வழி, மற்றவர்களோடு சமாதானமாக இருந்ததாகும். உதாரணத்திற்கு, ஆபிரகாமுடைய மந்தையின் மேய்ப்பருக்கும் அவரது அண்ணன் மகன் லோத்துவுடைய மந்தையின் மேய்ப்பருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. (ஆதி. 12:5; 13:7) அந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஆபிரகாமும் லோத்துவும் தேசத்தின் வெவ்வேறு பகுதிகளுக்குப் பிரிந்து போகத் தீர்மானித்தார்கள். அந்தக் கஷ்டமான சூழ்நிலையில் ஆபிரகாம் என்ன செய்தாரெனக் கவனியுங்கள். தான் வயதில் மூத்தவராக இருந்ததாலும் யெகோவாவின் நண்பராக இருந்ததாலும் தானே முடிவெடுக்க வேண்டுமென அவர் நினைக்கவில்லை. மாறாக, தன்னுடைய அண்ணன் மகனுடன் சமாதானமாய் இருக்கவே விரும்பினார்.
10 ஆபிரகாம் லோத்துவிடம், “எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர்” என்று சொன்னார். அதோடு, “இந்தத் தேசமெல்லாம் உனக்குமுன் இருக்கிறது அல்லவா? நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம்; நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன்” என்றார். லோத்து, தேசத்தின் மிக வளமான பகுதியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். அதற்கு ஆபிரகாம் சம்மதித்தார், லோத்துமீது கோபப்படவில்லை. (ஆதி. 13:8-11) இது நமக்கு எப்படித் தெரியும்? பிற்பாடு லோத்துவை எதிரிகள் பிடித்துச் சென்றபோது ஆபிரகாம் விரைந்து போய் அவரைக் காப்பாற்றியதிலிருந்து தெரிகிறது.—ஆதி. 14:14-16.
11. சுற்றுவட்டாரத்தில் இருந்த பெலிஸ்தர்களோடு ஆபிரகாம் எப்படிச் சமாதானத்தைக் காத்துக்கொண்டார்?
11 கானான் தேசத்தின் சுற்றுவட்டாரத்தில் இருந்த பெலிஸ்தர்களோடு ஆபிரகாம் எப்படிச் சமாதானத்தைக் காத்துக்கொண்டார் என்பதைக் கவனியுங்கள். பெயெர்செபா என்ற இடத்தில் ஆபிரகாமின் வேலைக்காரர்கள் வெட்டிய கிணற்றை பெலிஸ்தர்கள் ‘கைவசப்படுத்தியிருந்தார்கள்.’ அப்போது, ஆபிரகாம் அமைதியாக இருந்துவிடத் தீர்மானித்தார். பிற்பாடு, பெலிஸ்தர்களின் ராஜா ஆபிரகாமுடன் சமாதான ஒப்பந்தம் செய்ய வந்தார். ராஜாவின் வம்சத்தாரிடம் அன்போடு நடந்துகொள்வதாக ஆபிரகாம் வாக்குறுதி அளித்தார். அதன் பிறகுதான், கைவசப்படுத்தப்பட்ட கிணற்றைப் பற்றி ஆபிரகாம் அந்த ராஜாவிடம் சொன்னார். தன் மக்கள் செய்ததைக் கேட்ட ராஜா அதிர்ச்சியடைந்து கிணற்றை மீண்டும் ஆபிரகாமிடம் ஒப்படைத்தார். அந்தத் தேசத்தில் அந்நியராக இருந்த ஆபிரகாம் அதன் பின்னும் எல்லாரோடும் சமாதானமாக வாழ்ந்து வந்தார்.—ஆதி. 21:22-31, 34.
12, 13. (அ) ஈசாக்கு எவ்வாறு தன் தகப்பனைப் போலவே நடந்துகொண்டார்? (ஆ) சமாதானத்தை விரும்பி ஈசாக்கு எடுத்த முயற்சிகளை யெகோவா எப்படி ஆசீர்வதித்தார்?
12 ஆபிரகாமின் மகனாகிய ஈசாக்கு தன் தகப்பனைப் போலவே சமாதானத்தை விரும்பினார். அவர் பெலிஸ்தர்களை நடத்திய விதத்திலிருந்து இது தெரிகிறது. தேசத்தில் பஞ்சம் ஏற்பட்டபோது ஈசாக்கு தன் குடும்பத்தாரோடு சேர்ந்து, வறண்ட தென்தேசத்திலிருந்த லகாய்ரோயீ என்ற இடத்தைவிட்டு பெலிஸ்தர்களுக்குச் சொந்தமான கேரார் என்ற வளமிக்க பிராந்தியத்திற்குக் குடிமாறிப் போனார். அங்கே யெகோவாவின் ஆசீர்வாதத்தால் ஈசாக்கின் பயிர்கள் அமோக விளைச்சலைத் தந்தன, மந்தைகள் பல மடங்கு பெருகின. அதைக் கண்ட பெலிஸ்தர்கள் பொறாமையால் பொங்கினார்கள். ஆபிரகாமைப் போலவே ஈசாக்கும் செல்வச்செழிப்பைப் பெறக் கூடாது என்று நினைத்து, அப்பகுதியில் ஆபிரகாமின் வேலைக்காரர்கள் வெட்டிய கிணற்றை மூடினார்கள். இறுதியாக, பெலிஸ்தர்களின் ராஜா ஈசாக்கிடம், ‘நீ எங்களை விட்டுப் போய்விடு’ என்றார். சமாதானத்தை விரும்பிய ஈசாக்கு அதற்குச் சம்மதித்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.—ஆதி. 24:62; 26:1, 12-17.
13 ஈசாக்கும் அவரது குடும்பத்தாரும் குடிமாறிச் சென்ற பிறகு அவரது மேய்ப்பர்கள் இன்னொரு கிணற்றை வெட்டினார்கள். அந்தத் தண்ணீர் தங்களுடையதெனச் சொல்லி பெலிஸ்தர்கள் வாக்குவாதம் செய்தார்கள். ஆனால், ஈசாக்கு தன் தகப்பனான ஆபிரகாமைப் போலவே கிணற்றிற்காகச் சண்டை போடவில்லை. மாறாக, மறுபடியும் இன்னொரு கிணற்றை வெட்டும்படி தன் ஆட்களிடம் சொன்னார். அந்தக் கிணற்றையும் பெலிஸ்தர்கள் உரிமைகொண்டாடினார்கள். இம்முறையும் ஈசாக்கு சமாதானத்தை விரும்பி, தன்னுடன் இருந்த எல்லாரோடும் சேர்ந்து வேறொரு இடத்திற்குக் குடிமாறிப் போனார். அங்கு தனது வேலைக்காரர்கள் வெட்டிய புதிய கிணற்றிற்கு ரெகொபோத் எனப் பெயரிட்டார். காலப்போக்கில், வளமிக்க பகுதியான பெயெர்செபாவுக்கு அவர் குடிமாறிப் போனார்; அங்கே யெகோவா அவரை ஆசீர்வதித்து இவ்வாறு சொன்னார்: “பயப்படாதே, நான் உன்னோடேகூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன்.”—ஆதி. 26:17-25.
14. பெலிஸ்தர்களின் ராஜா ஈசாக்குடன் ஒப்பந்தம் செய்ய வந்தபோது, அவருடன் சமாதானமாக இருக்க விரும்பியதை ஈசாக்கு எப்படிக் காட்டினார்?
14 ஈசாக்கு தன்னுடைய வேலைக்காரர்கள் வெட்டிய எல்லா கிணறுகள்மீதும் தனக்கு உரிமை இருந்ததாகச் சொல்லிப் போராட வல்லவராயிருந்தார். அவருக்குத்தான் யெகோவாவின் துணை இருந்ததே. பெலிஸ்தர்களின் ராஜாவும் அதை அறிந்திருந்தார். அவர் தன்னுடைய அதிகாரிகளுடன் சேர்ந்து பெயர்செபாவுக்கு வந்து ஈசாக்குடன் ஓர் ஒப்பந்தம் செய்தபோது, “நிச்சயமாய்க் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம்” எனச் சொன்னார். என்றாலும், ஈசாக்கு சமாதானம் காக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் மீண்டும் குடிமாறிப் போகத் தீர்மானித்தார்; சண்டைபோட அவர் விரும்பவில்லை. ராஜா வந்தபோதுகூட அவருடன் சமாதானமாக இருக்க விரும்பியதையே ஈசாக்கு காட்டினார். ‘அவர்களுக்கு விருந்துபண்ணினார், அவர்கள் புசித்துக் குடித்தார்கள். அதிகாலையில் எழுந்து ஒருவருக்கொருவர் ஆணையிட்டுக்கொண்டார்கள். பின்பு ஈசாக்கு அவர்களை அனுப்பிவிட்டார்; அவர்கள் அவரிடத்திலிருந்து சமாதானத்தோடே போய்விட்டார்கள்’ என்று பைபிள் சொல்கிறது.—ஆதி. 26:26-31.
யோசேப்பின் உதாரணத்திலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்
15. யோசேப்பின் அண்ணன்கள் ஏன் அவரோடு சமாதானமாக இருக்கவில்லை?
15 ஈசாக்கின் மகனாகிய யாக்கோபு சமாதானம் பண்ணுகிறவராக இருந்தார். (ஆதி. 25:27) நாம் முன்பே பார்த்தபடி, யாக்கோபு தன் சகோதரன் ஏசாவுடன் சமாதானமாக இருக்க முழுமுயற்சி எடுத்தார். அவர் தன் தகப்பனாகிய ஈசாக்கின் நல்ல உதாரணத்தைப் பார்த்துக் கற்றிருந்தார். அதுபோல், யாக்கோபின் மகன்கள் அவரது உதாரணத்தைப் பார்த்துக் கற்றுக்கொண்டார்களா? யாக்கோபு தன்னுடைய 12 மகன்களிலேயே யோசேப்பைத்தான் மிகவும் நேசித்தார். ஏனென்றால், யோசேப்பு தன் தகப்பனின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தார், அவருக்கு மதிப்புமரியாதை காட்டினார், அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்துகொண்டார். (ஆதி. 37:2, 14) ஆனால், யோசேப்பின் அண்ணன்கள் அவர்மீது மிகுந்த பொறாமைகொண்டதால் அவரோடு பட்சமாகப் பேசாமல் இருந்தார்கள் என பைபிள் சொல்கிறது; ஆக, அவர்கள் அவரோடு சமாதானமாக இருக்கவில்லை. அவர்கள் யோசேப்பை அடியோடு வெறுத்ததால் ஓர் அடிமையாக விற்றுவிட்டார்கள்; பின்பு, யோசேப்பை ஒரு காட்டு மிருகம் கொன்றுவிட்டதாகத் தங்கள் தகப்பனிடம் பொய் சொன்னார்கள்.—ஆதி. 37:4, 28, 31-33.
16, 17. யோசேப்பு தன் அண்ணன்களை நடத்திய விதம், அவர் சமாதானத்தை விரும்பினார் என்பதை எப்படிக் காட்டுகிறது?
16 யெகோவா யோசேப்பை ஆசீர்வதித்தார். காலப்போக்கில், யோசேப்பு எகிப்திய ராஜாவுக்கு அடுத்த ஸ்தானத்தைப் பெற்றார்; ஆம், எகிப்து தேசத்தின் முக்கிய மந்திரியானார். கானானில் கொடிய பஞ்சம் ஏற்பட்டபோது, யோசேப்பின் அண்ணன்கள் உணவு வாங்குவதற்காக எகிப்துக்கு வந்தார்கள். அங்கு யோசேப்பைப் பார்த்தார்கள்; ஆனால், யோசேப்பு எகிப்திய உடைகளை அணிந்திருந்ததாலோ என்னவோ அவரை அவர்களுக்கு அடையாளம் தெரியவில்லை. (ஆதி. 42:5-7) யோசேப்பு தன் அண்ணன்கள் செய்த துரோகத்திற்காக அவர்களைப் பழிக்குப் பழி வாங்கியிருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யாமல் அவர்களோடு சமாதானமாக இருக்க தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்தார். அவர்கள் மனந்திருந்தியிருந்ததைத் தெரிந்துகொண்டபோது, தான் யார் என்பதைச் சொன்னார். அதோடு, “என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால், நீங்கள் சஞ்சலப்பட வேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்” என்றார். பின்பு தன் அண்ணன்கள் எல்லோரையும் முத்தமிட்டு, அவர்களைக் கட்டிக்கொண்டு அழுதார்.—ஆதி. 45:1, 5, 15.
17 தங்கள் தகப்பனான யாக்கோபு இறந்த பிறகு, யோசேப்பு தங்களைப் பழி வாங்கலாம் என அவரது அண்ணன்கள் நினைத்தார்கள். அதை யோசேப்பிடம் தெரிவித்தபோது அவர் ‘அழுதார்’; பின்பு, “பயப்படாதிருங்கள்; நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன்” என்று சொன்னார். சமாதானத்தை விரும்பிய யோசேப்பு, ‘அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அவர்களோடே பட்சமாய்ப் பேசினார்.’—ஆதி. 50:15-21.
“நம்முடைய அறிவுரைக்காகவே எழுதப்பட்டன”
18, 19. (அ) சமாதானம் பண்ணுகிறவர்களின் உதாரணங்களைச் சிந்தித்ததிலிருந்து நீங்கள் எவ்வாறு பயன் அடைந்திருக்கிறீர்கள்? (ஆ) அடுத்த கட்டுரையில் எதைச் சிந்திப்போம்?
18 “வேதவசனங்களின் மூலம் உண்டாகிற சகிப்புத்தன்மையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கை பெறும்படி, முற்காலத்தில் எழுதப்பட்ட அனைத்தும் நம்முடைய அறிவுரைக்காகவே எழுதப்பட்டன” என்று பவுல் குறிப்பிட்டார். (ரோ. 15:4) யெகோவாவின் தலைசிறந்த உதாரணத்திலிருந்தும், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு ஆகியவர்களின் உதாரணங்களிலிருந்தும் நாம் என்ன கற்றுக்கொண்டோம்?
19 மனிதர்கள் தம்முடன் சமாதான உறவை அனுபவிக்க யெகோவா என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதைச் சிந்திப்பது, மற்றவர்களோடு சமாதானமாக இருக்க முழுமுயற்சி எடுக்கும்படி நம்மைத் தூண்டுகிறது, அல்லவா? ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு ஆகியவர்களின் உதாரணங்கள், பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரியாக இருந்து மற்றவர்களோடு சமாதானம் பண்ண அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க முடியும் என்பதைக் காட்டுகின்றன. அதோடு, சமாதானம் பண்ண எடுக்கப்படும் முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிக்கிறார் என்பதைக் காட்டுகின்றன. ஆக, யெகோவா “சமாதானத்தை அருளும் கடவுள்” என பவுல் குறிப்பிட்டதில் ஆச்சரியமே இல்லை! (ரோமர் 15:33; 16:20-ஐ வாசியுங்கள்.) அடுத்த கட்டுரையில், சமாதானத்தை நாட வேண்டுமென பவுல் ஏன் குறிப்பிட்டார் என்பதையும் நாம் எவ்வாறு சமாதானம் பண்ணுகிறவர்களாக இருக்கலாம் என்பதையும் சிந்திப்போம்.
என்ன கற்றுக்கொண்டீர்கள்?
• ஏசாவைச் சந்தித்த சந்தர்ப்பத்தில் யாக்கோபு எவ்வாறு சமாதானத்தை நாடினார்?
• மனிதர்கள் தம்மோடு சமாதான உறவை அனுபவிக்க யெகோவா என்னவெல்லாம் செய்தார் என்பதை நினைக்கையில் என்ன செய்யத் தூண்டப்படுகிறீர்கள்?
• சமாதானத்தை விரும்பிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு ஆகியவர்களிடமிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?
[பக்கம் 23-ன் படங்கள்]
ஏசாவுடன் சமாதானம் பண்ண முயன்றபோது யாக்கோபு மிக முக்கியமான எதைச் செய்தார்?