ஏன் கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்பட வேண்டும்?
“நீங்களே என் கடவுள். உங்கள் சக்தி அருமையானது; அது என்னை வழிநடத்தட்டும்.” —சங். 143:10, NW.
1. கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி எவ்வாறு ஒரு நபரை வழிநடத்தும் என்பதை விளக்குங்கள்.
நீங்கள் ஒரு வழியைக் கண்டுபிடிக்க எப்போதாவது திசைமானியைப் பயன்படுத்தியிருக்கிறீர்களா? எந்தத் திசையில் செல்ல வேண்டுமெனக் காட்டும் ஒரு சாதாரண கருவிதான் திசைமானி. அதிலுள்ள காந்த ஊசி எப்போதும் வடக்கு திசையைக் காட்டும். கண்ணுக்குத் தெரியாத காந்தச் சக்தியினால்தான் அந்த ஊசி நகருகிறது. நிலத்திலும் கடலிலும் பயணிக்கையில் சரியான வழியைக் கண்டுபிடிக்க மனிதர்கள் இந்தத் திசைமானியைப் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
2, 3. (அ) கோடானு கோடி ஆண்டுகளுக்கு முன்பாக யெகோவா எதைப் பயன்படுத்தினார்? (ஆ) கடவுளுடைய சக்தி இன்று நம் வாழ்வுக்கு வழிகாட்டியாய் இருக்குமென நமக்கு எப்படித் தெரியும்?
2 நம்மை வழிநடத்துவதற்கு அதைவிட மிக முக்கியமான... கண்ணுக்குத் தெரியாத... ஒரு சக்தி இருக்கிறது. அது என்ன? அதைப் பற்றி பைபிளின் ஆரம்ப வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோடானு கோடி ஆண்டுகளுக்கு முன்பாக யெகோவா என்ன செய்தாரென ஆதியாகமப் புத்தகம் சொல்கிறது: “ஆரம்பத்தில் கடவுள் வானங்களையும் பூமியையும் படைத்தார்.” அப்போது அவர் தமது வலிமைமிக்க சக்தியைப் பயன்படுத்தினார்; அதனால்தான், “கடவுளுடைய சக்தி அசைந்தாடிக் கொண்டிருந்தது” என அந்தப் பதிவு குறிப்பிடுகிறது. (ஆதி. 1:1, 2, NW) எல்லாவற்றையும் படைப்பதற்கு யெகோவா அளவில்லாத ஆற்றல்கொண்ட தமது சக்தியைப் பயன்படுத்தியதற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்!—யோபு 33:4; சங். 104:30.
3 நமக்கு உயிரையும் வாழ்வையும் அளித்திருக்கும் கடவுளுடைய சக்தி, வேறு விதங்களிலும் நமக்கு உதவுமா? உதவும் எனக் கடவுளுடைய மகனாகிய இயேசு அறிந்திருந்தார்; ஆகவே, அந்தச் சக்தி ‘சத்தியத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும்’ எனத் தமது சீடர்களிடம் குறிப்பிட்டார். (யோவா. 16:13) அந்தச் சக்தி என்பது உண்மையில் என்ன, நாம் ஏன் அந்தச் சக்தியின் உதவியையும் வழிநடத்துதலையும் பெற வேண்டும்?
கடவுளுடைய சக்தி என்பது உண்மையில் என்ன?
4, 5. (அ) திருத்துவத்தை நம்புகிறவர்கள் கடவுளுடைய சக்தியைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? (ஆ) உண்மையில் கடவுளுடைய சக்தி என்பது என்ன?
4 பெரும்பாலோர் வைத்திருக்கும் பைபிள்கள் கடவுளுடைய சக்தியை “பரிசுத்த ஆவி” என மொழிபெயர்த்திருக்கின்றன. ஆகவே, அது பிதாவாகிய கடவுளுக்குச் சமமான ஓர் ஆவி ஆள் என்று திருத்துவத்தை நம்புகிறவர்கள் தவறாக நினைக்கிறார்கள். (1 கொ. 8:6) ஆனால், திருத்துவக் கோட்பாடு பைபிள் போதனைக்கு முரணானது என்பதில் சந்தேகமே இல்லை.
5 அப்படியென்றால், கடவுளுடைய சக்தி என்பது உண்மையில் என்ன? பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன் (ஆங்கிலம்) பைபிளில் ஆதியாகமம் 1:2-ன் அடிக்குறிப்பு இவ்வாறு வாசிக்கிறது: “ரூவாக் [எபிரெயு] என்ற வார்த்தை ‘ஆவி’ என்று மட்டுமல்லாமல், ‘காற்று’ என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது; அதோடு, பார்க்க முடியாத சக்தியைக் குறிக்கும் வேறு வார்த்தைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.” காற்றைப் பார்க்க முடியாவிட்டாலும் அது என்ன செய்கிறதெனப் பார்க்க முடியும்; அதேபோல், கடவுளுடைய சக்தியைப் பார்க்க முடியாவிட்டாலும் அது என்ன செய்கிறதெனப் பார்க்க முடியும். அது ஓர் ஆள் அல்ல. அது கடவுளுடைய ஆற்றல். தாம் விரும்புவதைச் செய்ய அதை மனிதர்கள்மீது அல்லது வேறெதாவதன்மீது அவர் செயல்பட வைக்கிறார். சர்வவல்லமையுள்ள கடவுள் இப்படிப்பட்ட அற்புதமான சக்தியைப் பெற்றிருக்கிறார் என்பதை நம்புவது கஷ்டமா? கண்டிப்பாக இல்லை!—ஏசாயா 40:12, 13-ஐ வாசியுங்கள்.
6. யெகோவாவிடம் தாவீது என்ன கேட்டார்?
6 நம் வாழ்க்கையை வழிநடத்துவதற்கு யெகோவா தொடர்ந்து தமது சக்தியைப் பயன்படுத்துவாரா? “நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்” எனச் சங்கீதக்காரன் தாவீதுக்கு அவர் வாக்குறுதி அளித்தார். (சங். 32:8) யெகோவா அவ்வாறு செய்ய வேண்டுமென தாவீது விரும்பினாரா? ஆம்; அதனால்தான், “உங்கள் சித்தத்தைச் செய்ய எனக்குக் கற்றுக்கொடுங்கள், ஏனென்றால் நீங்களே என் கடவுள். உங்கள் சக்தி அருமையானது; அது என்னை வழிநடத்தட்டும்” என்று யெகோவாவிடம் கேட்டார். (சங். 143:10, NW) கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்பட நாமும் அதேபோல் விருப்பமும் ஆவலும் உள்ளவர்களாக இருக்க வேண்டும். ஏன்? அதற்கான நான்கு காரணங்களைக் கவனியுங்கள்.
நம்மையே வழிநடத்த நமக்குத் தகுதி இல்லை
7, 8. (அ) நம்மையே வழிநடத்திக்கொள்ள நம்மால் ஏன் முடிவதில்லை? (ஆ) இந்தப் பொல்லாத உலகில் நமக்குக் கடவுளுடைய வழிநடத்துதல் தேவை என்பதை என்ன உதாரணம் காட்டுகிறது?
7 நாம் கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்பட வேண்டியதற்கான முதல் காரணம்: நம்மையே வழிநடத்த நமக்குத் திறன் இல்லாததாகும். வழிநடத்துவது என்றால் ஒருவர் செல்ல வேண்டிய சரியான வழியைக் காட்டுவதாகும். நம்மையே வழிநடத்திக்கொள்ளும் திறனோடு யெகோவா நம்மைப் படைக்கவில்லை; அதுவும், நாம் இப்போது அபூரணர்களாக இருப்பதால் நம்மையே வழிநடத்திக்கொள்ள முயன்றாலும் தோல்வியைத்தான் சந்திக்கிறோம். எரேமியா தீர்க்கதரிசி இவ்வாறு எழுதினார்: “ஆண்டவரே! நான் இதை அறிவேன்: மனிதர் செல்ல வேண்டிய வழி அவர்களின் கையில் இல்லை, தங்களையே வழிநடத்தும் திறன் அவர்களுக்கு இல்லவே இல்லை.” (எரே. 10:23, த பைபிள் இன் பேசிக் இங்லிஷ்) ஏன்? அதற்கான காரணத்தை எரேமியாவின் மூலம் கடவுள் சொன்னார்; “எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?” என்று குறிப்பிட்டார்.—எரே. 17:9; மத். 15:19.
8 தனக்குப் பழக்கமில்லாத ஆபத்தான ஒரு காட்டுக்குள் அல்லது பாலைவனத்துக்குள் ஒருவர் நடந்து செல்ல வேண்டியிருப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். ஒரு நல்ல வழிகாட்டியோ திசைமானியோ இல்லாமல் செல்வது புத்திசாலித்தனமாக இருக்காது. அப்படிப்பட்ட ஓர் இடத்தில் சமாளிப்பது எப்படி என்றும், தன் வழியைக் கண்டுபிடித்துப் பத்திரமாகப் போவது எப்படி என்றும் அவருக்குத் தெரியாவிட்டால் அவரது உயிர் ஆபத்தில் இருக்கும். அதேபோல், இந்தப் பொல்லாத உலகில் சரியான வழியைக் காட்ட கடவுளை ஒருவர் அனுமதிக்காவிட்டால்... தானே தன்னை வழிநடத்திக்கொள்ள முடியும் என்று நினைத்தால்... அவர் பேராபத்தில் இருக்கிறார். தாவீதைப் போல் நாம் யெகோவாவிடம் உதவி கேட்க வேண்டும். “என் காலடிகள் வழுவாதபடிக்கு, என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும்” என்று அவர் ஜெபம் செய்தார். (சங். 17:5; 23:3) அப்படிப்பட்ட வழிநடத்துதலை நாம் எவ்வாறு பெறுவது?
9. பக்கம் 17-ல் காட்டப்பட்டுள்ளபடி, கடவுளுடைய சக்தி எவ்வாறு நமக்குச் சரியான வழியைக் காட்டும்?
9 நாம் மனத்தாழ்மையோடு யெகோவாவின்மீது சார்ந்திருக்க மனமுள்ளவர்களாக இருந்தால், நமக்குச் சரியான வழியைக் காட்ட தமது சக்தியை அவர் அருளுவார். அது நமக்கு எவ்வாறு உதவும்? இயேசு தம் சீடர்களிடம் இவ்வாறு விளக்கினார்: “என் தகப்பன் என்னுடைய பெயரில் அனுப்பப்போகிற அவரது சக்தியாகிய சகாயர் எல்லாக் காரியங்களையும் உங்களுக்குக் கற்பித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாக் காரியங்களையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.” (யோவா. 14:26) நாம் ஜெபம் செய்து பைபிளைத் தவறாமல் படித்துவந்தால்... கிறிஸ்து போதித்த எல்லா விஷயங்களையும் படித்துவந்தால்... யெகோவாவின் ஆழமான ஞானத்தை இன்னும் அதிகமாய்ப் புரிந்துகொள்ள கடவுளுடைய சக்தி நமக்கு உதவும்; அப்போது, அவரது சித்தத்தின்படி செய்ய முடியும். (1 கொ. 2:10) அதோடு, வாழ்வெனும் பாதையில் ஏதேனும் எதிர்பாரா திருப்பம் ஏற்பட்டால்கூட நாம் செல்ல வேண்டிய வழியைக் கடவுளுடைய சக்தி காட்டும். நாம் ஏற்கெனவே கற்றிருக்கும் பைபிள் நியமங்களை அது நம் ஞாபகத்திற்குக் கொண்டுவரும்; அவற்றின் அடிப்படையில் எப்படி நல்ல தீர்மானங்களை எடுக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ள நமக்கு உதவும்.
கடவுளுடைய சக்தியால் இயேசு வழிநடத்தப்பட்டார்
10, 11. கடவுளுடைய சக்தி தமக்கு உதவுமென இயேசு ஏன் நம்பினார், அது அவருக்கு எப்படி உதவியது?
10 நாம் கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்பட வேண்டியதற்கான இரண்டாவது காரணம்: கடவுள் தமது மகனை தம் சக்தியால்தான் வழிநடத்தினார். இயேசு பூமியில் இருந்தபோது கடவுளுடைய சக்தி தமக்கு உதவுமென நம்பினார்; ஏனென்றால், தம்மைப் பற்றிய இந்தத் தீர்க்கதரிசனத்தை அவர் அறிந்திருந்தார்: “அவர்மீது யெகோவாவின் சக்தி தங்கும்; ஞானம், புரிந்துகொள்ளுதல், ஆலோசனை, வல்லமை, அறிவு, யெகோவாமீதான பயம் ஆகியவற்றை அந்தச் சக்தி அவருக்கு அருளும்.” (ஏசா. 11:2, NW) இயேசு இந்தப் பூமியில் பல பாடுகளைச் சந்திக்க வேண்டியிருந்தபோது கடவுளுடைய சக்தியின் உதவியைப் பெற எவ்வளவு ஆவலாய் இருந்திருப்பார்!
11 யெகோவாவின் வார்த்தைகள் அப்படியே நிறைவேறின. இயேசு ஞானஸ்நானம் எடுத்ததும் என்ன நடந்ததெனச் சுவிசேஷப் பதிவு இவ்வாறு சொல்கிறது: “கடவுளுடைய சக்தியினால் நிறைந்தவராக இயேசு யோர்தானைவிட்டுத் திரும்பினார்; அந்தச் சக்தியினால் வனாந்தரத்திற்குள் வழிநடத்தப்பட்டார்.” (லூக். 4:1) அங்கு இயேசு விரதமிருந்து, ஜெபமும் தியானமும் செய்துகொண்டிருந்தபோது, இனி எதையெல்லாம் சந்திக்க வேண்டும் என்பதைப் பற்றி யெகோவா அவருக்கு விவரித்திருக்கலாம்; அறிவுரைகளும் வழங்கியிருக்கலாம். கடவுளுடைய சக்தி இயேசுவின் மனதிலும் இதயத்திலும் செயல்பட்டு, அவரது சிந்தனையையும் தீர்மானங்களையும் வழிநடத்தியது. அதன் விளைவாக, ஒவ்வொரு சூழ்நிலையிலும் என்ன செய்ய வேண்டுமென இயேசு அறிந்திருந்தார்; தாம் என்ன செய்ய வேண்டுமென தம் தகப்பன் விரும்பினாரோ அதையே செய்தார்.
12. நாம் ஏன் கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலைக் கேட்க வேண்டும்?
12 கடவுளுடைய சக்தியின் உதவி தம் வாழ்க்கைக்கு எவ்வளவு அவசியம் என்பதை இயேசு அறிந்திருந்தார்; அதனால், கடவுளுடைய சக்திக்காக ஜெபம் செய்யும்படி... தங்களை வழிநடத்த அதை அனுமதிக்கும்படி... தம் சீடர்களிடம் வலியுறுத்தினார். (லூக்கா 11:9-13-ஐ வாசியுங்கள்.) நாம் ஏன் கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலைக் கேட்க வேண்டும்? ஏனென்றால், அது நம் சிந்தையைக் கிறிஸ்துவின் சிந்தைக்கு இசைவாக மாற்றும். (ரோ. 12:2; 1 கொ. 2:16) நம் வாழ்வை வழிநடத்த கடவுளுடைய சக்தியை அனுமதிப்பதன் மூலம் நாம் கிறிஸ்துவைப் போல் சிந்திக்கவும் அவரது முன்மாதிரியைப் பின்பற்றவும் முடியும்.—1 பே. 2:21.
உலக சிந்தை நம்மைத் தவறான வழிக்குக் கொண்டுசெல்லும்
13. உலக சிந்தை என்பது என்ன, அது மக்களை எப்படிப் பாதிக்கிறது?
13 நாம் கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்பட வேண்டியதற்கான மூன்றாவது காரணம்: அது இல்லாவிட்டால், இன்று பெரும்பாலான மக்களின் வாழ்வை ஆட்டிப்படைக்கும் உலக சிந்தை நம்மைத் தவறான வழிக்குக் கொண்டு சென்றுவிடும். உலக சிந்தை என்பது, கடவுளுடைய சக்தி காட்டும் வழிக்கு முற்றிலும் நேர்மாறான வழியில் மக்களைக் கொண்டு செல்லும் மிக வலிமைமிக்க சக்தியாகும். அது கிறிஸ்துவின் சிந்தையை வளர்த்துக்கொள்ள மக்களுக்கு உதவுவதற்குப் பதிலாக இவ்வுலகத்தை ஆளும் சாத்தானைப் போல் சிந்திக்கவும் செயல்படவும் வைக்கிறது. (எபேசியர் 2:1-3-ஐயும் தீத்து 3:3-ஐயும் வாசியுங்கள்.) ஒருவர் இந்த உலக சிந்தைக்கு இடங்கொடுத்து, பாவ இயல்புக்குரிய செயல்களைச் செய்து வந்தால் விபரீத விளைவுகளைச் சந்திப்பார்; அவர் கடவுளுடைய அரசாங்கத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்.—கலா. 5:19-21.
14, 15. நாம் எவ்வாறு உலக சிந்தையை எதிர்த்து நிற்கலாம்?
14 இந்த உலக சிந்தையை எதிர்க்கத் தேவையானவற்றை யெகோவா நமக்குத் தருகிறார். ‘நம் எஜமானரிடமிருந்து கிடைக்கும் மகா பலத்தினால் வலிமையடைந்துகொண்டே இருங்கள். . . . அப்போதுதான், பொல்லாத நாளில் உங்களால் எதிர்த்து . . . நிற்க முடியும்’ என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (எபே. 6:10, 13) நம்மை மோசம்போக்க சாத்தான் எடுக்கும் முயற்சிகளை எதிர்த்து நிற்க யெகோவா தமது சக்தியால் நம்மைப் பலப்படுத்துகிறார். (வெளி. 12:9) உலக சிந்தை வலிமைவாய்ந்தது, அதை நம்மால் அறவே தவிர்க்க முடியாது. ஆனால், அதை எதிர்த்து நிற்க முடியும். அதைவிடப் பல மடங்கு வலிமைவாய்ந்த கடவுளுடைய சக்தி நமக்கு உதவும்!
15 முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவத்தைவிட்டு விலகிச் சென்றவர்களைக் குறித்து அப்போஸ்தலன் பேதுரு குறிப்பிட்டபோது, அவர்கள் “நேர்மையான வழியைவிட்டு விலகி மோசம்போயிருக்கிறார்கள்” என்றார். (2 பே. 2:15) நாம் ‘இந்த உலகத்தின் சிந்தையைப் பெறாமல் கடவுளுடைய சக்தியையே’ பெற்றிருப்பதற்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்! (1 கொ. 2:12) அதன் உதவியைப் பெறுவதன் மூலமும்... நம்மை ஆன்மீக ரீதியில் சரியான பாதையில் வழிநடத்த யெகோவா செய்திருக்கும் எல்லா ஏற்பாடுகளையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதன் மூலமும்... நாம் இந்தப் பொல்லாத உலகிலுள்ள சாத்தானின் சிந்தையை எதிர்த்து நிற்கலாம்.—கலா. 5:16.
கடவுளுடைய சக்தி நல்ல குணங்களைப் பிறப்பிக்கிறது
16. கடவுளுடைய சக்தி நம்மில் என்ன குணங்களைப் பிறப்பிக்கிறது?
16 நாம் கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்பட வேண்டியதற்கான நான்காவது காரணம்: அதனால் வழிநடத்தப்படுவோரின் வாழ்வில் அது நல்ல குணங்களைப் பிறப்பிக்கிறது. (கலாத்தியர் 5:22, 23-ஐ வாசியுங்கள்.) நம்மில் யார்தான் இன்னுமதிக அன்பாக, சந்தோஷமாக, சமாதானமாக இருக்க விரும்ப மாட்டோம்? நம்மில் யார்தான் நீடிய பொறுமை, கருணை, நல்மனம் போன்ற குணங்களில் பெருக விரும்ப மாட்டோம்? நம்மில் யார்தான் இன்னுமதிக விசுவாசத்தினால், சாந்தத்தினால், சுயக்கட்டுப்பாட்டினால் நன்மையடைய மாட்டோம்? நமக்கும் நம் குடும்பத்தாருக்கும் சக வணக்கத்தாருக்கும் நன்மை அளிக்கிற அருமையான குணங்களைக் கடவுளுடைய சக்தி நம்மில் பிறப்பிக்கிறது. இந்தக் குணங்களை வளர்த்துக்கொள்ள நாம் அனுதினமும் உழைக்க வேண்டும்; ஏனென்றால், அவை நமக்கு இவ்வளவுதான் தேவை என்றோ... அவற்றை இவ்வளவுதான் வெளிக்காட்ட வேண்டும் என்றோ... ஓர் எல்லையை வகுக்கவே முடியாது.
17. கடவுளுடைய சக்தி பிறப்பிக்கும் குணங்களில் சிலவற்றை நாம் எவ்வாறு இன்னும் அதிகமாக வளர்த்துக்கொள்ளலாம்?
17 நாம் கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்படுகிறோம் என்பதையும், அது பிறப்பிக்கும் குணங்களை வெளிக்காட்டுகிறோம் என்பதையும் நம் சொல்லும் செயலும் காட்டுகின்றனவா என நாம் சிந்தித்துப் பார்ப்பது ஞானமானது. (2 கொ. 13:5அ; கலா. 5:25) அந்தக் குணங்களில் சிலவற்றை நாம் இன்னும் அதிகமாக வளர்த்துக்கொள்ள வேண்டும் என உணர்ந்தால் என்ன செய்யலாம்? அந்தக் குணங்களை வெளிக்காட்டுவதற்குக் கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலைப் பெற இன்னும் அதிக முயற்சி எடுக்க வேண்டும். எப்படி? பைபிளிலும் கிறிஸ்தவப் பிரசுரங்களிலும் அந்த ஒவ்வொரு குணமும் விளக்கப்பட்டிருப்பதைப் படித்துப் பார்ப்பதன் மூலமாகும்; இவ்வாறு, தினசரி வாழ்வில் அந்தக் குணங்களை எப்படி வெளிக்காட்ட வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு, அவற்றை வெளிக்காட்ட கடினமாக உழைக்க வேண்டும்.a கடவுளுடைய சக்தி நம் வாழ்விலும் நம் சக கிறிஸ்தவர்களின் வாழ்விலும் எந்தளவு நன்மைகளை உண்டாக்கியிருக்கிறது என்பதைக் கவனிக்கும்போது, அதன் வழிநடத்துதல் நமக்கு ஏன் அவசியம் என்பதை நன்றாகப் புரிந்துகொள்வோம்.
கடவுளுடைய சக்தி உங்களை வழிநடத்த அனுமதிக்கிறீர்களா?
18. கடவுளுடைய சக்தி தம்மை வழிநடத்த அனுமதித்ததில் இயேசு எவ்வாறு நமக்கு முன்மாதிரியாக இருக்கிறார்?
18 கடவுள் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தபோது இயேசு அவருடைய ‘கைதேர்ந்த வேலையாளாக’ இருந்தார். ஆகவே, திசைமானியைப் பயன்படுத்த மனிதர்களுக்கு உதவும் சக்தியாகிய காந்தச் சக்தியைப் பற்றி இயேசு நன்றாகவே அறிந்திருந்தார். (நீதி. 8:30, NW; யோவா. 1:3) பூமியில் இருந்தபோது தாம் செல்ல வேண்டிய வழியை அறிய இயேசு இந்தக் காந்தச் சக்தியைப் பயன்படுத்தினார் என பைபிள் எங்கும் சொல்வதில்லை. ஆனால், கடவுளுடைய சக்தி தம் வாழ்க்கையில் எந்தளவு வலிமையாகச் செயல்பட்டது என்பதை அவர் கண்கூடாகப் பார்த்தார் என பைபிள் சொல்கிறது. அந்தச் சக்தியால் வழிநடத்தப்பட அவர் விரும்பினார்; அது தம்மை வழிநடத்தியபோது அதை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப செயல்பட்டார். (மாற். 1:12, 13; லூக். 4:14) நீங்களும் அவ்வாறே செய்கிறீர்களா?
19. கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்பட நாம் என்ன செய்ய வேண்டும்?
19 இன்றும், கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்பட விரும்புவோரை அது வழிநடத்துகிறது. அது உங்களுக்குச் சரியான வழியைக் காட்ட நீங்கள் எவ்வாறு அனுமதிக்கலாம்? யெகோவாவிடம் இடைவிடாமல் ஜெபம் செய்து, அவரது சக்தியைத் தரும்படியும் அதன் வழிநடத்துதலை ஏற்று நடக்க உதவும்படியும் கேட்பதன் மூலமாகும். (எபேசியர் 3:14-16-ஐ வாசியுங்கள்.) கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்பட விரும்புகிறீர்கள் என்பதை, அதன் தூண்டுதலால் எழுதப்பட்ட பைபிளைப் படிப்பதன் மூலம் காட்டுங்கள். (2 தீ. 3:16, 17) அது தரும் ஞானமான அறிவுரைகளுக்குக் கீழ்ப்படியுங்கள், பின்பு அதன் வழிநடத்துதலை ஏற்றுக்கொள்ளுங்கள். இப்படியெல்லாம் செய்வதன் மூலம், இந்தப் பொல்லாத உலகில் உங்களைச் சிறப்பாக வழிநடத்த யெகோவாவுக்கு இருக்கும் திறனில் விசுவாசம் வைத்திருப்பதைக் காட்டுவீர்கள்.
[அடிக்குறிப்பு]
a இந்த ஒவ்வொரு குணங்களைப் பற்றியும் விவரமாகப் படிக்க, ஜூலை 15, 2007 தேதியிட்ட காவற்கோபுரத்தில் பக்கங்கள் 21-25-ஐயும், ஏப்ரல் 15, 2011 தேதியிட்ட காவற்கோபுரத்தில் பக்கங்கள் 18-27-ஐயும் தயவுசெய்து பாருங்கள்.
முக்கியக் குறிப்புகளைப் புரிந்துகொண்டீர்களா?
• கடவுளுடைய சக்தி நம் வாழ்வை எவ்வாறு பாதிக்கும்?
• நாம் கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்பட வேண்டியதற்கான நான்கு காரணங்கள் யாவை?
• கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலிலிருந்து முழுமையாகப் பயனடைய நம் பங்கில் என்ன செய்ய வேண்டும்?
[பக்கம் 15-ன் படம்]
கடவுளுடைய சக்தி இயேசுவின் வாழ்வில் வலிமையோடு செயல்பட்டது
[பக்கம் 17-ன் படம்]
கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்பட விரும்புவோரை அது வழிநடத்துகிறது