கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்பட்ட பூர்வ கால விசுவாசிகள்
“பேரரசராகிய யெகோவாவே என்னை அனுப்பியிருக்கிறார், தமது சக்தியையும் அனுப்பியிருக்கிறார்.”—ஏசா. 48:16, NW.
1, 2. நம்முடைய விசுவாசத்தைக் காட்ட நமக்கு என்ன தேவை, பூர்வ கால விசுவாசிகளின் உதாரணங்களைச் சிந்திக்கும்போது என்ன உற்சாகத்தைப் பெறுவோம்?
ஆபேலின் காலம் முதலே “எல்லாரிடமும் விசுவாசம் இல்லை” என்பது தெளிவாகத் தெரிகிறது. (2 தெ. 3:2) அப்படியென்றால் சிலரிடம் ஏன் விசுவாசம் இருக்கிறது, அவர்கள் விசுவாசத்துடன் இருக்க எது உதவுகிறது? பெரும்பாலும், கடவுளுடைய வார்த்தையிலிருந்து அறிவிக்கப்படுவதைக் கேட்கையில்தான் விசுவாசம் உண்டாகிறது. (ரோ. 10:17) இது கடவுளுடைய சக்தியால் பிறப்பிக்கப்படுகிற குணங்களில் ஒன்று. (கலா. 5:22, 23) எனவே, விசுவாசத்தைக் காட்ட நமக்குக் கடவுளுடைய சக்தி தேவை.
2 யாரும் விசுவாசம் என்ற குணத்துடன் பிறப்பதில்லை. விசுவாசத்திற்கு முன்மாதிரியாக பைபிள் குறிப்பிடுகிற ஊழியர்கள் ‘நம்மைப் போன்ற மனிதர்கள்தான், நமக்கிருக்கும் உணர்ச்சிகள்தான் அவர்களுக்கும் இருந்தன.’ (யாக். 5:17) அவர்களுக்குச் சந்தேகம், அவநம்பிக்கை, பலவீனம் ஆகியவை இருந்தபோதிலும், சவால்களைச் சந்திப்பதற்குக் கடவுளுடைய சக்தியின் மூலம் “பலம் பெற்றார்கள்.” (எபி. 11:34) யெகோவாவுடைய சக்தி அவர்களிடம் செயல்பட்ட விதத்தைச் சிந்திக்கும்போது, இன்று நாம் தொடர்ந்து விசுவாசத்துடன் இருக்க உற்சாகத்தைப் பெறுவோம்; விசுவாசத்திற்குப் பல சோதனைகள் வரும் இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட உற்சாகம் நமக்கு முக்கியமாகத் தேவை.
கடவுளுடைய சக்தி மோசேயைப் பலப்படுத்தியது
3-5. (அ) கடவுளுடைய சக்தியின் உதவியோடு மோசே செயல்பட்டாரென நமக்கு எப்படித் தெரியும்? (ஆ) யெகோவா தம்முடைய சக்தியை அளிக்கும் விதத்தைப் பற்றி மோசேயின் உதாரணத்திலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?
3 தன் காலத்தில் வாழ்ந்தவர்களிலேயே மோசே ‘மிகுந்த சாந்தகுணமுள்ளவராயிருந்தார்.’ (எண். 12:3) இப்படிப்பட்டவரிடம் இஸ்ரவேல் தேசத்தில் மிகுந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. தீர்க்கதரிசனம் உரைக்கவும், நியாயந்தீர்க்கவும், பைபிள் புத்தகங்களை எழுதவும், கடவுளுடைய மக்களை வழிநடத்தவும், அற்புதங்களைச் செய்யவும் கடவுளுடைய சக்தி அவரைப் பலப்படுத்தியது. (ஏசாயா 63:11-14-ஐ வாசியுங்கள்.) இருந்தாலும், ஒரு கட்டத்தில் தன் பொறுப்பு பெரும் பாரமாயிருந்ததாக அவர் புலம்பினார். (எண். 11:14, 15) எனவே, மோசேயிடமிருந்த சக்தியில் “கொஞ்சம் எடுத்து” 70 பேரின்மீது யெகோவா வைத்தார்; அவர்கள் அவருடைய பாரத்தைச் சுமக்க உதவினார்கள். (எண். 11:16, 17, பொது மொழிபெயர்ப்பு) மோசேயிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு அவருக்குப் பெரும் பாரமாகத் தோன்றியபோதிலும், உண்மையில் அவர் அதைத் தன்னந்தனியாகச் சுமக்கவில்லை; சொல்லப்போனால், அவருக்கு உதவும்படி நியமிக்கப்பட்ட 70 பேரும்கூட தாங்களே அதைச் சுமக்கவில்லை.
4 பொறுப்பைக் கையாள எந்தளவு சக்தி தேவையோ அந்தளவு சக்தியைக் கடவுள் மோசேக்குக் கொடுத்திருந்தார். 70 பேரை நியமித்த பிறகும் அவருக்குத் தேவையான சக்தியைக் கொடுத்திருந்தார். மோசேக்கு மிகக் கொஞ்சமாகவும் அந்த 70 மூப்பர்களுக்கு மிக அதிகமாகவும் அவர் அதைத் தரவில்லை. யெகோவா நமக்குத் தேவையானளவு சக்தியை நம்முடைய சூழ்நிலைகளுக்கு ஏற்ப தருகிறார். அவர் “தமது சக்தியை அளவில்லாமல் கொடுக்கிறார்,” ‘தம்முடைய நிறைவிலிருந்து’ கொடுக்கிறார்.—யோவா. 1:16; 3:34.
5 நீங்கள் சோதனைகளைச் சகித்து வருகிறீர்களா? சில அத்தியாவசியமான காரியங்கள் உங்களுடைய நேரத்தை அதிகமதிகமாக உறிஞ்சி வருகின்றனவா? விலைவாசி உயர்வை அல்லது உடல்நலப் பிரச்சினையைச் சமாளிக்கும் வேளையில், உங்கள் குடும்பத்தாரின் ஆன்மீகத் தேவைகளையும் சரீரத் தேவைகளையும் பூர்த்தி செய்யப் போராடுகிறீர்களா? சபையில் முக்கியப் பொறுப்புகளைக் கையாளுகிறீர்களா? எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளிக்கத் தேவையான பலத்தைக் கடவுள் தம்முடைய சக்தியின் மூலம் கொடுப்பாரென உறுதியாய் இருங்கள்.—ரோ. 15:13.
கடவுளுடைய சக்தி பெசலெயேலைத் தகுதிபெறச் செய்தது
6-8. (அ) என்ன செய்ய பெசலெயேலுக்கும் அகோலியாபுக்கும் கடவுளுடைய சக்தி உதவியது? (ஆ) பெசலெயேலும் அகோலியாபும் கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்பட்டதற்கு மற்றொரு அத்தாட்சி என்ன? (இ) பெசலெயேலின் உதாரணம் முக்கியமாக நமக்கு ஏன் உற்சாகமூட்டுகிறது?
6 மோசேயின் காலத்தில் வாழ்ந்த பெசலெயேலின் உதாரணம், கடவுளுடைய சக்தி செயல்படும் விதத்தைப் புரிந்துகொள்ள பெருமளவு உதவுகிறது. (யாத்திராகமம் 35:30-35-ஐ வாசியுங்கள்.) ஆசரிப்புக் கூடாரத்திற்குத் தேவையான பொருள்களை உண்டுபண்ணுகிற வேலையை முன்நின்று வழிநடத்த பெசலெயேல் நியமிக்கப்பட்டார். இந்தப் பிரமாண்டமான வேலையை எப்படிச் செய்வதென அவர் முன்னரே அறிந்திருந்தாரா? அறிந்திருக்கலாம், ஆனாலும் இதற்குமுன் அவர் எகிப்தியர்களுக்குச் செங்கல்களைச் செய்து கொடுக்கும் பணியிலேயே ஈடுபட்டிருந்திருக்க வேண்டும். (யாத். 1:13, 14) எனவே, ஆசரிப்புக் கூடாரம் சம்பந்தப்பட்ட கஷ்டமான வேலையை அவர் எப்படிச் செய்து முடித்தார்? ‘அவர் விசித்திரமான வேலைகளை யோசித்துச் செய்யவும், . . . சகல விநோதமான வேலைகளைச் செய்யவும், அவருக்கு ஞானத்தையும் புத்தியையும் அறிவையும் [யெகோவா] அருளி, அவர் சகலவித வேலைகளையும் செய்யும்படி [தமது சக்தியினாலே] அவரை நிரப்பினார்.’ பெசலெயேலிடம் ஏற்கெனவே ஏதேனும் திறமை இருந்திருந்தால் அதைக் கடவுளுடைய சக்தி மேலும் மெருகூட்டியது. அகோலியாபைப் பொறுத்ததிலும் இதுவே உண்மை. பெசலெயேலும் அகோலியாபும் வேலையை நன்கு கற்றுக்கொண்டிருக்க வேண்டும்; ஏனென்றால், அவர்கள் நன்கு வேலை செய்ததோடு மற்றவர்களும் நன்கு வேலை செய்யக் கற்றுக்கொடுத்தார்கள்.
7 பெசலெயேலும் அகோலியாபும் கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்பட்டார்கள் என்பதற்கு மற்றொரு அத்தாட்சி, அவர்கள் செய்த பொருள்கள் காலத்தால் அழியாதிருந்தன. சுமார் 500 வருடங்களுக்குப் பிறகும் அவை பயன்படுத்தப்பட்டு வந்தன. (2 நா. 1:2-6) இன்றைய உற்பத்தியாளர்களைப் போல் அல்லாமல், அவர்கள் இருவரும் தாங்கள் உருவாக்கிய பொருள்களில் தங்கள் பெயரையோ முத்திரையையோ பதிப்பதில் ஆர்வம் காட்டவே இல்லை. தங்களுடைய சாதனைகள் அனைத்துக்கும் யெகோவாவுக்கே புகழ் சேர்த்தார்கள்.—யாத். 36:1, 2.
8 இன்று சில வேலைகளுக்கு விசேஷத் திறமைகள் தேவைப்படலாம், அந்த வேலைகளைச் செய்வது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம்; இதற்கு உதாரணமாக, கட்டடப் பணி, அச்சகப் பணி, மாநாடுகளை ஒழுங்கமைக்கிற பணி, நிவாரணப் பணி, டாக்டர்களிடமும் மருத்துவமனைப் பணியாளர்களிடமும் இரத்தம் சம்பந்தமாக நம் நிலைநிற்கையை விளக்கும் பணி ஆகியவற்றைக் குறிப்பிடலாம். சில சமயங்களில், இவற்றைத் திறமைவாய்ந்தவர்கள் செய்கிறார்கள்; பெரும்பாலான சமயங்களிலோ, எந்தவிதத் திறமையும் அனுபவமும் இல்லாத வாலண்டியர்களே செய்கிறார்கள். கடவுளுடைய சக்தியே அவர்களுடைய முயற்சிகளை வெற்றியடையச் செய்கிறது. உங்களைவிட மற்றவர்களுக்குத்தான் அதிக தகுதியிருக்கிறது என்று நினைத்து யெகோவாவின் சேவையில் ஒரு பொறுப்பை ஏற்றுக்கொள்ள நீங்கள் மறுத்திருக்கிறீர்களா? யெகோவாவின் சக்தி உங்கள் அறிவையும் திறமையையும் மெருகூட்டி, அவர் கொடுத்திருக்கும் எந்த வேலையையும் செய்து முடிக்க உங்களுக்கு உதவும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
கடவுளுடைய சக்தியின் உதவியால் யோசுவா வெற்றி பெற்றார்
9. எகிப்திலிருந்து புறப்பட்டு வந்த பிறகு இஸ்ரவேலர் என்ன சூழ்நிலையை எதிர்ப்பட்டார்கள், என்ன கேள்வி எழுந்தது?
9 மோசே மற்றும் பெசலெயேல் காலத்தில் வாழ்ந்த மற்றொருவரையும் கடவுளுடைய சக்தி வழிநடத்தியது. கடவுளுடைய மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வந்த கொஞ்சக் காலத்திலேயே, அமலேக்கியர் காரணமில்லாமல் அவர்களுக்கு எதிராகப் போர் செய்ய வந்தார்கள். இஸ்ரவேலர் எதிர்த்துப் போரிடுவதற்கான வேளை வந்தது. இதற்கு முன்பு அவர்கள் போரே செய்திராதபோதிலும் இப்போது முதன்முறையாகப் போர்க்களத்தில் இறங்கினார்கள். (யாத். 13:17; 17:8) படையை வழிநடத்த அவர்களுக்கு ஒருவர் தேவைப்பட்டார். அவர் யாராக இருப்பார் என்ற கேள்வி எழுந்தது.
10. யோசுவாவின் தலைமையில் இஸ்ரவேலர் ஏன் வெற்றிவாகை சூடினார்கள்?
10 யோசுவா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அந்த வேலைக்குத் தகுதிபெற அவருக்கு என்ன முன்னனுபவங்கள் இருக்கின்றன என்று அவர் சொல்ல வேண்டியிருந்திருந்தால் எதையெல்லாம் சொல்லியிருப்பார்? அடிமை வேலை செய்ததையா? வைக்கோலைக் களிமண்ணுடன் சேர்த்து மிதித்ததையா? மன்னாவைச் சேகரித்ததையா? யோசுவாவின் தாத்தாவான எலிஷாமா, எப்பிராயீம் கோத்திரத்தின் சேனாபதியாக இருந்தார் என்பதும் இஸ்ரவேலின் மூன்று கோத்திரப் பிரிவு ஒன்றில் 1,08,100 பேரை வழிநடத்தினார் என்பதும் உண்மைதான். (எண். 2:18, 24; 1 நா. 7:26, 27) என்றாலும், எதிரி படையை முறியடிக்கும்படி இஸ்ரவேலப் படையை வழிநடத்த யெகோவா எலிஷாமாவையோ அவருடைய மகன் நூனையோ தேர்ந்தெடுக்கவில்லை; மாறாக, யோசுவாவைத் தேர்ந்தெடுக்குமாறு மோசேயிடம் கூறினார். சூரியன் அஸ்தமிக்கும்வரை போர் நடந்தது. கடவுளுடைய கட்டளைகளுக்கு யோசுவா முழுமையாகக் கீழ்ப்படிந்ததாலும், கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலை ஏற்றுக்கொண்டதாலும் இஸ்ரவேலர் வெற்றிவாகை சூடினார்கள்.—யாத். 17:9-13.
11. யோசுவாவைப் போல கடவுளுடைய சேவையில் நாம் எப்படி வெற்றி பெறலாம்?
11 ‘கடவுளுடைய சக்தி அருளிய ஞானத்தால் நிரம்பியிருந்த’ யோசுவா, மோசேக்குப் பிறகு இஸ்ரவேலரை முன்நின்று வழிநடத்தினார். (உபா. 34:9, NW) மோசேயைப் போல தீர்க்கதரிசனம் சொல்வதற்கான அல்லது அற்புதங்களைச் செய்வதற்கான திறமையைக் கடவுளுடைய சக்தி யோசுவாவுக்குக் கொடுக்காவிட்டாலும், கானானை வெற்றிகொள்ளும்படி இஸ்ரவேலப் படைகளை வழிநடத்த உதவியது. இன்று கடவுளுடைய சேவையில் சில பொறுப்புகளைக் கையாள நமக்கு அனுபவமோ திறமையோ இல்லையென நாம் நினைக்கலாம். என்றாலும், யோசுவாவைப் போல கடவுளுடைய கட்டளைகளை நாம் முழுமையாகப் பின்பற்றினால் வெற்றி நிச்சயம் என உறுதியளிக்கப்படுகிறோம்.—யோசு. 1:7-9.
“யெகோவாவின் சக்தி கிதியோனைச் சூழ்ந்தது”
12-14. (அ) மிகப் பெரிய மீதியானியப் படையை மிகச் சிறிய இஸ்ரவேலப் படை தோற்கடித்தது எதைக் காட்டுகிறது? (ஆ) யெகோவா எவ்வாறு கிதியோனுக்கு உறுதியளித்தார்? (இ) இன்று கடவுளிடமிருந்து என்ன உதவியை நாம் எதிர்பார்க்கலாம்?
12 யோசுவாவின் மரணத்திற்குப் பிறகு, யெகோவா தமது உண்மையுள்ள ஊழியர்களைத் தமது சக்தியால் பலப்படுத்த முடியும் என்பதைத் தொடர்ந்து காட்டினார். நியாயாதிபதிகள் புத்தகத்தில், ‘பலவீனமான நிலையில் பலம் பெற்ற’ பலருடைய அனுபவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. (எபி. 11:34) கடவுள் தம் மக்களின் சார்பாகப் போரிட கிதியோனைத் தமது சக்தியால் உந்துவித்தார். (நியா. 6:34, NW) என்றாலும், மீதியானியப் படை கிதியோன் திரட்டிய படையைவிட நான்கிற்கு ஒன்று என்ற வீதத்தில் பெரியதாக இருந்தது. ஆனால், யெகோவாவின் கண்களில் கிதியோனின் அந்தச் சிறிய படையும்கூட மிகப் பெரியதாகத் தெரிந்தது. அதனால் வீரர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும்படி இரண்டு முறை கிதியோனுக்குக் கட்டளையிட்டார்; கடைசியில், 450 மீதியானிய வீரர்களுக்கு ஓர் இஸ்ரவேல வீரர் என்ற விகிதத்தில் படைப் பலம் குறைந்தது. (நியா. 7:2-8; 8:10) இந்த எண்ணிக்கையைப் பார்த்து யெகோவா திருப்திப்பட்டார். ஏனென்றால், மாபெரும் வெற்றி கிடைக்கும்போது, அதற்கு மனித முயற்சியோ மனித ஞானமோ காரணமெனச் சொல்லி ஒருவராலும் பெருமையடிக்க முடியாதே!
13 கிதியோனும் அவரது படைவீரர்களும் கிட்டத்தட்ட தயார்நிலையில் இருந்தார்கள். அந்த வீரர்களில் நீங்களும் ஒருவராக இருந்திருந்தால், தைரியமும் விழிப்புணர்வும் இல்லாத சக வீரர்கள் படையிலிருந்து நீக்கப்பட்டபோது எப்படி உணர்ந்திருப்பீர்கள்? இன்னும் நம்பிக்கையாகவே இருந்திருப்பீர்களா? அல்லது, இனி என்னாகுமோ ஏதாகுமோ என நினைத்துச் சற்றுக் கலக்கம் அடைந்திருப்பீர்களா? கிதியோன் எப்படி உணர்ந்திருப்பார் என நாம் ஊகிக்க வேண்டியதே இல்லை. தன்னிடம் சொல்லப்பட்டபடியே அவர் செய்தார்! (நியாயாதிபதிகள் 7:9-14-ஐ வாசியுங்கள்.) கடவுள் தனக்குத் துணையாக இருப்பார் என்பதற்கு அத்தாட்சியாக ஓர் அடையாளத்தை கிதியோன் கேட்டபோது கடவுள் அவரைக் கடிந்துகொள்ளவில்லை. (நியா. 6:36-40) மாறாக, கிதியோனின் விசுவாசத்தைப் பலப்படுத்தினார்.
14 யெகோவாவின் காக்கும் வல்லமைக்கு எல்லையே இல்லை. எப்பேர்ப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலிருந்தும் தமது மக்களை அவர் காப்பாற்றுவார்; பலவீனமானவர்களாக அல்லது திறனற்றவர்களாகத் தோன்றுகிறவர்களைப் பயன்படுத்திக்கூட அப்படிக் காப்பாற்றுவார். சிலசமயங்களில் ஏராளமானவர்கள் நம்மை எதிர்ப்பதுபோல் நமக்குத் தோன்றலாம், அல்லது பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டு நாம் தவிக்கலாம். கிதியோனைப் போல் நமக்கும் அற்புதமான விதத்தில் யெகோவா உறுதியளிப்பாரென நாம் எதிர்பார்ப்பதில்லை; ஆனால், அவரது வார்த்தையிலிருந்தும் அவரது சக்தியால் வழிநடத்தப்படும் சபையிலிருந்தும் ஏராளமான அறிவுரைகளையும் மிகுந்த நம்பிக்கையையும் தருவார் என எதிர்பார்க்கலாம். (ரோ. 8:31, 32) யெகோவா அன்போடு கொடுத்திருக்கும் வாக்குறுதிகள் நம் விசுவாசத்தைப் பலப்படுத்துகின்றன, அவரே நமக்குத் துணை என்ற திடநம்பிக்கையை அளிக்கின்றன!
“யெகோவாவின் சக்தி யெப்தாவின்மீது இறங்கியது”
15, 16. யெப்தாவின் மகள் நல்ல மனப்பான்மை காட்டியதற்குக் காரணம் என்ன, இது பெற்றோருக்கு எப்படி உற்சாகத்தை அளிக்கிறது?
15 மற்றொரு உதாரணத்தைக் கவனியுங்கள். இஸ்ரவேலர் அம்மோனியப் படையை எதிர்த்துப் போரிட வேண்டியிருந்த சமயத்தில், யெகோவாவின் சக்தி “யெப்தாவின்மீது இறங்கியது.” யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கும் விதத்தில் வெற்றிவாகை சூட விரும்பிய யெப்தா தனக்குப் பேரிழப்பை ஏற்படுத்தவிருந்த ஒரு பொருத்தனையைச் செய்தார். அம்மோனியரைத் தோற்கடிக்கக் கடவுள் உதவினால், வெற்றியுடன் திரும்புகையில் தன் வீட்டிலிருந்து தன்னை முதலில் சந்திக்க வரும் நபரை யெகோவாவுக்கு அர்ப்பணிப்பதாகப் பொருத்தனை செய்தார். யெப்தா அம்மோனியரை வென்று திரும்பியபோது அவருடைய ஒரே மகள், ஆம், அவருடைய ஒரே பிள்ளை, அவரைச் சந்திக்க ஓடோடி வந்தாள். (நியா. 11:29-31, 34, NW) இதைப் பார்த்து யெப்தா ஆச்சரியப்பட்டாரா? ஒருவேளை ஆச்சரியப்பட்டிருக்க மாட்டார்; ஏனென்றால் தன் மகள் தன்னைச் சந்திக்க முதலில் வரலாம் என்பதை அவர் அறிந்திருந்தார். சீலோவிலிருந்த யெகோவாவின் ஆலயத்தில் சேவை செய்வதற்கென்றே அவளை அர்ப்பணித்ததன் மூலம் அவர் தன்னுடைய பொருத்தனையை நிறைவேற்றினார். அவருடைய மகள் யெகோவாவை உண்மையாய் வழிபட்டு வந்ததால், தன் தகப்பனுடைய பொருத்தனையை நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தாள். (நியாயாதிபதிகள் 11:36-ஐ வாசியுங்கள்.) கடவுளுடைய சக்தி அவர்கள் இருவருக்கும் தேவையான பலத்தை அளித்தது.
16 யெப்தாவின் மகள் எப்படி அத்தகைய சுயதியாக மனப்பான்மையை வளர்த்துக்கொண்டாள்? கடவுளிடம் அவளுடைய தகப்பன் காட்டிய பக்தியையும் வைராக்கியத்தையும் பார்த்து அவள் தன் விசுவாசத்தை வளர்த்திருப்பாள் என்பதில் சந்தேகமில்லை. பெற்றோர்களே, உங்களுடைய முன்மாதிரியை உங்கள் பிள்ளைகள் நிச்சயம் கவனிப்பார்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதை நம்புகிறீர்கள் என்பதை உங்கள் தீர்மானங்கள் தெரிவிக்கும். உங்கள் பிள்ளைகள் நீங்கள் ஊக்கமாக ஜெபிப்பதைக் கேட்கிறார்கள், நீங்கள் திறம்பட கற்பிப்பதைக் கூர்ந்து கவனிக்கிறார்கள், நீங்கள் முழு இருதயத்தோடு யெகோவாவுக்குச் சேவை செய்ய எடுக்கும் எல்லா முயற்சிகளையும் பார்க்கிறார்கள். இவையெல்லாம், யெகோவாவுக்குச் சேவை செய்வதற்கான பலமான ஆசையை வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு உதவலாம். இது உங்களுக்கு அதிக சந்தோஷத்தைத் தரும், அல்லவா?
சிம்சோன்மீது யெகோவாவுடைய சக்தி ‘பலமாய் இறங்கினது’
17. கடவுளுடைய சக்தியால் சிம்சோன் என்ன செய்யத் தூண்டப்பட்டார்?
17 மற்றொரு உதாரணத்தைச் சிந்தியுங்கள். இஸ்ரவேலர் பெலிஸ்தரிடம் சிறைப்பட்டபோது, அவர்களை விடுவிக்க சிம்சோனை ‘யெகோவாவுடைய சக்தி தூண்டியது.’ (நியா. 13:24, 25, NW) அசாதாரணமான, ஈடிணையற்ற பலத்துடன் செயல்பட சிம்சோன் தூண்டப்பட்டார். அவரைச் சிறைப்பிடிக்க இஸ்ரவேலரை பெலிஸ்தர் வற்புறுத்தியபோது, யெகோவாவுடைய சக்தி ‘அவர் மேல் பலமாய் இறங்கினதினால், அவர் புயங்களில் கட்டியிருந்த கயிறுகள் நெருப்புப்பட்ட நூல்போலாகி, அவர் கட்டுகள் அவர் கைகளை விட்டு அறுந்து போயிற்று.’ (நியா. 15:14) அவருடைய தவறான முடிவால் உடல் பலத்தை இழந்திருந்த சமயத்திலும்கூட, “விசுவாசத்தினாலே” பலப்படுத்தப்பட்டார். (எபி. 11:32-34; நியா. 16:18-21, 28-30) அசாதாரண சூழ்நிலைகளின் காரணமாக யெகோவாவுடைய சக்தி விசேஷித்த விதத்தில் சிம்சோன்மீது பலமாக இறங்கியது. என்றாலும், இந்தச் சரித்திரப்பூர்வ சம்பவங்கள் நமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றன. எப்படி?
18, 19. (அ) சிம்சோனின் அனுபவம் நமக்கு என்ன உறுதி அளிக்கிறது? (ஆ) இந்தக் கட்டுரையில் பூர்வ கால விசுவாசிகளைப் பற்றிச் சிந்தித்ததிலிருந்து நீங்கள் எவ்வாறு நன்மை அடைந்திருக்கிறீர்கள்?
18 சிம்சோனைப் போல் நாமும் கடவுளுடைய சக்தியையே சார்ந்திருக்கிறோம். இயேசு தம் சீடர்களுக்குக் கட்டளையிட்ட வேலையைச் செய்கையில், அதாவது ‘மக்களிடம் பிரசங்கிக்கையிலும் முழுமையாகச் சாட்சி கொடுக்கையிலும்,’ கடவுளுடைய சக்தியையே சார்ந்திருக்கிறோம். (அப். 10:42) இந்த ஊழியத்தைச் செய்ய நமக்குத் திறமைகள் தேவைப்படுகின்றன; அவற்றை நாம் இயல்பாகவே பெற முடியாது. நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு வேலைகளைச் செய்து முடிக்க யெகோவா தம்முடைய சக்தியை அருளுவதற்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்! ஆகவே, ஊழியத்தைச் செய்யும்போது, ஏசாயா தீர்க்கதரிசியைப் போல நாமும் இவ்வாறு சொல்லலாம்: “பேரரசராகிய யெகோவாவே என்னை அனுப்பியிருக்கிறார், தமது சக்தியையும் அனுப்பியிருக்கிறார்.” (ஏசா. 48:16, NW) மோசே, பெசலெயேல், யோசுவா ஆகியோரின் திறமையை மெருகூட்டியதுபோல் நம் திறமையையும் யெகோவா மெருகூட்டுவார் என்ற உறுதியுடன் நாம் ஊழியத்தில் மிகுந்த ஆர்வத்தோடு ஈடுபடுகிறோம். அவர் கிதியோனையும் யெப்தாவையும் சிம்சோனையும் பலப்படுத்தியது போல நம்மையும் பலப்படுத்துவார் என்ற நம்பிக்கையுடன், ‘அவருடைய சக்தியினால் அருளப்பட்டிருக்கிற அவரது வார்த்தையை வாளாக எடுத்துக்கொள்கிறோம்.’ (எபே. 6:17, 18) இடையூறுகளைத் தாண்டிச்செல்ல யெகோவாவின் உதவியை எப்போதும் நாடும்போது, சிம்சோன் உடல் ரீதியில் பலவானாக இருந்ததுபோல் நாம் ஆன்மீக ரீதியில் பலவான்களாக இருப்போம்.
19 உண்மை வணக்கத்திற்காகத் தைரியமாய் நிலைநிற்கை எடுப்போரை யெகோவா ஆசீர்வதிக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலை நாம் ஏற்று நடந்தால், நம் விசுவாசம் பெருகும். ஆகவே, கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பூரிப்பூட்டும் சில சம்பவங்களைப் பற்றியும் சிந்தித்துப் பார்ப்பது நன்றாக இருக்கும். முதல் நூற்றாண்டில்... கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாளுக்கு முன்பும் சரி பின்பும் சரி... யெகோவாவின் சக்தி அவரது உண்மை ஊழியர்கள்மீது எப்படிச் செயல்பட்டதென அவை காட்டும். அடுத்த கட்டுரையில் அந்தச் சம்பவங்களைக் கவனிக்கலாம்.
இவர்கள்மீது கடவுளுடைய சக்தி செயல்பட்ட விதத்தை அறிவது உங்களுக்கு ஏன் உற்சாகம் தருகிறது:
• மோசே?
• பெசலெயேல்?
• யோசுவா?
• கிதியோன்?
• யெப்தா?
• சிம்சோன்?
[பக்கம் 22-ன் படம்]
கடவுளுடைய சக்தி சிம்சோனை உடல் ரீதியில் பலவானாக்கியது போல் நம்மை ஆன்மீக ரீதியில் பலவான்களாக்கும்
[பக்கம் 21-ன் படம்]
பெற்றோர்களே, உங்களைப் பார்த்து உங்கள் பிள்ளைகளும் பக்திவைராக்கியம் காட்டுவார்கள்