‘உறுதியோடும் தைரியத்தோடும் இருங்கள்’
‘உறுதியோடும் தைரியத்தோடும் இரு . . . உன் தேவனாகிய யெகோவா உன்னோடிருப்பார்.’ —யோசு. 1:7-9, ஈஸி டு ரீட் வர்ஷன்.
நீங்கள் எப்படிப் பதிலளிப்பீர்கள்?
என்னென்ன வழிகளில் ஏனோக்கும் நோவாவும் தைரியத்தைக் காட்டினார்கள்?
விசுவாசத்தையும் தைரியத்தையும் காட்டுவதில் பூர்வகால பெண்கள் சிலர் எப்படி எடுத்துக்காட்டாய் விளங்கினார்கள்?
இளைஞர்களில் யார் யாருடைய தைரியம் உங்கள் மனதைக் கவருகிறது?
1, 2. (அ) அன்றாட வாழ்வில் சரியானதைச் செய்வதற்குச் சில சமயங்களில் எது தேவை? (ஆ) நாம் என்ன கேள்விகளை ஆராயப்போகிறோம்?
தைரியம் என்பது பயம், கூச்சம், கோழைத்தனம் ஆகியவற்றிற்கு எதிர்ப்பதம். தைரியசாலியான ஒருவரைப் பலசாலியானவராக... வீரதீரமிக்கவராக... துணிச்சல்மிக்கவராக... நாம் நினைக்கலாம். ஆனால், அன்றாட வாழ்வில் சரியானதைத் தொடர்ந்து செய்வதற்கும்கூட சிலசமயங்களில் தைரியம் தேவை.
2 பைபிள் கதாபாத்திரங்களில் சிலர் மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளில் பயப்படாமல் இருந்தார்கள். வேறு சிலரோ அன்றாட சூழ்நிலைகளில்... யெகோவாவின் ஊழியர்களுக்குப் பொதுவாக ஏற்படுகிற சூழ்நிலைகளில்... தைரியத்தைக் காட்டினார்கள். தைரியத்திற்கு உதாரணமாய் விளங்கும் இவர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? நாம் எப்படித் தைரியத்தைக் காட்டலாம்?
தேவபக்தியற்ற உலகில் தைரியமாயிருந்த சாட்சிகள்
3. தேவபக்தியற்றவர்களைக் குறித்து ஏனோக்கு என்ன தீர்க்கதரிசனம் சொன்னார்?
3 நோவாவின் நாளில் பெருவெள்ளம் ஏற்படுவதற்கு முன்பு வாழ்ந்த பொல்லாதவர்கள் மத்தியில் யெகோவாவுக்குச் சாட்சியாய் இருக்க தைரியம் தேவைப்பட்டது. என்றாலும், “ஆதாமின் ஏழாம் தலைமுறையான ஏனோக்கு,” இந்தத் தீர்க்கதரிசனத்தை எல்லாருக்கும் தைரியத்துடன் அறிவித்தார்: “இதோ! யெகோவா தமது லட்சக்கணக்கான பரிசுத்த தூதர்களோடு எல்லாரையும் நியாயந்தீர்க்க வந்துவிட்டார்; தேவபக்தியற்ற எல்லாரும் தேவபக்தியற்ற விதத்தில் செய்த தேவபக்தியற்ற எல்லாச் செயல்களுக்காகவும், தேவபக்தியற்ற பாவிகள் தமக்கு விரோதமாகப் பேசிய அதிர்ச்சியூட்டும் பேச்சிற்காகவும் அவர்களைக் குற்றவாளிகளெனத் தீர்க்க வந்துவிட்டார்.” (யூ. 14, 15) அந்தத் தீர்க்கதரிசனம் நிச்சயம் நிறைவேறும் என்பதால் அது ஏற்கெனவே நடந்துவிட்டதைப் போல் ஏனோக்கு பேசினார். அதன்படியே, தேவபக்தியற்றவர்கள் பெருவெள்ளத்தில் அழிந்துபோனார்கள்!
4. எப்படிப்பட்ட சூழ்நிலைகள் மத்தியிலும் நோவா “கடவுளுடன் நடந்தார்”?
4 கி.மு. 2370-ல் பெருவெள்ளம் வந்தது, அதாவது ஏனோக்கு தீர்க்கதரிசனம் சொல்லி 650 ஆண்டுகளுக்குப்பின் வந்தது. இதற்கிடையே நோவா பிறந்தார்; பிற்பாடு தன் பிள்ளைகளோடு சேர்ந்து பேழையைக் கட்டினார். பொல்லாத தூதர்கள் மனித உருவெடுத்து வந்து அழகிய பெண்களுடன் உறவு கொண்டார்கள், அதனால் ராட்சதர்களுக்குத் தகப்பன் ஆனார்கள். அதோடு, மனிதனுடைய கெட்ட செயல்கள் பெருகின, மொத்தத்தில் இந்தப் பூமி வன்முறையினால் நிறைந்திருந்தது. (ஆதி. 6:1-5, 9, 11; NW) இப்படிப்பட்ட சூழ்நிலைகள் மத்தியிலும், நோவா “உண்மைக் கடவுளுடன் நடந்தார்,” தைரியமாய் ‘நீதியைப் பிரசங்கித்தார்.’ (2 பேதுரு 2:4, 5-ஐ வாசியுங்கள்.) கடைசி நாட்களில் நமக்கும் இப்படிப்பட்ட தைரியம் தேவை.
விசுவாசத்தையும் தைரியத்தையும் காட்டினார்கள்
5. விசுவாசத்தையும் தைரியத்தையும் மோசே எப்படிக் காட்டினார்?
5 விசுவாசத்திற்கும் தைரியத்திற்கும் மோசே எடுத்துக்காட்டாய் விளங்கினார். (எபி. 11:24-27) கி.மு. 1513 முதல் 1473 வரை, இஸ்ரவேலரை எகிப்திலிருந்து வனாந்தரத்திற்கு வழிநடத்திச் செல்ல அவரைக் கடவுள் பயன்படுத்தினார். அந்தப் பொறுப்புக்குத் தான் தகுதியற்றவர் என மோசே உணர்ந்தார், ஆனாலும் அதை ஏற்றுக்கொண்டார். (யாத். 6:12) அவரும் அவரது சகோதரர் ஆரோனும் எகிப்தின் கொடுங்கோலன் பார்வோனை மீண்டும் மீண்டும் சந்தித்துத் தைரியத்துடன் பேசினார்கள்; எகிப்திய தெய்வங்களுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தவும் இஸ்ரவேலரை விடுவிக்கவும் கடவுள் கொண்டுவரவிருந்த பத்து வாதைகளைப் பற்றி அறிவித்தார்கள். (யாத்., அதி. 7-12) இன்று கடவுள் நமக்குப் எப்போதும் பக்கபலமாக இருப்பது போலவே அன்று மோசேக்கும் பக்கபலமாக இருந்தார்; அதனால், மோசே விசுவாசமும் தைரியமும் காட்டினார்.—உபா. 33:27.
6. அதிகாரிகள் நம்மை விசாரணை செய்தால் எப்படித் தைரியமாய்ச் சாட்சி கொடுக்க முடியும்?
6 மோசேயைப் போல் நமக்கும் தைரியம் தேவை; ஏனென்றால் இயேசு இவ்வாறு கூறினார்: “நீங்கள் என்னுடைய சீடர்களாக இருப்பதால் உங்களை இழுத்துக்கொண்டு போய் ஆளுநர்களுக்கும் ராஜாக்களுக்கும் முன்பாக நிறுத்துவார்கள், அப்போது நீங்கள் அவர்களுக்கும் புறதேசத்தாருக்கும் சாட்சி கொடுப்பீர்கள். என்றாலும், அவர்கள் உங்களை நீதிமன்றங்களில் நிறுத்தும்போது, எப்படிப் பேசுவது என்றோ என்ன பேசுவது என்றோ கவலைப்படாதீர்கள். நீங்கள் பேச வேண்டியது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்; அப்போது நீங்களாகவே பேச மாட்டீர்கள், உங்கள் பரலோகத் தகப்பனுடைய சக்தி உங்களைப் பேச வைக்கும்.” (மத். 10:18-20) அதிகாரிகள் நம்மை விசாரணை செய்தால், விசுவாசத்தோடும் தைரியத்தோடும் அதேசமயத்தில் மரியாதையோடும் சாட்சி கொடுப்பதற்கு யெகோவாவின் சக்தி நமக்குத் துணைசெய்யும்.—லூக்கா 12:11, 12-ஐ வாசியுங்கள்.
7. எப்படி யோசுவாவால் தைரியமாக இருக்க முடிந்தது?
7 மோசேக்குப் பின்வந்த யோசுவா, திருச்சட்டத்தைத் தவறாமல் படித்துவந்ததால் மிகுந்த விசுவாசத்தையும் தைரியத்தையும் பெற்றார். கி.மு. 1473-ல், இஸ்ரவேலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழையும் தறுவாயில் இருந்தார்கள். “உறுதியோடும் தைரியத்தோடும் இரு” என்று யோசுவாவிடம் கடவுள் கட்டளையிட்டார். தம்முடைய சட்டத்திற்குக் கீழ்ப்படிந்தால் யோசுவா ஞானமாக நடந்துகொள்வார் என்றும் தன் பொறுப்பை நல்லபடியாக நிறைவேற்றுவார் என்றும் கடவுள் சொன்னார். ‘பயப்படாதே, நீ போகுமிடங்களில் எல்லாம் உன் தேவனாகிய யெகோவா உன்னோடிருப்பார்’ என அவருக்குச் சொல்லப்பட்டது. (யோசு. 1:7-9, ERV) இந்த வார்த்தைகள் யோசுவாவை எவ்வளவாய்ப் பலப்படுத்தியிருக்க வேண்டும்! நிச்சயமாகவே கடவுள் அவருடன் இருந்தார்; அதனால்தான் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் பெரும்பகுதியை ஆறே வருடங்களுக்குள், அதாவது கி.மு. 1467-க்குள், கைப்பற்ற முடிந்தது.
தைரியமாகக் கடவுளைச் சேவித்த பெண்கள்
8. ராகாப் எப்படி விசுவாசத்தையும் தைரியத்தையும் காட்டினாள்?
8 இத்தனை காலமாக, பெண்கள் பலரும் யெகோவாவின் சேவையில் தைரியத்தைக் காட்டியிருக்கிறார்கள். உதாரணமாக, எரிகோவைச் சேர்ந்த வேசியாகிய ராகாப், கடவுள்மீது விசுவாசத்தைக் காட்டினாள்; யோசுவாவால் அனுப்பப்பட்ட இரண்டு வேவுகாரர்களைத் தைரியத்துடன் ஒளித்துவைத்து, அவர்களைத் தேடிவந்த ஆட்களை வேறு பக்கமாக அனுப்பிவிட்டாள். இஸ்ரவேலர் எரிகோவைக் கைப்பற்றியபோது அவளும் அவளது குடும்பத்தினரும் காப்பாற்றப்பட்டார்கள். ராகாப் தனது தரங்கெட்ட தொழிலை விட்டுவிட்டு, யெகோவாவை உண்மையுடன் வணங்க ஆரம்பித்தாள்; பின்பு, மேசியாவின் மூதாதையரில் ஒருவரானாள். (யோசு. 2:1-6; 6:22, 23; மத். 1:1, 5) விசுவாசத்தையும் தைரியத்தையும் காட்டியதற்கு எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதத்தைப் பெற்றாள்!
9. தெபொராள், பாராக், யாகேல் ஆகியோர் எவ்வாறு தைரியத்தைக் காட்டினார்கள்?
9 சுமார் கி.மு. 1450-ல் யோசுவா இறந்தபின், இஸ்ரவேலில் நியாயாதிபதிகள் நியாயம் வழங்கிவந்தார்கள். யாபீன் என்ற கானானிய அரசன் 20 வருடங்களாக இஸ்ரவேலரை ஒடுக்கிவந்தான்; அந்தக் காலக்கட்டத்தில், நியாயாதிபதி பாராக் நடவடிக்கை எடுக்கும்படி தெபொராள் என்ற தீர்க்கதரிசினி மூலம் கடவுள் தூண்டினார். பாராக் 10,000 ஆட்களோடு தாபோர் மலைக்கு வந்து, யாபீனின் படைத்தளபதி சிசெராவுடன் போர்புரிய தயாராய் இருந்தார்; சிசெரா தன்னுடைய படையுடனும் 900 போர் ரதங்களுடனும் கீசோன் பள்ளத்தாக்கிற்கு வந்தான். இஸ்ரவேலர் பள்ளத்தாக்கை நோக்கி அணிவகுத்துச் சென்றபோது, கடவுள் பெருவெள்ளம் கரைபுரண்டோடச் செய்தார்; அதனால் போர்க்களம் சேறும் சகதியுமாய் ஆனது, கானானியருடைய ரதங்கள் அதில் சிக்கிக்கொண்டன. பாராக்கின் படைவீரர்கள் வெற்றி பெற்றார்கள், “சிசெராவின் சேனையெல்லாம் பட்டயக்கருக்கினால் விழுந்தது.” யாகேல் என்ற பெண்ணின் கூடாரத்திற்கு சிசெரா போனான்; ஆனால், அவன் தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் அவனை அவள் கொன்றுபோட்டாள். தெபொராள் மூலம் பாராக்கிற்குச் சொல்லப்பட்ட தீர்க்கதரிசன வார்த்தைகளுக்கு இசைவாக, இந்த வெற்றியின் “மேன்மை” யாகேலுக்குப் போய்ச் சேர்ந்தது. தெபொராள், பாராக், யாகேல் ஆகியோர் தைரியமாய்ச் செயல்பட்டதால், இஸ்ரவேல் “தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது.” (நியா. 4:1-9, 14-22; 5:20, 21, 31) இதுபோன்ற விசுவாசத்தையும் தைரியத்தையும் தேவபக்திமிக்க ஆண்கள், பெண்கள் பலர் காண்பித்திருக்கிறார்கள்.
நம் வார்த்தைகள் தைரியமூட்டலாம்
10. நம்முடைய வார்த்தைகள் மற்றவர்களுக்குத் தைரியத்தை அளிக்குமென எப்படிச் சொல்லலாம்?
10 நாம் சொல்லும் வார்த்தைகள் சக வணக்கத்தாருக்குத் தைரியமூட்டலாம். கி.மு. 11-ஆம் நூற்றாண்டில், தாவீது ராஜா தன்னுடைய மகன் சாலொமோனிடம் இவ்வாறு கூறினார்: ‘நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி; நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; தேவனாகிய யெகோவா என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார்; யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கடுத்த சகல கிரியைகளையும் நீ முடித்துத் தீருமட்டும், அவர் உன்னைவிட்டு விலகவுமாட்டார், உன்னைக் கைவிடவுமாட்டார்.’ (1 நா. 28:20) சாலொமோன் தைரியமாய்ச் செயல்பட்டு எருசலேமில் யெகோவாவுக்காக ஓர் அழகிய ஆலயத்தைக் கட்டினார்.
11. இஸ்ரவேல சிறுமி ஒருத்தி தைரியமாய்ப் பேசியதால் ஒருவர் எப்படி நன்மை அடைந்தார்?
11 கி.மு. 10-ஆம் நூற்றாண்டில், இஸ்ரவேல சிறுமி ஒருத்தி தைரியமாய்ப் பேசினாள்; அது குஷ்டரோகி ஒருவருக்கு ஆசீர்வாதமாய் அமைந்தது. அவள் கொள்ளையரால் பிடிக்கப்பட்டு, குஷ்டரோகம் பிடித்த சீரிய படைத்தளபதி நாகமானுக்கு வேலைக்காரியாக ஆக்கப்பட்டிருந்தாள். எலிசாவின் மூலம் யெகோவா செய்த அற்புதங்களை அவள் அறிந்திருந்ததால், அதைப் பற்றி நாகமானின் மனைவியிடம் கூறினாள்; அதாவது, நாகமான் இஸ்ரவேலுக்குப் போனால் கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய எலிசா அவரைக் குணப்படுத்துவார் என்று கூறினாள். நாகமான் இஸ்ரவேலுக்குப் போனான், அங்கே அற்புதமாய்க் குணப்படுத்தப்பட்டான், அதனால் யெகோவாவை வணங்குகிறவனாக ஆனான். (2 இரா. 5:1-3, 10-17) அந்தச் சிறுமியைப் போல் கடவுளை நேசிக்கிற ஓர் இளைஞராக நீங்கள் இருந்தால், உங்களுடைய ஆசிரியரிடமும் சக மாணவர்களிடமும் மற்றவர்களிடமும் சாட்சி கொடுக்கக் கடவுள் உங்களுக்குத் தைரியம் அளிப்பார்.
12. எசேக்கியா ராஜா சொன்ன வார்த்தைகளுக்கு மக்கள் எப்படிப் பிரதிபலித்தார்கள்?
12 கஷ்ட காலத்தில் நீங்கள் சொல்லும் நல் வார்த்தைகள் மற்றவர்களுக்குத் தைரியமூட்டலாம். கி.மு. எட்டாம் நூற்றாண்டில் அசீரியர்கள் எருசலேமுக்கு எதிராகப் படையெடுத்து வந்தபோது, எசேக்கியா ராஜா தன் குடிமக்களிடம் இவ்வாறு கூறினார்: ‘நீங்கள் திடன்கொண்டு தைரியமாயிருங்கள்; அசீரியா ராஜாவுக்கும் அவனோடிருக்கிற ஏராளமான கூட்டத்திற்கும் பயப்படாமலும் கலங்காமலுமிருங்கள்; அவனோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம். அவனோடிருக்கிறது மாம்ச புயம், நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய யெகோவாதானே.’ இந்த வார்த்தைகளுக்கு மக்கள் எப்படிப் பிரதிபலித்தார்கள்? “யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சொன்ன இந்த வார்த்தைகளின்மேல் ஜனங்கள் நம்பிக்கை வைத்தார்கள்”! (2 நா. 32:7, 8) எதிரிகள் நம்மைத் துன்புறுத்தும்போது இதுபோன்ற வார்த்தைகள் நமக்கும் சக கிறிஸ்தவர்களுக்கும் தைரியமூட்டலாம்.
13. தைரியத்திற்கு ஒபதியா எப்படி முன்மாதிரி வைத்தார்?
13 சிலசமயங்களில், நாம் எந்த வார்த்தைகளும் சொல்லாமல் இருப்பதும்கூட தைரியத்தைக் காட்டலாம். கி.மு. 10-ஆம் நூற்றாண்டில், ஆகாப் ராஜாவின் உணவு நிர்வாகி ஒபதியா யெகோவாவின் தீர்க்கதரிசிகளில் நூறு பேரை ‘கெபிக்கு ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்தார்.’ இவ்வாறு, பொல்லாத அரசி யேசபேலினால் அவர்கள் கொலை செய்யப்படாதபடி காப்பாற்றினார். (1 இரா. 18:4) கடவுள் பயமுள்ள ஒபதியாவைப் போல் இன்றும் யெகோவாவின் உண்மை ஊழியர்கள் பலர் இருக்கிறார்கள்; சக ஊழியர்களைப் பற்றிய தகவலைத் துன்புறுத்துகிறவர்களுக்குக் கொடுக்காமல் தைரியத்துடன் அவர்களைக் காப்பாற்றியிருக்கிறார்கள்.
எஸ்தர்—தைரியமிக்க ராணி
14, 15. எஸ்தர் ராணி எப்படி விசுவாசமும் தைரியமும் காட்டினாள், அதன் விளைவு என்ன?
14 எஸ்தர் ராணி காட்டிய மிகுந்த விசுவாசத்தையும் தைரியத்தையும் பற்றி இப்போது கவனிக்கலாம். கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் பெர்சியப் பேரரசில் வாழ்ந்துவந்த யூதர்கள் அனைவரும் பொல்லாத ஆமான் செய்த சதியினால் கொலை செய்யப்படும் ஆபத்தில் இருந்தார்கள். அதனால், அவர்கள் துக்கம் கொண்டாடினார்கள், விரதமிருந்தார்கள், அதோடு கடவுளிடம் உருக்கமாய் மன்றாடினார்கள். (எஸ்தர் 4:1-3) எஸ்தர் ராணியும் மிகவும் கலங்கினாள். யூதர்களைப் படுகொலை செய்ய பிறப்பிக்கப்பட்ட சட்டத்தின் ஒரு நகலை அவளுடைய உறவினர் மொர்தெகாய் அவளுக்கு அனுப்பி வைத்தார்; அதோடு, சக யூதர்களுக்காக ராஜாவிடம் பரிந்துபேசும்படி கட்டளையிட்டார். ஆனால், ராஜாவின் உத்தரவில்லாமல் அவரைச் சந்திக்கப்போகும் எவருக்கும் மரணம்தான்.—எஸ்தர் 4:4-11.
15 இருந்தாலும், எஸ்தருக்கு மொர்தெகாய் இவ்வாறு சொல்லி அனுப்பினார்: ‘நீ இப்போது அமைதியாக இருந்தால், விடுதலை வேறு இடத்திலிருந்து வரும். . . . யாருக்குத் தெரியும்? ஒருவேளை நீ இப்படிப்பட்ட காலத்தில் உதவுவதற்காகவே ராணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம்.’ யூதர்களை சூசானுக்கு வரச்சொல்லி அங்கே தன் சார்பாக விரதமிருக்கும்படி மொர்தெகாய்க்கு எஸ்தர் சொல்லி அனுப்பினாள். ‘நானும் உங்களைப் போன்றே விரதம் இருப்பேன். . . . பிறகு அரசனிடம் செல்வேன். அரசன் அழைக்காமல் போவது என்பது சட்டத்திற்கு எதிரானது என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் எவ்வாறாகிலும் செய்வேன். நான் மரித்தால் மரிக்கிறேன்’ என்று அவள் சொன்னாள். (எஸ்தர் 4:12-17, ERV) எஸ்தர் தைரியமாய்ச் செயல்பட்டாள், கடவுள் தமது மக்களை விடுதலை செய்தார் என்பதை அவளது பெயரிலுள்ள பைபிள் புத்தகம் காட்டுகிறது. நம் நாளில், பரலோக நம்பிக்கையுடைய கிறிஸ்தவர்களும் அவர்களுடன் சேர்ந்து உழைக்கும் மற்றவர்களும் கஷ்ட காலத்தில் இதுபோன்ற தைரியத்தைக் காண்பிக்கிறார்கள்; ‘ஜெபத்தைக் கேட்கிறவர்’ எப்போதும் அவர்கள் பக்கத்தில் இருக்கிறார்.—சங்கீதம் 65:2-ஐயும் 118:6-ஐயும் வாசியுங்கள்.
இயேசு காட்டிய தைரியம்
16. இயேசுவின் முன்மாதிரியிலிருந்து நம் இளைஞர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?
16 முதல் நூற்றாண்டில், 12 வயது இயேசு ஆலயத்தில் “போதகர்கள் நடுவில் உட்கார்ந்து, அவர்கள் சொல்வதைக் கவனித்துக்கொண்டும் அவர்களிடம் கேள்வி கேட்டுக்கொண்டும் இருந்தார். அவருடைய புத்திக்கூர்மையைக் கண்டும், அவர் சொன்ன பதில்களைக் கேட்டும் அங்கிருந்த எல்லாருமே மலைத்துப்போனார்கள்.” (லூக். 2:41-50) இயேசு சிறுவராக இருந்தபோதிலும், ஆலயத்திலிருந்த அனுபவமிக்க போதகர்களிடம் கேள்வி கேட்குமளவுக்கு விசுவாசத்தையும் தைரியத்தையும் பெற்றிருந்தார். கிறிஸ்தவ இளைஞர்கள் இயேசுவின் முன்மாதிரியை மனதில் வைக்கும்போது ‘தங்கள் நம்பிக்கையைக் குறித்துக் கேள்வி கேட்கிறவர்களுக்குப் பதில் சொல்ல’ கிடைக்கும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.—1 பே. 3:15.
17. ‘தைரியமாய் இருங்கள்’ என்று சொல்லி இயேசு ஏன் தம் சீடர்களை உந்துவித்தார், நாம் ஏன் தைரியமாய் செயல்பட வேண்டும்?
17 ‘தைரியமாய் இருங்கள்’ என்று சொல்லி மற்றவர்களையும் இயேசு உந்துவித்தார். (மத். 9:2, 22) அவர் தமது சீடர்களை நோக்கி, “வேளை வரும், ஏன், வந்தேவிட்டது; நீங்கள் சிதறடிக்கப்பட்டு ஒவ்வொருவரும் தன்தன் வீட்டிற்குப் போவீர்கள், என்னையோ தனியாக விட்டுவிடுவீர்கள்; என்றாலும், நான் தனியாக இல்லை, என் தகப்பன் என்னோடு இருக்கிறார். என் மூலம் உங்களுக்குச் சமாதானம் கிடைப்பதற்காகவே இதையெல்லாம் உங்களிடம் சொல்கிறேன். இந்த உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனால் தைரியமாயிருங்கள்! நான் இந்த உலகத்தை ஜெயித்துவிட்டேன்” என்றார். (யோவா. 16:32, 33) இயேசுவின் ஆரம்பகால சீடர்களைப் போல் நாமும் இந்த உலகத்தின் பகைமைக்கு ஆளாகிறோம், ஆனால் நாம் இந்த உலகத்தின் பாகமாக ஆகாதிருப்போமாக. கடவுளுடைய மகனின் தைரியமிக்க வாழ்க்கையைச் சிந்தித்துப் பார்ப்பது, இந்த உலகத்தால் கறைபடாதவாறு நம்மைக் காத்துக்கொள்ள தைரியத்தைக் கொடுக்கும். அவர் இந்த உலகத்தை ஜெயித்தார், நாமும் அதேபோல் ஜெயிக்க முடியும்.—யோவா. 17:16; யாக். 1:27.
‘தைரியமாயிருங்கள்!’
18, 19. அப்போஸ்தலன் பவுல் எவ்வாறு விசுவாசத்தையும் தைரியத்தையும் காட்டினார்?
18 அப்போஸ்தலன் பவுல் பல சோதனைகளைச் சகித்தார். ஒரு சந்தர்ப்பத்தில், ரோமப் படைவீரர்கள் அவரைக் காப்பாற்றியிருக்காவிட்டால் எருசலேமிலிருந்த யூதர்கள் அவரைப் பிய்த்துவிட்டிருப்பார்கள். அந்த இரவில், “பவுலின் அருகே எஜமானர் நின்று, ‘தைரியமாயிரு! எருசலேமில் நீ என்னைப் பற்றி முழுமையாகச் சாட்சி கொடுத்து வந்திருப்பது போல், ரோமாபுரியிலும் சாட்சி கொடுக்க வேண்டும்’ என்றார்.” (அப். 23:11) பவுல் அதைத்தான் செய்தார்.
19 கொரிந்துவிலிருந்த சபையைக் கெடுக்க முயன்ற “அருமை அப்போஸ்தலர்களை” பவுல் பயமின்றி தைரியமாய்க் கண்டித்தார். (2 கொ. 11:5; 12:11) அவர்களைப் போலில்லாமல், தான் அப்போஸ்தலன் என்பதற்கு அத்தாட்சியைக் காட்டினார்; ஆம், சிறைவாசம், அடிகள், ஆபத்துமிக்க பயணங்கள், பிரச்சினைகள், பசி, பட்டினி, தாகம், தூக்கமில்லா இரவுகள், சக விசுவாசிகளைப் பற்றிய ஆழ்ந்த கவலை ஆகியவற்றை அத்தாட்சியாகச் சுட்டிக்காட்டினார். (2 கொரிந்தியர் 11:23-28-ஐ வாசியுங்கள்.) இந்த எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஒப்பற்ற விசுவாசத்தையும் தைரியத்தையும் பவுல் வெளிக்காட்டினார்; இது, கடவுளே அவருக்குப் பலம் தந்திருந்ததை நிரூபித்தது!
20, 21. (அ) நமக்குத் தொடர்ந்து தைரியம் தேவை என்பதற்கு ஓர் உதாரணம் தருக. (ஆ) எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நாம் தைரியத்தைக் காட்ட வேண்டியிருக்கலாம், எதைக் குறித்து நாம் நிச்சயமாயிருக்கலாம்?
20 எல்லாக் கிறிஸ்தவர்களும் கடும் துன்புறுத்தலை எதிர்ப்பட மாட்டார்கள். ஆனால், வாழ்க்கையின் சவால்களைச் சந்திக்க எல்லாருக்கும் தைரியம் தேவை. இதற்கு ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள்: பிரேசிலைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் கலகக் கும்பலில் சேர்ந்திருந்தான். பைபிளைப் படித்த பிறகு, வாழ்க்கையில் மாற்றங்கள் செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தான்; ஆனால், அந்தக் கும்பலைவிட்டுப் போகிறவர்கள் பொதுவாகக் கொலை செய்யப்பட்டார்கள். அவன் கடவுளிடம் ஜெபம் செய்தான், பிறகு அந்தக் கும்பலின் தலைவனிடம் சென்று, தான் ஏன் அந்தக் கும்பலில் இனி இருக்க முடியாது என்பதை பைபிள் வசனங்களிலிருந்து எடுத்துக் காட்டினான். அந்தக் கும்பல் அவனை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டது, பிறகு அவன் ஒரு பிரஸ்தாபியாக ஆனான்.
21 நாம் நற்செய்தியை அறிவிக்க வேண்டுமானால் தைரியம் தேவை. கிறிஸ்தவ இளைஞர்கள் பள்ளியில் உத்தமத்தைக் காத்துக்கொள்ள வேண்டுமானால் தைரியம் தேவை. வேலைக்குப் போகிறவர்கள் மாநாட்டின் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள விடுப்பு கேட்க வேண்டுமானால் தைரியம் தேவை. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். என்றாலும், நாம் எதிர்ப்படும் சவால்கள் எதுவாக இருந்தாலும், ‘விசுவாசத்தோடு ஏறெடுக்கிற ஜெபத்தை’ யெகோவா நிச்சயம் கேட்பார். (யாக். 5:15) ‘உறுதியோடும் தைரியத்தோடும் இருப்பதற்கு’ அவர் நமக்குத் தமது சக்தியைக் கண்டிப்பாக அருளுவார்!
[பக்கம் 11-ன் படம்]
தேவபக்தியற்ற உலகில் ஏனோக்கு தைரியமாய்ப் பிரசங்கித்தார்
[பக்கம் 12-ன் படம்]
யாகேல் உறுதியோடும் தைரியத்தோடும் செயல்பட்டாள்