யெகோவாவுக்கு எப்போதும் முழு இருதயத்தோடு சேவை செய்யுங்கள்
“என் மகனே . . . உன் தகப்பனின் கடவுளை அறிந்துகொண்டு அவருக்கு முழு இருதயத்தோடு சேவை செய்.”—1 நா. 28:9, NW.
இந்தக் கேள்விகளுக்கு உங்கள் பதில்:
பைபிளில் இருதயம் எதைக் குறிக்கிறது?
நம் இருதயத்தைச் சோதித்துப் பார்ப்பதற்கான ஒரு வழி என்ன?
யெகோவாவுக்கு நாம் எப்படி முழு இருதயத்தோடு சேவை செய்யலாம்?
1, 2. (அ) உடலின் எந்த உறுப்பு கடவுளுடைய வார்த்தையில் அடிக்கடி உருவகப்படுத்திப் பேசப்படுகிறது? (ஆ) இருதயம் எதற்கு ஒப்பிடப்படுகிறது என்பதை நாம் புரிந்துகொள்வது ஏன் முக்கியம்?
கடவுளுடைய வார்த்தை பல சந்தர்ப்பங்களில் நம் உடல் உறுப்புகளை உருவகப்படுத்திப் பேசுகிறது. உதாரணத்திற்கு... ‘என் கைகளிலே கொடுமையில்லை’ என்று யோபு சொன்னார். ‘நற்செய்தி எலும்புகளைப் புஷ்டியாக்கும்’ என்று சாலொமோன் ராஜா கூறினார். ‘உன் நெற்றியை வச்சிரக்கல்லைப் போலாக்கினேன்’ என்று எசேக்கியேலுக்கு யெகோவா தைரியம் அளித்தார். ‘நூதனமான காரியங்களை எங்கள் காதுகள் கேட்கப்பண்ணுகிறாய்’ என்று பவுலிடம் சிலர் சொன்னார்கள்.—யோபு 16:17; நீதி. 15:30; எசே. 3:9; அப். 17:20, BSI.
2 என்றாலும், உடலின் ஓர் உறுப்பை மட்டும் பைபிள் அடிக்கடி உருவகப்படுத்திப் பேசுகிறது. அந்த உறுப்புதான் இருதயம். கடவுள்பக்தியுள்ள அன்னாள் ‘என் இருதயம் யெகோவாவுக்குள் களிகூருகிறது’ என்று ஜெபம் செய்தார். (1 சா. 2:1) பார்க்கப்போனால், பைபிள் எழுத்தாளர்கள் கிட்டத்தட்ட ஆயிரம் தடவை இருதயத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள், பெரும்பாலும் உருவகநடையில். இருதயத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று பைபிள் சொல்வதால் அது எதற்கு ஒப்பிடப்படுகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியது மிக மிக முக்கியம்.—நீதிமொழிகள் 4:23-ஐ வாசியுங்கள்.
“இருதயம்” எதைக் குறிக்கிறது?
3. “இருதயம்” என்று பைபிள் குறிப்பிடும் வார்த்தையின் அர்த்தத்தை நாம் எப்படிப் புரிந்துகொள்ளலாம்? ஓர் உதாரணத்தைக் கொடுங்கள்.
3 “இருதயம்” என்ற வார்த்தைக்கு அகராதியில் இருப்பதைப் போன்ற விளக்கத்தை பைபிள் அளிப்பதில்லை. என்றாலும், அது எதற்கு ஒப்பிடப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள பைபிள் உதவுகிறது. எப்படி? மிகச் சிறிய, ஆயிரக்கணக்கான வண்ண வண்ண கற்களை இணைத்து உருவாக்கப்பட்ட மொசைக்கு என்ற கல்லோவியத்தை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளுங்கள். சற்றுத் தள்ளி நின்று பார்த்தால்... ஒன்றோடொன்று நேர்த்தியாக இணைக்கப்பட்டிருக்கும் அந்தக் கற்கள் அழகிய சித்திரமாக உருவெடுத்திருக்கும். அதேபோல், பைபிளில் “இருதயம்” என்ற வார்த்தை இடம்பெறும் வசனங்களையெல்லாம் சற்று ஆராய்ந்து பார்த்தால், அதன் முழு உருவம் தெரியும், அதாவது அதன் முழு அர்த்தம் புரியும். அது என்ன என்று பார்க்கலாம்.
4. (அ) “இருதயம்” என்பது எதைக் குறிக்கிறது? (ஆ) மத்தேயு 22:37-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்?
4 ஒரு மனிதனின் முழு ஆளுமையைக் குறிப்பதற்கு பைபிள் எழுத்தாளர்கள் “இருதயம்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்கள். ஆளுமை என்று சொல்லும்போது அதில் நமது ஆசைகள், எண்ணங்கள், மனச்சாய்வு, குணங்கள், திறமைகள், உணர்ச்சிகள், லட்சியங்கள் ஆகிய அனைத்தும் அடங்கும். (உபாகமம் 15:7; நீதிமொழிகள் 16:9; அப்போஸ்தலர் 2:26 ஆகிய வசனங்களை வாசியுங்கள்.) இருதயம் என்பது, “மனித ஆளுமையின் மொத்த உரு” என்று ஒரு புத்தகம் குறிப்பிடுகிறது. என்றாலும், சில இடங்களில் “இருதயம்” என்பது மேலே சொல்லப்பட்ட எல்லாப் பண்பியல்புகளையும் குறிப்பதில்லை. உதாரணத்திற்கு, “உன் கடவுளாகிய யெகோவாமீது உன் முழு இருதயத்தோடும் உன் முழு மூச்சோடும் உன் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்” என்று இயேசு சொன்னார். (மத். 22:37) இந்த வசனத்தில், “இருதயம்” என்பது ஒரு மனிதனின் உள்ளெண்ணங்களையும், உணர்ச்சிகளையும், விருப்பங்களையும் குறிக்கிறது. முழு இருதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் என்று இயேசு சொன்னபோது, நம் உணர்ச்சிகளில் மட்டுமல்ல வாழும் விதத்திலும் யோசிக்கும் விதத்திலும் கடவுள்மீது நாம் வைத்திருக்கும் அன்பு வெளிப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். (யோவா. 17:3; எபே. 6:6) ஆனால், பொதுவாக “இருதயம்” என்று பைபிள் சொல்கையில், அது ஒரு மனிதனின் முழு ஆளுமையையே குறிக்கிறது.
இருதயத்தை ஏன் பாதுகாக்க வேண்டும்?
5. முழு இருதயத்தோடு யெகோவாவுக்குச் சேவை செய்ய நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வது ஏன் முக்கியம்?
5 சாலொமோனிடம் தாவீது ராஜா இவ்வாறு சொன்னார்: “என் மகனே . . . உன் தகப்பனின் கடவுளை அறிந்துகொண்டு அவருக்கு முழு இருதயத்தோடும் சந்தோஷமான உள்ளத்தோடும் சேவை செய்; ஏனென்றால், யெகோவா எல்லா இருதயங்களையும் ஆராய்பவர். நினைவுகள், உத்தேசங்கள் எல்லாவற்றையும் அறிபவர்.” (1 நா. 28:9, NW) ஆம், யெகோவா எல்லா இருதயங்களையும் சோதித்துப் பார்க்கிறார், நம்முடைய இருதயத்தையும்கூட. (நீதி. 17:3; 21:2) நம் இருதயத்தின் எண்ணங்கள் அவருக்குப் பிடித்திருந்தால் மட்டுமே நாம் அவருக்கு நண்பர்களாய் இருக்க முடியும், எதிர்காலத்தில் சந்தோஷமான வாழ்வையும் அனுபவிக்க முடியும். எனவே, தாவீதின் அறிவுரையை ஏற்று, முழு இருதயத்தோடு யெகோவாவுக்குச் சேவை செய்ய நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வது எவ்வளவு முக்கியம்!
6. கடவுளுக்குச் சேவை செய்ய வேண்டுமென்ற நம் தீர்மானத்திற்கு என்ன ஆகிவிடலாம்?
6 யெகோவாவின் சாட்சிகளாக ஊழியத்தில் நாம் ஊக்கமாய் ஈடுபட்டு வருவதன் மூலம்... அவருக்கு முழு இருதயத்தோடு சேவை செய்ய நாம் உள்ளூர விரும்புவதைக் காட்டுகிறோம். அதேசமயம், சாத்தானின் இந்தப் பொல்லாத உலகத்தின் அழுத்தங்களாலும்... நம் பாவச் சிந்தைகளாலும்... கடவுளுக்கு முழு இருதயத்தோடு சேவை செய்ய வேண்டுமென்ற நம் தீர்மானம் படிப்படியாக வலுவிழந்துவிடலாம் என்பதையும் அறிந்திருக்கிறோம். (எரே. 17:9; எபே. 2:2) அப்படி ஆகிவிடாமல் இருப்பதற்கு நம் இருதயத்தை நாம் தவறாமல் சோதித்துப் பார்க்க வேண்டும். எப்படிச் சோதித்துப் பார்க்கலாம்?
7. நம்முடைய இருதயத்தில் இருப்பதை எது படம்பிடித்துக் காட்டும்?
7 எப்படி ஒரு மரத்தின் மையப் பகுதியை யாராலும் பார்க்க முடியாதோ... அப்படியே நம் இருதயத்தில் இருப்பவற்றையும் எந்த மனிதனாலும் பார்க்க முடியாது. என்றாலும், எப்படி ஒரு மரத்தின் பழங்களை வைத்து அதை எடைபோட முடியுமோ... அப்படியே நம்முடைய செயல்களை வைத்து நம் இருதயத்தில் உண்மையில் என்ன இருக்கிறது என்பதை எடைபோட முடியும் என்று மலைப் பிரசங்கத்தில் இயேசு குறிப்பிட்டார். (மத். 7:17-20) அப்படிப்பட்ட செயல்களில் ஒன்றை மட்டும் இப்போது பார்ப்போம்.
இருதயத்தைச் சோதித்துப் பார்க்க ஒரு வழி
8. மத்தேயு 6:33-ன்படி நம் இருதயத்தில் என்ன இருக்கிறது என்பதை எப்படிக் காட்டுகிறோம்?
8 அதே மலைப் பிரசங்கத்தில்... யெகோவாவுக்கு முழு இருதயத்தோடு சேவை செய்ய உள்ளூர விரும்புவதைக் காட்ட ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்றும் இயேசு சொன்னார். “முதலாவது கடவுளுடைய அரசாங்கத்தையும் அவருடைய நீதிநெறிகளையும் நாடிக்கொண்டே இருங்கள், அப்போது இவற்றையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்” என்று அவர் சொன்னார். (மத். 6:33) ஆம், நம்முடைய ஆசைகள், யோசனைகள், திட்டங்கள் ஆகியவை வாழ்க்கையில் நாம் எதற்கு முதலிடம் கொடுக்கிறோம் என்பதைக் காட்டுகின்றன. எனவே, கடவுளுக்கு நாம் முழு இருதயத்தோடு சேவை செய்கிறோமா என்பதைச் சோதித்துப் பார்க்க ஒரு வழி... வாழ்க்கையில் நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதைக் கவனமாய்ச் சிந்தித்துப் பார்ப்பதே.
9. சிலருக்கு இயேசு என்ன அழைப்பைக் கொடுத்தார், அவர்களுடைய பதில்கள் எதை வெளிப்படுத்தின?
9 ‘முதலாவது கடவுளுடைய அரசாங்கத்தை நாடிக்கொண்டே இருங்கள்’ என்று இயேசு சொன்ன பிறகு நடந்த ஒரு சம்பவத்தைக் குறித்து பார்ப்போம். இந்தச் சம்பவம்... ஒரு மனிதன் வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறான் என்பதை வைத்து அவன் இருதயத்தில் என்ன இருக்கிறதென தெரிந்துகொள்ள முடியும் என்பதைக் காட்டுகிறது. இதைப் பற்றி லூக்கா எழுதுகையில்... எருசலேமில் துன்பங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை இயேசு நன்கு அறிந்திருந்தபோதிலும் “எருசலேமுக்குப் போக தீர்மானமாயிருந்தார்” என்று சொன்னார். தம்முடைய அப்போஸ்தலர்களுடன் ‘போய்க்கொண்டிருந்தபோது வழியிலே’ சிலரிடம் ‘என்னைப் பின்பற்றி வாருங்கள்’ என்று இயேசு சொன்னார். அவருடைய அழைப்பை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு விருப்பம் இருந்தபோதிலும்... அதற்குமுன் சில வேலைகளை முடித்துவிட்டு வருவதாகச் சொன்னார்கள். அவர்களில் ஒருவன், “முதலில் நான் போய் என் தகப்பனை அடக்கம் செய்துவிட்டு வர எனக்கு அனுமதி கொடுங்கள்” என்றான். இன்னொருவன், “எஜமானே, நான் உங்களைப் பின்பற்றி வருவேன்; ஆனால், என் வீட்டாரிடமிருந்து விடைபெற்று வர முதலில் என்னை அனுமதியுங்கள்” என்றான். (லூக். 9:51, 57-61) கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் உறுதியாயிருந்த இயேசுவுக்கும்... சாக்குப்போக்கு சொல்லி நழுவ பார்த்த இந்த மனிதர்களுக்கும்... எவ்வளவு வித்தியாசம்! இவர்கள் கடவுளுடைய அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்ட காரியங்களுக்கு அல்ல, தங்கள் சொந்த விருப்பங்களுக்கே முதலிடம் கொடுத்தார்கள். கடவுளுக்கு முழு இருதயத்தோடு சேவை செய்ய தங்களுக்கு விருப்பம் இல்லாததை அப்பட்டமாய்க் காட்டினார்கள்.
10. (அ) இயேசுவின் அழைப்புக்கு நாம் எப்படிப் பிரதிபலித்திருக்கிறோம்? (ஆ) இயேசு என்ன உவமையைச் சொன்னார்?
10 சாக்குப்போக்கு சொல்லிய அந்த மனிதர்களைப் போல் இல்லாமல் இயேசு கொடுத்த அழைப்பை ஏற்று நாள்தோறும் யெகோவாவுக்கு நாம் சேவை செய்து வருகிறோம். அவருக்கு நம் இருதயத்தில் உயர்ந்த இடம் கொடுத்திருப்பதை இதன் மூலம் வெளிக்காட்டுகிறோம். இப்படி... யெகோவாவின் சேவையில் நாம் சுறுசுறுப்பாய் ஈடுபட்டு வந்தாலும் நம்முடைய இருதயம் வழிதப்பிப் போகும் ஆபத்து இருக்கிறது. சாக்குப்போக்கு சொன்ன அந்தச் சீடர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது இயேசு இவ்வாறு சொன்னார்: “கலப்பையின் மேல் கை வைத்த பிறகு, பின்னால் இருப்பவற்றைத் திரும்பிப் பார்க்கிற எவனும் கடவுளுடைய அரசாங்கத்திற்குத் தகுதி இல்லாதவன்.” (லூக். 9:62) இந்த உவமையிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்?
‘நல்லதை இறுகப் பற்றிக்கொள்கிறோமா’?
11. இயேசுவின் உவமையில் வரும் வேலைக்காரன் என்ன செய்கிறார், ஏன்?
11 இயேசுவின் உவமையிலுள்ள பாடத்தை இன்னும் நன்கு புரிந்துகொள்ள கூடுதல் விவரங்களைச் சேர்த்து அதைக் கற்பனை செய்து பார்ப்போம். ஒரு வேலைக்காரன் வயலை மும்முரமாய் உழுதுகொண்டிருக்கிறார். அந்தச் சமயத்தில், வீட்டைப் பற்றிய நினைவுகளும் அவர் மனதில் ஓடிக்கொண்டிருக்கின்றன. வீட்டில் இருந்தால், குடும்பத்தாரோடும் நண்பர்களோடும் இருக்கலாம்... இதமான நிழலில் இனிமையான இசையைக் கேட்டு, சுவையான உணவை ருசித்து, சந்தோஷமாய்ச் சிரித்து மகிழலாம். அதற்காக அவர் ரொம்பவே ஏங்குகிறார். அந்த ஏக்கத்துடனேயே வெகு தூரம்வரை உழுகிறார். ஒரு கட்டத்தில் தன் ஆசையை அடக்க முடியாமல், “பின்னால் இருப்பவற்றைத் திரும்பிப் பார்க்கிறார்.” இன்னும் விதைப்பு முடியாததால் செய்வதற்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. என்றாலும், அவரால் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் ஒழுங்காக வேலை செய்வதில்லை. அவருடைய அரைகுறை வேலை எஜமானருக்கு வருத்தம் அளிக்கிறது.
12. இயேசுவின் உவமையில் வரும் வேலைக்காரனுக்கும் இன்றுள்ள சில கிறிஸ்தவர்களுக்கும் இடையே என்ன ஒற்றுமைகள் இருக்கின்றன?
12 இந்த உவமையை இப்போது நம்முடைய நாளுக்குப் பொருத்திப் பார்ப்போம். ஆன்மீகக் காரியங்களில் சுறுசுறுப்பாய் இருப்பதுபோல் தோன்றுகிற ஆனால் முழு இருதயத்தோடு யெகோவாவுக்குச் சேவை செய்யாத ஒரு கிறிஸ்தவருக்கு அந்த வேலைக்காரனை ஒப்பிடலாம். உதாரணத்திற்கு, ஒரு சகோதரர் கூட்டங்களுக்கும் ஊழியத்திற்கும் தவறாமல் செல்கிறார் என வைத்துக்கொள்வோம். ஒருபக்கம் இதிலெல்லாம் அவர் தவறாமல் கலந்துகொண்டாலும்... இன்னொரு பக்கம் இந்த உலகத்திலுள்ள சில காரியங்களை அடைவதைக் குறித்து சதா மனதுக்குள் அசைபோட்டுக் கொண்டிருக்கிறார். அவற்றிற்காக ரொம்பவே ஏங்குகிறார். அந்த ஏக்கத்துடனேயே, பல வருடங்கள் கடவுளுக்குச் சேவை செய்கிறார். ஆனால், ஒரு கட்டத்தில் அந்த ஆசை தீவிரமாகி “பின்னால் இருப்பவற்றை” திரும்பிப் பார்க்கிறார். ஊழியத்தில் செய்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறபோதிலும் ‘வாழ்வளிக்கும் வார்த்தையை அவர் இறுகப் பற்றிக்கொள்வதில்லை.’ அதனால், முன்பு போல் ஊழியத்தில் சுறுசுறுப்பாய் ஈடுபடுவதில்லை. (பிலி. 2:15) தம்முடைய ஊழியர்களில் ஒருவர் இப்படி நடந்துகொள்ளும்போது ‘அறுவடையின் எஜமானரான’ யெகோவா நிச்சயம் வருத்தப்படுவார்.—லூக். 10:2.
13. யெகோவாவுக்கு முழு இருதயத்தோடு சேவை செய்வதில் என்ன உட்பட்டிருக்கிறது?
13 இயேசுவின் உவமை கற்பிக்கும் பாடம் தெளிவாகப் புரிகிறது. சபைக் கூட்டங்களுக்குச் செல்வது, வெளி ஊழியத்தில் ஈடுபடுவது போன்ற சந்தோஷமும் திருப்தியும் தருகிற காரியங்களில் நாம் தவறாமல் ஈடுபடுகிறோம் என்றால் அது பாராட்டுக்குரியது. ஆனால், யெகோவாவுக்கு முழு இருதயத்தோடு சேவை செய்வதில் இவை மட்டுமல்ல, இன்னும் நிறைய உட்பட்டுள்ளன. (2 நா. 25:1, 2, 27) ஒரு கிறிஸ்தவர் ‘பின்னால் இருப்பவற்றை’ பற்றி, அதாவது இந்த உலகத்தின் சில காரியங்களைப் பற்றி, இன்னும் ஆசை ஆசையாய் நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்தால் கடவுளோடு தனக்குள்ள நல்லுறவை இழந்துவிடலாம். (லூக். 17:32) ‘பொல்லாததை அறவே வெறுத்து, நல்லதை இறுகப் பற்றிக்கொண்டால்’ மட்டுமே ‘கடவுளுடைய அரசாங்கத்திற்கு நாம் தகுதி உள்ளவர்களாய்’ இருப்போம். (ரோ. 12:9; லூக். 9:62) எனவே, சாத்தானின் உலகத்திலுள்ள எதுவும்—அது எத்தனை பயனுள்ளதாக, இன்பம் அளிப்பதாகத் தோன்றினாலும்—கடவுளுடைய அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்ட காரியங்களில் நாம் முழு இருதயத்தோடு ஈடுபடுவதற்குத் தடையாக இருக்க ஒருபோதும் அனுமதிக்காதிருப்போமாக!—2 கொ. 11:14; பிலிப்பியர் 3:13, 14-ஐ வாசியுங்கள்.
எப்போதும் ஜாக்கிரதையாய் இருங்கள்!
14, 15. (அ) யெகோவாவின் சேவையில் நம் ஊக்கத்தைக் குறைக்க சாத்தான் எவ்வாறு முயற்சி செய்கிறான்? (ஆ) சாத்தான் நம்மை எப்படித் தந்திரமாக ஏமாற்றுகிறான் என்பதை விளக்குங்கள்.
14 யெகோவா மீதான அன்பு நம்மையே அவருக்கு அர்ப்பணிக்கத் தூண்டியது. அதுமுதல், நம்மில் அநேகர் நீண்ட காலமாக யெகோவாவுக்கு முழு இருதயத்தோடு சேவை செய்து வந்திருக்கிறோம். இருந்தாலும், சந்தர்ப்பம் கிடைத்தால் நம்மை வீழ்த்திவிட சாத்தான் காத்துக்கொண்டுதான் இருக்கிறான். இன்னமும் நம் இருதயத்திற்கு குறிவைத்துக்கொண்டுதான் இருக்கிறான். (எபே. 6:12) ஆனால், காரணமே இல்லாமல் யெகோவாவிடமிருந்து திடீரென ஒருநாள் நாம் விலகி விடமாட்டோம் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். எனவே, “இவ்வுலகத்தின்” காரியங்களைத் தந்திரமாகப் பயன்படுத்தி... யெகோவாவுக்கு முழு இருதயத்தோடு சேவை செய்ய வேண்டுமென்ற நம் தீர்மானத்தை மெதுமெதுவாக வலுவிழக்கச் செய்ய முயலுகிறான். (மாற்கு 4:18, 19-ஐ வாசியுங்கள்.) சாத்தானின் இந்தத் தந்திரம் ஏன் பெரும்பாலும் பலிக்கிறது?
15 இதற்குப் பதில் தெரிந்துகொள்ள... 100 வாட்ஸ் பல்பு வெளிச்சத்தில் உட்கார்ந்து நீங்கள் ஒரு புத்தகத்தைப் படிப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். திடீரென அந்த பல்பு பழுதடைந்துவிடுகிறது. அறை இருட்டாகி விடுவதால் உடனடியாக பல்பை மாற்றுகிறீர்கள். இப்போது அறை மீண்டும் வெளிச்சமாகிவிடுகிறது. மறுநாள் அதே விளக்கொளியில் படிக்கிறீர்கள். ஆனால், உங்களுக்குத் தெரியாமல் யாரோ ஒருவர் அந்த 100 வாட்ஸ் பல்பை எடுத்துவிட்டு 95 வாட்ஸ் பல்பைப் போட்டிருக்கிறார். வெளிச்சம் சற்றே குறைந்திருப்பதை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? முடியாது. அதேபோல் மறுநாளும் அந்த 95 வாட்ஸ் பல்பை கழற்றிவிட்டு 90 வாட்ஸ் பல்பை அவர் மாட்டிவிடுகிறார். இப்போதும்கூட வெளிச்சம் லேசாகக் குறைந்திருப்பதை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. காரணம் என்ன? வெளிச்சம் படிப்படியாகக் குறைக்கப்பட்டிருப்பதால் உங்களால் வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதேபோல், சாத்தானுடைய இந்த உலகத்தின் செல்வாக்குகள்... யெகோவாவுக்குச் சேவை செய்வதற்கான நம் தீர்மானத்தை மெதுமெதுவாக வலுவிழக்கச் செய்யலாம். சாத்தானுடைய இந்தத் தந்திரம் பலித்துவிட்டால்... 100 வாட்ஸ் பல்புபோல் நாம் யெகோவாவின் சேவையில் காட்டிவந்த ஊக்கம் மெல்ல மெல்ல குறைந்துவிடலாம். ஒரு கிறிஸ்தவர் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால்... அவருடைய ஊக்கம் படிப்படியாகக் குறைவதை அவர் உணராமல் போகலாம்.—மத். 24:42; 1 பே. 5:8.
ஜெபம் மிக அவசியம்
16. சாத்தானின் தந்திரங்களுக்குப் பலியாகாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
16 சாத்தானின் இந்தத் தந்திரங்களுக்குப் பலியாகாமல் எப்போதும் யெகோவாவுக்கு முழு இருதயத்தோடு சேவை செய்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? (2 கொ. 2:11) நாம் ஜெபம் செய்வது மிக மிக அவசியம். ‘பிசாசின் சூழ்ச்சிகளை உறுதியோடு எதிர்த்து நிற்கும்படி’ சக கிறிஸ்தவர்களை பவுல் உற்சாகப்படுத்தினார். அதோடு, “எல்லாச் சந்தர்ப்பங்களிலும் . . . எல்லா விதமான ஜெபங்களையும் மன்றாட்டுகளையும் ஏறெடுங்கள்” என்றும் சொன்னார்.—எபே. 6:11, 18; 1 பே. 4:7.
17. இயேசுவின் ஜெபங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
17 சாத்தானை உறுதியோடு எதிர்த்து நிற்க இயேசுவைப் போல நாமும் ஜெபம் செய்யவேண்டும். யெகோவாவுக்கு எப்போதும் முழு இருதயத்தோடு சேவை செய்ய அவர் உள்ளூர விரும்பியதை அவருடைய ஜெபங்கள் காட்டின. உதாரணத்திற்கு, இயேசு மரிப்பதற்கு முந்தின இரவில் செய்த ஜெபத்தைப் பற்றி லூக்கா இவ்வாறு எழுதினார்: “கடும் வேதனையில் அவர் இன்னும் அதிக உருக்கமாய் ஜெபம் செய்துகொண்டிருந்தார்.” (லூக். 22:44) இயேசு இதற்கு முன்பும்கூட உருக்கமாய் ஜெபம் செய்திருந்தார். ஆனால், பூமியில் கடும் சோதனையை எதிர்ப்பட்ட இந்தச் சமயத்தில்... அவர் “அதிக உருக்கமாய்” ஜெபம் செய்தார். அவருடைய ஜெபம் கேட்கப்பட்டது. சில சமயங்களில் அதிக ஊக்கமாய் ஜெபம் செய்வது அவசியம் என்பதை இயேசுவின் இந்த உதாரணம் காட்டுகிறது. எனவே, சோதனைகள் கடுமையாக இருக்கும்போது... சாத்தானின் செல்வாக்கு பலமாக இருக்கும்போது... யெகோவாவின் பாதுகாப்பிற்காக நாம் “அதிக உருக்கமாய்” ஜெபம் செய்ய வேண்டும்.
18. (அ) ஜெபம் செய்வது சம்பந்தமாக நாம் என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும், ஏன்? (ஆ) நம் இருதயத்தைப் பாதிக்கும் சில காரியங்கள் யாவை, என்ன வழிகளில் பாதிக்கின்றன? (பக்கம் 16-லுள்ள பெட்டியைப் பாருங்கள்.)
18 அப்படி ஜெபம் செய்வதால் என்ன பயன்? பவுல் இவ்வாறு சொன்னார்: “எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை நன்றியுடன்கூடிய ஜெபத்தினாலும் மன்றாட்டினாலும் கடவுளுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்போது, எல்லாச் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட தேவசமாதானம் உங்கள் இருதயத்தை . . . காத்துக்கொள்ளும்.” (பிலி. 4:6, 7) ஆம், யெகோவாவுக்கு எப்போதும் முழு இருதயத்தோடு சேவை செய்ய நாம் ஊக்கமாக, அடிக்கடி ஜெபம் செய்வது மிக அவசியம். (லூக். 6:12) எனவே, ‘நான் ஊக்கமாய் ஜெபம் செய்கிறேனா? நான் அடிக்கடி ஜெபம் செய்கிறேனா?’ என உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். (மத். 7:7; ரோ. 12:12) உங்கள் பதில்... கடவுளுக்குச் சேவை செய்ய நீங்கள் எந்தளவு ஆசைப்படுகிறீர்கள் என்பதைக் காட்டும்.
19. எப்போதும் யெகோவாவுக்கு முழு இருதயத்தோடு சேவை செய்வதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள்?
19 வாழ்க்கையில் எதற்கு முதலிடம் கொடுக்கிறோமோ... அதை வைத்து நம் இருதயம் எப்படிப்பட்டது என்று எடைபோட முடியும் என்பதை இந்தக் கட்டுரையில் தெரிந்துகொண்டோம். உலகில் நாம் விட்டுவந்த காரியங்களோ... சாத்தானின் தந்திரங்களோ... யெகோவாவுக்கு முழு இருதயத்தோடு சேவை செய்ய வேண்டுமென்ற நம் தீர்மானத்தைக் குலைத்துப்போடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். (லூக்கா 21:19, 34-36-ஐ வாசியுங்கள்.) எனவே, “என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்” என்று கேட்ட தாவீதைப்போல் நாமும் யெகோவாவிடம் எப்போதும் மன்றாடுவோமாக.—சங். 86:11.
[பக்கம் 16-ன் பட்டி]
நம் இருதயத்தைப் பாதுகாக்க மூன்று வழிகள்
நம் இருதயத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கிறோம். அதேபோல், அடையாள அர்த்தமுள்ள இருதயத்தைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு இதோ மூன்று வழிகள்:
1 ஊட்டச் சத்து: நம் இருதயம் நலமுடன் இருக்க நாம் போதுமானளவு ஊட்டச் சத்தைப் பெற வேண்டும். அதேபோல், ஆன்மீக ரீதியில் நாம் போதுமானளவு ஊட்டச் சத்தைப் பெற... தனிப்பட்ட படிப்பு, தியானம், கூட்டங்கள் ஆகியவற்றில் தவறாமல் ஈடுபட வேண்டும்.—சங். 1:1, 2; நீதி. 15:28; எபி. 10:24, 25.
2 உடற்பயிற்சி: நம் இருதயம் ஆரோக்கியமாக இருக்க சில சமயங்களில் இரத்த ஓட்டத்தைத் துரிதப்படுத்த வேண்டும். அதேபோல், நம் அடையாள அர்த்தமுள்ள இருதயம் ஆரோக்கியமாய் இருக்க... ஊழியத்தில் நாம் ஊக்கமாய் ஈடுபட வேண்டும். முடிந்தால் இன்னும் அதிகமாய் ஊழியம் செய்ய வேண்டும்.—லூக். 13:24; பிலி. 3:12.
3 சுற்றுச்சூழல்: தேவபக்தியற்ற சூழலில் வாழ்வதும் வேலை செய்வதும் நம் இருதயத்திற்கு மட்டுமல்ல, அடையாள அர்த்தமுள்ள இருதயத்திற்கும்கூட மிகுந்த அழுத்தத்தைக் கொடுக்கிறது. என்றாலும், நம்மீது உண்மையான அன்பையும் அக்கறையையும் காட்டுகிற... யெகோவாவுக்கு முழு இருதயத்தோடு சேவை செய்கிற... சகோதர சகோதரிகளுடன் அடிக்கடி கூட்டுறவுகொள்வதன் மூலம் இந்த அழுத்தத்தைக் குறைக்கலாம்.—சங். 119:63; நீதி. 13:20.