மீட்பு பெறுவதற்காக யெகோவா நம்மைப் பாதுகாக்கிறார்
‘விசுவாசத்தின் மூலம் கடைசிக் காலத்தில் வெளிப்படுத்தப்படும் மீட்புக்கென்று கடவுளுடைய வல்லமையால் [நீங்கள்] பாதுகாக்கப்பட்டு வருகிறீர்கள்.’—1 பே. 1:5.
என்ன பதிலளிப்பீர்கள்?
உண்மை வழிபாட்டிடம் யெகோவா நம்மை எப்படி ஈர்த்தார்?
யெகோவாவின் ஆலோசனையிலிருந்து பயனடைய நாம் என்ன செய்ய வேண்டும்?
யெகோவா நமக்கு எந்த வகையில் உற்சாகமூட்டுகிறார்?
1, 2. (அ) முடிவுவரை உண்மையாய் இருக்கக் கடவுள் நமக்கு உதவுவார் என ஏன் நம்பிக்கையாய் இருக்கலாம்? (ஆ) நம் ஒவ்வொருவரையும் பற்றி யெகோவா எந்தளவு அறிந்து வைத்திருக்கிறார்?
“முடிவுவரை சகித்திருப்பவனே மீட்புப் பெறுவான்.” (மத். 24:13) இந்த வசனம் எதைச் சுட்டிக்காட்டுகிறது? சாத்தானின் உலகைக் கடவுள் அழிக்கையில் நாம் பாதுகாக்கப்படுவதற்கு முடிவுவரை உண்மையாய் இருக்க வேண்டும் என்பதையே சுட்டிக்காட்டுகிறது. ஆனால், முடிவுவரை உண்மையாயிருக்க நம்முடைய சொந்த புத்தியையும் பலத்தையுமே சார்ந்திருக்க வேண்டுமென யெகோவா எதிர்பார்ப்பதில்லை. “கடவுள் நம்பகமானவர்; உங்களால் தாங்கிக்கொள்ள முடியாதளவுக்கு நீங்கள் சோதிக்கப்பட அவர் அனுமதிக்க மாட்டார்; மாறாக, சோதனையை நீங்கள் சகித்துக்கொள்வதற்கு வழிசெய்வார்” என்று பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது. (1 கொ. 10:13) இதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?
2 தாங்கிக்கொள்ள முடியாதளவுக்கு நமக்குச் சோதனைகள் வர யெகோவா நிச்சயம் அனுமதிக்கமாட்டார். அப்படியென்றால், அவர் நம்மைப் பற்றி முழுமையாய் அறிந்திருக்க வேண்டும். நாம் என்னென்ன பிரச்சினைகளை எதிர்ப்படுகிறோம், நாம் எப்படிப்பட்டவர்கள், நம்மால் எந்தளவு மட்டுமே தாங்கிக்கொள்ள முடியும்... என எல்லா விவரங்களையும் அவர் அறிந்திருக்க வேண்டும். கடவுள் உண்மையிலேயே நம்மைப் பற்றி அந்தளவு அறிந்து வைத்திருக்கிறாரா? ஆம் அறிந்து வைத்திருக்கிறார். நம் ஒவ்வொருவரையும் பற்றி யெகோவா அணு அணுவாக அறிந்து வைத்திருக்கிறார் என்று பைபிள் சொல்கிறது. நம் அன்றாடச் செயல்களையும் பழக்கவழக்கங்களையும் அவர் நன்கு அறிந்து வைத்திருக்கிறார். நம் மனதில் ஓடும் எண்ணங்களையும்கூட அவர் அறிந்து வைத்திருக்கிறார்.—சங்கீதம் 139:1-6-ஐ வாசியுங்கள்.
3, 4. (அ) நம் ஒவ்வொருவர் மீதும் யெகோவா அக்கறையாய் இருக்கிறார் என்பதை தாவீதின் அனுபவம் எப்படிக் காட்டுகிறது? (ஆ) இன்றும்கூட யெகோவா நம்மிடம் எப்படி அக்கறை காட்டுகிறார்?
3 சர்வவல்லமை படைத்த கடவுளுக்கு அற்ப மனிதர்களாகிய நம்மீது உண்மையிலேயே அந்தளவு அக்கறை இருக்கிறதா? சங்கீதக்காரன் தாவீதும் அதேபோல் யோசித்தார். அதனால்தான், ‘உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கு . . . அவன் எம்மாத்திரம்” என்று யெகோவாவிடம் கேட்டார். (சங். 8:3, 4) ஒருவேளை தாவீது தன்னை மனதில் வைத்தே இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கலாம். ஈசாயின் கடைசி மகனான தாவீது ஒரு சாதாரண மேய்ப்பனாக இருந்தபோதே யெகோவா அவரை ‘தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனாக’ கருதினார். ‘ஆடுகளின் பின்னே நடந்த’ அவரை ‘இஸ்ரவேல் ஜனங்களுக்கு அதிபதியாயிருக்கும்படி’ தேர்ந்தெடுத்தார். (1 சா. 13:14; 2 சா. 7:8) ‘அண்டத்தையே படைத்தவர் ஆடு மேய்க்கும் இந்தச் சிறுவனின் உணர்ச்சிகளை அறிந்திருக்கிறாரே’ என்று எண்ணி தாவீது வியந்துபோனார்!
4 இன்றும்கூட யெகோவா நம் ஒவ்வொருவர் மீதும் அக்கறை காட்டுவது நம்மை வியக்கவைக்கிறது. ‘சகல தேசங்களிலும் உள்ள விரும்பத்தக்க’ மக்கள் தம்முடைய வணக்கத்தாராக இருப்பதற்கு யெகோவா அவர்களைக் கூட்டிச் சேர்க்கிறார். (ஆகா. 2:7, NW) அவர்கள் என்றும் தமக்கு உண்மையாய் இருப்பதற்கும் உதவுகிறார். அவர் எப்படி உதவுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள... உண்மை வழிபாட்டிடம் மக்களை அவர் எப்படி ஈர்க்கிறார் என்பதை முதலாவது சிந்திப்போம்.
கடவுளே நம்மை ஈர்க்கிறார்
5. யெகோவா எப்படி மக்களை தமது மகனிடம் ஈர்க்கிறார்? உதாரணம் தருக.
5 “என்னை அனுப்பிய தகப்பன் ஒருவனை ஈர்க்காவிட்டால் எவனும் என்னிடம் வர முடியாது” என்று இயேசு சொன்னார். (யோவா. 6:44) இந்த வார்த்தைகள்... கடவுளுடைய உதவி இருந்தால் மட்டுமே ஒருவர் கிறிஸ்துவின் சீடராக முடியும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. செம்மறியாடு போன்ற குணம் படைத்தவர்களை யெகோவா எப்படித் தமது மகனிடம் ஈர்க்கிறார்? பிரசங்க வேலையின் மூலமும் தமது சக்தியின் மூலமும் ஈர்க்கிறார். உதாரணத்திற்கு, பவுலும் அவரது பயணத் தோழர்களும் பிலிப்பியில் இருந்தபோது லீதியாள் என்ற பெண்மணியைச் சந்தித்து, அவளிடம் நற்செய்தியை அறிவித்தார்கள். அப்போது, “பவுல் சொன்ன விஷயங்களை ஏற்றுக்கொள்ளும்படி யெகோவா அவளுடைய இருதயத்தை முழுமையாகத் திறந்தார்” என்று பைபிள் சொல்கிறது. அந்த விஷயங்களை அவள் புரிந்துகொள்ள கடவுள் தமது சக்தியை அருளினார். அதன் விளைவாக, அவளும் அவளது குடும்பத்தாரும் ஞானஸ்நானம் பெற்றார்கள்.—அப். 16:13-15.
6. உண்மை வழிபாட்டிடம் நம் எல்லாரையும் கடவுள் எப்படி ஈர்த்தார்?
6 லீதியாளுக்கு மட்டுமே கடவுள் அப்படி உதவினாரா? இல்லவே இல்லை. நீங்கள் ஞானஸ்நானம் பெற்றவர் என்றால், உங்களையும் உண்மை வழிபாட்டிடம் ஈர்த்தவர் கடவுளே. நம் பரலோகத் தகப்பன் லீதியாளிடம் ஏதோ நல்லதைப் பார்த்ததைப் போலவே உங்களிடமும் ஏதோ நல்லதைப் பார்த்தார். நற்செய்தியை நீங்கள் கேட்க ஆரம்பித்தபோது அதைப் புரிந்துகொள்ள தமது சக்தியை உங்களுக்கு அருளினார். (1 கொ. 2:11, 12) கற்றுக்கொண்டவற்றைக் கடைப்பிடிக்க முயற்சி எடுத்தபோது உங்களை ஆசீர்வதித்தார். உங்கள் வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணித்தபோது உள்ளம் மகிழ்ந்தார். ஆம், முடிவில்லா வாழ்வுக்கான பாதையில் நீங்கள் அடியெடுத்து வைத்த நாள்முதல் யெகோவா உங்களுக்கு உதவி வருகிறார்.
7. நாம் கடவுளுக்கு என்றும் உண்மையாய் இருக்க அவர் உதவுவார் என்று நமக்கு எப்படித் தெரியும்?
7 யெகோவாவுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தபோது அவர் நமக்கு எப்படி உதவினாரோ அப்படியே நாம் என்றும் உண்மையாய் இருக்கவும் உதவுவார். நாமாகவே சத்தியத்திற்குள் வராததால் அவரது துணையில்லாமல் சத்தியத்தில் நிலைத்திருக்க நம்மால் முடியாது என்பதும் அவருக்குத் தெரியும். எனவேதான், பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு எழுதினார்: ‘விசுவாசத்தின் மூலம் கடைசிக் காலத்தில் வெளிப்படுத்தப்படும் மீட்புக்கென்று கடவுளுடைய வல்லமையால் [நீங்கள்] பாதுகாக்கப்பட்டு வருகிறீர்கள்.’ (1 பே. 1:5) அன்று பேதுரு எழுதிய வார்த்தைகள் இன்றுள்ள எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும். ஏன்? ஏனென்றால், கடவுளுக்கு என்றும் உண்மையாய் இருக்க நம் அனைவருக்குமே அவருடைய உதவி தேவை.
தவறு செய்யாதிருக்க உதவுகிறார்
8. நமக்கே தெரியாமல் நாம் எப்படிப் படுமோசமான தவறைச் செய்துவிடலாம்?
8 வாழ்க்கைச் சுமைகளும் அபூரணமும் நம்மை அழுத்தும்போது கடவுளுடைய கண்ணோட்டத்தை நாம் இழந்துவிடலாம். அப்போது நமக்கே தெரியாமல் படுமோசமான தவறைச் செய்துவிடலாம். (கலாத்தியர் 6:1-ஐ வாசியுங்கள்.) இதுதான் ஒருமுறை தாவீதின் வாழ்க்கையிலும் நடந்தது.
9, 10. தவறு செய்யாதபடி தாவீதை யெகோவா எப்படித் தடுத்தார், இன்று நமக்கு அவர் எப்படி உதவுகிறார்?
9 பொறாமைபிடித்த சவுல் ராஜா தன்னை வேட்டையாட அலைந்துகொண்டிருந்த சமயத்தில்கூட தாவீது சுயகட்டுப்பாட்டை இழக்காமல் மிகுந்த தன்னடக்கத்துடன் நடந்துகொண்டார். சவுலைத் தீர்த்துக்கட்ட வாய்ப்புக் கிடைத்தும் அவர் பழிவாங்கவில்லை. (1 சா. 24:2-7) இன்னொரு சந்தர்ப்பத்திலோ அவர் தன் கட்டுப்பாட்டை இழந்துவிட்டார். அவருக்கும் அவரோடிருந்த ஆட்களுக்கும் உணவும் தண்ணீரும் தேவைப்பட்டபோது, நாபால் என்ற இஸ்ரவேலனிடம் தங்களுக்கு உதவும்படி தயவாய்க் கேட்டார். அவன் உதவ மறுத்ததோடு தாவீதைப் பற்றித் தாறுமாறாகவும் பேசிவிட்டான். தாவீது கோபத்தில் கொதித்தெழுந்தார். பழிபாவம் அறியாத நாபாலின் குடும்பத்தாரை வெட்டி வீழ்த்தினால் அந்த இரத்தப்பழியை யெகோவா தன்னிடம் கேட்பாரே என்பதை ஒரு கணம் மறந்துவிட்டார். அவனையும் அவனுடைய குடும்பத்தாரையும் பூண்டோடு அழிக்கப் புறப்பட்டார். சரியான சமயத்தில் நாபாலின் மனைவி அபிகாயில் தலையிட்டு தாவீது பயங்கர பாவத்தைச் செய்யாதபடி அவரைத் தடுத்தாள். தவறு செய்துவிடாதபடி யெகோவா தன்னைத் தடுப்பதை தாவீது புரிந்துகொண்டார். அதனால் அபிகாயிலிடம், ‘உன்னை இன்றைய தினம் என்னைச் சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு ஸ்தோத்திரம். நீ சொல்லிய யோசனை ஆசீர்வதிக்கப்படுவதாக; நான் இரத்தம் சிந்த வராதபடிக்கும், என் கையே பழிவாங்காதபடிக்கும், நீ இன்றைய தினம் எனக்குத் தடை பண்ணினபடியினால், நீயும் ஆசீர்வதிக்கப்படுவாயாக’ என்று சொன்னார்.—1 சா. 25:9-13, 21, 22, 32, 33.
10 இந்தப் பதிவிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? தாவீது தவறு செய்யாதபடி அபிகாயில் மூலம் யெகோவா அவரைத் தடுத்தார். அவ்வாறே... தவறு செய்யாதபடி நம்மையும் அவர் தடுக்கிறார். அதற்காக, நாம் படுமோசமான தவறைச் செய்யப்போகிற சமயத்திலெல்லாம் அவர் யாரையாவது அனுப்பி நம்மைத் தடுப்பாரென எதிர்பார்க்கக் கூடாது. அதேசமயம், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அவர் எப்படிச் செயல்படுவார்... தம்முடைய நோக்கத்தை நிறைவேற்ற எதையெல்லாம் அனுமதிப்பார்... என்பது நமக்குத் தெரியாததால் நாமாகவே எதையும் ஊகித்துக்கொள்ளக் கூடாது. (பிர. 11:5) என்றாலும், நம்முடைய சூழ்நிலைகளை யெகோவா எப்போதும் அறிந்து வைத்திருக்கிறார்... அவருக்கு என்றும் உண்மையுடன் இருக்க உதவுவார்... என நாம் உறுதியாய் நம்பலாம். ஏனென்றால், “நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” என்று அவர் நமக்கு உறுதியளிக்கிறார். (சங். 32:8) அவர் நமக்கு எப்படி ஆலோசனை கொடுக்கிறார்? அதிலிருந்து நாம் எப்படிப் பயனடையலாம்? இன்று தம்முடைய மக்களை யெகோவாதான் வழிநடத்துகிறார் என்று எப்படி உறுதியாய்ச் சொல்லலாம்? இந்தக் கேள்விகளுக்கு வெளிப்படுத்துதல் புத்தகம் பதிலளிக்கிறது.
ஆலோசனை கொடுத்து உதவுகிறார்
11. கிறிஸ்தவ சபைகளில் என்ன நடக்கிறது என்பதை யெகோவா எந்தளவு அறிந்து வைத்திருக்கிறார்?
11 ஆசியா மைனரிலுள்ள ஏழு சபைகளையும் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் இயேசு கிறிஸ்து கண்காணித்ததாக வெளிப்படுத்துதல் 2-ஆம், 3-ஆம் அதிகாரங்களில் உள்ள தரிசனம் குறிப்பிடுகிறது. பொதுவாக அந்தச் சபைகள் எப்படி இருந்தன என்பதை மட்டுமல்ல, அவற்றில் என்ன குறைகள் இருந்தன என்பதையும் கிறிஸ்து கவனித்தார். அவற்றிலிருந்த தனி நபர்கள் சிலரைப் பற்றியும் அவர் குறிப்பிட்டார். அதோடு, ஒவ்வொரு சபைக்கும் தேவைப்பட்ட ஆலோசனையை வழங்கினார். அவற்றிற்குரிய பாராட்டையும் தெரிவித்தார். இந்தத் தரிசனத்திலிருந்து நாம் என்ன புரிந்துகொள்கிறோம்? அந்த ஏழு சபைகள்... 1914-க்குப் பிறகு வாழ்ந்த/வாழ்கிற பரலோக நம்பிக்கையுள்ளவர்களைக் குறிக்கின்றன. அந்தச் சபைகளுக்கு கிறிஸ்து கொடுத்த ஆலோசனை... முக்கியமாய்ப் பரலோக நம்பிக்கை உள்ளவர்களுக்காகக் கொடுக்கப்பட்டாலும், இன்று உலகெங்குமுள்ள அனைத்து கிறிஸ்தவ சபைகளுக்குமே அது பொருந்தும். எனவே, இன்று தமது மகன் மூலம் யெகோவா தம் மக்களை வழிநடத்துகிறார் என்று உறுதியாய்ச் சொல்லலாம். அவருடைய வழிநடத்துதலிலிருந்து நாம் எப்படிப் பயனடையலாம்?
12. யெகோவாவின் வழிநடத்துதலிலிருந்து பயனடைய என்ன செய்ய வேண்டும்?
12 யெகோவா தரும் அன்பான வழிநடத்துதலிலிருந்து நாம் பயனடைய ஒரு வழி—தனிப்பட்ட படிப்பு. உண்மையும் விவேகமும் உள்ள அடிமை வகுப்பார் தரும் பிரசுரங்கள் வாயிலாக யெகோவா ஏராளமான ஆலோசனைகளை அள்ளி வழங்குகிறார். (மத். 24:45) அவற்றிலிருந்து பயனடைய... படிப்புக்கு நேரம் ஒதுக்க வேண்டும், கற்றுக்கொண்டவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். ‘பாவக்குழியில் விழாதபடி [நம்மைப்] பாதுகாக்க’ யெகோவா ஏற்பாடு செய்திருக்கும் வழிகளில் ஒன்றுதான் தனிப்பட்ட படிப்பு. (யூ. 24) நமது பிரசுரங்களை வாசிக்கும்போது ‘இது எனக்காகவே எழுதப்பட்டிருக்கிறது’ என்று எப்போதாவது நீங்கள் நினைத்ததுண்டா? அந்த ஆலோசனையை யெகோவாவே உங்களுக்குக் கொடுப்பதாக நினையுங்கள். நண்பர் ஒருவர் தோளைத் தட்டி நம் தவறைச் சுட்டிக்காட்டுவதுபோல், யெகோவா தமது சக்தியின் மூலம் நம் பழக்கத்தை அல்லது குணத்தை மாற்றிக்கொள்ளும்படி நமக்குச் சுட்டிக்காட்டலாம். கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலை ஏற்றுக்கொள்ளும்போது யெகோவா நம்மை வழிநடத்த அனுமதிக்கிறோம். (சங்கீதம் 139:23, 24-ஐ வாசியுங்கள்.) அப்படியானால், தனிப்பட்ட படிப்புக்கு நாம் எவ்வளவு நேரம் செலவிடுகிறோம்?
13. தனிப்பட்ட படிப்புக்கு எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்ப்பது ஏன் நல்லது?
13 பொழுதுபோக்குக்காக எக்கச்சக்கமான நேரத்தைச் செலவிட்டால் தனிப்பட்ட படிப்புக்கு நேரமில்லாமல் போய்விடலாம். ஒரு சகோதரர் இவ்வாறு சொல்கிறார்: “தனிப்பட்ட படிப்புக்கு நேரமில்லாமல் போவதற்கு இன்றைக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. இன்று பொழுதுபோக்குகள் குவிந்து கிடக்கின்றன, குறைந்த விலையிலும் கிடைக்கின்றன. டிவி, கம்ப்யூட்டர், ஃபோன்... எதைத் தட்டினாலும் பொழுதுபோக்குக்குப் பஞ்சமில்லை. இன்று திரும்பிய பக்கமெல்லாம் பொழுதுபோக்குதான்.” கவனமாக இல்லையென்றால், நாம் கருத்தூன்றிப் படிக்கச் செலவிடும் நேரத்தை அவை கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சிவிடும்... கடைசியில் படிக்கவே நேரமில்லாமல் போய்விடும். (எபே. 5:15-17) எனவே, நாம் ஒவ்வொருவரும் இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘கடவுளுடைய வார்த்தையை ஆராய்ந்து படிக்க நான் எப்போதெல்லாம் நேரம் செலவிடுகிறேன்? சபையில் பேச்சுக் கொடுக்க வேண்டும் அல்லது கூட்ட நிகழ்ச்சிகளைக் கையாள வேண்டும் என்றால் மட்டுமே அவற்றைத் தயாரிப்பதற்கு நேரம் செலவிடுகிறேனா?’ அப்படியென்றால், தனிப்பட்ட படிப்புக்கு அல்லது குடும்ப வழிபாட்டுக்கு நாம் ஒதுக்கியிருக்கும் நேரத்தை, பைபிளைக் கருத்தூன்றிப் படிக்கவும் புதையலைத் தேடுவதுபோல் யெகோவாவின் ஞானத்தைத் தேடவும் நாம் செலவிடலாம். அது நம்மைப் பாதுகாக்கும், அதோடு கடவுளுக்கு என்றும் உண்மையாய் இருக்கவும் உதவும்.—நீதி. 2:1-5.
சகித்திருக்க உற்சாகம் அளிக்கிறார்
14. யெகோவா நமது உணர்ச்சிகளுக்குக் கவனம் செலுத்துகிறார் என்பதை பைபிள் எப்படிக் காட்டுகிறது?
14 வாழ்க்கையில் தாவீது பற்பல வலிகளையும் வேதனைகளையும் அனுபவித்தார். (1 சா. 30:3-6) அவருடைய உணர்ச்சிகளை யெகோவா அறிந்து வைத்திருந்தார் என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 34:18-ஐயும்a 56:8-ஐயும் வாசியுங்கள்.) நம்முடைய உணர்ச்சிகளையும் யெகோவா நன்கு அறிந்து வைத்திருக்கிறார். நம் ‘உள்ளம் உடைந்து’ அல்லது ‘நெஞ்சம் நைந்து’ போயிருக்கும்போது அவர் நம்மிடம் நெருங்கி வருகிறார். இது நமக்கு எவ்வளவு ஆறுதல் அளிக்கிறது! இது தாவீதுக்கும் ஆறுதல் அளித்தது. அதனால்தான் இவ்வாறு பாடினார்: “உமது கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன்; நீர் என் உபத்திரவத்தைப் பார்த்து, என் ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கிறீர்.” (சங். 31:7) யெகோவா நம் வியாகுலங்களை, அதாவது துன்பங்களை, பார்த்துக்கொண்டு சும்மா இருப்பதில்லை. நமக்கு ஆறுதலையும் உற்சாகத்தையும் அளிக்கிறார். இதற்கு அவர் பயன்படுத்தும் ஒரு வழி—சபைக் கூட்டங்கள்.
15. ஆசாப்பின் அனுபவத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
15 கூட்டங்களில் கலந்துகொள்வதால் வரும் நன்மையைப் புரிந்துகொள்ள சங்கீதக்காரன் ஆசாப்பின் அனுபவம் நமக்கு உதவுகிறது. நீதிமான் கஷ்டப்படுகையில் துன்மார்க்கன் மட்டும் செல்வசெழிப்பில் மிதப்பதைப் பார்த்து அவர் மனம் உடைந்துபோனார். ‘யெகோவாவுக்கு என்ன சேவை செய்து... என்ன பிரயோஜனம்’ என்று நொந்துகொண்டார். “என் உள்ளம் கசந்தது; என் உணர்ச்சிகள் என்னை ஊடுருவிக் குத்தின” என்று சொன்னார். யெகோவாவுக்குச் சேவை செய்வதையே நிறுத்திவிட நினைத்தார். ஆனால், தன் மனதை மாற்றிக்கொண்டு மீண்டும் யெகோவாவுக்குச் சேவை செய்ய ஆசாப்புக்கு எது உதவியது? ‘தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்தேன்’ என்று அவர் சொன்னார். அங்கே, யெகோவாவின் வணக்கத்தார் மத்தியில் இருந்தபோது தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டார். துன்மார்க்கனின் பகட்டான வாழ்க்கை தற்காலிகமானது என்பதையும் ஏற்ற சமயத்தில் யெகோவா நீதி செய்வார் என்பதையும் அவர் புரிந்துகொண்டார். (சங். 73:2, 13-22; பொ.மொ.) நாமும் சிலசமயங்களில் ஆசாப்பைப் போல் நினைக்கலாம். சாத்தானின் இந்த உலகில் அநியாயங்களைப் பார்த்துப் பார்த்து நாம் நொந்துபோகலாம். ஆனால், கூட்டங்களில் நம் சகோதர சகோதரிகளுடன் கூட்டுறவு கொள்வது நமக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது, என்றென்றும் யெகோவாவுக்குச் சந்தோஷமாய்ச் சேவை செய்யப் பலத்தைத் தருகிறது.
16. அன்னாளின் உதாரணத்திலிருந்து நாம் எப்படிப் பயனடையலாம்?
16 ஆனால், கூட்டங்களுக்கே போகப் பிடிக்காதளவுக்குச் சபையில் நீங்கள் ஏதேனும் சூழ்நிலையை எதிர்ப்பட்டால்? ஒருவேளை, நீங்கள் சபைப் பொறுப்பிலிருந்து விலக நேர்ந்திருக்கலாம், அதனால் சகோதர சகோதரிகளின் முகத்தைப் பார்க்கத் தயங்கலாம். அல்லது ஒரு சகோதரனுடனோ சகோதரியுடனோ உங்களுக்கு மனத்தாங்கல் ஏற்பட்டிருக்கலாம். அப்படியென்றால், அன்னாளின் உதாரணத்தை நினைத்துக்கொள்ளுங்கள். (1 சாமுவேல் 1:4-8-ஐ வாசியுங்கள்.) தன் கணவனின் மூத்த தாரமான பெனின்னாளின் இம்சையால் அன்னாள் அணு அணுவாகச் செத்துக்கொண்டிருந்தது உங்களுக்கே தெரியும். வருடா வருடம் குடும்பமாக அவர்கள் சீலோவிலுள்ள யெகோவாவின் ஆசரிப்புக்கூடாரத்திற்குப் பலிசெலுத்த சென்றபோது அவளுடைய மனவேதனை பல மடங்கானது. அந்தச் சமயங்களில் அவள் தன் நிலையை நினைத்து வேதனையில் வதங்கி “சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள்.” என்றாலும், யெகோவாவை வழிபடுவதற்காக சீலோவுக்குச் செல்வதை அவள் நிறுத்திவிடவில்லை. அவள் உண்மையாய் இருந்ததைப் பார்த்து யெகோவா அவளை ஆசீர்வதித்தார்.—1 சா. 1:11, 20.
17, 18. (அ) கூட்டங்களிலிருந்து என்னென்ன விதங்களில் உற்சாகம் பெறுகிறோம்? (ஆ) மீட்பு பெற யெகோவா கனிவோடும் கரிசனையோடும் உதவுவதைக் குறித்து எப்படி உணருகிறீர்கள்?
17 கூட்டங்களுக்குத் தவறாமல் போகும் விஷயத்தில் அன்னாளின் உதாரணத்தை இன்று கிறிஸ்தவர்கள் பின்பற்ற வேண்டும். கூட்டங்கள் உற்சாகத்தின் ஊற்றாய் விளங்குவதை நாம் அனைவருமே அனுபவத்தில் கண்டிருக்கிறோம். (எபி. 10:24, 25) கூட்டங்களில் நம் சகோதர சகோதரிகளின் அன்பும் அரவணைப்பும் நமக்கு ஆறுதலின் அருமருந்தாய் இருக்கிறது. மற்றவர்கள் கொடுக்கும் பேச்சில் அல்லது சொல்லும் பதிலில் உள்ள ஏதேனும் குறிப்பு நம் மனதைத் தொடலாம். கூட்டத்திற்கு முன்போ பின்போ ஒரு சகோதரனோ சகோதரியோ நாம் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்கலாம் அல்லது நம்மிடம் அன்பாய் நாலு வார்த்தை பேசலாம். (நீதி. 15:23; 17:17) யெகோவாவுக்குத் துதிப்பாடல் பாடும்போது நம் உள்ளம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. முக்கியமாய் நம் ‘மனதில் கவலைகள்’ தேங்கும்போது, கூட்டங்களில் கிடைக்கும் உற்சாகம் நமக்கு ரொம்பவே தேவைப்படுகிறது. கூட்டங்களில்தான் யெகோவா நமக்கு ‘ஆறுதலை’ அளிக்கிறார்... முடிவுவரை சகித்திருக்கவும் அவருக்கு என்றும் உண்மையாய் இருக்கவும் உதவுகிறார்.—சங். 94:18, 19.
18 கடவுளுடைய கனிவும் கரிசனையும் நமக்கு பாதுகாப்பு உணர்வை ஊட்டுகிறது. ‘என் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர். உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்துகிறீர்’ என்று ஆசாப்பைப் போல பாட நம்மையும் தூண்டுகிறது. (சங். 73:23, 24) மீட்பு பெறுவதற்காக யெகோவா நம்மைப் பாதுகாப்பதற்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்!
[அடிக்குறிப்பு]
a சங்கீதம் 34:18 (பொது மொழிபெயர்ப்பு): “உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார்.”
[பக்கம் 28-ன் படம்]
உங்களையும் ஈர்த்தவர் யெகோவாவே
[பக்கம் 30-ன் படம்]
கடவுளுடைய ஆலோசனை நம்மைப் பாதுகாக்கிறது
[பக்கம் 31-ன் படம்]
உற்சாகத்தைப் பெறுவது சகித்திருக்க உதவுகிறது