யெகோவா என் கண்களைத் திறந்தார்
பேட்ரிஸ் ஒயேக்கா சொன்னபடி
பார்வையிழந்த தனிமரம் நான். துணைக்கு ரேடியோ மட்டும்தான். அதில் ஏதேதோ ஒலித்துக்கொண்டிருக்கும். இப்படியே இருண்டு கிடந்த வாழ்க்கைக்கு அன்று சாயங்காலம் சமாதி கட்டத் தீர்மானித்தேன். ஒரு கப் தண்ணீரில் விஷம் கலந்து மேஜைமீது வைத்தேன். கடைசியாக குளித்து, நன்றாக டிரஸ் செய்துவிட்டு, அதைக் குடித்து வாழ்க்கையை முடித்துவிடலாம் என்று நினைத்தேன். நான் ஏன் அந்த முடிவெடுத்தேன்? ஆனால், ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறேன்? சொல்கிறேன், கேளுங்கள்...
நா ன் பிறந்த நாள் பிப்ரவரி 2, 1958; பிறந்த ஊர் காஸை ஓரியன்டல், காங்கோ மக்கள் குடியரசு. ஒன்பது வயதில் அப்பாவை இழந்தேன். அண்ணன்தான் என்னை கவனித்துக்கொண்டார்.
பள்ளிப்படிப்பு முடிந்ததும் ரப்பர் தோட்டத்தில் வேலை கிடைத்தது. 1989-ஆம் வருடம் ஒருநாள் அலுவலகத்தில் ரிப்போர்ட் தயாரித்துக்கொண்டிருந்தேன். சட்டென என்னைச் சுற்றி ஒரே இருட்டு. ஏதோ கரண்ட் போய்விட்டது என்று நினைத்தேன். ஆனால், ஜெனரேட்டர் ஓடும் சத்தம் கேட்டது, அதுவும் காலையில் எப்படி இருட்டாக இருக்கும்! கண் முன்னால் இருந்த நோட்டுகள்கூட தெரியவில்லை. அப்போதுதான் புரிந்தது எனக்கு கண் தெரியவில்லை என்று, அப்படியே அதிர்ந்து போனேன்.
உடனே, எனக்குக் கீழ் வேலைபார்க்கும் ஒருவரைக் கூப்பிட்டு அங்கிருந்த டாக்டரிடம் கூட்டிக்கொண்டு போகச் சொன்னேன். பெரிய டாக்டரிடம் போகலாம் என்றார். ஆனாலும், அங்கிருந்த டாக்டரிடம்தான் போனேன். கண்களிலுள்ள விழித்திரை கிழிந்துவிட்டிருந்ததை அவர் கண்டுபிடித்தார். நிலைமை மோசமாக இருந்ததால், தலைநகரான கின்ஷாசாவுக்கு போகச் சொன்னார்.
கின்ஷாசாவில்
நிறைய டாக்டர்களிடம் போனேன். யாராலும் சரிசெய்ய முடியவில்லை. சிகிச்சைக்காக 43 நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்தேன். “இனி உங்களுக்குக் கண் தெரியாது” என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். அற்புதமாக பார்வை கிடைக்குமென நம்பி, வீட்டிலுள்ளவர்கள் ஒரு சர்ச் விடாமல் எல்லா சர்ச்சுக்கும் கூட்டிக்கொண்டு போனார்கள். வீணாக அலைந்ததுதான் மிச்சம்.
பார்வை கிடைக்கும் என்ற நம்பிக்கை அடியோடு போய்விட்டது. வேலை கைவிட்டு போனது. மனைவியும் வீட்டைவிட்டு போய்விட்டாள்; அதுவும் பொருள்களையெல்லாம் அள்ளிக்கொண்டு போய்விட்டாள். வாழ்க்கையே இருண்டுபோனது. வெளியில் தலைகாட்டவே அவமானமாக இருந்தது. எங்கேயும் போகாமல் யாரிடமும் பேசாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடந்தேன், உதவாக்கரையாக நினைத்தேன்.
இரண்டு தடவை தற்கொலைக்கு முயற்சி செய்தேன். இரண்டாவது முயற்சியைப் பற்றிதான் ஆரம்பத்தில் சொன்னேன். வீட்டில் இருந்த குட்டிப் பையன்தான் என் உயிரைக் காப்பாற்றினான். நான் குளிக்க போனபோது அவன் தெரியாமல் அந்த கப்பில் இருந்ததைக் கொட்டிவிட்டான். நல்ல வேளையாக அவன் குடிக்கவில்லை. ஆனால், அந்த கப் எங்கே போனது என்றே தெரியவில்லை. கடைசியில் வீட்டிலுள்ளவர்களிடம் விஷயத்தைச் சொல்ல வேண்டியதாயிற்று.
என்னைத் தற்கொலை செய்துவிடாமல் தடுத்தது கடவுளும் குடும்பத்தாரும்தான். அவர்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும்.
சந்தோஷம் மீண்டும் பூத்தது
1992-ல் ஒரு ஞாயிற்றுக்கிழமை, வீட்டில் சிகரெட்டும் கையுமாக உட்கார்ந்திருந்தேன். இரண்டு யெகோவாவின் சாட்சிகள் வீடு வீடாக வரும்போது எங்கள் வீட்டிற்கும் வந்தார்கள். கண்பார்வையில்லாத என்னைப் பார்த்ததும் “குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம்” என்று ஏசாயா 35:5-ல் சொல்லப்பட்டிருப்பதை வாசித்துக்காட்டினார்கள்: அதைக் கேட்டபோது என் இதயம் சந்தோஷத்தில் துள்ளியது. சர்ச்சில் சொன்னதுபோல் அற்புதமாக பார்வை கிடைக்கும் என்று அவர்கள் சொல்லவில்லை. கடவுள் கொண்டுவரப்போகும் புதிய உலகில் பார்வை கிடைக்கும் என்றே சொன்னார்கள். அதற்காக கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் சொன்னார்கள். (யோவான் 17:3) உடனே அவர்களோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தேன். நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தைப் படித்தோம். ராஜ்ய மன்றத்தில் நடக்கும் கூட்டங்களுக்கும் போனேன். நிறைய மாற்றங்கள் செய்தேன். புகைபிடிப்பதை நிறுத்தினேன்.
ஆன்மீக விஷயங்களில் முன்னேற கண்பார்வை தடையாக இருந்ததால், பார்வையற்றோருக்கான பள்ளிக்குச் சென்றேன். பிரெய்லில் எழுத, வாசிக்க கற்றுக்கொண்டேன். பிறகு, ராஜ்ய மன்றத்தில் நடக்கும் ஊழியக் கூட்டங்களில் பங்குகொண்டேன். அக்கம்பக்கத்தாரிடம் பைபிள் விஷயங்களைப் பேசினேன். வாழ்க்கையில் மீண்டும் சந்தோஷம் பூத்தது. ஆன்மீக விஷயங்களில் நன்கு முன்னேறினேன், யெகோவாவுக்கு என்னை அர்ப்பணித்தேன். மே 7, 1994-ல் ஞானஸ்நானம் பெற்றேன்.
யெகோவாமீதும் மக்கள்மீதும் எனக்கிருந்த அன்பு அதிகமானதும் முழுநேர ஊழியத்தில் இறங்க ஆசைப்பட்டேன். டிசம்பர் 1, 1995-லிருந்து ஒழுங்கான பயனியராக, அதாவது முழுநேர ஊழியனாக சேவைசெய்து வருகிறேன். பிப்ரவரி 2004-ல் சபையில் மூப்பராக சேவை செய்யும் பாக்கியமும் கிடைத்தது. சில சமயங்களில், பக்கத்திலுள்ள சபைகளில் பைபிள் பேச்சுகளைக் கொடுக்க அழைக்கிறார்கள். இதெல்லாம் எனக்கு அளவில்லா சந்தோஷத்தைத் தருகிறது. யெகோவா தேவனுக்கு சேவைசெய்ய கண்பார்வை ஒரு தடையே அல்ல என்பதைப் புரிந்துகொண்டேன்.
யெகோவா தந்த “கண்”
கண்பார்வை இழந்ததால்தான் என் மனைவி என்னை விட்டுப்போனாள். ஆனால், யெகோவா எனக்கு வேறொரு விதத்தில் பார்வை தந்தார். ஆனி மவாம்பு என்ற பெண்ணை கண்ணாகத் தந்தார், அவள் என்னைக் கணவனாக ஏற்றுக்கொண்டாள். முழுநேர ஊழியத்தில் எனக்குப் பக்கத்துணையாக இருந்தாள். சபையில் பேச்சுகளைக் கொடுப்பதற்கான குறிப்புத்தாளை வாசித்துக்காட்டுவாள். அதை பிரெய்லில் எழுதிக்கொள்வேன். அவள் எனக்குக் கிடைத்த பொக்கிஷம்! நீதிமொழிகள் 19:14-லுள்ள வார்த்தைகள் எத்தனை உண்மையானவை: “வீடும் சொத்தும் ஒருவனுக்கு வழிவழிச் சொத்தாய் வரலாம்; ஆனால், விவேகமுள்ள மனைவியோ ஆண்டவர் அளிக்கும் கொடை.”
அதுமட்டுமா, ஓர் ஆண் குழந்தையையும் பெண் குழந்தையையும் தந்து யெகோவா எங்களை ஆசீர்வதித்தார். பூஞ்சோலை பூமியில் அவர்களுடைய முகத்தைப் பார்க்க ஆசையோடு காத்திருக்கிறேன். எங்களுக்கு குடியிருக்க இடம் கொடுத்து, அன்போடு பார்த்துக்கொண்ட அண்ணன் பைபிளைப் படித்து ஞானஸ்நானம் எடுத்தது இன்னொரு ஆசீர்வாதம்! நாங்கள் எல்லாருமே ஒரே சபையில் இருக்கிறோம்.
பார்வையில்லாத எனக்கு, இத்தனை ஆசீர்வாதங்களை அள்ளி வழங்கிய யெகோவாவுக்கு நிறைய சேவைசெய்ய மனதார ஆசைப்படுகிறேன். (மல்கியா 3:10) எல்லா கஷ்டங்களையும் ஒழித்துக்கட்ட அவருடைய அரசாங்கம் சீக்கிரம் வரவேண்டுமென்று தினமும் ஜெபிக்கிறேன். யெகோவாவைப் பற்றி தெரிந்துகொண்டதால், ‘அவருடைய ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்’ என்று ஆணித்தரமாகச் சொல்வேன்.—நீதிமொழிகள் 10:22. (w12-E 06/01)
[பக்கம் 30-ன் படங்கள்]
பைபிள் பேச்சு கொடுக்கிறேன்; என் குடும்பத்தினரும் அண்ணனும்