ஜெபத்தைக் கேட்பவர் ஏன் கஷ்டத்தை அனுமதிக்கிறார்?
சிலர் ஜெபம் செய்கிறார்கள். அதேசமயம், கடவுள் இருக்கிறாரா என்ற சந்தேகம் அவர்கள் மனதில் இருக்கிறது. ஏன்? இந்த உலகம் துன்ப மயமாக இருப்பதால்தான். கடவுள் ஏன் துன்பத்தை விட்டுவைத்திருக்கிறார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
மனிதர்களைக் குறையோடும், கஷ்டங்களோடும்தான் கடவுள் உண்டாக்கினாரா? அப்படி உண்டாக்கியிருந்தால் அவர்மேல் மதிப்பு மரியாதை வருமா? உதாரணமாக, ஒரு புதிய காரை பார்க்கிறீர்கள், அதன் அழகை ரசிக்கிறீர்கள். ஆனால், அதன் ஏதோ ஒரு மூலையில் அடிபட்டிருப்பதைக் கவனிக்கிறீர்கள். அதை உருவாக்கியவர் சேதத்தோடுதான் உண்டாக்கியிருப்பார் என்று நினைப்பீர்களா? கண்டிப்பாக இல்லை. அதை எந்த “குறையுமில்லாமல்” உண்டாக்கியிருப்பார். வேறு ஏதாவது அல்லது யாராவது அதைச் சேதப்படுத்தியிருப்பார்கள்.
அதைப்போல, இயற்கையில் காணப்படும் ஒழுங்கையும் கொட்டிக் கிடக்கும் அழகையும் ரசிக்கிறீர்கள். அதேசமயம், மனிதர்கள் குழப்பத்திலும் ஊழலிலும் உழல்வதைப் பார்க்கிறீர்கள். என்ன முடிவுக்கு வருவீர்கள்? முதல் மனிதத் தம்பதியை எந்தக் குறையும் இல்லாமல்தான் கடவுள் உண்டாக்கினார். ஆனால், அவர்களே தங்களுக்குச் சேதத்தை ஏற்படுத்திக்கொண்டார்கள் என பைபிள் சொல்கிறது. (உபாகமம் 32:4, 5) என்றாலும், கடவுள் அந்தச் சேதத்தைச் சரிசெய்து கீழ்ப்படிதலுள்ள மனிதர்களைக் குறையற்றவர்களாக மாற்றுவார். சரி, அதற்கு ஏன் இவ்வளவு காலம் காத்திருக்கிறார்?
ஏன் இத்தனை காலம்?
மனிதர்களை யார் ஆட்சி செய்யவேண்டும் என்ற கேள்வி எழுப்பப்பட்டதே இதற்குக் காரணம். மனிதர்கள் தங்களைத் தாங்களே ஆட்சி செய்துகொள்ள வேண்டும் என்ற நோக்கமே கடவுளுக்கு இருக்கவில்லை. ஆம், “தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்ல” என்று பைபிள் சொல்கிறது. (எரேமியா 10:23) முதல் மனிதர்கள் கடவுளுடைய ஆட்சியை எதிர்த்து கலகம் செய்ததால் பாவிகளானார்கள். (1 யோவான் 3:4) இப்படி அவர்களும் குறையுள்ளவர்களானார்கள், தங்கள் பிள்ளைகளுக்கும் அந்தக் குறையைக் கடத்தினார்கள்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் தங்களையே ஆட்சி செய்துகொள்ள யெகோவா அனுமதித்தார். ஆனால் அதற்கு அவர்கள் லாயக்கற்றவர்கள் என்பதைச் சரித்திரம் நிரூபித்திருக்கிறது. மனித அரசாங்கங்கள் துன்பத்திற்கே காரணமாக இருந்திருக்கின்றன. எந்த அரசாங்கத்தாலும் போரை... குற்றச்செயலை... அநீதியை... நோய்களை... ஒழித்துக்கட்ட முடியவில்லை.
கடவுள் எப்படிச் சரி செய்வார்?
சீக்கிரத்தில் இந்த உலகை நீதி குடிகொள்ளும் இடமாக கடவுள் மாற்றுவார் என்று பைபிள் வாக்கு கொடுக்கிறது. (2 பேதுரு 3:13) சுயமாகத் தீர்மானம் செய்யும் திறனைப் பயன்படுத்தி, மற்றவர்கள்மீதும் கடவுள்மீதும் அன்பு காட்ட விரும்புகிறவர்கள் அந்த நீதியுள்ள உலகில் வாழ அனுமதிக்கப்படுவார்கள்.—உபாகமம் 30:15, 16, 19, 20.
‘நியாயத்தீர்ப்பு நாள்’ நெருங்கி வந்து கொண்டிருக்கிறது என்றும் துன்பத்தையும் அதற்கு காரணமானவர்களையும் கடவுள் ஒழித்துவிடுவார் என்றும் பைபிள் சொல்கிறது. (2 பேதுரு 3:7) அதன் பின்பு, கடவுளால் நியமிக்கப்பட்ட ராஜாவாக இயேசு கிறிஸ்து கீழ்ப்படிதலுள்ள மக்களை ஆட்சி செய்வார். (தானியேல் 7:13, 14) இயேசுவின் ஆட்சி எப்படி இருக்கும்? பைபிள் பதில் சொல்கிறது: “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:11.
உயிரின் ஊற்றுமூலரான யெகோவாவிற்கு விரோதமாக மனிதர்கள் கலகம் செய்ததால் வந்த சேதத்தை, அதாவது நோய், முதுமை, மரணம் ஆகியவற்றை பரலோக ராஜாவான இயேசு அடியோடு நீக்குவார். (சங்கீதம் 36:9) தம்முடைய அன்பான ஆட்சியை ஏற்றுக்கொள்பவர்களை இயேசு குணப்படுத்துவார். அவருடைய ஆட்சியில் பின்வரும் வாக்குறுதிகள் நிஜமாகும்:
◼ “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் [அதாவது, குடிமக்கள்] சொல்வதில்லை; அதில் வாசமாயிருக்கிற ஜனத்தின் அக்கிரமம் மன்னிக்கப்பட்டிருக்கும்.”—ஏசாயா 33:24.
◼ “அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார்; இனி மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது; முன்பிருந்தவை ஒழிந்துவிடும்.”—வெளிப்படுத்துதல் 21:4.
எல்லாத் துன்பத்திற்கும் சீக்கிரத்தில் கடவுள் முடிவுகட்டுவார் என்று அறிவது எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது! தற்காலிகமாக இந்தத் துன்பங்களைக் கடவுள் அனுமதித்தாலும் நம் ஜெபங்களைக் அவர் கேட்பார் என்று உறுதியாக நம்பலாம்.
கடவுள் இருக்கிறார். நீங்கள் செய்யும் ஜெபங்களை... கஷ்டத்தில் புலம்புவதை... துன்பத்தில் அழுவதை... அவர் கேட்கிறார். எந்தக் குழப்பமும் கவலையும் இல்லாத உலகில் நீங்கள் சந்தோஷமாக வாழப்போவதைப் பார்க்க ஆசை ஆசையாய் காத்திருக்கிறார். (w12-E 07/01)