‘குழந்தைகள் வாயிலிருந்து’ உற்சாக வார்த்தைகள்
டிசம்பர் 2009-ல் ரஷ்ய உயர் நீதிமன்றம் யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராகத் தீர்ப்பளித்தது. விளைவு? ரஷ்யாவிலுள்ள டகன்ராக் என்ற இடத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய மத அமைப்பு இழுத்து மூடப்பட்டது... ராஜ்யமன்றம் பறிமுதல் செய்யப்பட்டது... அவர்களுடைய பிரசுரங்களில் 34 பிரசுரங்கள் மதவெறியைத் தூண்டிவிடும் பிரசுரங்கள் என்று முத்திரை குத்தப்பட்டன. அதிர்ச்சியூட்டும் இந்த விவரங்களும், நீதிமன்றத் தீர்ப்பினால் பாதிக்கப்பட்ட யெகோவாவின் சாட்சிகளுடைய புகைப்படங்களும், அவர்களுடைய குழந்தைகளுடைய புகைப்படங்களும் யெகோவாவின் சாட்சிகளுடைய அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் போடப்பட்டன.
ஆஸ்திரேலிய பிள்ளைகள்
சில மாதங்கள் கழித்து, ரஷ்யாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய நிர்வாக மையத்திற்கு ஒரு பார்சலும் ஒரு கடிதமும் வந்தது. ஆஸ்திரேலியாவிலுள்ள குயின்ஸ்லாந்தில் யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் ஒரு குடும்பத்தார்தான் அவற்றை அனுப்பியிருந்தார்கள். நீதிமன்றத் தீர்ப்பை வெப்சைட்டில் பார்த்துவிட்டு ரஷ்யாவிலுள்ள சகோதரர்களுக்கு அவர்கள் இவ்வாறு எழுதியிருந்தார்கள்: “அன்புச் சகோதரர்களே, ரஷ்ய சாட்சிகளுடைய பிள்ளைகள் பட்ட துன்பங்களையும் காட்டிய உறுதியான விசுவாசத்தையும் பார்த்து எங்கள் பிள்ளைகளான அலெக்ஸாண்டரும் லெரிஸாவும் உருகிப்போனார்கள். அந்த ரஷ்ய பிள்ளைகளுக்காக கார்டுகளையும் கடிதங்களையும் எழுதி அனுப்பியிருக்கிறார்கள். ஒரு சிறிய பார்சலையும் எங்கள் அன்புப் பரிசாக அனுப்பியிருக்கிறோம். உலகின் மறுகோடியில் அவர்களைப் போலவே யெகோவாவை உண்மையோடு சேவிக்கிற பிள்ளைகள் இருக்கிறார்கள்... அவர்களை நினைத்து உருகுகிறார்கள்... என்பதைத் தெரியப்படுத்துவதற்காக அவற்றை அனுப்பியிருக்கிறோம். அந்தப் பிள்ளைகளுக்கு எங்கள் பிள்ளைகளின் அளவில்லா அன்பும் ஆசை முத்தங்களும்.”
அன்பளிப்புகளைப் பெற்ற சந்தோஷத்தில், டகன்ராக்கிலுள்ள பிள்ளைகள் ஆஸ்திரேலியாவிலுள்ள அந்தக் குடும்பத்திற்குப் படங்களை வரைந்து நன்றிக் கடிதங்களை எழுதினார்கள். ரஷ்ய கிளை அலுவலகத்தில் சேவை செய்யும் ஒரு சகோதரர், ‘குழந்தைகள் வாயிலிருந்து’ பிறந்த உற்சாக வார்த்தைகளைப் பார்த்து நெகிழ்ந்துபோய், அலெக்ஸாண்டர் மற்றும் லெரிஸாவுக்கு இவ்வாறு கடிதம் எழுதினார்: “செய்யாத தவறுக்குத் தண்டனை அனுபவிப்பது பெரியவர்களுக்கும் சரி சிறியவர்களுக்கும் சரி, உண்மையிலேயே கஷ்டம்தான். டகன்ராக்கிலுள்ள நம் சகோதர சகோதரிகள் எந்தத் தவறும் செய்யவில்லை. ஆனாலும், அவர்களுடைய ராஜ்ய மன்றத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துவிட்டார்கள். அதனால், அவர்கள் ரொம்பவே கவலையாக இருக்கிறார்கள். உலகத்தின் இன்னொரு மூலையில் இருக்கிற சகோதர சகோதரிகள் தங்களைப் பற்றி நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டால் அவர்கள் குஷியாகிவிடுவார்கள். உங்களுடைய அன்புக்கும் அன்பளிப்புக்கும் நன்றி! நன்றி!!”—சங். 8:2.
ஆஸ்திரேலிய பிள்ளைகள் அன்பளிப்புகளைப் பெற்ற ரஷ்ய பிள்ளைகள்
சர்வதேச சகோதரத்துவம் எனும் செந்தாமரையில் நாமும் ஓர் இதழ் என்பதில் சந்தேகமே இல்லை. கஷ்டங்களும் சோதனைகளும் கோரமுகம் காட்டும்போது சகோதர பந்தம் நமக்குப் பாசமுகம் காட்டுகிறது. யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்கள் மக்களிடையே வெறுப்பைத் தூண்டிவிடுவதாக நீதிமன்றங்கள் ஒருபுறம் குரல் எழுப்பிக்கொண்டிருக்க, மறுபுறம் நம்முடைய பிள்ளைகள் கலாச்சாரம் தாண்டி, நாடு தாண்டி அமைதியாய் அன்பு மழை பொழிந்துவருகிறார்கள். ‘நீங்கள் ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்டினால், நீங்கள் என்னுடைய சீடர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்’ என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு இசைய வாழ்ந்து காட்டுகிறார்கள்.—யோவா. 13:35.