உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w12 11/15 பக். 21-25
  • யெகோவாவின் மன்னிப்பைப் பெற...

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவின் மன்னிப்பைப் பெற...
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • தாவீதின் மிகப் பெரிய பாவங்கள்
  • தாவீதின் மனமாற்றம்
  • தாவீதின் ஜெபம்... கடவுளின் மன்னிப்பு...
  • மனாசே மிகப் பெரிய பாவங்கள் செய்தார், மனந்திரும்பினார்
  • யெகோவாவின் மன்னிப்புக்கு ஓர் எல்லை உண்டா?
  • யெகோவாவின் மன்னிப்பு எதை அர்த்தப்படுத்துகிறது?
  • யெகோவாவைப் போல நீங்களும் மன்னிக்கிறீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
  • “மன்னிக்க தயாராக இருக்கிற” கடவுள்
    யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்
  • ‘யெகோவாவின் தயவைத் தேடினார்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • யெகோவா உங்களை மன்னிக்கிறார் என்பதை நம்புங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
w12 11/15 பக். 21-25

[பக்கம் 21-ன் படம்]
யெகோவாவின் மன்னிப்பைப் பெற...

‘யெகோவா இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும் உள்ள தேவன். . . . அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்.’​—⁠யாத். 34:​6, 7.

பதில் தெரியுமா?

  • தாவீதும் மனாசேயும் பாவங்களைச் செய்தபோது யெகோவா என்ன செய்தார், ஏன்?

  • இஸ்ரவேல் தேசத்தாரை யெகோவா ஏன் மன்னிக்கவில்லை?

  • யெகோவாவின் மன்னிப்பைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?

1, 2. (அ) இஸ்ரவேலருக்கு யெகோவா எப்படிப்பட்ட கடவுளாக நிரூபித்தார்? (ஆ) இந்தக் கட்டுரையில் எந்தக் கேள்விக்குப் பதில் தெரிந்துகொள்ளப்போகிறோம்?

நெகேமியாவின் நாட்கள். இஸ்ரவேலர் ஓர் இடத்தில் கூடிவந்திருந்தார்கள். அவர்கள்முன் லேவியர் சிலர் ஜெபம் செய்தார்கள். தங்களுடைய மூதாதையர்கள் யெகோவாவுடைய கட்டளைகளுக்குத் திரும்பத் திரும்ப ‘செவிகொடாமல் போனதை’ அந்த ஜெபத்தில் ஒத்துக்கொண்டார்கள். அந்த மூதாதையர்களை யெகோவா மீண்டும் மீண்டும் மன்னித்ததன் மூலம் தாம் ‘வெகுவாய் மன்னிக்கிறவர், இரக்கமும் மனஉருக்கமும் நீடிய சாந்தமும் மகா கிருபையுமுள்ளவர்’ என்பதை நிரூபித்தார். பாபிலோனிலிருந்து தாயகம் திரும்பிய இஸ்ரவேலருக்கும் யெகோவா அளவற்ற இரக்கத்தைத் தொடர்ந்து காட்டிவந்தார்.​—⁠நெ. 9:​16, 17.

2 இப்போது, நாம் ஒவ்வொருவரும் இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொள்வது அவசியம்: ‘யெகோவாவின் மன்னிப்பு எனக்கு எதை அர்த்தப்படுத்துகிறது?’ இந்த முக்கியக் கேள்விக்குப் பதில் தெரிந்துகொள்ள, யெகோவாவின் மன்னிப்பைப் பெற்ற இரண்டு ராஜாக்களுடைய உதாரணங்களை இப்போது சிந்திப்போம். ஒருவர் தாவீது, மற்றொருவர் மனாசே.

தாவீதின் மிகப் பெரிய பாவங்கள்

3-5. தாவீது செய்த மிகப் பெரிய பாவங்கள் என்ன?

3 தாவீது தேவபக்திமிக்கவராய் இருந்தார். ஆனாலும், மிகப் பெரிய பாவங்களைச் செய்தார். அந்தப் பாவங்களில் இரண்டு உரியா-பத்சேபாள் சம்பந்தப்பட்டவை. அந்தப் பாவங்களால் தாவீது, உரியா, பத்சேபாள் ஆகிய மூவருமே சோகமான விளைவுகளைச் சந்தித்தார்கள். என்றாலும், தாவீதை யெகோவா திருத்திய விதம் அவருடைய மன்னிக்கும் குணத்தைப் பெரிய அளவில் படம்பிடித்துக் காட்டுகிறது. என்ன நடந்தது என்று பார்ப்போம்.

4 அம்மோனியர்களின் தலைநகரான ரப்பாவைக் கைப்பற்ற தாவீது தன் படையினரை அனுப்பி வைத்திருந்தார். அந்த நகரம் யோர்தான் நதிக்கு அப்பால் எருசலேமுக்குக் கிழக்கே சுமார் 80 கிலோமீட்டர் (50 மைல்) தொலைவில் இருந்தது. தன் படையினருடன் போகாமல் எருசலேமிலேயே தங்கிவிட்ட தாவீது ஒருநாள் தன் அரண்மனை மாடியிலிருந்து பத்சேபாள் குளிப்பதைப் பார்த்தார். அவள் திருமணமானவள். அவளுடைய கணவன் அப்போது போர்க்களத்தில் இருந்தான். பத்சேபாள் குளிக்கும் காட்சி கட்டுக்கடங்கா காமத் தீயை அவருக்குள் மூட்டியது. அவளைத் தன் அரண்மனைக்கு அழைத்து வரச் செய்தார். அவளுடன் உடலுறவுகொண்டார்.​—⁠2 சா. 11:​1-4.

5 பத்சேபாள் கர்ப்பமானாள். தாவீது அதை அறிந்தபோது அவளுடைய கணவனான உரியாவை எருசலேமுக்கு வரவழைத்தார். அவனை எப்படியாவது அவனுடைய வீட்டுக்கு அனுப்பி வைக்க முயற்சி செய்தார்; அவன் தன் மனைவியுடன் உறவுகொள்வான் என்ற எண்ணத்தில் அப்படிச் செய்தார். உரியாவோ தன் வீட்டுப் பக்கம்கூட தலைவைத்துப் படுக்கவில்லை. எனவே, தாவீது தன் படைத் தளபதிக்கு ஒரு ரகசியக் கடிதம் எழுதினார். போர் மும்முரமாய் நடக்கிற இடத்தில் உரியாவை நிறுத்தும்படியும், மற்ற படைவீரர்கள் அவனை விட்டுப் பின்வாங்கச் செய்யும்படியும் அதில் குறிப்பிட்டார். உரியா பலிகடாவானான், ஆம் அந்தப் போரில் கொல்லப்பட்டான். தாவீதின் சதித்திட்டம் நிறைவேறியது. (2 சா. 11:​12-17) அடுத்தவனின் மனைவியுடன் தவறான உறவுகொண்டதோடு, ஓர் அப்பாவியின் சாவுக்கும் தாவீது காரணமானார்; இப்படிப் பாவத்துக்கு மேல் பாவம் செய்தார்.

தாவீதின் மனமாற்றம்

6. தாவீது பாவங்கள் செய்த பிறகு யெகோவா என்ன செய்தார், இது யெகோவாவைப் பற்றி என்ன தெரிவிக்கிறது?

6 நடந்த ஒவ்வொன்றையும் யெகோவா பார்த்துக்கொண்டிருந்தார். அவருடைய பார்வையிலிருந்து எதுவும் தப்ப முடியாதே. (நீதி. 15:⁠3) பத்சேபாளை தாவீது பிற்பாடு மனைவியாக்கிக் கொண்டபோதிலும், அவர் ‘செய்த காரியம் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்தது.’ (2 சா. 11:27) அதனால் யெகோவா என்ன செய்தார்? தம்முடைய தீர்க்கதரிசியான நாத்தானை தாவீதிடம் அனுப்பினார். யெகோவா மன்னிக்கும் கடவுள் என்பதால் தாவீதுக்கு இரக்கம் காட்ட வழிதேடினார். யெகோவா இந்தளவு இரக்கம் காட்ட நினைக்கிறார் என்பது மனதுக்கு இதமளிக்கிறது, அல்லவா? செய்த பாவங்களை ஒத்துக்கொள்ளும்படி தாவீதை யெகோவா வற்புறுத்தவில்லை. மாறாக, நாத்தானை அனுப்பி அவரிடம் பேச வைத்தார். நாத்தான் சொன்ன கதை, தாவீது படுமோசமான பாவங்களைச் செய்திருந்ததை அவருக்குச் சுட்டிக்காட்டியது. (2 சாமுவேல் 12:​1-4-ஐ வாசியுங்கள்.) தாவீதின் உண்மையான மனநிலையைப் புரிந்துகொள்ள யெகோவா கையாண்ட இந்த வழி மிக அருமையான வழி!

7. நாத்தானின் கதையைக் கேட்ட தாவீது என்ன சொன்னார்?

7 நாத்தான் சொன்ன கதையைக் கேட்டு தாவீது கொதித்தெழுந்தார், அந்த ஐசுவரியவான்மேல் கடுங்கோபம் கொண்டார். ‘இந்தக் காரியத்தைச் செய்த மனுஷன் மரணத்திற்குப் பாத்திரன் என்று யெகோவாவுடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்’ என்றார். அதோடு, அந்த ஏழைக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டுமென்றும் சொன்னார். அந்தச் சமயத்தில் நாத்தான் சட்டென, “நீயே அந்த மனுஷன்” என்று சொன்னார். தாவீதுக்கு தலையில் இடிவிழுந்ததுபோல் இருந்தது. அவர் செய்த பாவங்களுக்குத் தண்டனையாக “பட்டயம்” அவரது வீட்டைவிட்டு விலகாதிருக்கும் எனவும், அவருடைய வீட்டார் பெரும் துயரங்களைச் சந்திப்பார்கள் எனவும், எல்லோர் முன்பும் அவர் கேவலப்படுத்தப்படுவார் எனவும் நாத்தான் சொன்னார். இதைக் கேட்ட தாவீது தான் செய்தது எவ்வளவு பெரிய பாவம் என்பதை உணர்ந்து புழுவாய்த் துடித்தார், ‘நான் யெகோவாவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன்’ என்று மறைக்காமல் ஒத்துக்கொண்டார்.​—⁠2 சா. 12:​5-14.

தாவீதின் ஜெபம்... கடவுளின் மன்னிப்பு...

8, 9. சங்கீதம் 51 தாவீதின் ஆழ்மனதை எப்படிப் படம்பிடித்துக் காட்டுகிறது, யெகோவாவைப் பற்றி அது என்ன கற்பிக்கிறது?

8 தாவீது பிற்பாடு இயற்றிய 51-ஆம் சங்கீதத்தின் பாடல் வரிகள் அவர் குற்றவுணர்வால் ரண வேதனைப்பட்டதைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. நெஞ்சை நெகிழ வைக்கும் அவருடைய மன்றாட்டுகள் அதில் இடம்பெற்றுள்ளன. அவர் தன் தவறுகளை ஒத்துக்கொண்டது மட்டுமல்லாமல் உள்ளப்பூர்வமாக மனந்திரும்பவும் செய்தார்; யெகோவா அவரை மன்னித்ததற்கு இது ஒரு காரணமாகும். யெகோவாவுடன் உள்ள பந்தத்தை அவர் மிக முக்கியமானதாய்க் கருதினார். ‘தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்தேன்’ என்று மறைக்காமல் ஒத்துக்கொண்டார். “தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும் . . . உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்” என்று கெஞ்சினார். (சங். 51:​1-4, 7-12) நீங்களும் தாவீதைப் போலவே, உங்களுடைய தவறுகளையெல்லாம் மறைக்காமல் யெகோவாவிடம் சொல்கிறீர்களா? மன்னிப்புக் கேட்டு ஊக்கமாய் மன்றாடுகிறீர்களா?

9 தாவீது எதை விதைத்தாரோ அதை அறுவடை செய்யும்படி யெகோவா விட்டுவிட்டார். ஆம், தாவீது தன் பாவத்தின் விளைவுகளை வாழ்நாளெல்லாம் அனுபவிக்கும்படி விட்டுவிட்டார். என்றாலும், அவர் முழுமையாய் மனந்திரும்பியதை யெகோவா பார்த்தார்; ‘நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான அவருடைய இருதயத்தை’ பார்த்தார், அவரை மன்னித்தார். (சங்கீதம் 32:​5-ஐ வாசியுங்கள்; சங். 51:17.) தாவீதின் உண்மையான மனநிலையை அவர் அறிந்திருந்தார். எனவே, தவறான உறவுகொண்ட தாவீதும் பத்சேபாளும் திருச்சட்டத்தின் அடிப்படையில் கொல்லப்படும்படி தீர்ப்பளிக்க அன்றைய நியாயாதிபதிகளை அவர் அனுமதிக்கவில்லை. அவர்களுடைய விஷயத்தில் அவரே நியாயாதிபதியாக இருந்து இரக்கம் காட்டினார். (லேவி. 20:10) அவர்களுக்குப் பிறந்த சாலொமோனை பிற்பாடு இஸ்ரவேலின் ராஜாவாகவும் ஆக்கினார்.​—⁠1 நா. 22:​9, 10.

10. (அ) தாவீதை யெகோவா மன்னித்ததற்கு எது மற்றொரு காரணமாக இருந்திருக்கலாம்? (ஆ) யெகோவாவின் மன்னிப்பைப் பெற ஒருவர் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

10 சவுலுடைய விஷயத்தில் தாவீது இரக்கம் காட்டியது, அவரை யெகோவா மன்னித்ததற்கு மற்றொரு காரணமாக இருந்திருக்கலாம். (1 சா. 24:​4-7) மற்றவர்களை நாம் எப்படி நடத்துகிறோமோ அப்படித்தான் நம்மை யெகோவா நடத்துவார் என்று இயேசு விளக்கினார். “நீங்கள் நியாயந்தீர்க்கப்படாமல் இருப்பதற்கு மற்றவர்களை நியாயந்தீர்ப்பதை நிறுத்துங்கள்; மற்றவர்களை எப்படி நியாயந்தீர்க்கிறீர்களோ அப்படித்தான் நீங்களும் நியாயந்தீர்க்கப்படுவீர்கள்; எதைக் கொண்டு மற்றவர்களை அளக்கிறீர்களோ, அதைக் கொண்டுதான் அவர்களும் உங்களை அளப்பார்கள்” என்று அவர் சொன்னார். (மத். 7:​1, 2) மணத்துணைக்குத் துரோகம் செய்வது, கொலை செய்வது போன்ற மிகப் பெரிய பாவங்களைக்கூட யெகோவா மன்னிப்பார் என்பதைத் தெரிந்துகொள்வது மனதிற்கு எவ்வளவாய் ஆறுதல் அளிக்கிறது! ஆனால், நமக்கு மன்னிக்கும் மனம் இருந்தால்தான்... யெகோவாவிடம் நம்முடைய பாவங்களை மறைக்காமல் ஒத்துக்கொண்டால்தான்... செய்த பாவங்களை நினைத்து வருந்தி, மனமாற்றத்தைக் காட்டினால்தான்... அவர் நம்மை மன்னிப்பார். இப்படி உள்ளப்பூர்வமாய் மனந்திரும்புவோருக்கு யெகோவாவிடமிருந்து “புத்துணர்ச்சி கிடைத்துக்கொண்டே இருக்கும்.”​—⁠அப்போஸ்தலர் 3:​19-ஐ வாசியுங்கள்.

மனாசே மிகப் பெரிய பாவங்கள் செய்தார், மனந்திரும்பினார்

11. மனாசே ராஜா யெகோவாவுக்குப் பிடிக்காத என்னென்ன காரியங்களைச் செய்தார்?

11 பைபிளிலிருந்து இன்னொரு உதாரணத்தைச் சிந்திப்போம். யெகோவா எந்தளவு மன்னிக்கத் தயாராக இருந்தார் என்பதை அதிலிருந்து புரிந்துகொள்வோம். தாவீது ஆட்சி செய்து சுமார் 360 ஆண்டுகளுக்குப் பிறகு, மனாசே யூதாவின் ராஜாவாகச் சிம்மாசனம் ஏறினார். தன் 55 வருட ஆட்சிக் காலத்தில், படுமோசமான காரியங்களைச் செய்துவந்தார். அவருடைய செயல்களை யெகோவா அருவருத்தார். அவருக்குத் தண்டனைத் தீர்ப்பளித்தார். மனாசே, பாகாலுக்கு மேடைகளைக் கட்டினார்... ‘வானத்தின் சேனையையெல்லாம்’ பணிந்துகொண்டார்... தன்னுடைய மகன்களை தீ மிதிக்கப்பண்ணினார்... ஆவியுலகத்தொடர்பு பழக்கத்தில் ஈடுபடும்படி மக்களை ஊக்குவித்தார்... இப்படி எத்தனையோ பாவங்களைச் செய்தார். ஆம், ‘யெகோவாவுக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்கு மிகவும் பொல்லாப்பானதைச் செய்தார்.’​—⁠2 நா. 33:​1-6.

[பக்கம் 23-ன் படம்]

12. மனாசே எப்படி யெகோவாவிடத்தில் திரும்பினார்?

12 கடைசியில், மனாசே பாபிலோனுக்குக் கைதியாகக் கொண்டுசெல்லப்பட்டார், அங்கு சிறையில் தள்ளப்பட்டார். இஸ்ரவேலருக்கு மோசே எழுதிய பின்வரும் வார்த்தைகளை அங்கே அவர் நினைத்துப் பார்த்திருக்க வேண்டும்: ‘நீ வியாகுலப்பட இவைகளெல்லாம் உன்னைத் தொடர்ந்து பிடிக்கும்போது, கடைசி நாட்களில் உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் திரும்பி அவர் சத்தத்திற்குக் கீழ்ப்படிவாயாக.’ (உபா. 4:30) மனாசே யெகோவாவிடத்தில் திரும்பினார். எப்படி? ‘தேவனுக்கு முன்பாக மிகவும் தன்னைத் தாழ்த்தினார்,’ (பக்கம் 21-ல் உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளதைப் போல்) அவரை நோக்கி ‘விண்ணப்பம் பண்ணிக்கொண்டே இருந்தார்.’ (2 நா. 33:​12, 13) என்னென்ன வார்த்தைகளைச் சொல்லி அவர் விண்ணப்பம் பண்ணினார் என்ற விவரம் பைபிளில் இல்லாவிட்டாலும், 51-ஆம் சங்கீதத்திலுள்ள தாவீதின் வார்த்தைகளை அவர் பயன்படுத்தியிருக்கலாம். எப்படியிருந்தாலும் சரி, மனாசே தன்னை அடியோடு மாற்றிக்கொண்டார்.

13. மனாசேயை யெகோவா ஏன் மன்னித்தார்?

13 மனாசேயின் ஜெபங்களைக் கேட்ட யெகோவா என்ன செய்தார்? ‘மனாசேயின் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவருடைய ஜெபத்தைக் கேட்டார்.’ தாவீதைப் போலவே மனாசே, தான் மிகப் பெரிய பாவங்கள் செய்ததை உணர்ந்தார், உள்ளப்பூர்வமாய் மனந்திரும்பினார். அதனால்தான் யெகோவா அவரை மன்னித்தார், எருசலேமிற்குத் திரும்பிவரச் செய்து மீண்டும் மன்னராக்கினார். இதன் காரணமாக, ‘யெகோவாவே தேவன் என்று மனாசே அறிந்துகொண்டார்.’ (2 நா. 33:13) இரக்கமுள்ள நம் கடவுள், உள்ளப்பூர்வமாய் மனந்திரும்புகிறவர்களை மன்னிக்கிறார் என்பதற்கு இந்த உதாரணமும் அத்தாட்சி அளிக்கிறது. எப்பேர்ப்பட்ட ஆறுதல் நமக்கு!

[பக்கம் 24-ன் படம்]

யெகோவா மனாசேயை மன்னித்தார், மீண்டும் மன்னராக்கினார்

யெகோவாவின் மன்னிப்புக்கு ஓர் எல்லை உண்டா?

14. பாவம் செய்தவர்களை யெகோவா எப்போது மன்னிப்பார்?

14 இன்று பெரும்பாலான கிறிஸ்தவர்கள், தாவீதும் மனாசேயும் பாவம் செய்த அளவுக்குப் பாவம் செய்து, மன்னிப்பு கேட்க வேண்டிய நிலையில் இல்லை. என்றாலும், யெகோவா அந்த இரண்டு ராஜாக்களையும் மன்னித்த விஷயத்திலிருந்து ஓர் உண்மை புரிகிறது. அதாவது, மிகப் பெரிய பாவங்களைச் செய்தவர்கள் உண்மையாகவே மனந்திரும்பும்போது யெகோவா மன்னிக்கத் தயாராய் இருக்கிறார் என்பது புரிகிறது.

15. பாவம் செய்தவர்களை யெகோவா தாமாகவே மன்னித்துவிடுவதில்லை என்பது நமக்கு எப்படித் தெரியும்?

15 ஆனால், பாவம் செய்த எல்லோரையும் யெகோவா தாமாகவே மன்னித்துவிடுவார் என்ற முடிவுக்கு நாம் வந்துவிடக் கூடாது. இதைப் புரிந்துகொள்ள, தாவீதும் மனாசேயும் காட்டிய மனப்பான்மையை, கீழ்ப்படியாத இஸ்ரவேல் தேசத்தாரும் யூதா தேசத்தாரும் காட்டிய மனப்பான்மையோடு இப்போது ஒப்பிட்டுப் பார்ப்போம். யெகோவா தாவீதிடம் நாத்தானை அனுப்பினார், தவறை உணர்ந்து தன்னைத் திருத்திக்கொள்ள அவருக்கு வாய்ப்பளித்தார். இந்த வாய்ப்பை தாவீது நன்றியோடு ஏற்றுக்கொண்டு மனந்திரும்பினார். மனாசேயும் துன்பப்பட்ட சமயத்தில் தன் தவறை உணர்ந்தார், உள்ளப்பூர்வமாய் மனந்திரும்பினார். ஆனால், இஸ்ரவேல் தேசத்தாரும் யூதா தேசத்தாரும் அநேக சந்தர்ப்பங்களில் மனந்திரும்பவில்லை. யெகோவா திரும்பத் திரும்ப தம்முடைய தீர்க்கதரிசிகளை அனுப்பி, அவர்களுடைய செயல்களைக் கடிந்துகொண்டபோதிலும் அவர்கள் மனந்திரும்பவில்லை. எனவே, யெகோவா அவர்களை மன்னிக்கவில்லை. (நெகேமியா 9:​30-ஐ வாசியுங்கள்.) பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து அவர்கள் தாயகம் திரும்பிய பிறகும்கூட எஸ்றா, மல்கியா போன்ற தம் உண்மை ஊழியர்களை யெகோவா திரும்பத் திரும்ப அவர்களிடம் அனுப்பினார். யெகோவாவுடைய சித்தத்திற்கு இசைய நடந்தபோது மட்டுமே அவர்கள் மிகுந்த சந்தோஷத்தைக் கண்டார்கள்.​—⁠நெ. 12:​43-47.

16. (அ) பூர்வ இஸ்ரவேலர் மனந்திரும்பாமல் போனபோது யெகோவா என்ன செய்தார்? (ஆ) பூர்வ இஸ்ரவேலரின் வம்சாவளியைச் சேர்ந்த தனி நபர்களுக்கு என்ன வாய்ப்பிருக்கிறது?

16 யெகோவா தமது மகனான இயேசுவைப் பூமிக்கு அனுப்பி, அவருடைய உயிரைப் பரிபூரண மீட்புப் பலியாகச் செலுத்த ஏற்பாடு செய்தார். அதுமுதல், இஸ்ரவேலருடைய மிருக பலிகளை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. (1 யோ. 4:​9, 10) எருசலேமைப் பற்றிய அவருடைய எண்ணத்தை இயேசு பின்வரும் வார்த்தைகளில் வேதனையோடு தெரிவித்தார்: “எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலை செய்தவளே, உன்னிடம் அனுப்பப்பட்டவர்கள்மீது கல்லெறிந்தவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைகளின் கீழே கூட்டிச்சேர்ப்பதுபோல் நான் உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்க்க எத்தனையோ முறை விரும்பினேன்! மக்களே, நீங்கள் அதை விரும்பவில்லை.” அதனால், “இதோ! உங்கள் வீடு நிராகரிக்கப்பட்டு உங்களிடமே விடப்படும்” என்றார். (மத். 23:​37, 38) எனவே, மனந்திரும்பாத பூர்வ இஸ்ரவேலரை நிராகரித்துவிட்டு, ஆன்மீக இஸ்ரவேலரைத் தமது ஜனமாக யெகோவா ஏற்றுக்கொண்டார். (மத். 21:43; கலா. 6:16) ஆனால், பூர்வ இஸ்ரவேலரின் வம்சாவளியைச் சேர்ந்த தனி நபர்கள் மன்னிப்புப் பெற வாய்ப்பிருக்கிறதா? கடவுள்மீதும், இயேசுவின் மீட்புப் பலிமீதும் விசுவாசம் வைத்தால் கடவுளுடைய மன்னிப்பைப் பெற அவர்களுக்கு வாய்ப்பிருக்கிறது. அவர்களுக்கு மட்டுமல்ல, மனந்திரும்பாமல் இறந்துபோனவர்களுக்கும் அந்த வாய்ப்பிருக்கிறது​—⁠பூஞ்சோலை பூமியில் உயிர்த்தெழுப்பப்படும்போது!​—⁠யோவா. 5:​28, 29; அப். 24:⁠15.

யெகோவாவின் மன்னிப்பு எதை அர்த்தப்படுத்துகிறது?

17, 18. யெகோவாவின் மன்னிப்பைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?

17 யெகோவா மன்னிக்கத் தயாராய் இருக்கிறார், அதைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்? தாவீதையும் மனாசேயையும் போல் மனந்திரும்ப வேண்டும். நாம் அபூரணர்கள் என்பதை உணர்ந்து, பாவங்களைவிட்டு விலகி, மனந்திரும்பி, மன்னிப்புக் கேட்டு யெகோவாவிடம் மன்றாட வேண்டும். நம்மில் சுத்தமான இருதயத்தை உருவாக்கும்படி அவரிடம் கெஞ்ச வேண்டும். (சங். 51:10) மிகப் பெரிய பாவத்தைச் செய்துவிட்டோம் என்றால், ஆன்மீக உதவிக்காக மூப்பர்களையும் நாட வேண்டும். (யாக். 5:​14, 15) எவ்வளவு பெரிய பாவத்தைச் செய்திருந்தாலும் சரி, யெகோவா “இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன். ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்” என்பதை மனதில் வைப்பது இதமளிக்கிறது. யெகோவா அன்றும் இன்றும் என்றும் மாறாதவர்.​—⁠யாத். 34:​6, 7.

18 இஸ்ரவேலருடைய பாவங்களை முற்றும் முழுமையாக மன்னிக்கப்போவதை அவர்களுக்குப் புரியவைக்க யெகோவா வலிமைமிக்க ஓர் ஒப்புமையைப் பயன்படுத்தினார்; ஆம், ‘சிவேரென்றிருக்கும்’ அவர்களுடைய பாவங்களை “பஞ்சைப் போல்” வெண்மையாக்குவதாகச் சொன்னார். (ஏசாயா 1:​18-ஐ வாசியுங்கள்.) அப்படியென்றால், யெகோவாவின் மன்னிப்பு நமக்கு எதை அர்த்தப்படுத்துகிறது? யெகோவாவுடைய மன்னிப்பைப் பெற நாம் நன்றியுள்ளவர்களாய் இருந்தால்... மனந்திரும்புதலைக் காட்டினால்... நம்முடைய பாவங்களையும் குற்றங்குறைகளையும் அவர் முற்றும் முழுமையாக மன்னிப்பார் என்பதை அர்த்தப்படுத்துகிறது.

19. அடுத்த கட்டுரையில் என்ன சிந்திப்போம்?

19 யெகோவா நம்மை மன்னிப்பது போலவே நாம் எவ்வாறு மற்றவர்களை மன்னிக்கலாம்? மிகப் பெரிய பாவங்களைச் செய்தபின் உண்மையாகவே மனந்திரும்புகிறவர்களை நாம் எவ்வாறு மன்னிக்கலாம்? ‘நல்லவரான, மன்னிக்கத் தயாராய் இருப்பவரான’ யெகோவாவைப் போலவே நடந்துகொள்கிறோமா என நம்முடைய இருதயங்களைச் சோதித்துப் பார்க்க அடுத்த கட்டுரை நமக்கு உதவும்.​—⁠சங். 86:​5, NW.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்