அட்டைப்பட கட்டுரை: உலக அழிவு—அஞ்ச வேண்டுமா?
உலக அழிவு அச்சம்? ஆர்வம்? அலுப்பு?
டிசம்பர் 21, 2012. இதைக் கேட்டதும் உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது? மாயா காலண்டரின்படி, இந்தத் தேதியில் உலகம் முழுவதும் அதிரடி மாற்றம் ஏற்படும் என்று நிறைய பேர் எதிர்பார்த்தார்கள். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. இதைப் பார்த்து ஒருவேளை உங்களுக்கு நிம்மதியாக இருந்திருக்கலாம் அல்லது ஏமாற்றமாக இருந்திருக்கலாம், ஏன் விரக்தியும் ஏற்பட்டிருக்கலாம். அப்படியென்றால், வழக்கம்போல இதுவும் ஒரு தவறான கணிப்புதானா?
சரி, ‘உலகத்தின் முடிவை’ பற்றி பைபிளில் சொல்லப்பட்டிருப்பது நிஜமா? (மத்தேயு 24:3, தமிழ் யூனியன் பைபிள்) இந்தப் பூமி எரிந்து பஸ்பமாகிவிடும் என்று சிலர் பயப்படுகிறார்கள். இந்த அழிவு எப்படி இருக்கும் என்று பார்க்க சிலர் ஆவலோடு காத்திருக்கிறார்கள். நிறைய பேருக்கு உலகம் அழியும் என்று கேட்டுக் கேட்டு புளித்துவிட்டது. ஒருவேளை, பல புரளிகளையும் கட்டுக்கதைகளையும் கேட்டதால் மக்கள் இப்படியெல்லாம் யோசிக்கிறார்களா? உலக அழிவைப் பற்றிய உண்மைகள் என்ன?
உலக அழிவைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் ஆச்சரியப்படுவீர்கள்! ஏனென்றால், உலக அழிவைக் குறித்துக்காட்டும் சம்பவங்களைப் பற்றி விளக்குவதோடு, “அழிவு இன்னும் வரவில்லையே” என நினைத்து சிலர் விரக்தியடைவார்கள் என்றும் பைபிள் சொல்கிறது. உலக அழிவைப் பற்றிய சில கேள்விகளுக்கு பைபிள் என்ன பதில் சொல்கிறது என்பதை இப்போது நாம் சிந்திக்கலாம்.
பூமி எரிந்து சாம்பலாகிவிடுமா?
பைபிளின் பதில்: “[தேவனே] நீவீர் பூவுலகை அதன் அடித்தளத்தின்மீது நிலைநாட்டினீர்; அது என்றென்றும் அதாவது, நித்தியத்திற்கும் அசைவுறாது.”—சங்கீதம் 104:5, பொது மொழிபெயர்ப்பு.
பூமி நெருப்பாலும் அழியாது, வேறு எதனாலும் அழியாது. மனிதர்கள் என்றென்றும் குடியிருப்பதற்காக இந்தக் கிரகம் படைக்கப்பட்டது என்று பைபிள் சொல்கிறது. “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்” என்று சங்கீதம் 37:29 சொல்கிறது.—சங்கீதம் 115:16; ஏசாயா 45:18.
பூமியைப் படைத்த பிறகு, “அது மிகவும் நன்றாயிருந்தது” என்று கடவுள் சொன்னார். இன்றும்கூட அவர் அப்படித்தான் நினைக்கிறார். (ஆதியாகமம் 1:31) பூமியை அழிக்க வேண்டும் என்ற எண்ணம்கூட அவருக்கு வந்ததில்லை. அது நாசமாகிவிடாமல் பாதுகாப்பதற்காகத்தான், ‘பூமியை நாசமாக்குபவர்களை நாசமாக்கப்போவதாக’ வாக்குக் கொடுத்திருக்கிறார்.—வெளிப்படுத்துதல் 11:18.
‘பிறகு ஏன், 2 பேதுரு 3:7-ல் “இப்போது இருக்கிற வானமும் பூமியும் . . . நெருப்புக்கென்று வைக்கப்பட்டிருக்கின்றன” என்று சொல்லப்பட்டிருக்கிறது? இந்த வசனத்தின்படி, பூமி நெருப்பினால் அழிந்துவிடும் என்றுதானே சொல்கிறது?’ என நீங்கள் யோசிக்கலாம். சில நேரங்களில் “வானம்,” “பூமி,” “நெருப்பு” போன்றவற்றை பைபிள் அடையாள அர்த்தத்தில் பயன்படுத்துகிறது. ஆதியாகமம் 11:1-ஐ எடுத்துக்கொள்ளுங்கள்: “பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரே விதமான பேச்சும் இருந்தது” என்று அது சொல்கிறது. இங்கு, “பூமி” என்ற வார்த்தை பூமியில் வாழும் மக்களைக் குறிக்கிறது.
பைபிளில் 2 பேதுரு 3:7-ன் சூழமைவைக் கவனிக்கும்போது அதில் சொல்லப்பட்டிருக்கும் வானம், பூமி, நெருப்பிற்கு அடையாள அர்த்தம் இருப்பது புரியும். 5, 6 வசனங்களில் நோவா காலத்து ஜலப்பிரளயத்தோடு ஒப்பிட்டு பேசப்படுகிறது. அந்த ஜலப்பிரளயத்தில் உலகம் அழிந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது; அப்படியென்றால் அப்போது பூமியே இல்லாமல் போய்விட்டதா?இல்லை, வன்முறை நிறைந்த மனித சமுதாயம் மட்டுமே இல்லாமல் போனது. அதேபோல், அந்த ஜலப்பிரளயத்தில் “வானம்” இல்லாமல் போனது, அதாவது மனிதர்களை ஆண்டு வந்தவர்களும் இல்லாமல் போனார்கள். (ஆதியாகமம் 6:11) அப்படியென்றால், 2 பேதுரு 3:7-ன் அர்த்தம்: இப்போதிருக்கும் கெட்ட ஜனங்களும் அவர்களை ஆட்சி செய்யும் கெட்ட அரசாங்கமும் அழிக்கப்படும். நெருப்பால் சுட்டெரிக்கப்படுவது போல நிரந்தரமாக அழிக்கப்படும்.
உலக முடிவின்போது என்ன நடக்கும்?
பைபிளின் பதில்: “இந்த உலகமும் அதன் இச்சையும் ஒழிந்துபோகும்; கடவுளுடைய சித்தத்தைச் செய்கிறவனோ என்றென்றும் நிலைத்திருப்பான்.”—1 யோவான் 2:17.
இங்கு, ‘உலகம்’ ஒழிந்துபோகும் என்றால், பூமி அழிந்துவிடும் என்று அர்த்தமில்லை, கடவுளுடைய சித்தத்தின்படி வாழாத மனித சமுதாயம் அழிந்துவிடும் என்றே அர்த்தம். உதாரணத்திற்கு, ஒரு மருத்துவர், நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அவர் உடம்பில் இருக்கும் கேன்சர் கட்டியை வெட்டி எடுப்பதுபோல், நல்ல ஜனங்கள் இந்தப் பூமியில் சந்தோஷமாக வாழ்வதற்காக கெட்டவர்களை கடவுள் அழிக்கப்போகிறார். (சங்கீதம் 37:9) அப்படியென்றால், ‘உலகத்திற்கு முடிவு’ வரப்போவதை நினைத்து நாம் சந்தோஷப்படத்தான் வேண்டும்.
உலக முடிவினால் நல்லதுதான் நடக்கும் என்பதைக் காட்டுவதற்காகத்தான் ‘உலகத்தின் முடிவு’ என்ற சொற்றொடரை, “யுக முடிவு,” அல்லது ‘இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டம்’ என்று பைபிள் மொழிபெயர்ப்புகள் மொழிபெயர்த்திருக்கின்றன. (மத்தேயு 24:3; திருத்திய மொழிபெயர்ப்பு) பூமி அழியப்போவதில்லை, நல்லவர்கள் இந்தப் பூமியில் நிரந்தரமாக வாழப்போகிறார்கள் என்றால் அது ஒரு புதிய யுகம்தானே! அது சீக்கிரத்தில் வரப்போகிறது! அதனால்தான், பைபிள் அதை ‘வரப்போகும் சகாப்தம்,’ அதாவது காலம், என்று சொல்கிறது.—லூக்கா 18:30, அடிக்குறிப்பு.
வரப்போகிற அந்தக் காலத்தைத்தான், ‘அனைத்தும் புதிதாக்கப்படுகிற காலம்’ என்று இயேசு சொன்னார். மனிதர்கள் எப்படி வாழ வேண்டுமென்று கடவுள் ஆரம்பத்தில் நோக்கம் வைத்திருந்தாரோ அதை இயேசு நிறைவேற்றுவார். (மத்தேயு 19:28) அப்போது, வாழ்க்கை எப்படி இருக்கும்?
பூஞ்சோலை பூமியில் எல்லோரும் பாதுகாப்பாக, செழிப்பாக வாழ்வார்கள்.—ஏசாயா 35:1; மீகா 4:4.
திருப்தியான நல்ல வேலை இருக்கும்.—ஏசாயா 65:21-23.
நோய்கள் எல்லாம் பறந்துவிடும்.—ஏசாயா 33:24.
வயதானவர்கள் இளமைக்குத் திரும்புவார்கள்.—யோபு 33:25.
இறந்துபோனவர்கள் திரும்பவும் உயிரோடு வருவார்கள். —யோவான் 5:28, 29.
“கடவுளுடைய சித்தத்தை,” அவர் நம்மிடம் கேட்பதை, செய்து வந்தால் உலகத்தின் முடிவை நினைத்து நாம் பயப்படத் தேவையில்லை. சொல்லப்போனால், அதற்காக ஆவலோடு காத்திருப்போம்.
உலக அழிவு நெருங்கிவிட்டதா?
பைபிளின் பதில்: “இவற்றை நீங்கள் பார்க்கும்போது, கடவுளுடைய அரசாங்கம் நெருங்கிவிட்டதென்று அறிந்துகொள்ளுங்கள்.”—லூக்கா 21:31.
தி லாஸ்ட் டேஸ் ஆர் ஹியர் அகெய்ன் என்ற புத்தகத்தில் பேராசிரியர் ரிச்சர்ட் கைல் எழுதுகிறார்: “சமுதாயத்தில் அதிரடி மாற்றங்கள் நடப்பது,” அதுவும் அந்த மாற்றங்கள் ஏன் நடக்கின்றன, எதற்கு நடக்கின்றன என்பதையே விளக்க முடியாமல் இருப்பது, “உலக முடிவைப் பற்றி மக்களை கணிக்க வைக்கிறது.”
என்றாலும், உலக முடிவைப் பற்றி தீர்க்கதரிசிகள் பைபிளில் எழுதியிருக்கிற தீர்க்கதரிசனங்களெல்லாம் ஏதோ அவரவருடைய காலத்தில் நடந்த மோசமான சம்பவங்கள் அல்ல. உலகத்தின் முடிவு காலத்தில் என்னென்ன சம்பவங்கள் நடக்கும் என்பதைப் பற்றி தெய்வ சக்தியின் தூண்டுதலால் அவர்கள் எழுதினார்கள். அப்படிப்பட்ட சில தீர்க்கதரிசனங்களை இப்போது நாம் பார்க்கலாம். அவையெல்லாம் நம் காலத்தில் நடக்கிறதா இல்லையா என்று நீங்களே யோசித்துப் பாருங்கள்.
போர்கள், பஞ்சங்கள், பூகம்பங்கள், உயிரைக் குடிக்கும் கொள்ளைநோய்கள் உண்டாகும்.—மத்தேயு 24:7; லூக்கா 21:11.
அக்கிரமம் அதிகமாகும்.—மத்தேயு 24:12.
மனிதர்கள் பூமியை நாசமாக்குவார்கள்.—வெளிப்படுத்துதல் 11:18.
சுயநலக்காரர்களாக, பண ஆசைபிடித்தவர்களாக, கடவுளை நேசிக்காமல் சுகபோகங்களை நேசிக்கிறவர்களாக இருப்பார்கள்.—2 தீமோத்தேயு 3:2, 4.
குடும்பங்கள் சின்னாபின்னமாகும்.—2 தீமோத்தேயு 3:2, 3.
உலக முடிவு வரப்போகிறது என்பதற்கான அத்தாட்சிகளைப் பார்த்தும் அதை உணராமல் இருப்பார்கள்.—மத்தேயு 24:37-39.
கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தி உலகமெங்கும் பிரசங்கிக்கப்படும்.—மத்தேயு 24:14.
இயேசு சொன்னதைப் போல, “இவையெல்லாம் நடப்பதை” பார்க்கும்போது ரொம்ப சீக்கிரத்தில் இந்த உலகத்திற்கு முடிவு வரப்போகிறது என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். (மத்தேயு 24:33) இந்த அத்தாட்சிகள் எல்லாம் உண்மை என்று யெகோவாவின் சாட்சிகள் நம்புகிறார்கள், அதை 236 நாடுகளில் எல்லோருக்கும் அறிவிக்கிறார்கள்.
எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போவதால் முடிவே வராது என்று முடிவுகட்டிவிடலாமா?
பைபிளின் பதில்: “இதோ! சமாதானம், பாதுகாப்பு!” என்று அவர்கள் சொல்லும்போது, ஒரு கர்ப்பிணிக்குப் பிரசவ வேதனை வருவதுபோல் எதிர்பாரா நேரத்தில் அழிவு திடீரென்று அவர்கள்மீது வரும்; அவர்களால் தப்பிக்கவே முடியாது.” —1 தெசலோனிக்கேயர் 5:3.
பைபிள், உலக அழிவை பிரசவ வேதனைக்கு ஒப்பிடுகிறது. கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவ வலி கண்டிப்பாக வரும், ஆனால் திடீரென்று வரும். பிரசவ நேரம் நெருங்குவதற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிவதுபோல், முடிவு வருவதற்கான அடையாளங்களும் பளிச்செனத் தெரிகிறது. பிரசவ தேதியை மருத்துவர் கணித்தாலும், சிலசமயம் அந்தத் தேதி தள்ளிப்போகலாம். அதற்காக, குழந்தையே பிறக்காது என்று சொல்ல முடியுமா? அதேபோல், மக்கள் எதிர்பார்க்கும் நேரத்தில் முடிவு வரவில்லை என்பதற்காக, முடிவே வராது என்று சொல்ல முடியுமா? ஆம், நாம் “கடைசி நாட்களில்” வாழ்கிறோம் என்பது நூற்றுக்குநூறு உண்மை.—2 தீமோத்தேயு 3:1.
‘நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோம் என்பதற்கு தெளிவான அத்தாட்சிகள் இருக்கிறதென்றால், நிறைய பேர் அதை ஏன் உணராமல் இருக்கிறார்கள்?’ என்று நீங்கள் யோசிக்கலாம். அப்போது மக்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்று பைபிளில் எழுதியிருக்கிறது. அதாவது, கடைசி நாட்களில் நடக்கும் மாற்றங்களைப் பார்த்தும் நம்பாமல், “உலகம் தோன்றிய காலத்திலிருந்தே எல்லாம் இருந்தபடிதான் இருக்கிறது” என சொல்லி மக்கள் கேலி செய்வார்கள் என்று சொல்கிறது. (2 பேதுரு 3:3, 4) ஆம், கடைசி நாட்களுக்கான அத்தாட்சிகள் வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தாலும், நிறைய பேர் அதை நம்ப மறுப்பார்கள்.—மத்தேயு 24:38, 39.
முடிவு நெருங்கிவிட்டதற்கான ஒருசில அத்தாட்சிகளை மட்டும்தான் இந்தக் கட்டுரையில் பார்த்தோம்.a இன்னும் நிறைய அத்தாட்சிகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அப்படியென்றால், யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து பைபிளைப் படியுங்கள். உங்கள் வீட்டிலோ உங்களுக்கு வசதியான வேறொரு இடத்திலோ அல்லது தொலைபேசியிலோ பைபிள் படிப்பு நடத்துவார்கள். இதற்கு எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை, நீங்கள் செலவிட வேண்டியதெல்லாம் உங்கள் நேரம் மட்டும்தான். அப்படிச் செய்தால் நிச்சயம் நிரந்தர நன்மைகளைப் பெறுவீர்கள். ▪ (w13-E 01/01)
a கூடுதல் தகவலுக்கு யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தில் “நாம் ‘கடைசி நாட்களில்’ வாழ்கிறோமா?” என்ற 9-ஆம் பாடத்தைப் பாருங்கள்.