கடவுளிடம் நெருங்கி வாருங்கள்
“அவர் . . . உயிருள்ளவர்களின் கடவுளாக இருக்கிறார்”
மரணம் கடவுளைவிட சக்தி வாய்ந்ததா? இல்லவே இல்லை! ‘சர்வவல்லமையுள்ள தேவனுக்கு’ முன்னால் மரணமோ வேறு எந்த ‘எதிரியோ’ ஒன்றுமே இல்லை. (1 கொரிந்தியர் 15:26; யாத்திராகமம் 6:3) சொல்லப்போனால், இறந்தவர்களை மீண்டும் உயிரோடு எழுப்புவதன் மூலம் மரணத்தை வெல்லும் சக்தி தமக்கு இருப்பதை அவர் காட்டப்போகிறார், அதைச் செய்யப்போவதாக வாக்குறுதியும் அளிக்கிறார்.a அந்த வாக்குறுதியை நாம் எப்படி நம்பலாம்? கடவுளுடைய மகனான இயேசு சொன்ன நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை வாசித்தால் உயிர்த்தெழுதல் நடக்கும் என்பதை ஆணித்தரமாக நம்புவோம்.—மத்தேயு 22:31, 32-ஐ வாசியுங்கள்.
உயிர்த்தெழுதலை நம்பாத சதுசேய மதப்பிரிவினரிடம் பேசிக்கொண்டிருந்தபோது இயேசு இந்த வார்த்தைகளைச் சொன்னார்: “இறந்தவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவது சம்பந்தமாகக் கடவுள் உங்களுக்குச் சொல்லியிருப்பதை நீங்கள் வாசித்ததில்லையா? ‘நான் ஆபிரகாமின் கடவுளாகவும், ஈசாக்கின் கடவுளாகவும், யாக்கோபின் கடவுளாகவும் இருக்கிறேன்’ என்று அவர் சொன்னார் அல்லவா? அவர் இறந்தவர்களின் கடவுளாக அல்ல, உயிருள்ளவர்களின் கடவுளாக இருக்கிறார்.” சுமார் கி.மு. 1514-ல், கடவுள் எரிகிற முட்புதரிலிருந்து மோசேயிடம் பேசிய சம்பவத்தை இயேசு இங்கே குறிப்பிடுகிறார். (யாத்திராகமம் 3:1-6) மோசேயிடம் யெகோவா, “நான் ஆபிரகாமின் கடவுளாகவும், ஈசாக்கின் கடவுளாகவும், யாக்கோபின் கடவுளாகவும் இருக்கிறேன்” என்று சொன்ன வார்த்தைகள், உயிர்த்தெழுதல் நிச்சயம் நடக்கும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. எப்படி?
இப்போது அந்த வார்த்தைகளின் சூழமைவைப் பார்க்கலாம். மோசேயிடம் யெகோவா பேசிய சமயத்தில் ஆபிரகாம் இறந்து 329 வருடமும், ஈசாக்கு இறந்து 224 வருடமும், யாக்கோபு இறந்து 197 வருடமும் ஆகியிருந்தது. என்றாலும் யெகோவா, ‘நான் அவர்களுடைய கடவுளாக இருக்கிறேன்’ என்று சொன்னாரே தவிர ‘அவர்களுடைய கடவுளாக இருந்தேன்’ என்று சொல்லவில்லை. யெகோவாவின் பார்வையில் அவர்கள் இன்னமும் உயிரோடு இருப்பது போல்தான் அவர் பேசினார். ஏன்?
இயேசு இப்படி விளக்கம் கொடுத்தார்: “அவர் [யெகோவா] இறந்தவர்களின் கடவுளாக அல்ல, உயிருள்ளவர்களின் கடவுளாக இருக்கிறார்.” உயிர்த்தெழுதலைப் பற்றிய ஒரு முக்கியமான விஷயம் இதிலிருந்து தெரிகிறது. அதாவது, உயிர்த்தெழுதல் நடக்காது என்றால் ஆபிரகாமும், ஈசாக்கும், யாக்கோபும் மரித்த நிலையில்தான் எப்பொழுதும் இருப்பார்கள். அது உண்மையானால், யெகோவா பிணங்களின் கடவுளாக அல்லவா இருப்பார்? அப்படியென்றால் யெகோவாவைவிட மரணம் சக்தி வாய்ந்தது என அர்த்தமாகிவிடுமே! தம்முடைய உண்மை ஊழியர்களை மரணத்தின் பிடியிலிருந்து விடுவிக்க அவர் சக்தியில்லாதவர் என அர்த்தமாகிவிடுமே!
ஆனால், அது உண்மையல்ல. சரி, இறந்துபோன ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு போன்ற உண்மையுள்ள ஊழியர்களுடைய நிலை என்ன? இயேசு இந்த ஆணித்தரமான பதிலை அளித்தார்: “கடவுளைப் பொறுத்தவரை, இவர்கள் எல்லாரும் உயிருள்ளவர்களாகவே இருக்கிறார்கள்.” (லூக்கா 20:38) இறந்துபோன தம்முடைய உண்மை ஊழியர்களை யெகோவா உயிர்த்தெழுப்பப்போவது அந்தளவு நிச்சயம் என்பதால் தம்முடைய பார்வையில் அவர்கள் இன்னும் உயிரோடு இருப்பதாகக் கருதுகிறார். (ரோமர் 4:16, 17) அபார நினைவாற்றல் உள்ள யெகோவா, இறந்துபோன தம் ஊழியர்கள் அனைவரையுமே தம்முடைய ஞாபகத்தில் வைத்து, ஏற்ற சமயத்தில் உயிர்த்தெழுப்புவார்.
மரணத்தைவிட யெகோவா எத்தனையோ மடங்கு சக்திவாய்ந்தவர்
இறந்துபோன அன்பானவர்கள் மீண்டும் உயிரோடு வருவார்கள் என்ற வாக்கு உங்களுக்குச் சந்தோஷத்தை அளிக்கிறதா? மரணத்தைவிட யெகோவா எத்தனையோ மடங்கு சக்திவாய்ந்தவர் என்பதை நினைவில் வையுங்கள். எனவே, இறந்தவர்களை உயிர்த்தெழுப்பப்போவதாக அவர் கொடுத்த வாக்குறுதியைக் கட்டாயம் நிறைவேற்றுவார், எந்தச் சக்தியாலும் அதைத் தடுத்து நிறுத்த முடியாது! உயிர்த்தெழுதலைப் பற்றியும் அதைச் செய்வதாக வாக்கு கொடுத்த கடவுளைப் பற்றியும் நீங்கள் ஏன் அதிகம் தெரிந்துகொள்ளக் கூடாது? அப்படிச் செய்தால், ‘உயிருள்ளவர்களின் கடவுளான’ யெகோவாவின் நண்பராக ஆவீர்கள். ▪ (w13-E 02/01)
பைபிள் வாசிப்பு
a நீதியான புதிய உலகத்தில் கடவுள் எப்படி இறந்தவர்களை எழுப்பப்போகிறார் என்பதைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் அதிகாரம் 7-ஐ பாருங்கள். இந்தப் புத்தகம் யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.