மோசே அன்புக்குப் பேர்போனவர்!
அன்பு என்றால் என்ன?
அன்பு என்பது ஒருவர்மீது காட்டுகிற அளவுகடந்த பாசத்தைக் குறிக்கிறது. அன்பான ஒருவர் மற்றவர்கள்மீது தனக்கிருக்கும் அன்பைச் சொல்லிலும் செயலிலும் காட்டுவார், அவர்களுக்காக எதையும் தியாகம் செய்யத் தயாராய் இருப்பார்.
மோசே எப்படி அன்பு காட்டினார்?
மோசே கடவுள்மீது அன்பு காட்டினார். எவ்விதத்தில்? 1 யோவான் 5:3-ல் உள்ள வார்த்தைகளைக் கொஞ்சம் நினைவுக்குக் கொண்டுவாருங்கள்: “நாம் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதே அவர்மீது அன்பு காட்டுவதாகும்.” மோசே இந்த நியதியின்படி வாழ்ந்தார். கடவுள் செய்யச் சொன்ன எல்லாவற்றையும் செய்தார்—பலம்படைத்த பார்வோனுக்குக் முன்னால் நின்றுபேசுகிற சவாலான வேலையாக இருந்தபோதிலும் சரி, செங்கடலுக்கு மேலே கோலை நீட்டுகிற சாதாரண வேலையாக இருந்தபோதிலும் சரி! கடவுள் கொடுத்த கட்டளை சவாலானதோ சுலபமானதோ மோசே அதற்குக் கீழ்ப்படிந்தார். ஆம், யெகோவா ‘கூறியபடியெல்லாம் செய்தார்.’—யாத்திராகமம் 40:16, ERV.
சக இஸ்ரவேலர்மீது மோசே அன்பு காட்டினார். மோசே மூலமாகத்தான் யெகோவா தங்களை வழிநடத்துகிறார் என்பதை அந்த மக்கள் புரிந்துகொண்டார்கள்; அதனால், மோசேயிடம் வந்து தங்களுடைய மனக்குறைகளைக் கொட்டினார்கள். “ஜனங்கள் காலமே துவக்கிச் சாயங்காலம்மட்டும் மோசேக்கு முன்பாக நின்றார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (யாத்திராகமம் 18:13-16) இப்படி, நாள் முழுக்க ஒருவர் மாற்றி ஒருவராக வந்து தங்கள் மனபாரத்தையெல்லாம் இறக்கிவைக்க, அதைக் கேட்டுக் கேட்டு மோசே எவ்வளவாய்ச் சோர்வடைந்திருப்பார்! என்றாலும், தன் நேசத்துக்கும் பாசத்துக்கும் உரிய அந்த ஜனங்களுக்கு அவர் சந்தோஷமாக உதவினார்.
மோசே அவர்களுடைய மனக்குறைகளைக் கேட்டதோடு, அவர்களுக்காக ஜெபமும் செய்தார். தன்னை நோகடித்தவர்களுக்காகவும்கூட ஜெபம் செய்தார். உதாரணமாக, மோசேயின் அக்கா மிரியாம் அவருக்கு எதிராக முறுமுறுத்தபோது, யெகோவா மிரியாமைத் தொழுநோயால் தண்டித்தார். ‘அவளுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்’ என்று மோசே நினைக்கவில்லை. மாறாக, “என் தேவனே, அவளைக் குணமாக்கும்” என்று அவளுக்காக உடனடியாய் மன்றாடினார். (எண்ணாகமம் 12:13) அன்பு இருந்ததால்தானே அவரால் இப்படித் தன்னலமில்லாமல் ஜெபம் செய்ய முடிந்தது!
நமக்குப் பாடங்கள்:
மோசேயைப் போல நாம், யெகோவாமீது ஆழமான அன்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட அன்பு, அவருடைய கட்டளைகளுக்கு ‘இருதயப்பூர்வமாகக் கீழ்ப்படிய’ நம்மைத் தூண்டும். (ரோமர் 6:17) யெகோவாவுக்கு நாம் இருதயப்பூர்வமாகக் கீழ்ப்படிந்தால், அவருடைய இருதயம் சந்தோஷப்படும். (நீதிமொழிகள் 27:11) நாமும் பயனடைவோம். ஆம், உண்மையான அன்போடு நாம் கடவுளுக்குச் சேவை செய்தால், எப்போதும் சரியான காரியங்களையே செய்வோம், அதுவும் சந்தோஷமாகச் செய்வோம்.—சங்கீதம் 100:2.
மோசேயைப் போல நாம், மற்றவர்களுக்காக எந்தத் தியாகமும் செய்யத் தயாராயிருக்க வேண்டும். நம் நண்பர்களோ உறவினர்களோ தங்களுடைய பிரச்சினையை எடுத்துக்கொண்டு நம்மிடம் வரும்போது நமக்கு அன்பு இருந்தால் (1) அவர்கள் சொல்வதை உன்னிப்பாய்க் கவனிப்போம், (2) அவர்களுடைய இடத்தில் நம்மை வைத்துப் பார்ப்போம், (3) அவர்கள்மீது அக்கறை இருப்பதைக் காட்டுவோம்.
மோசேயைப் போல நாமும் நம் அன்புக்குரியவர்களுக்காக ஜெபம் செய்ய வேண்டும். சில சமயம், அவர்களுடைய பிரச்சினைகளைக் கேட்கும்போது, அவர்களுக்கு உதவ முடியவில்லையே என நினைத்து நாம் தவிக்கலாம். ‘உங்களுக்காக ஜெபம் பண்றத தவிர வேற என்ன செய்யறதுன்னு எனக்குத் தெரியலை’ என்றுகூட நாம் சொல்லலாம். ஆனால், இதை மனதில் வையுங்கள்: “நீதிமானின் மன்றாட்டு கேட்கப்படுவதால், அது மிகவும் வல்லமையுள்ளது.” (யாக்கோபு 5:16) அந்த நபருக்காக நாம் ஜெபம் செய்யும்போது, யெகோவா அதுவரை செய்யத் தீர்மானிக்காததைச் செய்வதற்குத் தூண்டப்படலாம். எனவே, நம் அன்புக்குரியவர்களுக்காக ஜெபம் செய்வதைவிட வேறு நல்ல காரியத்தை நாம் செய்ய முடியுமா?a
நாம் மோசேயிடமிருந்து எத்தனையோ விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்பதை ஒத்துக்கொள்வீர்கள் அல்லவா? அவரும் நம்மைப் போல் சாதாரண மனிதர்தான்; என்றாலும், விசுவாசம், மனத்தாழ்மை, அன்பு ஆகிய குணங்களில் தலைசிறந்த மாதிரியாகத் திகழ்கிறார். நாம் அவரை எந்தளவு அச்சுப்பிசகாமல் பின்பற்றுகிறோமோ, அந்தளவு நன்மை அடைவோம்; நாம் மட்டுமல்ல மற்றவர்களும் நன்மை அடைவார்கள்.—ரோமர் 15:4. ▪ (w13-E 02/01)
a நம் ஜெபத்தைக் கடவுள் கேட்க வேண்டுமானால், அவர் சொன்னபடியெல்லாம் நாம் கேட்க வேண்டும். கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தில் 17-ஆம் அதிகாரத்தைப் பாருங்கள்.