உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w13 4/1 பக். 10-12
  • குறைபாடுள்ள குழந்தையை வளர்க்க...

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • குறைபாடுள்ள குழந்தையை வளர்க்க...
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நம்பிக்கையான மனநிலையோடு இருங்கள்
  • குழந்தைப் பருவத்திலிருந்தே பிள்ளைகளைப் பயிற்றுவித்தல்
    குடும்ப வாழ்க்கை
  • உங்கள் பிள்ளைகளைப் பாதுகாப்பது எப்படி?
    விழித்தெழு!—2007
  • சிசுப்பருவத்திலிருந்தே உங்கள் பிள்ளையை பயிற்றுவியுங்கள்
    குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம்
  • விசேஷ கவனிப்பு தேவைப்படும் பிள்ளைகளை வளர்க்க . . .
    விழித்தெழு!—2006
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
w13 4/1 பக். 10-12

குடும்ப மகிழ்ச்சிக்கு

குறைபாடுள்ள குழந்தையை வளர்க்க...

கார்லோ: a “என் மகன் ஆஞ்சாலோவுக்கு மனவளர்ச்சிக் குறைபாடு இருக்கிறது. அவனுடைய குறை எங்களை உடல் ரீதியில், மன ரீதியில், உணர்ச்சி ரீதியில் சக்கையாய்ப் பிழிந்தெடுக்கிறது! ஆரோக்கியமான குழந்தையை வளர்த்தெடுக்க தேவைப்படும் சக்தியைவிட நூறு மடங்கு அதிக சக்தி தேவைப்படுகிறது குறைபாடுள்ள குழந்தையை வளர்க்க! இதனால், சில சமயம் எங்கள் மணவாழ்க்கையே கசப்பாகிவிடுகிறது.”

மாயா: “ஆஞ்சாலோவுக்குச் சின்னச் சின்ன விஷயங்களைச் சொல்லித் தரக்கூட நாங்கள் அரும்பாடுபட வேண்டியிருக்கிறது, ஏகப்பட்ட பொறுமை காட்ட வேண்டியிருக்கிறது. நான் களைப்பாக உணரும் நேரங்களில், என் கணவரான கார்லோவிடம் எதற்கெடுத்தாலும் எரிந்துவிழ ஆரம்பித்துவிடுகிறேன். சிலசமயம் எங்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு, வாய்ச் சண்டையில் போய் முடிவடைகிறது.”

உங்கள் குழந்தை முதன்முதலாக இந்த உலகில் கண்விழித்த அந்த நாள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? பஞ்சு போன்ற அந்தப் பிஞ்சுக் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சுவதற்கு நிச்சயம் உங்கள் கைகள் துடித்திருக்கும். ஆனால், பிறக்கிற குழந்தைக்கு ஏதோ கோளாறு இருக்கிறதெனத் தெரியவரும்போது, பெற்றோருக்கு எப்படி இருக்கும்? குழந்தை பிறந்ததை நினைத்து சந்தோஷப்படுவதா, துக்கப்படுவதா என்று தெரியாமல் குழம்பித் தவிப்பார்கள். கார்லோ-மாயா தம்பதியின் கதையும் அதேதான்.

உங்கள் குழந்தைக்கு ஏதாவது குறைபாடு இருக்கிறதா? ஆம் என்றால், ‘எப்படித்தான் சமாளிக்கப்போகிறேனோ’ என்று நீங்கள் கவலைப்படலாம். ஆனால், நம்பிக்கையைத் தளரவிடாதீர்கள். அநேக பெற்றோர் அத்தகைய பிரச்சினைகளை வெற்றிகரமாகச் சமாளித்திருக்கிறார்கள். இப்போது, என்ன மூன்று சவால்களை நீங்கள் எதிர்ப்படலாம் என்றும், அவற்றைச் சமாளிக்க பைபிளிலுள்ள ஞானமான அறிவுரைகள் எப்படி உதவும் என்றும் பார்க்கலாம்.

சவால் 1: குழந்தைக்குக் குறைபாடு இருப்பதை ஏற்றுக்கொள்ள உங்கள் மனம் மறுக்கிறது.

குழந்தைக்கு கோளாறு இருப்பது தெரிந்ததுமே அநேக பெற்றோர் நொறுங்கிப்போய்விடுகிறார்கள். “எங்கள் மகன் சான்டியாகோவுக்கு மூளைவாதம் தாக்கியிருக்கிறது என டாக்டர்கள் சொன்னபோது, என்னால் நம்பவே முடியவில்லை. இதயமே சுக்குநூறானது” என்கிறார் மெக்சிகோவிலுள்ள ஜுலியானா. இன்னும் சில பெற்றொர் குற்றவுணர்ச்சியால் தவிக்கலாம். இத்தாலியைச் சேர்ந்த விலானா சொல்கிறார்: “என் வயதில் பிள்ளை பெற்றால் நிறையப் பிரச்சினைகள் வருமென்று தெரிந்தும், பிள்ளை பெற்றுக்கொள்ளத் தீர்மானித்தேன். இப்போது என் மகன் மனவளர்ச்சிக் குறைபாட்டினால் கஷ்டப்படுகிறான், குற்றவுணர்ச்சியில் நான் தினம்தினம் செத்துக்கொண்டிருக்கிறேன்.”

கவலையோ குற்றவுணர்ச்சியோ உங்களை வாட்டி வதைக்கிறதென்றால், மனம்தளர்ந்துவிடாதீர்கள்; அப்படிப்பட்ட உணர்ச்சிகள் எழுவது இயல்புதான். மனிதர்கள் நோய்வாய்ப்படுவது கடவுளுடைய நோக்கமே அல்ல. (ஆதியாகமம் 1:27, 28) ஒரு குறைபாட்டை சர்வசாதாரணமாக ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவத்தோடு பெற்றோர்களை அவர் படைக்கவில்லை. எனவே, உங்கள் குழந்தையை நினைத்து நீங்கள் வேதனைத் தீயில் வெந்துகொண்டிருக்கலாம். ஆனால் அவசரப்படாதீர்கள், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கும், புதிய சூழ்நிலைக்கு ஏற்ப மாறுவதற்கும் கொஞ்சம் காலமெடுக்கும்.

குழந்தையின் குறைபாட்டிற்கு நீங்கள்தான் காரணமென்று உங்கள்மீதே பழிபோட்டுக்கொள்கிறீர்களா? இதை நினைவில் வையுங்கள்: மரபியல், சுற்றுச்சூழல் போன்ற எத்தனையோ விஷயங்கள் குறைபாட்டுக்குக் காரணமாக இருக்கலாம்; எப்படி, ஏன் என்று இதுவரை யாருக்குமே சரியாகத் தெரியாது. சிலசமயம் உங்கள் துணைமீது பழிபோட நினைப்பீர்கள். ஆனால், அப்படிச் செய்யாதீர்கள். உங்கள் மணத்துணையோடு ஒத்துழைத்தால்... பிள்ளையைக் கவனித்துக்கொள்வதில் கவனம் செலுத்தினால்... இந்தச் சவாலைச் சமாளிக்க முடியும்.—பிரசங்கி 4:9, 10.

ஆலோசனை: பிள்ளையின் குறைபாட்டைப் புரிந்துகொள்ள முயற்சியெடுங்கள். “ஞானத்தினாலும் புரிந்துகொள்ளுதலினாலும் நல்ல வீடு கட்டப்படுகிறது” என்று பைபிள் சொல்கிறது.—நீதிமொழிகள் 24:3, ERV.

மருத்துவ நிபுணர்களிடமிருந்தும் நம்பகமான புத்தகங்களிலிருந்தும் ஏராளமான விஷயங்களை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். உங்கள் பிள்ளையின் உடல்நிலையைப் பற்றிக் கற்றுக்கொள்வதை ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதோடு ஒப்பிடலாம். ஆரம்பத்தில் கடினமாக இருக்கும், ஆனால் அது சாத்தியம்.

கார்லோ-மாயா தம்பதிகூட தங்கள் டாக்டரிடமிருந்தும், ஒரு பிரத்தியேக மருத்துவ அமைப்பிடமிருந்தும் வேண்டிய தகவல்களைப் பெற்றுக்கொண்டார்கள். “இப்படி விஷயங்களைப் பெற்றுக்கொண்டதால், வரவிருந்த பிரச்சினைகளை மட்டுமல்ல, மனவளர்ச்சிக் குறைபாடுள்ளவர்களின் நிறைகளையும் புரிந்துகொண்டோம். ஆம், எத்தனையோ விதங்களில் எங்கள் மகனால் இயல்பான வாழ்க்கை வாழ முடியுமென்பதைப் புரிந்துகொண்டோம். அது எங்களுக்கு ரொம்பவே ஆறுதலாக இருந்தது” என்கிறார்கள் அவர்கள்.

இப்படிச் செய்து பாருங்கள்: உங்கள் பிள்ளையால் என்னென்ன செய்ய முடிகிறது என்பதற்குக் கவனம் செலுத்துங்கள். சில காரியங்களைக் குடும்பமாகச் செய்யத் திட்டமிடுங்கள். உங்கள் பிள்ளை ஒரு சின்ன வேலையைச் செய்து முடித்தால்கூட உடனே பாராட்டுங்கள், அவனோடு/அவளோடு சேர்ந்து சந்தோஷப்படுங்கள்.

சவால் 2: சக்தியெல்லாம் இழந்ததுபோல், மனம்விட்டுப் பேச யாருமில்லாததுபோல் உணருகிறீர்கள்.

நோய்வாய்ப்பட்ட குழந்தையைக் கவனித்துக்கொள்வதில் உங்கள் சக்தியெல்லாம் கரைந்துவிடுவதுபோல் நீங்கள் உணரலாம். நியுஜிலாந்திலுள்ள ஜெனி சொல்கிறார்: “என் மகனுக்குத் தீரா வியாதி வந்திருப்பது தெரிந்த பிறகு, அழுது அழுதே சில வருடங்களைக் கழித்தேன், வீட்டு வேலைகளைக் கொஞ்சம் அதிகமாகச் செய்தால்கூட சக்தியில்லாமல் அப்படியே துவண்டுவிடுவேன்.”

மற்றொரு சவால், மனம்விட்டுப் பேச யாரும் இல்லாததுபோல் உணரலாம். பென் என்பவரின் மகன் தசை நலிவு நோயாலும் ஒருவித நரம்புத்தளர்ச்சி நோயாலும் அவதிப்பட்டு வருகிறான். “நாங்கள் படும் கஷ்டத்தை மற்றவர்களால் புரிந்துகொள்ளவே முடியாது. மனதில் இருப்பதையெல்லாம் யாரிடமாவது கொட்டித்தீர்க்க வேண்டும்போல் இருக்கும். ஆனால், நண்பர்கள் பெரும்பாலோருக்கு ஆரோக்கியமான குழந்தைகள் இருப்பதால் எங்கள் பிரச்சினையைப் பற்றிப் பேசத் தயக்கமாக இருக்கும்” என்கிறார் பென்.

ஆலோசனை: உதவி கேளுங்கள். கிடைக்கும்போது அதை ஏற்றுக்கொள்ளுங்கள். ஜுலியானா சொல்கிறார்: “சிலசமயம் என் கணவருக்கும் எனக்கும் உதவி கேட்பதற்குத் தர்மசங்கடமாக இருக்கும். ஆனால், எல்லாவற்றையுமே தனியாகச் செய்ய முடியாது என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். மற்றவர்களுடைய உதவியை ஏற்றுக்கொண்டோம்; தோள் கொடுக்க தோழர்கள் இருக்கிறார்கள் என்ற உணர்வு எங்களுடைய தனிமை உணர்வை ஓரளவு துரத்தியடித்தது.” கிறிஸ்தவக் கூட்டங்களின்போது அல்லது ஒரு பொது நிகழ்ச்சியின்போது நெருங்கிய நண்பரோ குடும்ப அங்கத்தினரோ உங்கள் பிள்ளையைக் கவனித்துக்கொள்ள முன்வந்தால், மனமார அந்த உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள். “சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்” என்று பைபிள் சொல்கிறது.—நீதிமொழிகள் 17:17.

உங்கள் உடல்நலத்திலும் அக்கறை காட்டுங்கள். ஆம்புலன்ஸ் வண்டிக்கு அடிக்கடி எரிபொருள் ஊற்றினால்தான் நோயாளிகளை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்குச் செல்ல முடியும். அதுபோலவே, குறைபாடுள்ள குழந்தையைக் கவனித்துக்கொள்கிற உங்களுக்கும் “எரிபொருள்” தேவை. அப்படியானால், ஊட்டச்சத்துள்ள உணவும் உடற்பயிற்சியும் ஓய்வும் உங்களுக்குத் தேவை. ஜேவியரின் மகனுக்குக் கால் ஊனம். அவர் சொல்கிறார்: “என் பையனால் நடக்க முடியாது, நான்தான் அவனுக்குக் கால். அவனைத் தூக்கிச் சுமக்க சக்தி வேண்டுமே, அதனால் நன்றாகச் சாப்பிட்டு உடம்பைப் பார்த்துக்கொள்கிறேன்.”

உங்கள் உடம்பைப் பார்த்துக்கொள்ள என்ன செய்யலாம்? சில பெற்றோர்கள் மாறிமாறி தங்கள் குழந்தையைக் கவனித்துக்கொள்கிறார்கள். இதனால் அவர்களில் ஒருவருக்கு ஒய்வெடுக்கவோ சொந்த வேலைகளைச் செய்யவோ நேரம் கிடைக்கிறது. வேண்டாத காரியங்களைத் தவிர்ப்பதன் மூலமும் அவர்களுக்கு நேரம் கிடைக்கிறது. இந்த விஷயத்தில் சமநிலை காட்டுவது கடினமாக இருக்கலாம். என்றாலும், இந்தியாவில் மயூரி என்ற தாய் சொல்வது போல்: “காலப்போக்கில் அது உங்களுக்குப் பழக்கமாகிவிடும்.”

நம்பிக்கைக்குரிய நண்பரிடம் மனம்திறந்து பேசுங்கள். ஆரோக்கியமான குழந்தைகளையுடைய நண்பர்கள்கூட உங்கள் உடைந்த உள்ளத்திற்கு அருமருந்தாக இருக்கலாம். யெகோவா தேவனிடமும் மனம்திறந்து பேசுங்கள். ஜெபத்தில் அவரிடம் பேசுவது உண்மையிலேயே உதவுமா? தீரா வியாதியுள்ள இரண்டு குழந்தைகளின் தாயான யாஸ்மின் சொல்கிறார்: “மன அழுத்தமும் வேதனையும் சிலசமயம் என் கழுத்தை நெரிப்பதுபோல் இருக்கும். அப்போது, யெகோவாவிடம் மனதைக் கொட்டித்தீர்ப்பேன்; அதன்பின் பாரமெல்லாம் குறைந்து புதுத்தெம்பு கிடைத்ததுபோல் இருக்கும். பிறகு எப்போதும்போல் வேலை செய்ய ஆரம்பித்துவிடுவேன்.”—சங்கீதம் 145:18.

இப்படிச் செய்து பாருங்கள்: என்ன சாப்பிடுகிறீர்கள், எப்போது உடற்பயிற்சி செய்கிறீர்கள், எவ்வளவு நேரம் தூங்குகிறீர்கள் என்பதையெல்லாம் யோசித்துப் பாருங்கள். முக்கியமில்லாத வேலைகளைத் தவிர்த்து, அந்த நேரத்தை உங்கள் ஆரோக்கியத்திற்குக் கவனம் செலுத்த பயன்படுத்துங்கள். தேவைக்கேற்ப உங்கள் தினசரி வேலைப் பட்டியலை மாற்றிக்கொள்ளுங்கள்.

சவால் 3: குடும்பத்திலுள்ள மற்றவர்களைவிட வியாதிப்பட்ட பிள்ளைக்கே அதிக கவனம் செலுத்துகிறீர்கள்.

ஒரு பிள்ளை வியாதிப்பட்டிருந்தால் குடும்பத்தில் பல விஷயங்கள் பாதிக்கப்படலாம். உதாரணத்திற்கு, குடும்பத்தார் என்ன சாப்பிடுகிறார்கள், எங்கே போகிறார்கள், ஒவ்வொரு பிள்ளையோடும் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள் ஆகிய விஷயங்கள் பாதிக்கப்படலாம். ஆரோக்கியமான பிள்ளைகளோ ஒதுக்கப்பட்டதுபோல் உணரலாம். அதுமட்டுமல்ல, பெற்றோர்கள் வியாதிப்பட்ட குழந்தையைக் கவனிப்பதில் மூழ்கிப்போய்விடுவதால், அவர்களுடைய மணவாழ்க்கை கசந்துவிடலாம். லைபீரியாவிலுள்ள லையோனல் சொல்கிறார்: “சிலசமயம் என் மனைவி என்னிடம், ‘எல்லா வேலையையும் மாங்குமாங்குன்னு நானே செஞ்சிட்டு இருக்கேன். நம்ம குழந்தைமேல உங்களுக்குக் கொஞ்சமாவது அக்கறை இருக்கா?’ என்று கத்துவாள். அவள் என்னை மட்டம்தட்டுவதுபோல் இருக்கும், அதனால் சிலசமயம் நானும் கத்திவிடுவேன்.”

ஆலோசனை: உங்கள் மற்ற பிள்ளைகள்மீதும் உங்களுக்கு அக்கறை இருக்கிறது என்பதை அவர்களுக்குத் தெளிவாகக் காட்டுங்கள், அவர்களுக்குப் பிடித்தமான காரியங்களைச் செய்யுங்கள். “எங்கள் மூத்த மகனுக்காக ஏதாவது ஸ்பெஷலாகச் செய்வோம். சிலசமயம், அவனுக்குப் பிடித்த ஓட்டலுக்கு அழைத்துச் செல்வோம்” என்கிறார் ஜெனி.

உங்களுடைய மற்ற பிள்ளைகள்மீதும் அக்கறை காட்டுங்கள்

உங்கள் மணவாழ்க்கையில் தொடர்ந்து மணம்வீச மணத்துணையோடு மனம்விட்டுப் பேசுங்கள், சேர்ந்து ஜெபம் செய்யுங்கள். இந்தியாவைச் சேர்ந்த ஆசீமின் மகனுக்கு வலிப்புநோய். ஆசீம் சொல்கிறார்: “சிலசமயம் எனக்கும் என் மனைவிக்கும் சோர்வாக, களைப்பாக இருக்கும். வாழ்க்கையே வெறுத்துவிட்டதுபோல் தோன்றும். அப்போது, நாங்கள் சற்று நேரம் ஒதுக்கி, மனம்விட்டுப் பேசுவோம், சேர்ந்து ஜெபம் செய்வோம். தினமும் காலையில் பிள்ளைகள் எழுவதற்குமுன் ஒரு பைபிள் வசனத்தைக் கலந்துபேசுவோம்.” வேறுசில தம்பதிகள் இரவு படுக்கப்போகும்முன் மனம்விட்டுப் பேசுகிறார்கள். அன்யோன்யமான பேச்சும், ஊக்கமான ஜெபமும் வேதனைமிக்க காலப்பகுதியில் திருமண வாழ்க்கையை நிச்சயம் பலப்படுத்தும். (நீதிமொழிகள் 15:22) “நெருக்கடியான காலத்தில்தான் எங்கள் நெருக்கம் இன்னும் அதிகமானது, இன்னும் இனிமையானது, அந்த இனிமையான தருணங்களை எங்களால் மறக்கவே முடியாது” என்கின்றனர் ஒரு தம்பதி.

இப்படிச் செய்து பாருங்கள்: நோய்வாய்ப்பட்ட பிள்ளைக்கு உதவி செய்கிற உங்கள் மற்ற பிள்ளைகளைப் பாராட்டுங்கள். அவர்களுக்கும் உங்கள் துணைக்கும் அன்பு, அரவணைப்பு, ஆதரவு காட்டுங்கள்.

நம்பிக்கையான மனநிலையோடு இருங்கள்

சிறியோரையும் பெரியோரையும் ஆட்டிப்படைக்கிற எல்லாவித நோய்களையும் குறைபாடுகளையும் கடவுள் வெகு சீக்கிரத்தில் நீக்கப்போகிறார் என பைபிள் வாக்குறுதி அளிக்கிறது. (வெளிப்படுத்துதல் 21:3, 4) அப்போது ‘“வியாதிப்பட்டிருக்கிறேன்” என்று நகரவாசிகள் சொல்ல மாட்டார்கள்.’b—ஏசாயா 33:24.

அப்படியொரு காலம் வரும்வரை, குறைபாடுள்ள குழந்தையின் பெற்றோராக உங்களால் நிச்சயம் வெற்றி காண முடியும். கார்லோ-மாயா தம்பதியர் சொல்கின்றனர்: “நீங்கள் நினைப்பதுபோல் எதுவும் நடக்கவில்லை என்றால், சோர்ந்துவிடாதீர்கள். உங்கள் பிள்ளையிடம் நிறைய நல்ல விஷயங்கள் இருக்கும், அவற்றை மட்டுமே பாருங்கள்.” ▪ (w13-E 02/01)

a இந்தக் கட்டுரையில் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

b பைபிள் வாக்குறுதி அளிக்கிற பரிபூரண ஆரோக்கியத்தைப் பற்றி யெகோவாவின் சாட்சிகள் பிரசுரித்த பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் அதிகாரம் 3-ஐ வாசித்துப் பாருங்கள்.

உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்...

  • உடல் ரீதியிலும் மன ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் நான் திடமாக இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

  • எனக்கு உதவி செய்கிற என் மற்ற பிள்ளைகளை நான் எப்போது கடைசியாகப் பாராட்டினேன்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்