வாழ்க்கை சரிதை
ஆர்க்டிக் வட்டம் அருகே ஐம்பது ஆண்டு கால முழுநேர சேவை
“அப்பா அம்மா ரெண்டு பேரும் சத்தியத்துல இருக்குறதுனால உங்களுக்கு கவலையே இல்ல. நல்லா பயனியர் செய்யலாம். அவங்க உங்களுக்கு ஆதரவா இருப்பாங்க” என்று முழுநேர ஊழியம் செய்கிற ஒரு தோழியிடம் சொன்னோம். “ஆனா பாருங்க, நம்ம எல்லாருக்கும் ஒரே அப்பாதான்” என்று அவர் பதிலளித்தார். அவருடைய பதில் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொடுத்தது: நம் பரலோக அப்பா தம்முடைய ஊழியர்களைக் கவனித்துக்கொள்கிறார், பலப்படுத்துகிறார். இது நூற்றுக்கு நூறு உண்மை என்பதற்கு எங்களுடைய வாழ்க்கையே ஒரு அத்தாட்சி.
பின்லாந்திலுள்ள வடக்கு ஆஸ்ட்ரோபோத்னியாதான் எங்கள் ஊர். நாங்கள் மொத்தம் பத்து பிள்ளைகள்; விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். துள்ளித் திரியும் பிள்ளைப் பருவத்தின் சந்தோஷத்தை, இரண்டாம் உலகப் போர் பறித்துவிட்டது. போர் முனையிலிருந்து நூற்றுக்கணக்கான மைல் தூரத்தில் நாங்கள் குடியிருந்தோம். இருந்தாலும், குலை நடுங்க வைத்த அந்தப் போர் எங்களுடைய பிஞ்சு மனதில் அழியா தடத்தை ஏற்படுத்தி விட்டது. ஔலூ, காலாஜோக்கி ஆகிய பக்கத்து நகரங்களில் குண்டு வீசப்பட்டபோது இரவு வானம் செக்கச்செவேலென்று ஒளிர்ந்தது. போர் விமானங்கள் தலைக்குமேல் பறப்பதைப் பார்த்தால் உடனே உள்ளே போய் ஒளிந்துகொள்ளும்படி அப்பா அம்மா சொல்வார்கள். அதனால், போரே இல்லாத பூஞ்சோலை பூமியைப் பற்றி எங்களுடைய பெரிய அண்ணன் டானோ சொன்னது எங்கள் மனதைக் கவர்ந்தது.
பைபிள் மாணாக்கருடைய பிரசுரத்தைப் படித்து டானோ சத்தியத்தைத் தெரிந்துகொண்டார். அப்போது அவருக்கு 14 வயது. போரில் ஈடுபடக் கூடாதென்பதை பைபிளிலிருந்து கற்றுக்கொண்டதால், இரண்டாம் உலகப்போரின்போது ராணுவத்தில் சேர மறுத்துவிட்டார். அதனால், சிறையில் தள்ளப்பட்டார். அங்கே சித்தரவதை செய்யப்பட்டார். இது அவரை முடக்கிவிடவில்லை, யெகோவாவுக்குச் சேவை செய்ய வேண்டுமென்ற ஆர்வத்தை அதிகரிக்கவே செய்தது. விடுதலையானதும், இன்னும் தீவிரமாக ஊழியத்தில் இறங்கினார். அண்ணனுடைய நல்ல முன்மாதிரியைப் பார்த்து, நாங்களும் பக்கத்து கிராமத்தில் நடந்த யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்குப் போக ஆரம்பித்தோம். கஷ்டப்பட்டு பணம் சேர்த்து மாநாடுகளுக்கும் போனோம். அதற்காக, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்குத் துணி தைத்துக் கொடுத்தோம், வெங்காயம் பயிர் செய்தோம், பெர்ரி பழங்களைப் பறிக்கும் வேலையும் செய்தோம். வயல் வேலைகள் நிறைய இருந்ததால், எல்லோரும் சேர்ந்து மாநாடுகளுக்குப் போக முடியவில்லை. அதனால், மாறி மாறி மாநாடுகளில் கலந்துகொண்டோம்.
இடமிருந்து: மட்டி (அப்பா), டானோ, ஸைமி, மரியா எமிலியா (அம்மா), வைனோ (குழந்தை), ஐலி, ஆனிக்கி-1935-ல்
யெகோவாவையும் அவருடைய நோக்கங்களையும் பற்றித் தெரிந்துகொண்டபோது, அவர்மீதுள்ள அன்பு இன்னும் ஆழமானது. அதனால், அவருக்கு அர்ப்பணிக்கத் தீர்மானித்தோம். 1947-ல் நாங்கள் இருவரும் ஞானஸ்நானம் எடுத்தோம் (அப்போது ஆனிக்கிக்கு 15 வயது ஐலிக்கு 17). எங்களுடைய அக்கா ஸைமியும் அதே வருடத்தில் ஞானஸ்நானம் எடுத்தார். கல்யாணமாகியிருந்த லினியா அக்காவுக்கும் பைபிள் படிப்பு நடத்தினோம். அவரும் குடும்பமாக யெகோவாவின் சாட்சியானார். நாங்கள் ஞானஸ்நானம் எடுத்த பிறகு அவ்வப்போது துணை பயனியர் ஊழியம் செய்யலாம் என திட்டமிட்டோம்.
முழுநேர ஊழியத்தில் கால் பதித்தோம்
இடமிருந்து: ஏவா கல்லியோ, ஸைமி மட்டிலா-சிர்ஜாலா, ஐலி, ஆனிக்கி, சாரா நோபோனன்-1949-ல்
1955-ல் இன்னும் வடக்கே கெமி என்ற நகருக்குக் குடிமாறினோம். நாங்கள் முழுநேரமாக வேலை பார்த்துக்கொண்டிருந்தோம். அதே சமயத்தில், பயனியர் சேவை செய்ய வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. ஆனால், செலவுகளுக்கு என்ன செய்வதென பயந்தோம். முதலில் கொஞ்சம் பணத்தைச் சேமித்து வைக்கலாமென நினைத்தோம். அந்தச் சமயத்தில்தான் ஆரம்பத்தில் சொன்ன அந்தப் பயனியர் சகோதரியிடம் பேசினோம். அப்போது ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்துகொண்டோம்; பணமும் குடும்பத்தாருடைய ஆதரவும் இருந்தால் மட்டுமே யெகோவாவுக்கு முழுமையாகச் சேவை செய்ய முடியும் என்று நினைப்பது தவறு, நம் பரலோக அப்பாவைச் சார்ந்திருப்பதே மிக முக்கியம்.
1952-ல் குவோபியோ மாநாட்டிற்குப் பயணிக்கையில். இடமிருந்து: ஆனிக்கி, ஐலி, ஏவா கல்லியோ
அந்தச் சமயத்தில் இரண்டு மாதங்களுக்குத் தேவையான பணம் எங்களிடம் இருந்தது. எனவே, ஆர்க்டிக் வட்டத்திற்கு மேலே லாப்லாந்திலுள்ள பெல்லோ நகராட்சியில் இரண்டு மாதங்கள் பயனியர் ஊழியம் செய்ய மே 1957-ல் தயக்கத்தோடு எழுதிக் கொடுத்தோம். இரண்டு மாதங்களுக்குப் பிறகு பார்த்தால், எங்களுடைய பணமெல்லாம் அப்படியே இருந்தது. அதனால், இன்னும் இரண்டு மாதங்களுக்குப் பயனியர் சேவையை தொடர்ந்தோம். அதன் பிறகும் எங்களுடைய சேமிப்பெல்லாம் அப்படியே இருந்தது. யெகோவா எங்களைக் கவனித்துக்கொள்வார் என்பது அப்போது உறுதியானது. இப்போது, பயனியர் சேவையில் 50 வருடங்கள் கடந்துவிட்டன. இன்னமும் எங்களுடைய சேமிப்பெல்லாம் அப்படியே இருக்கிறது! கடந்து வந்த காலத்தை திரும்பிப் பார்த்தால், யெகோவா எங்களுடைய கைகளைப் பிடித்துக்கொண்டு, “பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன்” என்று சொல்வதுபோல் இருக்கிறது.—ஏசா. 41:13.
50 வருட பயனியர் சேவையை முடித்த பிறகும் எங்களுடைய சேமிப்பு அப்படியே இருக்கிறது!
கைஸு ரேகூவும் ஐலியும் வெளி ஊழியத்தில்
1958-ல், ஸோடான்கிலா என்ற டவுனில் விசேஷ பயனியர்களாகச் சேவை செய்வதற்கு வட்டாரக் கண்காணி எங்களைச் சிபாரிசு செய்தார். அந்தச் சமயத்தில், அங்கே யெகோவாவின் சாட்சியாக ஒரேயொரு சகோதரி மட்டுமே இருந்தார். அவருக்குச் சத்தியம் கிடைத்த கதையைக் கேட்டால் சுவாரஸ்யமாக இருக்கும். அவருடைய மகன் பின்லாந்தின் தலைநகரான ஹெல்சிங்கிற்குப் பள்ளி சுற்றுலா சென்றிருந்தான். மாணவர்கள் கூட்டமாக நடந்து சென்றுகொண்டிருந்தபோது, வயதான ஒரு சகோதரி கடைசியில் வந்துகொண்டிருந்த அந்தப் பையனிடம் ஒரு காவற்கோபுர பத்திரிகையைக் கொடுத்து அவனுடைய அம்மாவிடம் கொடுக்கும்படிச் சொன்னார். அவனுடைய அம்மா அதை வாசித்ததும் இதுதான் சத்தியம் என்பதைப் புரிந்துகொண்டார்.
நாங்கள் மரம் அறுக்கும் ஒரு ஆலைக்கு மேலே ஓர் அறையில் வாடகைக்குக் குடியிருந்தோம். அங்கே கூட்டங்களை நடத்தினோம். ஆரம்பத்தில், நாங்களும் அந்த ஊரிலிருந்த சகோதரியும் அவருடைய மகளும் மட்டும்தான் கூட்டங்களில் கலந்துகொண்டோம். படிப்பு கட்டுரையைச் சேர்ந்தே வாசிப்போம். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, சாட்சிகளோடு பைபிள் படித்த ஒருவர் அந்த ஆலையில் வேலைக்குச் சேர்ந்தார். அவரும் குடும்பமாகக் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தார். பிறகு, அவரும் அவருடைய மனைவியும் ஞானஸ்நானம் எடுத்தார்கள். அவர் கூட்டங்களை நடத்த ஆரம்பித்தார். அதோடு, அந்த ஆலையில் வேலை பார்த்த இன்னும் சிலரும் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தார்கள், சத்தியத்தையும் ஏற்றுக்கொண்டார்கள். சில வருடங்களுக்குப் பிறகு ஒரு சபையே உருவாகும் அளவுக்கு எங்களுடைய தொகுதி வளர்ந்துவிட்டது.
சவாலான சூழ்நிலைகள்
தூரம்தான் பிரசங்க வேலைக்குப் பெரிய சவாலாக இருந்தது. கோடையில், பிராந்தியத்திலுள்ள மக்களைச் சந்திக்க, நடந்தோ சைக்கிளிலோ செல்வோம், சில நேரங்களில் படகில்கூட செல்வோம். சைக்கிள்தான் எங்களுக்குப் பெரிதும் கைகொடுத்தது. மாநாடுகளுக்குப் போக, நூற்றுக்கணக்கான மைல் தொலைவில் இருக்கிற அப்பா அம்மாவைப் பார்க்க சைக்கிளில்தான் போவோம். குளிர் காலத்தில், விடியற்காலமே பஸ் பிடித்து எங்கள் பிராந்தியத்திலுள்ள ஒரு கிராமத்திற்குச் சென்று வீட்டுக்கு வீடு ஊழியம் செய்வோம். ஒரு கிராமத்தை முடித்தவுடன் அடுத்த கிராமத்திற்கு நடந்தே செல்வோம். உறைபனி அடர்த்தியாக இருக்கும். பெரும்பாலும் சாலைகளில் அப்புறப்படுத்தப்படாமல் இருக்கும். பொதுவாக, குதிரைகளால் இழுத்துச் செல்லப்படும் பனிசறுக்கு வண்டி விட்டுச் செல்லும் தடத்திலேயே நடந்து போவோம். சில சமயங்களில், அந்தத் தடத்தையும் பனி மூடிவிடும். வசந்த காலம் பிறந்துவிட்டால், உறைபனி சற்று இளகி சொதசொதவென்று ஆகிவிடும். இருந்தாலும், கஷ்டப்பட்டு நடந்து போவோம்.
கடுங்குளிரில் ஒருநாள் ஊழியம் செய்யும்போது
கடுங்குளிரையும் உறைபனியையும் தாக்குப்பிடிக்க உதவும் உடைகளை உடுத்தினோம். நீண்ட கம்பளி காலுறைகளையும் அதற்குமேல் இரண்டு, மூன்று ஸாக்ஸ்களையும் முழங்கால்வரையுள்ள பூட்ஸ்களையும் போட்டுக்கொள்வோம். இருந்தாலும், பூட்ஸ் முழுவதும் பனி ஒட்டியிருக்கும். ஒரு வீட்டின் படிக்கட்டில் ஏறும்போது பூட்ஸ்களைக் கழற்றி தட்டுவோம். உறைபனிமீது நடந்து போகும்போது நீளமான மேற்சட்டையின் (coat) கீழ்பாகம் ஈரமாகிவிடும். குளிர் ஏற ஏற ஒரங்கள் கெட்டியாகி தகடுபோல் ஆகிவிடும். ஒரு பெண் எங்களைப் பார்த்து: “இந்த மாதிரி மோசமான குளிர்லயும் வந்திருக்கீங்கன்னா உங்களுக்கு எந்தளவுக்கு விசுவாசம் இருக்கணும்!” என்று சொன்னார். அந்த வீட்டுக்குப் போக 11 கி.மீ. தூரம் நடந்திருக்கிறோம்!
தூரம் காரணமாக, பெரும்பாலும் உள்ளூர் மக்களுடைய வீடுகளில் இரவு தங்கிவிடுவோம். அந்திசாயும் நேரத்தில், தங்குவதற்கு இடம் தேட ஆரம்பிப்போம். வீடுகள் சிறியதாக இருந்தாலும், அந்த மக்களின் மனம் பெரிதாக இருந்தது. அவர்கள் அன்பானவர்கள், உபசரிக்கும் குணமுடையவர்கள். தங்குவதற்கு இடம் தருவதோடு சாப்பிடுவதற்கும் ஏதாவது தருவார்கள். பெரும்பாலும், பனிமான், மூஸ் அல்லது கரடியின் தோல்மீதுதான் தூங்குவோம். எப்போதாவது, கொஞ்சம் சொகுசு கிடைக்கும். உதாரணத்திற்கு, ஒரு பெண் அவருடைய பெரிய வீட்டின் மாடியில் எங்களைத் தங்க வைத்தார். எங்களுக்காக வெள்ளை நிற பின்னல் விரிப்புடன் அழகான படுக்கையைத் தயாராக வைத்திருந்தார். நிறைய சமயம், நாங்கள் தங்கும் வீட்டில் இருப்பவர்களிடம் இருட்டும்வரை பைபிள் விஷயங்களைப் பேசிக்கொண்டிருப்போம். ஒரு தம்பதியின் வீட்டில் தங்கிய சமயத்தில், அறையின் ஒரு பக்கம் அவர்களும் மறுபக்கம் நாங்களும் படுத்துக்கொண்டோம். அவர்களிடம் சத்தியத்தைப் பற்றி பேசிப் பேசி கடைசியில் பொழுதே விடிந்துவிட்டது. அவர்கள் இருவரும் மாறி மாறி நிறைய கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.
பலன்தரும் ஊழியம்
லாப்லாந்து தரிசான பூமிதான், இருந்தாலும் எழில் கொஞ்சும் நாடு. ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு விதமாய் கண்ணுக்கு விருந்தளிக்கும். ஆனால், எங்கள் கண்களுக்கு யெகோவாவை மனதார ஏற்றுக்கொண்ட மக்கள்தான் அதைவிட அழகாகத் தெரிந்தார்கள். அங்கிருந்த அநேகருக்கு நாங்கள் பிரசங்கித்தோம்; அவர்களில் சிலர் மரவேலைக்காக லாப்லாந்திற்கு வந்தவர்கள். சில சமயங்களில் ஒரே குடிசையில் நிறைய ஆண்கள் இருப்பார்கள். பயில்வான்கள் மாதிரி இருக்கிற அந்த ஆட்கள் முன்னால் நாங்கள் எறும்புகள் மாதிரி போய் நிற்போம். இருந்தாலும், அவர்கள் பைபிள் செய்தியைக் காதுகொடுத்து கேட்டு பிரசுரங்களை வாங்கிக்கொண்டார்கள்.
ஊழியத்தில் எங்களுக்குக் கிடைத்த சுவையான அனுபவங்கள் எத்தனை எத்தனை! ஒருநாள் எங்களுடைய கடிகாரம் பஸ்-டான்ட் கடிகாரத்தைவிட ஐந்து நிமிடம் தாமதமாக ஓடியதால் பஸ்ஸை விட்டுவிட்டோம். அதனால், இன்னொரு கிராமத்திற்குப் போகிற பஸ்ஸில் ஏறினோம். அதற்குமுன் அந்தக் கிராமத்திற்குப் போனதே கிடையாது. முதல் வீட்டில் ஒரு இளம் பெண்ணைச் சந்தித்தோம். “இன்னைக்கு நீங்க வருவீங்கன்னு எனக்குத் தெரியும்” என்று அவர் சொன்னார். அவருடைய அக்கா ஏற்கெனவே எங்களோடு பைபிளைப் படித்துக்கொண்டிருந்தார். தனக்கும் பைபிள் படிப்பு எடுக்க அன்றைக்கு வரச்சொல்லும்படி அக்காவிடம் சொல்லியிருக்கிறார். எங்களுக்கு அது தெரியாது. அவருக்கும் பக்கத்து வீட்டில் இருந்த அவருடைய உறவினர்களுக்கும் பைபிள் படிப்பு ஆரம்பித்தோம். கொஞ்ச நாட்களில், அவர்கள் எல்லோருக்கும் சேர்த்து ஒன்றாக படிப்பு நடத்தினோம். கிட்டத்தட்ட 12 பேர் படித்தார்கள். அதன் பிறகு, அவருடைய குடும்பத்தில் நிறைய பேர் சாட்சிகளாக ஆனார்கள்.
1965-ல் ஆர்க்டிக் வட்டத்திற்குக் கீழே இருக்கும் கூசாமு சபையில் நியமிக்கப்பட்டோம். இன்றுவரை அங்குதான் இருக்கிறோம். அப்போது அங்கு சில பிரஸ்தாபிகள்தான் இருந்தார்கள். ஆரம்பத்தில் அங்கு ஊழியம் செய்வது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. மக்கள் எல்லோரும் தீவிர மதப்பற்றுள்ளவர்களாக இருந்தார்கள், எங்களை வெறுத்தார்கள். ஆனாலும், பைபிளை மதித்த ஆட்கள் நிறைய பேர் இருந்ததால் அவர்களிடம் பைபிளிலிருந்து பேச முடிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மக்களைப் பற்றித் தெரிந்துகொண்டோம். சுமார் இரண்டு வருடங்களுக்குப் பிறகு பைபிள் படிப்புகளை நடத்துவது சுலமாயிற்று.
ஊழியத்தில் இன்றும் அதே ஆர்வத்துடன்
எங்களிடம் பைபிள் படித்த சிலர்
இப்போதெல்லாம் நீண்ட நேரத்துக்கு ஊழியம் செய்ய முடிவதில்லை. ஆனாலும், கிட்டத்தட்ட எல்லா நாளும் ஊழியத்துக்குப் போகிறோம். அண்ணன் மகன் கொடுத்த ஆலோசனைபடி, ஐலி டிரைவிங் கற்றுக்கொண்டு 56-ஆம் வயதில் லைசன்ஸ் வாங்கிவிட்டார். அதனால், எங்களுடைய பெரிய பிராந்தியத்தில் ஊழியம் செய்வது வசதியாகிவிட்டது. புதிய ராஜ்ய மன்றம் கட்டப்பட்டபோது அதோடு சேர்ந்திருந்த வீட்டுக்கு நாங்கள் குடிமாறிப் போனோம். இது ஊழியத்திற்கு இன்னும் கைகொடுத்தது.
சபையின் வளர்ச்சியைப் பார்க்கும்போது மனதுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. வடக்கு பின்லாந்தில் நாங்கள் முழுநேர ஊழியத்தைத் துவங்கியபோது அவ்வளவு பெரிய இடத்தில் ஆங்காங்கே சில பிரஸ்தாபிகள்தான் இருந்தார்கள். இப்போது பல சபைகள் அடங்கிய ஒரு வட்டாரமே இருக்கிறது. மாநாடுகளுக்குப் போகும்போது யாராவது எங்களிடம் வந்து ‘எங்கள ஞாபகம் இருக்கா?’ என்று கேட்பது வழக்கம். சிலர், அவர்களுடைய வீட்டில் நாங்கள் பைபிள் படிப்பு நடத்தியபோது சிறுவர்களாக இருந்திருப்பார்கள். பல பத்தாண்டுகளுக்கு முன் விதைத்த விதைகள் முளைத்து பலன் தந்திருக்கின்றன.—1 கொ. 3:6.
மழையிலும் சந்தோஷமாக ஊழியம் செய்கிறோம்
நாங்கள் விசேஷ பயனியர் சேவையை ஆரம்பித்து 2008-ஆம் வருடத்தோடு 50 வருடங்கள் முடிந்துவிட்டன. இந்த அருமையான சேவையில் நிலைத்திருக்க நாங்கள் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக்கொண்டோம். இதற்காக யெகோவாவுக்கு எப்போதும் நன்றி சொல்கிறோம். நாங்கள் எளிமையாக, அதே சமயத்தில் எந்தக் குறையும் இல்லாமல் வாழ்ந்தோம். (சங். 23:1) ஆரம்பத்தில் தேவையில்லாமல் தயங்கினோம். ஏசாயா 41:10-ல் சொல்லப்பட்டுள்ள வாக்குறுதியின்படி இன்றுவரையாக யெகோவா எங்களை பலப்படுத்தியிருக்கிறார்: “நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.”