வாழ்க்கை சரிதை
ஆசீர்வாதங்களை அள்ளித்தந்த முழுநேர ஊழியம்
முழுநேர ஊழியத்தில் நான் கடந்துவந்த 65 ஆண்டுகளைத் திரும்பிப் பார்க்கும்போது, உள்ளமெல்லாம் சந்தோஷத்தில் பூரிக்கிறது. அதற்காக, வாழ்க்கையில் கவலையோ சோர்வோ எட்டிப்பார்க்கவில்லை என்று சொல்லமுடியாது. (சங். 34:12; 94:19) ஆனாலும், மொத்தத்தில் வாழ்க்கை ஆனந்தமாக, அர்த்தமுள்ளதாக இருந்தது!
நான் செப்டம்பர் 7, 1950-ல் புருக்லின் பெத்தேலில் காலடி எடுத்து வைத்தேன். அந்தச் சமயத்தில், பல நாடுகளைச் சேர்ந்த 19 முதல் 80 வயதுடைய 355 சகோதர சகோதரிகள் அங்கே சேவை செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுள் அநேகர் பரலோக நம்பிக்கையுள்ளவர்கள்.
சத்தியத்திற்கு வந்த கதை
பத்து வயதில் ஞானஸ்நானம் எடுத்தபோது
‘சந்தோஷமுள்ள கடவுளை’ பற்றி என் அம்மாதான் எனக்குச் சொல்லிக்கொடுத்தார். (1 தீ. 1:11) நான் சிறுவனாக இருந்தபோதே அவர் யெகோவாவைச் சேவிக்க ஆரம்பித்திருந்தார். அமெரிக்காவைச் சேர்ந்த நெப்ராஸ்காவிலுள்ள கொலம்பஸில் நடந்த மண்டல மாநாட்டில் (இப்போது வட்டார மாநாடு என்றழைக்கப்படுகிறது) ஜூலை 1, 1939-ல் ஞானஸ்நானம் பெற்றேன். அப்போது எனக்கு 10 வயது. அந்த மாநாட்டின்போது, “பொதுவுடைமை எதிர்ப்புக் கொள்கையா, விடுதலையா?” என்ற தலைப்பில் சகோதரர் ஜோசஃப் ரதர்ஃபர்ட் கொடுத்த பேச்சின் ஆடியோ பதிவைக் கேட்க, வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு மன்றத்தில் சுமார் 100 பேர் கூடியிருந்தோம். பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்கும்போதே, திடீரென ஒரு ரவுடி கும்பல் உள்ளே புகுந்து பேச்சைக் கேட்க விடாமல் எங்களை அந்த நகரத்திலிருந்தே விரட்டியது. அதனால், நாங்கள் பக்கத்திலிருந்த ஒரு சகோதரரின் பண்ணைக்குப் போய் அந்தப் பேச்சைத் தொடர்ந்து கேட்டோம். நான் ஞானஸ்நானம் எடுத்த அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது!
என்னைச் சத்தியத்தில் வளர்க்க அம்மா அரும்பாடு பட்டார். என் அப்பா தங்கமானவர். ஆனால், அவருக்கு மதத்திலோ என்னுடைய ஆன்மீக நலனிலோ அவ்வளவு அக்கறை இருக்கவில்லை. அம்மாவும், ஒமஹா சபையிலிருந்த சகோதர சகோதரிகளும்தான் ஆன்மீக ரீதியில் வளர எனக்கு உறுதுணையாக இருந்தார்கள்.
வாழ்க்கையில் ஒரு திருப்பம்
உயர்நிலைப் பள்ளி படிப்பை முடிக்கும் சமயத்தில், என்னுடைய வாழ்க்கையின் இலக்கு என்ன என்பதைத் தீர்மானிக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறையின்போது, என் வயதிலுள்ள பிள்ளைகளோடு சேர்ந்து விடுமுறை பயனியர் சேவை (இப்போது துணை பயனியர் என்று அழைக்கப்படுகிறது) செய்தேன்.
ஜான் சிமிக்லிசும் தியோடர் ஜாரசும், கிலியட் பள்ளியின் ஏழாம் வகுப்பில் பட்டம் பெற்ற கையோடு எங்கள் பகுதியில் பயண ஊழியர்களாக நியமிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு சுமார் 22 வயதுதான் என்று கேள்விப்பட்டபோது ஆச்சரியமாக இருந்தது. அப்போது எனக்கு 18 வயது; உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடிக்கும் நிலையில் இருந்தேன். “உன்னோட இலக்கு என்ன” என்று சகோதரர் சிமிக்லிஸ் அன்று கேட்டது இப்போதும் எனக்கு ஞாபகமிருக்கிறது. நான் அதைப் பற்றிச் சொன்னதும், “சரியான தீர்மானம்தான், சீக்கிரம் முழுநேர ஊழியத்தை ஆரம்பிச்சிடு. அதனால கிடைக்கும் ஆசீர்வாதங்களை பத்தி பின்னால நீ தெரிஞ்சுக்குவ” என்று சொன்னார். அவருடைய ஆலோசனையும் அவர்கள் இருவரின் முன்மாதிரியும் எனக்குள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால், 1948-ல் பள்ளிப்படிப்பை முடித்தவுடன் பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தேன்.
பெத்தேலுக்கு வந்தது எப்படி?
பெற்றோரோடு சேர்ந்து 1950, ஜூலை மாதம் நியு யார்க் சிட்டி, யாங்கி ஸ்டேடியத்தில் நடந்த சர்வதேச மாநாட்டிற்குப் போனேன். அங்கே, பெத்தேல் சேவை செய்ய விரும்புகிறவர்களுக்கான கூட்டத்தில் கலந்துகொண்டேன். பெத்தேலில் சேவை செய்ய விரும்புவதாக எழுதி கொடுத்தேன்.
வீட்டில் இருந்துகொண்டே பயனியர் ஊழியம் செய்வதற்கு அப்பா எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அதே சமயம், என்னுடைய தேவைகளை கவனித்துக்கொள்வதற்காவது நான் சம்பாதிக்க வேண்டுமென நினைத்தார். அதனால், ஆகஸ்ட் மாதத்தின் ஆரம்பத்தில் ஒரு நாள், வேலை தேடுவதற்கு கிளம்பினேன். அதற்கு முன், வீட்டின் தபால் பெட்டியைப் பார்த்தேன். புருக்லினிலிருந்து வந்த ஒரு கடிதம் அதிலிருந்தது. சகோதரர் நேதன் எச். நாரின் கையெழுத்திடப்பட்டிருந்த அந்தக் கடிதத்தில், “பெத்தேலில் சேவை செய்ய விருப்பம் தெரிவித்து நீங்கள் அனுப்பிய கடிதம் எங்களுக்குக் கிடைத்தது. வாழ்க்கை முழுவதும் பெத்தேலில் தங்கி சேவை செய்ய உங்களுக்கு விருப்பம் இருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆகவே, செப்டம்பர் 7, 1950 அன்று 124, கொலம்பியா ஹைட்ஸ், புருக்லின், நியு யார்க்கிலிருக்கும் பெத்தேலுக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று எழுதியிருந்தது.
அன்று அப்பா வேலையிலிருந்து வீடு திரும்பியபோது, எனக்கு வேலை கிடைத்துவிட்டதாக சொன்னேன். அதற்கு அவர், “அப்படியா எங்கே கிடைச்சிருக்கு?” என்று கேட்டார். அதற்கு நான், “புருக்லின் பெத்தேலில் கிடைச்சிருக்கு, மாசம் பத்து டாலர் கிடைக்கும்” என்று பதிலளித்தேன். அவருக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனாலும், அதுதான் என்னுடைய தீர்மானமாக இருந்தால், அங்கே சிறப்பாக வேலை செய்ய வேண்டுமென சொன்னார். அதற்குப் பிறகு 1953-ல், யாங்கி ஸ்டேடியத்தில் நடந்த மாநாட்டில் அப்பா ஞானஸ்நானம் பெற்றார்.
பயனியர் பார்ட்னர், ஆல்ஃப்ரட் நஸ்ரல்லாவுடன்
என்னுடைய பயனியர் பார்ட்னர், ஆல்ஃப்ரட் நஸ்ரல்லாவுக்கும் பெத்தேலுக்கு வர அழைப்பு கிடைத்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நாங்கள் இருவரும் சேர்ந்தே பெத்தேலுக்குச் சென்றோம். சில காலத்திற்குப் பிறகு அவர் திருமணம் செய்துகொண்டு, மனைவி ஜோயன்னோடு சேர்ந்து கிலியட் பள்ளியில் கலந்து கொண்டார். அவர்கள் இருவரும் லெபனானில் மிஷனரிகளாக நியமிக்கப்பட்டார்கள். பிற்பாடு, பயண ஊழியத்திற்காக அமெரிக்காவுக்கே திரும்பினார்கள்.
பெத்தேல் நியமிப்புகள்
பெத்தேலில் எனக்குக் கிடைத்த முதல் நியமிப்பு, புத்தகங்களைத் தைத்து “பைண்ட்” செய்யும் வேலை. அப்படி நான் செய்த முதல் புத்தகம், மதம் மனிதகுலத்துக்குச் செய்திருப்பது என்ன? என்ற ஆங்கிலப் புத்தகம்தான். சுமார் எட்டு மாதங்களுக்கு “பைண்டிங்” வேலையைச் செய்தேன். பின்பு ஊழிய இலாகாவிற்கு நியமிக்கப்பட்டேன். அங்கே, சகோதரர் தாமஸ் ஜெ. சல்லிவனோடு வேலை செய்தது எனக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தந்தது. யெகோவாவின் அமைப்பில் பல வருடங்கள் வேலை செய்ததால் அவருக்கு ஆன்மீக விஷயங்களில் நல்ல ஞானமும் விவேகமும் இருந்தன. அதிலிருந்து நான் பயனடைந்தேன்.
மூன்று வருடங்கள் ஊழிய இலாகாவில் வேலை செய்த பிறகு ஒரு நாள், சகோதரர் நார் என்னைப் பார்க்க விரும்புவதாக அச்சகக் கண்காணியான மாக்ஸ் லார்ஸன் என்னிடம் சொன்னார். ஏதாவது தவறு செய்துவிட்டேனோ என நினைத்தேன். பெத்தேல் சேவையை விட்டுவிடும் திட்டம் ஏதாவது எனக்கு இருக்கிறதா என தெரிந்துகொள்ளவே அழைத்ததாக அவர் சொன்னபோதுதான் எனக்கு உயிரே வந்தது. அவருடைய அலுவலகத்தில் தற்போதைக்கு ஒரு சகோதரர் தேவைப்படுகிறார் என்றும் என்னால் அந்த இடத்திற்கு வரமுடியுமா என்றும் கேட்டார். பெத்தேலைவிட்டு போகும் எண்ணம் எதுவும் இல்லை என்பதாக அவரிடம் சொன்னேன். அடுத்த 20 வருடங்களுக்கு அவருடைய அலுவலகத்தில்தான் சேவை செய்தேன்.
சகோதரர்கள் சல்லிவன், நார் மற்றும் பெத்தேலில் சேவை செய்த சகோதரர்களான மில்டன் ஹென்ஷல், க்ளாவ்ஸ் ஜென்ஸன், மாக்ஸ் லார்ஸன், ஹ்யூகோ ரிமர், க்ரான்ட் சூட்டர் ஆகியோரிடமிருந்து நான் கற்றுக்கொண்ட விஷயங்களுக்கு கைமாறாக நான் என்ன செய்தாலும் அது ஈடாகாது என நான் அடிக்கடி சொல்வதுண்டு.a
இந்தச் சகோதரர்கள் எல்லோருக்கும் வேலையை ஒழுங்குடன் செய்யும் திறமை இருந்தது. சகோதரர் நார், கடின உழைப்பாளியாக இருந்தார். கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகள் தொடர்ந்து முன்னேறிச் செல்ல வேண்டும் என்ற தணியாத ஆர்வம் அவருக்கு இருந்தது. அவருடைய அலுவலகத்தில் வேலை செய்த மற்றவர்களால் அவரிடம் தாராளமாகப் பேச முடிந்தது. ஏதாவது ஒரு விஷயத்தில் வேறுவிதமான கருத்துகள் இருந்தாலும்கூட அதை வெளிப்படையாக எங்களால் தெரிவிக்க முடிந்தது. அதே சமயத்தில் அவருக்கும் எங்கள்மீது நம்பிக்கை இருந்தது.
சின்னச் சின்ன விஷயங்களைக்கூட பொறுப்பாக செய்வது முக்கியம் என்பதைப் பற்றி சகோதரர் நார் ஒருமுறை என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். அவர் அச்சகக் கண்காணியாக இருந்த சமயத்தில் சகோதரர் ரதர்ஃபர்ட் அவரிடம் “சகோதரர் நார், எனக்கு அழிக்கிற ரப்பர் கொஞ்சம் வேணும். நீங்க சாப்பிட வரும்போது எடுத்துட்டு வாங்க” என்று சொல்லியிருக்கிறார். சகோதரர் நார் முதல் வேலையாக, ஸ்டேஷனரி அறைக்குப் போய் ரப்பர்கள் சிலவற்றை எடுத்து பாக்கெட்டில் போட்டுக்கொண்டாராம். பின்பு, மதிய வேளையில் சகோதரர் ரதர்ஃபர்டின் அலுவலகத்தில் கொண்டுபோய் கொடுத்திருக்கிறார். அது சிறிய விஷயம்தான்; ஆனால், சகோதரர் ரதர்ஃபர்டுக்கு அது ரொம்ப பிரயோஜனமாக இருந்திருக்கிறது. இதைச் சொன்ன பிறகு சகோதரர் நார் என்னிடம், “நல்லா சீவின பென்சில்களை தினமும் என்னோட டேபிள்ல வைக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணுங்க” என்று சொன்னார். பல வருடங்களாக நான் அதைச் செய்து வந்தேன்.
யாராவது ஒரு வேலையைச் செய்யும்படி சொல்லும்போது அவர்கள் சொல்வதைக் நாம் கவனமாகக் கேட்கவேண்டும் என சகோதரர் நார் அடிக்கடி சொல்வார். ஒரு சமயம், ஒரு வேலையைக் கொடுத்து அதை எப்படிச் செய்ய வேண்டுமென விளக்கமாகச் சொல்லிக்கொடுத்தார். ஆனால், அதைக் கவனமாகக் கேட்காமல் விட்டுவிட்டேன். அதன் விளைவாக, அவருக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது. இது என் மனதுக்கு ரொம்ப வேதனையாக இருந்தது. என்னுடைய கவனக்குறைவுக்காக மிகவும் வருந்துவதாகவும், வேறு எங்கேயாவது என்னை மாற்றிவிடும்படியும் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு சகோதரர் நார் என்னிடம் வந்து, “ராபர்ட், நீங்க எழுதுன கடிதத்தை படிச்சேன். நீங்க தப்பு செஞ்சீங்க, அதைப் பத்தி நான் உங்ககிட்ட பேசிட்டேன். இனிமேல நீங்க ரொம்ப ஜாக்கிரதையா இருப்பீங்கனு நம்புறேன். வாங்க, இப்ப நம்ம வேலையை கவனிப்போம்” என்று சொன்னார். அவர் காட்டிய தயவை என்னால் மறக்கவே முடியாது.
திருமண ஆசை
பெத்தேலில் எட்டு வருடங்கள் உருண்டோடிவிட்டன. பெத்தேல் சேவையைத் தொடர்ந்து செய்வதைத் தவிர வேறு எந்த ஆசையும் எனக்கு இருக்கவில்லை. ஆனால், நிலைமை மாறியது. 1958-ல், போலோ கிரவுண்டிலும் யாங்கி ஸ்டேடியத்திலும் சர்வதேச மாநாடு நடந்த சமயத்தில் லரேன் புருக்ஸ் என்ற சகோதரியைப் பார்த்தேன். அவளை 1955-லேயே சந்தித்திருக்கிறேன். அந்தச் சமயத்தில் அவள் கனடாவிலுள்ள மான்ட்ரீல் என்ற இடத்தில் பயனியர் சேவை செய்துகொண்டிருந்தாள். முழுநேர ஊழியத்தில் அவளுக்கு அதிக ஆர்வமிருந்தது; அதோடு யெகோவாவின் அமைப்பு அனுப்பும் எந்த இடத்திற்கும் போக அவள் தயாராக இருந்தாள். அவளுடைய மனப்பான்மை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கிலியட் பள்ளிக்குப் போவது அவளுடைய இலக்காக இருந்தது. 1956-ஆம் ஆண்டு நடந்த 27-வது கிலியட் பள்ளியில் கலந்து கொண்டாள். அப்போது, அவளுக்கு 22 வயது. பிறகு, மிஷனரியாக பிரேசில் நாட்டுக்கு நியமிக்கப்பட்டாள். 1958-ல் நாங்கள் மீண்டும் பழக ஆரம்பித்தோம். அவளைத் திருமணம் செய்ய விரும்புவதாகச் சொன்னேன். அவள் அதற்கு ஒத்துக்கொண்டாள். அடுத்த வருடமே திருமணம் செய்துகொண்டு இருவருமாக மிஷனரி சேவை செய்யலாம் என்று நினைத்தோம்.
இதைப் பற்றி சகோதரர் நாரிடம் சொன்னபோது, மூன்று வருடங்கள் கழித்துத் திருமணம் செய்தால், புருக்லின் பெத்தேலிலேயே சேவையைத் தொடரலாம் என ஆலோசனை கொடுத்தார். அந்தச் சமயங்களில், பெத்தேலில் இருப்பவர்கள் திருமணம் செய்துகொண்டு அங்கேயே சேவையைத் தொடர வேண்டுமானால், இருவரில் ஒருவர் குறைந்தது பத்து வருடங்கள் பெத்தேல் சேவை செய்திருக்க வேண்டும். இன்னொருவர் குறைந்தபட்சம் மூன்று வருடங்களாவது பெத்தேலில் இருந்திருக்க வேண்டும். அதனால், பிரேசில் பெத்தேலில் இரண்டு வருடங்களும் புருக்லின் பெத்தேலில் ஒரு வருடமும் சேவை செய்ய லரேன் ஒத்துக்கொண்டாள்.
திருமண நிச்சயமான முதல் இரண்டு வருடங்களில் எங்களுக்குள் கடிதத் தொடர்பு மட்டுமே இருந்தது. அப்போதெல்லாம் ஃபோனில் பேசுவதற்கு ரொம்ப செலவாகும், ஈ-மெயில் வசதியும் இல்லை. எங்கள் திருமணம் செப்டம்பர் 16, 1961-ல் நடந்தது. சகோதரர் நார் எங்களுடைய திருமணப் பேச்சைக் கொடுத்தார். திருமணத்திற்குக் காத்திருந்த அந்த வருடங்கள் ஒரு யுகம் போல இருந்தது. ஆனால், திருப்தியையும் சந்தோஷத்தையும் அள்ளித்தந்த 50 ஆண்டுகால திருமண வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் அப்படிக் காத்திருந்ததில் தவறில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
எங்கள் திருமண நாளன்று. இடமிருந்து வலம்: நேதன் எச். நார், பெட்ரிஷா புருக்ஸ் (லரேனின் சகோதரி), லரேனும் நானும், கர்ட்டஸ் ஜான்ஸன், ஃபே மற்றும் ராய் வாலன் (என்னுடைய பெற்றோர்)
ஊழியப் பொறுப்புகள்
மண்டலக் கண்காணியாக பல்வேறு நாடுகளிலுள்ள கிளை அலுவலகங்களுக்குச் செல்லும் நியமிப்பை 1964-ல் பெற்றேன். அப்போதெல்லாம், இதுபோன்ற நியமிப்புகளில் கணவர்களோடு சேர்ந்து பயணம் செய்ய மனைவிகளுக்கு அனுமதியில்லை. ஆனால் 1977-ல் அந்த நிலை மாறியது. அந்த வருடத்தில் க்ரான்ட் மற்றும் எடித் சூட்டரோடு சேர்ந்து ஜெர்மனி, ஆஸ்திரியா, கிரீஸ், சைப்ரஸ், துருக்கி, இஸ்ரேல் நாடுகளிலுள்ள கிளை அலுவலகங்களுக்குச் சென்றோம். மொத்தமாக, உலகம் முழுவதும் ஏறக்குறைய 70 நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன்.
ஒருமுறை அப்படி பிரேசிலுக்குச் சென்றிருந்தபோது, நிலநடுக்கோட்டுப் பகுதியில் அமைந்திருக்கிற பெலம் என்ற நகரத்துக்குப் போனோம். அங்கேதான் லரேன் மிஷனரியாகச் சேவை செய்திருந்தாள். சகோதரர்களைப் பார்ப்பதற்காக மனாஸ் என்ற இடத்துக்கும் போனோம். அங்கே ஒரு ஸ்டேடியத்தில் கொடுக்கப்பட்ட பேச்சின்போது, சில சகோதர சகோதரிகள் மட்டும் தனியாக உட்கார்ந்திருந்ததைப் பார்த்தோம். பிரேசிலிலுள்ள சகோதர சகோதரிகளின் பழக்கத்தின்படி, அந்தச் சகோதரிகள் மற்ற சகோதரிகளின் கன்னத்தில் முத்தமிடவோ, அந்தச் சகோதரர்கள் மற்ற சகோதரர்களோடு கைகுலுக்கவோ இல்லை.
அமேசான் மழை காடுகளின் உட்பகுதியில் இருந்த தொழுநோயாளிகளின் காலனியில் இருந்து வந்த நம்முடைய அன்பான சகோதர சகோதரிகள்தான் அவர்கள். பாதுகாப்புக் கருதி, அங்கிருந்த மற்ற சகோதர சகோதரிகளை அவர்கள் தொடவில்லை. ஆனால், எங்கள் இருதயத்தை அவர்கள் தொட்டுவிட்டார்கள். அவர்கள் முகத்தில் படர்ந்திருந்த சந்தோஷத்தை எங்களால் மறக்கவே முடியாது. “இதோ, என் ஊழியக்காரர் மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள்” என்ற ஏசாயாவின் வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை!—ஏசா. 65:14.
மனநிறைவளிக்கும் அர்த்தமுள்ள வாழ்க்கை
லரேனும் நானும் யெகோவாவின் சேவையில் அர்ப்பணித்த 60-க்கும் அதிகமான வருடங்களை அடிக்கடி நினைத்துப் பார்ப்போம். யெகோவா தம்முடைய அமைப்பின் மூலம் கொடுத்த ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டதால் அனுபவித்த ஆசீர்வாதங்களை நினைத்து மிகவும் சந்தோஷப்படுகிறோம். முன்புபோல பல நாடுகளுக்கு என்னால் போகமுடிவதில்லை. என்றாலும் ஒருங்கிணைப்பாளர்களின் குழுவிலும் ஊழியக் குழுவிலும் வேலை செய்வதன் மூலம் ஆளும் குழுவுக்கு உதவியாளராக இருக்கிறேன். இவ்விதத்தில், உலகம் முழுவதுமுள்ள சகோதரர்களுக்கு சேவை செய்வதில் எனக்குக் கிடைத்த இந்தச் சிறிய பங்கை பெரிய பாக்கியமாக நினைக்கிறேன். “இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்” என்று சொன்ன ஏசாயாவைப் போல, இன்று எண்ணற்ற இளம் சகோதர சகோதரிகள் முழுநேர சேவையில் கால்பதித்திருக்கிறார்கள்; இதைப் பார்ப்பது எங்களை மலைக்கவைக்கிறது! (ஏசா. 6:8) “சீக்கிரம் முழுநேர ஊழியத்தை ஆரம்பிச்சிடு. அதனால கிடைக்கும் ஆசீர்வாதங்களை பத்தி பின்னால நீ தெரிஞ்சுக்குவ” என்று பல வருடங்களுக்கு முன் என்னிடம் வட்டாரக் கண்காணி சொன்ன வார்த்தைகள் இவர்களுடைய விஷயத்தில் எவ்வளவு உண்மையானவை!
a இந்தச் சகோதரர்களில் சிலருடைய வாழ்க்கை சரிதைகள், கீழ்க்கண்ட ஆங்கில காவற்கோபுர இதழ்களில் இடம் பெற்றுள்ளன: தாமஸ் ஜெ. சல்லிவன் (ஆகஸ்ட் 15, 1965); க்ளாவ்ஸ் ஜென்ஸன் (அக்டோபர் 15, 1969); மாக்ஸ் லார்ஸன் (செப்டம்பர் 1, 1989); ஹ்யூகோ ரிமர் (செப்டம்பர் 15, 1964); க்ரான்ட் சூட்டர் (செப்டம்பர் 1, 1983).