உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w14 6/15 பக். 8-11
  • விவாகரத்தானவர்களுக்கு உதவுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • விவாகரத்தானவர்களுக்கு உதவுங்கள்
  • கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மனப் போராட்டங்கள்
  • இயல்பு நிலைக்குத் திரும்ப காலமெடுக்கும்
  • தனிமையும் வெறுமையும் வாட்டும்போது...
  • விவாகரத்து பிள்ளைகளை எப்படி பாதிக்கிறது?
    குடும்ப ஸ்பெஷல்
  • விவாகரத்து—நீங்கள் அறிந்திருக்க வேண்டிய நான்கு விஷயங்கள்
    விழித்தெழு!—2010
  • அப்பாவும் அம்மாவும் ஏன் பிரிந்தார்கள்?
    இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள்
  • விவாகரத்துதான் ஒரே விடையா?
    விழித்தெழு!—1999
மேலும் பார்க்க
கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
w14 6/15 பக். 8-11

விவாகரத்தானவர்களுக்கு உதவுங்கள்

ஒரு பெண்மணி, விவாகரத்தான சகோதரியை ஆறுதல்படுத்துகிறார்

விவாகரத்தான யாரையாவது உங்களுக்குத் தெரியுமா? நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால், இன்று விவாகரத்து சர்வ சாதாரணமாகிவிட்டது. ஓர் ஆய்வின்படி, போலந்தில் 30 வயதைக் கடந்த தம்பதிகள், மூன்று அல்லது ஆறு வருடங்களுக்குள் விவாகரத்துக்குத் தயாராகிவிடுகிறார்கள்.

“[ஐரோப்பாவில்] இரண்டில் ஒரு திருமணம் விவாகரத்தில் முடிகிறது” என்று ஸ்பெயினின் குடும்பநல நிறுவனம் சொல்கிறது. மற்ற நாடுகளிலும் இதே கதைதான்.

மனப் போராட்டங்கள்

விவாகரத்தானவர்கள் எப்படி உணர்கிறார்கள்? கிழக்கு ஐரோப்பாவில் அனுபவமுள்ள ஒரு திருமண ஆலோசகர் சொல்கிறார்: “மனதளவில் பிரிந்த தம்பதிகள் கோர்ட்டில் சட்டப்படி விவாகரத்து பெறுகிறார்கள். இதனால், தாங்க முடியாத வலியும் வேதனையும் ஏற்படுகிறது. விவாகரத்தான பிறகு கோபம், கவலை, மனக்கசப்பு, அவமானம், ஏமாற்றம் என்று மனதில் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் ஏற்படும். . . . கோர்ட்டில் அறிவித்தவுடன் மனப் போராட்டங்கள் தீவிரமடையும். தனிமை வாட்டும், வெறுமை வதைக்கும். ‘என்னை யாரு மதிப்பா? இனிமே நான் வாழ்ந்து என்ன பிரயோஜனம்?’ என்று யோசிக்கலாம்.” சிலர் தற்கொலை செய்துகொள்ளக்கூட நினைக்கலாம்.

சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்தான ஈவா என்ற சகோதரி சொல்கிறார்: “எனக்கு ரொம்ப அவமானமா இருந்துச்சு. அக்கம்பக்கத்துல இருக்கிறவங்க, கூட வேலை பாக்குறவங்க என்னை வித்தியாசமா பாத்தாங்க. அந்த சமயத்துல கோபம் தலைக்கேறும். என் இரண்டு பிள்ளைகளுக்கும் இனி நான்தான் அம்மா-அப்பா.”a 12 வருடங்கள் மூப்பராகச் சேவை செய்த அஷோக் சொல்கிறார்: “என் சுயமரியாதை இழந்துட்டேன், எப்பவும் கோபமா இருந்தேன். எல்லாரையும்விட்டு பிரிஞ்சே இருந்தேன்.”

இயல்பு நிலைக்குத் திரும்ப காலமெடுக்கும்

பொதுவாக, அவர்கள் எதிர்காலத்தை நினைத்துப் பயப்படுவார்கள். பல வருடங்களுக்குப் பிறகுகூட இயல்பு நிலைக்குத் திரும்ப மாட்டார்கள். தங்கள்மேல் மற்றவர்களுக்கு அக்கறை இல்லை என்று நினைப்பார்கள். ஒரு பத்திரிகை எழுத்தாளர் சொல்கிறார்: “அவங்க பழக்கவழக்கங்களை மாத்திக்கணும், பிரச்சினைகள தனியா சமாளிக்க கத்துக்கணும்.”

ஸ்டெயின்ஸ்லா என்ற சகோதரர் சொல்கிறார்: “விவாகரத்தான பிறகு, என் ரெண்டு பிள்ளைங்களையும் அவள் பாக்கவே விடல. வாழ்க்கையில எனக்குனு யாருமே இல்லைனு தோனுச்சு, யெகோவாகூட என்னை மறந்துட்டாருனு நினைச்சேன். வாழ்க்கையே வெறுத்துப் போச்சு. போகப்போகத்தான் சரியானேன்.” வாண்டா என்ற சகோதரிக்கு விவாகரத்தானதும் எதிர்காலத்தைப் பற்றிய பயம் வந்தது. “கொஞ்ச நாளைக்குப்பிறகு, என்னையும் பிள்ளைங்களயும் யாருமே கண்டுக்க மாட்டாங்க, சகோதர சகோதரிங்ககூட எங்கள கைவிட்டுடுவாங்கனு நினைச்சேன். ஆனா, சகோதரங்க எங்களுக்கு பக்கபலமா இருந்தாங்க. பிள்ளைங்கள சத்தியத்துல வளக்குறதுக்கு உதவுனாங்க” என்கிறார் வாண்டா.

விவாகரத்தானவர்களின் மனப் போராட்டங்களை இப்போது உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? ‘நான் எதற்குமே லாயக்கில்லை, யாருமே என்னை கண்டுகொள்வதில்லை’ என்றெல்லாம் நினைத்து அவர்கள் தங்களையே வெறுப்பார்கள். சுற்றியிருப்பவர்கள் செய்வதெல்லாம் தவறாகவே தெரியும். சபையில் யாருக்கும் அவர்கள்மேல் அன்பில்லை என்றுகூட நினைப்பார்கள். இருந்தாலும், ஸ்டெயின்ஸ்லா, வாண்டாவைப் போன்ற நிறைய பேர் சகோதரர்களின் அன்பைப் பின்னால் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

தனிமையும் வெறுமையும் வாட்டும்போது...

நாம் எவ்வளவுதான் பக்கபலமாக இருந்தாலும் விவாகரத்தானவர்கள் சில நேரங்களில் தனிமையாக உணர்வார்கள். விவாகரத்தான சகோதரிகள் தங்கள்மேல் யாருக்குமே அக்கறை இல்லாததுபோல் உணர்வார்கள். “விவாகரத்தாகி எட்டு வருஷம் ஆச்சு. இப்பகூட சில நேரத்துல எனக்கு தாழ்வு மனப்பான்மை வருது. அந்த மாதிரி நேரத்துல தனியா போய் அழுவேன், என்னை நானே நொந்துக்குவேன்” என்கிறார் ஆலிட்ஸியா.

விவாகரத்தானவர்கள் தனியாக இருக்க நினைப்பது இயல்புதான். ஆனால், “தனியாக இருக்க விரும்புகிறவன் தன் இஷ்டப்படி நடக்கிறான், யாருடைய அறிவுரையையும் கேட்காமல் மனம்போன போக்கில் நடக்கிறான்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 18:1, NW) ஒருவர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்வது நல்லதல்ல. ஆலோசனைக்கோ ஆறுதலுக்கோ எப்போதும் ஓர் எதிர்பாலரை அணுகுவதும் ஞானமானதல்ல.

எதிர்காலத்தைப் பற்றிய பயம், தனிமை உணர்வு, ‘யாருக்கும் என்மேல் அக்கறை இல்லை’ என்ற எண்ணம் போன்றவற்றால் விவாகரத்தான நபர் அலைக்கழிக்கப்படலாம். இதையெல்லாம் சமாளிப்பது அவ்வளவு சுலபமில்லை. எனவே, யெகோவாவைப்போல நாமும் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும். (சங். 55:22; 1 பே. 5:6, 7) நாம் செய்யும் சின்ன உதவிகூட அவர்களுக்கு ஆறுதல் தரும். சபையில் நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்வார்கள்.—நீதி. 17:17; 18:24.

a சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

பைபிளின் கருத்து

“நான் விவாகரத்தை வெறுக்கிறேன்” என்று யெகோவா சொல்கிறார். (மல். 2:16, ஈஸி டு ரீட் வர்ஷன்) யெகோவாவின் சாட்சிகளான நாம் கடவுளுடைய வார்த்தையின்படி நடப்பதால் திருமணத்தை உயர்வாக மதிக்கிறோம். மணத்துணை துரோகம் செய்தால் மட்டுமே விவாகரத்து செய்ய பைபிள் அனுமதிக்கிறது. அதனால், இன்னொருவரைத் திருமணம் செய்யும் எண்ணத்தோடு விவாகரத்து செய்ய நினைப்பது மிகப்பெரிய தவறு.—ஆதி. 2:22-24; உபா. 5:21; மத். 19:4-6, 9.

மணத்துணை துரோகம் செய்ததால், விவாகரத்துப் பெற்றவர்களுக்குச் சகோதர சகோதரிகளின் ஆதரவு கண்டிப்பாக இருக்கும். யெகோவாவைப்போலவே அவர்களும் “நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்கு” ஆறுதலளிக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள்.—சங். 34:15, 18; ஏசா. 41:10.

எப்படி உதவுவது?

விவாகரத்தானவர்களின் மனப் போராட்டங்களைச் சமாளிக்க உங்களாலும் உதவ முடியும். ஆனால் எப்படி உதவுவது? பைபிளின் ஆலோசனையையும், சிலர் எப்படி உதவியிருக்கிறார்கள் என்பதையும் கவனியுங்கள்.

காதுகொடுத்துக் கேளுங்கள். (நீதி. 16:20, 23)

விவாகரத்தான எல்லோரும் தங்களுக்கு நடந்ததைப் பற்றிப் பேச விரும்ப மாட்டார்கள். அப்படியே மனதில் இருப்பதையெல்லாம் கொட்டித் தீர்த்தாலும், அவர்களுடைய கவலை குறைந்துவிடாது. (நீதி. 12:25; ரோ. 12:15) அவர்கள் சொல்வதைக் கரிசனையோடு கேட்டால் போதும், எல்லா விவரங்களையும் பெரிதுபடுத்தக்கூடாது என்பதை அஷோக்கிற்கு உதவி செய்த மைக்கேல் புரிந்துகொண்டார். “ரொம்பக் கவலையாக இருக்கும்போது, மனசுல உள்ளதையெல்லாம் கொட்டிடனும்னு தோனும். ஆனா, ‘இதையெல்லாம் போய் ஏன் சொன்னோம்?’-னு பின்னாடி வருத்தப்படுவோங்கிறத அஷோக்கிற்குப் புரிய வச்சேன்.” இதன்மூலம், அவருக்கு நடந்ததை ஒன்றுவிடாமல் தெரிந்துகொள்வது தன்னுடைய நோக்கமல்ல என்பதை மைக்கேல் தெளிவாக உணர்த்தினார். ஆனால், உண்மையான நண்பனைப்போல் காதுகொடுத்துக் கேட்டார். நாமும், கூட்டங்களுக்கு முன்போ பின்போ விவாகரத்தானவர்களை அக்கறையாக விசாரிப்பதன்மூலம், ஆறுதலாக ஒரு வார்த்தைச் சொல்வதன்மூலம் அவர்களைத் தேற்ற முடியும். ‘எப்படி இருக்கீங்க? உங்களுக்கு நடந்தத நினைச்சா ரொம்ப வேதனையா இருக்கு, கவல படாதீங்க. உங்களுக்கு எந்த உதவி வேணும்னாலும் என்கிட்ட தயங்காம கேளுங்க’ என்று சொல்லலாம்.

அக்கறை காட்டுங்கள். (பிலி. 2:4)

“விவாகரத்தான ஒரு சகோதரிக்கு உதவ நானும் என் மனைவியும் எப்பவும் நேரம் ஒதுக்குவோம். அவங்க கதவுல பூட்டை சரி பண்ணி கொடுத்தோம். உடம்பு சரியில்லாதப்போ டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனோம்” என்று மீரோஸ்வாஃப் சொல்கிறார். இதெல்லாம் சின்ன சின்ன விஷயம்தான். ஆனால், இவைதான் அந்தச் சகோதரியைத் தேற்றின. போகப்போக அந்தச் சகோதரி இயல்பு நிலைக்குத் திரும்பினார். பிறகு, பயனியரானார். அவருடைய 11 வயது மகளும் ஞானஸ்நானம் எடுத்தாள்.

ஒரு தம்பதி, விவாகரத்தான ஒரு சகோதரியின் மேல் தனிப்பட்ட அக்கறை காட்டுகிறார்கள்

நம்பிக்கையூட்டுங்கள்.

தம்முடைய ஊழியர்கள் ஒவ்வொருவரையும் யெகோவா பொக்கிஷமாக நினைக்கிறார்; பொன்னென போற்றுகிறார். அவர்கள் “அநேக சிட்டுக்குருவிகளைவிட மதிப்புமிக்கவர்கள்” என்பதையெல்லாம் தாழ்வு மனப்பான்மையில் தவிப்பவர்களுக்குப் புரியவையுங்கள். (மத். 10:29-31) யெகோவா ‘இருதயங்களைச் சோதிக்கிறவர்.’ அதனால் விவாகரத்தானவர்களுடைய சூழ்நிலையையும் புரிந்துகொள்வார். தம் ஊழியர்கள் யாரையுமே கைவிட மாட்டார். (நீதி. 17:3; சங். 145:18; எபி. 13:5) யெகோவாமேல் அவர்கள் வைத்திருக்கும் அன்பையும், அவருக்காகச் செய்த சேவையையும் அவர் மறந்துவிட மாட்டார் என்பதை நினைப்பூட்டுங்கள்.—பிலி. 2:29.

சபையோடு கூட்டுறவு வைத்துக்கொள்ள உற்சாகப்படுத்துங்கள்.

கவலையாக இருக்கும்போது சிலர் கூட்டங்களைத் தவறவிடுகிறார்கள். ஆனால், கூட்டங்கள்தான் நம்மை “பலப்படுத்தும்.” (1 கொ. 14:26; சங். 122:1) விவாகரத்தானவர்களைப் பலப்படுத்துவதில் மூப்பர்கள் முன்வந்து உதவ வேண்டும். “மூப்பர்கள் செய்த உதவிய நாங்க மறக்கவே மாட்டோம்” என்று வாண்டா சொல்கிறார்.

யெகோவாவோடு நெருக்கமான பந்தத்தை வளர்க்கத் தூண்டுங்கள். (யாக். 4:8)

யெகோவா சர்வவல்லமை உள்ளவர், அவர் பரலோகத்தில் குடியிருக்கிறார். இருந்தாலும், பூமியிலுள்ள “எளியவரையும், உள்ளம் வருந்துபவரையும்” அவருக்கு ‘அஞ்சுபவரையும் கண்ணோக்கிப் பார்க்கிறார்.’ ஜெபமும் பைபிள் படிப்பும் யெகோவாவிடம் நெருங்கிவர நமக்கு எந்தளவுக்கு உதவுகிறது என்பதை வலியுறுத்துங்கள்.—ஏசா. 66:2, பொது மொழிபெயர்ப்பு.

சேர்ந்து ஊழியம் செய்யுங்கள், கூட்டங்களுக்குத் தயாரியுங்கள்.

இரண்டு சகோதரர்கள் சேர்ந்து ஊழியம் செய்கிறார்கள்

இப்படிச் செய்தால் அவருடைய தன்னம்பிக்கை அதிகமாகும், சீக்கிரம் இயல்பு நிலைக்குத் திரும்புவார். வைராக்கியமாக ஊழியம் செய்த ஒரு சகோதரி விவாகரத்தான பிறகு மன வேதனையில் தவித்தார். அவருக்கு உதவிய மார்ட்டா என்ற சகோதரி சொல்கிறார்: “நாங்க அடிக்கடி சேந்து ஊழியம் செய்வோம். நிறைய இலக்குகளை வச்சோம், அதை எட்டுனத நினைச்சு சந்தோஷப்பட்டோம். சேந்து கூட்டங்களுக்குத் தயாரிப்போம், அப்புறம், சேந்து சமைப்போம்.”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்