அட்டைப்படக் கட்டுரை | கடவுளிடம் வேண்டினால் பலன் கிடைக்குமா?
ஜெபம் செய்வதால் என்ன நன்மை?
எந்தவொரு விஷயத்தை செய்வதற்கு முன்பும் “நான் ஏன் இதை செய்யணும்? அதனால எனக்கு என்ன பிரயோஜனம்?” என்று யோசிப்பீர்கள். அதேமாதிரி, “ஜெபம் செய்றதுனால எனக்கு என்ன பிரயோஜனம்? யாராவது என் ஜெபத்தை கேட்பாங்களா?” என்று யோசிப்பதில் எந்தத் தவறும் இல்லை. கடவுள் பக்தியுள்ள யோபுவும் இந்தக் கேள்வியை கேட்டார்: ‘நான் கூப்பிட்டால் கடவுள் பதில் சொல்வாரா?’—யோபு 9:16.
கடவுள் நம் ஜெபத்தை கேட்கிறார், ஜெபம் செய்தால் கடவுளுடைய நண்பராக முடியும் என்று போன கட்டுரைகளில் பார்த்தோம். சரியான விஷயங்களுக்காக, சரியான விதத்தில் ஜெபம் செய்தால் நம்மை படைத்த கடவுள் அதை நிச்சயமாகக் கேட்பார். அவரே, நம்மை ஜெபம் செய்ய சொல்கிறார், அவருடைய நண்பராகும்படியும் சொல்கிறார். (யாக்கோபு 4:8) அதனால், நாம் தினமும் ஜெபம் செய்ய வேண்டும். நம்முடைய ஜெபத்துக்கு கடவுள் எப்படியெல்லாம் பதில் கொடுப்பார்?
மன நிம்மதியைத் தருவார்.
பிரச்சினைக்கு மேல் பிரச்சினைகள் வரும்போது நமக்கு என்ன செய்வதென்றே தெரியாது. அந்த மாதிரி நேரத்தில், “இடைவிடாமல் ஜெபம் செய்யுங்கள்,” ‘எல்லாவற்றையும் குறித்து . . . ஜெபம் செய்யுங்கள்’ என்று பைபிள் சொல்கிறது. (1 தெசலோனிக்கேயர் 5:17; பிலிப்பியர் 4:6) ஜெபம் செய்தால், எல்லாவற்றையும் மறந்துவிட்டு நிம்மதியாக இருக்க கடவுள் உங்களுக்கு உதவி செய்வார். (பிலிப்பியர் 4:7) நம் மனதில் இருக்கும் கவலைகளை எல்லாம் கடவுளிடம் கொட்டி தீர்க்கும்போது நிம்மதியாக இருக்கும். “[யெகோவாமேல்] உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்” என்று பைபிள் சொல்கிறது.—சங்கீதம் 55:22.
“[யெகோவாமேல்] உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்.”—சங்கீதம் 55:22
ஜெபம் செய்வதால் நிம்மதி கிடைக்கிறது என்று நிறைய பேர் சொல்கிறார்கள். தென்கொரியாவில் உள்ள ஹீ ரான் என்ற பெண் சொல்கிறார்: “எவ்ளோ பெரிய பிரச்சினை வந்தாலும் ஜெபம் செய்வேன், மனசில இருக்கிற பாரத்தை எல்லாம் இறக்கி வெச்சிடுவேன். அதுக்கப்புறம், எதுவா இருந்தாலும் சமாளிச்சிடலாம்னு தோனும்.” பிலிப்பைன்ஸில் இருக்கும் செசீல்யா சொல்கிறார்: “என் ரெண்டு பொண்ணுங்களையும் எப்படி வளர்க்கப்போறேன்... என் அம்மாவை எப்படி பார்த்துக்க போறேன்னு அடிக்கடி கவலைப்படுவேன். அந்த மாதிரி நேரத்தில ஜெபம் செய்யும்போது என் கவலை எல்லாம் உடனே பறந்து போயிடும். எல்லாத்தையும் யெகோவா பார்த்துக்குவார்னு தைரியமா இருப்பேன்.”
பிரச்சினையை சமாளிக்க உதவி செய்வார்.
தாங்க முடியாத பிரச்சினை உங்களுக்கு வந்திருக்கிறதா? அந்த மாதிரி நேரத்தில் யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள்; அவர் ‘ஆறுதலை தரும் கடவுள்.’ ‘எல்லா உபத்திரவங்களிலும் [அதாவது, கஷ்டங்களிலும்] அவர் உங்களுக்கு ஆறுதல் அளிப்பார்.’ (2 கொரிந்தியர் 1:3, 4) இயேசுவும் ஒரு தடவை முட்டிபோட்டு “ஜெபம் செய்தார்.” “அப்போது, பரலோகத்திலிருந்து ஒரு தேவதூதர் அவருக்குத் தோன்றி அவரைப் பலப்படுத்தினார்.” (லூக்கா 22:41-43) நெகேமியா என்பவருடைய ஜெபத்துக்கும் கடவுள் பதில் கொடுத்தார். கடவுள் கொடுத்த வேலையை செய்யவிடாமல் எதிரிகள் நெகேமியாவை தடுத்தார்கள். அந்த நேரத்தில், “தேவனே என்னைப் பலப்படுத்தும்” என்று நெகேமியா கடவுளிடம் வேண்டினார். யாருக்கும் பயப்படாமல் கடவுளுடைய வேலையை தொடர்ந்து செய்ய யெகோவா அவருக்கு உதவி செய்தார். (நெகேமியா 6:9-16, ஈஸி டு ரீட் வர்ஷன்) கானாவில் இருக்கும் ரெஜனல்டு இப்படி சொல்கிறார்: “எவ்ளோ பெரிய பிரச்சினை வந்தாலும், நான் ஜெபம் செய்வேன். அப்போ ‘எதுக்கும் கவலைப்படாதே, எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்’னு கடவுளே என்கிட்ட சொல்ற மாதிரி இருக்கும்.” பிரச்சினைகள் வரும்போது நீங்களும் யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள்; அவர் உங்களுக்கும் உதவி செய்வார்.
சரியான முடிவெடுக்க உதவி செய்வார்.
நாம் எதை செய்தாலும் யோசித்து, சரியாக செய்ய வேண்டும். இல்லையென்றால், நாமும் கஷ்டப்படுவோம்; மற்றவர்களும் கஷ்டப்படுவார்கள். அதனால்தான், ‘உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுபட்டிருந்தால், கடவுளிடம் அவன் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்; அப்படிக் கேட்கிறவர்களுக்கு அவர் . . . தாராளமாகக் கொடுப்பார்’ என்று பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 1:5) கடவுள் “தம்மிடம் கேட்கிறவர்களுக்கு தம்முடைய சக்தியை . . . கொடுப்பார்” என்று இயேசு சொன்னார். (லூக்கா 11:13) கடவுளிடம் உதவி கேளுங்கள். சரியான முடிவெடுக்கவும், பிரச்சினைகளை சமாளிக்கவும் அவர் உங்களுக்கு உதவி செய்வார்.
“‘ஒரு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யுங்க’னு யெகோவாகிட்ட தினமும் ஜெபம் செஞ்சேன்.”—குவாபெனா, கானா
கடவுளுடைய மகனான இயேசுவே நிறைய தடவை கடவுளிடம் உதவி கேட்டிருக்கிறார். 12 சீடர்களையும் தேர்ந்தெடுப்பதற்கு முன் “இரவு முழுவதும் கடவுளிடம் ஜெபம் செய்துகொண்டே இருந்தார்.”—லூக்கா 6:12.
இயேசுவைப் போலவே இன்றும் நிறைய பேர் கடவுளிடம் உதவி கேட்கிறார்கள். அவர்களுக்கு கடவுள் எப்படி உதவி செய்கிறார்? பிலிப்பைன்ஸில் இருக்கும் ரெஜீனாவுக்கு நிறைய பிரச்சினை வந்தது. அவருடைய கணவர் இறந்த பிறகு அவர்தான் குடும்பத்தை கவனிக்க வேண்டியிருந்தது, கஷ்டப்பட்டு பிள்ளைகளை வளர்க்க வேண்டியிருந்தது. இந்த நேரம் பார்த்து வேலையும் போய்விட்டது. இதையெல்லாம் ரெஜீனா எப்படி சமாளித்தார்? “எப்பவும் யெகோவாகிட்ட ஜெபம் செய்வேன். எல்லாத்தையும் அவர் பார்த்துக்கிட்டார்” என்று சொன்னார். கானாவில் உள்ள குவாபெனா சொல்கிறார்: “கட்டிட வேலையில எனக்கு நல்ல சம்பளம் கிடைச்சிட்டு இருந்தது. திடீர்னு வேலை போயிடுச்சு. ‘ஒரு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யுங்க’னு யெகோவாகிட்ட தினமும் ஜெபம் செஞ்சேன். யெகோவாவும் எனக்கு உதவி செஞ்சார். குடும்பத்தை நல்லா கவனிச்சிக்கிற மாதிரி . . . ஒரு வேலை கிடைச்சது.” கடவுளுக்கு பிடித்ததை செய்ய உதவி கேட்டு ஜெபம் செய்தால் கடவுள் கண்டிப்பாக உதவி செய்வார்.
ஜெபம் செய்வதால் என்ன நன்மை கிடைக்கும் என்று இதுவரை பார்த்தோம்; இன்னும் நிறைய நன்மைகளும் கிடைக்கும். (“ஜெபம் செய்தால் என்ன கிடைக்கும்?” என்ற பெட்டியைப் பாருங்கள்.) கடவுளைப் பற்றியும் அவருக்கு பிடித்த விஷயங்களைப் பற்றியும் நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள். அதற்கு, யெகோவாவின் சாட்சிகளிடம் உதவி கேளுங்கள்; அவர்கள் உங்களுக்கு பைபிளைப் பற்றிச் சொல்லிக் கொடுப்பார்கள்.a (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) ‘ஜெபத்தைக் கேட்கிறவரான’ யெகோவாவைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ளுங்கள்.—சங்கீதம் 65:2. ▪ (w15-E 10/01)
a நிறைய தெரிந்துகொள்ள உங்கள் ஊரிலுள்ள யெகோவாவின் சாட்சிகளிடம் கேளுங்கள் அல்லது www.jw.org வெப்சைட்டைப் பாருங்கள்.