மசோரெட்டுகள் வேதாகமத்தைக் கவனமாக நகல் எடுத்தார்கள்
அட்டைப்படக் கட்டுரை | பைபிள்—மீண்டு வந்த கதை
கலப்படம் செய்யப்படுவதிலிருந்து மீண்டது
பைபிளுக்கு வந்த ஆபத்து: சிதைந்துபோகும் ஆபத்திலிருந்தும் எதிர்ப்புகளிலிருந்தும் பைபிள் மீண்டது. ஆனாலும், நகல் எடுப்பவர்கள் சிலரும், மொழிபெயர்ப்பாளர்கள் சிலரும் பைபிளில் இருக்கிற முக்கியமான விஷயங்களில் கலப்படம் செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள். சிலசமயங்களில், பைபிளில் இருக்கிற விஷயங்களின்படி தங்களுடைய கொள்கைகளை மாற்றுவதற்குப் பதிலாக, பைபிளை தங்களுடைய கொள்கைகளுக்கு ஏற்ற விதத்தில் மாற்றுவதற்கு முயற்சி செய்திருக்கிறார்கள். சில உதாரணங்களை இப்போது பார்க்கலாம்:
வணக்கத்துக்கான இடம்: கி.மு. நான்காம் நூற்றாண்டுக்கும் இரண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சமாரிய ஐந்தாகமத்தைa எழுதியவர்கள், யாத்திராகமம் 20:17-ல் சில வார்த்தைகளைச் சேர்த்திருக்கிறார்கள். அதாவது, “கெரிசீம் மலையில். அங்கே ஒரு பலிபீடத்தை நீங்கள் கட்டுவீர்கள்” என்ற வார்த்தைகளைச் சேர்த்திருக்கிறார்கள். இதன்மூலம், ‘கெரிசீம் மலையில்’ ஆலயத்தைக் கட்டுவதை வேத வசனங்கள் ஆதரிப்பதாகக் காட்ட சமாரியர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள்.
திரித்துவக் கொள்கை: பைபிள் எழுதி முடிக்கப்பட்டு 300 வருஷங்களுக்குள், திரித்துவக் கொள்கையில் நம்பிக்கை வைத்திருந்த ஒரு எழுத்தாளர் 1 யோவான் 5:7-ல் சில வார்த்தைகளைச் சேர்த்தார். அதாவது, “பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்” என்ற வார்த்தைகளை சேர்த்தார். மூலப் பதிவில் இந்த வார்த்தைகள் காணப்படுவதில்லை. “ஆறாவது நூற்றாண்டிலிருந்து, பழைய லத்தீன் மற்றும் [லத்தீன்] வல்கேட் கையெழுத்துப் பிரதிகளில் இந்த வார்த்தைகளை ரொம்ப அதிகமாக பார்க்க முடிந்தது” என்று பைபிள் அறிஞரான புரூஸ் மெட்ஸ்கர் சொல்கிறார்.
கடவுளுடைய பெயர்: யூதர்களின் மூடநம்பிக்கையைக் காரணம்காட்டி நிறைய பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் கடவுளுடைய பெயரை பைபிளிலிருந்து நீக்குவதற்கு முடிவு செய்தார்கள். கடவுளுடைய பெயருக்குப் பதிலாக, “தேவன்” அல்லது “கர்த்தர்” போன்ற வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்தினார்கள். பைபிளில் இந்த வார்த்தைகள் படைப்பாளருக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் பொய் தெய்வங்களுக்கும் சாத்தானுக்கும்கூட பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.—யோவான் 10:34, 35; 1 கொரிந்தியர் 8:5, 6; 2 கொரிந்தியர் 4:4.b
பைபிள் மீண்டுவந்தது எப்படி? இரண்டு குறிப்புகளைப் பார்க்கலாம். ஒன்று, பைபிளை நகல் எடுத்த சிலர் கவனக்குறைவாகவும், சிலர் தந்திரசாலிகளாகவும் இருந்தாலும், நிறைய பேர் ரொம்பவே திறமைசாலிகளாக இருந்தார்கள்; நகல் எடுக்கிற வேலையை அவர்கள் கண்ணும்கருத்துமாக செய்தார்கள். உதாரணத்துக்கு, கி.பி. ஆறாவது நூற்றாண்டுக்கும் பத்தாவது நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் எபிரெய வேதாகமத்தை மசோரெட்டுகள் நகல் எடுத்தார்கள். அதுதான் மசோரெட்டிக் பதிவு. நகல் எடுத்தபோது எந்தத் தவறும் வந்துவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு வார்த்தையையும் ஒவ்வொரு எழுத்தையும் அவர்கள் எண்ணிச் சரிபார்த்தார்கள். நகல் எடுப்பதற்காக அவர்கள் பயன்படுத்திய அடிப்படைப் பதிவில் ஏதாவது தவறுகள் இருப்பதாக சந்தேகப்பட்டால் அவற்றை பக்கத்தின் ஓரத்தில் குறித்து வைத்தார்கள். பைபிள் பதிவில் அவர்கள் எந்தவொரு கலப்படமும் செய்யவில்லை. “வேண்டுமென்றே அதில் கைவைப்பது படு மோசமான குற்றச்செயலாக அவர்களுக்கு இருந்திருக்கும்” என்று பேராசிரியர் மோஷா கோஷன்-காட்ஸ்டைன் எழுதினார்.
இரண்டு, இன்று எக்கச்சக்கமான பைபிள் கையெழுத்துப் பிரதிகள் இருப்பதால், பைபிள் அறிஞர்களால் தவறுகளைக் கண்டுபிடிக்க முடிகிறது. உதாரணத்துக்கு, தங்களிடம் இருக்கிற லத்தீன் மொழிபெயர்ப்புதான் நம்பகமானது என்று மதத் தலைவர்கள் பல நூற்றாண்டுகளாகவே மக்களுக்கு சொல்லிக் கொடுத்திருந்தார்கள். ஆனாலும், இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்ததுபோல் 1 யோவான் 5:7-ல் அவர்கள் பொய்யான வார்த்தைகளை சேர்த்திருக்கிறார்கள். பிரபலமான தமிழ் O.V பைபிளில்கூட இந்தப் பிழை காணப்படுகிறது! ஆனால், கண்டெடுக்கப்பட்ட மற்ற கையெழுத்துப் பிரதிகளில் இந்த வார்த்தைகள் இருக்கின்றனவா? “லத்தீன் தவிர வேறெந்தப் பூர்வ கால பைபிள் கையெழுத்துப் பிரதிகளிலும் (சிரியாக், காப்டிக், அர்மீனியன், எத்தியோபிக், அரபிக், ஸ்லவோனிக்) [1 யோவான் 5:7-ல்] இந்த வார்த்தைகள் காணப்படுவதில்லை” என்று புரூஸ் மெட்ஸ்கர் எழுதினார். அதனால், இப்போது இருக்கிற பொது மொழிபெயர்ப்பு பைபிளிலும் ஈஸி டு ரீட் வர்ஷனிலும் இந்த வார்த்தைகள் காணப்படுவதில்லை.
செஸ்டர் பீட்டி P46, சுமார் கி.பி. 200-ஐச் சேர்ந்த பாப்பிரஸ் பைபிள் கையெழுத்துப் பிரதி.
கலப்படம் செய்யப்படுவதிலிருந்து பைபிள் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு பழைய கையெழுத்துப் பிரதிகள் ஆதாரமாக இருக்கின்றன. உதாரணத்துக்கு, 1947-ல் சவக்கடல் சுருள்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது, அறிஞர்களால் ஒருவழியாக, எபிரெய மசோரெட்டிக் பதிவுகளையும், ஆயிரம் வருஷங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட பைபிள் சுருள்களில் இருக்கிற விஷயங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது. “ஆயிரம் வருஷங்களுக்கும் அதிகமான காலப்பகுதியில் பைபிள் பதிவை நகலெடுத்த யூதர்கள் அதை ரொம்பவே துல்லியமாகவும் கவனமாகவும் நகலெடுத்திருக்கிறார்கள் என்பதற்கு [இந்த ஒரு சுருள்] மறுக்க முடியாத அத்தாட்சியாக இருக்கிறது” என்று சவக்கடல் சுருள்களின் பதிப்பாசிரியர் குழுவைச் சேர்ந்த ஒருவர் சொன்னார்.
அயர்லாந்தில், டப்ளினிலுள்ள செஸ்டர் பீட்டி நூலகத்தில், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்திலுள்ள கிட்டத்தட்ட எல்லா புத்தகங்களின் பாப்பிரஸ் சுருள்களும் இருக்கின்றன. அதுமட்டுமல்ல, கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த, அதாவது, பைபிள் முழுவதுமாக எழுதி முடிக்கப்பட்டு சுமார் நூறு வருஷங்களில் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகளும் இருக்கின்றன. “இந்த பாப்பிரஸ் சுருள்கள், பைபிள் பதிவுகள் சம்பந்தமான புதிய தகவல்களைக் கொடுப்பதோடு இத்தனை வருஷக் காலப்பகுதியில் அவை ரொம்பவே துல்லியமாக நகலெடுக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் தெளிவாகக் காட்டுகின்றன” என்று தி ஆன்க்கர் பைபிள் டிக்ஷ்னரி சொல்கிறது.
“எந்தவொரு பழங்காலப் புத்தகமும் இந்தளவு துல்லியமாக நகல் எடுக்கப்படவில்லை என்று உறுதியாக சொல்லலாம்”
பலன்: கலப்படம் செய்யப்படாத மிகச் சிறந்த பைபிள் நமக்குக் கிடைப்பதற்கு, பழமையான நிறைய பைபிள் கையெழுத்துப் பிரதிகள் உதவியாக இருந்திருக்கின்றன. “எந்தவொரு பழங்காலப் புத்தகத்துக்கும் அந்தளவு பழமையான, ஏராளமான ஆதாரங்கள் இல்லை. பெரியளவில் மாற்றங்கள் எதுவும் இல்லாமல் அது நம்மிடம் வந்து சேர்ந்திருக்கிறது என்பதைப் பாரபட்சமற்ற எந்தவொரு அறிஞரும் ஒத்துக்கொள்வார்” என்று கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தைப் பற்றி சர் ஃபிரெட்ரிக் கென்யன் எழுதினார். “எந்தவொரு பழங்காலப் புத்தகமும் இந்தளவு துல்லியமாக நகல் எடுக்கப்படவில்லை என்று உறுதியாகச் சொல்லலாம்” என்று எபிரெய வேதாகமத்தைப் பற்றி அறிஞர் வில்லியம் ஹென்றி க்ரீன் சொன்னார்.
a சமாரியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பைபிளின் முதல் ஐந்து புத்தகங்கள் அடங்கிய தொகுப்புதான் சமாரிய ஐந்தாகமம்.