அட்டைப்படக் கட்டுரை | பைபிள்—மீண்டு வந்த கதை
பைபிள் மீண்டுவந்ததற்கான காரணம்
எல்லா ஆபத்துகளையும் தாண்டி பைபிள் மீண்டுவந்தது. அதனால்தான் இன்று அதை உங்களால் வாங்கவும் படிக்கவும் முடிகிறது. ஒரு நல்ல பைபிள் மொழிபெயர்ப்பை நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள் என்றால் மூலப் பதிவின் நம்பகமான ஒரு பிரதியிலிருந்து நீங்கள் வாசிக்கிறீர்கள் என்பதில் உறுதியாக இருக்கலாம்.a சிதைந்துபோகும் தன்மை... கடுமையான எதிர்ப்பு... வேண்டுமென்றே கலப்படம் செய்வதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள்... இப்படிப்பட்ட பயங்கரமான ஆபத்துகளிலிருந்து பைபிள் மீண்டுவந்ததற்கான காரணம் என்ன? இந்தப் புத்தகத்துக்கு அப்படி என்ன சிறப்பு இருக்கிறது?
“என்கிட்டே இருக்குற பைபிள் கடவுள் தந்த பரிசுங்கிறத இப்போ நான் முழுசா நம்புறேன்”
“வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் கொடுக்கப்பட்டிருக்கின்றன” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (2 தீமோத்தேயு 3:16) பைபிளைப் படிக்கிற நிறைய பேரும் இதே முடிவுக்குத்தான் வந்திருக்கிறார்கள். பைபிள், கடவுளுடைய வார்த்தை என்பதாலும், இன்றுவரைக்கும் கடவுள் அதைப் பத்திரமாகப் பாதுகாத்திருப்பதாலும்தான் எல்லா ஆபத்துகளையும் மீறி அது நம் கையில் வந்துசேர்ந்திருக்கிறது என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்தத் தொடர்கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்த ஃபைஸல் என்பவர், தன்னுடைய மனதில் இருந்த கேள்விகளுக்கெல்லாம் பதில்களைத் தெரிந்துகொள்வதற்காக பைபிளை ஆராய்ந்து படித்தார். தன்னுடைய கேள்விகளுக்கான பதில்களை பைபிளில் கண்டுபிடித்தபோது, அவர் அசந்துப்போய்விட்டார். சர்ச்சுகளில் பொதுவாக சொல்லிக்கொடுக்கிற, நிறைய போதனைகள் பைபிளில் இல்லை என்பதை அவர் சீக்கிரத்திலேயே புரிந்துகொண்டார். அதுமட்டுமல்ல, பூமியைக் கடவுள் படைத்ததற்கான நோக்கத்தை பைபிளிலிருந்து தெரிந்துகொண்டது அவருடைய மனதை ரொம்பவே தொட்டுவிட்டது.
“என்கிட்டே இருக்குற பைபிள் கடவுள் தந்த பரிசுங்கிறத இப்போ நான் முழுசா நம்புறேன். இந்த பிரபஞ்சத்தையே படச்ச கடவுளால ஒரு புத்தகத்த தர்றதுக்கும், நமக்காக அத பத்திரப்படுத்தி வைக்கிறதுக்கும் சக்தி இருக்காதா என்ன? அப்படியில்லன்னு நெனச்சா, கடவுளுடைய சக்திய குறைவா மதிப்பிடுற மாதிரி இருக்கும். சர்வவல்லமையுள்ள, கடவுளோட சக்திய குறைவா மதிப்பிடுறதுக்கு நாம யார்?” என்று ஃபைஸல் சொல்கிறார்.—ஏசாயா 40:8.
a இந்தப் பத்திரிகையின் மே 1, 2008 இதழில் வெளிவந்த “ஒரு நல்ல பைபிள் மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுப்பது எப்படி?” என்ற ஆங்கிலக் கட்டுரையைப் பாருங்கள்.