அட்டைப்படக் கட்டுரை | பைபிளை நன்றாகப் புரிந்துகொள்வது எப்படி?
பைபிளை படிப்பதற்குமுன் என்ன செய்ய வேண்டும்?
பைபிளை ஆர்வமாக படிக்கவும் படித்த விஷயங்கள் பிரயோஜனமாக இருக்கவும் என்ன செய்யலாம்? நிறைய பேருக்கு உதவியாக இருந்த ஐந்து விஷயங்களைப் பாருங்கள்.
நல்ல சூழ்நிலையில் படியுங்கள். அமைதியான சூழலில்... நல்ல வெளிச்சத்தில்... காற்றோட்டமான இடத்தில் படியுங்கள். மனதை அலைபாயவிடாமல், படிக்கும் விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். அப்படிச் செய்தால் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்வீர்கள்.
சரியான எண்ணத்தோடு படியுங்கள். பைபிளை நம்முடைய பரலோக தகப்பன் கொடுத்திருக்கிறார். அதன்மூலம் நமக்கு நிறைய சொல்லிக்கொடுக்கிறார். ஒரு சின்ன பிள்ளை தன்னுடைய அப்பா-அம்மாவிடமிருந்து கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கும். அதேபோன்ற ஆர்வம் நமக்கும் இருக்க வேண்டும். பைபிளை பற்றி ஏதாவது தவறான எண்ணம் இருந்தால் அதை ஒதுக்கிவிடுங்கள். சரியான எண்ணத்தோடு பைபிளை படித்தால்தான் கடவுள் சொல்லித்தரும் விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.—சங்கீதம் 25:4.
ஜெபம் செய்துவிட்டு படிக்க ஆரம்பியுங்கள். பைபிளை படிக்க கடவுளுடைய உதவி நமக்கு தேவை. ஏனென்றால், அதிலிருப்பது அவருடைய எண்ணங்கள். அவர் தன்னிடம் ‘கேட்கிறவர்களுக்குத் தன்னுடைய சக்தியை கொடுப்பதாக’ வாக்குக் கொடுத்திருக்கிறார். (லூக்கா 11:13) கடவுளுடைய எண்ணங்களைப் புரிந்துகொள்ள அவருடைய சக்தி உங்களுக்கு உதவும். பைபிளை படிக்க படிக்க “கடவுளுடைய ஆழமான காரியங்களை” நன்றாக புரிந்துகொள்ளவும் அந்தச் சக்தி உதவும்.—1 கொரிந்தியர் 2:10.
படிப்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். ஏதோ படித்து முடிக்க வேண்டும் என்பதற்காக படிக்காதீர்கள், படிக்கும் விஷயத்தைப் பற்றி நன்றாக யோசித்துப் பாருங்கள். பைபிளில் ஒரு நபரைப் பற்றி படிக்கும்போது உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இந்த நபர்கிட்டயிருந்து நான் என்ன நல்ல விஷயத்த கத்துகிட்டேன்? அதை என் வாழ்க்கையில எப்படி கடைப்பிடிக்கலாம்?’
குறிக்கோளோடு படியுங்கள்: படிக்கும் விஷயங்கள் உங்கள் வாழ்க்கைக்கு பிரயோஜனமாக இருக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு படியுங்கள். ‘கடவுள பத்தி நான் இன்னும் நிறைய தெரிஞ்சிக்கணும்’ என்ற எண்ணத்தோடு படியுங்கள். அதோடு, ‘ஒரு நல்ல நபரா இருக்க... ஒரு நல்ல கணவனா இருக்க... ஒரு நல்ல மனைவியா இருக்க... நான் என்ன செய்யணும்’ என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்ற குறிக்கோளோடு படியுங்கள். இந்த விஷயங்களைப் பற்றி பைபிளில் எங்கே சொல்லப்பட்டிருக்கிறது என்று தேர்ந்தெடுத்து அதைப் படியுங்கள்.a
பைபிளை நன்றாக படிக்க, இந்த ஐந்து விஷயங்கள் உங்களுக்கு உதவும். பைபிளை இன்னும் சுவாரஸ்யமாக படிக்க என்ன செய்யலாம் என்பதை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.
a இதைப் பற்றியெல்லாம் பைபிளில் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்றால் யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.