உங்களுக்குத் தெரியுமா?
பூர்வ காலத்தில், ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நெருப்பை எப்படிக் கொண்டுபோனார்கள்?
தொலைதூரத்தில் இருக்கிற ஓர் இடத்தில் பலி செலுத்துவதற்குத் தயாராவதற்காக, “ஆபிரகாம் தகன பலிக்கான விறகுகளை எடுத்து, தன்னுடைய மகன் ஈசாக்கின் தோள்மேல் வைத்தார். அதன்பின், நெருப்பையும் கத்தியையும் எடுத்துக்கொண்டார். இரண்டு பேரும் ஒன்றாக நடந்துபோனார்கள்” என்று ஆதியாகமம் 22:6-லுள்ள பைபிள் பதிவு சொல்கிறது.
பூர்வ காலத்தில், நெருப்பு எப்படிப் பற்றவைக்கப்பட்டது என்பதைப் பற்றி பைபிளில் எந்தப் பதிவும் இல்லை. ‘ஆபிரகாமும் ஈசாக்கும் நீண்ட பயணம் செய்தபோது, நெருப்பை எடுத்துக்கொண்டு போயிருக்க முடியாது’ என்று மேலே சொல்லப்பட்டிருக்கும் பைபிள் பதிவைப் பற்றி குறைந்தபட்சம் ஒரு விமர்சகராவது நம்புகிறார். அதனால், நெருப்பு உண்டாக்குவதற்கான ஏதோவொரு சாதனத்தை அவர்கள் கொண்டுபோயிருக்க வேண்டும் என்பது இதிலிருந்து தெரிகிறது.
இருந்தாலும், பூர்வ காலங்களில் நெருப்பை பற்றவைப்பது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது என்று சிலர் சொல்கிறார்கள். மக்கள் தாங்களாகவே நெருப்பைப் பற்றவைப்பதற்குப் பதிலாக, முடிந்தபோது, அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடமிருந்து தணலை வாங்கி நெருப்பைப் பற்றவைப்பது அவர்களுக்குச் சுலபமாக இருந்திருக்கலாம். ஆபிரகாம், ஒரு பாத்திரத்தை, ஒருவேளை சங்கிலியால் தொங்க விடப்பட்ட மண்பாத்திரத்தை, கொண்டுபோயிருக்க வேண்டும் என்று நிறைய அறிஞர்கள் நம்புகிறார்கள். முந்தின நாள் ராத்திரி எரிந்துகொண்டிருந்த நெருப்பிலிருந்து எடுக்கப்பட்ட தணலை அந்தப் பாத்திரத்தில் கொண்டுபோயிருக்க வேண்டும் என்றும் நம்புகிறார்கள். (ஏசா. 30:14) பயணம் செய்தவர்கள், தணலை இப்படிக் கொண்டுபோவதன் மூலம், காய்ந்த ஒரு மரத்துண்டை வைத்து சுலபமாக தீ மூட்டினார்கள்.