இன்று கடவுளுடைய மக்களை உண்மையிலேயே வழிநடத்துவது யார்?
“உங்களை வழிநடத்துகிறவர்களை நினைத்துப் பாருங்கள்.”—எபி. 13:7.
1, 2. இயேசு பரலோகத்துக்குப் போன பிறகு, அப்போஸ்தலர்கள் என்ன யோசித்திருக்கலாம்?
இயேசுவின் அப்போஸ்தலர்கள் ஒலிவ மலைமீது நின்றுகொண்டு வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். சற்று முன்புதான், தங்களுடைய எஜமானும் நண்பனுமான இயேசு மேலே எடுத்துக்கொள்ளப்பட்டதையும், ஒரு மேகம் அவரை மறைத்துக்கொண்டதையும் அவர்கள் பார்த்தார்கள். (அப். 1:9, 10) சுமார் 2 வருஷங்களாக, இயேசு அவர்களுக்குக் கற்றுக்கொடுத்திருந்தார், அவர்களை உற்சாகப்படுத்தியிருந்தார், அவர்களை வழிநடத்தியிருந்தார். இப்போது, அவர் இல்லாமல் அப்போஸ்தலர்கள் என்ன செய்வார்கள்?
2 பரலோகத்துக்குப் போவதற்கு முன்பு, தன்னைப் பின்பற்றியவர்களிடம் இயேசு இப்படிச் சொன்னார்: “நீங்கள் . . . எருசலேமிலும் யூதேயா முழுவதிலும் சமாரியாவிலும் பூமியின் எல்லைகள் வரையிலும் எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்.” (அப். 1:8) ஆனால், அவர்களால் எப்படி அந்த வேலையைச் செய்ய முடியும்? அந்த வேலையைச் செய்வதற்குக் கடவுளுடைய சக்தி அவர்களுக்கு உதவி செய்யும் என்று இயேசு வாக்குக் கொடுத்திருந்தார். (அப். 1:5) ஆனால், யார் அவர்களை வழிநடத்துவார்கள், உலகம் முழுவதும் நடக்க வேண்டிய பிரசங்க வேலையை யார் ஒழுங்கமைப்பார்கள்? கடந்த காலத்தில், இஸ்ரவேலர்களை வழிநடத்த யெகோவா சில மனிதர்களைப் பயன்படுத்தியது அப்போஸ்தலர்களுக்குத் தெரிந்திருந்தது. அதனால், யெகோவா இப்போது யாரைத் தலைவராக நியமிப்பார் என்று அவர்கள் யோசித்திருக்கலாம்.
3. (அ) இயேசு பரலோகத்துக்குப் போன பிறகு, உண்மையுள்ள அப்போஸ்தலர்கள் என்ன முக்கியமான தீர்மானத்தை எடுத்தார்கள்? (ஆ) இந்தக் கட்டுரையில் என்னென்ன கேள்விகளுக்கான பதில்களைப் பார்ப்போம்?
3 இயேசு பரலோகத்துக்குப் போன 2 வாரங்களுக்குள்ளேயே, அவருடைய சீஷர்கள் வேதவசனங்களை ஆராய்ந்தார்கள், உதவிக்காகக் கடவுளிடம் ஜெபம் செய்தார்கள். யூதாஸ் இஸ்காரியோத்துக்குப் பதிலாக மத்தியா என்பவரை 12-வது அப்போஸ்தலராகத் தேர்ந்தெடுத்தார்கள். (அப். 1:15-26) அப்படித் தேர்ந்தெடுத்தது, அவர்களுக்கும் யெகோவாவுக்கும் ஏன் ரொம்ப முக்கியமானதாக இருந்தது? ஏனென்றால், 12 அப்போஸ்தலர்கள் இருக்க வேண்டும் என்பது இயேசுவின் சீஷர்களுக்குத் தெரிந்திருந்தது.a (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) அப்போஸ்தலர்கள் வெறுமென தன்னோடு ஊழியத்துக்கு வர வேண்டும் என்பதற்காக இயேசு அவர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. கடவுளுடைய மக்கள் மத்தியில் ஒரு முக்கியமான பொறுப்பை நிறைவேற்றுவதற்காக அவர்களைத் தேர்ந்தெடுத்திருந்தார். அது என்ன பொறுப்பு? அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்காக யெகோவாவும் இயேசுவும் அவர்களை எப்படித் தயார்படுத்தினார்கள்? இன்றும் அது போன்ற என்ன ஏற்பாடு இருக்கிறது? நம்மை “வழிநடத்துகிறவர்களை,” முக்கியமாக, ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை’ நாம் எப்படி நினைத்துப் பார்க்கலாம்? (எபி. 13:7; மத். 24:45) இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
ஆளும் குழுவை இயேசு வழிநடத்துகிறார்
4. அப்போஸ்தலர்களுக்கும் எருசலேமில் இருந்த மற்ற மூப்பர்களுக்கும் என்ன பொறுப்பு இருந்தது?
4 கி.பி. 33 பெந்தெகொஸ்தே நாளன்று, அப்போஸ்தலர்கள் கிறிஸ்தவ சபையை வழிநடத்த ஆரம்பித்தார்கள். பேதுரு ‘பதினொரு அப்போஸ்தலர்களோடு நின்று,’ உயிர் காக்கும் சத்தியங்களை ஒரு பெரிய கூட்டத்துக்கு சொல்லிக்கொடுத்தார் என்று பைபிள் சொல்கிறது. (அப். 2:14, 15) அந்தக் கூட்டத்தில் இருந்த நிறைய பேர் கிறிஸ்தவர்களாக ஆனார்கள். அதற்குப் பிறகு, “அப்போஸ்தலர்கள் சொல்லிக்கொடுத்த விஷயங்களுக்கு அவர்கள் முழு கவனம் செலுத்திவந்தார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (அப். 2:42) சபையின் பணத்தை நிர்வகிக்கும் பொறுப்பு அப்போஸ்தலர்களுக்கு இருந்தது. (அப். 4:34, 35) “ஜெபம் செய்வதற்கும் கடவுளுடைய வார்த்தையைக் கற்பிப்பதற்கும் நாங்கள் முழு கவனம் செலுத்துவோம்” என்று சொல்லி கடவுளுடைய மக்களின் ஆன்மீக தேவைகளை அப்போஸ்தலர்கள் கவனித்துக்கொண்டார்கள். (அப். 6:4) புதிய பகுதிகளில் பிரசங்கிப்பதற்கு அனுபவமுள்ள கிறிஸ்தவர்களை அவர்கள் அனுப்பினார்கள். (அப். 8:14, 15) பிறகு, சபையை வழிநடத்துவதற்காக, பரலோக நம்பிக்கையுள்ள மற்ற மூப்பர்களும் அப்போஸ்தலர்களோடு சேர்ந்துகொண்டார்கள். ஓர் ஆளும் குழுவாக, அவர்கள் சபைகளுக்கு அறிவுரை கொடுத்தார்கள்.—அப். 15:2.
5, 6. (அ) கடவுளுடைய சக்தி ஆளும் குழுவை எப்படிப் பலப்படுத்தியது? (ஆரம்பப் படம்) (ஆ) தேவதூதர்கள் எப்படி ஆளும் குழுவுக்கு உதவினார்கள்? (இ) கடவுளுடைய வார்த்தை எப்படி ஆளும் குழுவை வழிநடத்தியது?
5 இயேசுவின் மூலம் யெகோவாதான் ஆளும் குழுவை வழிநடத்திவந்தார் என்பது முதல் நூற்றாண்டிலிருந்த கிறிஸ்தவர்களுக்குத் தெரிந்திருந்தது. அவர்கள் அதை உறுதியாக நம்பியதற்கு 3 காரணங்கள் இருந்தன. முதலாவதாக, கடவுளுடைய சக்தி ஆளும் குழுவைப் பலப்படுத்தியது. (யோவா. 16:13) பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் எல்லாருக்கும் கடவுளுடைய சக்தி கிடைத்தது. ஆனால், குறிப்பாக, கண்காணிகளாகத் தாங்கள் செய்ய வேண்டிய பொறுப்பைச் செய்வதற்கு, அப்போஸ்தலர்களையும் எருசலேமில் இருந்த மூப்பர்களையும், கடவுளுடைய சக்தி பலப்படுத்தியது. உதாரணத்துக்கு, கி.பி. 49-ல், விருத்தசேதனத்தைப் பற்றி தீர்மானம் எடுக்க கடவுளுடைய சக்தி ஆளும் குழுவை வழிநடத்தியது. ஆளும் குழு கொடுத்த அந்த அறிவுரையைச் சபைகள் பின்பற்றின. அதன் பலனாக, “சபையில் இருந்தவர்கள் விசுவாசத்தில் பலப்பட்டு வந்தார்கள், அவர்களுடைய எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வந்தது.” (அப். 16:4, 5) விருத்தசேதனத்தைப் பற்றி சபைகளுக்கு வந்த கடிதத்திலிருந்து, ஆளும் குழுவின் மீது கடவுளுடைய சக்தி இருந்ததையும், அன்பு மற்றும் விசுவாசம் போன்ற குணங்களை ஆளும் குழு காட்டியதையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.—அப். 15:11, 25-29; கலா. 5:22, 23.
6 இரண்டாவதாக, தேவதூதர்கள் ஆளும் குழுவுக்கு உதவினார்கள். உதாரணத்துக்கு, அப்போஸ்தலன் பேதுருவைக் கூட்டிக்கொண்டுவரும்படி கொர்நேலியுவிடம் ஒரு தேவதூதர் சொன்னார். கொர்நேலியுவுக்கும் அவருடைய சொந்தக்காரர்களுக்கும் பேதுரு பிரசங்கித்தார். அவர்கள் விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக இருந்தாலும், அவர்களுக்குக் கடவுளுடைய சக்தி கிடைத்தது. விருத்தசேதனம் செய்யப்படாத மற்ற தேசத்தைச் சேர்ந்தவர்களில், கொர்நேலியுதான் முதல் முதலில் கிறிஸ்தவராக ஆனார். அப்போஸ்தலர்களும் மற்ற சகோதரர்களும் இதைக் கேள்விப்பட்டபோது, கடவுளுடைய விருப்பத்துக்கு முழு ஆதரவு காட்டினார்கள். விருத்தசேதனம் செய்யப்படாத மற்ற தேசத்து மக்களையும் அவர்கள் கிறிஸ்தவ சபைக்குள் ஏற்றுக்கொண்டார்கள். (அப். 11:13-18) ஆளும் குழு வழிநடத்திவந்த பிரசங்க வேலைக்குத் தேவதூதர்கள் முழு ஆதரவு காட்டினார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. (அப். 5:19, 20) மூன்றாவதாக, கடவுளுடைய வார்த்தை ஆளும் குழுவை வழிநடத்தியது. கிறிஸ்தவ நம்பிக்கைகள் சம்பந்தமான சில முக்கியமான தீர்மானங்கள் எடுப்பதற்கும், சபைகளை வழிநடத்துவதற்கும் ஆளும் குழுவில் இருந்தவர்கள் கடவுளுடைய வார்த்தையைப் பயன்படுத்தினார்கள்.—அப். 1:20-22; 15:15-20.
7. ஆரம்பக் கால கிறிஸ்தவர்களை இயேசுதான் வழிநடத்தினார் என்று எப்படிச் சொல்லலாம்?
7 ஆளும் குழுவுக்குச் சபையில் அதிகாரம் இருந்தாலும், இயேசு கிறிஸ்துதான் தங்களுடைய தலைவர் என்பது ஆளும் குழுவுக்குப் புரிந்திருந்தது. இது நமக்கு எப்படித் தெரியும்? இயேசுதான் “சிலரை அப்போஸ்தலர்களாக” நியமித்தார் என்றும், இயேசுதான் சபையின் “தலையாக” அல்லது தலைவராக இருக்கிறார் என்றும் அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (எபே. 4:11, 15) சீஷர்கள், ஒரு குறிப்பிட்ட அப்போஸ்தலருடைய பெயரில் அழைக்கப்படுவதற்குப் பதிலாக, ‘தெய்வீக வழிநடத்துதலால் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.’ (அப். 11:26) பைபிள் அடிப்படையிலான அப்போஸ்தலர்களின் போதனைகளைப் பின்பற்றுவதும், வழிநடத்திய மற்றவர்களைப் பின்பற்றுவதும் ரொம்ப முக்கியம் என்பது பவுலுக்குத் தெரிந்திருந்தது. இருந்தாலும், “ஒவ்வொரு ஆணுக்கும் [ஆளும் குழுவிலுள்ள ஒவ்வொருவருக்கும்] கிறிஸ்து தலையாக இருக்கிறார் . . . என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று பவுல் சொன்னார். பிறகு, “கிறிஸ்துவுக்குக் கடவுள் தலையாக இருக்கிறார்” என்றும் சொன்னார். (1 கொ. 11:2, 3) சபையை வழிநடத்துவதற்கு, யெகோவா தன்னுடைய மகனை நியமித்திருக்கிறார் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.
“இது மனிதனுடைய வேலை அல்ல, கடவுளுடைய வேலை”
8, 9. சகோதரர் ரஸல் என்ன முக்கியமான வேலையைச் செய்தார்?
8 பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில், சார்ல்ஸ் டேஸ் ரஸலும் அவருடைய நண்பர்களும் உண்மை வணக்கத்தை மறுபடியும் நிலைநாட்ட வேண்டும் என்று விரும்பினார்கள். எல்லா மொழி பேசுகிறவர்களுக்கும் பைபிள் சத்தியங்கள் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக, ஸயன்ஸ் உவாட்ச் டவர் டிராக்ட் சொஸைட்டி 1884-ல் சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்டது. சகோதரர் ரஸல் அதனுடைய தலைவராக ஆனார்.b (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) அவர் பைபிளை ஆழமாகப் படித்தார். திரித்துவம், ஆத்துமா அழியாமை போன்ற சர்ச் போதனைகளைப் பற்றி பைபிளில் எதுவும் சொல்லப்படவில்லை என்பதை மக்களுக்குத் தைரியமாகத் தெரியப்படுத்தினார். இயேசுவின் வருகை பார்க்க முடியாத விதத்தில் இருக்கும் என்பதையும், “மற்ற தேசத்தாருக்கு குறிக்கப்பட்ட காலங்கள்” 1914-ல் முடிவடையும் என்பதையும் சகோதரர் ரஸல் புரிந்துகொண்டார். (லூக். 21:24) மற்றவர்களுக்கு பைபிள் சத்தியங்களைச் சொல்லிக்கொடுக்க தன்னுடைய நேரம், சக்தி, பணம் ஆகியவற்றை சகோதரர் ரஸல் பயன்படுத்தினார். சரித்திரத்தின் அந்த முக்கியமான காலக்கட்டத்தில் சகோதரர் ரஸலை யெகோவாவும் இயேசுவும் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
9 மக்கள் தன்னை விசேஷமாக நடத்த வேண்டும் என்று சகோதரர் ரஸல் விரும்பவில்லை. தன்னையும் பொறுப்பில் இருந்த மற்றவர்களையும் மக்கள் மகிமைப்படுத்தக் கூடாது என்று 1896-ல் அவர் எழுதினார். விசேஷ பட்டப்பெயர்கள் கொடுக்கப்படுவதையும் அவர்கள் விரும்பவில்லை. எந்தவொரு தொகுதியும் தங்களுடைய பெயரில் அழைக்கப்படுவதையும் அவர்கள் விரும்பவில்லை. “இது மனிதனுடைய வேலை அல்ல, கடவுளுடைய வேலை” என்று பிற்பாடு அவர் சொன்னார்.
10. (அ) ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை’ இயேசு எப்போது நியமித்தார்? (ஆ) உவாட்ச் டவர் சொஸைட்டியும் ஆளும் குழுவும் வேறு வேறு என்பது எப்படித் தெளிவுபடுத்தப்பட்டது?
10 சகோதரர் ரஸல் இறந்து 3 வருஷங்களுக்குப் பிறகு, 1919-ல், ‘ஏற்ற வேளையில் தன்னுடைய வீட்டாருக்கு உணவு கொடுப்பதற்காக உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை’ இயேசு நியமித்தார். (மத். 24:45) அந்த ஆரம்பக் காலங்களிலேயே, நியு யார்க், புருக்லினில் இருந்த தலைமை அலுவலகத்தில், பரலோக நம்பிக்கையுள்ள சகோதரர்கள் அடங்கிய ஒரு சிறிய தொகுதி இருந்தது. அந்தத் தொகுதி, இயேசுவைப் பின்பற்றியவர்களுக்கு ஆன்மீக உணவைக் கொடுத்துவந்தது. “ஆளும் குழு” என்ற வார்த்தை நம்முடைய பிரசுரங்களில் 1940-களிலிருந்து பயன்படுத்தப்படுகிறது. அந்தச் சமயத்தில், உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டியின் இயக்குனர்கள்தான் ஆளும் குழு என்று புரிந்துகொள்ளப்பட்டது. ஆனால், சட்டம் சம்பந்தமான விஷயங்களை மட்டும் கவனித்துக்கொள்ளும் உவாட்ச் டவர் சொஸைட்டியும் ஆளும் குழுவும் வேறு வேறு என்று 1971-ல் தெளிவுபடுத்தப்பட்டது. அந்தச் சமயத்திலிருந்து, உவாட்ச் டவர் சொஸைட்டியின் இயக்குனர்களாக இல்லாத பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களும் ஆளும் குழுவின் அங்கத்தினர்களாக ஆனார்கள். சமீப காலமாக, ‘வேறே ஆடுகளை’ சேர்ந்த பொறுப்பிலிருக்கும் சகோதரர்கள் நம்முடைய சட்டப்பூர்வ சொஸைட்டியின் இயக்குனர்களாகச் சேவை செய்துவருகிறார்கள். அதோடு, கடவுளுடைய மக்கள் பயன்படுத்துகிற மற்ற நிறுவனங்களின் இயக்குனர்களாகவும் இவர்கள் சேவை செய்துவருகிறார்கள். அதனால், ஆன்மீக விஷயங்களைக் கற்றுக்கொடுக்கவும் அறிவுரைகளைக் கொடுக்கவும் ஆளும் குழுவால் கவனம் செலுத்த முடிகிறது. (யோவா. 10:16; அப். 6:4) ஆளும் குழுவாக செயல்படும் பரலோக நம்பிக்கையுள்ள சகோதரர்களாலான ஒரு சிறு தொகுதிதான் “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” என்று ஜூலை 15, 2013 காவற்கோபுரம் விளக்கியது.
ஆளும் குழு, 1950-களில்
11. ஆளும் குழு எப்படித் தீர்மானங்களை எடுக்கிறார்கள்?
11 ஒவ்வொரு வாரமும் ஆளும் குழுவின் அங்கத்தினர்கள் ஒரு தொகுதியாகக் கூடிவந்து, முக்கியமான தீர்மானங்களை எடுக்கிறார்கள். அவர்கள் இப்படிக் கூடிவருவதால், அவர்களுக்குள் நல்ல பேச்சுத்தொடர்பு இருக்கிறது; அவர்கள் ஒற்றுமையாகவும் இருக்கிறார்கள். (நீதி. 20:18) எந்தவொரு ஆளும் குழுவின் அங்கத்தினரும் இன்னொருவரைவிட உயர்ந்தவர் கிடையாது. அதனால், ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு சகோதரர் அந்தக் கூட்டங்களை வழிநடத்துகிறார். (1 பே. 5:1) ஆளும் குழுவின் 6 குழுக்களிலும்கூட இப்படித்தான் நடக்கிறது. ஆளும் குழுவின் அங்கத்தினர்கள் யாரும் தங்களைத் தங்களுடைய சகோதரர்களின் தலைவராக நினைப்பதில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் ‘வீட்டாராக’ இருக்கிறார்கள், ஆன்மீக உணவைப் பெற்றுக்கொள்கிறார்கள், உண்மையுள்ள அடிமையின் வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிகிறார்கள்.
தாங்கள் நியமிக்கப்பட்ட சமயத்திலிருந்து (1919-லிருந்து) உண்மையுள்ள அடிமை கடவுளுடைய மக்களுக்கு ஆன்மீக உணவைக் கொடுத்துவருகிறார்கள் (பாராக்கள் 10, 11)
“உண்மையும் விவேகமும் உள்ள அடிமை யார்?”
12. என்னென்ன கேள்விகளுக்கான பதில்களை இப்போது பார்க்கப் போகிறோம்?
12 ஆளும் குழுவுக்குத் தெய்வீக வெளிப்படுத்துதல்கள் எதுவும் கிடைப்பதில்லை; அதோடு, அவர்கள் தவறே செய்யாதவர்களும் கிடையாது. பைபிள் விஷயங்களை விளக்குவதிலோ அமைப்பை வழிநடத்துவதிலோ அவர்கள் சில தவறுகளைச் செய்துவிடலாம். உதாரணத்துக்கு, யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேட்டில், “நம் நம்பிக்கைகளைத் தெளிவுபடுத்துதல்” என்ற தலைப்பு இருக்கிறது. 1870-களிலிருந்து நம் நம்பிக்கைகளில் ஏற்பட்டிருக்கிற மாற்றங்களைப் பற்றி இதில் கொடுக்கப்பட்டிருக்கிறது. தன்னுடைய உண்மையுள்ள அடிமை, பரிபூரணமான ஆன்மீக உணவைக் கொடுப்பார்கள் என்று இயேசு சொல்லவில்லை. அப்படியென்றால், “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை யார்?” என்ற இயேசுவின் கேள்விக்கு நாம் எப்படிப் பதில் சொல்லலாம்? (மத். 24:45) ஆளும் குழுதான் உண்மையுள்ள அடிமை என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? முதல் நூற்றாண்டிலிருந்த ஆளும் குழுவுக்கு உதவியாக இருந்த அதே 3 விஷயங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
13. கடவுளுடைய சக்தி ஆளும் குழுவுக்கு எப்படி உதவி செய்திருக்கிறது?
13 கடவுளுடைய சக்தி ஆளும் குழுவுக்கு உதவுகிறது. முன்பு புரிந்துகொள்ளப்படாத பைபிள் சத்தியங்களைப் புரிந்துகொள்ள கடவுளுடைய சக்தி ஆளும் குழுவுக்கு உதவி செய்திருக்கிறது. உதாரணத்துக்கு, போன பாராவில் குறிப்பிடப்பட்ட “நம் நம்பிக்கைகளைத் தெளிவுபடுத்துதல்” என்ற தலைப்பிலுள்ள விஷயங்களைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ‘கடவுளுடைய இந்த ஆழமான காரியங்களை’ எந்த மனிதனாலும் தானாகவே விளக்கியிருக்க முடியாது! (1 கொரிந்தியர் 2:10-ஐ வாசியுங்கள்.) “இவற்றை நாம் பேசும்போது மனித ஞானத்தால் கற்றுக்கொண்ட வார்த்தைகளில் பேசாமல், கடவுளுடைய சக்தியால் கற்றுக்கொண்ட வார்த்தைகளில் பேசுகிறோம்” என்று சொன்ன பவுலைப் போலவே ஆளும் குழுவும் உணருகிறார்கள். (1 கொ. 2:13) பல நூற்றாண்டுகளாக பொய் போதனைகள் இருந்து வந்திருக்கிறது, தெளிவான வழிநடத்துதலும் இல்லாமல் இருந்திருக்கிறது. அப்படியிருக்கும்போது, 1919-லிருந்து நம்மால் எப்படி இவ்வளவு பைபிள் விஷயங்களைப் புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது? கடவுள் தன்னுடைய சக்தியின் மூலம் உதவியதுதான் அதற்குக் காரணம்!
14. வெளிப்படுத்துதல் 14:6, 7-ன்படி, ஆளும் குழுவுக்கும் கடவுளுடைய மக்களுக்கும் தேவதூதர்கள் எப்படி உதவுகிறார்கள்?
14 தேவதூதர்கள் ஆளும் குழுவுக்கு உதவுகிறார்கள். உலகம் முழுவதும் நடக்கக்கூடிய பிரசங்க வேலையை 80 லட்சத்துக்கும் அதிகமான பிரஸ்தாபிகள் செய்கிறார்கள். இந்தப் பிரசங்க வேலையை வழிநடத்தும் மிகப்பெரிய பொறுப்பு ஆளும் குழுவுக்கு இருக்கிறது. இந்த வேலை எப்படி இவ்வளவு வெற்றிகரமாக நடந்துவருகிறது? அதற்கு ஒரு காரணம், தேவதூதர்கள்தான்! (வெளிப்படுத்துதல் 14:6, 7-ஐ வாசியுங்கள்.) நிறைய சமயங்களில், உதவி கேட்டு கடவுளிடம் ஜெபம் செய்தவர்களைச் சந்திப்பதற்காக, தேவதூதர்கள் பிரஸ்தாபிகளை வழிநடத்தியிருக்கிறார்கள்.c (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) பயங்கர எதிர்ப்பின் மத்தியிலும், பிரசங்கிக்கும் வேலையும் கற்பிக்கும் வேலையும் தொடர்ந்து வளர்ந்துகொண்டே போகிறது. தேவதூதர்களின் உதவியால்தான் இந்தளவு வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
15. கிறிஸ்தவ தலைவர்களிலிருந்து ஆளும் குழு எப்படி வித்தியாசமாக இருக்கிறது? ஓர் உதாரணம் சொல்லுங்கள்.
15 கடவுளுடைய வார்த்தை ஆளும் குழுவை வழிநடத்துகிறது. (யோவான் 17:17-ஐ வாசியுங்கள்.) 1973-ல் என்ன நடந்தது என்று கவனியுங்கள். “புகையிலைக்கு அடிமையானவர்களுக்கு ஞானஸ்நானம் எடுப்பதற்கான தகுதி இருக்கிறதா?” என்ற கேள்வியை அந்த வருஷத்தின் ஜூன் 1 காவற்கோபுரம் எழுப்பியது. பைபிளின் அடிப்படையில், “தகுதி இல்லை!” என்று அந்தக் காவற்கோபுரம் பதில் சொன்னது. நிறைய பைபிள் வசனங்களை மேற்கோள் காட்டி, புகைபிடிப்பதை நிறுத்தாத ஒருவர் சபைநீக்கம் செய்யப்படுவதற்கான காரணத்தைப் பற்றி அது விளக்கியது. (1 கொ. 5:7; 2 கொ. 7:1) கண்டிப்புடன் சொல்லப்பட்ட இந்தத் தராதரம் மனிதர்களிடமிருந்து அல்ல, “எழுதப்பட்ட தன்னுடைய வார்த்தையின் மூலம் தன்னை வெளிப்படுத்தும் கடவுளிடமிருந்தே வருகிறது” என்று அது சொன்னது. தங்களுடைய மத அங்கத்தினர்கள் சிலருக்குக் கஷ்டமாக இருந்தாலும், கடவுளுடைய வார்த்தையை இந்தளவு சார்ந்திருக்கும் மத அமைப்பு வேறு எதுவும் இல்லை! சமீபத்தில், மதத்தைப் பற்றி அமெரிக்காவில் வெளிவந்த ஒரு புத்தகம் இப்படிச் சொல்கிறது: “தங்கள் அங்கத்தினர்கள் மத்தியிலும் சமுதாயத்தின் மத்தியிலும் இருக்கிற நம்பிக்கைகளுக்கும் கருத்துகளுக்கும் ஒத்துப்போகும் விதத்தில் கிறிஸ்தவ தலைவர்கள் தங்களுடைய போதனைகளைத் தவறாமல் மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள்; இப்படி அவர்களுடைய ஆதரவைப் பெறுகிறார்கள்.” ஆனால், ஆளும் குழுவோ மக்கள் மத்தியில் இருக்கிற பரவலான கருத்துகளின் அடிப்படையில் வழிநடத்தப்படுவதில்லை; கடவுளுடைய வார்த்தையால்தான் வழிநடத்தப்படுகிறார்கள். அதனால், கடவுள்தான் உண்மையிலேயே தன்னுடைய மக்களை வழிநடத்துகிறார் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.
“உங்களை வழிநடத்துகிறவர்களை நினைத்துப் பாருங்கள்”
16. ஆளும் குழுவை நினைத்துப் பார்ப்பதற்கான ஒரு வழி என்ன?
16 எபிரெயர் 13:7-ஐ வாசியுங்கள். “வழிநடத்துகிறவர்களை நினைத்துப் பாருங்கள்” என்று பைபிள் சொல்கிறது. அதைச் செய்வதற்கான ஒரு வழி, ஆளும் குழுவுக்காக ஜெபம் செய்வது! (எபே. 6:18) ஆன்மீக உணவு கொடுப்பது, உலகம் முழுவதும் நடக்கும் பிரசங்க வேலையை வழிநடத்துவது, அமைப்புக்காகக் கொடுக்கப்படும் நன்கொடைகளை நிர்வகிப்பது போன்ற நிறைய வேலைகளை ஆளும் குழு செய்கிறார்கள். அதனால், அவர்களுக்காக நாம் நிச்சயம் ஜெபம் செய்ய வேண்டும்!
17, 18. (அ) ஆளும் குழுவின் வழிநடத்துதலை நாம் எப்படிப் பின்பற்றுகிறோம்? (ஆ) ஊழியம் செய்வதன் மூலம் நாம் எப்படி ஆளும் குழுவுக்கும் இயேசுவுக்கும் ஆதரவு கொடுக்கிறோம்?
17 ஆளும் குழுவை ‘நினைத்துப் பார்ப்பதற்கான’ இன்னொரு வழி, அவர்கள் கொடுக்கும் அறிவுரைகளையும் வழிநடத்துதல்களையும் பின்பற்றுவது! பிரசுரங்கள், கூட்டங்கள் மற்றும் மாநாடுகளின் மூலம் ஆளும் குழு நம்மை வழிநடத்துகிறார்கள். அதோடு, அவர்கள் வட்டாரக் கண்காணிகளையும் நியமிக்கிறார்கள். வட்டாரக் கண்காணிகள் மூப்பர்களை நியமிக்கிறார்கள். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வழிநடத்துதல்களைப் பின்பற்றுவதன் மூலம், வட்டாரக் கண்காணிகளும் மூப்பர்களும் ஆளும் குழுவை ‘நினைத்துப் பார்க்கிறார்கள்.’ நம் தலைவராகிய இயேசு பயன்படுத்துகிற நபர்களுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். அப்படிக் கீழ்ப்படிவதன் மூலம் நாம் அவருக்கு மரியாதை காட்டலாம்.—எபி. 13:17.
18 ஆளும் குழுவை ‘நினைத்துப் பார்ப்பதற்கான’ இன்னும் ஒரு வழி, பிரசங்க வேலையில் நம்மால் முடிந்த மிகச் சிறந்ததைச் செய்வது! நம்மை வழிநடத்துகிறவர்களின் விசுவாசத்தைப் பின்பற்றும்படி எபிரெயர் 13:7 நம்மை உற்சாகப்படுத்துகிறது. நல்ல செய்தியை முழு மூச்சோடு அறிவிப்பதன் மூலம் ஆளும் குழு தங்களுடைய விசுவாசத்தைக் காட்டுகிறார்கள். இந்த முக்கியமான வேலையில் நாம் ஆளும் குழுவுக்கு ஆதரவு கொடுக்கிறோமா? அப்படி ஆதரவு கொடுத்தால், “மிகச் சிறியவர்களான என் சகோதரர்களாகிய இவர்களில் ஒருவருக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள்” என்று இயேசு சொல்லும்போது நாம் ரொம்பவே சந்தோஷப்படுவோம்.—மத். 25:34-40.
19. நம் தலைவராகிய இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என்று நீங்கள் ஏன் தீர்மானமாக இருக்கிறீர்கள்?
19 பரலோகத்துக்குப் போன பிறகு, இயேசு தன்னைப் பின்பற்றியவர்களை அப்படியே விட்டுவிடவில்லை. (மத். 28:20) பூமியில் இருந்தபோது, கடவுளுடைய சக்தியின் உதவியும், தேவதூதர்களின் உதவியும், கடவுளுடைய வார்த்தையின் உதவியும் தனக்கு இருந்தது என்று இயேசுவுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. தனக்குக் கிடைத்த உதவிகளை எல்லாம் உண்மையுள்ள அடிமைக்கு இயேசு இன்று கொடுத்துவருகிறார். ஆளும் குழு, ‘ஆட்டுக்குட்டியானவர் போகிற இடங்களுக்கெல்லாம் அவர் பின்னாலேயே தொடர்ந்து போகிறார்கள்.’ (வெளி. 14:4) அதனால், நாம் ஆளும் குழுவின் வழிநடத்துதலைப் பின்பற்றும்போது, நம் தலைவராகிய இயேசுவைப் பின்பற்றுகிறோம். சீக்கிரத்தில், “வாழ்வு தரும் நீரூற்றுகளிடம்” அவர் நம்மை வழிநடத்துவார். அப்போது, நாம் என்றென்றும் வாழ்வோம். (வெளி. 7:14-17) வேறு எந்த மனித தலைவராலும் முடிவில்லாத வாழ்வைத் தருவதாக நமக்கு வாக்குக் கொடுக்க முடியாது!
a 12 அப்போஸ்தலர்கள், புதிய எருசலேமின் ‘12 அஸ்திவாரக் கற்களாக’ இருக்க வேண்டும் என்று யெகோவா விரும்பியதாகத் தெரிகிறது. (வெளி. 21:14) அதனால்தான், பிற்காலத்தில் எந்த உண்மையுள்ள அப்போஸ்தலர் இறந்தாலும், அவருக்குப் பதிலாக இன்னொருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை.
b 1955 முதல், இது உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டி என்று அறியப்பட்டு வருகிறது.
c கடவுளது அரசைப் பற்றி ‘முழுமையாகச் சாட்சி கொடுங்கள்’ என்ற புத்தகத்தில் பக்கங்கள் 58-59-ஐப் பாருங்கள்.